திங்கள், 24 ஜூன், 2024



ஞானக்கூத்தன் மதிப்புரை - எம். சேகர்

 

ஞானக்கூத்தன்

வகை – நாவல்

எழுத்து – இந்திரஜித் (சிங்கப்பூர்)

வெளியீடு – உயிர்மை பதிப்பகம்

 

 

குறிப்பிட்ட ஓர் எல்லைக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருந்த சிங்கப்பூர்ப்  படைப்பிலக்கியத்தில்  சமீபக் காலமாகச் செம்பவாங், ரயில், சுண்ணாம்பு அரிசி, அம்மாவின் வாடகை வீடு, அம்பரம் என வேறொரு தளத்தில் கதைகளைப் புனைவதில் குறிப்பாக நாவல் புனைவதில் ஆர்வம் மேலிட்டுள்ளதைக் காணமுடிகிறது. மா. இளங்கண்ணனின், ‘வைகறைப் பூக்கள் நாவலுக்குப் பிறகு பலரின் கவனத்தை ஈர்த்த நாவல்களாக இவை அமைந்துள்ளன.  சமூக வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்படும்போதுதான் படைப்பிலக்கியத்திலும் மாற்றங்கள் ஏற்படும் என்கிறார் கோவை ஞானி. ஆனால், இந்த நாவல்கள் அனைத்தும் அவை நடந்த கால கட்டத்தைக் கடந்து ஒரு மீள்பார்வையாக இன்று முன்னெடுக்கப்படுவது தமிழ்ச் சமூகம் இந்தச் சிங்கப்பூர் நிலத்தில் கடந்துவந்த வாழ்வியல் அனுபவங்களின் ஒருவகை முன்னெடுப்பாகவே தெரிகிறது.

 

செம்பவாங் நாவல் அன்றைய செம்பவாங் வட்டார மக்களின் சமூக வாழ்வியலை மிக இயல்பாகப் பதிவு செய்துள்ளது. ரயில், மரண சயாம் ரயில் பாதையைக் கடந்து உடைந்தவர்களின் மன உணர்வுகளையும் சுண்ணாம்பு அரிசி, ஜப்பானியர் ஆட்சியில் இங்கு நடந்த கொடுமைகளையும் வாழ்வாதாரப் போராட்டங்களையும் அம்பரம் இரண்டாம் உலகப்போரில் சிதைந்த மனித வாழ்வின் சிக்கல்களையும் மன உடைப்புகளையும் வெளிப்படுத்துவதாகவும் எழுதப்பட்டுள்ளது.

 

இந்திரஜித்தின் அம்மாவின் வாடகை வீடுஅறுபது, எழுபதுகளில் சிங்கப்பூர்த் தமிழ் மக்களின் வாழ்க்கைச் சூழலைப் பின்னி எழுதப்பட்டிருந்தாலும் அதில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் இன்னமும் நம் சமூகத்தில் தீர்க்கப்படாதவைகளாகவே இருக்கின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.

 

இவர் நவீன தமிழ்ப் புனைவுலகின் மிக முக்கியமான படைப்பாளர்களில் ஒருவராய்த் திகழ்பவர். அவருடைய கதைக்களன்களும் அதற்கேற்ற தேர்ந்த சொற்பயன்பாடுகளும் கவித்துவமான எள்ளல்களில் சிக்கித் தவிக்கும் மானுட வாழ்வின் அபத்தங்களையும் அதன் பக்கங்களையும் நமக்கு மிக அருகில் கொண்டுவருபவையாக இருக்கின்றன. சின்னச் சின்ன வாக்கிய அமைப்புகளளில் சொல்லவேண்டியவற்றை மிக இயல்பாக நம் மனத்தில் பதியம் செய்வதில் சிறந்த எழுத்தாற்றலையும் பெற்றவர்.

 

 

இந்திரஜித்தின் ரயில், அம்மாவின் வாடகை வீடு, ஞானக்கூத்தன் என மூன்று நாவல்களும் சிங்கப்பூரின் கடந்த வாழ்க்கையின் பிரதிகளாக பெரியப் பெரிய விருட்சங்களாக நம் முன்னே விரிந்து நிற்கின்றன. அவை சொல்ல மறந்த, சொல்லப்படாத, எழுத்தில் இல்லாத வாழ்க்கையை நம்மில் பலர் இன்று வாழாத ஒரு வாழ்க்கையின் பல பிரதிகளை நமக்குள் காட்சிப்படுத்திச் செல்லத் தவறவில்லை. சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தில் நிலவிய அன்றைய வாழ்வியல் முரண்களை இணைத்து எதிர்காலச் சமூக மாறுதல்களுக்கான விதைகளைத் தமிழ் இலக்கியச் சூழலில் விதைத்துள்ளார்.

 

இந்த நவீன காலத்தில் சாமானியர்களுக்கு நிகழும் அகபுற வாழ்வியல் சிக்கல்களை அவர்களே நம்மோடு பேசத் துவங்குகின்றனர். இத்தகையப் போக்கு இதுநாள் வரையில் நாம் கடைப்பிடித்து வந்த மரபுகளை ஆராய்ந்து, மீள்பார்வை செய்து இதுவரை இலக்கியத்தில் பேசப்படாத சக மனிதர்களின் சிக்கல்களை அல்லது அவர்களின் புதிய மன இயல்புகளைப் பதிவு செய்ய வைக்கிறது. கருத்துச் சொல்வதற்காகவும் அவற்றைப் பதிவு செய்வதற்காகவும் எழுதும் எழுத்து இன்று வழக்கிழந்து வருகிறது. கண் முன்னால் நடக்கும் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. அதைத்தான் எழுதுகிறேன் என்று படைப்பாளன் சொல்வதையும் கேட்க முடிகிறது. இந்திரஜித்தும் அதைத்தான் இப்படிப் பதிவு செய்கிறார்.

 

நான் சில கருத்துகளைச் சொல்ல விரும்புகிறேன். அதைப் பதிவு செய்ய விரும்புகிறேன் என்பதற்காக நான் இந்த நாவலை எழுதவில்லை.

இது இப்படி இருந்தது என்பதைச் சொல்கிறேன்.

 

ஞானக்கூத்தனும் அந்த வழியேதான் செல்கிறான். தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தை அவனது பாணியில் மிக யதார்த்தமாக எளிய மொழியில் சொல்லிச் செல்கிறான். அந்த வாழ்க்கையில் அவனோடு பயணித்த அனைவரையும் ஒவ்வொரு சூழலிலும் மறக்காமல் சொல்லிச் சொல்லிச் செல்கிறான். அவனுடனான பயணம் டைம் குளோக்காக நம்மைப் பின்னோக்கி சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்துக்குள் அழைத்துச் செல்கிறது. ஊட்லண்ட்ஸ்ஸிருந்து பாசீர் ரீஸ்ஸூக்கு நேரடியாகச் செல்லாமல் ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் நின்று நின்று செல்வதுபோல் நாவலும் சிவாவின் வாழ்வில் இடம்பெறும் ஒவ்வொரு சம்பவங்களுக்குள் நின்று நின்று நிதானமாகப் பயணித்துச் செல்கிறது.

 

அந்தப் பயணத்தினூடே அவன் சந்திக்கும் மனிதர்கள் கடை முதலாளி, வேலண்ணணன், அவரின் காதலி மைனா, செம்பி, பாரி, ரத்தினம், சரோஜா, வெரோனிக்கா, சடைமுடி குளத்தோர தாத்தா, ஜோதிடர், மாட்டு வண்டி முத்தையா அண்ணன், கோயில் பூசாரி குணாளன், இட்லி கடை கந்தையா, துக்கான் முருகன், எருமையின்மேல் வரும் சீனக்கிழவன், தாமோதரன், கருப்பையா, புரட்சியாளன் ராஜன், சடைமுனி, காசி, இனிப்புக் கடைக்கார பாய், கிளி ஜோசியர் குழந்தையப்பன், தாதி நீலவேணி அக்கா, சீனத்தாதி பெய்க்குவான், கேங்ஸ்டர் மைக்கல், கோபாலு, வண்டி உணவுக்கடை ராமன், மைக்கலின் காதலி ரெச்சல், கேங்ஸ்ட்டர் தலைவன் பத்மா, பத்மாவின் தல தடி ராமச்சந்திரன், இன்னொரு தல கிஷ்டா, பத்மாவின் அண்ணன் முகிலன், முடிவெட்டும் மலாய்க்காரர் மத்தாய், ரொட்டிக்கடை ரன்பீர் குமார், சிங்கப் பெருமாள் கோயில் தவமுனி என்று இவர்கள் மட்டுமல்லாமல் இரவின் நிலவும் நட்சத்திரங்களும் தென்றலும் காளி கோயிலும் நரசிம்மப் பெருமாள் கோயிலும் என நாவல் முழுக்க நிறைந்து அன்றைய சிங்கப்பூரின் ஒரு சாமானியனின் வாழ்க்கைச் சூழலுக்குள் நம்மையும் அழைத்துச் செல்கிறது.

 

அம்மாவிடம்கூடச் சொல்லிக்கொள்ளாமல் பிழைப்பைத் தேடி சிங்கப்பூருக்கு வந்து, தங்க ஓரிடமும் இல்லாமல் பல நாட்கள் சாப்பிடாமலும் இருந்த ஓர் இளைஞனின் வாழ்க்கையில் நிகழும் மன நெருக்கடிகள், உள்ளுணர்வுகள், சிக்கல்கள், பாதிப்புகள், குரூரங்கள், அவலங்கள், மாற்றங்கள், வாழ்வின் அர்த்தமின்மை என பலவற்றையும் தன் எழுத்தின் வாயிலாக அழகியல் தன்மையுடன் வெளிப்படுத்தியுள்ளார் இந்திரஜித். இந்த நாவல் அன்றைய சிங்கப்பூர் மனிதர்கள் அல்லது சமூகத்தின் வாழ்வியல் இயங்கியல் குறித்தான ஒரு சிந்தனையையும் வாசகர்களிடையே ஏற்படுத்துகிறது. இதன்வாயிலாக அன்றைய சூழலில்  நிகழ்ந்த பல்வேறு பிரச்சினைகளை அறியவும் வைக்கிறது.

 

நாவலில் வரும் சில அழகியல் சொற்றொடர்கள்:

வாகனங்கள் செத்துவிட்ட நல்ல ராத்திரி

பகலை எடுத்து ஒரு மூலையில் வைத்துவிட்டது இரவு

பழைய நாளின் புழுதிகள் வந்து கண்ணை மூடின

சுருட்டுக்கு ஒரு காலை முத்தம் கொடுத்து கனன்றது நெருப்பு. சுருண்டு எழுந்தது மோகப்புகை

ஜயாயிரம் வருடமாக நாங்கள் எந்தப் பெண்ணையும் தாலி கட்டாமல் தொடுவதில்லை

தமிழ் தெரியாதவர்கள்கூட அவரை நல்ல கவிஞர் என்று சொல்வார்கள்

சுட்டுப்போட்ட தோசை ஆறிப்போன மாதிரி வானம் வாடி இருந்தது

ராத்திரிப் பூ மாதிரி தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தது நிலவு

நம்மள மதிக்காத ஒருத்தர மதிச்சு பதில் சொல்றது தப்பு

தமிழ்ல ஹொர்மாட் சம்பாய் கெரமாட்டுனு சொல்லுவோம் (இது மலாய் சொற்றொடர். வழக்கத்தில் தமிழாக மாறிவிட்டதைக் குறிக்கிறது. சமாதிக்கு செல்லும்ரை நமக்கு மரியாதை கிடைக்கும்)

 

நம் சிந்தனைக்கும் கற்பனைக்கும் தீனி போடும் நிறைய வாக்கிய அமைப்புகள் இந்நாவல் முழுக்க மகரந்தப் பூக்களைப்போல பரவிக் கிடக்கின்றன.

 

இந்திரஜித்தின் ரயிலில் பயணித்தபோதும் இந்த ஞானக்கூத்தனோடு உடன் சொன்றபோதும் வாசகனாய் என்னால் உணரமுடிந்தது ஒன்றுதான்.

இன்னும் கொஞ்சத் தூரம் பயணித்திருக்கலாமே என்பதுதான். ஒரு வாசகனின் மனத்தில் இத்தகைய ஏக்கத்தை ஏற்படுத்தியிருப்பது அவரின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியாக நான் பார்க்கிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள்.

அடுத்த தலைமுறையினர் சிங்கப்பூரின் முந்தைய முகத்தை நம்பகத்தன்மையோடு இன்னும் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள நிறைய எழுதுங்கள்.

உங்களின் தொடர் இலக்கியச் செயல்பாடுகளுக்கு எனது அன்பான வாழ்த்துகள்.


எம்.சேகர்

முனைவர் பட்ட ஆய்வாளர்

இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியத்துறை

தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக