மனத்துக்கண் மாசிலன் ஆதல்
– எம்.சேகர்
(தமிழ் முரசு 24-3-2013)
(தமிழ் முரசு 24-3-2013)
அக்கா சொன்ன அந்தச் சொற்களை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். அவளால் நம்பவே முடியவில்லை. தன்னைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தும் இப்படி வார்த்தைகளைக் கொட்டி விட்டாளே!
அவள் மனம் வேதனை அலைகளுக்குள் சிக்கித் தவித்தது. விழிகளின் திரைச்சீலைகள் ஈரத்தில் நனைந்தன.
அப்படி என்ன கேட்டு விட்டேன்?
தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள்.
‘ஏ’ லெவல் தேர்வில் நல்ல தேர்ச்சி பெறாத அக்கா மகள் துர்காவை அவள்தான் சிங்கப்பூரிலுள்ள தனியார் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறாள். இறுதி ஆண்டுத் தேர்வு கட்டணத்திற்கான பணத்தை அவளிடம் கொடுத்திருந்தாள். தன்னுடைய பிறந்த நாளுக்குத் தோழர் தோழியருக்கு ‘டிரிட்’ கொடுத்து முடிந்து விட்டது என்று சொன்னபோது அவளால் அதைச் சுலபமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. மனத்தின் கனங்களோடு உடல் கனங்களையும் சுமந்து சம்பாரிச்ச காசை இப்படிச் செலவழித்துவிட்டாளே என உரிமையோடு கண்டித்தாள். அக்காவுக்குக் கோபம் வந்து விட்டது. கண்டபடி ஏசிவிட்டாள். அவளை ஏசுவதற்கும் திட்டுவதற்கும் ஏன் அடிப்பதற்கும்கூட அவள் அக்காவுக்கு எல்லா உரிமையும் உண்டு என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் சின்னப் பிள்ளை. அவள் தூக்கி வளர்த்த பிள்ளை துர்கா. அவளை வைத்து கொண்டு, அவளுக்கு முன்னால் இப்படிக் கேட்டு விட்டாளே! அதைத்தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. துர்காவிற்குப் புரிந்ததோ இல்லையோ! அப்படிப் புரிந்திருந்தால் அவளைப் பற்றி என்ன நினைப்பாள்? சிங்கப்பூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகத்தானே சொல்லியிருக்கிறாள். அக்காவுக்கு மட்டும் தெரிந்திருந்த அந்த விஷயம் இன்று துர்காவுக்கும் தெரிந்திருக்குமோ!
அவள் மனத்துக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவளுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து அவளுக்கு எல்லாம் அக்காதான்.
அவள் பிறந்தவுடனேயே அவளின் அம்மா இறந்து விட்டாளாம். அதனால் அவளின் அப்பா அவள் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் யாரோ ஒருத்தியுடன் குடும்பம் நடத்த போய்விட்டாராம். அம்மா உயிருடன் இருக்கும் போதே அந்தப் பெண்ணுடன் அப்பாவுக்குத் தொடர்பு இருந்ததாம். அம்மா அதனாலேயே நொந்து போய் அவளைப் பிரசவிக்கும்போது இறந்து போனாளாம். இது பின்னாளில் அவள் கேள்விப்பட்டவை.
அவள் அம்மாவின் அப்பாதான் அவளையும் அவள் அக்காவையும் தான் வாழ்ந்த கம்பத்துக்கே கூட்டி வந்து விட்டார். அக்கா வயசுக்கு வந்த பிறகு அம்மாவின் தம்பி மனோ, வீட்டில் யாருமில்லா நேரம் பார்த்து அக்கா மேல் கை வைக்க அக்கா உண்டாகிவிட்டாள். செய்தி கம்பம் முழுக்க பரவ வேறு வழியில்லாமல் மனோ அக்காவைக் கல்யாணம் செய்து கொண்டான்.
