வியாழன், 4 ஜூலை, 2013

கவிதையின் வடிவங்கள் – ஒரு பார்வை

கவிதையின் வடிவங்கள் – ஒரு பார்வை

              பழையன கழிதலும் புதியன புகுதலும்
            வழுவல கால வகையி னானே  (நன். 462)
      என்னும் இலக்கண மரபின்படி, பழைய இலக்கிய மரபு வழக்கிழந்து போவதும் புதிய இலக்கிய மரபு தோன்றுவதும் மொழியின் வளர்ச்சிப் பண்புகளாகும்.
      சங்கப்பாடல்கள் தொடங்கி இன்றைய மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, லிமெரிக், லிமரைக்கூ, சானெட், குக்கூ என வளர்ந்துவிட்ட சூழலில் எத்தனையோ வித சோதனை முயற்சிகள் இன்றளவும் நடந்துகொண்டிருக்கின்றன. பாவின வரிசையில் கவிதை எழுதுவதற்கு முதலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய இலக்கணத் தரவுகள் அவசியமாகின்றன. ஆனால் இவற்றுக்கெல்லாம் நவீன அதிவேகப் பாய்ச்சலான வாழ்க்கைச் சூழலில் படைப்பவனுக்கும் வாசிப்பவனுக்கும் போதிய நேரமின்றி எளிய வடிவங்கள் புதுக்கவிதைகளாய், ஹைக்கூகளாய், சென்ரியூகளாய் பல வடிவங்களில் கவிதைப் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பி வருகின்றன. 

புதுக்கவிதை
      மரபுக் கவிதையிலிருந்து புதுக்கவிதை வேறுபடுவதை வெளிப்படையாகக் காட்டுவது புதுக்கவிதையின் யாப்பை மீறிய வடிவமேயாகும். கவிதை காலந்தோறும் தன்னைப் புதிப்பித்துக் கொள்வதை  நமது மரபு எதிர்க்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, வேறு வகைப் படைப்பை விருந்து எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்.
                விருந்தே தானும்
      புதுவது கிளந்த யாப்பின் மேற்றே [1]  (தொல்.பொருள்.540)
      சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல் புதிது, சோதிமிக்க நவகவிதை
என்று பாரதி சென்னவாறு எல்லா வகையிலும் புதுமைகளை ஏற்றுப் படைக்க வேண்டும் என்பது புதுக்கவிதையாளர்களின் நோக்கமும் செயல்பாடும் ஆகும். தொழிற் புரட்சி, உலகப் போர்கள், அறிவியலின் வளர்ச்சி, மனித உளவியலின்   தோற்றம் எனும் இவற்றால் இருபதாம் நூற்றாண்டின் இலக்கியம் பெரும் மாறுதல்கள் அடைந்தன. கவிதை இலக்கியம் நிகழ்காலத்தின் எதிரொலியாக இருக்கவேண்டும் என்பதை அனைவரும் ஏற்றனர்.
தன் காலத்தில் உயிரோடிருப்பவனே கலைஞன்
என்ற தி. எஸ். எலியட்,
கவிதை ஒரு புதிய அனுபவத்தை, பழைய அனுபவத்தின் புதிய புரிதல்களை, சொல்லத் தெரியாதிருந்ததைச் சொல்ல வேண்டும்[2]
என்றார்.
புறவயமும் அகவயமும்
      புதுக்கவிதையின் பொருள் புறவயமானதாக (objective) , வெளிப்படையாடதாக, வாழ்வின் அப்பட்டப் பிரதிபலிப்பாக இருக்கவேண்டும் என்றனர் ஒரு சாரார். உண்மை பருமையானது (Truth is concrete) என்றார் ஹெகல் எனும் அறிஞர் (பிரம்மராஜன், மீட்சி, நல. 1985).  ஜெர்மனியக் கவிஞர் பிரெக்ட் போன்றோரின் கவிதைகளில் இத்தகைய புறவயத் தன்மை அமைந்திருக்கிறது. முன்பு காணப்படாத அரசியல் கவிதைகள் பிறந்தன. மார்க்சியஸ் சிந்தனைகளைச் சொல்லும் கவிதைகள் புறவயத்தன்மை கொண்டவைகளே. நடப்பியல் (Realism) , இயற்கையியல் (Naturalism) எனும் இலக்கியக் கோட்பாடுகளும் புறவயத் தன்மையை விளக்குவன ஆகும்.
      இதற்கு நேரெதிராக வேறு சிலர் அகவயத் தன்மை கொண்ட கவிதைகளைப் படைத்தனர், ஆதரித்தனர். மனித மனதின் உள்ளார்ந்த மூளைகளுக்குக் கவிதையைக் கொண்டு சென்றனர். எதிர்ப்பாராதவை, முன் தீர்மான மற்றவை, முன் எதிர்நோக்க முடியாதவை, சொல்ல முடியாதவை எல்லாம் கவிதைக்குள் வரவேண்டும் என்றனர்.
நிழல்களைப் பேசும் கவிஞனே அதிக உண்மைகளைப் பேசுகிறவன்
என பால் செலான் எனும் ஜெர்மனியக் கவிஞர் கூறுகிறார். மனப் பதிவியல் (Impressionism) , வெளிப்பாட்டியல் (Expressionism), மிகை நடப்பியல் (Surrealism) , போன்ற இலக்கியக் கோட்பாடுகள் சார்ந்த கவிதைகள் பெரும்பாலும் அகவயத் தன்மை கொண்டனவையாகும்.
புதுக்கவிதையின் வடிவம்
      புதுக்விதை தோன்றியக் காலத்தில் அதற்கு உண்டாகிய எதிர்ப்பு பெரும்பாலும் அதன் வடிவம் சார்ந்ததே ஆகும். மரபான யாப்பு வடிவங்களைத் துறந்து வசனம் போல் அமையும் ஒரு வடிவில் புதுக்கவிதை பிறந்தது. பாரதியின் வசன கவிதைகள் வடிவத்தில் உரைநடையாகவும் பொருளில் கவிதையாகவும் அமைந்திருப்பதைக் கண்டதாலும், அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனுடைய வசன கவிதைத் தாக்கத்தாலும் உரைநடை வடிவத்திலேயே கவிதை அமையலாம் எனப் படைப்பாளர்கள் துணிவு பெற்றனர்.  ஆயினும் அது வழக்கமான, முழுமையான உரைநடையன்று. உரைநடையின் எளிமை, தெளிவு, பேச்சுத் தன்மை, நேரடித் தன்மை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, உரைநடையின் வாக்கிய அமைப்பில் செறிவு செய்து கவிதைக்குரிய  வடிவம் உருவாக்கப்படுகிறது.
      புதிய படிமங்கள், பேச்சு மொழி, ஒரு கவனச்செறிவு, செறிவற்ற பல வரிகளுக்குப் பதிலாக ஒரே ஒரு சொல், படிமம் இருப்பதே கவிதைக்கு ஏற்றது என்பது T.S. எலியட் எனும் கவிஞனின் கருத்தாகும். புதுக்கவிதைக்கு வடிவம் உண்டா எனச் சிலர் வினவுகின்றனர். நல்ல புதுக்கவிதைகளின் அமைப்பைக் கொண்டே  கவிதையின் வடிவம் பற்றி உறுதிசெய்யலாம்.
உள்ளடக்கமே வடிவத்தைத் தீர்மானிக்கிறது
என்பது பொதுவாகச் சொல்லப்படும் கருத்தாகும். சில கவிதைகள் சந்தங்களைப் பெற்றுள்ளன. சில கவிதைகள் ஆசிரியப்பா வடிவத்தை நெகிழ்ச்சி செய்து வடிவமைந்துள்ளன. ஞானக்கூத்தன் அறுசீர், எண்சீர் ஆசிரிய விருத்தச் சந்தங்களைச் சிற்சில மாற்றங்களுடன் புதுக்கவிதைக்குப் பயன்படுத்தியுள்ளார். பெரும்பாலான புதுக்கவிதை உரைநடை வடிவில், கருத்துக்கும் உணர்வுக்கும் ஏற்றவாறு வரியமைப்பைப் பல்வேறு விதமாக அமைத்துப் படைக்கப்பட்டவை. எடுத்துச் சொல்லும் முறையும், வரியமைப்பில் ஏற்படும் நிறுத்தங்களும், புதிய படிமங்களும், குறியீடுகளும், கவிதையின் தொடக்கம் முடிவு ஆகிய அமைப்புகளும், பொருள் போக்கை, உணர்வுப் போக்கைத் தடுக்காத ஒலி நயங்களும் புதுக்கவிதையின் வடிவங்களாக ஏற்கப்பட்டுள்ளன.
பாடுபொருள்
      புதுக்கவிதைகளை ஆழ்ந்து நோக்கும்போது சில புதிய போக்குகளையும் நாம் இனம் காண முடியும். இப்புதிய போக்கு இலக்கிய வரலாற்றில் ஒரு வளர்ச்சி முனையாய் அமைகிறது. புதுக்கவிதையாளர்கள் இயற்கையைப் பாடுவதைவிட, வாழ்க்கை நிகழ்ச்சிகள் தம் இதயத்தில் ஏற்படும் உணர்வு நெகிழ்ச்சிகளையே தம் கவிதைகளில் வடிக்க முயல்கின்றனர்[3]. தனி மனிதனின் மனத்தடுமாற்றம், சலனங்கள், பணக்காரவர்க்கத்தின் பகட்டு ஆணவ்ங்கள், பாட்டாளி வர்க்கத்தின் அவலங்கள், அரசியல் போக்குகள் ஆகியவற்றைக் கருத்துப் பொருளாக உள்வாங்கிக் கொண்டு இக்கவிதையாளர்கள் தம் படைப்புகளை உருவாக்குகின்றனர். அடிமனத்தின் குரலை படிமவியல் (Imagism) , இருண்மை (Obscurity) , குறியீட்டியல் (Symbolism)  ஆகிய பண்புகள் கலந்த நிலையில் தம் கவிதைகளில் வெளிப்படுத்தத் தொடங்கினர்.
படிமப்பாங்கான கவிதைக்கு ஓர் எடுத்துக் காட்டு காண்போம். தி. கோ. வேணுகோபாலன் என்பார் எழுதிய கவிதை இது.
      கொள்ளிக் கண்
       முனைகளுக்கும்
       கொடூரப் பாறை;
       பிச்சை பொறுக்காத
       பாழ்நிலம்;
       சாம்பல் சிரிப்பில்
       செங்குருதி வழிந்துறையும்
       துளைத் தேகம்;
       மாரி ஆடிய
       முகம்!’[4]
      சமூக நனைவுடைய கவிதைக்கு எடுத்துக் காட்டாக அடிக்கடி விமரிசகர்களால் காட்டப்படும் ந. பிச்சமூர்த்தியின் கவிதை இது.
      வானெங்கும் எஃகிறது
       தெருவெங்கும் பிணமலை
       பீரங்கிக் குரல் பேசக்
       கேட்டதொரு வேறுகுரல்
       அன்பும் அஹிம்சையும்
       விற்றுவந்தேன் ஆதி முதல்
       பூக்காரி பூவைப் போலக்
       கண்ணெடுப்பார் யாருமில்லை
       எஃகிறகின் உயரம்
       தெய்வக்குரல் ஏறவில்லை[5]
      போர் எண்ணங்கள் மூண்டு உலகமெல்லாம் போர்க்களமாகக் காட்சியளித்த நாட்களில் அண்ணல் காந்தியடிகள் குரல் துயர் துடைக்கும் தெய்வக்குரலாய் ஒலித்தது என்றும், எனினும் அது ஒற்றைக் குரலாகக்  கேட்பாரற்று போயிற்ற என்றும் இக்கவிதை சொல்கிறது.
      பழமொழிகள், உவமைகளைப் போன்று நச்சென்று பரந்துபட்ட பொருளை சூழலுக்கு ஏற்ப பொருளைத் தருவதில் புதுக்கவிதைக்கு நிகர் புதுக்கவிதையே.
      இரவிலே வாங்கினோம்
      விடியவே இல்லை  (விதி.ப.118)
      இப்புதுக்விதையில் வறுமையில் வாடும் மக்களுக்கு  இன்னும் விடிவே ஏற்படவில்லை என்பது பொதுவான பொருளாக இருக்கிறது. 70% மக்கள் இன்னும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள். தீவிரவாதம், பயங்கரவாதம் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கின்றன. அவற்றுக்கான வழி வகைகளைக் கண்டு அரசுகள் தீர்க்க வேண்டும். ஊழல், லஞ்சம், எங்கும் மண்டிக்கிடக்கின்றன. பல்வேறு நெருக்கடிகளை நாம் சந்தித்துக்கொண்டே இருக்கிறோம். இவற்றை எல்லாம் இந்த இரு அடிகளும் சொல்லாமல் சொல்கின்றன.[6]
படிமம்
      படிமம், பிம்பம், உருக்காட்சி எனப் பல்வேறு சொற்களால் ‘Image’ என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழில் உரைத்தாலும், படிமமே பரவலாக ஏற்புச்சொல்லாக இருக்கிறது.
      ஒரு கவிதையின் உணர்ச்சிக் கூர்மை, வடித்துக் காய்ச்சிய சிக்கனச் சொற்களுக்குள் வண்ணக் கலவையாகச் சிறகு விரிக்கின்ற மின்னற் பொழுதே படிமம்[7] . வாசக மனத்திரையில் பளீரென ஒர் ஒளிச்சித்திரத்தை வரைந்து போகிற மாய ஒவியத் தூரிகை படிமம் என தனது படைப்பும் பார்வையும் என்ற நூலில் குறிப்பிடுகிறார் சிற்பி பாலசுப்ரமணியம்.
      கடவுள் ஊன்றும் செங்கோல்
என்று மின்னலையும்,
      வெள்ளித் தூளின் பாதை தூவி
       மெல்லக் காற்றுள் வீழும் விண்மீன்
என்று மின்மினியையும்,
      எண்ண வலை பின்னி பின்னி
      ஓய்கிறது மூளைச் சிலந்தி
என்று முதுமையையும் பிரமிள் சீவிச் செதுக்கும் நொற்களுக்குள் உயிர்த்தெழுகிற உருவ வனப்புகள் படிமத்தை விளக்க வாய்ப்பான எடுத்துக் காட்டுகள்[8].
      படிமங்கள் சமயச்சார் படிமம், தொன்மை சார் படிமம், மூல உருப்படிமம், அடிக்கருத்துச் சார் படிமம், இயற்கைப் படிமம், தன்னியல்புப் படிமம் என வகைமைப் படுத்தப்படுகின்றன. தமிழின் படிமக்கவிஞர் தருமு சிவராமின் காவியம் என்ற சின்னஞ்சிறு கவிதையில், உதிரும் பறவை இறகு ஒன்று பளிச்சென்று படிமமாய்ப் பதிகிறது.
     
