திங்கள், 30 ஜூலை, 2018

மாதொருபாகன் – பெருமாள் முருகன் (ஒரு வாசிப்பனுபவம்)


மாதொருபாகன் – பெருமாள் முருகன்
(ஒரு வாசிப்பனுபவம்)

தமிழகத்தின் நிலப்பரப்புகளில் எங்கோ ஒரு பகுதியில் உள்ள தமிழ் இனக்குழுக்களின் வாழ்வையும் எளிய மனிதர்களின் ஆசைகளையும் கனவுகளையும் தொன்மங்களையும் குலமரபுச் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் பூர்வகுடிகளின் கதைகளையும் அவர்களிடையே கனன்று கவியும் மன உணர்வுகளையும் மிகவும் அழகாகவும் அதே சமயத்தில் மிகவும் நெகிழ்ச்சியாகவும் ஆவணப்படுத்தியுள்ளார் நாவலாசிரியர் பெருமாள் முருகன். பலதரப்பட்ட மனித மனங்களின் பல்முரண் உணர்ச்சிகளையும் நம்பிக்கைகளையும் பதிவு செய்திருப்பது வாசிப்பின் படிநிலைகளை வாசகர்களிடையே பன்முகப்படுத்தியிருப்பது இந்நாவலின் தனித்துவம்.

நாட்டுப்புற வழக்காறுகளும் தொன்று தொட்டு நீண்ட பாரம்பரியத்தைக்கொண்ட பழங்கதைகளும் (ஆதிதெய்வம் தேவாத்தா, குலதெய்வம் கூளியாள், ஆணாகவும் பெண்ணாகவும் பார்ப்பவர் பார்வைக்கேற்பத் தெரியும் மாச்சாமி, தாண்டியான் கோயில், பிள்ளை தரும் மொட்டைக்கல், எழுபது சத்தியப்படிகள், காட்டூர் நோம்பி, கரடேறும் இரவு) கதையின் பின்புலமாகத் தொன்ம நம்பிக்கைகளின் வடிவில் பின்னப்பட்டுள்ளது தமிழக மண்வாசனையற்ற என்னைப் போன்றவர்களுக்கு ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தையும் வாழ்க்கை அனுபவத்தையும் தருவதாக அமைந்திருக்கிறது.

காளி, பொன்னாள், முத்து, சித்தப்பா நல்லையா என முக்கிய கதாபாத்திரங்களின் தனித்தன்மைகள் நாவலின் பல இடங்களில் வெளிப்பட்டு நிற்கின்றன. காளியின் அம்மா சீராயி, பாட்டி, மற்றும் அவர்களின் கதைகளில் வரும் தாத்தா நாச்சி, சடையப்பன் என கதையின் மையத்துக்கேற்ற கதாபாத்திர வார்ப்புகளுடன் வளர்ச்சிப்பெற்றுள்ளன. இதைத் தவிர்த்து கதையை மையத்தை நோக்கி நகர்த்துவதற்காக அவ்வப்போது வரும் கதாபாத்திரங்களும் நாவலுக்கு வலுவான தாக்கத்தைத் தந்துள்ளன.

காளியின் பாத்திரப்படைப்பில் இயற்கையோடு இயைந்து வாழும் மனப்போக்குள்ள ஓர் ஆத்மாவைக் காண முடிகிறது. அந்த வானத்தையும் அந்த இரவின் நட்சத்திரங்களையும் பூவரசம் மரமும் அதன் கிளைகளும் பூக்களும் அவன் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, நாய் என அனைத்தையும் நேசிப்பதைக் காண முடிகிறது. இதற்கெல்லாம் மேலாக, பொன்னாள்மேல் அவன் கொண்டுள்ள அன்பு அலாதியானது. அவளைத் தன்னில் பாதியாகப் பார்க்கிறான் அவன். பன்னிரண்டு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்தும் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள அவன் மனம் ஒப்பவில்லை. தான் இன்னொரு திருமணம் செய்துகொண்டால் பொன்னாள் என்னாவாள்? என்ற கேள்விக்குப் பதில் தெரிந்திருந்ததால், அவன் அம்மாவும் மற்றவரும் பல தடவை வற்புறுத்திக் கூறினாலும் அவன் ஏற்றுக்கொள்ளாமல் குழந்தை இல்லாவிட்டால் என்ன? இப்படியே வாழ்ந்துவிட்டுப் போவோம் என்ற எண்ணத்தில் அவளுடன் மிகவும் அன்பாக இருக்கிறான்.

பொன்னாள் அவனுக்காகத் தான் எதையும் செய்யும் பண்புடையவளாய் இருக்கிறாள். அவளை வறடி என்று பலரும் தூற்றும்போதும் அவமானப்படுத்தி ஒதுக்கிவைத்த போதும் அவள் பெரும் மன உளைச்சலுக்கு ஆனாலும், காளியை மற்றவர் யாரும் வறடன் என்று கேவலப்படுத்திவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறாள். கிளி ஜோசியம் முதல் குறி சொல்பவர்வரை அவர்கள் சொல்லும் அனைத்து பரிகாரங்களையும் ஒன்றுவிடாமல் செய்து முடித்துவிடுவாள். ஒவ்வொரு முறையும் அப்படி செய்துவிட்டு விலக்குத் தள்ளிப்போகுமா எனக் காத்திருந்து ஏமாந்து போவாள். பன்னிரண்டு வருடங்களாகத் தொடரும் ஏமாற்றம் இது. உயிரைப் பணயம் வைத்து, மொட்டைக் கல்லைக்கூடச் சுற்றிவந்து விட்டாள். அவள் அம்மாவும் மாமியாரும் சொல்வதைக் கேட்டுப் பின்வாங்கியவள், உறவுகளின் சூழ்ச்சிக்குழிக்குள் வீழ்ந்து விடுகிறாள். அதுவும் காளி ஒத்துக்கொண்டான் என அவள் அண்ணன் முத்து சொன்னபிறகே அவளும் காட்டூர் பெருநோம்பிக்கு வர சம்மதிக்கிறாள்.

முத்து காளியின் சிறுவயது நட்பில் வளர்ந்து தன் தங்கையைக் காளி விரும்புகிறான் எனத் தெரிந்தவுடன் பெற்றோரின் சம்மதத்துடன் கல்யாணம் செய்துவைக்கிறான். காளியின்மீதும் தன் தங்கையின்மீதும் அதீத அன்பு கொண்டுள்ளதால் அவர்கள் இருவரும் படும் வேதனைகளுக்கு ஒரு நல்ல பலன் இதன்மூலம் கிடைத்தால் இருவரும் மகிழ்ந்துபோவார்கள் என நம்புகிறான். அதற்காகத் தன் பெற்றோருடனும் காளியின் அம்மாவுடனும் சேர்ந்து பொன்னாளைப் பெருநோம்பிக்கு வரவைக்க காய் நகர்த்தி அதற்கான ஏற்பாடுகளில் எவ்விதச் சந்தேகமும் வராமல் பார்த்துக்கொள்கிறான்.

காளி – முத்து இருவரின் நட்பின் வாசம் அவர்களின் சிறுவயது அனுபவம் முதல் இன்றைய அனுபவம் வரை கதை நெடுக அவ்வப்போது வந்து நம்மைப் பரவசப்படுத்துகிறது. அவர்களின் மகிழ்வான அந்தத் தருணங்களை நாவலாசிரியர் இப்படிப் பதிவு செய்கிறார்.

அந்த வயதின் மனத்தை இழந்துபோனபின் அவையெல்லாம் அர்த்தமற்றவை என மூளை முடிவுசெய்து எல்லாவற்றையும் அழித்திருக்கக்கூடும். ஆனால், அந்த சந்தோச உணர்வை ஒன்றும் செய்ய முடியவில்லை. பெருவெளியாக விரிந்து கிடக்கிறது அது.

இவர்களின் பால்ய அனுபவங்கள் நம்முடைய வாழ்க்கையையும் பின்னோக்கி நகர்த்திப் பார்க்கின்றன. வண்ணதாசன், அந்தப் பன்னீர்மரம் இப்போது இல்லை என்ற கதையில்

நினைப்பு மட்டுமே வாழ்வில் அழகாக மிஞ்சும்போல இருக்கிறது

என்பார்.
அந்தந்தக் காலத்தில் அது அது நடப்பது இயல்பானது என்றாலும், ஒரு நாள் என்றாவது ஒரு நாள் அந்த நினைப்பு வரும்போது வாழ்வின் இன்பதுன்பம் இரண்டும் வெவ்வேறு வெளிகளில் நின்றுகொண்டு நமக்கான உணர்வலைகளை ஏற்படுத்தத் தவறுவதில்லை. இந்நாவலும் அப்படித்தான். மனித மனத்தின் சுயம்புகளை அவரவர் சூழலுக்கேற்ப மிகவும் இயல்பாகப் பதிவு செய்துள்ளது.

எத்தனை வருஷக்கணக்காய் உடனிருந்தாலும் சில சந்தர்ப்பங்கள் அமையும்போதுதான் சில முகங்கள் தென்படுகின்றன. சந்தர்ப்பங்களே வாய்க்காமல் உள்ளே மூடிக்கிடக்கும் முகங்கள் எத்தனையோ வெளிப்படாமலேயே புதைந்துபோய் விடுகின்றன.

மனிதன் ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்றவாறு தன் முகத்தை அடிக்கடி மாற்றிக்கொள்வதால் அவனின் நிஜ முகம் அவனுக்கே மறைந்துபோகிறது. நாளடைவில் அதனுள் அவனே தொலைந்தும் போகிறான்.

இந்நாவலில் வரும் பேச்சு வழக்காறுகள் பல தலைமுறையாகத் தொடர்பவையாக இருக்கின்றன. காடு, தொண்டுப்பட்டி, மண்டி, நோம்பி, பெருநோம்பி, சாமி கரடிறங்கி கரடேறுதல் என அவர்களின்  வாழ்வியல் மண்டலத்தைப் பின்னிப் பிணைத்தவையாகவும் அன்றைய பண்பாட்டின் அசைவாக்கங்களாகவும் இருக்கின்றன. கதைக்குத் தேவையான பட்சத்தில் அவ்வப்போது சில இடக்கர் சொற்கள் பேச்சினூடே வந்து விழுந்துவிடுவதையும் தவிர்ப்பதற்கில்லை. அவற்றைக் கடக்கும்போது மனத்தை நெருடினாலும், கதைக்கு இயல்பான வழக்காறுகளாக இருப்பதால் சமாதானத்துடன் கடந்து செல்ல முடிகிறது. ஆனால், எத்தனை பேருக்கு இப்படிக் கடந்து செல்ல இயலும் என்பதே இங்குக் கேள்வியாக இருக்கிறது. ஆனால், தனது முன்னுரையில் நாவலாசிரியர், இதை வாசிப்போரில் சிலர் அசௌகரியாங்களை உணர்ந்தால் வாசிப்பதைத் தவிர்த்துவிடுவது உத்தமம் எனக் குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

பெருநோம்பி அன்னைக்கு காலடி எடுத்து வைக்கற ஆம்பளைங்க எல்லாரும் சாமிதான். கொடுக்கறது சாமிதான். சாமியா நெனச்சுக்கிட்டாப் பிரச்சினை ஒன்னுமில்ல. எந்தச் சாமி எந்த மூஞ்சியோட வரும்னு ஆருக்குத் தெரியும். மூஞ்சி தெரியாத கொடுத்திட்டுப் போறதுதான் சாமி

காளியின் அம்மா அவனுடன் பேசும் இந்தப் பேச்சு, இதை ஒரு தொன்மத்தின் வழமையாகத்தான் அவர்கள் அணுகுகிறார்கள் என்பதை உணர்த்துகிறது. குழந்தை பிறப்பதற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு வழமை வழக்கிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றால், அவ்வளவு எளிதில் சுலபமாக நாம் புறந்தள்ளிவிடமுடியாது என்றே தோன்றுகிறது. நம் சமூகத்தில் அன்று மட்டுமல்ல, இன்றும்கூட பொது இடங்களில் நாங்களும் மனிதர்கள்தான் என்று காட்டிக்கொள்ளத் தம்பதியினருக்குக் குழந்தை பிறப்பு அவசியமாக இருக்கிறது. நாலு இடத்திற்குச் சென்றுவர அவர்களுக்குக் குழந்தை பிறப்பு அவசியமாக இருக்கிறது. இன்றைய நவீன காலத்தில் பல நவீன சிகிச்சைகள்மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனைத்து சாத்தியக்கூறுகளும் நம்மிடையே இருக்கின்றன. ஆனால், அன்று நம்பிக்கைகளும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் பரிகாரங்களும் மட்டுமே. இந்தப் புரிதல் இருந்தால் இந்நாவல் நமக்கும் பிடிக்கும். நாவலின் கதாபாத்திர வாழ்க்கையின் யதார்த்தங்களோடு நம்மால் பயணிக்க முடியும்.

நாவலின் எளிய நடையும்  அழகியக் காட்சி விவரிப்புகளும் உணர்ச்சிகளின் ஏந்தல்களும் தொன்மங்களின் முரண்களும் நம்மை இந்நாவலுக்குள் ஆர்வத்தோடு பயணிக்க வைக்கின்றன. நல்லையா சித்தப்பாவின்மூலம் இந்த வாழ்க்கைக்கான அவரின் வித்தியாசமான தரிசனத்தைப் பதிவுசெய்துள்ளது இந்நாவல்.

நமது வாசிப்புத் தளத்தை இன்னொரு வெளியில் நிறைத்திருக்கிற நாவலாசிரியர் திரு. பெருமாள் முருகன் அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும்.

அன்புடன்,
எம். சேகர்.


1 கருத்து:

  1. காளியின் பின் வாழ்க்கை எப்படி இருந்தது என்று இரு கோணத்தில் எழுதிப் பார்த்த நாவல்தான் அர்த்தநாரி,ஆலவாயன் அவசியம் வாசியுங்கள் தோழர்

    பதிலளிநீக்கு