அதன் பின்தான் வாழ்க்கை மிகவும் கொடுமையானதாக மாறிப்போனது. மனோ தினமும் குடித்து விட்டு அக்காவை ஏசுவதும் அடிப்பதும் வாடிக்கையாகிப்போனது. அக்கா வாயைத் திறந்தால் மீண்டும் அடி உதை எனத் தொடரும். அக்கா வீட்டில் இல்லாத நேரங்களில் அவளை அருகில் அழைத்துத் தோளில் கை வைத்து மிகவும் அன்பாகப் பேசுவான். ஏதேச்சையாகப் பட்டதுபோல் அவன் கை அவள் உடலின் பலப் பகுதிகளில் உரசும். அக்காவிடம் சொல்லலாம் என்றால் பின் அவளுக்குத்தான் அடியும் உதையும் கிடைக்கும். அதனால் இப்படிப் பல தடவை நடந்தும் அவள் மௌனமாகவே இருந்து விட்டாள். வீட்டில் தனியாக இருக்கும் போதெல்லாம் அவளுக்கு மனோவை நினைத்தாலே பயமா இருக்கும்.
ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது அவள் மேல் ஏதோ ஊர்வது போல உணர்ந்தாள். பக்கத்தில் படுத்திருந்த ஐந்து வயது துர்காதான் தூக்கத்தில் தன் மேல் புரளுவதாக நினைத்து அணைத்த போது திடுக்கிட்டுக் கண் திறந்து பார்த்தாள். அது மனோ.
மறுநாள் அக்காவிடம் பயத்தோடு அழுதுகொண்டே நடந்ததைச் சொன்னாள். தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு அவளைக் கட்டிப் பிடித்து அழுதாள். கதறினாள்.
‘யாரிடமும் சொல்லிடாதே’
என சத்தியம் வாங்கிக் கொண்டு அன்றிலிருந்து தினந்தோறும் மனோ ஏதாவது பண்ணினானா என விசாரிக்க ஆரம்பித்து விட்டாள். ஒரு மாதம் ஆனது. வழக்கம் போலவே மென்ஷஸ் வந்ததும் அக்காவின் முகத்தில் ஒரு திருப்தி. அவளுக்கும் நிம்மதியாக இருந்தது.
‘இனியும் நீ இங்கிருக்கக்கூடாது. இந்த வீட்டிலேயே உனக்குப் பாதுகாப்பு இல்லை. நம்ம முனியம்மா பாட்டியோட பேத்தி கீதா சிங்கப்பூருல நல்ல வேலையில இருக்கா. அவகிட்ட சொல்லி உனக்கும் அங்கேயே ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்யச் சொல்றேன்’ என்றாள் அக்கா.
கொஞ்ச நாளைக்கு மனோ வீட்டில் இருக்கும் நேரங்களில் வெளியில் போவதை அவள் அக்கா குறைத்துக் கொண்டாள். முடிந்த வரை அக்கா அவளை, அவள் கண் பார்வையிலேயே வைத்து கொண்டாள். அவளுடன் பேசவும் அவளைத் தொடவும் முடியாமல் போன ஏமாற்றத்தில் மனோ அவள் அக்காவை அதிகமாகவே சித்திரவதைச் செய்தான். சில சமயங்களில் அவன் புகைத்துக் கொண்டிருக்கும் சிகரெட்டுத் துண்டால் அவள் அக்காவின் உடம்பின் பல இடங்களில் சூடு வைத்தான். அவள் அக்கா அவளுக்காக அனைத்தையும் தாங்கிக்கொண்டு அவளைச் சிங்கப்பூருக்கு அனுப்புவதில் தீவிரம் காட்டினாள்.
கோலாலம்பூர் இரயில் நிலையத்தில் அக்கா அவளைக் கண்ணீர்த் துளிகளுடன் வழியனுப்பி வைத்தாள். காலையில் தஞ்சோங் பாகார் இரயில் நிலையத்தில் கீதா காத்திருந்தாள். தேபானில் உள்ள அடுக்குமாடி வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.
‘வாழ்க்கையில் காசுதான் முக்கியம். காசு இருந்தால் சொந்தமும் நட்பும் தானாகவே ஓடி வரும். காசு இல்லை என்றால் ஒரு நாயும் நம்மை ஏறெடுத்தும் பார்க்காது. ஒன்னும் தெரியாத ஆளாக இருந்தாலும் காசு இருந்தால் அவனை உயர்த்திப் பேசுவாங்க இந்த மனுசங்க. நல்ல மனமிருந்தும் அறிவிருந்தும் அவங்கிட்ட காசு இல்லையென்றால் அவனைத் தாழ்த்தவும் தயங்க மாட்டாங்க இந்த மனுசங்க’
இதுதான் அவளுக்குக் கீதா உபதேசித்த ‘கீதாஉபதேசம்’.
‘உன்னோட அக்கா எல்லாத்தையும் சொன்னா. எவ்வளவோ கஷ்டம். நினைச்சுப் பாரு. ஒரு பெண்ணுக்கு நடக்கக் கூடாதது எல்லாம் நடந்திருக்கு. அவளோட வாழ்க்கையே சீரழிந்து போயிருக்கு. அவள் விருப்பப்படி எதுவும் நடக்கல. உனக்கும் அப்படி எதுவும் ஆகிடக்கூடாது என ரொம்ப கவலைப்படுறா. அந்தக் கம்பத்துல ஒருத்தனாவது உங்க குடும்பத்தை மதிக்கிறானா? இல்ல எவனாவது மனுச ஆளுன்னு பார்க்கிறானா? இதோ இங்க இருக்குற பொண்ணுங்க ஒவ்வொருத்தர் பின்னாடியும் ஒரு சோகக்கதை இருக்கு. பொண்ணுங்கள யாராவது பொண்ணா பார்க்குறாங்களா? ஏதோ சதைப்பிண்டமாகவும், ஆண்களோட சதை உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்குற குப்பைத் தொட்டியாகவும்தான் பார்க்குறாங்க’
‘காதலனால், கணவனால், நம்பி வந்த நண்பர்களினால், கூட்டி வந்த உறவுக்காரர்களினால், சொந்த பெற்றோர்களினால், இப்படிப் பாதிக்கப்பட்டப் பெண்கள் நிறையப் பேர். ஒவ்வொரு பெண்ணின் சீரழிவிற்கும் பின்னாலும் ஓர் ஆணே காரணமாக இருக்கிறான். அதிகாரம், அந்தஸ்து, பணம், பலம் என எல்லாமே அவங்கக்கிட்ட இருக்கு. திருட்டுத் தனமாக நம்மை அணுஅணுவாக ரசிக்கும் குணம் அவனுங்கக்கிட்ட நிறையவே இருக்கு. ஒரு வண்டு போல எல்லாப் பூக்களிலும் தேன் உறிஞ்ச அலைவானுங்க. அதற்காக பேசாமல் இருந்து விட முடியுமா? காட்டணும். எதையாவது செய்து காட்டணும். அதற்கு நமக்குத் தேவை பணம். அதை அவனுங்கக்கிட்ட இருந்தே கொள்ளையடிக்க வேண்டும். இந்தக் கொள்ளை வேறு. அவனுங்களே நம்பளத் தேடிவந்து கொட்டுவானுங்க. அந்த வழிய நான் உனக்குக் காட்டுறேன். நீ எதற்கும் கவலைப்படாதே! இன்னும் ஒரே வருசத்துல உங்க அக்காவ அந்த நரகத்திலிருந்து காப்பாற்றி ஜோகூர் பாரு பக்கம் கொண்டாந்திருவோம்.’
கீதா அவளுக்குப் போதித்த முதல் பாடம் இது. கீதா சொன்னது அவளுக்குச் சரியென்றுதான் தோன்றியது. ஆண்கள் சுயநலவாதிகள்தான். எந்த நிறுவனத்திலாவது ஆண் ரிசப்ஷனிஸ்ட், ஆண் செக்ரட்ரி இருக்கிறார்களா? இல்லை எந்த மருத்துவமனையிலாவது ஆண் நர்சுகள் இருக்காறார்களா? அவர்களுக்கு முன் கண்ணுக்குக் குளிர்ச்சியாக எந்நேரமும் பெண்கள் இருக்க வேண்டும். அதற்காகத்தான் ஆரம்பம் தொட்டே இப்படியெல்லாம் வகுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்குச் சாதகமாக சட்டங்களையும் தத்துவங்களையும் புகுத்திவிட்டு, இன்று பெண்ணியம் பற்றி மணிக்கணக்கில் மேடைகளில் பேசியும் எழுதியும் வருகின்றனர். இப்போது நடப்பில் இருக்கக்கூடிய கருத்துகளோ நீதிகளோ எதை எடுத்துக் கொண்டாலும் அவை அனைத்தும் ஓர் ஆணைப் பொருத்துதான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, பெண்ணுக்காகச் சொல்லப்படவில்லை என்பது நிச்சயம்.
இந்த உலகில் ஆணும் பெண்ணும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக இயைந்து வாழ்வதற்கே படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பெண்ணுக்கு மட்டும் உயிரை விட மேலாக கற்பு இருக்க வேண்டும், கணவனுக்கு எப்போதும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற போக்கில்தான் இன்றளவும் உலகத்தின் பார்வைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. திருக்குறளில் கூட வாழ்க்கை துணை நலம் என்ற அதிகாரத்தில் அனைத்தும் பெண்ணுக்காகவே சொல்லப்பட்டிருக்கிறது. வாழ்க்கை துணை பொதுவான ஒன்று. ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமாகச் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் அப்படிச் சொல்லப்படவில்லை. இதைப் பார்க்கின்றபோது வள்ளுவர் கூட பெண்ணை ஆணுக்குத் துணையாகத்தான் சொல்லியிருக்கிறாரே தவிர பெண்ணைத் தனித்தன்மையாக மதித்ததாகத் தெரியவில்லை.
அவள் அக்காவைப் போல் எத்தனையோ பெண்கள் தங்களுக்கு விருப்பமில்லாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பெண்களுக்கும் மனம் இருக்கு, அதில் ஆசைகள் இருக்கு என்பதை யாரும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அனைத்தும் ஆணுக்குச் சாதகமாகவே வகுக்கப்பட்ட வாழ்க்கை நியதிகள். இந்த நிலை மாறவேண்டும் என்றால் பெண்கள் கையில் அதிகாரம் வர வேண்டும். பெண்களிடம் பணம் இருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் கீதாவுடன் அவளும் இணைந்து கொண்டாள். பிரசித்திப் பெற்ற ஓர் உடம்பு பிடி நிலையத்தில் வேலை. பணம் படைத்தவர்கள் மட்டும் வந்து போகும் இடம். உடம்பு பிடித்து விட வேண்டும். வாடிக்கையாளர்களை மகிழ்விக்கவேண்டும். தொடக்கத்தில் மனத்துக்கும் உடம்புக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் பணத்தைப் பார்க்கும் போதெல்லாம் வேதனைகள் மறைந்து பின் அதுவே பழகிப்போனது. ஓய்வுநேரங்களில் நிறைய புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தாள். கற்பு மனசுக்குத்தான். உடலுக்கல்ல என தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாள்.
‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற’
என்ற குறள் வரிகளுக்கேற்ப ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்கவேண்டும். அதுதான் அறம். மனத்தூய்மை இல்லாத மற்றவை அனைத்தும் வார்த்தை நடிப்பும் வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படுபவையேயாகும். உடம்பு கெட்டால் சுத்தப் படுத்திக் கொள்ளலாம். மனம் கெட்டால் வாழ்க்கையே இங்கு தொலைந்து போய்விடுமே என உணர்ந்து தெளிவு கொண்டாள்.
அவள் நினைத்ததை விட சீக்கிரத்திலேயே கீதாவின் உதவியோடு அவள் அக்காவையும் ஐந்து குழந்தைகளையும் ஜோகூர் பாருக்கு அருகில் இருக்கும் தாமான் ஸ்கூடாய் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைத்தாள். தங்கள் குடும்பத்தின் அடுத்த தலைமுறைப் பிள்ளைகள் கல்வியில் சிறக்க வேண்டும் என்ற நோக்கில் மூத்த மகள் துர்காவை சிங்கப்பூர் பள்ளியொன்றில் சேர்த்து விட்டாள். ஜோகூரிலிருந்து சிங்கப்பூர் சென்று கல்வி கற்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களில் துர்காவும் இணைந்து கொண்டாள்.
‘அம்மா’
துர்காவின் குரல்.
சின்ன வயதிலிருந்து அவள் அப்படித்தான் அவளைக் கூப்பிடுவாள். கண்களைத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்து விட்டாள்.
‘என்னை மன்னிச்சிடு, இனிமே இப்படி அநாவசியமா செலவு பண்ண மாட்டேன்’
என அவள் மடியில் தலைவைத்து அழுதபடியே கூறினாள். கலைந்திருந்த அவள் தலைமுடியைக் விரல்களால் கோதிவிட்டு, ஹெண்ட் பேக்கிலிருந்து ஆயிரம் சிங்கப்பூர் டோலரை எடுத்த துர்காவிடம் கொடுத்தாள். பணத்தை வாங்கிக்கொண்ட துர்கா,
‘அம்மா ஏன் முதல்ல அப்படிச் சொன்னாங்க?’
‘உங்க அம்மாவுக்குக் கோபம், உன்னை ஏசிட்டேனு’
‘அதுக்காக ஏன் அப்படி சொல்லனும், நீ என்ன வேல செய்யிற?’
‘துர்கா, இங்கப் பாரும்மா, அதப்பத்தியெல்லாம் நீ யோசிக்கதம்மா, உன்னோட கவனம் படிப்பில மட்டும்தான் இருக்கனும், நம்ப மாதிரி குடும்பங்கள் எல்லாம் வருங்காலத்துல நல்ல நிலையில வாழனும்னா உங்க மாதிரி பிள்ளைகள் நல்லா படிக்கனும்மா, கல்வி மட்டும்தான் இப்போதைக்கு நம் சமூகத்துக்கு விடிவெள்ளி, நாங்க படுற கஷ்டம் உங்களுக்கு வேணாம்மா’
‘எனக்குத் தெரியும்மா, அம்மாவுக்கும் உடம்பு சரியில்லை, அப்பாவும் இல்ல, எங்களுக்கா நீ இரவு பகலு பார்க்காம வேல செய்யிறனு, நாங்க நல்லா இருக்கனும்னுதானே நீ இவ்வள கஷ்டப்படுற, படிப்பேம்மா, நல்லா படிப்பேம்மா, ஒரு நாளைக்கு நீ ஆசைப்பட்ட மாதிரியே ஒரு வக்கீலா வருவேம்மா. நம்ப குடும்பத்தை நான் மேல் நிலைக்கு கொண்டு வருவேம்மா. ஒரு நாளைக்கு இந்த சமூகத்துல நாமும் தலை நிமிர்ந்து வாழும் காலம் வரும்மா’
அவள் துர்காவின் கன்னத்தில் முத்தமிட்டாள். விழிகளின் ஈரங்கள் சங்கமித்துக்கொண்டன.
‘பிரியா என்னை மன்னிச்சிடும்மா, நான் அப்படி சொல்லியிருக்கக்கூடாது, தப்புப் பண்ணிட்டேன், பெரிய தப்புப் பண்ணிட்டேன், என்னை மன்னிச்சிடும்மா’
அக்கா கதவருகில் நின்றாள். அவளைப்போய் கட்டிக்கொண்டாள்.
_________________ முற்றும் ___________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக