திங்கள், 15 ஏப்ரல், 2024

 



கரிப்புத் துளிகள் (அ.பாண்டியன்) நாவல் – அகூபாராவின் தரிசனம்

எம்.சேகர்

 

இலக்கியம் என்பது ஒரு படைப்பாளியின் சிறப்பான செயல்திறனால்  மட்டுமல்ல, அவனுள் ஏற்பட்ட ஒரு மாபெரும் மனவெழுச்சியினாலும் அமைவதாகும். ஒரு மனத்தின் வழியாக இன்னொரு மனத்துடன் அது உரையாடுகிறது. மனித வாழ்வின் அனுபவங்களையும் மனித செயல்பாடுகளையும் அவற்றிற்கு அடிப்படையாகவுள்ள மனத்தையும், ஆழமாகவும் அழகாகவும் விரிவாகவும் சித்தரிக்க முயலுகிறது. அவ்வகையில் இந்தக் கரிப்புத் துளிகளும் மிகவும் கவனமாக நம் மனத்திற்குள் தனக்கென ஒரு சிம்மாசனத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது.

 

நம் மண்ணின் மணங்களையும் வளமைளையும் வலிகளையையும் இன்னல்களையும் இம்மண்ணில் நம் வாழ்வாதாரப் போராட்டங்களையும் எதிர்கொண்ட சிக்கல்களையும் கடந்து வந்த பாதைகளையும் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு சமூக வாழ்வியல் ஆவணமாக இந்தக் கரிப்புத் துளிகள் புனையப்பட்டிருப்பது, நம் வாழ்வின் தடங்களை அடுத்தடுத்து வரும் தலைமுறைக்கும் ஏன் இதைப்பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்காத அல்ல இவற்றை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்தத் தலைமுறையினருக்கும் நல்லதொரு வாழ்வியல் அனுபவமாக அமைந்திருக்கிறது.

 

இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள் படைப்பினுள் நுழையும் வாசகனை ஏதோ ஒரு தவிர்க்க இயலாத இயலாமையோடு படைப்பின் பிரதேசத்தைத் தரிசிக்க வைக்கின்றன. அந்தத் தவிர்க்க இயலாமையை நாவலின் மொழியும் நாவலாசிரியர் பயன்படுத்திய உத்திகளும் தோற்றுவித்துள்ளன. பாதிப்புக்கு உட்படுகின்ற சகமனிதனின் துன்பநிலையை, சங்கடத்தை,  எழுத்தில் வைத்துத் தரும்போது நாவலின் மாந்தர்கள் எதிர்கொள்ளும் இயல்பான நிலையை வாசகனின் பார்வைக்கும் பரிசீலனைக்குமுரிய ஆவணங்களாக முன்வைத்துள்ளார் அ.பாண்டியன்.

 

கதாபாத்திரத்தின் சிறப்பினை அல்லது பண்பினை வெளிப்படுத்துவதற்கு நாவலாசிரியர் பல உத்திகளை இந்நாவலில் கையாண்டுள்ளது கவனிக்கத்தக்கது. அவை பாத்திரங்களின் தனித்தன்மையை வாசகர்கள் அறிந்துகொள்ள உதவியாய் உள்ளன. பாத்திரங்களின் புறத்தோற்றம், அசைவு, நடை, நடத்தை முறை, பழக்கம், மற்றப்பாத்திரங்களுடனான தொடர்பு, பேச்சு, தமக்குத்தாமே மேற்கொள்ளும் செயல் / தனக்குத்தானே நடந்துகொள்ளும் முறை, ஏனைய கதாபாத்திரங்கள் இதனுடன் நடந்துகொள்ளும் முறை, சுற்றுப்புறச் சூழல், பாத்திரத்தின் கடந்தகால வாழ்வு போன்றவை நாவலின் மையத்தை உள்வாங்கிக்கொள்ள மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

நாவலில் வரும் கதாபாத்திரங்களான துரைசாமி – சாந்தி – சுந்தர், பாக்கியம் - கிருஷ்ணன் – தேவா – ஜெகன், வள்ளி – செல்லையா - தனலெட்சுமி – பாலன், சூப்பர்வைசர் பீட்டர் – தனலெட்சுமி, அண்ணாமலை, ஐயாவு, டானு (மாந்தரீக சக்தி – ஜின் வளர்த்தல் என்ற பேச்சு) – சீனக்கிழவன் மற்றும் சிறப்புக் கதாபாத்திரங்களாக வந்துபோகும் முன்னாள் பிரதமர் மஹாதீர், டத்தோ சாமிவேலு அனைத்தும் இந்திய சமூகத்தின் வாழ்வியல் வரலாற்றையும் அவலங்களையும் சுமந்துகொண்டுள்ள ஒரு நிலத்தின் பதிவாகவே இருக்கின்றன.

 

பாத்திரங்களின்மூலம் வாசகனுக்கு இன்னொரு உலகை அ.பாண்டியன் காட்டியிருக்கிறார். உரையாடல்கள் பாத்திரங்களின் தன்மையை தெளிவுற உணர்த்துவதாகவும் பாத்திரப் பண்புக்கு ஏற்றார்போல உரையாடல்களை இயல்பாகவும் கதைப்போக்கின் காலத்துக்குப் பொருத்தமான மொழிநடையையும் நாவலாசிரியர் கையாண்டிருப்பது பாராட்டுக்குரியது.

 

இலக்கியம் என்பது ஒரு காலத்தின் ஒரு வாழ்க்கையின் சாசனம் என்கிறார் ஜெயகாந்தன். இந்நாவலில் வரும் அனைத்தும் பல சந்தர்ப்பங்களில் நாமே நம்மைப் போன்ற ஏனையோரைக் கண்ட, அனுபவித்த, கேட்ட செய்திகளின், அனுபவங்களின் பதிவுகளாக விளங்குகின்றன. கிரியான் ஆற்று சம்பவம், பினாங்கு பாலம் கட்டுமானம், பட்டர்வெர்த்தின் ஃபேரி தளம் சரிந்த விபத்து, பாடாங் தோட்டம், டீலோ கம்பம், கண்டெய்னர் வீடுகள், ஜாலான் பாரு முனீஸ்வரர் கோயில் (முனியாண்டி கோயில்), தோய் கம்பெனி, மைக்கா ஹோல்டிங்ஸ், பினாங்கு ரெக்ஸ் தியேட்டர், பெஸ்தா பூலாவ் பினாங் எனப் பலவற்றின் கோர்வையாக இந்நாவல் நம் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் அவர்களின் வாழ்க்கைச் சூழலையும் எடுத்துக்கூறுகிறது.

 

மலேசிய முழுமைக்கும் இடங்கள் மாறுபட்டிருந்தாலும் நிலம் வேறுபட்டிருந்தாலும் நாம் சந்திக்கும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்பது எல்லா நிலைகளிலும் எல்லா இடங்களிலும் ஒன்றாகத்தான் இருக்கின்றன. தமிழ் இளைஞர்கள் லாக்காப்பில் மரணம், கம்போங் டீலோவில் (தோட்டப்புறங்களில்) கைவிடப்பட்ட வீடுகளில் பங்களாதேசிகளும் இந்தோனேசியர்களும் மியன்மாரிகளும் குடியேறல், நாட்டானுங்களுக்கும் தமிழன்களுக்கும் இடையே உள்ள உரசல்கள் - அனாக் ஹராம், ஹிண்டு பறையா, எல்லா சாமான் வியாபாராத்தாலத்தான். அதுக்குதான் வெட்டிக்கிறானுங்க. இதுல பெரிய தலைங்க லேசுல சிக்காது. நம்ப பயலுங்கதான் மாட்டுவானுங்க’, போன்றவை நாடு முழுமைக்கும் நாம் சந்திக்கும் நமக்கான பிரச்சினைகளாகவே இருக்கின்றன.

 

பொதுவாக, நாவல் மொழிச்சிக்கலற்ற நிலையில் தன் கருத்தைக் கூறவும் காட்சிப்படுத்தவும் முனைந்திருப்பது பாராட்டுக்குரியது.  நாவலை வாசிக்கும்போது ஏற்படும் அனுபவம் என்பது, ஓரிடத்திற்குச் சென்று அங்கு நடப்பவைகளைச் சுற்றிக் காண்பது போல நாவலில் வெவ்வேறு அனுபவங்களைப் பெறவேண்டும். அத்தகைய அனுபவங்களை இந்தக் கரிப்புத் துளிகள் சாத்தியமாக்கியிருக்கிறது.

பந்தாய் கெராஞ்சூட்டின் காட்சிச் சித்தரிப்பு, அங்குச் செல்லும் மலைப்பாதை என ஒரு பிரமாண்டத்தின் வாசலுக்கு நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்வதாகவே இருக்கிறது. நாவலாசிரியர் சிறந்த கற்பனைத் திறனையும் கடல் ஆமைகள் தொடர்பான பல தகவல்கள் அவரின் உழைப்பையும் நமக்கு உணர்த்துகின்றன. இதற்கும் மேலாக அகூபாரா என்ற பிரமாண்டமான கடல் ஆமைகளின் ராணியின் தரிசனம், அவரின் எழுத்து நம்மையும் அங்கே சென்று நிற்கவைத்துவிடுகிறது.

 

இலக்கியம் என்பது அடிப்படையில் படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையிலான ஒரு தகவலியல் செயல்பாடாக அறியப்படுகிறது. சொல்லப்படுகின்றன செய்தி, சொல்லப்படுகின்ற உத்தி, உள்ளடக்க வீச்சு, செய்ந்நேர்த்தி முதலியவை குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறப்புக்கூறுகளாக இந்நாவலில் அமைந்திருக்கிறது.

 

நாவலை வாசித்து முடித்தபின் எனக்குள் தோன்றியது இதுதான். அகூபாரா என்ற பிரமாண்டத்தை மாயையை நம்மினத்திற்கு முன் முன்மொழியப்பட்ட பிரமாண்டமாக ஆர்ப்பாட்டமாக முன்வைக்கப்பட்ட மைக்கா ஹோல்டிங்ஸ் சின் குறியீடாகவே பார்க்கிறேன். இன்று போடும் பத்து காசுகள் நாளை பன்மடங்காகப் பெருகும், நம் சமூகத்திற்கு விடிவெள்ளியாக விளங்கும், நாம் இந்நாட்டில் மற்ற இனங்களுக்கு நிகராக தலைநிமிர்ந்து வாழலாம் போன்ற வெற்று வேட்டுகளின் மொத்த உருவமாகிப் போன ஒன்றின் குறியீடுதான் இந்த அகூபாரா’.

 

நீண்ட நாளைக்குப் பிறகு நல்லதொரு வாசிப்பு அனுபவத்தையும் இன்னொரு நிலத்தில் என் இனத்தின் வாழ்வியல் அனுபவத்தையும் தந்திருக்கும்  கரிப்புத் துளிகளுக்கும் அதன் ஆசிரியருக்கும் எனது நன்றியும் வாழ்த்தும்.

 

Jan 2024


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக