(10)
நீர் படரும் அடையாளம்
காட்சி காட்டும் அடையாளங்கள்
ஏதோ சங்கடத் தவிப்புகளாய்
நிறம் கண்டு அழிந்தொழித்தும்
மீண்டும் மீண்டும் தன் சுயத்தை
வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது
முன்னவன் எதனையும் தனக்கென்று இல்லாமல்
உலகுக்கு ஈந்தவன்
என் பேரனின் பிஞ்சுக் கரங்களில்
அழுந்தி பிடிக்க தேடியும் கிடைக்கப்பெற்றதில்லை
எந்த அடையாளமும்
நதிக் கரையின் படுகைகளில்
பரந்துக் கிடந்தவை
யாருமற்றதாய் ஆகிப்
போனது
மூழ்கியவனுக்குத்
தட்டுப்பட்ட அடையாளம்
என் பேரனின் நெஞ்சு குருதியின்
தவிப்பை ஆசுவாசப்படுத்தும்
@@@@@@@@@@
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனப் பாடிச்சென்றார் சங்க காலப்புலவர் கணியன் பூங்குன்றனார். இதுவே நம் முன்னோர்களின் இவ்வுலகைப் பற்றிய
பரந்த விரிந்த பார்வைக்கு நல்லதொரு முன்னுதாரணமாகும். பொதுவுடைமையை அன்றே தனது
வாழ்வியல் சித்தாந்தமாகக் கொண்டு வாழ்ந்தவன் அன்றைய தமிழன் என்பதற்கு இதைவிட வேறு
நல்ல சான்றுகள் வேறென்ன வேண்டும். தொல்காப்பியரும் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இலக்கணம் கண்டு, உலகில் வேறெந்த
மொழியின் இலக்கணத்திலும் இல்லாத பொருளதிகாரத்தையும் நமக்குக் கொடுத்துச்
சென்றுள்ளார். வள்ளுவரோ வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து நல்லொழுக்கங்களையும்
விழுமியங்களையும் அறம், பொருள், இன்பம்
எனப் பிரித்து, தனித்தனியாக குடிமக்கள் முதல் அரசாள்பவர்கள்
என உலக மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு திருக்குறளைப் படைத்தார். நம்
முன்னோர்களின் ஆக்கங்களைக் கவிதையில் நயமாகச் சொல்கிறார் கவிஞர் எம்.கருணாகரன்
இப்படி.
முன்னவன் எதனையும் தனக்கென்று இல்லாமல்/உலகுக்கு ஈந்தவன்
பொருள்
தேடவும், வணிகத் தொடர்பாகவும் தமிழர்கள் கடல் கடந்து சென்றதும் தமிழ்
இலக்கியங்களில் செய்திகளாத் தொகுக்கப்பட்டுள்ளன.
‘’கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி’’ என்ற பெயரால்
கடலில் இறந்த செய்தியும்,
‘’கடல் பிறக் கோட்டியவன்’’ என்ற சிறப்பால் கடலுள்
சென்று வென்ற செய்தியும் குறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
‘’திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’’ என்பதும்,
‘’முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை’’ என்பது
போன்றவையும் தமிழன் கடல் கடந்து சென்ற செய்திகளை நமக்குக் குறிக்கின்றன. கப்பற்படை,
நாவாய் ஓட்டம், நெய்தல் வாழ்க்கை இவையெல்லாம் தமிழரின்
கடல் வெல்லும் ஆற்றலைக் காட்டுகின்றன. பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான
பட்டினப்பாலையில், கடியலூர் உருத்திரங்கண்ணனார்,
‘கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து
உணவும் காழகத்து ஆக்கமும்’
பூம்புகார்
நகரில் இருந்த ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலையில் என்னென்ன பொருட்கள் வந்து
சேர்கின்றன என்பதைப் பாடுகிறார். இவ்வரிகளில் வருகின்ற காழகம் என்ற வார்த்தை
மலாயாவின் அன்றைய காடாரத்தைக் (கெடா) குறிப்பதாகும். இப்படிப் பல வரலாற்றுச்
செய்திகளைப் பண்டைய தமிழர்கள் இலக்கியத்தினூடே சொல்லிச் சென்றுள்ளனர். ஆனால்
இலக்கிய ஆதாரங்களின் நம்பகத்தன்மையின் காரணமாக அவை முற்றாக
ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும்கூட, அவ்வப்போது அகழ்வாராய்ச்சியின் மூலம் தமிழர்கள்
வாழ்ந்த சுவடுகள் கண்டுபிடிக்கப்படுவதும் பின், அது வெறுமனே
கிடப்பில் போடப்பட்டு ஓர் இனத்தின் வரலாறு திட்டமிடப்பட்டு மூடி மறைக்கப்படுவதும்
இன்றைய சூழலில் அனைவரும் அறிந்ததே. நான் படித்த காலத்தில்,
வரலாற்றில் இருந்த பரமேஸ்வரன் இன்றைய வரலாற்றுப் பாடங்களில் இருக்கிறானா என்பதும்
சந்தேகமே.
கெடாவின்
பூஜாங் பள்ளத்தாக்கு, போராக்கின் கங்கா நகர்,
ஜொகூரின் கோத்தா கெலாங்கி முதல் அண்மைய மாலாக்கா ஆற்றுக்குக் கீழே இரண்டு கிலோ
மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நம் சார்ந்த வரலாறுகள் எல்லாம் வெறும்
வாய்ஜாலங்களாக மட்டும் வந்து பின், சமாதிநிலை அடைந்து
விடுகின்றன. இதனைக் கவிதை வரிகள் அழகாகப் பதிவு செய்துள்ளன.
நதிக் கரையின் படுகைகளில்/பரந்துக் கிடந்தவை/யாருமற்றதாய்
ஆகிப் போனது
மேலும்,
நமக்கான அடையாளத்தைத் தேடும் அடுத்த தலைமுறையினருக்கு இதுபோன்ற வரலாற்று ஆவணங்கள்
தொடர்பான செய்திகள் வரும்போது அவர்கள் மனம் கிளர்ச்சி கொள்கிறது. இத்தகைய
வரலாற்றுக்கு உரிய தலைமுறையின் வாரிசா நான் என்ற பெருமிதம் கொள்ளச் செய்யும். தம்
அடையாளத்தை நோக்கிய அவர்களின் பயணத்தைத் தொடரச் செய்யும். ஒரு தனிமனிதனோ அல்லது
ஓர் இனமோ தாங்கள் யார் என்பதை உணர்ந்துகொள்ள முனைந்தால்,
தங்களின் அடையாளத்தையும் சுயத்தையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினால், அதற்கான தேடலைத் தீவிரப்படுத்தினால் அந்தத் தனியொருவனின் வெற்றியையோ
அல்லது அந்த இனத்தின் எழுச்சியையோ யாரும் தடுத்துவிட முடியாது. இக்கருத்தினை தனது
கவிதையில் மிக ஆழமாகவும் யதார்த்தமாகவும் சமகாலத்தின் அண்மைய செய்தித் தொகுப்புடன்
பதிவு செய்துள்ளார் கவிஞர்.
மூழ்கியவனுக்குத்/தட்டுப்பட்ட அடையாளம்/என் பேரனின் நெஞ்சு குருதியின்/
தவிப்பை ஆசுவாசப்படுத்தும்
அண்மைய காலமாக ஒவ்வொரு கவிதையிலும் எம். கருணாகரனின்
கவிதையாக்கம் வெவ்வேறு உணர்வுகளைக் காட்டி வருவது பாராட்டுக்குரியது. அவரின் கவிதை
மொழி அதற்கான பாடுபொருளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் மிகவும் கவனமாகவே
நடைபயில்கிறது. அவரின் எழுத்து தமிழனின்
மேன்மைக்கும் எழுச்சிக்கும் சான்றாய் விளங்கட்டும். வாழ்த்துகள்.
-
முற்றும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக