புதன், 7 டிசம்பர், 2011

பட்டுப்பாப்பா பாட்டுப் பாடு


பட்டுப்பாப்பா பாட்டுப் பாடு 
(சிறுவர் பாடல்கள்)
கவிஞர் பொன். கணேசுகுமார்


வாசலில் சில நிமிடங்கள்

பல வகை இலக்கியங்களுள் குழந்தை இலக்கியம் பழமையான ஓர் இலக்கியமாகத் திகழ்கிறது. எழுதப்படாத வாய்மொழி மரபில் பிள்ளைகளுக்காக நம் முன்னோர்கள் உருவாக்கியது ஏராளம். தாலாட்டில் தொடங்கி குழந்தைகளுக்கு ஊட்டப்படும் கதைகளும் பாட்டுகளும் உலகின் வேறெந்த இனத்தை விடவும் நம் இனத்தில் அதுவும் நமது பண்பாட்டில் அதிகமாகவே வாழும் கலையை போதிக்கும் வண்ணம் சொல்லப்பட்டுள்ளது.

1901-இல் குழந்தைப் பாடல்களைப் பாடி குழந்தை இலக்கியத்திற்கு வித்திட்டவர் கவிமணி தேசிக விநாயம் பிள்ளை. 1915-இல் பாப்பா பாட்டு பாடினார் மகாகவி பாரதி. இவ்விலக்கியத்தின் ஆணிவேராக இருந்து வளர்த்தெடுத்தவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா என்றால் அது மிகையாகாது.  இவர்கள் காட்டிய வழியில் பலர் இன்று வரையில் குழந்தை இலக்கியங்களைப் படைத்து வருகின்றனர்.

குழந்தைகள் படிப்பதற்கு ஏற்றவைகளைப் படைப்பது குழந்தை இலக்கியமாகும். இந்த இலக்கியம் எழுதுவது அவ்வளவு எளிதன்று. பொறுமை, பொறுப்பு, புலமை என்பன இவ்விலக்கியம் படைக்கத் தேவை. சிறுவர் இலக்கியம் மொழி நடையிலும், நூல் அமைப்பிலும் வளர்ந்தோர் இலக்கியத்தில் இருந்து வேறுபட்டவையாகும். வயதைப் பொறுத்து மொழி எளிமையாக அமைதல் வேண்டும். அவ்வகையில் சிறந்து விளங்கும் ஒரு படைப்பாக இந்த ‘பட்டுப் பாப்பா பாட்டுப் பாடு’ அமைந்திருக்கிறது.

கவிஞர், நண்பர் பொன். கணேசுகுமார் அவர்கள் குழந்தைகளைக் கண்டால் தானும் குழந்தையாக மாறிவிடும் அளவிற்கு குழந்தை உள்ளம் படைத்தவர். ஒரு தலைப்பைக் கொடுத்தால் உடனே கவிதை புனையும் திறன் பெற்றவர். எளிமையான சொற்களைக் கொண்டு கவிதைப் படைப்பதில் ஆற்றல் மிக்கவர். குழந்தைகளுக்குப் பிடிக்கும் வண்ணம் சொற்களோடு விளையாடுவதில் வல்லவர்.

பொம்மை பொம்மை பொம்மை\பொட்டு வைத்தப் பொம்மை\அம்மா எனக்குத் தந்த\அழகு நிறைந்த பொம்மை போன்ற அடிகளும்,
தம்பி தம்பி இங்கேவா\தமிழைப் படிக்க இங்கேவா\நம்மைப் போன்ற குழந்தைகளை\நயந்து கூட்டி இங்கேவா போன்ற அடிகளும் கவிஞரைக் குழந்தைக் கவிஞராக பரிமாணிக்க வைக்கின்றன. இது போன்ற எளிய சொல்லாடல்கள், துள்ளும் ஒசையுடன் பாடல்கள் முழுக்க வியாபித்திருக்கின்றன.

சிங்கப்பூரின் சிறுவர் இலக்கியத்திற்கு இந்நூல் தனிச்சிறப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். மேலும் பல சிறுவர் இலக்கியங்கள் தோன்ற முன்னோடியாகவும் அமையும். நண்பர் பொன். கணேசுகுமார் அவர்கள் தனது இலக்கியச் சோலையில் இலக்கிய அறுவடைகளைச் சிறப்பாக மேற்கொள்ள என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.


புத்தகங்களை சுமையாக
நினைக்கும் நிலையினை மாற்றி
புத்தகங்களை சுவையாக
நினைக்கும் சூழலை – நம்
பிள்ளைகளுக்கு உருவாக்குவோம்!


அன்புடன்
பூச்சோங் எம். சேகர்

புதன், 30 நவம்பர், 2011

வியாழன், 24 நவம்பர், 2011

காற்றில் அலையும் சிறகு


காற்றில் அலையும் சிறகு

காதல் நினைவின்
காற்றாய்
நீ

மிதக்கும்
காதல் சிறகுகளாய்
நான்

திங்கள், 31 அக்டோபர், 2011

மண்ணில் விழுந்த விதைகள்



உன் வாழ்க்கை ஏடுகளின்
முகவரிகளைக் கொஞ்சம்
திருப்பிப் பார்

நட்பின் வாசம்
மனதை வருடும்

நீ
அரசனாக இருக்கலாம்
ஆண்டியாக இருக்கலாம்

நட்பு என்றும் பொதுமையானதுதான்

பூஜ்யமான இந்த வாழ்க்கையில்
நீயும்
பூஜ்யத்தோடு பூஜ்யமாகக்
கரைந்துபோகப் போகிறாயா?

அல்லது


விதைகளை விதைத்து விட்டு
வாழப் போகிறாயா?

விதை
செடியாகும் கொடியாகும் மரமாகும்
காய் காய்க்கும்
பூ பூக்கும்
மணம் வீசும்

பூஜ்யம் என்றால்
நீ இறைவனாவாய்
விதை என்றால்
நீ மனிதனாவாய்

உன் வாழ்க்கை
உன் கைப்பிடிக்குள்.

செவ்வாய், 18 அக்டோபர், 2011



கல்யாணப் பேச்செடுத்தாலே
வந்து விழுவுது சாதி

ஆனா,

எங்க ஊரு 'கேலாங்கில்'
இதப்பத்தி
யாரும் கவலைப்படுவதாய் இல்லை.

நாங்கள் என்றும் எறும்புகள்தான்



சிங்கையின்
வெற்றிப் படிகளின்
ஒவ்வொரு ஏட்டிலும்
எங்களின் சுவாசம் சுவாசித்திருக்க....

பணத்தில் மிதக்கும்
கொள்ளுக்கட்டைகள்
புதிய வரவாகி,
சுகங்களை மட்டும்
தங்களுடையதாக்கி,

புதுப்புது அவதானிப்புகள்
தினமும் அரங்கேறுகின்றன
கரையான் புற்றுக்குள்
பாம்புப் புகுந்த கதையாய்.....

சின்னச் சின்ன நேர்க்கோடுகளில்
பொதி சுமக்கும் எறும்புகளாய்
இன்னமும் நாங்கள்



ஞாயிறு, 9 அக்டோபர், 2011




இறந்தவனுக்கு
ஒரு முறைதான் இறப்பு
இருப்பவனுக்கு
ஒவ்வொரு நாளும் இறப்பு