ஞாயிறு, 8 ஜூலை, 2018

ஞஞ்ஞை - மில்லத் அஹ்மது - ஒரு விமர்சனப் பார்வை


ஞஞ்ஞை – மில்லத் அஹ்மது – தமிழ் முரசு (8 - 7 - 2018) 
ஒரு விமர்சனப் பார்வை

இருத்தியல் வாதம் அல்லது இருத்தவியல் வாதம் தற்போதைய மனிதனின் இருப்புநிலையைப் பற்றிப் பேசுகிறது என்பர். இறந்தகாலமோ எதிர்காலமோ இங்கு முக்கியமாகப்படுவதில்ல. வாழ்வின் பிடியில் சிக்கித் தவிக்கும் மனிதன் தன் இருப்புக்குத் தேவையானவையை மட்டும் முன்நிறுத்தி அதையே பற்றிக்கொள்ள முனைகிறான். இந்தச் சமூக வாழ்க்கையில் பல நெருக்கடிகளைச் சந்திக்கும்போது அவனால் நிதானமாகச் சிந்தித்துச் செயல்படமுடியாமல் போகிறது. ஆற்று வெள்ளத்தில் சிக்கியவன்போல் ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கிறான். அச்சமயத்தில் அதுதான் அவன் வாழ்க்கைக்கான இருப்பு. தனக்கு விருப்பப்பட்டதைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு சமூகப் பண்பாட்டு விழுமியங்களைச் சிந்திக்கவியலாமல் அவனின் இருப்புநிலையில் சுதந்திரமாகச் செயல்பட விரும்புகிறான். சூழ்நிலைக்கேற்பத் தனக்கேற்றதைத் தானே முடிவெடுத்துக்கொள்ளும்போது சில விபரீதங்களும் நம்மையும் மீறி நிகழ்ந்துவிடுவது உண்டு.

இப்படிப்பட்ட ஒரு சூழலையொற்றியே படைப்பாளர் மில்லத் அஹ்மது தனது ஞஞ்ஞை என்ற சிறுகதையில் ரகு, சந்திரன், புகழேந்தி, பவித்திரா, அஷ்ரப் போன்ற பாத்திர வார்ப்புகளின்மூலம் தனது புனைவியலில் கற்பனா சக்தியின் துணையுடன் ஒரு கதைக்களத்தை உருவாக்கி நம்மையும் அவருடைய எழுத்தினூடே பயணிக்க வைக்கிறார். மேலும், இக்கதையை அவர் நகர்த்திச் செல்லும் விதம், மனித மனத்தின் மனப்போக்குகளின் விகாரங்கள் என்னென்ன என்பதை நாசுக்காகவும் ஆனால், மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டும் பாங்கு மில்லத் அஹ்மத் அவர்களின் தனிச்சிறப்பு என்றே கூறலாம்.

இக்கதையின் வாயிலாக படைப்பாளரின் கதை கூறும் முறைமை, பாத்திர வார்ப்பு, கதைக்களம், மொழிநடை போன்ற அம்சங்கள் தெளிவாகக் கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இறுதிவரை கதையினுள்ளே வாசகனை இழுத்து வைத்திருக்கும் விதமும் முடிச்சுகளின் கட்டவிழ்ப்புகளும் மிகவும் கவனத்துடன் கையாளப்பட்டுள்ளது போன்றவை திரு. மில்லத் அஹ்மது  அவர்களை நமக்கு நல்லதொரு கதைசொல்லியாகவும் அடையாளப்படுத்தியுள்ளது.

ஓர் எழுத்தாளனைக் காட்டிலும் வாசகனுக்கும் வாசிப்புப் பிரதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஓர் இலக்கியச் சூழலில் நாம் வாழ்கிறோம். எந்தவொரு யதார்த்தவாதப் படைப்பாளனும் தன்முன் விரிந்து கிடக்கும் யதார்த்தங்களில் ஒரு சிலவற்றையே தேர்வுசெய்து, அந்த சிலவற்றுக்குள் அதிக முக்கியத்துவம் கொடுத்து, சிலவற்றை வேறு சிலவற்றில் பொதித்துவைத்துக் காட்ட முற்படுகின்றான். இக்கதைப் படைப்பிலும் சமகாலத்தில் நடப்பதைத் தன் கதையாடலின்மூலமாக நமக்குள் கடத்திவிடக் கதாசிரியர் இம்முறையைக் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார் என்றே கூறலாம்.

புனைகதைகளை வாசிக்கும்போதும் கேட்டும்போதும் ஒவ்வொருவரும் தத்தம் உள அமைப்பிற்கு ஏற்பவே காட்சிகளை மனத்தில் கட்டமைத்துக்கொள்கின்றனர். அவ்வாறான கட்டமைப்பைக் கதையின் மையத்துடன் இணைத்து ஏற்றம் பெறச் செய்வதற்கான சொற்கோப்புகள் முக்கியமானவையாகும். சொற்களால் உள்ளத்தில் காண்பியங்கள் உருவாக்கப்பட்டாலும் அச்சொற்களைக் காட்டிலும் காண்பியங்களே வாசகனின் உள்ளத்தில் ஒருவகை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவ்வகையில் இக்கதையின் மையத்திற்கு ஏற்ற சொற்களின் கட்டமைப்புகள் வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. கதையை எடுத்துரைக்கும் முறைமையும் வாசகர்களிடத்தில் வெறும் எழுத்துவடிவத் தொடர்பாடல் என்ற நிலையையும் கடந்து காண்பியத் தொடர்களாக அல்லது காண்பிய அலைகளின் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டுள்ளதும் இக்கதைக்குத் தனிச்சிறப்பைத் தருகிறது. எடுத்துக்காட்டாக,

சந்திரனை ராகு கொஞ்சம் கொஞ்சமாக விழுங்க... என்ற குறியீட்டுப்படிமம் இருமுறை கதையில்கையாளப்பட்டுள்ளதும் பதினாறாம் நாள் சூழல்களின் விவரிப்பும் புகழேந்திக்கு எற்படும் யாதார்த்தை மீறிய சொல்லுரைப்புகளும் காட்சிப்படுத்துதலும் ஒருவித அமானுஷ்ய உணர்வும் வாசகர்களிடையே கதைக்கான இருப்பை தக்கவைத்துக்கொள்கின்றன.

ஒரு கொலையில் தொடங்கும் கதை, அதற்கான காரணகாரியங்களைப் பின்னோக்கியும் முன்னோக்கியும் அதன் தொடர்பான இன்னொரு மரணத்தின் வாயிலாக நம்முன் காட்சிப்படுத்தப்பட்டு, இதில் இரண்டிலுமே சம்பந்தப்படாத ஒருவரின்மூலம் கதையின் முடிச்சு அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

நிறைவாக, சமூக விழுமியங்ளை மீறுகின்றபோது அதற்காக நாம் கொடுக்கின்ற விலையும் அதிகமாகவே இருக்கும் என்கிற ஒருவரிச் செய்தியைச் சமூகத்திற்குச் சொல்லிச் செல்கிறது ஞஞ்ஞை என்று நல்ல தமிழில் தலைப்பிடப்பட்டுள்ள கதை. ஞஞ்ஞை என்பதற்கு மயக்கம் என்று பொருள் கொள்ளலாம். ரகு – பவித்ரா இருவருக்குமான அந்த மயக்கமே கதைக்கான மயக்கம். ஆனால் அம்மயக்கத்தில் பவித்ரா தொடர்பயணத்தில் இருப்பது மனத்தைக் கொஞ்சம் வருடவே செய்கிறது. சிகப்பு ரேஜாக்கள் வசனத்தைப்போன்ற அந்த வசனத்தைத் தவிர்த்திருக்கலாமோ என்று கதையின் முதல் வாசிப்பில் தோன்றியதையும் மறுப்பதற்கில்லை.

நல்ல முயற்சி. வாழ்த்துகள் திரு. மில்லத் அஹ்மது.
அன்புடன்,
எம். சேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக