செவ்வாய், 1 மார்ச், 2022

அறம் - சிறுகதைத் தொகுப்பு - சூர்ய ரத்னா

                   

அறம்

சிறுகதைத் தொகுப்பு – சூர்யரத்னா

 

சிங்கப்பூரில் சிறுகதைகளுக்கான கருவைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. நமக்குள்ளே ஆயிரக்கணக்கான கதைகள் இருக்கின்றன. நாள்தோறும் பல கதைகளுடனேயே நாம்  பயணித்துக்கொண்டிருக்கிறோம். நமக்கான அனுபவங்களை நாம் பிறரிடம் பகிரும்போது ஏற்படும் உணர்வுகளே நம் எழுத்துகளை மற்றவர்கள் வாசிக்கும்போதும் ஏற்படுகிறது. அது படைப்பாளருக்கும் வாசகருக்கும் வெவ்வேறான உணர்வலைகள் எழும்பி அவரவருக்கான தேடலை நோக்கி ஓட வைக்கிறது. அத்தகைய தேடல்களின் ஒரு பகுதியாகத்தான் சூர்யரத்னாவின் அறம் சிறுகதைத் தொகுப்பின் கதைகள் அமைந்திருக்கின்றன.

படைப்பாளருக்கு அகம் சார்ந்த மொழியும் சமூகம் சார்ந்த மொழித்திறனும் அவசியம். இவ்விரண்டும் அவரின் படைப்பை மேன்மையாக்கக்கூடியவையாகும். படைப்பாக்கம் என்பது வெறும் சொற்களின் அழகியக் கட்டமைப்பு அல்ல. அது உணர்வுகளின் கட்டமைப்பு.  அந்தந்த உணர்வுகளுக்கு ஏற்றச் சொற்களைத் தெரிவு செய்வதில் ஒரு படைப்பாளருக்கு ஆழ்ந்த திறன் இருக்கவேண்டும். உணர்வுகளை இயல்பாகச் சொற்களில் தரும் ஆற்றல் படைப்பாளருக்கு முக்கியம். இந்த ஆற்றல் சூர்யரத்னாவிற்கு இயல்பாக இருக்கிறது. அதற்கு அறம் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு.

மனித வாழ்க்கையின் சூழலுக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்கள் நிகழுகின்றன. இப்படிப்பட்ட மக்களின் வாழ்வியலில் ஏற்படும் இன்பத் துன்பங்களும் சவால்களும் சிக்கல்களும் நவீன காலமுறைக்கேற்பச் புனைகதைகளில் படைக்கப்படுகின்றன. அவ்வகையில் அறம் சிறுகதைகள் சிங்கப்பூர்ச் சமூகத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளின் தொகுப்பாகப் புனையப்பட்டுள்ளன.

‘மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திடவேண்டுமம்மா’ எனக் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை கூறியுள்ளார். இலக்கியப் படைப்புகளினூடே பெண்மொழி என்பது பெண்மனத்தின் ஆழத்தில் எழும் நீரோட்டம். அவர்கள் சார்ந்த அனுபவங்களையும் எண்ணங்களையும் அன்றாட வாழ்வில் நடைமுறைகளாக நடக்கும் ஒவ்வொன்றையும் உள்ளதை உள்ளபடி, உணர்ந்ததை உணர்ந்தபடி பெண் மனநிலையில் சொல்லும் மொழியாகும். அத்தகைய பெண்மொழியில் சிங்கையின் மொழிச்சுழலுக்கும் வாழ்வியல் பண்பாட்டுச் சூழலுக்கும் ஏற்ப இக்கதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இத்தொகுப்பில் ஒன்பது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. சூர்யரத்னாவின் நான் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் சிறுகதைகள் பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்டிருந்தன. இத்தொகுப்பிலுல் சிங்கப்பூர்ச் சூழலில் பெண்ணியக் கூறுகளுடன் அறநெறிகளைப் போற்றும் கதைகளை இடம்பெறச் செய்துள்ளார். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு சூழலில் வெவ்வேறு கருப்பொருளைக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. சிங்கப்பூர்ச் சூழலில் இன்றைய படைப்பாளர்கள் பலரால் ஒரே கருப்பொரூளைக்கொண்டு பல கதைகள் எழுதப்பட்டுவரும் வேளையில், சிங்கப்பூரில் சொல்லப்படாத பல கதைகளை இத்தொகுப்பில் தைரியமாகக் கொண்டுவந்துள்ளார் சூர்யரத்னா. பொதுவாகப் பணிப்பெண்கள், தமிழகத்தில் இருந்து இங்கு வந்து வேலை செய்பவர்களின் சூழல், அண்மைய குடியேறிகளின் பிரச்சினைகள் என ஒரே மாதிரியான கதைச்சொல்லலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் சூர்யரத்னா சிறுகதைகளைச் சிங்கப்பூருக்கே உரிய தனித்தன்மையோடு படைத்துள்ளார்.

 

நடுவிலே கொஞ்சம் பக்கத்தைக் காணோம்...

1984 இல் சிங்கப்பூரில் மிகவும் பேசப்பட்ட கறி மர்டர் (Curry Murder) கொலை வழக்கை மையமாக வைத்தை எழுதப்பட்ட கதை. கால வேறுபாடுகளைக் குறிப்பதற்காகக் கதையைப் பகுத்து நகர்த்தும் உத்தி கதைக்கு மேலும் வலுவூட்டியுள்ளது. ஸ்ருதியின் பாத்திரப் படைப்புப் பெண்கள்மேல் தொடுக்கப்படும் இரண்டாம் பட்சமான எண்ணத்தாக்குதல்களிலிருந்து மீண்டுவரும் ஒரு பெண்ணின் மனத்தைரியத்தை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. நிஜச்சம்பவத்தோடு கற்பனையைக் கலந்து வாசகர்களைக் கவரும் வண்ணம் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இசை

பத்து வயது ஸ்ரீ என்ற கதாபாத்திரத்தை முன்வைத்துச் சொல்லப்பட்ட கதை பெண்களுக்கு இருக்க வேண்டிய துணிச்சலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இதற்கு நேர்மறையான எண்ணங்களுடன் வளர்க்கப்பட்ட இந்திரன் என இரு தத்துவார்த்தங்களின் மீது பயணம் மேற்கொண்டுள்ளார் கதாசிரியர். அப்பா வளர்க்கும் ஸ்ரீ, பாட்டி வளர்க்கும் இந்திரன் இவர்களுக்கிடையில் ஏற்படும் மோதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் மோதலாகப் பார்ப்பதைவிட ஆணாத்திக்கம், பணத்திமிர் போன்றவற்றினால் சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை வெளிக்காட்டுவதாக இருக்கிறது. இச்சமூகத்தில் சிறுவயதுமுதல் ஒரு பெண் அனைத்திற்கும் தயாராக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் கதை.

அறம்

தொகுப்பின் தலைப்புக் கதை. அதற்கேற்ற அத்தனை தகுதிகளையும் கொண்ட கதை. கதை நாயகி அனிதாவை முன்னிலைப்படுத்தி கதை நகர்ந்தாலும் கதையில் சொல்லப்படும் ஒவ்வொரு சம்பவத்தின்மூலமாகச் சிங்கப்பூர் வாழ்வியலை இயல்பாகப்  படம்பிடித்துக் காட்டியுள்ளார். சிங்கப்பூரர்களிடம் இருக்கின்ற செடிகளை வளர்க்கும் ஆர்வம், செல்லப்பிராணிகளோடு இருக்கும் பாசம், வீட்டு வாசலில் தினமும் உணவுக்காக வரும் புறாக்கள், பறவைகள், குரங்குகள் போன்றவற்றிற்கு உணவிடுதல் போன்ற பண்புகளோடு, தெருக்களைச் சுத்தம்செய்ய வருபவர்களுக்குத் தண்ணீர்ப் பொட்டலங்கள் வழங்குவது, பண்டிகைகளின்போது அவர்களுக்கு சன்மானம் (அங் பாவ்) என பலவற்றையும் கதை விரிவாகச் சொல்கிறது. மேலும், புதிய குடியிருப்புப்பேட்டைக்காகக் காடுகள் அழிக்கப்படும்போது தரைவீடுகளில் வசிப்போருக்கு ஏற்படும் சிக்கல்களையும் கதை பேசுகிறது. அங்கிருக்கும் குரங்குகள் மிகவும் சாந்தமாகவும் நேயத்துடனும் இருக்கும்வேளையில் புதிதாக வந்த குரங்குகள் ஆங்காரமாகவும் வன்மமாகவும் இருப்பது போன்றவை ஏதோ ஒன்றின் குறியீடாக நமக்குப் புரியவைக்க விரும்புகிறார் கதாசிரியர் என்றே தோன்றுகிறது. நம்பிக்கைச் சார்ந்து அறத்தின் வெளிப்பாட்டைத் தெளிவுபடுத்த வேப்பிலை மரத்தின் கதையும் இதில் இருக்கிறது.

கதாநாயகன்

பதின்ம வயதில் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் தத்தம் கதாநாயகன் பற்றிய உணர்வுகளையும் எண்ணங்களையும் கதை உமா என்ற கதாபாத்திரத்தின் துணையுடன் பின்னோக்கியும் முன்னோக்கியும் நகர்ந்துசென்று வருகிறது. பொங்கலுக்குத் தயாராகும் குடும்பப் பெண்களுக்கு இருக்கின்ற பொறுப்புகளைப் பேசுகிறது கதை. தேக்காவிற்குப் பொங்கலுக்கு வேண்டிய பொருட்களை வாங்கும்போது ஏற்படுகிற கூட்ட நெரிசலையும் கடைக்காரர்கள் பயனீட்டாளர்களுக்கு ஏற்படும் கசப்பான உரையாடல்களையும்கூட கதை பதிவு செய்கிறது. இதுபோன்ற பண்டிகைகளின்போது ஆண்களின் பங்கு என்ன என்பதைக் கதை கேள்வியாக வைக்கிறது. இந்த உலகமயமாதல் சூழலில் திருமணங்கள் இனம், மதம், நாடு என்றில்லாமல்  பொதுவாகப்  போய்விடக்கூடிய அபாய சங்கையும் கதை ஒலிக்கிறது. வலிமை படைத்தவனின் கை ஓங்கும்போது எளியவனின் கை இறங்கித்தானே ஆகவேண்டும். மெல்ல மெல்ல அவனின் அடையாளங்களும் தொலைந்துதானே போகும்.

ஆசை

பெற்றோர் தம் விருப்பங்களைப் பிள்ளைகளின்மேல் தினிப்பதை விடுத்து பிள்ளைகளின் நியாயமான ஆசைகளுக்கு உயிரூட்ட வேண்டும் என்ற மையக்கருத்தை உணர்த்தும் கதை. ஒரு சீனக் குடும்பத்தை மையமாகக் கொண்ட கதை. தாயார் மேகி என்ற கதாபாத்திரம் தன் பிள்ளைகள் சிங்கையின் சிறந்த பள்ளிகளுக்குச் செல்லவேண்டும் என்ற நோக்கில், சிறந்த பள்ளியில் பயின்ற ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். முன்னாள் மாணவர்களின் பிள்ளகைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால்  இந்தத் திருமண ஏற்பாடு. மேலும், பள்ளியில் அருகில் வீடு இருந்தாலும் இன்னும் சுலபமாக இடம் கிடைத்துவிடும் என்பதால் பள்ளியில் அருகிலேயே இரண்டு லட்சம் அதிகம் கொடுத்து வீடு  வாங்குவது, பள்ளியில் இடம் கிடைக்க பெற்றோர்கள் குறிப்பிட்ட கால அளவு பள்ளியில் சேவை செய்யவேண்டும் போன்றவற்றையும் கதை பேசுகிறது. சிங்கப்பூரின் தனித்துவத் தன்மையை விளக்கிச் சொல்கிறது. இதுபோன்ற பல சம்பவங்கள் இக்கதையை சிங்கப்பூருக்கே உரிய கதையாக உருவாக்குகிறது.

வியூகம்

அலுவலகம் சார்ந்தும் மற்ற வேலை இட அரசியலையும் மிகவும் நுணுக்கமாக எடுத்துச் சொல்லும் கதை. சிங்கப்பூரில் அனைவருக்கும் அனைத்து வாய்ப்புகளும் கிடைத்தாலும், அந்தந்த வாய்ப்புகள் எப்படிக்  கிடைக்கின்றன? எப்படிப் பறிக்கப்படுகின்றன? போன்றவற்றைப் பேசும் கதை. சில தமிழர்களின் எதிர்மறையான வேலையிடத்துப் போக்கையும், அதை உணராமல் எப்போதும் மற்றவர்களைக் குற்றம்சொல்லியே வாழும் மனப்போக்கையும் இக்கதை சாடுகிறது.

சிறை

ஷீலா என்ற கதாபாத்திரம் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டுள்ளது. சிறையிலிருந்து தப்பிக்கும் ஷீலாவிற்கு என்னவாயிற்று? இதுவரை சிங்கப்பூரில் தமிழில் சொல்லப்படாத ஒரு கதைக்களத்தில் ஒரு புதிய கதை. பல புதிய தகவல்கள் இக்கதை முழுக்கப் பரவிக் கிடக்கின்றன. செல்லப்பிராணிகள் வளர்ப்போருக்கு பல விஷயங்களைச் சொல்லித் தரும் கதை. மனத்தை நெகிழவைக்கும் கதை.

கோடிட்ட இடங்களை நிரப்புக......

உள்ளூர்ச் சமையல் போட்டி. போட்டியாளர்களின் மனப்போக்கு. அதை வைத்து போட்டியை மேலும் விறுவிறுப்பாக வேண்டும் என்பதற்காக நிகழ்ச்சி நெறியாளரின் கேள்விகள் எனத் தொடங்கும் கதை.

டை-பிரேக்கர் விதிமுறைகள் இப்படி வருகிறது.

கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் ஓர் இனிப்புப் பதார்த்தம் செய்யப்படவேண்டும். முக்கியமாக உள்ளூர்ச்சுவையில் மட்டுமே.

இங்கே கவனிக்கப்படவேண்டியது உள்ளூர்ச்சுவை. கதையில் இறுதில் ஒரு வரி வருகிறது.

அடிப்படையில் இது சமையல் படைப்புகள் பற்றிய கதை இல்லை என நினைப்பவர்கள் மட்டும்...

கோடிட்ட இடங்களை நிரப்புக

கோடிட்ட இடங்களை வாசகர்கள் எப்படி வேண்டுமென்றாலும் நிரப்பிக் கொள்ளலாம். ஆனால், சிலர் கதையை வாசித்துவிட்டு சமையல் போட்டியாக மட்டுமே இதைப் பார்ப்பதால், நானும் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். இது சமையல் போட்டியல்ல. சிங்கப்பூரின் சமீப காலத்தின் இலக்கியப் போக்கு, இலக்கியப் போட்டிகளின் அவலம் போன்றவற்றின் குறியீடு.

அருவம்

லிசா என்ற பாலியல் தொழிலாளியின் கொடூரமான கொலை தொடர்பாக பல விமர்சனங்களை முன்வைக்கும் கதை. இது தொடர்பான ஆண்களின் பார்வைகளையும் நிகிதா என்ற பெண்ணின் பார்வையையும் அருவமாக வரும் லிசாவின் கதையாக வருகிறது. சிங்கப்பூரர்களுக்கு மிகவும் பிடித்த காற்பந்தாட்டம் சார்ந்த பல செய்திகளும் இக்கதையில் உண்டு. 

நிறைவாக,

உங்களின் வாசிப்புக்காகக் கதைகளை நான் முழுமையாக இங்குக் கூறவில்லை. சூர்யரத்னா நிறைய வாசிக்கிறார் என்பதற்கு இக்கதைகள் நற்சான்று. ஒவ்வொரு கதையிலும் அவர் மேற்கோள் காட்டும் விஷயங்கள் அவரின் வாசிப்பின் அகலத்தையும் ஆழத்தையும் தேடலையும் உணர்த்தும் வண்ணம் இருக்கின்றன. நல்ல வாசிப்பாளரால் சிறப்பானதொரு படைப்பைக் கொடுக்கமுடியும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

ஒன்பது கதைகளும் தனித்தனிக் கதைகளாக அவரவர் நியாயங்களைக் குறிப்பாகப் பெண்களின் நியாயங்களை எடுத்துச்சொல்லும் கதைகளாக இருக்கின்றன. அவர்கள் சார்ந்த நியாயங்களைப் பேசுகின்றன. கதைப்பொருள் தேர்வு, கதைக்களம், கதைக்கான உத்திகள், கதைக்கான செய்திகள் என அனைத்திலும் சூர்யரத்னாவின் உழைப்புத் தெரிகிறது. படைப்பாக்கத்தில் மொழியாடல்களிலும் சொல்லாடல்களிலும் சிங்கப்பூரின் வாழ்வியல் மொழி பண்பாட்டுமொழி இயல்பாகப்  பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எது சிங்கப்பூர் மொழி எனக் குழம்புபவர்களும் சிங்கப்பூரில் எழுத என்ன இருக்கிறது எனக் கேள்வி கேட்பவர்களும் இச்சிறுகதைகளை வாசித்தால் புரிந்துகொள்ளலாம் இந்த மண்ணுக்கான வாசனையை.

 

இத்தொகுப்பில் எனக்குப் பலவீனமாகப்படும் சில விஷயங்கள்:

1.   கதைகள் ஒவ்வொன்றும் நீளமாக இருப்பது. ஒவ்வொரு கதையும் ஏறக்குறைய 15 அல்லது 16 பக்கங்களில் இருப்பது.

2.   ஒரே கதைக்குள் நிறைய கதைச் சம்பவங்களை வைத்திருப்பது.

3.   நீண்ட வாக்கியங்களைத் தவிர்த்திருக்கலாம். ஒரே வாக்கியம் ஒரு பத்தி முழுவதுமாக  இருப்பது வாசகரைச் சோர்வடையச் செய்யும்.

4.   கதையில் இடம்பெறும் சில விவரனைகள் நீண்டு செல்வதால் கட்டுரைத்தன்மை வந்துவிடும் சாத்தியம் இருக்கிறது. சில கதைகளில் அது நிகழ்ந்திருக்கிறது.

5.   உள் பக்க வடிவமைப்பை இன்னும் மேம்படுத்தியிருக்கலாம்.

 

வாழ்த்துகள் சூர்யரத்னா. தொடர்ந்து எழுதுங்கள். இன்னும் பல படைப்புகளுக்காகக் காத்திருக்கிறோம்.

 

-     எம்.சேகர்

 

 

 

 




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக