வியாழன், 17 ஜனவரி, 2013

தீர்த்தக்கரையும் திரைகடலோடிகளும் - பொன்.சசிதரன்

சமிக்ஞை விளக்குகள் – சாட்டை (ஒரு விமர்சனப் பார்வை)

கணவனை ஒரு விபத்தில் இழந்த தங்கை வேறு ஒருவனுடன் ஓடிப்போய்விடுகிறாள். அவளின் இரு பிள்ளைகளையும் அக்கா மரிக்கொழுந்து வளர்த்து வருகிறாள். பள்ளிக்கூடம் போக வேண்டிய பிள்ளைகளை அவளின் குடிகாரக் கணவன் தன் வேலைக்கு வைத்துக்கொள்கிறான். மரிக்கொழுந்து அப்பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியோடு அப்பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க ஏற்பாடுகளைச் செய்கின்றாள். பள்ளியில் இடம் கிடைத்துவிட்டது. கூடிய விரைவில் பிறப்புப் பத்திரமும் கிடைத்துவிடும். ஆனால் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப அவள் கணவன் மறுக்கிறான். தன் கணவனை எதிர்த்து அவளால் எதுவும் செய்ய இயலாத நிலை. வேறுவழியில்லாமல் பிள்ளைகள் அவள் கணவனின் வேலையைத் தொடர்கின்றனர்.
கதையின் சுருக்கம் இதுதான். கதையின் முடிவில் நம் முதுகிலும் விழுகின்றன சாட்டையடிகள் இப்படி.
1.   கணவன் இறந்த பிறகு தன் பிள்ளைகளை விட்டு விட்டு வேறொரு ஆடவனுடன்  ஒடிப்போகும் பெண். (தாய்மை இங்கே கேள்விக்குறியாய் வளைந்து போகிறது)
2.   பிள்ளைகளுக்குப் பிறப்புப் பத்திரம் எடுக்க எண்ணாதப் பெற்றோரின் மனப்போக்கு. (சுதந்திரம் பெற்று ஐம்பது ஆண்டுகள் மேலான போதிலும் விழிப்பு ஏனோ நம்மிடம் இல்லை)
3.   பள்ளிக்குச் செல்லவேண்டிய வயதில் சிறார்கள் வேலைக்குச் செல்லும் நிலை. (சிறார் தொழில் வதை)
4.   கணவனை எதிர்த்து எதுவும் செய்ய இயலாத மனைவியின் இயலாமை (ஆணாதிக்கச் சமூகம் - பெண்ணடிமை)
5.   இத்தலைமுறை செய்யும் தவறுகளுக்கு அடுத்தத் தலைமுறை பலியாகிப்போகும் அவலம். (தொடரும் சமூகக் கொடுமைகள்)
இப்படி எல்லாமே முரணாகச் செல்லும் கதைப்போக்கில் ஆறுதலாக வருகிறார் நாடாளுமன்ற உறுப்பினர். அவரை அடுத்து கதையின் தலைப்பு நமக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டும் சிறந்த ஒரு படிமமாகவும் அமைகிறது.
சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் நிகழ்வுகள் அழகிய நாடகக் காட்சிகளை நினைவுப்படுத்தும். அப்பாடல்களில் நேரடியான நீதி போதனைகள் இடம் பெறாது. இருப்பினும் வாழ்வின் அடிப்படை உணர்வுகளை அப்பாடல்கள் மிக அற்புதமாக வெளிப்படுத்தும். வாசகனின் விழிகளுக்கு எழுத்தைத் தவிர வேறெதையும் காட்டாமல், மூடுபனி பாலுமகேந்திராவின் கேமராவைப்போல் தான் வாழும் சமூகத்து  வாழ்க்கையின் பகுதிகளினூடே தெறிக்கும் உக்கிரத்தைப் படம் பிடித்துக் காட்டுவதென்பது எளிதான காரியமல்ல. இதில் இச்சிறுகதை வெற்றிப் பெற்றிருக்கிறது.
எந்தவித வெளிப்பூச்சுகளும் இல்லாத, பின்னிப் பின்னி சொல்லப்பட்ட செய்திகள், வர்ணனைகள், அதிகப்படியான கற்பனைகள் எதுவுமில்லாமல் மிகவும் எளிமையாக கதை சொல்லப்பட்டிருக்கும் பாணி பாராட்டக்கூடியது. ஒரு குறும்படத்திற்குரிய திரைக்கதை அமைப்போடு படைக்கப்பட்டிருக்கும் இச்சிறுகதை, படைப்பாளியை ஒரு சிறந்த கதைச்சொல்லியாகவும் அடையாளம் காட்டுகிறது.
கதையில் சமூக அக்கறையைக் காணமுடிகிறது. மொழியின் கூர்மையையும் அழகையும் காணமுடிகிறது. நாம் வாழும் சமூகத்தின் வாழ்வியல் கூறுகளை மிகுந்த ரசனையுடனும் மிகையற்ற நெகிழ்ச்சியுடனும் இக்கதை கூறுகிறது. மிகவும் கச்சிதமான வடிவம் கொண்ட சிறுகதைக்கான உதாரணமாக இக்கதையைக் கூறலாம்.
வெளியில், வீட்டு முகப்பில் விளையாடிக்கொண்டிருந்த மரிக்கொழுந்துவின் பிள்ளைகள் சரசு, ஜீவா, அமுதா மூவரின் முன்னால் ஓடிப்போய் நின்றாள். அவர்களிடம் சொல்ல அவள் மனம் துடித்தது என படைப்பாளன் நின்று விடுகிறான்.  ஆனால் வாசகனிடத்தில் அக்காட்சி பரந்து விரிகிறது. பாருவின் மகிழ்வில் வாசகனாலும் பங்குகொள்ள முடியும் பட்சத்தில் படைப்பாளன் இங்கே வெற்றிப்பெறுகிறான்.
இப்படி முடிகிறது கதை.
சிவா புரியாமல் பாருவைப் பார்த்தான். பாருவின் முகத்தில் அந்த எதிர்ப்பார்ப்பு இன்னும் இருப்பது தெரிந்தது.
நமக்கும்தான். 
அன்புடன்
எம்.சேகர்
(நண்பர் பொன்.சசிதரன் அடுத்த மாதம் வெளியிடவுள்ள தீர்த்தக்கரையும் திரைகடலோடிகளும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறவுள்ள என் விமர்சனப் பார்வை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக