சனி, 17 செப்டம்பர், 2016

மக்கள் ஓசை கடிகாரக்கதைகள் - உளவுபேதா - மைதீ.சுல்தான்

மக்கள் ஓசை கடிகாரக் கதைகள்

உளவுபேதா – மைதீ.சுல்தான்
4 செப்டம்பர் 2016


பல்லின மக்கள் வாழும் மலேசியாவின் வாழ்க்கைச் சூழலில், நமக்கே உரித்தான தனித்துவமான கதையுரைப்பு இயலில் (narratology) கதை சொல்லல் எனப் பல படிமங்களில் பல பரிமாணங்களில் இன்றைய மலேசியக் கதைகள் படைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் ஓசையின் கடிகாரக் கதைகள் என்னும் திட்டத்தில் இவ்வகையிலான பல்வேறு கதைகள், மூத்த எழுத்தாளர்களின் படைப்பாக்கங்களோடு இளைய எழுத்தாளர்களின் படைப்புகளும் இணைந்து இடம்பெற்று வருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.


அந்த வரிசையில் 4 செப்டம்பர், 2016 இல் வெளியான, மைதீ. சுல்தான் அவர்களின், உளவுபேதா என்ற சிறுகதையைப் பற்றிய எனது எண்ண ஓட்டங்களைப் பதிவு செய்கிறேன்.


இலக்கியம் என்பது நம் வாழ்க்கை. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கூர்ந்து நோக்கின், அந்த ஒவ்வொரு நொடியும் நமக்குப் பல கதைகளைப் பதிவு செய்யும். கதைக்காக நாம் எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு வாழ்க்கை. ஓர் அனுபவம். யாரோ ஒருவரின் வாழ்க்கை ஒவ்வொரு கதைக்குள்ளும் புதைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.


இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, தன் சொந்த ஊருக்குத் திரும்பும் முருகப்பனின் கதையுரைப்பின் மூலமாக இக்கதை ஆரம்பமாகிறது. நிகழ்காலத்தில் தொடங்கி, பின்னோக்கிப் பார்க்கும் உத்தி மூலம் கதை இறந்த கால நினைவுகளையும் நிகழ்காலப் பதிவுகளையும் இணைத்துக்கொண்டு நடைபயில்கிறது.


இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட அவ்வளவாக மாறியிருக்காத இடமானது மலேசியாவின் வளர்ச்சியென்பது இன்றளவும் நகர்ப்புறப் பகுதிகளை ஒட்டியவைதான் என்பதை உணர்த்துகிறது. நகர் பகுதியிலிருந்து ஒரு ஐம்பது கிலோ மீட்டர் உள்ளே சென்றால் அங்குதான் மக்களின் உண்மை வாழ்க்கை நிலவரத்தைக் காணமுடிகிறது. இரட்டைக் கோபுரமும் கோலாலம்பூர் டவரும் நட்சத்திர ஓட்டல்களும் பல உயர்ந்த ரக ஆடம்பர அடுக்குமாடி வீடுகளும் ஏற்படுத்தியிருக்கும் மாயைக்குள் சாதாரண மக்களின் வாழ்க்கையானது மறைக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.


ஒரு பெரிய குடும்பமாக வசதியற்ற சூழலிலும் ஒற்றுமையாக வாழ்ந்த அன்றைய குடும்ப முறை வாழ்வியல் பதிவானது இன்றைய தலைமுறைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். சொந்த பந்தங்களோடு நெருக்கடியாக வாழ்வதைவிட்டு வெளியேறிவிட்டாலும் உறவுகள் பாதிக்கப்படவில்லை என்ற வரிகள் அன்றைய உறவுகளின் நெருக்கத்தையும் பாசத்தையும் காட்சிப்படுத்திச் சொல்கின்றன.

இதற்கு முரணாக, சமூக அவலங்களாக இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்த அதே சீட்டாட்டப் பழக்கம் இன்றளவும் நம் சமூகத்திடையே ஊறித் திளைத்திருப்பதையும் இக்கதை பதிவு செய்துள்ளது. இன்றளவும் நமது திருமண வீடுகளிலோ அல்லது இறப்பு வீடுகளிலோ இதுபோன்ற சீட்டாட்டம் தவிர்க்க இயலாத ஒன்றாகவே நம்மினத்தோடு அடம்பிடித்து ஒட்டிக்கொண்டிருக்கிறது.  இன்றும் நம்மின இளைஞர்கள் சீட்டாட்டம், மது, குண்டர் கும்பல் என வாழ்வில் மாற்றமேதுமில்லாமல் இருப்பதைக் குறியீடாக இக்காட்சிப் படிமங்கள் உணர்த்துகின்றன.


நண்பர் நாச்சியப்பனோடு நடக்கும் உரையாடல்கள், உளவுபேதா சுப்பையாவைப் பற்றிய சாகச தகவல்களும் அவர் மகன் நாகலிங்கத்தின் தவறான நடவடிக்கைகளும் அதனால் அவனுக்கு நேர்ந்த பின்விளைவுகளும் சுப்பையாவின் பேரன் ஒரு உளவுபேதா என்ற தகவலுடன் கதை நிறைவு பெறுகிறது.  


கதையைப் படித்து முடித்ததும், இக்கதையின் வாயிலாக கதாசிரியர் எதைக்கூற வருகிறார், என்ன சொல்ல வருகிறார் என யோசிக்க வைக்கிறது.

நிறைய விஷயங்கள் கதைக்குள் செயற்கையாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. இருபது ஆண்டுகளுக்குமுன் இருந்த அந்த இடத்தின் ஆளுமையை இன்றைய நிலையோடு ஒப்பிட்டு கதையை நகர்த்தியிருக்கலாம். அன்றைய உறவுகளின் நெருக்கத்தையும் இன்றைய உறவுகளின் விரிசல்களையும் காட்சிப் படுத்திக் கதையை நகர்த்தியிருக்கலாம். அல்லது உளவு பேதா பெரியவர் சுப்பையிவின் கதையை மட்டும் கொண்டு கதையை நகர்த்தியிருக்கலாம். அல்லது நாகலிங்கத்தின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி கதையை நகர்த்தி அப்பா சுப்பையாவையும் மகனையும் கதையின் மையத்தோடு தொடர்புப்படுத்தி இருக்கலாம். அல்லது நம் சமூகத்தில் அன்று தொட்டு இன்றுவரை மாறாமல் தொற்றிக்கொண்டிருக்கும் முரண்பாடுகளையும் தேவையற்ற செயல்களையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் கொண்டு கதையை நகர்த்தியிருக்கலாம். இதில் ஏதாவது ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு கதைச்சொல்லி பயணித்திருந்தால் இக்கதை இன்னும் அதிகமான தாக்கத்தை வாசகனிடம் ஏற்படுத்தியிருக்கும் என நான் நம்புகிறேன்.


இருப்பினும், பொதுவாக சமூக விழுமியங்களை முன்னெடுத்துக் கதையுரைத்திருப்பதால் கதாசிரியருக்கு நல்வாழ்த்து.அன்புடன் எம்.சேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக