வியாழன், 22 மார்ச், 2012

பரதேசியாய்த் திரிகிறேன்




நினைவுகளின் பதிவுகளில்
உன்
அழுகுரல் மட்டும்
இன்னமும்
அழியாமல் அழைக்கிறது
என்னை
ஒவ்வொரு இரவின் விளிம்புகளிலும்

தூரமாய்த் தூக்கியெறியப்பட்ட
சடலத்தின்
இரத்தச் சதைகளாய்
மேகங்கள்
என் கனவுகளில்
என்னைத் தின்றுகொண்டிருக்கின்றன

கடிகாரத்தின் பெரிய முள்
காலத்தைப்
பனிப்போர்வைக்குள்
ஒளித்து வைத்து
சிறிய முள்ளை
நெருப்புச்சங்கரங்களுக்குள் இட்டு
முனையைத் தீட்டுகிறது

நீ
மென்றுபோட்டச் சொற்கள்
சொற்களல்ல
அவை
நெருப்பின் முனைகள்

அந்த
முனைகளின்
எங்கோ ஒரு தூரத்தில்
பளபளக்கும்
என் உயிர்மூச்சின்
கவசம்

வானமாய்
மேகமாய்
நிலவாய்
காற்றாய்
தென்றலாய்
பூமியாய்
நிலமாய்
கடலாய்
அலையாய்
எங்கும் நீ
வியாபித்து
என்னொடு சல்லாபிக்கிறாய்
என்னை உறிஞ்சுகிறாய்
சக்கையாய்
துப்பிவிட்டுப் போகிறாய்

இன்றுவரை
தேடிக்கொண்டு
பரதேசியாய்த் திரிகிறேன்
உன் வாசலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக