வியாழன், 3 அக்டோபர், 2019






பன்முகப் பார்வையில் தமிழ்மொழியும் இலக்கியமும் & கற்றல் கற்பித்தலில் தமிழ்மொழியும் இலக்கியமும்

            மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர்
                          (04-05-2019) 

மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் தொகுப்பு நூலில் பெண் கதாபாத்திரப்  பதிவுகள் -எம். சேகர் 

அறிமுகம்

அண்மையில் கோவை ஸ்ரீ நேரு வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு மலேசியத் தமிழ்ச் சிறுகதைககள் எனும் தொகுப்பு நூல் அவர்களின் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தமிழ் நாட்டில் அயல்நாட்டுப் படைப்பிலக்கியத்திற்குக் கொடுக்கப்பட்ட ஓர் ஆங்கீகாரமாகும். குறிப்பாக மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலுக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்ததொரு தருணமாக இது அமைந்திருக்கிறது. மலேசிய இலக்கியத்தை அயல் நாடுகளில் தொடர்ந்து அறிமுகம் செய்துவரும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பல்லாண்டு கால தொடர் முயற்சியின் பயனாக இது இன்று சாத்தியமாகியிருக்கிறது.

பெண்ணியக் கதாபாத்திரங்கள்

நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்களை வெளிப்படுத்துவதில் இன்றைய படைப்பாக்கங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. கவிதை, சிறுகதை, புதினம், நாடகம் போன்ற இலக்கிய வடிவங்களின்மூலம் தாம் சார்ந்த சமூகத்திற்கும் நாட்டிற்கும் நடைமுறை வாழ்வியலில் உள்ள சிக்கல்களையும் அதற்கான மாற்றுச் சிந்தனைகளையும் தம் படைப்புகளினூடே படைத்து வருபவர்கள் இன்றைய படைப்பாசிரியர்கள்.

‘ஓர் எழுத்தாளன் என்ற முறையில், படைப்பாளி என்ற முறையில் முழுக்கவும் நான் சமூகம் சம்பந்தப்பட்டவன். சமூகம் சம்பந்தம் என்பதின், அந்த உறவின் மேன்மையை உணர்பவனே சிறந்த தனி மனிதன். ஒரு சமூக வளர்ச்சியின் முன்னோடியைத்தான் நான் தனி மனிதன் என்று கருதுகிறேன்,’ என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் குறிப்பிட்டுள்ளதை இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

அவ்வகையில், பெண்களின் வளர்ச்சி படிப்படியாக முன்னேறி உச்சத்தில் இருக்கும் இக்கால கட்டத்தில் பெண்களின் பல்வேறு பண்புக் கூறுகளைத் திறனாய்வது அவசியமாகிறது. அந்த வகையில், மலேசிய எழுத்தாளர்களில்  பெரும்பான்மையினர் தம் நாட்டு அடித்தள மக்களின் வாழ்க்கைச் சூழல்களைத் தத்தம் படைப்புகளின்வழி சித்தரித்துப் பெண்களின் ஆளுமைப் பண்புகளைக் கதாபாத்திரத்தில் அமைத்துக் கதை பின்னியிருப்பது இச்சிறுகதைத் தொகுப்பிற்குத் தனிச்சிறப்பினைக் கொடுத்துள்ளது.

பெண்கள் இச்சமூகத்தில் தங்களின் நிலை என்ன என்பதையும் குடும்ப அமைப்பில் தங்களுடைய நிலை என்ன என்பதையும் தாங்கள் தற்போது எத்தகைய நடத்தையைக் கொண்டிருக்கிறோம் என்பதையும் தங்களுடைய பண்புகள் என்ன என்பதையும் பெண்கள் அறிந்து வைத்திருத்தல் அவசியமாகின்றது.

தனக்குள் ‘தன்னைத் தேடுதல்’ என்பதன்மூலம் பெண்கள் தங்களின் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்துகொள்ளவும் இதன்வழி தங்களை ஒரு மீள்பார்வைக்கு உட்படுத்திக்கொண்டு, தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்பும் ஏற்படுகிறது. இதுபோன்ற வாய்ப்புகளைப் படைப்பிலக்கியத்தில் வரும் கதாபாத்திரங்களின் வழியாக பெண்கள் பெற்றுக்கொள்வதும் உண்டு. அத்தகையப் பெண் கதாபாத்திரங்களை மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் என்ற நூலின்வழி நின்று அறிமுகம் செய்வதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளில் பெண் கதாபாத்திரங்கள்


இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பத்துச் சிறுகதைகளிலும் பெண் கதாபாத்திரப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன என்பதைக் காணும்போது பெண்களின் ஆளுமை இச்சமூகத்தில் எந்தளவுக்கு அவசியமாகிறது என்பதை அவதானிக்க இயல்கிறது.

தங்கக் கூண்டில் தாமரை மலர்

இத்தொகுப்பின் முதல் கதையில் கதைசொல்லியாகப் பெண் கதாபாத்திரம் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். ஓரு தாயின் பார்வையில் தாய்மையின் உணர்வுகளைத் துல்லியமாக எடுத்தியம்புவதற்கு மிகச் சரியான ஒரு தேர்வை இக்கதையின் படைப்பாளர் திருமதி. பாவை முன்னெடுத்திருக்கிறார். மகன் வீட்டிற்கு வரும் ஒரு தாயின் பார்வையில் கதைச் சொல்லப்படுவதும் காட்சிகள் நகர்த்தப்படுவதும் வளர்ப்புப் பிராணிகளே ஆனாலும் அவைகளுக்குள்ளும் இருக்கும் ஒரு வித மெல்லிய உறவுகளை மிக யதார்த்தமாகப் பதிவு செய்வதற்கு அந்த அம்மா கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாகப் பயன்படுத்தியுள்ளார் கதாசிரியர். கதையின் இறுதியில்,

‘குட்டியின் முகத்தில் ஏக்கம் படிந்திருப்பதாக எனக்குப் பட்டது’ என வரும் வரிகள், பிறந்து ஐந்து மாதத்திற்குள் இரண்டு எஜமானர்களின் கையிலிருந்து இப்போது மூன்றாவது கைக்கு மாறியிருக்கும் ‘லக்கி’ என்ற அந்த நாய்க்குட்டியின் உணர்வலைகளின் ஏக்கம் ஒரு தாய்மையால் மட்டுமே உணரமுடியும் என்பதைக் காட்டுகிறது.

சாயா நாமா செல்வி (என் பெயர் செல்வி)

மலேசிய மண்ணின் அடித்தட்டு வர்க்கப் பெண்களின் பிரதிநிதியாக இக்கதையில் வரும் செல்வியின் தாயாக வரும் ஒரு பெண் கதாமாந்தர் படைப்பு அமைக்கப்பட்டு, அதற்கேற்ற கதைப் பின்னலுடன் அவர்களுக்கு ஏற்படும் அன்றாட வாழ்வியல் சிக்கல்களும், அந்தச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் அடுத்த தலைமுறைப் பெண்ணான செல்வியின் எண்ண ஓட்டத்தில் கதை நகர்த்தப்பட்டிருக்கிறது. அம்மா என்ற பெண் பாத்திரத்தின்மூலம் ஒரு தலைமுறையின் வாழ்வும் செல்வி என்ற பெண் பாத்திரத்தின்மூலம் அடுத்த தலைமுறையின் வாழ்வையும் மலேசிய வாழ்த் தமிழர்களின் எதிர்கால வாழ்வியல் சூழலைக் கேள்விக்கு உட்படுத்தி மிகவும் இயல்பாகப் பதிவு செய்துள்ளார் இக்கதையின் படைப்பாளர் திரு. ஜி.எஸ்.தேவகுமார்.

புகை

கணவனின் புகைப்பிடிக்கும் பழக்கத்தால், அதனை அளவுக்கு அதிகமாகச் சுவாசித்துப் பாதிக்கப்படும் சங்கீதா என்ற ஒரு பெண்ணின் நிலையையும் அவளுக்குப் பிறக்கும் குழந்தையின் சுவாசக் குழாயில் கரும்புகை படிந்து, மூச்சித் திணறலால் ‘ஐ.சியு’ வில் இருக்கும் ஒரு சூழலையும் இக்கதை படம்பிடித்துக் காட்டுகிறது. ஆண்களின் ‘ஹிரோயிஸம்’ பெண்களின் முகத்துக்கு நேரே புகைவிட்டும் மகிழும் தருணங்கள் அடுத்தவர்களுக்குக் குறிப்பாக மனைவிகளுக்கு எற்படும் தாக்கத்தையும் அதன் வாயிலாகச் சிசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் இக்கதையின்மூலம் எடுத்துச் சொல்லியிருக்கிறார் திருமதி. ஆதிலெட்சுமி.

வானத்தில் ஏறப் படிகளா இல்லை.....?

ஒரு சராசரி தாயின் எதிர்பார்ப்புகள் மிகவும் இயல்பாக இக்கதையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏழ்மைச் சூழலில் இருந்து தங்களைத் தங்கள் பிள்ளைகள் மீட்டெடுப்பார்கள் எனும் ஒரு சமூகத்தின் எதிர்பார்ப்பையே இக்கதையின் மையமாகக் கொண்டு புனைந்துள்ளார் திரு. மு.வரதராசு. ‘பரீட்சை என்னாயா ஆச்சு?’ என்ற அந்தத் தாயின் கேள்வியின்மூலம், மலேசிய நாட்டில் தமிழினம் தலையெடுப்பதற்குக் கல்வியைத் தவிர, வேறெதுவும் துணைவரப் போவதில்லை என்பதைக் குறியீடாக உணர்த்திச் செல்கிறது.

தரிசனம்

அப்பாவின் மரணத்திற்குப் பிறகு, அம்மாவின் வாழ்க்கையைப் பின்னி கதையாடல் தொடர்கிறது. பெரும்பாலோர் இயல்பாகக் கடந்துபோகும் ஒரு மரணம், ஒரு சிலரின் வாழ்வில் மட்டும் மாறாத மாற்றத்துடன் நிலைத்துவிடுவதை இக்கதையின்வழி புனைந்திருக்கிறார் திரு. கோ.புண்ணியவான். அப்பா இறந்த பிறகும் கூட அவருக்காகக் ‘கேட்’ கதவைத் திறந்து வைத்துக் காத்திருக்கும் அம்மா. கணவன் தன்னுடனே இன்றும் இருப்பதாக வாழும் அம்மா. மரணத்திற்குப் பிறகும் கணவனின் இருப்பில் வாழும் ஒரு பெண்ணின் உணர்வுகளை உணர்வு சார்ந்த நிலையிலேயே அறிந்துகொள்ள முடியும் என்ற ஒரு நிலைப்பாட்டில் இக்கதை தன் நிறைவை எய்துகிறது.

கெத்துவா கம்போங் முனுசாமி (கிராமத்துத் தலைவர் முனுசாமி)

ஒரு மரணம் நிகழ்ந்துவிடுகிறது. அதனையொட்டிய காட்சிப் படிமங்கள் கதையை நகர்த்திச் செல்கின்றன. இறந்த மனிதரால், வாழ்க்கையில் முன்னுக்கு வந்த இரண்டு பெண் கதாபாத்திங்கள் நன்றியை மறக்காமல் அவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு, தங்களால் இயன்றதைச் செய்வதாகக் கதை பதிவு செய்கிறது. ஒற்றைத் தாயார்களான ‘மாச்சிக் சுலேஹா’, கீதா இருவரும் மற்றவர்களைப்போல கிராமத்துத் தலைவரான முனுசாமியின் உதவியால், வாழ்க்கையில் தங்களுக்கான ஒரு நிலையான இடத்தை நிரப்பிக்கொண்டவர்கள். பல்லின மக்களின் வாழ்வியல் சூழலையும் இக்கதை ஓர் இறப்பின்மூலம் நடவு செய்கிறது. மேலும், கணவன்களால் பெண்கள் கைவிடப்படுவதற்கும் நிர்க்கதியாய் நிற்பதற்கும் மற்றொரு பெண்ணே முழுகாரணமாய் அமைந்துவிடுவதையும் கதையினூடே மிக இயல்பாப் பதிவு செய்துள்ளார் திரு. எம்.கருணாகரன்.

மறுபக்கம்

இங்கும் ஓர் இறப்பு. சமூகத்தில் மதிப்பும் செல்வாக்கும் மிக்க ஒருவரின் மரணம். மருத்துவமனையில் இறந்துவிடுகிறார். அவருக்கு முதல் மனைவி. இரண்டாவது மனைவி. மூன்றாவதாக ஓர் அம்மாள். மூவரும் அவரால் பயனடைந்தவர்கள். ஆனால், அவரின் பிரதேத்தைப் பெற்றுக்கொள்ள எந்தக் குடும்பமும் முன் வராததால், வெண்மை உடை போற்றப்பட்ட உயிரற்ற உடல் ‘மார்ச்சுவரி’ க்குப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது என கதை முடிகிறது. மூன்று பெண் கதாபாத்திரங்களின் சுயநலப் போக்கை இக்கதையின்மூலம் எடுத்துக்காட்டி, சமூகத்தில் இருக்கும் அவலங்களை வெளி உலகக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் திரு. நிலாவண்ணன்.

புதிய டீச்சர்

ஆசிரியராகப் பணியில் சேர்ந்து துணைத் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பின்னர், தலைமையாசிரியராகப் பொறுப்பேற்று,, இனி குடும்பமே தனக்கு எல்லாம் என நினைத்து, இனி ஆசிரியர்த் தொழிலுக்கு வரக்கூடாது என்ற வைராக்கியத்துடன் பணி ஓய்வு பெற்று பின், குடும்பத்தில் தனது இருப்பை உணர்ந்துகொண்டு மீண்டும் ஆசிரியர் தொழிலுக்கு வரும் ஒரு பெண்ணின் கதை. வெளி உலகில் யார் யாராலோ எப்படி எப்படியெல்லாமோ புகழ்ந்து பாராட்டப்படும் ஓர் ஆசிரியை, குடும்ப நிலையில் வெறும் ஒரு சராசரி அம்மாவாக, மாமியாராக, பேரப்பிள்ளைகளின் பாட்டியாக, வயதானவராகப் பார்க்கப்படும் ஓர் அவலம் இக்கதையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவரின் ஆற்றலும் திறமையும் குடும்பத்தினரால் புரிந்துகொள்ளமுடியாமல் போகிறது.

‘உலகம் நம்மைப் புரிஞ்சிக்கிற அளவுக்கு உறவுகள் நம்மைப் புரிஞ்சுக்கிறது இல்ல’ என்ற ஓர் ஆசிரியையின் ஏக்கங்களை இக்கதையின்மூலம் மிக யதார்த்தாகப் புனைந்து காட்டியிருக்கிறார் திரு. மு.மணிவண்ணன்.

நந்தியாவட்டைப் பூக்கள்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பார்த்த தன் முன்னாள் ஆசிரியை நதியா டீச்சரை இந்நாள் ஆசிரியையாக ஒரு பள்ளிக்குச் செல்லும்போது மீண்டும் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகிறாள் காவியா. இந்த இரு பெண் கதாபாத்திரங்களையும் காவியாவின்மூலம் பின்னோக்கிப் பார்க்கும் உத்தியால் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் திருமதி. உதயகுமாரி கிருஷ்ணன். நதியாவக்குப் பிடித்த நந்தியாவட்டைப் பூக்களுடன் நெருங்கி பயணிக்கும் கதையின் போக்கு, இறுதியில் நாம் எதிர்பார்ப்பதுபோல் அனைத்தும் இங்கு நடந்துவிடுவதில்லை என்பதை மிக யதார்த்தமாகப் பதிவு  செய்து செல்கிறது.

இதுநாள்வரையில் காவியாவின் கற்பனையில் சற்றே பூசின உடம்போடு அதே நீண்ட முடியோடு உலா வந்த நதியா டீச்சர் இன்று, தலைமுடி எல்லாம் இழந்து, சர்க்கரை வியாதியின் உச்சத்தில் இருக்கும் தன் இரண்டு வயது பிள்ளையை வீட்டுக்கும் மருத்துவமனைக்குமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சூழலில் பின்னிப் பிணைத்திருப்பதைக் காண முடிகிறது. இது நதியா டிச்சருக்கு மட்டுமல்ல. பெரும்பாலான டீச்சர்களுக்கும் வெவ்வேறு வாழ்க்கைச் சூழலில் பொருந்தும் ஒன்றாகத்தான் பார்க்க முடிகிறது.

பிடிசாதம்

ஈப்போவில் சைவ உணவிற்குப் பிரசித்திப் பெற்ற ஐயர் கடை ஒன்றையும் அதனை நடத்தும் மணி ஐயரையும் சமையலைக் கவனிக்கும் அண்ணன் இராம ஐயரையும் அறிமுகப்படுத்துகிறது கதை. ஊருக்கெல்லாம் உணவு சமைக்கும் இராம ஐயர், தான் சாப்பிடுவதற்காக வீட்டிற்குச் சென்று விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

‘ஊருக்கெல்லாம் நான் உபசாரம் பண்றேன். நேக்கு உபசாரம் பண்ண ஓர் ஆள் வேண்டாமா? .........கடையில எல்லாத்தையும் அருஞ்சுவையாக சமைத்தாலும் நேக்கு அவ கையால பரிமாறிச் சாப்பிட்டாதான் மனசுக்குத் திருப்தியா இருக்கும்....தினசரி நெருப்புலே கெடந்து சாகிற நேக்கு...ஆத்துக்குப் போயி அவளோட ஒரு கைப்பிடிசாதம் சாப்பிட்டாதான் மனசுக்குச் சாந்தி ஏற்படும்’.

கதைக்குள் அவர் மனைவியின் கதாபாத்திரப் படைப்புக்கென தனி பாத்திரமாக எதையும் உருவாக்காமல் இராம ஐயரின் கூற்றின்மூலம் மனைவி என்ற பெண் கதாபாத்திரத்தின் அறிமுகத்தை மிக இயல்பான குணநலன்களுடன் புனைந்துள்ளார் திரு. சித.நாராயணன்.

முடிவுரை

பெண்ணியக் கருத்துகளும் அதன் தொடர்பான வெளிப்பாடுகளும் ஒவ்வொரு நாட்டின் வாழ்வியல் சூழல், பண்பாட்டிற்கேற்பப் புத்தம் புது விளக்கங்களைப் பெற்று அறிமுகமாவதைக் காணமுடிகிறது. மேலை நாட்டில் உருவான பெண்ணியச் சிந்தனைகள், அதனையொட்டி இந்தியா, தமிழ் நாட்டில் உருவான பெண்ணியச் சிந்தனைகள் மலேசிய நாட்டிலும் பிரதிபலிப்பதை மேலே குறிப்பிடப்பட்டுள்ள மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளின் வாயிலாக அதன் பிம்பங்களை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

(4-5-2019 - மலாயப் பல்கலைக்கழகத்தில் படைக்கப்பட்ட கட்டுரை)

துணைநூல்கள்

1.   மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம். கோலாலம்பூர். 2018.
2.   தற்காலப் பெண்கவிஞர்களின் படைப்புகள்-ஓர் ஆய்வு. ஜெ.சா.ஜிஜிகிறிஸ்டோபெல். மதுரை. 2009.
3.   ஜெயகாந்தன் படைப்புகளில் பெண்களின் ஆளுமைப்  பதிவுகள், கோ.விஜெயம். மதுரை, 2004.
4.   சன்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ். அரசு கலைக் கல்லூரி, மேலூர். மதுரை. மலர் 3, சிறப்பிதழ் 2, டிசம்பர் 2018.
5.   திறனாய்வுக் கோட்பாடுகளும் பன்முக வாசிப்புகளும். ந.இரத்தினக்குமார், கயல்கவின் பதிப்பகம், சென்னை, 2016.
6.   புனைகதை இயல், சபா.ஜெயராசா, சேமமடு பதிப்பகம், கொழும்பு. 2009.

வாங்க வாசிக்கலாம் – 15 – எம்.சேகர்
மக்கள் ஓசை (1-9-19)


வே.இராஜேஸ்வரி சிறுகதைகள்


அறிமுகம்


வே.இராஜேஸ்வரி அறிமுகம் தேவையில்லாத ஒரு பண்பட்ட படைப்பாளர். இந்நாட்டின் முத்திரைப் படைத்த மூத்த படைப்பாளி. சுமார் நாற்பதாண்டு மலேசிய தமிழ்ப் படைப்புலக நீரோட்டத்தில் சிறுகதைகள், கவிதைகள், தொடர்கதைகள் என நிறைவான பங்களிப்பைச் செய்திருக்கும் இவரை மலேசியப்  புதுக்கவிதைப் படைப்பாக்கத்தில் முதல் பெண் படைப்பாளியாகப் பல ஆய்வு மேடைகள் அடையாளம் காட்டியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


‘மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் நான் விரும்பிப் படிக்கும் படைப்பாளிகளில் இவரும் ஒருவர்’ என அடையாளம் காட்டுகிறார் நம் எழுத்துலக பிதாமகர் ஆதி. இராஜகுமாரன். வே. இராஜேஸ்வரியைப் பற்றி மேலும் இப்படிக் கூறுகிறார்.


‘வயல்களில் நெற்பயிர் நடுவதுபோல சிறுகச் சிறுக எழுதி நெடுக வளர்ந்திருக்கிறார். அவரது கதைகளைப் படித்தபோதுதான் மலேசிய இலக்கிய உலகில் அவரது உயரம்  உணரமுடிகிறது.’
‘வே.இராஜேஸ்வரி சிறுகதைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு, மழைச்சாரல் புலனக்குழுவின் நூல் திட்டம் வழி வெளியிடப்பட்டது. அன்று ஒரே மேடையில் பத்து நூல்கள் வெளியீடு கண்டன. இத்தொகுப்பில் மொத்தம் 45 சிறுகதைகள் இருக்கின்றன. அவை அனைத்தையும் உங்களோடு இங்குப் பகிர்ந்துகொள்ள முடியாத ஒரு நிலையில் அதிலிருக்கும் 12 சிறுகதைகளை மட்டுமே உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.


நான் மட்டும் ஒரு .............


முரண் கதாபாத்திர அமைப்புடன் அமையப்பெற்ற கதை. வாழ்வில் எதுவும் நம்மைப் பாதிக்காதவரை நாம் பலவிதமான ஆலோசனைகளையும் கருத்துகளையும் மிக எளிதாக நம் வாயிலிருந்து துப்பிவிட்டுப்  போய்விடமுடிகிறது. ஆனால், பாதிக்கப்பட்டவனுக்குத்தான் வலியும் வேதைனையும் அதிகமாக இருக்கும். அவ்வலியால் பாதிப்படையாதவன் எனக்கு நடந்திருந்தால் நான் இப்படிச் செய்திருப்பேன் அப்படிச் செய்திருப்பேன் என்பதெல்லாம் வெறும் வாய்ச் சவாடலாக மட்டுமே இங்கு இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. சமகால நடப்பியல் சூழல்களோடு இக்கதை நமக்குள் இருக்கும் நாம் உணராத குறைகளை உணர்த்தும் தன்மையில் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கான கதாபாத்திரத் தேர்வுகளும் அதற்கு ஏற்ற சம்பவக் கோர்வைகளும் இயல்பான கதைப்போக்கும் கதையை ஆர்வத்தோடு வாசிக்க வைக்கிறது.


101 வது கனி


ஒரு பெண்ணின் மன ஓட்டங்களோடு பயணிக்கும் கதை ஒரு பெண்ணால் சொல்லப்படும்போது நம்மை நெகிழ வைக்கிறது. ஒரு பெண்ணால்தான் இன்னொரு பெண்ணின் மன உணர்வுகளை இத்தனை ஆழமாகவும் இயல்பாகவும் வெளிப்படுத்தமுடிகிறது. இந்த மலேசிய நாட்டில் இருநூறு ஆண்டுகளைக் கடந்துவிட்ட நம் சமூகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார இயலாமையே இத்தனை வேதனைகளுக்கும் வடுக்களுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. இன்னும் எத்தனைப் பெண்களைத்தான் குடும்பம் என்ற பந்தத்திற்குள் பூட்டிவைத்துப் பலி ஆடுகளாக நாம் களம் இறக்கப்போகிறோம்? என்ற கேள்வியே இந்தக் கதையை வாசித்தப் பிறகு எனக்குள் தொக்கி நிற்கிறது. பெண்ணியத்தைப் பற்றி இன்றைய படைப்பிலக்கியங்கள் பேசும் முன்பே வே. இராஜேஸ்வரி பேசியிருப்பதும் அவரின் பெரும்பாலான கதைகளும் பெண்ணியம் சார்ந்தே புனையப்பட்டிருப்பதும் இங்குக் கவனிக்கத்தக்கது.


போதி மரங்கள் புத்தனுக்கு மட்டுமல்ல


சந்தர்ப்பமும் சாட்சிகளும் ஒரு நல்லவனுக்கு எதிராக இருக்கையில் இங்குக் கத்தியும் கூப்பாடு போட்டும் எதுவும் மாறிவிடப்போவதில்லை. எல்லாம் அதனதன்படிதான் நடக்கும் என்பதற்கேற்ப மிகவும் நேர்த்தியாகக் கதை உருவகப்படுத்தப்பட்டுள்ளது. நிலையாமையை மையமாகக் கொண்ட கதைப்பின்னலில் சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று உண்மைகளில் ஒன்றான,


‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’
என்பதற்கேற்பக் கதையின் முடிவும் அமைக்கப்பட்டிருக்கிறது. 

ஓர் ஆணுக்குள் இருக்கும் மெல்லிய உணர்வுகளை ஆங்காங்கே கதையோட்டத்தில் தவழவிட்டு இயற்கையையும் அதன் அழகையையும் ரசிக்கும்படி மிக நேர்த்தியாகத் தன் கற்பனைத்தேரில் பவனி வந்திருக்கிறார் வே. இராஜேஸ்வரி.


எங்கள் ஊர் மாதவி


கதை ஒரு குறியீட்டுப் படிமமாக ஒரு செய்தியை இந்தச் சமூகத்திற்குச் சொல்லிச் செல்கிறது. மாதவி என்ற பெயர் ஒரு குறியீடாக இந்தக் கதையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தனித்து வாழ்பவர்களை மாதவி என்று அடையாளப்படுத்தும் நோக்கம் என்னவாக இருக்கும் என்று நம்மை சிந்திக்க வைக்கும் கதையாடல். இந்தக் கதையின் தலைப்பே இந்தக் கதைக்கும் மையமாகப் புனையப்பட்டுப் பெண்ணியப்  படைப்பாக மிளிர்கிறது. மாதவி என்பதை வெறும் பெயராக மட்டும் பார்த்தால் இந்தக் கதையால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. மாதவி என்ற பெயரைச் சிலப்பதிகாரத்தின் கதாபாத்திரத் தன்மையோடு ஒரு குறிப்பிட்ட ஒரு பண்பியல் கூறோடு உற்று நோக்கினால்தான் இக்கதையும் சிறக்கும். இதுபோன்ற கதைகளின்மூலம் நம் தொன்மத்தின் கதாபாத்திரங்களை வாசகர்களுக்கு மிக அருகில் நம்மால் நிழலாட வைக்க முடிகிறது. ஒரு தேடலை நோக்கி வாசகர்களை நகரவும் வைக்கிறது.


பழைய பல்லவி புதிய சரணம்


அழகானதொரு காட்சிச் சித்தரிப்பு, எதிர்பார்ப்புடன் கதைக்குள் நுழையவைக்கிறது. சாவதற்காக ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு சாவைத் தேடி ஓடும் மனிதர்களுக்கு வாழ்வதற்கான ஆயிரம் காரணங்கள் இந்த உலகத்தில் இருக்கிறது என்பதை மையமாகக் கொண்ட கதைப்பின்னல் மிகவும் நேர்த்தியாகக் கையாளப்பட்டுள்ளது. பலரும் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு கதை இதுவென்றாலும் கதை சொல்லலிலும் காட்சி விவரிப்புகளிலும் இக்கதை தனித்து நிற்கிறது. தொன்மம், புரணம் என எதைப் பார்த்தாலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை அன்றிலிருந்து இன்றுவரை மாறாமல் அப்படியேதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. சகுந்தலைகளும் குந்தி தேவிகளும் பாஞ்சாலிகளும் சீதைகளும் பாதிக்கப்பட்ட அளவிற்கு அவர்களின் பிரச்சனைகளில் சம்பந்தப்பட்டிருக்கும் ஆண்கள் பாதிக்கப்படுவதேயில்லையே என நமது தொன்மப் புராண இதிகாசங்களையும் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார் கதாசிரியர்.


ஆறாவது காப்பியம்


தன்கூற்று உத்திமூலம் தன்னிலையாகக் கதையைச் சொல்லி சுவாரஸ்யமாகக் கொண்டுசென்றுள்ளார் வே.இராஜேஸ்வரி. அம்மாவின் உணர்வுகளும் மகளின் உணர்வுகளும் மிகவும் ஆழமாகவும் நிதானமாகவும் கதைக்குள்ளே கட்டமைக்கப்பட்டுள்ளது. சமகால இலக்கியப் படைப்புகளில் நவீனம், பின்நவீனத்துவம் அதிகம் பேசப்படும் சூழலில் 1990 களிலேயே பின்நவீனத்துவச் சிந்தனையுடன் கதை எழுதியிருக்கிறார் இந்தப் பெண்ணியப் படைப்பாளி. வெறும் பெண்ணியம் பேசும் கதை என்று இக்கதையை அவ்வளவு எளிதில் சொல்லிவிட்டுப் போகமுடியாத கதை. இது நம் சமூகத்தின் கதை. அதன் அவலத்தின் வெளிச்சம். நாடு சுதந்திம் பெற்று அறுபது ஆண்டுகள் மேலாகியும் நம் சமூகம் மட்டும் இன்னும் பல நிலைகளிலும் விழிப்புணர்வு இல்லாமலும் முன்னேற்றம் அடையாமலும் இருப்பது வேதனைக்குரிய ஒரு விஷயமாகவே இருக்கிறது. கதையின் முடிவு நிச்சயமில்லாத மலேசியத் தமிழர்களின் எதிர்காலத்திற்கான ஒரு குறியீடாகவே தென்படுகிறது. இக்கதை பெண்ணின் ஆழ்மன உளவியலை மிகவும் நுட்பமாகவும் துல்லியமாகவும் சித்தரிப்பதில் தனித்து நிற்கிறது.


சிலம்பு தேடும் கண்ணகி


மலேசியக் கணவரைப் பெற்ற ஒரு தமிழ்நாட்டுப் பெண்ணின் கதை. தமிழ்நாட்டுப் பெண்ணோ அல்லது மலேசியப் பெண்ணோ, பெண்களுக்கான பிரச்சினைகளுக்கு இன்னொரு பெண்ணே காரணமாகிப்போவதென்னமோ உலகம் முழுக்க எங்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவில் இருந்து இவளை விவாகரத்து செய்துவிடுகிறான். இந்த மையத்தில் இந்தக் கதை சுழன்றாலும் தமிழ்நாட்டுப் பெண் என்பதாலும் மலேசியரைக் கணவராகப் பெற்ற அவர் விவாகரத்துப் பெற்றபின் அவருடன் வாழ முடியாத சூழலில் இந்த நாட்டில் அப்பெண் இருக்கமுடியாது என்பதாலும் மலேசியப் பிரஜைகளான இரண்டு பிள்ளைகளையும் அவளோடு தமிழ்நாட்டுக்கு அழைத்துச் செல்ல மலேசியக் சட்டம் இடம் கொடுக்கவில்லை என்பதாலும் அவள் இங்கு நிரந்தரமாகத் தங்கி தன் பிள்ளைகளைத் தன்னிடமே திரும்பப் பெற போராட முடிவெடுத்து அதற்காக ஒன்றைச் செய்ய நினைக்கிறாள். கதைக்கு மிகவும் பொருந்திப்போகும் கதைத் தலைப்பு. ஆணாதிக்கச் சமூகத்திற்குச் சாட்டை அடிகளாக விழும் கதையின் முடிவு வாசக இடைவெளிக்காக வழிவிட்டுக் காத்துக் கிடக்கிறது.


என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்


இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சிருந்தா ஒரு நல்ல வேலையில் சேர்ந்து ஒரு தரை வீடாவது வாங்கியிருக்கலாம் எனக் கதைநெடுக வாசகனுடன் பேசிக்கொண்டே போகும் கதாநாயகன். அவனின் மனவோட்டங்கள் அருமையான உரையாடல்கள் போலவே வாசகனைத் தொடர்ந்து செல்கின்றன.


மலேசியாவின் நகர்ப்புறத்து மலிவுவிலை அடுக்குமாடி வீடுகளின் அவலங்களையும்  சாதாரண தொழில் செய்துகொண்டு பேருந்தை நம்பி வேலைக்குப் போகும் மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் பிடித்துக்காட்டும் இடங்களும் மெல்லியதானதொரு நகைச்சுவையுணர்வும் கதைக்கு மேலும் சிறப்பைச் சேர்க்கின்றன. ஓர் அழுத்தமான கதைக்கரு மிகவும் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கதையின் ஆரம்பமும் முடிவும் முரணாக அமையப்பெற்ற கதை. மனித வாழ்வின் அவலங்களும் அனுபவங்களும்தான் சொற்களாக வாக்கியங்களாக இக்கதையை வடிவமாக்கியுள்ளது.


‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என கண்ணதாசனின் வரிகள் கதையைப் படித்து முடிக்கும்போது வாசகனின் நினைவலைகளைத் தாலாட்டியும் செல்லலாம்.


அகம் புறம்


திருநங்கைகளைப் பற்றிய ஒரு சில பார்வைகளுடனான கதை, குழந்தை வளர்ப்பைப்  பற்றியும் சிலவற்றை முன்வைக்கிறது. திருநங்கை என்ற சொல்லால் ‘ஒம்போது’ என்று அழைப்பதும் குறிப்பதும் மட்டுமே மாறியிருக்கிறது எனவும் அவர்களின் மீதான சமூகத்தின் பார்வை இன்னும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது என்பதையும் உணர்த்தும் கதை. தன் மகனை சிலர், ‘ஒம்போது’ என அழைத்ததையே தாங்கிக் கொள்ள முடியாமல் புலம்பும் ஒரு தாயின் மனத்தையும் அப்படி மாறிப்போன பிள்ளைகளைப்  பெற்றவர்கள் எந்த அளவிற்கு வேதனைப்பட்டிருப்பார்கள் எற்பதைப் பற்றியும் கதை விவரித்துச் செல்கிறது. ஓர் ஆண் பிள்ளையை எப்படிக் கொஞ்சவேண்டும், அதுபோல ஒரு பெண் குழந்தையை எப்படிக் கொஞ்சவேண்டும் என பிள்ளை வளர்ப்பின் சில விஷயங்களையும் கதை நம்முடன் பகிர்ந்துகொள்கிறது.


ஆமையும் வெல்லும்


சமகாலப் பதிவுகளைக் களமாகக் கொண்டு காலத்திற்கேற்ற கருவில் சொல்லப்பட்ட கதை, இன்றைய அடிப்படைக் கல்வி முறை மதிப்பெண் சார்ந்த தேர்ச்சி முறைக் கல்வித் திட்டமாக மாறிவிட்டதையும் அதனால் மாணவர்களுக்கு ஏற்படுகின்ற மன அழுத்தத்தையும் தேர்வு பயத்தையும் பெற்றோர், ஆசிரியர், சமூகம் ஆகியவற்றின் முரண்பட்ட பார்வைகளையும் தன்னகத்தே கொண்டு, தன் கூற்று உத்தி முறையின் மூலம் இக்கதையை நகர்த்தியுள்ளார் வே. இராஜேஸ்வரி. இன்றைய கல்விக் கொள்கைகளை மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டிய தேவைகளையும் அவசியத்தையும் இக்கதை பேசியிருக்கிறது. கதையின் முடிவும் வாசகனுக்காகக் காத்திருக்கிறது.


பாடாத இராகங்கள்


கணவனை இழந்த ஒரு பெண்ணின் கதை. இன்னொரு பெண்ணின் பார்வையில் நமக்குக் கதையாகக் கிடைத்திருக்கிறது. ஒரு கணவனின் இழப்பு ஒரு மனைவிக்கு எவ்விதப் பாதிப்பையையும் அவ்வளவாகக் கொடுக்கவில்லை எனில், அவர்கள் மேற்கொண்டிருந்த அந்தக் குடும்ப வாழ்வில் ஏதோ ஒன்று அந்நியமாக இருந்திருக்கிறது என்பதையோ அல்லது அந்தப் பெண் கணவனுடன் வாழ்ந்த வாழ்க்கையில் அவள் அவளாக வாழமுடியாத ஒரு சூழல் ஏற்பட்டிருக்கும் என்பதாக ஏதோ ஒன்று நம் மனத்திற்குள் வருடிக்கொண்டிருக்கிறது. இது இக்கதையில் மட்டுமல்ல. பெரும்பாலான குடும்பச் சூழலில் பெண்கள் பலவற்றையும் விட்டுக்கொடுத்துதான் அல்லது இழந்துதான் வாழவேண்டிய ஒரு வாழ்க்கையைத்தான் இந்த ஆணாதிக்கச் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது என்பதற்கு இக்கதை நல்லதோர் உதாரணம்.
கதையின் இறுதி வரி இப்படி முடிகிறது.


‘எல்லா இறப்புகளும் இழப்புகள் அல்லதான். ஆனால், ஒரு பெண்ணுக்கு எல்லாமுமான கணவனின் இறப்பு, ஓர் இழப்பாகத் தோன்றாமல் போகுமானால், அதற்குமுன் அவள் நிறைய இழந்திருக்க வேண்டுமே.’ பெண்களின் ஆழ்மனப் பதிவுகளுக்கு ஓர் உதாரணமாக இக்கதையும் பெண்களின் மொழியாக தனித்து சிறந்து விளங்குகிறது.



குழந்தை இன்பம்


சமகால நவீன இலக்கியப் படைப்புகள் மனிதர்களின் அக உணர்வுகளுக்கு முக்கியம் கொடுத்து யதார்த்த வாழ்வின் யாதார்த்தங்களை யதார்த்தங்களாகக் காட்டும் ஓர் இயக்கமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய ஒரு யதார்த்த கதையுலகிற்குள் 2004 இல் எழுதப்பட்ட இக்கதையும் அமர்ந்துகொள்கிறது என்பதைப் பார்க்கும்பொழுது நமக்கும் மலேசிப் புனைவிலக்கியத்திற்கும் பெருமையாக இருக்கிறது. இக்கதையின் இறுதி வரிகளை வாசித்தவுடன் எனது வாசகமனம் அதிர்ந்துவிட்டது.  எதையும் சிந்திக்கமுடியாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. மீண்டும் நான் சமநிலைக்கு வர சில நிமிடங்கள் பிடித்தன. இப்படியொரு தாக்கத்தை ஏற்கனவே ஒரு முறை சு.வேணுகோபாலின் ‘உள்ளிருந்து உடற்றும் பசி’ என்ற சிறுகதையும் சந்தோஷின் ‘பிரியாணி’ என்ற சிறுகதையும் ஏற்படுத்தியிருந்தன. இக்கதைகளின் இறுதி வரிகள் வாசிப்பவர்களை ஓர் அதிர்ச்சிக்குள் உள்ளாக்கி அவர்களை உறைய வைத்துவிடும் தன்மை கொண்டவை. இப்படியெல்லாம் நாம் வாழும் நடப்பியல் வாழ்க்கை முறையில் நடந்துகொண்டு இருக்கிறதா? இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு வெளியே சொல்லமுடியாத எண்ணற்ற ஜீவன்களைத்தான் நாம் இங்குத் தினமும் கடந்து போய்க்கொண்டிருக்கிறோமா?


இப்படிப்பட்ட அதிர்வு அலைகளையும் மனித ஜீவனுக்குள் இருக்கும் மௌனங்களை வெளிப்படுத்தும் குரலாகவும் இன்றைய நவீன தமிழிலக்கியம் நேற்று இல்லாத ஒன்றை எழுத முயன்றுகொண்டிருக்கிறது. அந்த வகையில் வே.இராஜேஸ்வரியின் இந்தக் கதையையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். நவீன புனைவிலக்கியமாக இக்கதையையும் நாம் கொண்டாடலாம்.


வே.இராஜேஸ்வரியின் கதைகளுக்கு உதிரி மனிதர்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் அன்றாட வாழ்வியல் அவலங்களை வெளிப்படுத்தும் ஆற்றல் உண்டு என்பதை அவரின் எழுத்து மெய்ப்பித்திருக்கிறது. மௌனத்தால் உலுக்கும் பெண்மொழி அவரின் எழுத்தினூடே பாய்ந்து வருவதை உணரமுடிகிறது. பெண்ணிய உணர்வுக்குள் காணக்கிடக்கும் அவர்களுக்கான வாழ்க்கையையும் அதற்கான மாற்று வழிகளாகவும் புதிய குரல்களாகவும் இக்கதைகள் ஒலிக்கின்றன.


எனது இந்தப் பார்வையானது அவரின் கதைகள் மீதான என் வாசிப்பில் ஒரு திறப்பு மட்டுமே என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன். முழுமையான ஓர் ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட்டால் இக்கதைகள் நமக்காக இன்னும் நிறையவே பேசும். மற்றவர்களையும் நிறையவே நிறைவாக எழுதவும் வைக்கும்.


நிறைவாக....


மனித வாழ்வின் ஒவ்வொரு கணமும் திருப்பங்களும் திடுக்கிடல்களும் எதிர்பார்ப்புகளும் கலகங்களும் சுவாரசியங்களும் சோகங்களும் கொண்டாட்டங்களும் குதூகலங்களும் கொண்டதாகத் தோற்றம் காட்டிக்கொண்டிருந்தாலும் அவரவருக்கு வாழ்க்கை கொடுக்கும் அனுபவம் என்பது வெவ்வேறாகத்தான் இருக்கிறது. அத்தகைய அனுபவங்களும் உணர்வுகளுமே மனிதனின் மன வெளிகளில் புனைவுகளாகத் தவழ்ந்து கொண்டிருக்கின்றன.


மனிதப் பெருங்குழுவும் அவர்தம் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளுமே மொழியின்வழி புனைவுகளாகக் கசிந்து திசை எங்கும் மிதந்துகொண்டிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் உடைப்பெடுத்துப் பெருகியும் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, இதுபோன்ற படைப்புகளைக் கூர்ந்து கவனித்துத் தீவிரமான வாசிப்புக்கு உட்படுத்துவதும் அதன்வழி மானுட  விரிவின் நுண்ணிய முடுக்குகளின்  சூட்சமங்களைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதும் இன்றைய படைக்காக்கச் சூழலில் தவிர்க்க இயலாத அவசியமாகிறது.
அத்தகைய படைப்புகளைக் கண்டறிவதற்கு முதலில் நமக்கு வாசிப்பும் தேடலும் என்பது அவசியமாகும். இந்த அவசியச் செயற்பாட்டைச் சாத்தியப்படுத்தும் ஒரு சிறு முயற்சியே இந்த வாங்க வாசிக்கலாம். 


சில நண்பர்கள் என்னிடம், ‘நிறைகளை மட்டுமே எழுதுகிறீர்களே குறைகளையும் சுட்டிக்காட்டலாமே’ என்றனர். அவர்களுக்குத் தாழ்மையுடன் நான் கூறும் பதில் இதுதான்.


‘அதற்கான களம் இதுவல்ல. இக்கட்டுரை எழுதுவதன் முதன்மை நோக்கமே வாசகர்களுக்கு வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதும் அதற்காக நான் வாசித்த சில நூல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதும்தான். வாய்ப்புக் கிடைத்தால் வேறொரு தலைப்பில் சமகால சிங்கப்பூர் மலேசியத் தமிழ் இலக்கியப் படைப்புகளை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தி எழுதலாம்.’


இந்தத் தொடர்க் கட்டுரையை எழுத வாய்ப்பளித்த மக்கள் ஓசைக்கும் அதன் ஞாயிறு பொறுப்பாசிரியர் திரு. மோகனன் பெருமாள் அவர்களுக்கும் பக்க வடிவமைப்பை மிக நேர்த்தியாக வடிவமைத்த வடிவமைப்பாளருக்கும் நான் பகிர்ந்துகொண்ட நூல்களின் படைப்பாளிகளுக்கும் கடந்த பதினாறு வாரங்களாக என்னோடு பயணித்த உங்களுக்கும் என் அன்பான நன்றி.



-        - நிறைவு