ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

மக்கள் ஓசை கட்டுரைத் தொடர் - கவிதைகளுடன் உரையாடல் 8
(8)

தீ


பிம்பம் உடைந்து சிதைவுக்குள்ளாவதை
மறைக்க சக்தியின்றி குமுறி அழுகையில் யாருமிருப்பதில்லை


எங்கனம் தாங்கிட இயலும்


கண நேரத்திலும் அதிர்வின்றி
வேய்ந்த அம்பின் விஷம்
சாய்த்து விட்டு
கமுக்கமாய்
புறப்பட்டு போய்விடுகிறது


அதன் வீச்சு
கனன்று எரியும்
எரித் தனலைக் காட்டிலும்
வெப்ப உணர்வில்
அமிழ்கிறது


ஏதும் அறியா இந்தப்  பறவை
தேடியலையும் திசையின்றி
மீண்டும் வந்தமரும்
மரக் கிளையிலும்
பற்றி எரிகிறது
தீ


@@@@@@@@@@


சமூகத்தின் ஓர் அங்கமாய் அதனோடு இயைந்தும் முரண்பட்டும் பல சூழல்களில் வாழ்கின்றவன் மனிதன். மனித குலத்தில் தானும் ஒருவனாய் வாழும் அவன், வாழ்க்கைச் சூழலின் நடைமுறைகளின் காரணமாக அமையும் உணர்வுநிலையின் வெளிப்பாடுகளின் ஒரு வடிகாலாகக் கவிதையைக் கையாளுகிறான். அவனால் வடிவமைக்கப்படுகின்ற அக்கவிதையில் அவன் வாழுகிறான். அவனைப்போன்ற பிறரும் வாழுகிறார்கள். அவனைப்போலவே பிறரும் அதனை அவரவர் நிலையில் இருந்தும் புரிதலில் இருந்தும் எதிர்கொள்கிறார்கள். எனவே கவிதையானது அதன் தோற்றம், அதன் பொருள், அதன் பயன்பாடு ஆகிய மூன்று நிலைகளிலும் சமூகத்தோடு நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையதாக விளங்குகின்றது.


மேலும், சமுதாய வரலாற்று மரபின் ஒரு காலகட்டத்தில் தோன்றுகின்ற ஒரு குறிப்பிட்ட இலக்கியம், படைப்பாளியின் அனுபவ உணர்வுகளைப் பெற்று வருகின்றபோது, அக்காலச் சூழலின் தேவைகளுக்கும் படைப்பாளியின் படைப்பாற்றல்களுக்கும் மற்றும் நோக்கங்களுக்கும் ஏற்ப வடிவமைப்பிலும் பாணியிலும் குறிப்பிட்ட சில தன்மைகளையும் போக்குகளையும் பெற்றுவிடுவது தவிர்க்க இயலாததாகும். இந்த மாற்றமானது வலியச் சென்று நிகழ்த்தப் பெறுவதில்லை. இயல்பாக யதார்த்தமாக நிகழ்வது. இலக்கியத்துக்கும் சமூகத்துக்கும் இடையே உள்ள உறவுகள் புலனறிவு போல மிக இயல்பானதும் எளிமையானதுமாகும். ஒப்பிலக்கிய அறிஞர் ஹேரி லெவின், படைப்பிலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள உறவானது சமுதாய காரணங்களின் விளைவு மட்டுமல்ல, சமுதாய விளைவுகளின் காரணமுமாகும் என்று கூறுகின்றார்.நம் சமூகத்தின் இணைமுரண் சிந்தனைகளை எதிர்நோக்கும் ஒரு படைப்பாகவே எம்.கருணாகரனின் தீ என்ற கவிதை எனக்குள் கிளை விட்டு விரிந்து படர்கிறது. ஒரு தனிமனிதனுக்குள்ளிருந்து வெடித்துச் சிதறும் உள்ளக்குமுறலாகவும் ஒட்டு மொத்த சமூகத்தையும் பிரதிபலிக்கும் ஒரு மொழியாகவும் மொழியப்பட்டுள்ளது. கவிதையின் சுதந்திரமான மொழி விளையாட்டும் வார்த்தைத் தேர்வுகளும் இக்கவிதை சொல்லவரும் செய்தியை அவரவர் புரிதலுக்கு ஏற்ப விரித்துப் பார்க்கும் தன்மை வாய்ந்ததாகும். இன்றைய படைப்புலகில் படைப்பவன் என்ன சொல்ல வருகிறான் என்பதைவிட, அப்படைப்பின் மூலம் வாசகன் எதைப் புரிந்துகொண்டான் என்பதே பிரதானமாகும். இதுபோன்ற கவிதைகள், முடியும் இடத்திலிருந்துதான் இன்னொரு தொடக்கத்தை நோக்கி நகரும்.தீ என்பது வீட்டில் சமைக்கவும் ஒளிதரவும் உதவும். அதற்கு முரணாக வீட்டை அழிக்கவும் தயங்காது. அதன் சீற்றம் தேவைகளுக்கேற்ப இருக்கும்போது யாருக்கும் எந்தத் தீங்கும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. ஆனால் அச்சீற்றமானது அதன் எல்லையத் தாண்டினால் அழிவு என்பது நிச்சயமானதாகிவிடும். தமிழினத்திற்கு ஓர் அபாயச் சங்காகவே இக்கவிதை எச்சரிக்கை ஒலியை எழுப்புகிறது. இப்போதே விழித்துக்கொள்ளவில்லை என்றால் இனி நம்மால் எப்பவுமே எழுந்திரிக்க முடியாத அளவுக்கு அடிகள் நம்மேல் விழக் காத்திருக்கின்றன என்பதை மறைமுகமாகச் சுட்டுகிறது.


கண நேரத்திலும் / அதிர்வின்றி வேய்ந்த அம்பின் விஷம் / சாய்த்து விட்டு / கமுக்கமாய் புறப்பட்டு போய்விடுகிறது /


என்ற வரிகள் நம்மையறிமாலேயே நாம் இழந்துகொண்டிருப்பதை நிறுவுகிறது.


ஒரு தனிமனிதனாக, ஒரு சமூகமாக, ஓரினமாகக் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால், நாம் அடைந்ததைவிட இழந்தவைகள்தான் அதிகமாக இருக்கும். எதையும் யாரும் நம்மிடமிருந்து பிடுங்குவதில்லை. நம்மைத் தூக்கி எறிவதுமில்லை. ஆனால் அது இயல்பாகவே நடந்துகொண்டிருக்கிறது. இறுதியில் நாமாகவே தூக்கிப் போட்டுப் போயிவிடுகிறோம். நம் கண்முன்னே தெரிபவை மட்டும் இழப்புகள் அல்ல. நமக்குத் தெரியாமலேயே பல இழப்புகள் இரகசியமாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுகின்றன. இது இன்றோ நேற்றோ போட்ட திட்டமில்லை. இச்சமூகத்தைத் திட்டமிட்டு அழித்திட, இழிவு படுத்த பல்லாண்டு காலமாகவே  திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டு வரும் செயல்கள் அவை. இதுதான் இங்கு நிதர்சனமான உண்மையாகும். இக்கருத்தினை மிகவும் இயல்பாக விளக்கிச் செல்கின்றன அடுத்து வரும் வரிகள்.


அதன் வீச்சு / கனன்று எரியும் / எரித் தனலைக் காட்டிலும் / வெப்ப உணர்வில் அமிழ்கிறது /


மேலும், நம் சமூகத்தின் இயலாமையை உணர்த்தும் வகையில் வரும் அடுத்த வரிகள்,
மிகவும் மென்மையாக ஓர் இனத்தின்மீது மிகவும் கவனமாகத் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட அவலங்களை வன்மமாக வரைகிறது.


ஏதும் அறியா இந்தப்  பறவை / தேடியலையும் திசையின்றி / மீண்டும் வந்தமரும் மரக் கிளையிலும் / பற்றி எரிகிறது / தீ /


இக்கவிதை ஒரு தனிமனிதன் வாழ்க்கைக்குள் அவன் சார்ந்த சமூகத்தின் வாழ்க்கையைக் காட்டுகிறது.-    தொடரும்  (நன்றி மக்கள் ஓசை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக