திங்கள், 15 ஏப்ரல், 2024



காற்றலையில் – தமிழ்ச்செல்வி

(சிறுகதைத் தொகுப்பிற்கு நான் வழங்கிய அணிந்துரை)

 

 

ஒவ்வொரு தனிமனிதனும் எப்போதும் தம்மை மேம்படுத்துவதிலும் தம்மை சகநிலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவதிலும் மிகவும் கவனமாக இருக்கிறான். அது பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் மற்றவர்மீது வன்மம் கொள்வதும் அவர்களின் சுயநல தேவைகளுக்காகச் சகமனிதர்களை அலட்சியப்படுத்துவதும் அந்நியப்படுத்துவதும் வேறுபடுத்துவதுமாக அவரவர் வாழ்க்கையில் பல மாற்றங்களையும் சிக்கல்களையும் ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நசிந்துபோகின்ற நசுக்கப்படுகிற உறவும் நட்பும் சகமனிதர்களுக்கிடையிலான மனிதநேயத்தையும் இத்தொகுதியில் உள்ள கதைகள் பேசுகின்றன.   

 

பல கதைகளில் கதாசிரியர் சிங்கப்பூர் வாழ்க்கைக்கு மாறியிருக்கும் அண்மைய குடியேறிகளின் வாழ்க்கையின் இடர்களைக் கருத்தியல் பண்புகளோடு அணுகியிருப்பது கவனிக்கத்தக்கது. ஒரு படைப்பாளி தனது படைப்பின்வழி இச்சமூகம் எதனைக் கவனத்தில்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் உடையவனாக இருக்கவேண்டும். அத்தகைய படைப்புகளின்மூலமாக தான் சொல்லவேண்டியதைத் தன் எழுத்தில் கொண்டுவருபவனாக இருக்கவேண்டும். அந்த வகையில் தன் எழுத்தில் அறத்தை நிலைநிறுத்த வேண்டிய கடமை உணர்வு ஒவ்வொரு படைப்பாளிக்கும் இருக்கவேண்டும். படைப்பு என்பது கலைத்தன்மை கொண்டதாயினும் அது வெறும் கலைத்தன்மையை மட்டும் காட்டுவதாக அமைந்துவிடக்கூடாது. இலக்கியப் படைப்பு மனிதர்களின் உயிர்த்துடிப்புகளையும் சமகால வாழ்வியியல் சிக்கல்களைப் பிரதியெடுத்துக் காட்டுபவையாக இருக்கவேண்டும். இந்தக் கடமையுணர்வு கதாசிரியருக்கு நிறையவே உள்ளது என்பதற்கு இக்கதைகளே நல்ல சான்றுகளாகும்.

 

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் மிக நேர்த்தியான சொற்கட்டமைப்பில் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. எடுத்துக்காட்டாக, பிறப்பின் பிழை கதையில்,

 

நம் உடல் உணர்ச்சிகளில்தான் மாற்றமே தவிர நம் அறிவில் திறமையில் எந்த மாற்றமும் இல்லை. உன் பார்வையை மட்டும் பார். சமூகம் உன்னைத் தேடிவரும்படி திரும்பிப் பார்க்கும்படி செய்’, சன்னல் என்ற கதையில்,

 

சிறகு கிடைத்தாலும் பறப்பதும் மட்டும் வாழ்க்கையல்ல, சிலுவை கிடைத்தால் சுமப்பதுதான் வாழ்க்கை என வரும் வரிகளும் கதைக்கு வெளியே நின்று பேசாமல் கதைக்குள்ளே நின்றுபேசுவதுதாக அமைக்கப்பட்டிருப்பது கதாபாத்திரங்களுக்கும் நமக்குமான அணுக்கமான உறவை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

 

 

வாழ்க்கையிலிருந்து வாழ்க்கையைக் கற்கவேண்டும் என்பர். அதுபோல வாழ்க்கையிலிருந்து இலக்கியம் படைக்கப்படுகிறது. அத்தகைய படைப்புகளிலிருந்து நாம் கற்றுகொள்ள, தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு. சிங்கப்பூரின் வாழ்வியல் சூழலை அறிந்துகொள்ள நாம் ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டவேண்டியதில்லை. இதுபோன்ற கதைகள் சிங்கப்பூர் குடும்பச் சூழலுக்குள் உள் நுழைந்து நல்ல படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைத் தருகின்றன.

 

 

தற்போதைய தலைமுறையோடு வருங்கால தலைமுறைக்கான அன்பு, அரவணைப்பு, பாதுகாப்புணர்வு, சகிப்புத்தன்மை, சமூக உணர்வு, நாட்டுப்பற்று ஆகியவற்றின் உறைவிடமாக குடும்பம் என்ற அமைப்பு இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு சமூகம் மேம்பட வேண்டுமாயின் குடும்பங்கள் மேன்மையுற வேண்டும். நிறை, குறைகளைப் பகுத்தறிந்து உறவுகளை ஒருங்கிணைத்துக் குடும்பங்களைக் கட்டுக்கோப்போடு அரவணைத்துச் செல்ல வேண்டும். அதில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. கதாசிரியர் ஒரு பெண்ணாக இருப்பதால் பெண்களின் உணர்வுகளைப் பெரும்பாலான கதைகளில் மிகவும் எதார்த்தமாகவும் வாழ்க்கையின் கருவூலங்களை நேர்மையாகவும் பதிவு செய்திருக்கிறார்.

 

இனி இத்தொகுப்பில் இருக்கும் கதைகளைப் பார்ப்போம். அனைத்தும் நல்ல கதைகள் என்ற ஒற்றை நேர்கோட்டில் வரிசைப்பிடித்து நிற்கின்றன.

 

 

பெண்ணானவள்

 

சிங்கப்பூரின் கட்டாய இராணுவ சேவையில் ஒரு பெண்ணின் பங்கெடுப்பைப் பேசும் கதையில் ஒரு தாயின் மனப்போராட்டத்தை இயல்பாகக் கொண்டு வந்திருப்பவர், இறுதியில் தந்தையைப் புறவயமாகக் காட்சிப்படுத்தி அவருக்குள் இருக்கும் தாய்மையை வெளிப்படுத்திக்காட்டியிருக்கும் விதம் சிறப்பு.

 

 

மெரூன் கலர் கட்டடம்

 

 

இன்று சிங்கப்பூரில் முதியவர்கள் பலர் மறதி நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அரசும் சமூகமும் குடும்பமும் முத்தரப்பாக இணைந்து இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல வழிகாட்டிகளையும் ஆதரவுகளையும் வழங்கி வருகின்றன. அத்தகைய நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரையும் அவருக்கு உதவிச்செய்ய முயற்சிக்கும் ஒருவரையும் இக்கதையின்வாயிலாக நம் மனத்திலும் நடமாடவிட்டிருக்கிறார் கதாசிரியர். இறுதியில் வாசக இடைவெளிக்குத் தாராளமான இடத்தையும் ஒதுக்கியுள்ளது அவரின் பரந்த இலக்கியத் தேடலைப் புலப்படுத்துவதாக உள்ளது.

 

 

சன்னல்

 

அண்மையில் உலகையே ஆட்டிவைத்த கோவிட் காலத்தில் அந்நியத்  தொழிலாளர்களின் வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் கதை. தொழிலாளர்களின் மன உணர்வுகளையும் ஏக்கங்களையும் வாசகனுக்கு மிக அருகில் காட்சிப்படுத்தியிருக்கிறார். அதில் வரும்,

 

சிறகு கிடைத்தாலும் பறப்பதும் மட்டும் வாழ்க்கையல்ல, சிலுவை கிடைத்தால் சுமப்பதுதான் வாழ்க்கை என்ற வரிகளில் வாழ்வின் தத்துவத்தை மிக இயல்பாக எடுத்துரைத்திருக்கிறார் கதாசிரியர்.

 

 

நான் ஒரு தடவை முடிவு செஞ்சிட்டா

 

அங்கத உணர்வுடன் கூடிய நடுத்தர வயதுடைய பெண்ணின் தன்னம்பிக்கை கதை. குடும்பங்களில் நடக்கும் இயல்பான கதை. அதுவும் சிங்கப்பூர்த் தமிழ்க் குடும்பங்களில் நிறையவே நடக்கும் கதை. படைப்பில் வெளிப்படும் கதை அல்லது கதாபாத்திரம் படைப்பாளியைப் பிரதிபலிக்கிறது என்ற கூற்றும் இக்கதையை வாசிக்கும்போது நினைவுக்கு வருகிறது.

 

 

குட்டிம்மா

 

ஓர் உளவியல் கதை. ஒரு பயம். அதற்கான காரணத்தை நம்மையும் தேட வைக்கும் கதை. சிங்கப்பூரில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து, கதையை நகர்த்தியிருக்கும் விதம் அருமை. சில நவீனக் கூறுகளின் அம்சங்களை உள்ளடக்கிய கதையாக இதை அணுகலாம்.

 

 

மனிதன் என்பவன்

 

வாழும் காலம் முழுவதும் சத்தியம், உண்மை, நேர்மை போன்றவற்றைக் கடைப்பிடித்தலின் அவசியத்தை உணர்த்தும் கதை. மளிகைக்கடை தொடர்பான கதைக்களம். வியாபாரத்தில் இருக்கும் அறநிலையை உறுதிபடுத்தும் கதையாக இருந்தாலும் அடுத்து வரும் புதிய தலைமுறையிடம் அத்தொழில் கைமாறுகிறபோது அந்த அறநிலையை கேள்விக்குறியாய் நிறுத்தும் கதை.

 

இப்பலேர்.....................ந்து

 

சிங்கப்பூரின் கல்விச் சூழலில் ஆறாம் ஆண்டு மாணவர்கள் படும் துயர்களையும் அவர்களின் பெற்றோர் கொடுக்கும் இடர்களையும் மாணவர்களின் கல்விப்பயணத்தை இனிமையாக்குவதைவிட கல்வியின்மேல் வெறுப்பை ஏற்படுத்துகிற சூழலை மிகவும் இயல்பாக ஒரு மாணவனின் பார்வையிலேயே  சில இடங்களில் அங்கத உணர்வோடும் கதையாகச் சொல்லப்பட்டுள்ளது.

 

பெட்டி கட்டியாச்சு

 

தலைமுறை இடைவெளியை மிக இயல்பாக வெளிப்படுத்தும் ஒரு பெண்ணியக் கதை. தங்களுக்கு நிகழும்போது பண்பாடு கலாசாரம் என, ஏன் இப்படி அடக்கி ஆளப் பார்க்கிறீர்கள் எனப் பெற்றோரைக் கேட்கும் பலர், தங்களின் குழந்தைகளுக்கு அவற்றையே தினிக்க முயற்சிப்பதை முரண் உணர்வுகளின் வெளிப்பாடுகளாக வெளிச்சம் காட்டும் கதை. பண்பாட்டு வெளி சார்ந்த முரண்கள் புலப்படுத்தப்படுவதுடன் ஒவ்வொருவரும் தங்களுக்கான இடைவெளிகளைப் புரிந்துகொண்டு நடக்கவேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தும் கதை.

 

 

காற்றலையில்

 

தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்து பணிபுரியும் புதிதாகத் திருமாணமான ஒர் ஆணுக்குள் நிறைந்நிருக்கும் அன்பும் காதலும் இரண்டுமாத கர்ப்பிணியாய் மனைவியை விட்டு வந்து, குழந்தை பிறந்தும் பார்க்கக்கூடச் செல்ல முடியாத ஒரு கணவனின் ஓர் அப்பாவின் மனநெருடல்கள் கதை முழுக்க வியாபித்து நமது மனதையும் ஏதோ செய்துவிடுகிறது.

 

வெங்காய மூட்டையும் ஞாயிற்றுக்கிழமையும்

 

குடும்பக் கட்டமைப்பில் ஆண்பெண் சமத்துவம் பேணப்படவேண்டும். ஒருவருக்கொருவர் மற்றவர்களின் மன உணர்வுகளைப் புரிந்து மதிப்பளிக்க வேண்டும். பெண் என்பதால் கீழ்மை என்ற எண்ணம் இருவருக்கும் இருக்கக்கூடாது. பெண்ணியம் என்பது ஒரு வெற்று விமர்சனமாக அமைந்துவிடக்கூடாது. வேலை செய்யும் பெரும்பாலான பெண்கள் அவரவர் கணவர்மார்களின்மேல் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு கதையின் மையத்தை நோக்கி நம்மை நகர்த்திச் செல்கிறது.

 

திரவ நிலை

 

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கைச் சூழலை முன் வைக்கும் கதை. வெளியில் இருக்கும் நம் பார்வை பொதுவானதாக அனைத்தையும் சமூகம் அளந்து வைத்திருக்கும் சமூக மதிப்பீட்டுகளுக்குள்தான் வைத்திருக்கும். அவரவர்களுக்கு ஒரு நியாயம் இருக்கும். அந்த நியாயத்தின் நம்பகத்தன்மையில் வெளிப்பார்வை வெறும் வெளிப்பூச்சாக மட்டுமே இருக்கும் என்பதை உணர்த்தும் கதை.

 

 

பிறப்பின் பிழை

 

நம் உடல் உணர்ச்சிகளில்தான் மாற்றமே தவிர நம் அறிவில் திறமையில் எந்த மாற்றமும் இல்லை. உன் பார்வையை மட்டும் பார். சமூகம் உன்னை தேடிவரும்படி திரும்பிப் பார்க்கும்படி செய். என அனைவருக்கும் பொருத்தமான ஒரு கருத்தை முன்வைக்கும் கதை.

ஓர் ஆண்பிள்ளைக்குள் ஏற்படும் பாலுணர்ச்சி மாற்றங்களில் குடும்பம், சமூகம் போன்ற கட்டமைப்புகளின் பொருப்புணர்ச்சிகளை உணர்த்துகிறது. இத்தனை கொடுமைமிக்க சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும்போது மனம் நடுங்குகிறது. நம்மிடமிருந்து விலக்கப்பட்ட, அந்நியப்படுத்தப்பட்ட,

ஒடுக்கப்பட்ட மனித மனங்களின் நிராசைகளையும் சிக்கல்களையும் முன்வைக்கும் கதை.

 

நிறைவாக, கதாசிரியரின் கதைகள் பெரும்பாலும் எதார்த்தவாதத் தன்மைகளைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கின்றன. ஆழ்மன ஏக்கத்தினைக் கதாபாத்திரங்களின்வழி ஆங்காங்கே கோடிட்டுக் காட்டுகிற மனோபாவம் பல கதைகளில் காணப்படுகிறது. சில கதைகளில் புறத்தே நடக்கும் சில காட்சிகளில் முரணான மனநிலைகளைப் பதிவு செய்திருக்கிறார். இவரின் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நம்மிடையே நடமாடும் மனிதர்களாகவே இருக்கிறார்கள். கதைத் தலைப்பும் கதை கூறும் முறைகளும் கதைகளின் பொருண்மைக்கேற்ப அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. சில கதைகள் வாழ்வினை உள்முகமாகப் பார்க்கிற தத்துவார்த்த தளத்தை மையமாகக் கொண்ட தேடலாக அமைந்திருக்கின்றன.

 

கதாசிரியர் இலக்கியத் துறையில் மேன்மேலும் பல சாதனைகளைப் புரிந்திட அன்பான வாழ்த்தும் பாராட்டும்.

 

எம்.சேகர்

முனைவர் பட்ட ஆய்வாளர்

இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியத்துறை

தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக