திங்கள், 15 ஏப்ரல், 2024



சீனலட்சுமி – லதா  (சிறுகதைத் தொகுப்பு)

கற்பிதங்களுக்குள் இயங்கும் அக உலகும் புற உலகும் – எம்.சேகர்

 

ஒரு படைப்பாளியின் உலகம் தனியானது. சராசரி மனிதர்கள் சமூக நிகழ்வுகளைப் பார்வை கொள்வதற்கும் ஒரு படைப்பாளி தனக்கான உளப்பாங்கோடும் தனித்தபார்வையோடும் அவற்றை அணுகுவதற்கும் வேறுபாடுகளுண்டு. படைப்பாளியின் இதயம் விசாலமான பார்வை மனிதாபிமானம், முரண்நிலைகள் மற்றும் விளைவுகள் குறித்த தார்மீகக் கோபம், ஒரு சமூக நிகழ்வு அல்லது நிலை பற்றிய படைப்பாளியின் மனம் சார்ந்த விளைவுகள் மற்றும் தாக்கங்கள் போன்றவற்றை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிற உந்துதல் ஒரு படைப்பை உருவாக்கவைக்கிறது அல்லது உருவாக்கிக்கொள்கிறது.

 

படைப்பாக்கச் செயற்பாடென்பது குறிப்பிட்ட சட்டக எல்லைக்குள் முடங்கிவிடும் ஒன்றாக ஆகிவிடக்கூடாது. பரந்த பார்வையுடன் ஒரு கட்டறு வெளியில் சஞ்சரிக்கும் இயல்பினை ஒரு படைப்பாளி தன் இயல்பாய் வகுத்துக்கொள்ளவேண்டும். தனது அவதானப் பரப்பினை மேலும் விரித்துக்கொள்வதோடு நுணிகிய நோக்குடன் மனித இயல்பினைக் கவனித்துப் பதிவு செய்யும் தன்மையும் தேவைப்படுபகிறது.

 

தனக்கென ஒரு மொழிநடை, ஒரு சொல்முறை, ஒரு பார்வை என்பனவற்றைக் கொண்டிருக்கும் படைப்பாளி லதா, தான் முன்வைக்க விரும்பும் விஷயங்களைப் பரந்ததொரு விதத்திலான ஒரு மொழித்தளத்தில் தந்திருப்பது அவரின் இந்தச் சீனலட்சுமி சிறுகதைத் தொகுப்பை மேலும் அழகுடன் மிளிர்ந்திடவைத்திருக்கிறது.

 

வாழ்க்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அல்லது சங்கடங்களை எடுத்துக்காட்டுவதைத் தனக்கே உரித்தான பாணியில் கையாளுபவராக படைப்பாளி லதா விளங்குவதை இச்சிறுகதைத் தொகுப்பின்மூலம் அவதானிக்க முடிகிறது. தனது கதைகளில் ஆர்ப்பாட்டமோ கோஷமிடும் செயற்கைத்தன்மையோ இல்லாது மிக இயல்பாக தான் நேசித்ததையும் பார்த்ததையும் கேட்டதையும் அனுபவித்ததையும் பதிவிடுகிறார்.

 

லதாவின் சிறுகதைகளில் தனித்துத் தெரியும் சில பண்புகள் வாசகனின் கவனத்தை ஈர்ப்பதோடு அவர் படைப்பின் அழுத்தத்தை நடுநிலையானவையாகவும் வைத்திருக்க வழிசெய்கிறது. இத்தகைய உணர்வு வாசகனிடத்தில் தோன்றும் விதமாய் எழுதுவதற்கு ஒரு படைப்பாளியின் உண்மைத்தன்மை (Sincerity) மிக அவசியமாகிறது. இத்தகைய ஒரு நோக்கில் லதா வெற்றி பெறுகிறார் என்றே கூற வேண்டும்.

தான் வாழுகின்ற சூழலை, காலத்தை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்திச் செல்கின்ற அரிய பணியினைப் படைப்பாளி ஆற்றுகிறான். ஒரு தலைமுறையினரின் வாழ்வியல் நடத்தைக் கோலங்களை மிக நுணுக்கமாகவும் அழகாகவும் பதிந்து வைக்கின்ற ஆற்றல் படைப்பாளிகளிடம் மட்டுமே இருக்கிறது. இத்தகைய வரைவிலக்கணங்களைச் சாத்தியப்படுத்துகின்ற ஆழமான பணியினை சிங்கப்பூரின் படைப்பாளியான லதா நிரூபித்து வருகிறார் என்பதற்கு அவரின் கதைகளே சாட்சி.

 

எட்கார் அலன் போவின், ‘சிறுகதையானது தன்னளவில் முழுமைபெற்றதாகவும் ஒரு குறிப்பிட்ட நேர அவகாசத்துக்குள் ஒரே மூச்சில் வாசித்து முடிக்கக்கூடியதாகவும் அதே சமயம் சிறுகதை தரும் விளைவு ஒரு தனி மெய்ப்பாடாகயிருக்க வேண்டும் என்னும் கூற்றுக்கமைய இத்தொகுப்பில் இடம்பெற்ற பெரும்பான்மையான கதைகள் பதினொன்று தொடக்கம் பதினைந்து பக்கங்களுக்குள் தம்மை முடித்துக்கொள்கின்றன. சில கதைகள் பதினேழு, பத்தொன்பது பக்கங்கள்வரை நீடித்துக்கொண்டுள்ளன. இதில் பல கதைகளை ஏற்கனவே வல்லினத்தில் வாசித்தபோது இருந்த நீளம், தொகுப்பிற்காக எடிட் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது.

 

இத்தொகுப்பிலுள்ள கதைகள் நம் கண்ணில் விழுந்த அல்லது விழாத அனைத்தும் புனைகதைகளாக உருவகம் எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை முன்வைத்துள்ளது. அதிலும் அக நிலையிலும் புற நிலையிலும் என இரண்டு நிலைகளிலும் நின்று கதைசொல்லி  சிங்கப்பூரின் மண்மணத்தை புதிய பரிமாணத்தோடு நம்முன்னே காட்சிப்படுத்தியுள்ளார். சிங்கப்பூரைச் சார்ந்து பல கதைகள் இதுவரையில் புனையப்பட்டிருந்தாலும் லதாவின் பார்வையில் அவை வேறொரு மனவெளியைப் பெறுகின்றன. சிங்கப்பூரில் எழுதப்படுவதற்கு நிறையவே இருக்கின்றன. ஆனால், ஒரு குறுகிய வட்டத்திற்குள் ஓடுவதுபோல் எழுதியதையே எழுதிக்கொண்டிருக்கும் அந்தப் போக்கில் ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்துவதாக இக்கதைகள் அமைந்துள்ளன. மண்ணும் மனம் சார்ந்த வலிகளும் கதைகளின் உயிர்நாடியாக விளங்குகின்றன. அலிசா, இளவெய்யில், காவடி, நிர்வாணம், வலி, சீனலட்சுமியின் வரிசை போன்ற கதைகள் தனிமனித உணர்வுகளை மையப்படுத்துகின்றன. தேக்காவில் ஒரு பாலம் இருந்தது, சிலந்தி கதைகள் சுதந்திர போராட்டம், நாட்டுக்கான போர் என சமூகம், வராலாற்று பின்புலத்துடன் புனையப்பட்டுள்ளன. பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப் பூனை முற்றிலும் ஒரு புதிய கோணத்தில் மறுபட்ட கதைக்களத்தில் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள், நம்பிக்கைகள் என சிங்கப்பூரின் இன்னொரு வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

 

அலிசா

 

நிலம் ஒரு குறியீடு. அது தன் பெறுமதியை எப்பொழுதுமே இழந்ததில்லை. அது ஒரு அடையாளம். ஒரு மக்கள் கூட்ட அடையாளத்தின் அடையாளம். சிங்கப்பூரின் பெருநிலத்திலிருந்து தள்ளி ஒரு குட்டித் தீவாயிருக்கும் பூலாவ் உபின் பழம்மக்களின் தனித்த அடையாளம். இன்றும் அன்றைய சிங்கப்பூர் வாழ்வியலுக்கான அடையாளமாகவே தன்னை இதுநாள்வரையில் நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. சிங்கப்பூரின் பெருநிலத்திலிருந்து இங்கு வரும் அலிசாவை மையப்படுத்தி, பெருநகர வாழ்க்கைக்கும் கிராமத்து வாழ்க்கைக்கும் உள்ள உறவுகளையும் வேற்றுமைகளையும் விரிசல்களையும் இயல்பாக விவரித்துள்ளது. கடலுக்குள் நீச்சல் குளத்தைத் தேடும் அலிசாவையும் வலி கதையில் கடலை மீன் தொட்டிக்குள் அடக்கி, கடலுக்குள் செல்லும் தன் ஆசையை இப்படியாக நிறைவேற்றிக்கொள்ளும் அவளையும் தொடர்புப்படுத்தியும் பார்க்கும் வாய்ப்பை இரு கதைகளும் வழங்கியுள்ளன எனலாம்.

 

புலாவ் உபினில் சுதந்திரமாக உலாவும் அலிசாவோடு அங்குள்ள வாழ்வியற் சூழலோடு அம்மக்களின் நம்பிக்கைகளையும் அவர்கள் சார்ந்த தொழில்களோடும் மீன் பிடிக்கும் பல முறைகளோடும் சேர்ந்தே வாசகனாய் நானும் இணைந்து பயணிக்கும் வாய்ப்பைக் கொடுக்கும் கதை. பலமுறை புலாவ் உபினுக்குச் சென்று வந்திருப்பதால் அங்குள்ள சீனக்கோயில், ஐயா கோயில், குவாரி போன்றவை கதையில் வாசிக்கும்போது கதையை மனத்துக்கு நெருக்கமாய் கொண்டுவந்துவிடுகிறது. பெரும்நகரம், கிராமம் என இரண்டு முரண்களுக்கும் தொடர்பாடலாய் அலிசாவின் கதாபாத்திரப்படைப்பு நயம்பட படைக்கப்பட்டிருக்கிறது.

 

இளவெய்யில்

 

எந்த ஒரு படைப்பும் நியமிக்கப்பட்ட சமூக, பண்பாட்டு அம்சங்களைப் பிரதியீடு செய்யும் வகையில் அமையவேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தன்னைப் பாதித்த விஷயங்களை கலைவடிவங்களாக வெளிப்படுத்தக்கூடிய நுண்ணுணர்வும் படைப்புச் சுதந்திரத்தின் எல்லைகளை அறிகின்றன பக்குவமும் ஒருங்கிணைந்திருத்தல் அவசியமாகிறது. இக்கூற்றை இளவெய்யில் கதை சாத்தியப்படுத்தியுள்ளது.

கதையில் நீலமலர், ‘மெக்டோனால்ட்ஸ் காபி அருந்துவதும் அதன் தொடர்பான விவரணைகளும் எனக்கும் உடனே ஒரு காப்பியை அருந்திவிடவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்திவிட்டது. இப்படியாக வாசகனைத் தனது எழுத்துக்குள் கட்டிப்போடும் வித்தை லதாவுக்கு கைவந்த கலையாக இருக்கிறது. தாய்மையின் உணர்வுகளையும் அதன் மகிழ்ச்சியோடு கூடிய வலிகளையும் நமக்கும் கடத்திவிடும் கதைப்போக்கு சிங்கப்பூரின் ஆசிரியர் தொழிலில் இருக்கும் பெண்களின் சிக்கல்களையும் வெளிப்படுத்தத் தவறவில்லை. இக்கதை நீலமலர் என்னும் பாத்திரத்தின் உணர்வு நிலையை உருக்கமாக உயிர்த்துடிப்புடன் பதிவு செய்கிறது.

 

காவடி

 

இக்கதையின் வாயிலாக முரண்தருணங்களின் இயல்பினையும் பொதுவெளியில் கட்டமைக்கப்படும் கொண்டாட்ட மனநிலையையும் மிக எளிமையாக வெளிப்படுத்தியுள்ளார். சுயமரியாதை இயக்கத்தைக் கொண்டாடி கடவுளை ஒதுக்கும்போக்கு தமிழகத்திலிருந்து இங்கு வந்தபோது, அது சிங்கப்பூரர்களின் வாழ்க்கையிலும் சில தாக்கங்களை ஏற்படுத்தியது. கடவுள் மறுப்புக் கொள்கையில் இருக்கும் குடும்பத்தில் பிறந்தவள், பின்னாளில் அவளுக்கு வாய்ந்த கணவனோ காவடி எடுக்கும் வழக்கமுள்ளவனாதலால் அவளும் காவடி எடுக்கும்போது விரதம் இருந்து அனைத்தையும் விருப்பத்துடன் செய்கிறாள். சிறுவயதில் நோரிஸ் ரோட்டில் தங்கியிருந்ததால், சிராங்கூன் சாலையில் செல்லும் தைப்பூசக் காவடிகளைப் பார்க்க அவளுக்குப் பிடிக்கும். வீட்டிற்குத் தெரியாமல் பார்க்கச் சென்றுவிடுவாள். வயதான காலத்தில் எழுந்து நடமாடக்கூட முடியாமல் இருக்கும் நேரத்திலும் சிலா காவடி பார்க்கவேண்டும் என அவள் அடம்பிடித்துக்கொண்டிருப்பதாய் கதை அமைகிறது. சிறுவயதில் நமக்குப் பிடித்த பல விஷயங்களை வயதான காலத்திலும் தீவிரமாய் காணவேண்டும் என்ற தனிமனித ஆசையைக் கதை விவரிக்கிறது.

 

சிலந்தி

ஒரு வரலாற்றுப் பின்புலத்துடன் கதை எழுதப்பட்டிருந்தாலும், சிலந்தியின் வலைபின்னலைப் போல் கதையைப் பின்னியுள்ளார் புனைவாளர். சிலந்தி தொடர்பான ஆழமான விவரணைகள் கதையின் மையமாக இருந்தாலும் அதற்கேற்ப ஒரு சூழலை உருவாக்கி கதையை நகர்த்தி சிலந்தியின் பின்னலைப்போல் போரின் அரண்களை உணர்த்தும் கதை. டைகர்’ ‘ஜோக்கர் என சிலந்திகளுக்குப் பெயிரிட்டு அவற்றைப் போட்டியில் இறக்கிவிடும் பிள்ளைகளின் விளையாட்டாக அது இருந்தாலும், அதனைப் போரின் ஒரு தந்திரமாகக் காட்டியிருப்பது பாராட்டக்கூடியது. சிறுவயதில் மற்ற பள்ளி மாணவர்களோடு சேர்ந்து சிலந்தியைக் காலியான நெருப்பட்டிப் பெட்டிக்குள் வளர்த்தது, சிலந்திகளைச் சண்டைக்கு விடுவது என என் சிறுவயது நினைவுகளையும் தட்டிப் பார்த்தது இச்சிறுகதை. சிலந்தி தொடர்பான பல தகவல்களை இக்கதையின் மூலம் பதிவு செய்துள்ளார். அதையும் தாண்டி உளவியல் சார்ந்த பல சித்தாந்தங்களையும் உணர்வுகளையும் இக்கதையின் வாயிலாக உணர்த்தியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

 

சீனலட்சுமியின் வரிசை

சிங்கப்பூரில் அனைத்திற்கும் வரிசையாக நிற்பது சிங்கப்பூரர்களின் வாழ்வியற் கலாசாரமாகவே மாறிவிட்டது. முதலில் பேருந்துக்காக வரிசையில் நிற்பது தொடங்கி இப்போது புதிதாக அறிமுகமாகும் பொருள்களுக்கும்கூட அதிகாலையிலேயே வரிசையில் நிற்கும் போக்கு இங்கு வாடிக்கையாகிவிட்டது. பலருக்கு இப்படி வரிசையில் நிற்பது பிடிக்காத ஒன்றாய் இருந்தாலும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காக தாங்களும் வரிசையில் நிற்பார்கள். அப்படி ஓரிருவர் வரிசையைத் தாண்டி முன்னால் சென்றுவிட்டால், அவர்களைத் திட்டுவதும் அல்லது வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் போடுவதுமாக இருப்பார்கள். இதையெல்லாம் தாண்டி வரிசையில் நிற்பது இக்கதையின் சீனலட்சுமிக்குப் பிடிக்கும். பொதுத் தேர்தலுக்கு வரிசையில் நிற்பதாய் கதை தொடங்கி, அமரர் திரு. லீ குவான் யூ வின் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வரிசை வரையிலும் கதை நம்மையும் நெடுநேரம் வரிசையில் நிற்கவைத்து விடுகிறது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஓர் ஆசை இருக்கும். இது சீனலட்சுமியின் ஆசை. இக்கதையில் வரும், ‘சுதந்திரம் கெடைச்சி அம்பதாவது வருசத்துலதான் எல்லா தொகுதியிலயும் தேர்தல் நடக்குது சிந்திக்க வைக்கும் வரிகள்.

 

தேக்காவில் ஒரு பாலம் இருந்தது

 

போராட்ட சூழலில் போராளியாக ஆக விரும்பி நேதாஜியின் ஐ.என்.ஏ வில் சேரும் திருமணமான அக்கா கதாபாத்திரத்தை மையப்படுத்தி கதை நகர்ந்தாலும், பழைய தேக்கா பாலம் தொடர்பான காட்சிப்பதிவுகள், நேதாஜி சிங்கப்பூருக்கு வந்தபோது ஏற்பட்ட சுதந்திர அலை, அதன் பரபரப்பு, இங்கிருந்த மக்கள் நகை, காசு என்று கையிலிருந்ததை நேதாஜியிடம் கொடுத்தது, சாப்பாட்டுக்காகவும் வேலையில்லாததாலும் படையில் சேர்ந்த கதையும் நமக்குத் தெரிய வருகிறது. ஜப்பான்காரன் ஜெயித்துவிட்டால் நாம் என்ன செய்வது? ஜப்பான் மொழிதான் பேசவேண்டும், படிக்க வேண்டும் கவலையாக இருந்தது எனவும் ஒரு சாராரின் கவலையும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஐ.என்.ஏ வில் உள்ள நுண்அரசியலில் படையில் சேர்ந்துள்ள தமிழ்ப்பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும் இன்னல்களும் ஏற்றத்தாழ்வுகளும் கதையின் வாயிலாக உணர்த்தி, நாட்டுக்காக வெளியே போய் போராடுவதைவிட இச்சமூகத்தில் முதலில் பெண்களுக்ககாகப் போராடவேண்டும் என்ற உணர்வில் படையை விட்டு வெளியேறிய ஓர் அக்காவின் கதையாக இருந்தாலும், இன்றளவும் பெண்களுக்கான இடம், அவர்களின் குரல் நம் சமூகத்தில் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை உணர்த்தும் கதையாக இதை நான் பார்க்கிறேன். கதையை ஒரு நீட்சியான விசாரணையாக ஒருங்குவியமைத்து அழகுற நகர்த்தி விடுகிறார் கதாசிரியர்.

 

நிர்வாணம்

அம்மா, மகள் இருவருக்குமான இருக்கும் அந்தரங்க உணர்வலைகளைக் கதையின் வாயிலாக மிக அழகாகக் கட்டமைத்துக் கடத்தியுள்ளார் லதா.  மேலும், இன்றைய இளம் வயதினருக்கு எதிலும் அவசரம், எதையும் விரிந்த மனத்தோடு பார்க்கும் விசாலமான பார்வையும் குன்றிபோய்விட்டதையும் கதை உணர்த்துகிறது. புரிந்துணர்வு என்பது பெண்களுக்கு மட்டும் இருக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பு சமூகத்தில் புரையோடிக்கொண்டிருக்கும் ஒரு புற்றுநோயைப்போல நாளடைவில் நம் சமூகத்தையும் அழித்துவிடும். புரிந்துணர்வு ஆண், பெண் இருவருக்கும் இருக்கவேண்டிய அடிப்படை பண்பு என வலியுறுத்தும் கதையாக இருந்தாலும் ஓர் அம்மாவுக்கும் மகளுக்குமான அந்தரங்க உணர்வின் வெளிப்பாடே மனப்படிமங்களாக கதையில் மேலோங்கி இருக்கிறது. சமூக வாழ்வியற் புலத்தின் யதார்த்த வாழ்வை அப்பட்டமாகக் காட்சிப்படுத்தும் கதைகளில் இதுவும் ஒன்று.

 

பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப் பூனை

 

காலத்திற்கேற்ற செறிவான மொழிநடையும் புதிய எடுத்துரைப்பு முறையும் கொண்ட கதையாக இதைக் கூறலாம். இக்கதையிலும் பூனைகளுக்கு உணவளிப்பதன் மூலமாக தாய்மையின் பண்புகளுக்கு மேலும் பெருமை சேர்க்கிறார். மேலும், தனிமையில் இருக்கும் பெண்கள்தான் அதிகமாகப் பூனைகளுக்கு உணவளிக்கிறார்கள் என்பதையும் பதிவிடுகிறார். நாம் அன்றாடம் பார்க்கும் செயல்கள்தான் இவை. ஆனால், இதற்குள் இத்தனை மனோவியல் கருத்துகள் இருக்கும் என்பதை இக்கதையின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. நாம் படித்து தெரிந்துவைத்திருக்கும் பல அறிவியல் தகவல்கள் நடைமுறை வாழ்க்கையில் முரணாக இருப்பதையும் கதை உணர்த்துகிறது. மேலும், ‘வெங்சு என்ற மொழி பற்றியும் அம்மொழி இந்தப் கறுப்புப் பூனைக்கும் அந்த ரோத்தான் கிழவருக்கும் மட்டும் தெரிந்த மொழி என்பதையும் கதை தெளிவுபடுத்துகிறது.

ஒவ்வொரு கதைக்கும் கதாசிரியர் மிகவும் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார் என்பதை அவரின் கதைகளை வாசிக்கும்போது என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது.

 

வலி

 

கையிழந்தவர்களின் வலியை கனத்த மனத்தோடு நம்முடன் பகிர்ந்துகொள்ளும் கதை. முன்பு சொன்னதுபோல அலிசா கதையின் தொடர்ச்சியாகவும் இக்கதை நகர்வினைப் பார்க்கலாம். கடலில் அனாவசியமாக மீன்களைப் பிடித்து பெரும் கடல் ஆளுமையாக இருந்தவள் ஒரு விபத்தில் தன் இரு கைகளையும் இழந்தபின், தான் பார்த்து மகிழ்ந்த கடலை தன் வீட்டின் மீன்தொட்டிக்குள் அடைத்து வைக்கிறாள். அந்த மீன் தொட்டியைச் சுத்தப்படுத்துவதற்குக் கூட மற்றவர்களின் உதவியை நாடும் அவளின் வலி நிறைந்த வாழ்க்கை நமக்குள்ளும் ஒரு வித வலியை ஏற்படுத்திவிடுகிறது. தனிமையில் உழன்று வெறுமையில் வெதும்பும் ஒரு வாழ்வைப் புடம் போட்டுக் காட்டுகிற இக்கதையில் யாருமில்லாமல் அவள் படும் நரக வலியும் வேதனையும் தார்மீக ஓலமாய் கதை நெடுகிலும் ஒலிக்கிறது.

 

பொதுப்பார்வையில் உலகின் முதல்தர நாடாக, செல்வம் கொழிக்கும் நாடாக சிங்கப்பூர் திகழ்ந்தாலும் இங்கு இன்னமும் தொடப்படாத  சொல்லப்படாத பல வாழ்வியற் கதைகள் ஒளிந்தேயிருக்கின்றன என்பதற்கு இக்கதையும் நல்லதோர் எடுத்துக்காட்டு.

 

அகமனத்தில் கட்டமைக்கப்படும் நிஜத்தின் பதிவுகளைச் சொற்குறியீடுகளில் உள்வாங்கி உரைநடையில் அமைக்கப்பட்டிருக்கும் இச்சிறுகதைகளை வாசிப்பது என்பது ஒரு சுகமான வாசிப்பு அனுபவமாகவே எனக்குள் இருக்கிறது. இச்சுகத்தை அனுபவிக்கின்ற பாக்கியம் வாசகனாய் இருந்து வாசித்தால் மட்டுமே சாத்தியமாகும். இவரின் மொழிநடை அழகானது, சரளமானது. சிங்கப்பூரின் வாசம் நிறைந்தது. இவர் வெறும் கற்பனைக்கதை எழுதுபவர் அல்ல. இவருடைய கதைகள் யதார்த்தம் நிறைந்தவை. தான் கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் ஆய்வுநிலைக்கு உட்படுத்தி நல்ல சிறுகதைகளாக உணர்வுப்பூர்வமாக எழுதும் திறன் பெற்றவர்.

 

பாலபாஸ்கரன் தனது ஆய்வுக்கட்டுரை ஒன்றில் சிங்கப்பூரின் முதல் சிறுகதை 1924 ஆம் ஆண்டில்தான் வெளிவந்ததென்று குறிப்பிட்டிருப்பார். அதை வைத்துப் பார்க்கும்போது இந்த 2024 சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகளில் நூற்றாண்டு விழாவாக அமையும். நூறாண்டு சிங்கப்பூரின் சிறுகதை வளர்ச்சி எப்படி இருக்கிறது எனக் கேட்பவர்களுக்கு லதாவின் சீனலட்சுமியைத் தைரியமாக வாசிக்கக் கொடுக்கலாம்.

 


எம்.சேகர்

முனைவர் பட்ட ஆய்வாளர்

இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியத்துறை

தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

 

 

11 Feb 2024


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக