திங்கள், 15 ஏப்ரல், 2024



சீனலட்சுமி – லதா  (சிறுகதைத் தொகுப்பு)

கற்பிதங்களுக்குள் இயங்கும் அக உலகும் புற உலகும் – எம்.சேகர்

 

ஒரு படைப்பாளியின் உலகம் தனியானது. சராசரி மனிதர்கள் சமூக நிகழ்வுகளைப் பார்வை கொள்வதற்கும் ஒரு படைப்பாளி தனக்கான உளப்பாங்கோடும் தனித்தபார்வையோடும் அவற்றை அணுகுவதற்கும் வேறுபாடுகளுண்டு. படைப்பாளியின் இதயம் விசாலமான பார்வை மனிதாபிமானம், முரண்நிலைகள் மற்றும் விளைவுகள் குறித்த தார்மீகக் கோபம், ஒரு சமூக நிகழ்வு அல்லது நிலை பற்றிய படைப்பாளியின் மனம் சார்ந்த விளைவுகள் மற்றும் தாக்கங்கள் போன்றவற்றை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிற உந்துதல் ஒரு படைப்பை உருவாக்கவைக்கிறது அல்லது உருவாக்கிக்கொள்கிறது.

 

படைப்பாக்கச் செயற்பாடென்பது குறிப்பிட்ட சட்டக எல்லைக்குள் முடங்கிவிடும் ஒன்றாக ஆகிவிடக்கூடாது. பரந்த பார்வையுடன் ஒரு கட்டறு வெளியில் சஞ்சரிக்கும் இயல்பினை ஒரு படைப்பாளி தன் இயல்பாய் வகுத்துக்கொள்ளவேண்டும். தனது அவதானப் பரப்பினை மேலும் விரித்துக்கொள்வதோடு நுணிகிய நோக்குடன் மனித இயல்பினைக் கவனித்துப் பதிவு செய்யும் தன்மையும் தேவைப்படுபகிறது.

 

தனக்கென ஒரு மொழிநடை, ஒரு சொல்முறை, ஒரு பார்வை என்பனவற்றைக் கொண்டிருக்கும் படைப்பாளி லதா, தான் முன்வைக்க விரும்பும் விஷயங்களைப் பரந்ததொரு விதத்திலான ஒரு மொழித்தளத்தில் தந்திருப்பது அவரின் இந்தச் சீனலட்சுமி சிறுகதைத் தொகுப்பை மேலும் அழகுடன் மிளிர்ந்திடவைத்திருக்கிறது.

 

வாழ்க்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அல்லது சங்கடங்களை எடுத்துக்காட்டுவதைத் தனக்கே உரித்தான பாணியில் கையாளுபவராக படைப்பாளி லதா விளங்குவதை இச்சிறுகதைத் தொகுப்பின்மூலம் அவதானிக்க முடிகிறது. தனது கதைகளில் ஆர்ப்பாட்டமோ கோஷமிடும் செயற்கைத்தன்மையோ இல்லாது மிக இயல்பாக தான் நேசித்ததையும் பார்த்ததையும் கேட்டதையும் அனுபவித்ததையும் பதிவிடுகிறார்.

 

லதாவின் சிறுகதைகளில் தனித்துத் தெரியும் சில பண்புகள் வாசகனின் கவனத்தை ஈர்ப்பதோடு அவர் படைப்பின் அழுத்தத்தை நடுநிலையானவையாகவும் வைத்திருக்க வழிசெய்கிறது. இத்தகைய உணர்வு வாசகனிடத்தில் தோன்றும் விதமாய் எழுதுவதற்கு ஒரு படைப்பாளியின் உண்மைத்தன்மை (Sincerity) மிக அவசியமாகிறது. இத்தகைய ஒரு நோக்கில் லதா வெற்றி பெறுகிறார் என்றே கூற வேண்டும்.

தான் வாழுகின்ற சூழலை, காலத்தை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்திச் செல்கின்ற அரிய பணியினைப் படைப்பாளி ஆற்றுகிறான். ஒரு தலைமுறையினரின் வாழ்வியல் நடத்தைக் கோலங்களை மிக நுணுக்கமாகவும் அழகாகவும் பதிந்து வைக்கின்ற ஆற்றல் படைப்பாளிகளிடம் மட்டுமே இருக்கிறது. இத்தகைய வரைவிலக்கணங்களைச் சாத்தியப்படுத்துகின்ற ஆழமான பணியினை சிங்கப்பூரின் படைப்பாளியான லதா நிரூபித்து வருகிறார் என்பதற்கு அவரின் கதைகளே சாட்சி.

 

எட்கார் அலன் போவின், ‘சிறுகதையானது தன்னளவில் முழுமைபெற்றதாகவும் ஒரு குறிப்பிட்ட நேர அவகாசத்துக்குள் ஒரே மூச்சில் வாசித்து முடிக்கக்கூடியதாகவும் அதே சமயம் சிறுகதை தரும் விளைவு ஒரு தனி மெய்ப்பாடாகயிருக்க வேண்டும் என்னும் கூற்றுக்கமைய இத்தொகுப்பில் இடம்பெற்ற பெரும்பான்மையான கதைகள் பதினொன்று தொடக்கம் பதினைந்து பக்கங்களுக்குள் தம்மை முடித்துக்கொள்கின்றன. சில கதைகள் பதினேழு, பத்தொன்பது பக்கங்கள்வரை நீடித்துக்கொண்டுள்ளன. இதில் பல கதைகளை ஏற்கனவே வல்லினத்தில் வாசித்தபோது இருந்த நீளம், தொகுப்பிற்காக எடிட் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது.

 

இத்தொகுப்பிலுள்ள கதைகள் நம் கண்ணில் விழுந்த அல்லது விழாத அனைத்தும் புனைகதைகளாக உருவகம் எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை முன்வைத்துள்ளது. அதிலும் அக நிலையிலும் புற நிலையிலும் என இரண்டு நிலைகளிலும் நின்று கதைசொல்லி  சிங்கப்பூரின் மண்மணத்தை புதிய பரிமாணத்தோடு நம்முன்னே காட்சிப்படுத்தியுள்ளார். சிங்கப்பூரைச் சார்ந்து பல கதைகள் இதுவரையில் புனையப்பட்டிருந்தாலும் லதாவின் பார்வையில் அவை வேறொரு மனவெளியைப் பெறுகின்றன. சிங்கப்பூரில் எழுதப்படுவதற்கு நிறையவே இருக்கின்றன. ஆனால், ஒரு குறுகிய வட்டத்திற்குள் ஓடுவதுபோல் எழுதியதையே எழுதிக்கொண்டிருக்கும் அந்தப் போக்கில் ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்துவதாக இக்கதைகள் அமைந்துள்ளன. மண்ணும் மனம் சார்ந்த வலிகளும் கதைகளின் உயிர்நாடியாக விளங்குகின்றன. அலிசா, இளவெய்யில், காவடி, நிர்வாணம், வலி, சீனலட்சுமியின் வரிசை போன்ற கதைகள் தனிமனித உணர்வுகளை மையப்படுத்துகின்றன. தேக்காவில் ஒரு பாலம் இருந்தது, சிலந்தி கதைகள் சுதந்திர போராட்டம், நாட்டுக்கான போர் என சமூகம், வராலாற்று பின்புலத்துடன் புனையப்பட்டுள்ளன. பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப் பூனை முற்றிலும் ஒரு புதிய கோணத்தில் மறுபட்ட கதைக்களத்தில் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள், நம்பிக்கைகள் என சிங்கப்பூரின் இன்னொரு வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

 

அலிசா

 

நிலம் ஒரு குறியீடு. அது தன் பெறுமதியை எப்பொழுதுமே இழந்ததில்லை. அது ஒரு அடையாளம். ஒரு மக்கள் கூட்ட அடையாளத்தின் அடையாளம். சிங்கப்பூரின் பெருநிலத்திலிருந்து தள்ளி ஒரு குட்டித் தீவாயிருக்கும் பூலாவ் உபின் பழம்மக்களின் தனித்த அடையாளம். இன்றும் அன்றைய சிங்கப்பூர் வாழ்வியலுக்கான அடையாளமாகவே தன்னை இதுநாள்வரையில் நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. சிங்கப்பூரின் பெருநிலத்திலிருந்து இங்கு வரும் அலிசாவை மையப்படுத்தி, பெருநகர வாழ்க்கைக்கும் கிராமத்து வாழ்க்கைக்கும் உள்ள உறவுகளையும் வேற்றுமைகளையும் விரிசல்களையும் இயல்பாக விவரித்துள்ளது. கடலுக்குள் நீச்சல் குளத்தைத் தேடும் அலிசாவையும் வலி கதையில் கடலை மீன் தொட்டிக்குள் அடக்கி, கடலுக்குள் செல்லும் தன் ஆசையை இப்படியாக நிறைவேற்றிக்கொள்ளும் அவளையும் தொடர்புப்படுத்தியும் பார்க்கும் வாய்ப்பை இரு கதைகளும் வழங்கியுள்ளன எனலாம்.

 

புலாவ் உபினில் சுதந்திரமாக உலாவும் அலிசாவோடு அங்குள்ள வாழ்வியற் சூழலோடு அம்மக்களின் நம்பிக்கைகளையும் அவர்கள் சார்ந்த தொழில்களோடும் மீன் பிடிக்கும் பல முறைகளோடும் சேர்ந்தே வாசகனாய் நானும் இணைந்து பயணிக்கும் வாய்ப்பைக் கொடுக்கும் கதை. பலமுறை புலாவ் உபினுக்குச் சென்று வந்திருப்பதால் அங்குள்ள சீனக்கோயில், ஐயா கோயில், குவாரி போன்றவை கதையில் வாசிக்கும்போது கதையை மனத்துக்கு நெருக்கமாய் கொண்டுவந்துவிடுகிறது. பெரும்நகரம், கிராமம் என இரண்டு முரண்களுக்கும் தொடர்பாடலாய் அலிசாவின் கதாபாத்திரப்படைப்பு நயம்பட படைக்கப்பட்டிருக்கிறது.

 

இளவெய்யில்

 

எந்த ஒரு படைப்பும் நியமிக்கப்பட்ட சமூக, பண்பாட்டு அம்சங்களைப் பிரதியீடு செய்யும் வகையில் அமையவேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தன்னைப் பாதித்த விஷயங்களை கலைவடிவங்களாக வெளிப்படுத்தக்கூடிய நுண்ணுணர்வும் படைப்புச் சுதந்திரத்தின் எல்லைகளை அறிகின்றன பக்குவமும் ஒருங்கிணைந்திருத்தல் அவசியமாகிறது. இக்கூற்றை இளவெய்யில் கதை சாத்தியப்படுத்தியுள்ளது.

கதையில் நீலமலர், ‘மெக்டோனால்ட்ஸ் காபி அருந்துவதும் அதன் தொடர்பான விவரணைகளும் எனக்கும் உடனே ஒரு காப்பியை அருந்திவிடவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்திவிட்டது. இப்படியாக வாசகனைத் தனது எழுத்துக்குள் கட்டிப்போடும் வித்தை லதாவுக்கு கைவந்த கலையாக இருக்கிறது. தாய்மையின் உணர்வுகளையும் அதன் மகிழ்ச்சியோடு கூடிய வலிகளையும் நமக்கும் கடத்திவிடும் கதைப்போக்கு சிங்கப்பூரின் ஆசிரியர் தொழிலில் இருக்கும் பெண்களின் சிக்கல்களையும் வெளிப்படுத்தத் தவறவில்லை. இக்கதை நீலமலர் என்னும் பாத்திரத்தின் உணர்வு நிலையை உருக்கமாக உயிர்த்துடிப்புடன் பதிவு செய்கிறது.

 

காவடி

 

இக்கதையின் வாயிலாக முரண்தருணங்களின் இயல்பினையும் பொதுவெளியில் கட்டமைக்கப்படும் கொண்டாட்ட மனநிலையையும் மிக எளிமையாக வெளிப்படுத்தியுள்ளார். சுயமரியாதை இயக்கத்தைக் கொண்டாடி கடவுளை ஒதுக்கும்போக்கு தமிழகத்திலிருந்து இங்கு வந்தபோது, அது சிங்கப்பூரர்களின் வாழ்க்கையிலும் சில தாக்கங்களை ஏற்படுத்தியது. கடவுள் மறுப்புக் கொள்கையில் இருக்கும் குடும்பத்தில் பிறந்தவள், பின்னாளில் அவளுக்கு வாய்ந்த கணவனோ காவடி எடுக்கும் வழக்கமுள்ளவனாதலால் அவளும் காவடி எடுக்கும்போது விரதம் இருந்து அனைத்தையும் விருப்பத்துடன் செய்கிறாள். சிறுவயதில் நோரிஸ் ரோட்டில் தங்கியிருந்ததால், சிராங்கூன் சாலையில் செல்லும் தைப்பூசக் காவடிகளைப் பார்க்க அவளுக்குப் பிடிக்கும். வீட்டிற்குத் தெரியாமல் பார்க்கச் சென்றுவிடுவாள். வயதான காலத்தில் எழுந்து நடமாடக்கூட முடியாமல் இருக்கும் நேரத்திலும் சிலா காவடி பார்க்கவேண்டும் என அவள் அடம்பிடித்துக்கொண்டிருப்பதாய் கதை அமைகிறது. சிறுவயதில் நமக்குப் பிடித்த பல விஷயங்களை வயதான காலத்திலும் தீவிரமாய் காணவேண்டும் என்ற தனிமனித ஆசையைக் கதை விவரிக்கிறது.

 

சிலந்தி

ஒரு வரலாற்றுப் பின்புலத்துடன் கதை எழுதப்பட்டிருந்தாலும், சிலந்தியின் வலைபின்னலைப் போல் கதையைப் பின்னியுள்ளார் புனைவாளர். சிலந்தி தொடர்பான ஆழமான விவரணைகள் கதையின் மையமாக இருந்தாலும் அதற்கேற்ப ஒரு சூழலை உருவாக்கி கதையை நகர்த்தி சிலந்தியின் பின்னலைப்போல் போரின் அரண்களை உணர்த்தும் கதை. டைகர்’ ‘ஜோக்கர் என சிலந்திகளுக்குப் பெயிரிட்டு அவற்றைப் போட்டியில் இறக்கிவிடும் பிள்ளைகளின் விளையாட்டாக அது இருந்தாலும், அதனைப் போரின் ஒரு தந்திரமாகக் காட்டியிருப்பது பாராட்டக்கூடியது. சிறுவயதில் மற்ற பள்ளி மாணவர்களோடு சேர்ந்து சிலந்தியைக் காலியான நெருப்பட்டிப் பெட்டிக்குள் வளர்த்தது, சிலந்திகளைச் சண்டைக்கு விடுவது என என் சிறுவயது நினைவுகளையும் தட்டிப் பார்த்தது இச்சிறுகதை. சிலந்தி தொடர்பான பல தகவல்களை இக்கதையின் மூலம் பதிவு செய்துள்ளார். அதையும் தாண்டி உளவியல் சார்ந்த பல சித்தாந்தங்களையும் உணர்வுகளையும் இக்கதையின் வாயிலாக உணர்த்தியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

 

சீனலட்சுமியின் வரிசை

சிங்கப்பூரில் அனைத்திற்கும் வரிசையாக நிற்பது சிங்கப்பூரர்களின் வாழ்வியற் கலாசாரமாகவே மாறிவிட்டது. முதலில் பேருந்துக்காக வரிசையில் நிற்பது தொடங்கி இப்போது புதிதாக அறிமுகமாகும் பொருள்களுக்கும்கூட அதிகாலையிலேயே வரிசையில் நிற்கும் போக்கு இங்கு வாடிக்கையாகிவிட்டது. பலருக்கு இப்படி வரிசையில் நிற்பது பிடிக்காத ஒன்றாய் இருந்தாலும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காக தாங்களும் வரிசையில் நிற்பார்கள். அப்படி ஓரிருவர் வரிசையைத் தாண்டி முன்னால் சென்றுவிட்டால், அவர்களைத் திட்டுவதும் அல்லது வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் போடுவதுமாக இருப்பார்கள். இதையெல்லாம் தாண்டி வரிசையில் நிற்பது இக்கதையின் சீனலட்சுமிக்குப் பிடிக்கும். பொதுத் தேர்தலுக்கு வரிசையில் நிற்பதாய் கதை தொடங்கி, அமரர் திரு. லீ குவான் யூ வின் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வரிசை வரையிலும் கதை நம்மையும் நெடுநேரம் வரிசையில் நிற்கவைத்து விடுகிறது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஓர் ஆசை இருக்கும். இது சீனலட்சுமியின் ஆசை. இக்கதையில் வரும், ‘சுதந்திரம் கெடைச்சி அம்பதாவது வருசத்துலதான் எல்லா தொகுதியிலயும் தேர்தல் நடக்குது சிந்திக்க வைக்கும் வரிகள்.

 

தேக்காவில் ஒரு பாலம் இருந்தது

 

போராட்ட சூழலில் போராளியாக ஆக விரும்பி நேதாஜியின் ஐ.என்.ஏ வில் சேரும் திருமணமான அக்கா கதாபாத்திரத்தை மையப்படுத்தி கதை நகர்ந்தாலும், பழைய தேக்கா பாலம் தொடர்பான காட்சிப்பதிவுகள், நேதாஜி சிங்கப்பூருக்கு வந்தபோது ஏற்பட்ட சுதந்திர அலை, அதன் பரபரப்பு, இங்கிருந்த மக்கள் நகை, காசு என்று கையிலிருந்ததை நேதாஜியிடம் கொடுத்தது, சாப்பாட்டுக்காகவும் வேலையில்லாததாலும் படையில் சேர்ந்த கதையும் நமக்குத் தெரிய வருகிறது. ஜப்பான்காரன் ஜெயித்துவிட்டால் நாம் என்ன செய்வது? ஜப்பான் மொழிதான் பேசவேண்டும், படிக்க வேண்டும் கவலையாக இருந்தது எனவும் ஒரு சாராரின் கவலையும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஐ.என்.ஏ வில் உள்ள நுண்அரசியலில் படையில் சேர்ந்துள்ள தமிழ்ப்பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும் இன்னல்களும் ஏற்றத்தாழ்வுகளும் கதையின் வாயிலாக உணர்த்தி, நாட்டுக்காக வெளியே போய் போராடுவதைவிட இச்சமூகத்தில் முதலில் பெண்களுக்ககாகப் போராடவேண்டும் என்ற உணர்வில் படையை விட்டு வெளியேறிய ஓர் அக்காவின் கதையாக இருந்தாலும், இன்றளவும் பெண்களுக்கான இடம், அவர்களின் குரல் நம் சமூகத்தில் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை உணர்த்தும் கதையாக இதை நான் பார்க்கிறேன். கதையை ஒரு நீட்சியான விசாரணையாக ஒருங்குவியமைத்து அழகுற நகர்த்தி விடுகிறார் கதாசிரியர்.

 

நிர்வாணம்

அம்மா, மகள் இருவருக்குமான இருக்கும் அந்தரங்க உணர்வலைகளைக் கதையின் வாயிலாக மிக அழகாகக் கட்டமைத்துக் கடத்தியுள்ளார் லதா.  மேலும், இன்றைய இளம் வயதினருக்கு எதிலும் அவசரம், எதையும் விரிந்த மனத்தோடு பார்க்கும் விசாலமான பார்வையும் குன்றிபோய்விட்டதையும் கதை உணர்த்துகிறது. புரிந்துணர்வு என்பது பெண்களுக்கு மட்டும் இருக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பு சமூகத்தில் புரையோடிக்கொண்டிருக்கும் ஒரு புற்றுநோயைப்போல நாளடைவில் நம் சமூகத்தையும் அழித்துவிடும். புரிந்துணர்வு ஆண், பெண் இருவருக்கும் இருக்கவேண்டிய அடிப்படை பண்பு என வலியுறுத்தும் கதையாக இருந்தாலும் ஓர் அம்மாவுக்கும் மகளுக்குமான அந்தரங்க உணர்வின் வெளிப்பாடே மனப்படிமங்களாக கதையில் மேலோங்கி இருக்கிறது. சமூக வாழ்வியற் புலத்தின் யதார்த்த வாழ்வை அப்பட்டமாகக் காட்சிப்படுத்தும் கதைகளில் இதுவும் ஒன்று.

 

பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப் பூனை

 

காலத்திற்கேற்ற செறிவான மொழிநடையும் புதிய எடுத்துரைப்பு முறையும் கொண்ட கதையாக இதைக் கூறலாம். இக்கதையிலும் பூனைகளுக்கு உணவளிப்பதன் மூலமாக தாய்மையின் பண்புகளுக்கு மேலும் பெருமை சேர்க்கிறார். மேலும், தனிமையில் இருக்கும் பெண்கள்தான் அதிகமாகப் பூனைகளுக்கு உணவளிக்கிறார்கள் என்பதையும் பதிவிடுகிறார். நாம் அன்றாடம் பார்க்கும் செயல்கள்தான் இவை. ஆனால், இதற்குள் இத்தனை மனோவியல் கருத்துகள் இருக்கும் என்பதை இக்கதையின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. நாம் படித்து தெரிந்துவைத்திருக்கும் பல அறிவியல் தகவல்கள் நடைமுறை வாழ்க்கையில் முரணாக இருப்பதையும் கதை உணர்த்துகிறது. மேலும், ‘வெங்சு என்ற மொழி பற்றியும் அம்மொழி இந்தப் கறுப்புப் பூனைக்கும் அந்த ரோத்தான் கிழவருக்கும் மட்டும் தெரிந்த மொழி என்பதையும் கதை தெளிவுபடுத்துகிறது.

ஒவ்வொரு கதைக்கும் கதாசிரியர் மிகவும் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார் என்பதை அவரின் கதைகளை வாசிக்கும்போது என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது.

 

வலி

 

கையிழந்தவர்களின் வலியை கனத்த மனத்தோடு நம்முடன் பகிர்ந்துகொள்ளும் கதை. முன்பு சொன்னதுபோல அலிசா கதையின் தொடர்ச்சியாகவும் இக்கதை நகர்வினைப் பார்க்கலாம். கடலில் அனாவசியமாக மீன்களைப் பிடித்து பெரும் கடல் ஆளுமையாக இருந்தவள் ஒரு விபத்தில் தன் இரு கைகளையும் இழந்தபின், தான் பார்த்து மகிழ்ந்த கடலை தன் வீட்டின் மீன்தொட்டிக்குள் அடைத்து வைக்கிறாள். அந்த மீன் தொட்டியைச் சுத்தப்படுத்துவதற்குக் கூட மற்றவர்களின் உதவியை நாடும் அவளின் வலி நிறைந்த வாழ்க்கை நமக்குள்ளும் ஒரு வித வலியை ஏற்படுத்திவிடுகிறது. தனிமையில் உழன்று வெறுமையில் வெதும்பும் ஒரு வாழ்வைப் புடம் போட்டுக் காட்டுகிற இக்கதையில் யாருமில்லாமல் அவள் படும் நரக வலியும் வேதனையும் தார்மீக ஓலமாய் கதை நெடுகிலும் ஒலிக்கிறது.

 

பொதுப்பார்வையில் உலகின் முதல்தர நாடாக, செல்வம் கொழிக்கும் நாடாக சிங்கப்பூர் திகழ்ந்தாலும் இங்கு இன்னமும் தொடப்படாத  சொல்லப்படாத பல வாழ்வியற் கதைகள் ஒளிந்தேயிருக்கின்றன என்பதற்கு இக்கதையும் நல்லதோர் எடுத்துக்காட்டு.

 

அகமனத்தில் கட்டமைக்கப்படும் நிஜத்தின் பதிவுகளைச் சொற்குறியீடுகளில் உள்வாங்கி உரைநடையில் அமைக்கப்பட்டிருக்கும் இச்சிறுகதைகளை வாசிப்பது என்பது ஒரு சுகமான வாசிப்பு அனுபவமாகவே எனக்குள் இருக்கிறது. இச்சுகத்தை அனுபவிக்கின்ற பாக்கியம் வாசகனாய் இருந்து வாசித்தால் மட்டுமே சாத்தியமாகும். இவரின் மொழிநடை அழகானது, சரளமானது. சிங்கப்பூரின் வாசம் நிறைந்தது. இவர் வெறும் கற்பனைக்கதை எழுதுபவர் அல்ல. இவருடைய கதைகள் யதார்த்தம் நிறைந்தவை. தான் கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் ஆய்வுநிலைக்கு உட்படுத்தி நல்ல சிறுகதைகளாக உணர்வுப்பூர்வமாக எழுதும் திறன் பெற்றவர்.

 

பாலபாஸ்கரன் தனது ஆய்வுக்கட்டுரை ஒன்றில் சிங்கப்பூரின் முதல் சிறுகதை 1924 ஆம் ஆண்டில்தான் வெளிவந்ததென்று குறிப்பிட்டிருப்பார். அதை வைத்துப் பார்க்கும்போது இந்த 2024 சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகளில் நூற்றாண்டு விழாவாக அமையும். நூறாண்டு சிங்கப்பூரின் சிறுகதை வளர்ச்சி எப்படி இருக்கிறது எனக் கேட்பவர்களுக்கு லதாவின் சீனலட்சுமியைத் தைரியமாக வாசிக்கக் கொடுக்கலாம்.

 


எம்.சேகர்

முனைவர் பட்ட ஆய்வாளர்

இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியத்துறை

தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

 

 

11 Feb 2024


 

 



கரிப்புத் துளிகள் (அ.பாண்டியன்) நாவல் – அகூபாராவின் தரிசனம்

எம்.சேகர்

 

இலக்கியம் என்பது ஒரு படைப்பாளியின் சிறப்பான செயல்திறனால்  மட்டுமல்ல, அவனுள் ஏற்பட்ட ஒரு மாபெரும் மனவெழுச்சியினாலும் அமைவதாகும். ஒரு மனத்தின் வழியாக இன்னொரு மனத்துடன் அது உரையாடுகிறது. மனித வாழ்வின் அனுபவங்களையும் மனித செயல்பாடுகளையும் அவற்றிற்கு அடிப்படையாகவுள்ள மனத்தையும், ஆழமாகவும் அழகாகவும் விரிவாகவும் சித்தரிக்க முயலுகிறது. அவ்வகையில் இந்தக் கரிப்புத் துளிகளும் மிகவும் கவனமாக நம் மனத்திற்குள் தனக்கென ஒரு சிம்மாசனத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது.

 

நம் மண்ணின் மணங்களையும் வளமைளையும் வலிகளையையும் இன்னல்களையும் இம்மண்ணில் நம் வாழ்வாதாரப் போராட்டங்களையும் எதிர்கொண்ட சிக்கல்களையும் கடந்து வந்த பாதைகளையும் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு சமூக வாழ்வியல் ஆவணமாக இந்தக் கரிப்புத் துளிகள் புனையப்பட்டிருப்பது, நம் வாழ்வின் தடங்களை அடுத்தடுத்து வரும் தலைமுறைக்கும் ஏன் இதைப்பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்காத அல்ல இவற்றை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்தத் தலைமுறையினருக்கும் நல்லதொரு வாழ்வியல் அனுபவமாக அமைந்திருக்கிறது.

 

இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள் படைப்பினுள் நுழையும் வாசகனை ஏதோ ஒரு தவிர்க்க இயலாத இயலாமையோடு படைப்பின் பிரதேசத்தைத் தரிசிக்க வைக்கின்றன. அந்தத் தவிர்க்க இயலாமையை நாவலின் மொழியும் நாவலாசிரியர் பயன்படுத்திய உத்திகளும் தோற்றுவித்துள்ளன. பாதிப்புக்கு உட்படுகின்ற சகமனிதனின் துன்பநிலையை, சங்கடத்தை,  எழுத்தில் வைத்துத் தரும்போது நாவலின் மாந்தர்கள் எதிர்கொள்ளும் இயல்பான நிலையை வாசகனின் பார்வைக்கும் பரிசீலனைக்குமுரிய ஆவணங்களாக முன்வைத்துள்ளார் அ.பாண்டியன்.

 

கதாபாத்திரத்தின் சிறப்பினை அல்லது பண்பினை வெளிப்படுத்துவதற்கு நாவலாசிரியர் பல உத்திகளை இந்நாவலில் கையாண்டுள்ளது கவனிக்கத்தக்கது. அவை பாத்திரங்களின் தனித்தன்மையை வாசகர்கள் அறிந்துகொள்ள உதவியாய் உள்ளன. பாத்திரங்களின் புறத்தோற்றம், அசைவு, நடை, நடத்தை முறை, பழக்கம், மற்றப்பாத்திரங்களுடனான தொடர்பு, பேச்சு, தமக்குத்தாமே மேற்கொள்ளும் செயல் / தனக்குத்தானே நடந்துகொள்ளும் முறை, ஏனைய கதாபாத்திரங்கள் இதனுடன் நடந்துகொள்ளும் முறை, சுற்றுப்புறச் சூழல், பாத்திரத்தின் கடந்தகால வாழ்வு போன்றவை நாவலின் மையத்தை உள்வாங்கிக்கொள்ள மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

நாவலில் வரும் கதாபாத்திரங்களான துரைசாமி – சாந்தி – சுந்தர், பாக்கியம் - கிருஷ்ணன் – தேவா – ஜெகன், வள்ளி – செல்லையா - தனலெட்சுமி – பாலன், சூப்பர்வைசர் பீட்டர் – தனலெட்சுமி, அண்ணாமலை, ஐயாவு, டானு (மாந்தரீக சக்தி – ஜின் வளர்த்தல் என்ற பேச்சு) – சீனக்கிழவன் மற்றும் சிறப்புக் கதாபாத்திரங்களாக வந்துபோகும் முன்னாள் பிரதமர் மஹாதீர், டத்தோ சாமிவேலு அனைத்தும் இந்திய சமூகத்தின் வாழ்வியல் வரலாற்றையும் அவலங்களையும் சுமந்துகொண்டுள்ள ஒரு நிலத்தின் பதிவாகவே இருக்கின்றன.

 

பாத்திரங்களின்மூலம் வாசகனுக்கு இன்னொரு உலகை அ.பாண்டியன் காட்டியிருக்கிறார். உரையாடல்கள் பாத்திரங்களின் தன்மையை தெளிவுற உணர்த்துவதாகவும் பாத்திரப் பண்புக்கு ஏற்றார்போல உரையாடல்களை இயல்பாகவும் கதைப்போக்கின் காலத்துக்குப் பொருத்தமான மொழிநடையையும் நாவலாசிரியர் கையாண்டிருப்பது பாராட்டுக்குரியது.

 

இலக்கியம் என்பது ஒரு காலத்தின் ஒரு வாழ்க்கையின் சாசனம் என்கிறார் ஜெயகாந்தன். இந்நாவலில் வரும் அனைத்தும் பல சந்தர்ப்பங்களில் நாமே நம்மைப் போன்ற ஏனையோரைக் கண்ட, அனுபவித்த, கேட்ட செய்திகளின், அனுபவங்களின் பதிவுகளாக விளங்குகின்றன. கிரியான் ஆற்று சம்பவம், பினாங்கு பாலம் கட்டுமானம், பட்டர்வெர்த்தின் ஃபேரி தளம் சரிந்த விபத்து, பாடாங் தோட்டம், டீலோ கம்பம், கண்டெய்னர் வீடுகள், ஜாலான் பாரு முனீஸ்வரர் கோயில் (முனியாண்டி கோயில்), தோய் கம்பெனி, மைக்கா ஹோல்டிங்ஸ், பினாங்கு ரெக்ஸ் தியேட்டர், பெஸ்தா பூலாவ் பினாங் எனப் பலவற்றின் கோர்வையாக இந்நாவல் நம் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் அவர்களின் வாழ்க்கைச் சூழலையும் எடுத்துக்கூறுகிறது.

 

மலேசிய முழுமைக்கும் இடங்கள் மாறுபட்டிருந்தாலும் நிலம் வேறுபட்டிருந்தாலும் நாம் சந்திக்கும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்பது எல்லா நிலைகளிலும் எல்லா இடங்களிலும் ஒன்றாகத்தான் இருக்கின்றன. தமிழ் இளைஞர்கள் லாக்காப்பில் மரணம், கம்போங் டீலோவில் (தோட்டப்புறங்களில்) கைவிடப்பட்ட வீடுகளில் பங்களாதேசிகளும் இந்தோனேசியர்களும் மியன்மாரிகளும் குடியேறல், நாட்டானுங்களுக்கும் தமிழன்களுக்கும் இடையே உள்ள உரசல்கள் - அனாக் ஹராம், ஹிண்டு பறையா, எல்லா சாமான் வியாபாராத்தாலத்தான். அதுக்குதான் வெட்டிக்கிறானுங்க. இதுல பெரிய தலைங்க லேசுல சிக்காது. நம்ப பயலுங்கதான் மாட்டுவானுங்க’, போன்றவை நாடு முழுமைக்கும் நாம் சந்திக்கும் நமக்கான பிரச்சினைகளாகவே இருக்கின்றன.

 

பொதுவாக, நாவல் மொழிச்சிக்கலற்ற நிலையில் தன் கருத்தைக் கூறவும் காட்சிப்படுத்தவும் முனைந்திருப்பது பாராட்டுக்குரியது.  நாவலை வாசிக்கும்போது ஏற்படும் அனுபவம் என்பது, ஓரிடத்திற்குச் சென்று அங்கு நடப்பவைகளைச் சுற்றிக் காண்பது போல நாவலில் வெவ்வேறு அனுபவங்களைப் பெறவேண்டும். அத்தகைய அனுபவங்களை இந்தக் கரிப்புத் துளிகள் சாத்தியமாக்கியிருக்கிறது.

பந்தாய் கெராஞ்சூட்டின் காட்சிச் சித்தரிப்பு, அங்குச் செல்லும் மலைப்பாதை என ஒரு பிரமாண்டத்தின் வாசலுக்கு நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்வதாகவே இருக்கிறது. நாவலாசிரியர் சிறந்த கற்பனைத் திறனையும் கடல் ஆமைகள் தொடர்பான பல தகவல்கள் அவரின் உழைப்பையும் நமக்கு உணர்த்துகின்றன. இதற்கும் மேலாக அகூபாரா என்ற பிரமாண்டமான கடல் ஆமைகளின் ராணியின் தரிசனம், அவரின் எழுத்து நம்மையும் அங்கே சென்று நிற்கவைத்துவிடுகிறது.

 

இலக்கியம் என்பது அடிப்படையில் படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையிலான ஒரு தகவலியல் செயல்பாடாக அறியப்படுகிறது. சொல்லப்படுகின்றன செய்தி, சொல்லப்படுகின்ற உத்தி, உள்ளடக்க வீச்சு, செய்ந்நேர்த்தி முதலியவை குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறப்புக்கூறுகளாக இந்நாவலில் அமைந்திருக்கிறது.

 

நாவலை வாசித்து முடித்தபின் எனக்குள் தோன்றியது இதுதான். அகூபாரா என்ற பிரமாண்டத்தை மாயையை நம்மினத்திற்கு முன் முன்மொழியப்பட்ட பிரமாண்டமாக ஆர்ப்பாட்டமாக முன்வைக்கப்பட்ட மைக்கா ஹோல்டிங்ஸ் சின் குறியீடாகவே பார்க்கிறேன். இன்று போடும் பத்து காசுகள் நாளை பன்மடங்காகப் பெருகும், நம் சமூகத்திற்கு விடிவெள்ளியாக விளங்கும், நாம் இந்நாட்டில் மற்ற இனங்களுக்கு நிகராக தலைநிமிர்ந்து வாழலாம் போன்ற வெற்று வேட்டுகளின் மொத்த உருவமாகிப் போன ஒன்றின் குறியீடுதான் இந்த அகூபாரா’.

 

நீண்ட நாளைக்குப் பிறகு நல்லதொரு வாசிப்பு அனுபவத்தையும் இன்னொரு நிலத்தில் என் இனத்தின் வாழ்வியல் அனுபவத்தையும் தந்திருக்கும்  கரிப்புத் துளிகளுக்கும் அதன் ஆசிரியருக்கும் எனது நன்றியும் வாழ்த்தும்.

 

Jan 2024




தாரா (நாவல்) ம. நவீன்:

ஓர் அறச்சீற்றம் – எம்.சேகர்

 

நாவலை வாசித்து முடித்தபின் எனக்கு முதலில் தோன்றியது இந்த உணர்வுதான்.

 

தாரா ஓர் அறச்சீற்றம்

நாவலில் வரும் பழங்குடிகளின் தலைவனின் கூற்றான,

 

தலைவனிடம் அறம் இல்லாததில் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், ஒரு குலத்தில் உள்ள பெண்களிடம் அறம் பிறழும்போது அதுவே அக்குலத்தின் அழிவுக்குக் காரணமாக இருக்கும் என்பதை மறவாதே. உன் குலப் பெண்களின் கண்களைப் பார்க்கிறேன். அதில் நீதியில்லை’.

 

இதுவே இந்நாவலின் அடிநாதமாக இருந்து நாவலை இயங்கச்செய்கிறது.

 

குகனின் கொலையை மையம்படுத்தி கதை தொடங்கி, அதன்பின் தொடர்ச்சியாக நடக்கும் கொலைகள் என கதைப்பின்னல் வாசகர்களை தன்னுடனேயே இருப்பில் வைத்துக்கொள்கிறது. கதைப்பின்னல்களின் கூறுகளில் ஒன்றான இழுவிசை (Tension) கதைப்போக்குச் சிதறாமல் கொண்டு செல்வதாகும். அத்தன்மை வாசகர்களின் நாட்டத்தை (Curiosity) தொடர்ந்து நிலைநிறுத்தி வாசிக்க வைக்கும். அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை உண்டாக்கும். எதிர்நிலை (Suspense) என்பது சிக்கலைக் குறிக்கும். கதைச் சம்பவங்களை அமைக்கும்போது முரண்பாட்டை உண்டாக்கி அதனை உச்சநிலைக்குக் கொண்டு செல்வதாகும். கதையில் சிக்கல் இல்லாமல் எந்த நாவலையும்  பின்ன இயலாது. நல்லொழுக்கமும் தீயொழுக்கமும் ஒன்றுக்கொன்று மேற்கொள்ளும் போராட்டங்களை வளர்த்துச் செல்வது சிக்கலாகும். சிக்கலைத் தொடர்ந்து வளர்த்து அதனை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் வெளிப்படுத்தாமல் இருப்பது எதிர்நிலையாகும். அதேவேளையில், முரண்பாடுகளை ஆங்காங்கே கதாபாத்திரங்களின் சொல்லாடல் மூலம் உணர்த்திச் செல்வது குறிப்பு முரணாகும் (Irony). கதைப்பின்னலின் கூறுகளின் ஒன்றான இதுவும் நாவலின் முழுமைத்துவத்துக்கு முக்கியமானதாகும். மேற்கூறப்பட்ட அனைத்தையும் தாராவில் மிக இயல்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

 

இன்றைய இளைய தலைமுறை வாசகர்கள் அறிந்திராத ஒரு நிலப்பரப்பையும் அதன் தன்மையையும் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களையும் அதற்கான காரணகாரியங்களையும்  மாறுபட்ட கதைக்களத்தைக் கொண்டு அமைத்துள்ளார் நாவலாசிரியர். பல்வேறு சமூக அடுக்குகளின் நிலையான்மைகளையும் நம்பிக்கைகளையும் அச்சமூகம் சார்ந்த இன்னபிற விஷயங்களையும் மிகவும் அணுக்கமாகச்  சொல்லப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

 

ம.நவீன் அந்த நிலப்பரப்பை (சுங்கை கம்பம், தெலுக் கம்பம், கரங்கான்) மிகவும் உற்றுக் கவனித்திருப்பதால்தான் தகவல்களைச் சரியாகப் பதிவு செய்ய முடிந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் இயங்கும் படைப்பாளன் ஒரு படைப்பை உருவாக்குவற்கு முன்னர், அந்த மக்களுடன் இணையவேண்டும். அப்பொழுதுதான் அவர்களைப்பற்றித் தெளிவாக எழுதமுடியும். அந்த வாய்ப்பு நாவலாசிரியருக்கு முகவும் நெருக்கமாகவே நடந்திருக்கிறது. அதனால்தான் அவரால் சமூக உறவுகளில் மனிதன் பின்னப்பட்டிருப்பதைப்போலவே தன் நாவலிலும் பாத்திரங்கள் சமூக உறவுடையனவாய் அமைக்க முடிந்திருக்கிறது. நவீன் கதாபாத்திரங்களோடு ஒன்றி, பாத்திரத்தின் உடலுக்குள் உயிர்போலப் புகுந்துகொண்டு அவற்றை இயங்கியிருக்கிறார். அதனால்தான் அஞ்சலை, கிச்சி, முத்தையா பாட்டன், அந்தரா, சனில் போன்ற கதாபாத்திரங்களின் முழுத்தன்மையை உண்டாக்க முடிந்திருக்கிறது.

 

அடுத்த இக்கதையில் வரும் தாரா.

 

ஏற்கனவே வல்லினத்தில் பச்சை நாயகி என்ற ஒரு கட்டுரையை வாசித்துள்ளேன். அப்போது அதில் அவ்வளவாக நாட்டம் இல்லாமல் மேலோட்டமாகக் கடந்துபோனேன். ஆனால், தாரா நாவலை வாசித்தபின் மீண்டும் வல்லினப் பக்கத்திற்குச் சென்று அக்கட்டுரையை நிதானமாக வாசித்தேன். அதை எழுதியவர் கோகிலவாணி. நாவலின் வரும் தாராவின் ஷர்யா நிர்த்ய நடனம், திரிபங்கி தொடர்பான பல செய்திகளைத் தெரிந்துகொள்ள முடிந்தது. புத்தர் பிறந்த இடமான லும்பினி மற்றும் அங்குள்ள பௌத்த மடாலயங்களைப் பற்றியும் அறிந்துகொள்ளமுடிந்தது. பச்சை தாரா புத்தரின் பெண் உருவம் எனக் கருதப்படுபவர். இவர் 21 தாராக்களில் முதன்மையானவர். நாவலில் வரும் அந்தரா அந்த தாராவின் தரிசனத்திற்காக நீல நிறத் தாமரையை எடுக்கப்போகும் வேளையில் பல விபரீதங்கள் நடந்துவிடுகின்றன.

 

நாவலில் அப்பகுதியில் வசிக்கும் தமிழர்களுக்கு நோப்பாளிகளின்மேல் ஏற்படும் பகைமை, வன்மம் போன்றவையும் சமூக அடுக்குகளின் கீழ்நிலை மேல்நிலை என்ற வெறுப்பும் அவமதிப்பும் தொடர்ந்துகொண்டிருப்பது யதார்த்தமாகக் காட்டப்பட்டுள்ளது. இது நாவலின் அன்றைய சூழல் என்றாலும் நம் சமூக அளவில் இன்றளவும் தொடரும் அவலமாகவே இருக்கிறது.

 

குலதெய்வம் கந்தாரம்மன் நாவலின் மிகவும் குறிப்பிடத்தக்க குறியீட்டு கதாபாத்திரமாகும். எதையும் செய்யாமல் அமைதியாக இருக்கும் அந்த அம்மன், ஆதியிலும் கதையின் உச்சகட்டத்திலும் நிகழ்த்திய பேரழிவு நம் சமூகத்திற்கு ஓர் அபாய எச்சரிக்கையாவே இருக்கிறது. அறத்திலிருந்து நழுவும் எவரும் எந்த சமூகமும் இயற்கையிடமிருந்து தப்பிக்க முடியாது. அந்த அம்மனின் சீற்றம். ஓர் அறச்சீற்றம்.

 

நல்ல படைப்புகள் அனைவராலும் வாசிக்கப்படவேண்டும். அத்தகைய வாய்ப்பை எழுத்தாளன்தான் வாசகர்களுக்கு வழங்கமுடியும். இந்தத் தாராவை அனைவரும் வாசிக்கும் வகையில் ம.நவீன் படைத்திருப்பது பாராட்டுக்குரியது. மகிழ்ச்சிக்குரியது. வாழ்த்துகள் நவீன்.

 

Dec 2023


 



காற்றலையில் – தமிழ்ச்செல்வி

(சிறுகதைத் தொகுப்பிற்கு நான் வழங்கிய அணிந்துரை)

 

 

ஒவ்வொரு தனிமனிதனும் எப்போதும் தம்மை மேம்படுத்துவதிலும் தம்மை சகநிலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவதிலும் மிகவும் கவனமாக இருக்கிறான். அது பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் மற்றவர்மீது வன்மம் கொள்வதும் அவர்களின் சுயநல தேவைகளுக்காகச் சகமனிதர்களை அலட்சியப்படுத்துவதும் அந்நியப்படுத்துவதும் வேறுபடுத்துவதுமாக அவரவர் வாழ்க்கையில் பல மாற்றங்களையும் சிக்கல்களையும் ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நசிந்துபோகின்ற நசுக்கப்படுகிற உறவும் நட்பும் சகமனிதர்களுக்கிடையிலான மனிதநேயத்தையும் இத்தொகுதியில் உள்ள கதைகள் பேசுகின்றன.   

 

பல கதைகளில் கதாசிரியர் சிங்கப்பூர் வாழ்க்கைக்கு மாறியிருக்கும் அண்மைய குடியேறிகளின் வாழ்க்கையின் இடர்களைக் கருத்தியல் பண்புகளோடு அணுகியிருப்பது கவனிக்கத்தக்கது. ஒரு படைப்பாளி தனது படைப்பின்வழி இச்சமூகம் எதனைக் கவனத்தில்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் உடையவனாக இருக்கவேண்டும். அத்தகைய படைப்புகளின்மூலமாக தான் சொல்லவேண்டியதைத் தன் எழுத்தில் கொண்டுவருபவனாக இருக்கவேண்டும். அந்த வகையில் தன் எழுத்தில் அறத்தை நிலைநிறுத்த வேண்டிய கடமை உணர்வு ஒவ்வொரு படைப்பாளிக்கும் இருக்கவேண்டும். படைப்பு என்பது கலைத்தன்மை கொண்டதாயினும் அது வெறும் கலைத்தன்மையை மட்டும் காட்டுவதாக அமைந்துவிடக்கூடாது. இலக்கியப் படைப்பு மனிதர்களின் உயிர்த்துடிப்புகளையும் சமகால வாழ்வியியல் சிக்கல்களைப் பிரதியெடுத்துக் காட்டுபவையாக இருக்கவேண்டும். இந்தக் கடமையுணர்வு கதாசிரியருக்கு நிறையவே உள்ளது என்பதற்கு இக்கதைகளே நல்ல சான்றுகளாகும்.

 

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் மிக நேர்த்தியான சொற்கட்டமைப்பில் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. எடுத்துக்காட்டாக, பிறப்பின் பிழை கதையில்,

 

நம் உடல் உணர்ச்சிகளில்தான் மாற்றமே தவிர நம் அறிவில் திறமையில் எந்த மாற்றமும் இல்லை. உன் பார்வையை மட்டும் பார். சமூகம் உன்னைத் தேடிவரும்படி திரும்பிப் பார்க்கும்படி செய்’, சன்னல் என்ற கதையில்,

 

சிறகு கிடைத்தாலும் பறப்பதும் மட்டும் வாழ்க்கையல்ல, சிலுவை கிடைத்தால் சுமப்பதுதான் வாழ்க்கை என வரும் வரிகளும் கதைக்கு வெளியே நின்று பேசாமல் கதைக்குள்ளே நின்றுபேசுவதுதாக அமைக்கப்பட்டிருப்பது கதாபாத்திரங்களுக்கும் நமக்குமான அணுக்கமான உறவை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

 

 

வாழ்க்கையிலிருந்து வாழ்க்கையைக் கற்கவேண்டும் என்பர். அதுபோல வாழ்க்கையிலிருந்து இலக்கியம் படைக்கப்படுகிறது. அத்தகைய படைப்புகளிலிருந்து நாம் கற்றுகொள்ள, தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு. சிங்கப்பூரின் வாழ்வியல் சூழலை அறிந்துகொள்ள நாம் ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டவேண்டியதில்லை. இதுபோன்ற கதைகள் சிங்கப்பூர் குடும்பச் சூழலுக்குள் உள் நுழைந்து நல்ல படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைத் தருகின்றன.

 

 

தற்போதைய தலைமுறையோடு வருங்கால தலைமுறைக்கான அன்பு, அரவணைப்பு, பாதுகாப்புணர்வு, சகிப்புத்தன்மை, சமூக உணர்வு, நாட்டுப்பற்று ஆகியவற்றின் உறைவிடமாக குடும்பம் என்ற அமைப்பு இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு சமூகம் மேம்பட வேண்டுமாயின் குடும்பங்கள் மேன்மையுற வேண்டும். நிறை, குறைகளைப் பகுத்தறிந்து உறவுகளை ஒருங்கிணைத்துக் குடும்பங்களைக் கட்டுக்கோப்போடு அரவணைத்துச் செல்ல வேண்டும். அதில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. கதாசிரியர் ஒரு பெண்ணாக இருப்பதால் பெண்களின் உணர்வுகளைப் பெரும்பாலான கதைகளில் மிகவும் எதார்த்தமாகவும் வாழ்க்கையின் கருவூலங்களை நேர்மையாகவும் பதிவு செய்திருக்கிறார்.

 

இனி இத்தொகுப்பில் இருக்கும் கதைகளைப் பார்ப்போம். அனைத்தும் நல்ல கதைகள் என்ற ஒற்றை நேர்கோட்டில் வரிசைப்பிடித்து நிற்கின்றன.

 

 

பெண்ணானவள்

 

சிங்கப்பூரின் கட்டாய இராணுவ சேவையில் ஒரு பெண்ணின் பங்கெடுப்பைப் பேசும் கதையில் ஒரு தாயின் மனப்போராட்டத்தை இயல்பாகக் கொண்டு வந்திருப்பவர், இறுதியில் தந்தையைப் புறவயமாகக் காட்சிப்படுத்தி அவருக்குள் இருக்கும் தாய்மையை வெளிப்படுத்திக்காட்டியிருக்கும் விதம் சிறப்பு.

 

 

மெரூன் கலர் கட்டடம்

 

 

இன்று சிங்கப்பூரில் முதியவர்கள் பலர் மறதி நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அரசும் சமூகமும் குடும்பமும் முத்தரப்பாக இணைந்து இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல வழிகாட்டிகளையும் ஆதரவுகளையும் வழங்கி வருகின்றன. அத்தகைய நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரையும் அவருக்கு உதவிச்செய்ய முயற்சிக்கும் ஒருவரையும் இக்கதையின்வாயிலாக நம் மனத்திலும் நடமாடவிட்டிருக்கிறார் கதாசிரியர். இறுதியில் வாசக இடைவெளிக்குத் தாராளமான இடத்தையும் ஒதுக்கியுள்ளது அவரின் பரந்த இலக்கியத் தேடலைப் புலப்படுத்துவதாக உள்ளது.

 

 

சன்னல்

 

அண்மையில் உலகையே ஆட்டிவைத்த கோவிட் காலத்தில் அந்நியத்  தொழிலாளர்களின் வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் கதை. தொழிலாளர்களின் மன உணர்வுகளையும் ஏக்கங்களையும் வாசகனுக்கு மிக அருகில் காட்சிப்படுத்தியிருக்கிறார். அதில் வரும்,

 

சிறகு கிடைத்தாலும் பறப்பதும் மட்டும் வாழ்க்கையல்ல, சிலுவை கிடைத்தால் சுமப்பதுதான் வாழ்க்கை என்ற வரிகளில் வாழ்வின் தத்துவத்தை மிக இயல்பாக எடுத்துரைத்திருக்கிறார் கதாசிரியர்.

 

 

நான் ஒரு தடவை முடிவு செஞ்சிட்டா

 

அங்கத உணர்வுடன் கூடிய நடுத்தர வயதுடைய பெண்ணின் தன்னம்பிக்கை கதை. குடும்பங்களில் நடக்கும் இயல்பான கதை. அதுவும் சிங்கப்பூர்த் தமிழ்க் குடும்பங்களில் நிறையவே நடக்கும் கதை. படைப்பில் வெளிப்படும் கதை அல்லது கதாபாத்திரம் படைப்பாளியைப் பிரதிபலிக்கிறது என்ற கூற்றும் இக்கதையை வாசிக்கும்போது நினைவுக்கு வருகிறது.

 

 

குட்டிம்மா

 

ஓர் உளவியல் கதை. ஒரு பயம். அதற்கான காரணத்தை நம்மையும் தேட வைக்கும் கதை. சிங்கப்பூரில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து, கதையை நகர்த்தியிருக்கும் விதம் அருமை. சில நவீனக் கூறுகளின் அம்சங்களை உள்ளடக்கிய கதையாக இதை அணுகலாம்.

 

 

மனிதன் என்பவன்

 

வாழும் காலம் முழுவதும் சத்தியம், உண்மை, நேர்மை போன்றவற்றைக் கடைப்பிடித்தலின் அவசியத்தை உணர்த்தும் கதை. மளிகைக்கடை தொடர்பான கதைக்களம். வியாபாரத்தில் இருக்கும் அறநிலையை உறுதிபடுத்தும் கதையாக இருந்தாலும் அடுத்து வரும் புதிய தலைமுறையிடம் அத்தொழில் கைமாறுகிறபோது அந்த அறநிலையை கேள்விக்குறியாய் நிறுத்தும் கதை.

 

இப்பலேர்.....................ந்து

 

சிங்கப்பூரின் கல்விச் சூழலில் ஆறாம் ஆண்டு மாணவர்கள் படும் துயர்களையும் அவர்களின் பெற்றோர் கொடுக்கும் இடர்களையும் மாணவர்களின் கல்விப்பயணத்தை இனிமையாக்குவதைவிட கல்வியின்மேல் வெறுப்பை ஏற்படுத்துகிற சூழலை மிகவும் இயல்பாக ஒரு மாணவனின் பார்வையிலேயே  சில இடங்களில் அங்கத உணர்வோடும் கதையாகச் சொல்லப்பட்டுள்ளது.

 

பெட்டி கட்டியாச்சு

 

தலைமுறை இடைவெளியை மிக இயல்பாக வெளிப்படுத்தும் ஒரு பெண்ணியக் கதை. தங்களுக்கு நிகழும்போது பண்பாடு கலாசாரம் என, ஏன் இப்படி அடக்கி ஆளப் பார்க்கிறீர்கள் எனப் பெற்றோரைக் கேட்கும் பலர், தங்களின் குழந்தைகளுக்கு அவற்றையே தினிக்க முயற்சிப்பதை முரண் உணர்வுகளின் வெளிப்பாடுகளாக வெளிச்சம் காட்டும் கதை. பண்பாட்டு வெளி சார்ந்த முரண்கள் புலப்படுத்தப்படுவதுடன் ஒவ்வொருவரும் தங்களுக்கான இடைவெளிகளைப் புரிந்துகொண்டு நடக்கவேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தும் கதை.

 

 

காற்றலையில்

 

தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்து பணிபுரியும் புதிதாகத் திருமாணமான ஒர் ஆணுக்குள் நிறைந்நிருக்கும் அன்பும் காதலும் இரண்டுமாத கர்ப்பிணியாய் மனைவியை விட்டு வந்து, குழந்தை பிறந்தும் பார்க்கக்கூடச் செல்ல முடியாத ஒரு கணவனின் ஓர் அப்பாவின் மனநெருடல்கள் கதை முழுக்க வியாபித்து நமது மனதையும் ஏதோ செய்துவிடுகிறது.

 

வெங்காய மூட்டையும் ஞாயிற்றுக்கிழமையும்

 

குடும்பக் கட்டமைப்பில் ஆண்பெண் சமத்துவம் பேணப்படவேண்டும். ஒருவருக்கொருவர் மற்றவர்களின் மன உணர்வுகளைப் புரிந்து மதிப்பளிக்க வேண்டும். பெண் என்பதால் கீழ்மை என்ற எண்ணம் இருவருக்கும் இருக்கக்கூடாது. பெண்ணியம் என்பது ஒரு வெற்று விமர்சனமாக அமைந்துவிடக்கூடாது. வேலை செய்யும் பெரும்பாலான பெண்கள் அவரவர் கணவர்மார்களின்மேல் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு கதையின் மையத்தை நோக்கி நம்மை நகர்த்திச் செல்கிறது.

 

திரவ நிலை

 

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கைச் சூழலை முன் வைக்கும் கதை. வெளியில் இருக்கும் நம் பார்வை பொதுவானதாக அனைத்தையும் சமூகம் அளந்து வைத்திருக்கும் சமூக மதிப்பீட்டுகளுக்குள்தான் வைத்திருக்கும். அவரவர்களுக்கு ஒரு நியாயம் இருக்கும். அந்த நியாயத்தின் நம்பகத்தன்மையில் வெளிப்பார்வை வெறும் வெளிப்பூச்சாக மட்டுமே இருக்கும் என்பதை உணர்த்தும் கதை.

 

 

பிறப்பின் பிழை

 

நம் உடல் உணர்ச்சிகளில்தான் மாற்றமே தவிர நம் அறிவில் திறமையில் எந்த மாற்றமும் இல்லை. உன் பார்வையை மட்டும் பார். சமூகம் உன்னை தேடிவரும்படி திரும்பிப் பார்க்கும்படி செய். என அனைவருக்கும் பொருத்தமான ஒரு கருத்தை முன்வைக்கும் கதை.

ஓர் ஆண்பிள்ளைக்குள் ஏற்படும் பாலுணர்ச்சி மாற்றங்களில் குடும்பம், சமூகம் போன்ற கட்டமைப்புகளின் பொருப்புணர்ச்சிகளை உணர்த்துகிறது. இத்தனை கொடுமைமிக்க சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும்போது மனம் நடுங்குகிறது. நம்மிடமிருந்து விலக்கப்பட்ட, அந்நியப்படுத்தப்பட்ட,

ஒடுக்கப்பட்ட மனித மனங்களின் நிராசைகளையும் சிக்கல்களையும் முன்வைக்கும் கதை.

 

நிறைவாக, கதாசிரியரின் கதைகள் பெரும்பாலும் எதார்த்தவாதத் தன்மைகளைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கின்றன. ஆழ்மன ஏக்கத்தினைக் கதாபாத்திரங்களின்வழி ஆங்காங்கே கோடிட்டுக் காட்டுகிற மனோபாவம் பல கதைகளில் காணப்படுகிறது. சில கதைகளில் புறத்தே நடக்கும் சில காட்சிகளில் முரணான மனநிலைகளைப் பதிவு செய்திருக்கிறார். இவரின் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நம்மிடையே நடமாடும் மனிதர்களாகவே இருக்கிறார்கள். கதைத் தலைப்பும் கதை கூறும் முறைகளும் கதைகளின் பொருண்மைக்கேற்ப அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. சில கதைகள் வாழ்வினை உள்முகமாகப் பார்க்கிற தத்துவார்த்த தளத்தை மையமாகக் கொண்ட தேடலாக அமைந்திருக்கின்றன.

 

கதாசிரியர் இலக்கியத் துறையில் மேன்மேலும் பல சாதனைகளைப் புரிந்திட அன்பான வாழ்த்தும் பாராட்டும்.

 

எம்.சேகர்

முனைவர் பட்ட ஆய்வாளர்

இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியத்துறை

தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.