சிறகிலிருந்து பிரிந்த
      இறகு ஒன்று
      காற்றின்
      தீராத பக்கங்களில்
      ஒரு பறவையின் வாழ்வை
      எழுதிச் செல்கிறது.
இந்தக் கவிதை தரும் காட்சிப் படிமத்துள் இயற்கையோடு குலாவும் இன்பமும், பறவையின் வாழ்வியலும் உறைந்து கிடக்கின்றன [9].
      இன்றையப் புதுக்கவிதையின் வளர்ச்சியில், கவிஞர்கள் தாங்களாகவே சொந்தப் படிமங்களை உருவாக்குகிறார்கள். புராணப் படிமங்கள், தொன்மப் படிமங்கள், மூல உருப் படிமங்கள், அடிக்கருத்தியல் படிமங்கள், இயற்கைப் படிமங்கள் போல் அனுபவப் பொதுமை இத்தகு படிமங்களுக்கு இல்லை. அதனால் இத்தகைய படிமங்களுக்கான புரிதல்களும் கடுமையாகிவிட்டன.
      தமிழில் படிமக் கவிஞராகத் திகழும் தருமு சிவராம் கவிதைகளில இருண்மை காணப்படவில்லை. ஆனால் அபி, ரகுமான், பிரம்மராஜன் ஆகியோர் கவிதைகளில் காணும் படிமங்கள் வாசகனிடம் மிகுதியான உழைப்பை வேண்டுகின்றன. எடுத்துக் காட்டாக, ரகுமானின் நார்சிஸ்ஸஸ் கவிதையில்,
      கண்ணாடிச் சமாதி யுள்ளிருந்து
       என்னை வெறிக்கும் இது
       என்பிணம்                                                   
      என்னும் தொடக்கம் இருண்மைத் தாக்கம் பெற்றிருக்கின்றது. தன் புகைப்படத்தைத் தான் கவிஞர் குறிக்கின்றார் என்பதை அறிந்த பின் கவிதை இனிக்கிறது. அந்தப் புரிதல் கிடைக்காமல் போனால் கவிதை கசந்து விடும். இவ்வகை படிமங்கள் இன்றைய நவீனக் கவிதைகளில் அதிகமாகவே இடம் பெறுகின்றன.
குறியீடு
      மரபுக்கவிதையின் வடிவம், உள்ளடக்கம் என இரண்டிலிருந்தும் பல்வேறு வகையிலும் மாறுபட்டது என்பதாலேயே புதுக்கவிதை எனப் பெயர் சூட்டப்பட்டது. ஆனாலும் புதுக்கவிதை மரபுக்கவிதையின் கூறுகளில் இருந்து முற்றாகத் தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை எனலாம். இலக்கிய உலகில் தொடர்ந்து வாழ்ந்து வரும் பயன்படு மரபுகள் சிலவற்றைப் புதுக்கவிதையும் பேணி வருகிறது என்கிறார் தனது புதுக்கவிதையில் குறியீடு என்ற நூலில் அப்துல் ரகுமான்[10].
      மரபுணர்வைக் கொண்டே உவமைகளின் பொருளை அறிய முடியும்  என்று தொல்காப்பியர் கூறுகிறர். மரபுணர்வைக் கொண்டே ஆகு பெயர்களுக்கும் பொருளறிய முடியும். இலக்கியங்களில் வழங்கும் பொதுநிலைக் குறியீடுகள் இவ்வாறே மரபின் துணையால் பொருள் உணர்த்துவனவாகும். இப்பொதுநிலைக் குறியீடுகளின் ஆட்சி புதுக்கவிதையில் பயன்படு மரபின் தொடர்ச்சியைக் காட்டுகிறது[11]. கருத்தை எளிதில் சொல்வதற்கும், படிப்போரின் உணர்வுகளோடு கலந்து உறைந்து, உணர்வுகளைக் கிள்ளுவதில் ஆற்றலுடையது என்பதாலும் அன்றிலிருந்தே கவிஞர்கள் இக்குறீடுகளை பயன்படுத்தி வருகின்றனர். புதுக்கவிதையின் பரிமாண வளர்ச்சியில் இக்குறியீடுகளின் பங்கை அதிகமாகக் காண முடிகிறது.
      மரபு வழிப்பட்ட பொதுநிலைக்குறியீடுகளை அகிலத்துவக் குறியீடுகள் (Universal Symbol) , வழக்குக் குறியீடுகள் (Conventional Symbol)  எனப் பிரிப்பர்.  அகிலத்துவக் குறியீடுகள் உலகனைத்திற்கும் பொதுவானது. தொன்று தொட்டு மனித உணர்களோடு நெருங்கிய உறவு கொண்டு நீடித்து வாழ்ந்து வருபவை. அதனால் அனைவருக்கும் எளிதில் பொருளுணர்த்தக் கூடியவை. வழக்குக் குறியீடுகள் குறிப்பிட்ட நாடு, மொழி, இனம், பண்பாட்டிற்கு மட்டும் உரியனவாய் இருப்பவன. அதனால் அவற்றைச் சார்ந்தவர்களுக்கே விளங்கக் கூடியன.
      மை சிறகில் கூடி
       வட்டம் பெரிதாக்கிக்    
       கருகியது ஒளியும்
       இருள்கூட ஒளியா?
என்ற தி.சோ.வேணுகோபாலனின் கவிதையில் இருளும் ஒளியும் ஆன்மிக உணர்வுகளுக்கும் தத்துவச்சிந்தனைகளுக்கும் குறியீடாகின்றன.
      அன்று முதல் இன்றுவரை
       இராம – இராவண யுத்தம்
       சீதை நிமித்தம்
ஆதி மனதன் முதல் இன்றைய மனிதர் வரை நிகழும் போர்களுக்கான காரணத்தை தொன்மத்தின் மூலம் நகுலன் உணர்த்துகிறார்.
      சில வரலாற்றுக் குறியீடுகள் கவிஞர்களின் சார்பு நிலையைக் காட்டுகின்றன.
      ஸ்பார்டகஸ்
       சீசரின் சிம்மானத்தை
       உலுக்குகிறான்
என்ற இன்குலாப்பின் கவிதை அவரை மார்க்சிய சார்பாளராகக் காட்டுகிறது. வர்க்கப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய புரட்சி வீரன் என்ற முறையில் ஸ்பார்டகஸ் என்ற வரலாற்று வீரனைக் கார்ல் மார்க்ஸ் பாராட்டியுள்ள குறிப்பு இன்குலாப்பின் குறியீட்டாக்கத்திற்குக் காரணமாகிறது.
      தொன்மம், வரலாறு போன்றே இலக்கிய மாந்தரும், நிகழ்ச்சிகளும்  புதுக்கவிதைகளில் குறியீடாவதை அதிகமான கவிதைகளில் காணலாம். பழைய இலக்கியங்களுள் சிலப்பதிகாரத்திலிருந்து புதுக்கவிதையாளர் மிகுதியாகக் குறியீடுகளைப் படைத்துக் கொண்டுள்ளனர் எனக் குறிக்கின்றார் அப்துல் ரகுமான். இதற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக மு. மேத்தாவின் கவிதை வரிகளைக் காண்போம்.
      இன்னொரு கண்ணகி
       எழுந்து வந்தால்
       உடையப் போவது
       சிலம்பு மட்டுமல்ல
நா. காமராசனின் கவிதை நாட்டுப்புறப் பாடல் குறியீட்டு முறையைக் கையாள்வதை அடுத்து காண்போம்.
      தாளென்றும் கிடுகென்றும்
       தலைச் சுமைகள் கொண்டு வந்தும்
       கூரை நிலைக்கலியே
       சாரலுக்குப் பொறுக்கலியே

முரண்
      இன்றைய நிலையில் சமுதாயத்தின் அன்றாட வாழ்க்கை முரண்பாடுகள் கொண்டதாகவும், அவற்றின் கலவையாகவும் காட்சியளிக்கின்றன. எனவே புதுக்கவிதைகளில் மனுத சமுதாயத்தின் முரண்பட்ட எண்ணங்களையும் செயல்பாடுகளையும் முரண் எனும் உத்தியின் வாயிலாகத் திறம்பட எடுத்துரைக்கப்படுகிறது. முள்ளை முள்ளால் எடுப்பது போல முரணை முரணால் காட்டுதல் இன்றைய புதுக்கவிதைக்கு மிகவும் ஏற்றதாய் உள்ளது[12] என டாக்டர் வே. சபாபதி குறிப்பிடுகிறார்.
      சின்ன
       மஞ்சள் கயிற்றைத்தான்
       கேட்டேன்
       தூக்குக் கயிற்றைத்
       தந்திருக்கிறீர்களே

முரண் உத்தியோடு படைக்கப்பட்ட நா. காமராசனின் கவிதையை அடுத்து காண்போம்.
      நாங்கள் நிர்வாணத்தை
       விற்பனை செய்கிறோம்
       ஆடை வாங்குவதற்காக
இருண்மை
       புதுக்கவிதைகளில் பல சிக்கலானவையாக, புரிந்துகொள்ள முடியாதவைகளாக உள்ளன என்பது ஒரு பொதுக் கருத்து. நவீன வாழ்வின் பல இறுக்கமான, சிக்கலான தன்மைகளை உள்ளடக்கியிருப்பதால் நவீனக்கவிதைகள் சிக்கலாக உள்ளன எனக் காரணம் காட்டுகின்றனர் திறனாய்வாளர்கள். பல்வேறு அறிவுத்துறைத் தகவல்கள் அத்துறைக் கலைச் சொற்களுடன் கவிதையில் இடம் பெற்றிருப்பதாலும் அவற்றை அறிந்திராத பொது வாசகர்களுக்கு கவிதை புரிவதில்லை. தொன்மம், வரலாறு ஆகியவற்றின் தொடர்பும் புரிந்து கொள்ள முடியாமைக்குக் காரணம். எனினும் இத்தகையக் கவிதைகள் காட்டும் குறிப்பீடுகளை அறிந்து கொண்டால் கவிதையைப் புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
      இன்றையக் கவிஞர்களுள் பலர் மிகவும் தனித்தன்மையான பார்வை கொண்டவர்களாக உள்ளனர். கவிதையில் இதுவரை சொல்லப்படாத தெளிவற்ற உணர்வுகளை அவற்றின் பிறப்பிடத்திற்கே சென்று தொட்டுக்காட்டுகின்றனர். பிரமிள், அபி போன்றவர்களின் கவிதைகளில் இத்தகைய உள்ளாழ்ந்த தன்மைகளைக் காணலாம். பாடுபொருள் உலகுக்கு அப்பாற்பட்டு நுண்ணிலைகளை, அருவ நிலைகளைக் கவிதைகளில்அவர்கள் உணர்த்தும் போது கவிதைக்கு இருண்மை இயல்பு சேர்கிறது. வாசகன் புரிந்து கொள்ளத் தவிக்கவேண்டியுள்ளது. இத்தகைய கவிதைகள்ச் சொல்லுக்குச் சொல் பொருள் பார்த்து புரிந்து கொள்ள முயலாமல், பொழிப்புரை தேடாமல், கவிதையின் மொத்த உணர்வும் தனக்குள் ஏற்படுத்தும் அசைவுகளை, தனக்கு உண்டாகும் அனுபவங்களை நன்றாகக் கண்டு, அதுவே கவிதையின் பொருள் என வாசகன் புரிந்து கொள்ள வேண்டும். கவிஞன் என்ன நினைத்தானோ, அதையே வாசகன் கண்டடைய வேண்டும் என்பதில்லை எனபதுதான் உலகம் முழுவதும் இன்று உருவாகியுள்ள கவிதைக் கோட்பாடாகும். வாசகமனம் பல்வேறு விதமாகக் கவிதையையை அலசித் தேடும் தேடலும், நீடித்த அத்தேடலில் அவனுக்குள் உருவாகும் அனுபவமும் கவிதையின் உட்பொருளாகும்.
கவிதையின் பொருள் கவிதையின் சொற்களில் இல்லை. அது நம்மிடம்தான் உள்ளது. அதுவும் நமது பக்குவம், அனுபவம் மாறமாற மாற்றமடையும். ஒரு குறிப்பிட்ட காலம், வெளி மனநிலைகளில் ஒருவனின் உணர்வை இன்னொருவன் பெறுவது ஒரு போதும் நடவாத காரியம். கவிதை என்றும் மொழிக்கு வெளியேதான் தங்கி நின்றுள்ளது
என மா. அரங்கநாதன் (பொருளின் பொருள் கவிதை, பக். 71-74) கூறுவது பொதுவாக எக்கவிதைக்கும் பொருந்தும்.
ஹைக்கூ
       தமிழ்க்விதை வடிவமைப்பில் குறுகிய வடிவங்களாகத் திருக்குறளும், ஔவையாரின் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் முதலிய படைப்புகளும் காணப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக ஹக்கூ, சென்ரியு, லிமெரிக், லிமெரிக்கூ போன்ற குறும்படைப்புகள் தமிழுலகிற்கு வருகைபுரிந்துள்ளன. ஜப்பானில் இயற்கை சார்ந்த சூழலோடு ஜென் தத்துவப் பின்னனியாகக் கொண்ட சில ஹைக்கூ கவிதைகளைத் தமிழில் சி. மணி எழுத்து இதழில் முதலில் மொழிப்பெயர்த்துத் தந்தார்.
கிளைக்குத் திரும்பும்
  சருகா
  பட்டாம்பூச்சி
போன்ற கவிதையின் பால் ஈர்ப்புக் கொண்டு, தமிழ் முன்னணிக் கவிஞர்கள் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டனர். தமிழில் முதல் ஹைக்கூ தொகுதியான அமுத பாரதியின் காற்றின் கைகள் திகழ்கிறது.
  இந்தக்காட்டில்
  எந்த மூங்கில
  புல்லாங்குழல்
வரிகள் குறைந்து இருப்பதால் வாசகன் கவனம் கவிதையில் குவியும் வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் அவன் நின்று நிதானிக்கவும் நேர்கிறது என்னும் தமிழன்பனின் கூற்றின்படி இக்கவிதையின் பின்னணியில் விரியும் படிமங்கள் வாசகனை ஆழ்ந்த சிந்தனைத் தளத்திற்கு அழைத்துச் செல்வதை உணர முடிகிறது.
      ஆண்டுதோறும் கவிதை நடைமாறவேண்டும். மாதந்தோறும் புதிது புதிதாய் கவிதை மலர வேண்டும்’, என்பார் ஜப்பானியக் கவிஞர், ஹக்கூ வின் மூலவர் என்று போற்றப்படும் கவிஞர் பாக்ஷோ.
வடிவ அமைப்பு
       ஹக்கூ மொத்தம் மூன்று அடிகளை மட்டுமே கொண்டது. இதில் முதலிரண்டு அடிகள் ஒரு கூறு, ஈற்றடி ஒரு கூறு. ஈற்றடி கவிதைத்துவ நிறைவும் உணர்ச்சி ததும்பலாய் அமைந்திட வேண்டும். இடையிலிருக்கும் அடி மற்ற இரண்டு அடிகளுக்குக் கருத்தாலும் நயத்தாலும் பாலமாய் அமைய வேண்டும்.
பக்குவமடைந்த ஒரு மூன்றாவது மனிதரின் சொல் வலிமையோடு நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கும்
திறன் பெற்றிருப்பது போல் ஹைக்கூவின் கடைசி வரி ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி வியக்க வைக்கும் என்கிறார் கவிஞர் நிர்மலா சுரேஷ்[13].
      கிரேஜி என்கிற ஒரு திருப்பம் இரண்டாவது அடியின் இறுதியில் அமைந்ததால் முதலிரண்டு வரிகளைச் சேர்த்துப் படித்துப் படித்துப் பின் நிறுத்தும் வரியைக் கூறல் ஹைக்கூவின் முக்கிய உத்திகளில் ஒன்று.
கவிஞர் மு.முருகேஷின்,
      கல்யாணக் கூட்டம்
      முதிர்கன்னியின் தலையில்
      கொஞ்சம் அட்சதைகள்
கவஞர் தமிழன்பனின்,
      ஆகாயமும் அழகு
      பூமியும் அழகு – ஆம்
      என்கையில் ரொட்டித் துண்டு
இவ்வாறு யதார்த்த நிலையின் வெளிப்பாடாய் இம்மூவரது கவிதைகளிலும் மூன்றாவது வரி முக்கிய இடத்தைப் பெற்றிருப்பதைக் காண முடிகிறது. ஹைக்கூ கவிதையின் உயிர் நாடியே இந்த மூன்றாவது வரியில்தான் உள்ளது. அது ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்ச்சியை ஏற்படுத்தி முழுக்கவிதையையும் கவனத்திற்குக் கொண்டு வரும்.
      ஹைக்கூவின் அசையமைப்பு 5-7-5 என வரும். ஜப்பானில் ஒன்ஜி என்றுக குறிப்பிடுவது ஓர் அசை, ஓர் எழுத்து. தமிழில் யாப்பில் வருகின்ற நேரசைக்கு நிகரானது ஒன்ஜி. உலகின் முதல் ஹைக்கூ இப்படி வருகிறது.
      பழைய குளம்
      தவளை குதிக்கையில்
      தண்ணீரில் சப்தம்  ( பாஷோ )
5-7-5 ஒலிக்குறிப்பை முழுவதுமாக உணர்த்தும் அமுதபாரதியின் ஹைக்கூ ஒன்றை அடுத்து காண்போம்.
      குளமொன்றை வெட்டு
      குறைவின்றி நீர் நிரப்பு
      குளிக்க வரும் நிலவு
ஹைக்கூவின் கூறுகள்
1.       நேரடி அனுபவம்.
2.       உவமை உருவம் கிடையாது
3.       கடைசி வரியில் ஒரு திருப்பம்
மேலே கூறப்பட்டக் கூறுகளே சிறந்த ஹைக்கூவை அடையாளம் காட்டுகின்றன.
      வசந்தம் வறண்டுவிடில் பறவைக்கும், மீனுக்கும் ஏன் கவிஞனுக்கும் உயிர் மூச்சு நின்றிடுமோ?
      இளவேனில் விடைபெற
      அழூஉம் பறவைகள், மீனின்
      விழிகளில் கண்ணீர் (பாஷோ) [14]
இதுபோன்ற இயற்கை ஈடுபாடும், அழகியல் இரசனையும்தான் ஹைக்கூவுலகின் அடிப்படையாயிற்று.
சென்ரியு
       ஹைக்கூவைப் போன்றே மூன்றடி வடிவமைப்பைக் கொண்டே சென்ரியு ஹைக்கூவின் இறுகியத் தன்மையிலிருந்து சற்றே வேறுபட்டு மானுடம் சார்ந்த நிகழ்வுகளின் மீது கவனம் செலுத்தத் தொடங்கிற்று. அதாவது ஹைக்கூவை இயற்கைக்கவிதை என்றும் சென்ரியுவை இயற்கைச் சாரா மானுட ஹைக்கூ என்றும் கூறலாம்.
வடிவமைப்பு
1.       ஹைக்கூ போன்றே மூன்றடி எல்லையைக் கொண்டது
2.       பெரும்பான்மை சென்ரியுக் கவிதைகள் இருசீர் அடியமைப்பைக் கொண்டவையாகும்.
3.       ஒரு சில கவிதைகளில் மட்டும் இடையடி சற்று நீண்டிருப்பதையும் காணமுடிகிறது.
4.       ஈற்றடி ஒரு புதிர்த் தன்மையுடன் காணப்படுகிறது.
அன்றாட நிகழ்வுகளையும், சமூகச் சீர்கேடுகளையும் கேலிக்கு உட்படுத்தி நகைச்சுவை தோன்ற உரைப்பது சென்ரியு கவிதையின் பண்பாகும். இப்பண்புகளுடன் தமிழின் முதல் சென்ரியு நூலாகத் தமிழன்பனின் ஒரு வண்டி சென்ரியு எனும் நூல் திகழ்கிறது.
      மழைநாள் கவலை
      காளான்களை எண்ணுவதா
      கட்சிகளை எண்ணுவதா...

      ஆயிரம் பேரோடு
      வேட்பு மனுத்தாக்கல்
      ஐம்பது வாக்குகள்..
எனும் கவிதைகள் இன்றைய அரசியல் நிகழ்வுகளைக் கிண்டல் தன்மையுடன் சுட்டிக்காட்டுவதைக் காணலாம்[15].
லீமெரிக்
      ஆங்கிலத்தில் ஐந்து அடிகளில், யாப்பு முறையில் செய்யப்பட்ட கவிதையை லிமெரிக் என்று அழைப்பர். தாமசுமூர் என்பவரால் 18 ஆம் நூற்றாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இக்கவிதை பாலியல் சார்ந்த நிகழ்வுகளைக் கிண்டலாய் விரசமாய்க் கூறுவதே இக்கவிதையின் பண்பாகக் கொண்டனர். தமிழில் முதலில் இவ்வடிவத்தை ஈழத்து மகாகன் என்பவர் குறும்பா எனும் பெயரால் அறிமுகப்படுத்தினார். இவர் ஆங்கிலத்தில் உள்ள வடிவமைப்பையும், ஓசை ஒழுங்கையும் பின்பற்றியுள்ளார். குறும்பாவால் தமிழ்க்கவிதை நகைச்சுவை ஆழமும் அகலமும் இறுக்கமும் இலகுவும் பெற்று ஒரு புதிய உச்சத்தை அடைய வழிபிறக்கிறது என்று எஸ். பொன்னுதுரை குறிப்பிடுகிறார்.
      முத்தெடுக்க மூழ்கின்றான் காலன்
      சத்தமின்றி வந்தவனின்
      கைத்தலத்தில் பத்து முகத்தைப்
      பொத்தி வைத்தான் போனான் முச்சூலன்
தமிழ்கவிஞர்கள் ஹைக்கூ, சென்ரியு எனும் இலக்கிய வகைமைகளில் ஆழ்ந்த கவனம் செலுத்தியது போல லிமெரிக் கவிதைகள் மீது கவனத்தைச் செலுத்தவில்லை என்றே கூறலாம்.
லிமரைக்கூ
      தமிழ்க் கவிதையுலகில் இன்றைய புதிய வகையான வடிவமாக லிமரைக்கூ விளங்குகிறது. ஆங்கில இலக்கிய லிமெரிக்கூம், ஜப்பானிய இலக்கிய ஹைக்கூவும் சேர்ந்த கலப்பினக் கவிதையே லிமரைக்கூ எனப்படும். ஆங்கிலத்தில் இம்முயற்சியை டெட்பாக்கர் என்பவர் மேற்கொண்டார். தமிழில் இத்தகைய கவிதை வடிவத்தை அறிமுகம் செய்த பெருமை தமிழன்பனுக்குரியதாகும். இவரின் சென்னிமலை கிளியோபாத்ராக்கள் தமிழின் முதல் லிமரைக்கூ நூலாகும்.
வடிவமைப்பு
1.       ஹைக்கூவைப் போன்றே மூன்றடி எல்லையைக் கொண்டது.
2.       லிமெரிக்கின் ஓசை நயத்தைக் கொண்டு விளங்குகிறது.
3.       முதலடியும் ஈற்றடியும் ஒத்துக் காணப்படுகின்றன. (அதாவது மூன்று சீர்களால் ஆன சிந்தடி அமைப்பினை கொண்டவையாக இருக்கும்.
4.       முதலடியிலும் ஈற்றடியிலும் இயைபுத்தொடை பொருந்தி வரும்.
5.       இடையடி மற்ற அடிகளைவிட சற்று நீண்டு காணப்படும்.
6.       அளவடி அமைப்பைக் கொண்டவை. (ஒரு சில கவிதைகளில் இருசீர் (குறளடி) அமைப்பினையும் காண முடிகிறது.
மேற்குறிப்பிட்ட அமைப்புகளில் அனைத்துத்தள நிகழ்வுகளையும் பாடுபொருளாகக் கொண்டு ஓசை நயத்துடன் நகைச்சுவை தொனியோடும் கூறுவதே லிமரைக்கூவின் தனிச்சிறப்பாகும்.
      திண்டுக்கல்லுப் பூட்டை
       திறக்க முடியவில்லை திருடன்
       திருடிப்போனான் வீட்டை

      அத்தனை மீன்கள் வலைகளில்
       அடுத்த நாள் கடலிலே
       அத்தனை அழுகை அலைகளில்
என மேற்கண்ட கவிதைகளில் தமிழ் யாப்பியல் கூறுகள் சில நெகிழ்வுத் தன்மையுடனும், புதுப்பொலிவுடனும் பல்வேறு பா வகைகளின் வழி தமிழுக்கு அணிசெய்பனவாக உள்ளன.   
              தமிழ்க்கவிதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றை உடையது. சங்கப் பாடல்கள் வரையிலான வரலாற்றில் யாப்பின் நெறியில் கவிதைகள் பல வடிவங்களைப் பெற்றுள்ளன. தமிழ்க் கவிதைகளைப் பொதுவாக மரபான யாப்பு வடிவக் கவிதைகள், யாப்பு மீறிய புதுக்கவிதைகள், பிற மொழி யாப்பு வடிவங்களைப் பின்பற்றிய கவிதைகள் என மூன்றின் அடிப்படையில் பகுத்துக்கொள்ளலாம். அள்ள அள்ளக் குறையாமல் உணவு வளர்ந்து கொண்டிருக்கும் அமுத சுரபியைப் போன்று காலம் மாறினாலும், பல்வேறு வகைமைக் கவிதைகளை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் அமிதசுரபியாகத் திகழ்வது கவிதையுலகம். உட்புகும் பொருளுக்கேற்ப தண்ணீர் தன் வடிவத்தை மாற்றிக் கொள்வதுபோல் போல் கவிதைகளும் நவீன சிந்தனைகளுக்கேற்ப தன் வடிவத்தை மாற்றிக் கொண்டே போய்க்கொண்டிருக்கின்றன.
              எழுத்து விதைகள்
                இதயங்களில்
                தூவப்படும்போது
                செழித்து வளர்வது
                தனிமனிதன் அல்ல
                ஒரு சமூகம்


கட்டுரையின் துணைநூல்கள்
1.       புதுக்கவிதை மொழி, முனைவர் மா. கோவிந்தராசு, முதற்பதிப்பு 2010,  பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை 800014.
2.       கவியமுது, பதிப்பாசிரியர், முதற்பதிப்பு 2008, கலைஞன் பதிப்பகம், சென்னை 600017.
3.       தமிழ்க்கவிதையின் புதிய போக்குகள், பேராசிரியர் க, இராமச்சந்திரன், முதற்பதிப்பு 2009, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை - 600014
4.       கவிதையில் படர்ந்த மிளகுக் கொடிகள், அமிர்தம் சூர்யா, முதற்பதிப்பு 2007, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை 600011.
5.       படைப்பும் பார்வையும், சிற்பி பாலசுப்ரமணியன், முதற்பதிப்பு 2001, கவிதா பப்ளிகேஷன், சென்னை- 600017
  1. புதுக்கவிதையில் குறியீடு, அப்துல் ரகுமான், முதற்பதிப்பு 2006, அன்னம், தஞ்சாவூர் - 613007
  2. நால்வர் நானூறு, கவிஞர் அமரன், முதற்பதிப்பு 2004, காவ்யா பதிப்பகம், சென்னை - 600024
  3. மலேசியப் புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும், இராஜம் இராஜேந்திரன், முதற்பதிப்பு 2007, மித்ரா ஆர்ட்ஸ், சென்னை - 600024
  4. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும். டேனியல்பிரசாந்த், இணையக் கட்டுரை.
  5. தமிழில் மேலை இலக்கியக் கவிதை வடிவங்கள், வி. குமார், இணையக்கட்டுரை.


[1]  புதுக்கவிதை மொழி, மா.கோவிந்தராசு, பக்.16
[2]  இணையக் கட்டுரை, புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், டேனியல் பிரசாந்த்

[3]  கவியமுது, பக். 10,
[4]  புதுக்கவிதையின் புதிய போக்குகள், க. இராமச்சந்திரன், பக். 95
[5]  கவிதையில் படர்ந்த மிளகுக் கொடிகள், அமிர்தம்சூர்யா, பக். 118
[6]  புதுக்கவிதை மொழி, மா. கோவிந்தராசு, பக். 10
[7] படைப்பும் பார்வையும், சிற்பி பாலசுப்ரமணியம், பக். 9
[8]  படைப்பும் பார்வையும், சிற்பி பாலசுப்ரமணியம், பக். 9
[9]  படைப்பும் பார்வையும், சிற்பி பாலசுப்ரணியம், பக். 16-17
[10]  புதுக்கவிதையில் குறியீடு, அப்துல் ரகுமான், பக். 61
[11]  புதுக்கவிதையில் குறியீடு, அப்துல் ரகுமான், பக். 62

[12]  மலேசியப் புதுகவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்,  பக். 94
[13]  தமிழ்க்கவிதையின் புதிய போக்குகள், க. இராமச்சந்திரன், பக். 130
[14]  நால்வர் நானூறு, கவஞர் அமரன், பக். 28
[15]  இணையக் கட்டுரை, தமிழில் மேலை இலக்கியக் கவிதை வடிவங்கள், வி. அருள்.

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

இறக்கும்வரை............................

LOVE photo: Love heart.jpg


உன் நினைவின் அணுஅலைகள்
என் மனவெளி முழுவதுமாய் வியாபித்துப் பூத்திருக்கின்றன
இன்றைய நாள்
உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும்

வாழ்க்கையின் பரிணாம அசைவுகளில்
ஒவ்வொரு திசைகளிலும்
தாலாட்டுப் பாடிட ஓர் இதயம்

எனக்கான இதயம் நீயென வந்தாய்
தனிமைச் சுழலில் தவித்து வியர்த்த மனத்துக்கு
அன்பின் சாமரம் வீசினாய்
இறக்கும்வரை இருப்பேன் என்றாய்
ஆம்
நம் காதல் இறக்கும்வரை
என்பதைத்தான் அப்படிச் சொன்னாய்
என்பதை
உன் கல்யாணப் பத்திரிக்கையைப் பார்த்த
பிறகுதான் தெளிந்துகொண்டேன்

எங்கிருந்தாலும் வாழ்க
இதைத் தவிர வேறென்ன சொல்ல
என் அன்பில்லாக் காதலியே


செவ்வாய், 9 ஏப்ரல், 2013

சிறுகதை - மனத்துக்கண் மாசிலன் ஆதல்

மனத்துக்கண் மாசிலன் ஆதல்
 – எம்.சேகர்
 (தமிழ் முரசு 24-3-2013)

அக்கா சொன்ன அந்தச் சொற்களை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். அவளால் நம்பவே முடியவில்லை. தன்னைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தும் இப்படி வார்த்தைகளைக் கொட்டி விட்டாளே!
அவள் மனம் வேதனை அலைகளுக்குள் சிக்கித் தவித்தது. விழிகளின் திரைச்சீலைகள் ஈரத்தில் நனைந்தன.
அப்படி என்ன கேட்டு விட்டேன்?
தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள்.
  லெவல் தேர்வில் நல்ல தேர்ச்சி பெறாத அக்கா மகள் துர்காவை அவள்தான் சிங்கப்பூரிலுள்ள தனியார் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறாள். இறுதி ஆண்டுத் தேர்வு கட்டணத்திற்கான பணத்தை அவளிடம் கொடுத்திருந்தாள். தன்னுடைய பிறந்த நாளுக்குத் தோழர் தோழியருக்கு டிரிட் கொடுத்து முடிந்து விட்டது என்று சொன்னபோது அவளால் அதைச் சுலபமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. மனத்தின் கனங்களோடு உடல் கனங்களையும் சுமந்து சம்பாரிச்ச காசை இப்படிச் செலவழித்துவிட்டாளே என உரிமையோடு கண்டித்தாள். அக்காவுக்குக் கோபம் வந்து விட்டது. கண்டபடி ஏசிவிட்டாள். அவளை ஏசுவதற்கும் திட்டுவதற்கும் ஏன் அடிப்பதற்கும்கூட அவள் அக்காவுக்கு எல்லா உரிமையும் உண்டு என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் சின்னப் பிள்ளை. அவள் தூக்கி வளர்த்த பிள்ளை துர்கா. அவளை வைத்து கொண்டு, அவளுக்கு முன்னால் இப்படிக் கேட்டு விட்டாளே! அதைத்தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. துர்காவிற்குப் புரிந்ததோ இல்லையோ! அப்படிப் புரிந்திருந்தால் அவளைப் பற்றி என்ன நினைப்பாள்? சிங்கப்பூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகத்தானே சொல்லியிருக்கிறாள். அக்காவுக்கு மட்டும் தெரிந்திருந்த அந்த விஷயம் இன்று துர்காவுக்கும் தெரிந்திருக்குமோ!

அவள் மனத்துக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவளுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து அவளுக்கு எல்லாம்  அக்காதான்.
அவள் பிறந்தவுடனேயே அவளின் அம்மா இறந்து விட்டாளாம். அதனால் அவளின் அப்பா அவள் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் யாரோ ஒருத்தியுடன் குடும்பம் நடத்த போய்விட்டாராம். அம்மா உயிருடன் இருக்கும் போதே  அந்தப் பெண்ணுடன் அப்பாவுக்குத் தொடர்பு இருந்ததாம். அம்மா அதனாலேயே நொந்து போய் அவளைப் பிரசவிக்கும்போது இறந்து போனாளாம். இது பின்னாளில் அவள் கேள்விப்பட்டவை.
அவள் அம்மாவின் அப்பாதான் அவளையும் அவள் அக்காவையும் தான் வாழ்ந்த கம்பத்துக்கே கூட்டி வந்து விட்டார். அக்கா வயசுக்கு வந்த பிறகு அம்மாவின் தம்பி மனோ, வீட்டில் யாருமில்லா நேரம் பார்த்து அக்கா மேல் கை வைக்க அக்கா உண்டாகிவிட்டாள். செய்தி கம்பம் முழுக்க பரவ வேறு வழியில்லாமல் மனோ அக்காவைக் கல்யாணம் செய்து கொண்டான்.
அதன் பின்தான் வாழ்க்கை மிகவும் கொடுமையானதாக மாறிப்போனது. மனோ தினமும் குடித்து விட்டு அக்காவை ஏசுவதும் அடிப்பதும் வாடிக்கையாகிப்போனது. அக்கா வாயைத் திறந்தால் மீண்டும் அடி உதை எனத் தொடரும். அக்கா வீட்டில் இல்லாத நேரங்களில் அவளை அருகில் அழைத்துத் தோளில் கை வைத்து மிகவும் அன்பாகப் பேசுவான். ஏதேச்சையாகப் பட்டதுபோல் அவன் கை அவள் உடலின் பலப் பகுதிகளில் உரசும். அக்காவிடம் சொல்லலாம் என்றால் பின் அவளுக்குத்தான் அடியும் உதையும் கிடைக்கும். அதனால் இப்படிப் பல தடவை நடந்தும் அவள் மௌனமாகவே இருந்து விட்டாள். வீட்டில் தனியாக இருக்கும் போதெல்லாம் அவளுக்கு மனோவை நினைத்தாலே பயமா இருக்கும்.
ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது அவள் மேல் ஏதோ ஊர்வது போல உணர்ந்தாள். பக்கத்தில் படுத்திருந்த ஐந்து வயது துர்காதான் தூக்கத்தில் தன் மேல் புரளுவதாக நினைத்து அணைத்த போது திடுக்கிட்டுக் கண் திறந்து  பார்த்தாள். அது மனோ.
மறுநாள் அக்காவிடம் பயத்தோடு அழுதுகொண்டே நடந்ததைச் சொன்னாள். தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு அவளைக் கட்டிப் பிடித்து அழுதாள். கதறினாள்.
யாரிடமும் சொல்லிடாதே
என சத்தியம் வாங்கிக் கொண்டு அன்றிலிருந்து தினந்தோறும் மனோ ஏதாவது பண்ணினானா என விசாரிக்க ஆரம்பித்து விட்டாள். ஒரு மாதம் ஆனது. வழக்கம் போலவே மென்ஷஸ் வந்ததும் அக்காவின் முகத்தில் ஒரு திருப்தி. அவளுக்கும் நிம்மதியாக இருந்தது.
இனியும் நீ இங்கிருக்கக்கூடாது. இந்த வீட்டிலேயே உனக்குப் பாதுகாப்பு இல்லை. நம்ம முனியம்மா பாட்டியோட பேத்தி கீதா சிங்கப்பூருல நல்ல வேலையில இருக்கா. அவகிட்ட சொல்லி உனக்கும் அங்கேயே ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்யச் சொல்றேன் என்றாள் அக்கா.
கொஞ்ச நாளைக்கு மனோ வீட்டில் இருக்கும் நேரங்களில் வெளியில் போவதை அவள் அக்கா குறைத்துக் கொண்டாள். முடிந்த வரை அக்கா அவளை, அவள் கண் பார்வையிலேயே வைத்து கொண்டாள். அவளுடன் பேசவும் அவளைத் தொடவும்  முடியாமல் போன ஏமாற்றத்தில் மனோ அவள் அக்காவை அதிகமாகவே சித்திரவதைச் செய்தான். சில சமயங்களில் அவன் புகைத்துக் கொண்டிருக்கும் சிகரெட்டுத் துண்டால் அவள் அக்காவின் உடம்பின் பல இடங்களில் சூடு வைத்தான். அவள் அக்கா அவளுக்காக அனைத்தையும் தாங்கிக்கொண்டு அவளைச் சிங்கப்பூருக்கு அனுப்புவதில் தீவிரம் காட்டினாள்.
கோலாலம்பூர் இரயில் நிலையத்தில் அக்கா அவளைக் கண்ணீர்த் துளிகளுடன் வழியனுப்பி வைத்தாள். காலையில் தஞ்சோங் பாகார் இரயில் நிலையத்தில் கீதா காத்திருந்தாள். தேபானில் உள்ள அடுக்குமாடி வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.   
வாழ்க்கையில் காசுதான் முக்கியம். காசு இருந்தால் சொந்தமும் நட்பும் தானாகவே ஓடி வரும். காசு இல்லை என்றால் ஒரு நாயும் நம்மை ஏறெடுத்தும் பார்க்காது. ஒன்னும் தெரியாத ஆளாக இருந்தாலும் காசு இருந்தால் அவனை உயர்த்திப் பேசுவாங்க இந்த மனுசங்க. நல்ல மனமிருந்தும் அறிவிருந்தும் அவங்கிட்ட காசு இல்லையென்றால் அவனைத் தாழ்த்தவும் தயங்க மாட்டாங்க இந்த மனுசங்க
இதுதான் அவளுக்குக் கீதா உபதேசித்த கீதாஉபதேசம்’.
உன்னோட அக்கா எல்லாத்தையும் சொன்னா. எவ்வளவோ கஷ்டம். நினைச்சுப் பாரு. ஒரு பெண்ணுக்கு நடக்கக் கூடாதது எல்லாம் நடந்திருக்கு. அவளோட வாழ்க்கையே சீரழிந்து போயிருக்கு. அவள் விருப்பப்படி எதுவும் நடக்கல. உனக்கும் அப்படி எதுவும் ஆகிடக்கூடாது என ரொம்ப கவலைப்படுறா. அந்தக் கம்பத்துல ஒருத்தனாவது உங்க குடும்பத்தை மதிக்கிறானா? இல்ல எவனாவது மனுச ஆளுன்னு பார்க்கிறானா? இதோ இங்க இருக்குற பொண்ணுங்க ஒவ்வொருத்தர் பின்னாடியும் ஒரு சோகக்கதை இருக்கு. பொண்ணுங்கள யாராவது பொண்ணா பார்க்குறாங்களா? ஏதோ சதைப்பிண்டமாகவும், ஆண்களோட சதை உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்குற குப்பைத் தொட்டியாகவும்தான் பார்க்குறாங்க
காதலனால், கணவனால், நம்பி வந்த நண்பர்களினால், கூட்டி வந்த உறவுக்காரர்களினால், சொந்த பெற்றோர்களினால், இப்படிப் பாதிக்கப்பட்டப் பெண்கள் நிறையப் பேர். ஒவ்வொரு பெண்ணின் சீரழிவிற்கும் பின்னாலும் ஓர் ஆணே காரணமாக இருக்கிறான். அதிகாரம், அந்தஸ்து, பணம், பலம் என எல்லாமே அவங்கக்கிட்ட இருக்கு. திருட்டுத் தனமாக நம்மை அணுஅணுவாக ரசிக்கும் குணம் அவனுங்கக்கிட்ட நிறையவே இருக்கு. ஒரு வண்டு போல எல்லாப் பூக்களிலும் தேன் உறிஞ்ச அலைவானுங்க. அதற்காக பேசாமல் இருந்து விட முடியுமா? காட்டணும். எதையாவது செய்து காட்டணும். அதற்கு நமக்குத் தேவை பணம். அதை அவனுங்கக்கிட்ட இருந்தே கொள்ளையடிக்க வேண்டும். இந்தக் கொள்ளை வேறு. அவனுங்களே நம்பளத் தேடிவந்து கொட்டுவானுங்க. அந்த வழிய நான் உனக்குக் காட்டுறேன். நீ எதற்கும் கவலைப்படாதே! இன்னும் ஒரே வருசத்துல உங்க அக்காவ அந்த நரகத்திலிருந்து காப்பாற்றி ஜோகூர் பாரு பக்கம் கொண்டாந்திருவோம்.
கீதா அவளுக்குப் போதித்த முதல் பாடம் இது. கீதா சொன்னது அவளுக்குச் சரியென்றுதான் தோன்றியது. ஆண்கள் சுயநலவாதிகள்தான். எந்த நிறுவனத்திலாவது ஆண் ரிசப்ஷனிஸ்ட், ஆண் செக்ரட்ரி இருக்கிறார்களா? இல்லை எந்த மருத்துவமனையிலாவது ஆண் நர்சுகள் இருக்காறார்களா? அவர்களுக்கு முன் கண்ணுக்குக் குளிர்ச்சியாக எந்நேரமும் பெண்கள் இருக்க வேண்டும். அதற்காகத்தான் ஆரம்பம் தொட்டே இப்படியெல்லாம் வகுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்குச் சாதகமாக சட்டங்களையும் தத்துவங்களையும் புகுத்திவிட்டு, இன்று பெண்ணியம் பற்றி மணிக்கணக்கில் மேடைகளில் பேசியும் எழுதியும் வருகின்றனர். இப்போது நடப்பில் இருக்கக்கூடிய கருத்துகளோ நீதிகளோ எதை எடுத்துக் கொண்டாலும் அவை அனைத்தும் ஓர் ஆணைப் பொருத்துதான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, பெண்ணுக்காகச் சொல்லப்படவில்லை என்பது நிச்சயம்.
இந்த உலகில் ஆணும் பெண்ணும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக இயைந்து வாழ்வதற்கே படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பெண்ணுக்கு மட்டும் உயிரை விட மேலாக கற்பு இருக்க வேண்டும், கணவனுக்கு எப்போதும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற போக்கில்தான் இன்றளவும் உலகத்தின் பார்வைகள்  இயங்கிக் கொண்டிருக்கின்றன. திருக்குறளில் கூட வாழ்க்கை துணை நலம் என்ற அதிகாரத்தில் அனைத்தும் பெண்ணுக்காகவே சொல்லப்பட்டிருக்கிறது. வாழ்க்கை துணை பொதுவான ஒன்று. ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமாகச் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் அப்படிச் சொல்லப்படவில்லை. இதைப் பார்க்கின்றபோது வள்ளுவர் கூட பெண்ணை ஆணுக்குத் துணையாகத்தான் சொல்லியிருக்கிறாரே தவிர பெண்ணைத் தனித்தன்மையாக மதித்ததாகத் தெரியவில்லை.
அவள் அக்காவைப் போல் எத்தனையோ பெண்கள் தங்களுக்கு விருப்பமில்லாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பெண்களுக்கும் மனம் இருக்கு, அதில் ஆசைகள் இருக்கு என்பதை யாரும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அனைத்தும் ஆணுக்குச் சாதகமாகவே வகுக்கப்பட்ட வாழ்க்கை நியதிகள். இந்த நிலை மாறவேண்டும் என்றால் பெண்கள் கையில் அதிகாரம் வர வேண்டும். பெண்களிடம் பணம் இருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் கீதாவுடன் அவளும் இணைந்து கொண்டாள். பிரசித்திப் பெற்ற ஓர் உடம்பு பிடி நிலையத்தில் வேலை. பணம் படைத்தவர்கள் மட்டும் வந்து போகும் இடம். உடம்பு பிடித்து விட வேண்டும். வாடிக்கையாளர்களை மகிழ்விக்கவேண்டும். தொடக்கத்தில் மனத்துக்கும் உடம்புக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் பணத்தைப் பார்க்கும் போதெல்லாம் வேதனைகள் மறைந்து பின் அதுவே பழகிப்போனது. ஓய்வுநேரங்களில் நிறைய புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தாள். கற்பு மனசுக்குத்தான். உடலுக்கல்ல என தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாள்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
என்ற குறள் வரிகளுக்கேற்ப ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்கவேண்டும். அதுதான் அறம். மனத்தூய்மை இல்லாத மற்றவை அனைத்தும் வார்த்தை நடிப்பும் வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படுபவையேயாகும். உடம்பு கெட்டால் சுத்தப் படுத்திக் கொள்ளலாம். மனம் கெட்டால் வாழ்க்கையே இங்கு தொலைந்து போய்விடுமே என உணர்ந்து தெளிவு கொண்டாள்.
அவள் நினைத்ததை விட சீக்கிரத்திலேயே கீதாவின் உதவியோடு அவள் அக்காவையும் ஐந்து குழந்தைகளையும் ஜோகூர் பாருக்கு அருகில் இருக்கும் தாமான் ஸ்கூடாய் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைத்தாள். தங்கள் குடும்பத்தின் அடுத்த தலைமுறைப் பிள்ளைகள் கல்வியில் சிறக்க வேண்டும் என்ற நோக்கில் மூத்த மகள் துர்காவை சிங்கப்பூர் பள்ளியொன்றில் சேர்த்து விட்டாள். ஜோகூரிலிருந்து சிங்கப்பூர் சென்று கல்வி கற்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களில் துர்காவும் இணைந்து கொண்டாள்.

அம்மா
துர்காவின் குரல்.
சின்ன வயதிலிருந்து அவள் அப்படித்தான் அவளைக் கூப்பிடுவாள். கண்களைத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்து விட்டாள்.
என்னை மன்னிச்சிடு, இனிமே இப்படி அநாவசியமா செலவு பண்ண மாட்டேன்
என அவள் மடியில் தலைவைத்து அழுதபடியே கூறினாள். கலைந்திருந்த அவள் தலைமுடியைக் விரல்களால் கோதிவிட்டு, ஹெண்ட் பேக்கிலிருந்து ஆயிரம் சிங்கப்பூர் டோலரை எடுத்த துர்காவிடம் கொடுத்தாள். பணத்தை வாங்கிக்கொண்ட துர்கா,
அம்மா ஏன் முதல்ல அப்படிச் சொன்னாங்க?’
உங்க அம்மாவுக்குக் கோபம், உன்னை ஏசிட்டேனு
அதுக்காக ஏன் அப்படி சொல்லனும், நீ என்ன வேல செய்யிற?’
துர்கா, இங்கப் பாரும்மா, அதப்பத்தியெல்லாம் நீ யோசிக்கதம்மா, உன்னோட கவனம் படிப்பில மட்டும்தான் இருக்கனும், நம்ப மாதிரி குடும்பங்கள் எல்லாம் வருங்காலத்துல நல்ல நிலையில வாழனும்னா உங்க மாதிரி பிள்ளைகள் நல்லா படிக்கனும்மா, கல்வி மட்டும்தான் இப்போதைக்கு நம் சமூகத்துக்கு விடிவெள்ளி, நாங்க படுற கஷ்டம் உங்களுக்கு வேணாம்மா
எனக்குத் தெரியும்மா, அம்மாவுக்கும் உடம்பு சரியில்லை, அப்பாவும் இல்ல, எங்களுக்கா நீ இரவு பகலு பார்க்காம வேல செய்யிறனு, நாங்க நல்லா இருக்கனும்னுதானே நீ இவ்வள கஷ்டப்படுற, படிப்பேம்மா, நல்லா படிப்பேம்மா, ஒரு நாளைக்கு நீ ஆசைப்பட்ட மாதிரியே ஒரு வக்கீலா வருவேம்மா. நம்ப குடும்பத்தை நான் மேல் நிலைக்கு கொண்டு வருவேம்மா. ஒரு நாளைக்கு இந்த சமூகத்துல நாமும் தலை நிமிர்ந்து வாழும் காலம் வரும்மா
அவள் துர்காவின் கன்னத்தில் முத்தமிட்டாள். விழிகளின் ஈரங்கள் சங்கமித்துக்கொண்டன.
பிரியா என்னை மன்னிச்சிடும்மா, நான் அப்படி சொல்லியிருக்கக்கூடாது, தப்புப் பண்ணிட்டேன், பெரிய தப்புப் பண்ணிட்டேன், என்னை மன்னிச்சிடும்மா
அக்கா கதவருகில் நின்றாள். அவளைப்போய் கட்டிக்கொண்டாள். 


_________________ முற்றும் ___________________________________________________

வியாழன், 17 ஜனவரி, 2013

தீர்த்தக்கரையும் திரைகடலோடிகளும் - பொன்.சசிதரன்

சமிக்ஞை விளக்குகள் – சாட்டை (ஒரு விமர்சனப் பார்வை)

கணவனை ஒரு விபத்தில் இழந்த தங்கை வேறு ஒருவனுடன் ஓடிப்போய்விடுகிறாள். அவளின் இரு பிள்ளைகளையும் அக்கா மரிக்கொழுந்து வளர்த்து வருகிறாள். பள்ளிக்கூடம் போக வேண்டிய பிள்ளைகளை அவளின் குடிகாரக் கணவன் தன் வேலைக்கு வைத்துக்கொள்கிறான். மரிக்கொழுந்து அப்பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியோடு அப்பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க ஏற்பாடுகளைச் செய்கின்றாள். பள்ளியில் இடம் கிடைத்துவிட்டது. கூடிய விரைவில் பிறப்புப் பத்திரமும் கிடைத்துவிடும். ஆனால் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப அவள் கணவன் மறுக்கிறான். தன் கணவனை எதிர்த்து அவளால் எதுவும் செய்ய இயலாத நிலை. வேறுவழியில்லாமல் பிள்ளைகள் அவள் கணவனின் வேலையைத் தொடர்கின்றனர்.
கதையின் சுருக்கம் இதுதான். கதையின் முடிவில் நம் முதுகிலும் விழுகின்றன சாட்டையடிகள் இப்படி.
1.   கணவன் இறந்த பிறகு தன் பிள்ளைகளை விட்டு விட்டு வேறொரு ஆடவனுடன்  ஒடிப்போகும் பெண். (தாய்மை இங்கே கேள்விக்குறியாய் வளைந்து போகிறது)
2.   பிள்ளைகளுக்குப் பிறப்புப் பத்திரம் எடுக்க எண்ணாதப் பெற்றோரின் மனப்போக்கு. (சுதந்திரம் பெற்று ஐம்பது ஆண்டுகள் மேலான போதிலும் விழிப்பு ஏனோ நம்மிடம் இல்லை)
3.   பள்ளிக்குச் செல்லவேண்டிய வயதில் சிறார்கள் வேலைக்குச் செல்லும் நிலை. (சிறார் தொழில் வதை)
4.   கணவனை எதிர்த்து எதுவும் செய்ய இயலாத மனைவியின் இயலாமை (ஆணாதிக்கச் சமூகம் - பெண்ணடிமை)
5.   இத்தலைமுறை செய்யும் தவறுகளுக்கு அடுத்தத் தலைமுறை பலியாகிப்போகும் அவலம். (தொடரும் சமூகக் கொடுமைகள்)
இப்படி எல்லாமே முரணாகச் செல்லும் கதைப்போக்கில் ஆறுதலாக வருகிறார் நாடாளுமன்ற உறுப்பினர். அவரை அடுத்து கதையின் தலைப்பு நமக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டும் சிறந்த ஒரு படிமமாகவும் அமைகிறது.
சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் நிகழ்வுகள் அழகிய நாடகக் காட்சிகளை நினைவுப்படுத்தும். அப்பாடல்களில் நேரடியான நீதி போதனைகள் இடம் பெறாது. இருப்பினும் வாழ்வின் அடிப்படை உணர்வுகளை அப்பாடல்கள் மிக அற்புதமாக வெளிப்படுத்தும். வாசகனின் விழிகளுக்கு எழுத்தைத் தவிர வேறெதையும் காட்டாமல், மூடுபனி பாலுமகேந்திராவின் கேமராவைப்போல் தான் வாழும் சமூகத்து  வாழ்க்கையின் பகுதிகளினூடே தெறிக்கும் உக்கிரத்தைப் படம் பிடித்துக் காட்டுவதென்பது எளிதான காரியமல்ல. இதில் இச்சிறுகதை வெற்றிப் பெற்றிருக்கிறது.
எந்தவித வெளிப்பூச்சுகளும் இல்லாத, பின்னிப் பின்னி சொல்லப்பட்ட செய்திகள், வர்ணனைகள், அதிகப்படியான கற்பனைகள் எதுவுமில்லாமல் மிகவும் எளிமையாக கதை சொல்லப்பட்டிருக்கும் பாணி பாராட்டக்கூடியது. ஒரு குறும்படத்திற்குரிய திரைக்கதை அமைப்போடு படைக்கப்பட்டிருக்கும் இச்சிறுகதை, படைப்பாளியை ஒரு சிறந்த கதைச்சொல்லியாகவும் அடையாளம் காட்டுகிறது.
கதையில் சமூக அக்கறையைக் காணமுடிகிறது. மொழியின் கூர்மையையும் அழகையும் காணமுடிகிறது. நாம் வாழும் சமூகத்தின் வாழ்வியல் கூறுகளை மிகுந்த ரசனையுடனும் மிகையற்ற நெகிழ்ச்சியுடனும் இக்கதை கூறுகிறது. மிகவும் கச்சிதமான வடிவம் கொண்ட சிறுகதைக்கான உதாரணமாக இக்கதையைக் கூறலாம்.
வெளியில், வீட்டு முகப்பில் விளையாடிக்கொண்டிருந்த மரிக்கொழுந்துவின் பிள்ளைகள் சரசு, ஜீவா, அமுதா மூவரின் முன்னால் ஓடிப்போய் நின்றாள். அவர்களிடம் சொல்ல அவள் மனம் துடித்தது என படைப்பாளன் நின்று விடுகிறான்.  ஆனால் வாசகனிடத்தில் அக்காட்சி பரந்து விரிகிறது. பாருவின் மகிழ்வில் வாசகனாலும் பங்குகொள்ள முடியும் பட்சத்தில் படைப்பாளன் இங்கே வெற்றிப்பெறுகிறான்.
இப்படி முடிகிறது கதை.
சிவா புரியாமல் பாருவைப் பார்த்தான். பாருவின் முகத்தில் அந்த எதிர்ப்பார்ப்பு இன்னும் இருப்பது தெரிந்தது.
நமக்கும்தான். 
அன்புடன்
எம்.சேகர்
(நண்பர் பொன்.சசிதரன் அடுத்த மாதம் வெளியிடவுள்ள தீர்த்தக்கரையும் திரைகடலோடிகளும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறவுள்ள என் விமர்சனப் பார்வை)

புதிய கதைக்களத்தில் அதிபதி

புதிய கதைக்களத்தில் அதிபதி

( சிங்கப்பூர் மேடை நாடகம்)


 இதுவரை சிங்கப்பூர் மேடை நாடக வரலாற்றில் யாரும் எடுத்துக் கொள்ளாத கதைக்களத்தில், உணர்ச்சிகளின் ஊர்வலமாக வலம் வரவிருக்கிறது அதிபதி.

யார் அந்த அதிபதி?

எதற்கு அதிபதி?

 நகைச்சுவை கலந்த வசனங்களுடனும் ஆடல் பாடல்களுடனும் வாழ்வின் விழுமியங்களை முன்னிலைப்படுத்தி நடிக்கப்படும் ஒரு மேடை நாடகம். அறிவியல் அணுகுமுறையில் நம் மனத்தோடு உறவாடி சிந்தனைகளைச் சீர்படுத்த வருகிறது. நான் பேசுவதைவிட இந்நாடகக்குழுவில் சம்பந்தப்பட்டவர்கள், இரவும் பகலும் பாராமல் உழைத்துக் கொண்டிருப்பவர்கள் தங்களின் கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.

 திரு. கோபு (ரவீந்திரன் நாடகக் குழுவின் நிர்வாக உரிமையாளர்)

 15 வருடத்திற்கு முன்பு குறிப்பிட்ட பார்வையாளர்களின் முன் மேடையேற்றப்பட்ட நகைச்சுவை நாடகம் இப்போது மெருகேற்றப்பட்டு எல்லாரிடமும் போய்ச் சேரவேண்டும் மற்றும் உலக தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் அதிகப் பொருட்செலவில் மீண்டும் மேடையேறுகிறது. இதற்காக மிகவும் உழைத்திருக்கிறார் இந்நாடகத்தின் இயக்குநர் இரா. புகழேந்தி. தமிழ் நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்திட நல்ல அணுகுமுறை மிகவும் அவசியம் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். சிங்கப்பூரில் உள்ள இயக்கங்களோடு இயக்குநரின் சிறப்பான அணுகுமுறை எங்களுக்கும் மற்ற நாடகக் குழுக்களுக்கும் சிறந்ததொரு தன்னம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் அளித்துள்ளது.

அனைத்து மாணவர்களும் இந்நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் $5000.00 வெள்ளி மதிப்புள்ள நுழைவுச்சீட்டுகளைச் சிண்டாவிடம் கொடுத்திருக்கிறோம். மேலும் மாணவர்கள் எந்த கட்டணமும் செலுத்தாமல் நாடகத்தைக் காண சிண்டாவின் மூலமாகவும் பள்ளிகளின் மூலமாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய சீமேய் தொழிற்நுட்பக்கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் இந்நாடகம் ஐந்து காட்சிகளாக நடைபெறவுள்ளது. ஒவ்வொரு காட்சியையும் ஆயிரம் பேர் பார்க்கும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு விக்டோரியா அரங்கில் கலைஞர் சங்கம் ஒரு காட்சிக்கு ஆயிரம் பேரைக் கூட்டியது. அதனை அடுத்து இந்த அதிபதிக்குத்தான் ஐயாயிரம் பேர் பார்க்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நாடக வரலாற்றில் இது ஒரு மாபெரும் சாதனையாகும். நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய ஒரு சாதனையாகும்.

 ரவீந்திரன் நாடகக்குழுவில் உள்ள நாங்களும் புகழேந்தியின் குழுவில் உள்ளவர்களும் இணைந்து செயல்பட்டு இந்நாடகத்தை வெற்றிபெறச் செய்துள்ளோம். அறிவியல் நோக்கில் கதாபாத்திரங்களை உருவாக்கி, வடிவமைத்து, ஒலி, ஒளி அமைப்போடும் பெங்களூரில் வடிவமைக்கப்பட்ட ஆடை அலங்காரங்களுடன் வரும் அதிபதியைப் பார்க்கும் போது எங்களுக்கு முழுமையான மனத் திருப்தியாக இருக்கிறது.

இரா. புகழேந்தி (அதிபதி இயக்குநர்)

 தமிழ் மொழி சிங்கப்பூரின் ஆட்சி மொழியாக இருக்கிறது. ஆனால் இதுவரையில் எக்ஸ்பிளனேட்டில் இன்னும் ஒரு தமிழ் நாடகம் கூட படைக்க நம்மால் இயலவில்லை. உலகத்தரத்திற்கு ஒரு தமிழ் நாடகம், சிங்கப்பூர் மக்களுக்காகக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு தமிழ் நாடகமும் இல்லை எனலாம். பெரும்பாலும் இந்தக் கோழி முட்டை கதை போலத்தான். நல்ல நாடகம் போட்டா ஆட்கள் வரமாட்டாங்க. அப்படியே வந்தாலும் கூத்தும் கும்மாளத்திற்கும்தான் வருவாங்கணு நிறைய பேர் கூறுகிறார்கள். இந்த ஒரு வாதத்தை முறியடிக்க ஏதாவது செய்ய வேண்டும் என ஆரம்பித்தோம். ஐயாயிரம் பேரை ஒரு நாடகத்திற்கு வரவழைத்தல் என உழைத்தோம். அதன் பயன்தான் சீமேய் தொழிற்நுட்பக்கல்லூரியின் இந்தியர் நடனக் குழுவும், ரவீந்திரன் நாடகக்குழுவும் எங்களோடு கை கோர்த்து இந்த அதிபதியை உங்கள் முன் அரங்கேற்றுகிறது.

 பதினைந்து வருடங்களுக்கு முன் வெற்றிப்பெற்ற ஒரு மேடை நாடகம், சிங்கை வானொலியில் ரே. சோமசுந்தரம் அவர்களால் மறுவாழ்வு பெற்ற ஒரு நாடகம், மீண்டும் உங்கள் முன் புதிய பரிமாணத்துடன் படைக்கப்படவிருக்கிறது. உலகத்தோடு ஒட்ட ஒழுகப் பல கற்றும் கல்லார் அறிவிலாதார் என்பதுபோல இக்கால இளையர்களுக்குத் தேவையான கருத்தை அவர்களுக்குப் பிடித்த வகையில் சொல்லப்படும்போது கருத்துகள் போய்ச்சேரும். நம் பண்பாடும் கலாச்சாரமும் காப்பாற்றப்படும். நம் மொழியின் பயன்பாடும் மேன்மையடையும்.

கதைச்சுருக்கம் இதுதான். மூளையில் ஒரு நாற்காலி. எந்த உணர்ச்சி அங்கே உட்காருகிறதோ அதுதான் அதிபதி. எந்த உணர்ச்சி உட்கார்ந்தால் நாம் வாழ்க்கையின் வெற்றி பெறலாம். இளைஞராகவும் வாலிபராகவும் முதியவராகவும் பெற்றோர்களாகவும் என்பதை எல்லா உணர்ச்சிகளும் பேசுகின்றன; ஆடுகின்றன; பாடுகின்றன நகைச்சுவையாக.

சென்ற தடவை ஒரு குழுவால் மட்டும் நடிக்கப்பட்ட இந்நாடகம் இம்முறை இரண்டு குழுக்களால் நடிக்கப்படுகிறது. ஆண் DNA (மரபணு)  எனவும், பெண் DNA எனவும் இரண்டு கதாபாத்திரங்களோடு உணர்ச்சிகளின் பாய்ச்சல் புது வடிவமாகி, புதுமையாக, புதிய பரிமாணத்தோடு, புதிய பிம்பத்தை, ஒரு பிரமிப்பை தோற்றுவிக்கிறது.

உலகத் தரத்தில் நடிகர்களை எங்கே தேடுவது? இங்குள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து 300 மணி நேரப் பயிற்சி கொடுத்து, சுவா சூ காங் பார்க்கில் சீனர்கள் மத்தியில் வசனம் பேசி, டேபள் ரீடிங் செய்து, கிடைத்த வைரங்களைப் பட்டைத் தீட்டியிருக்கிறோம். நடிப்பு, ஆடல், பாடல் என ரசிக்க வைக்கும் இந்நடிகர்கள் பாராட்டுக்குரியவர்கள். சிங்கப்பூரின் நாடகக் கலையை அடுத்த நிலைக்கு நகர்த்திச் சென்று சாதனைப் படைக்கக்கூடியவர்கள்.

 சிங்கப்பூர் குடும்பச்சூழலில் பெற்றோர்களும் பிள்ளைகளும் உட்கார்ந்து பேசுவதற்குக்கூட நேரமில்லாமல் எதை எதையோ நோக்கி ஒடிக்கொண்டிருக்கின்றனர். நகைச்சுவைத் தன்மையுடன் கூடிய இந்நாடகத்தைப் பெற்றோர்களும் பிள்ளைகளும் சேர்ந்து பார்க்கும்போது அவர்கள் சேர்ந்து சிரிப்பார்கள், வீட்டிற்குச் சென்ற பிறகும்கூட இந்நாடகத்தைப் பற்றிப் பேசி சிரிப்பார்கள். இதனால் அவர்களுக்குள்ளே ஒரு இணக்கப் போக்கும் குடும்ப உறவில் நெருக்கமும் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன. இதையெல்லாம் மனத்தில் வைத்துதான் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் இந்நாடகத்தைப் பார்க்க வாய்ப்புகளையும் வழங்கியுள்ளோம்.

பேசும் கதாபாத்திரங்கள்

 எஸ். விக்னேஸ்வரன் (ஆண் DNA - மரபணு)

மனிதர்களுக்குப் பல உணர்ச்சிகள் இருக்கின்றன. DNA பணி என்னவென்றால் எந்த உணர்ச்சி மனிதனை ஆதிக்கம் செலுத்தினால் அம்மனிதன் வாழ்வில் வெற்றியடைய முடியும் என ஆராய்ந்து அந்த உணர்ச்சியைத் தேர்ந்தெடுப்பதாகும். இந்தக் கதாபாத்திரம் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கிறது. அனைத்து உணர்ச்சிகளுக்கு ஏற்பவும் நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

 சிரிப்பு மனத்துக்கு மருந்து என்பார்கள். நாங்களும் நகைச்சுவையோடு நல்ல கருத்துகளை மாணவர்களுக்குப் பொதுவாக அனைவருக்கும் முன் வைக்கிறோம். நகைச்சுவையோடு ஒரு கருத்தைச் சொல்லும்போது அது பார்ப்பவர்களின் மனத்தில் ஆழமாகப் பதியும் என நாங்கள் நம்புகிறோம்.

அருணா (பெண் DNA - மரபணு)

 DNA என்பது எந்த உணர்ச்சிகளுக்கும் கட்டுப்படாதது. நடுநிலையானது. அது ஒவ்வொரு உணர்ச்சிகளையும் உணர்ந்து பார்த்து மனிதனுக்குத் தேவையான உணர்ச்சியைத் தேர்ந்தெடுத்து மூளையின் சிம்மாசனத்தில் அதிபதியாக அமர வைக்கிறது. ஒவ்வோரு உணர்ச்சிகளின் தாக்கங்களின் போதும் மாறுபட்டு நடிப்பது மிகவும் சவாலாக இருக்கிறது.

 நாம் எப்போதும் ஏதாவது ஒரு உணர்ச்சியின் கட்டுப்பாட்டில் இருப்போம். இந்நாடகத்தில் சில சமயங்களில் DNA எந்த உணர்ச்சிகளையும் காட்டது வெறுமனே நிற்க வேண்டும். எந்த உணர்ச்சிகளாலும் தாக்கப்படாமல் நடிப்பது என்பதுதான் மிகவும் சவாலாக இருக்கிறது.

 வீட்டில் பிள்ளைகளுடன் பேசுவதற்குக்கூட பெற்றோர்களுக்கு இப்போதெல்லாம் நேரம் இருப்பதில்லை. எங்கே பிள்ளைகளுடன் இவர்கள் சேர்ந்து சிரிப்பது? இந்த நாடகத்தைப் பார்க்கும் போது சில விஷயங்கள் அவர்களுக்கும் புரியும். கண்ணுக்கம் சிந்தனைக்கும் உணர்ச்சிக்கும் நல்லதொரு விருந்து இந்நாடகம்.

 விக்னேஸ் கே. பாலன் (சோகம்)

சோகத்தைப் பிரதிபலிப்பது மிகவும் கடினமானது. அதுவும் சோகத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்துவது என்பது எனக்கும் சவாலாகத்தான் இருக்கிறது. இந்தச் சோகம் என்பது காதல் சோகம் அல்ல. தேர்வுத் தோல்வியின் சோகமும் அல்ல. வாழ்க்கையே மூழ்கிவிட்ட ஒரு சோகம். அதன் பிரதிபலிப்பு. ஆரம்பத்தில் வசனங்களில் கவனம் செலுத்தினேன். பின் உணர்ச்சிகளுக்கேற்ப பாவங்களை எப்படி வெளிக்கொணர்வது என இயக்குநர் கற்றுத்தர என்னை நான் அதற்கேற்பத்தயார் படுத்திக் கொண்டுள்ளேன்.

தவநேசன் (சோகம்)

சோகத்தைவிட நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து என் கதாபாத்திரத்தை மெருகேற்றியுள்ளேன். என் முதல் மேடை நாடகம் இது. முதல் நாடகத்திலேயே ஆயிரம் பேர் முன்னிலையில் நடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அதற்காக நிறைய திரைப்படக் காட்சிகளைப் பார்த்து உடல் பாவனை போன்றவற்றை என் மனத்தில் நிறுத்தி நடித்துள்ளேன். சோகம் மனித வாழ்விற்குத் தேவை என வாதிடுவது எனது வேலை. அதை இயக்கநரின் வழிக்காட்டுதலோடு சிறப்பாகச் செய்திருக்கிறேன் என நம்புகிறேன்.

 ஜெட் செந்தில் ஜீவராஜ் (கோபம்)

ஒவ்வொரு வயதினருக்கு ஏற்ப கோபம் வேறுபடும். கோபம் வரக்கூடாது என நாம் கட்டுப்பாடாக இருந்தாலும் சில சமயங்களில் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். என் வாழ்க்கையில் ஏற்பட்ட கோபங்களை எனக்குள்ளே தேடித்தேடி அதை வெவ்வேறு பரிமாணங்களில் காட்ட முயன்றுள்ளேன். இயக்குநரின் வழிகாட்டுதலில் நிறைய பயிற்சிகள் மேற்கொண்டு ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டுள்ளேன். கோபத்தையும் நகைச்சுவையாகக் காட்ட வேண்டும் என்பது மிகவும் சிரமமான ஒரு பணியாகும். நமது கல்வியமைச்சின் Holistic Character Development என்பதற்கேற்ப சொல்லப்பட்டிருக்கும் இந்நாடகத்தில் நானும் நடிக்கிறேன் என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது.

 நவீன்நேசன் (அன்பு)

ஒரு மாபெரும் தயாரிப்பில் என் முதல் அனுபவம். ஆரம்பத்தில் வேறுபல கதாபாத்திரங்களில் முயற்சித்த நான் இறுதியில் அன்பே சிவம் என சரணாகதியாகிவிட்டேன். அன்புதான் உலகை நல்வழிப்படுத்தும். அறிவியல் அணுகுமுறையில் உணர்ச்சிகள் உங்களோடு உரையாட வருகின்றன. நகைச்சுவையை அதிகமாகக் வெளிக்காட்ட முடியாத ஒரு நிலை என் கதாபாத்திரத்திற்கு உண்டு.

 டனராம் (பயம்)

எனக்குள் இருக்கும் பயத்தை நினைத்துக் கொண்டு, அதை வெளிக்கொணர இயக்குநர் எனக்குக் கற்றுக் கொடுத்தார். மற்ற உணர்ச்சிகளோடு நடிப்பது, நடனமாடுவது வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கிறது. இந்நாடகத்தில் நடித்த பிறகுதான் என்னையே நான் முழுமையாக அறிந்து கொண்டேன். இந்நாடகத்தைப் பார்க்கும் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அந்த வாய்ப்பு ஏற்படும் என்று நிச்சயமாகக் கூறுவேன்.

பிருந்தா (காமம்)

 காமம் என்பது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஒன்று. ஆனால் யாரும் அதைப்பற்றி அதிகமாகப் பேசுவதில்ல. இதை உணர்ச்சிப்பூர்வமாக நடிப்பில் காட்டுவதென்பது சிரமமான ஒன்றுதான். இயக்குநரின் ஆலோசனைகளும் வழிகாட்டதலும், பெற்றோரின் ஆதரவும் எனக்குச் சிறந்த ஒரு ஊக்குவிப்பாக இருக்கிறது. மற்ற உணர்ச்சிகளைப் போல் இதுவும் மனிதனுக்குத் தேவையான ஒன்றுதான். ஆனால் அந்தத் தேவை எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதுதான் இங்கு முக்கியமாகக் கருத்தில் கொள்ளல் வேண்டும். காமம் நகைச்சுவையோடு கலந்து அன்பைக் காட்டும். அதை யாராலும் எளிதில் வெறுக்க முடியாது.

புவனேஸ் (பேராசை)

 ஆசை மனிதனை ஆட்டிப்படைக்கும் ஒன்று. ஆசையில்லாத மனிதனே இல்லை எனலாம். ஆனால் மனிதர்கள் பெரும்பாலான தங்களின் ஆசைகளை யாரிடமும் சொல்வதில்லை. இந்தக் கதாபாத்திரம் மனிதனின் மனசுக்குள் இருப்பதை வெளிப்படுத்தும். நிறையப் பயிற்சிகள். விலையுயர்ந்த கடைகளுக்கெல்லாம் சென்று, அங்கு பொருட்கள் வாங்க வருபவர்களின் உடல் பாவனைகளைக் கவனித்து அதை என் கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தியுள்ளேன். அனைத்துக்கும் ஆசைபடு. ஆனால் அது பேராசையாக இருக்கக்கூடாது என்பதை இந்நாடகம் ஒரு விஞ்ஞானப் பார்வையோடு நமக்குக் காட்டுகிறது.


 பதினைந்து வருடங்களுக்கு முன் நடிக்கப்பட்ட ஒரு நாடகம் இன்றும் நமக்குப் பொருந்துகிறது. நாளையும் பொருந்தும். மனித விழுமியங்கள் என்றும் எங்கும் எப்போதும் ஒன்றுதான். மாற்றங்கள் மனிதனிடம்தான். விழுமியங்களில் அல்ல.

- சந்திப்பும் செய்திகளும் எம்.சேகர்