சனி, 6 மே, 2017

சிறுகதையின் இலக்கணமும் அகிலனின் பூச்சாண்டி சிறுகதையும் – எம்.சேகர்


சிறுகதையின் இலக்கணமும் அகிலனின் பூச்சாண்டி சிறுகதையும் – எம்.சேகர்


முன்னுரை


சிறுகதை நம் காலத்தில் வளர்ந்துவரும் ஓர் இலக்கியப் பகுதியாகும். தமிழ் மொழி ஏனைய துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதா என்பது ஐயத்திற்கு இடமான ஒன்றாயினும், ஒரு துறையில் அது முன்னேற்றம் பெற்றுள்ளது என்றால் அது சிறுகதை இலக்கியமேயாகும்.


கதை உதவியின்றி இக்காலத்தில் ஒரு மாத இதழோ, வார இதழோ பிரசுரம் ஆவதில்லை. மனித மனம் என்றுமே கதையில் ஈடுபடும் இயல்பு கொண்டது. எனவே எழுத்து ஊடகங்கள் இப்பகுதியை வளர்த்தாலொழிய மக்கள் மனத்தைக் கவர இயலாது என்ற நிலையிலும் பக்கங்களை நிரப்ப வேண்டும் என்ற மற்றொரு நிலையிலும் நிறைய சிறுகதைகளைத் தத்தம் இதழ்களில் சேர்த்துக்கொள்கின்றன. ஆனால் அப்படி பிரசுரிக்கப்படும் அத்தனை படைப்புகளும் சிறந்தவை என்று கூறுவதற்கில்லையாயினும், சிறுகதைத் துறை வளர்ச்சிக்கு இது மேலும் ஒரு படிக்கல்லாக அமைந்திருக்கிறது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகும்.


மேலைநாட்டவரின் வரவால் நமக்கு பரிச்சயமான இச்சிறுகதைத் துறையின் சிறந்த படைப்பை நாம் எவ்வாறு மதிப்பிடுவது? அந்தப் படைப்பின் வெற்றி என்பது என்ன? அதை நிர்ணயிக்கும் அளவுகோல் எது? என நாம் ஆராய வேண்டுமாயின், சிறுகதைகளின் இலக்கணங்களாகச் சொல்லப்படுகின்ற சில கூறுகளை அறிய வேண்டியது அவசியமாகிறது.


எட்கார் ஆலன் போ என்ற சிறுகதையாசிரியர்,
சிறுகதையாவது அரை மணியிலிருந்து ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்திற்குள் படித்துணர்தற்குரிய உரைநடையில் கூறப்படும் கதையாகும்

என்கிறார். வில்லியம் என்றி ஆட்சன் என்பவரோ,

ஒரே மூச்சில் படித்து முடித்தற்குரிய கதையே சிறுகதை
என்கிறார்.

சிறுகதையின் இலக்கணக் கூறுகளாக மேலை நாட்டவரால் கூறப்பட்ட சிலவற்றைக் காண்போம்.


கரு

சிறுகதையின் பொருள் குறிப்பிட்ட வரையரைக்குள் திறம்பட விளக்கதற்குரியதாக இருத்தல் வேண்டும் என்று கூறப்படுகிறது. கதையினை எழுதி முடித்த பிறகு, இதைவிட இன்னும் சிறப்பாக விளக்க இயலாது என்ற உணர்வு ஒரு படைப்பாளனுக்கு ஏற்பட வேண்டும். கதையின் செய்திகள் மிகத் தெளிவாகவும் வாசிப்போரின் மனத்தைக் கவர்வனவாகவும் இருக்க வேண்டும். சில சமயம் கதாசிரியர் கருவினைத் தெளிவாகக் கூறிவிடுவார். சில சமயங்களில் அது மறைமுகமாகவும் உணர்த்தப்படும். கருவே கதையின் மையத்தை அல்லது செயல் நோக்கத்தைத் தருகிறது. சிறுகதைகளில் ஒரே நோக்கமும் ஒரே விளைவும்தான் எதிர்பார்க்கப்படுவதாகவும் நோக்கம் நிறைவேறும் வகையில் கதை அமைந்திருத்தல் போதுமானதாகும் எனவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் மக்களின் வாழ்வியலோடு ஒத்திருக்கும் கரு, வாசிப்பவரின் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன எனக் கூறப்படுகிறது.


நிகழ்ச்சி


கதை ஒரே நிகழ்ச்சியை அல்லது ஒரே தருணத்தைப் பற்றியதாக இருத்தல் வேண்டும் எனப்படுகிறது. இருப்பினும், ஒரே நிகழ்ச்சியினைப் பற்றி கதை அமையவேண்டுமென்பதில்லை எனவும் ஒரு நிகழ்ச்சிக்கு மேலும் இடம்பெறலாம் எனவும் கூறப்படுகிறது. அதன் அடைவு நிலையும் வெற்றியும் கதையை விளக்கும் திறத்தையொட்டி அமைவனவாகும். ஆனால், கதைக்குத் தேவையற்றவைகள், கதைக்கருவோடு ஒட்டாத சம்பவங்கள், சொற்கள் சிறிதும் இடம்பெறக்கூடாது. சிறுகதையின் எல்லைக்குள் அடங்கும் நிகழ்ச்சியோ அல்லது சம்பவமோ வேண்டும். அவையும் பூர்ணமாக அமையவேண்டும்.


பாத்திரப் படைப்பு


பாத்திரங்களைப் படைக்கும்போது, வாசிப்போர் உள்ளத்தில் அவை உண்மை கதாபாத்திரங்கள்போல் தோன்ற வேண்டும். நம் வீட்டிலோ, தெருவிலோ, ஊரிலோ, அருகிலோ இருக்கும் மனிதர்களை தம் கண்முன்னே வந்து நிறுத்தவேண்டும். பாத்திரப் படைப்பு நம்மிடம் அன்பு உணர்ச்சியினையோ அல்லது அதீத வெறுப்பு உணர்ச்சியினையோ எழுப்பிவிடுதல் வேண்டும். சிறுகதைக்கு அதிக கதாபாத்திரங்கள் தேவைப்படாது.


பாத்திரப்படைப்பில் இரண்டு வகை உண்டு. முதல் வகையில் கதாசிரியரே பேசுவது. இரண்டாவது வகையில் பாத்திரங்கள் தம்முள் பேசிக்கொள்கின்ற வகையினால், அவர்கள் இயல்பு புலப்படுவதோடன்றி கதையும் தொடர்ந்து நிகழ்ந்துவிடும். இந்த இரண்டாவது முறைப்படி எழுதுவதுதான் சிறந்தது என மேலை நாட்டார் கூறுகின்றனர்.


சிறுகதையில் மிகவும் முக்கியமானது பாத்திரப் படைப்பாகும். கதைமாந்தர்களே வாசிப்பவர் மனத்தைப் பெரிதும் ஈர்ப்பவராவர். ஒரு கதையில் பாத்திரப் படைப்பைச் சுவையுடையதாகச் செய்ய ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனி இயல்புடன் அமைப்பது என்பது நுட்பமான கலையாகும்.


முரண்


சிறுகதைக்குரிய இன்னொரு கூறு முரண் ஆகும். பொதுவாக இது நன்மைக்கும் தீமைக்கும் ஏற்படும் மோதலில் தோன்றுவதாகும். ஒரு மனிதனின் மனத்திலே ஏற்படும் நன்மை உணர்விற்கும் தீமை உணர்விற்கும் ஏற்படும் போராட்டத்தையே இது குறிக்கிறது. மரபாகக் கதைகளில் அமைக்கப்படும் வாழ்க்கை முறையினை அக்காலப் படைப்பாளர்கள் பலர் ஏற்றுக்கொள்வதில்லை. பெரும்பாலும் நிவீன சிந்தனையாளர்கள் இத்தகைய கருத்துகளைக் கையாள்வதுண்டு. அவர்கள் நன்மை தீமை முரணுக்கு மாற்றாக மனிதன் – இயற்கை முரண், மனிதன் – சமூக முரண், மனிதன் அவனோடே முரண்படுதல் போன்ற தளங்களில் சிறுகதைகளில் படைப்பதுண்டு.


சூழல்


கதையின் சூழ்நிலை மற்றுமொரு முக்கியக் கூறாகும். அது கதைப் பின்னணியினின்றும் வேறுபட்டது. பின்னணி என்பது கதைச் சூழலின் ஒரு பகுதியாகும். கதைக்கோப்பு, கதை மாந்தர், கதைக்கரு முதலியவற்றோடு ஒருங்கிணைந்த பகுதியே சூழ்நிலையாகும். கதையின் நடை, பயன்படுத்தப்படும் சொற்கள், வாக்கியங்களின் அளவு ஆகியவை சூழ்நிலை உருப்பெறுவதற்கு உதவுகின்றன. மேலும், கதை மாந்தர்கள் பேசும் முறை, அவர்களால் பேசப்படும் பொருள் ஆகியவை சூழ்நிலையின் ஒரு பகுதியாகக் கூறப்படுகிறது.


அமைப்பு முறை


ஒருமைப்பாடு கதை அமைப்பிற்குரிய அடிப்படை விதியாகும். சிறுகதையின் ஒருமைப்பாடாக அமைவது தூண்டுணர்ச்சி, செயல் நோக்கம், செயல் ஆகியவையாகும். அதனுடன், உணர்ச்சிப் பதிவின் ஒருமைப்பாடும் இன்றியமையாததாகும் எனவும் உரைக்கப்படுகிறது. சிறுகதை உணர்த்தும் கருத்து ஒரே கருத்தாக இருத்தல் வேண்டும். அக்கருத்து ஒரே நோக்கத்தோடும் ஒரே அமைப்பு முறையோடும் தக்க முடிவோடும் சிறுகதையாக உருவாக்கம் பெறவேண்டும். இவ்வொருமைப்பாடு கொண்டதே சிறந்த ஒரு சிறுகதைப் படைப்பாகத் திகழும். எனவே, ஒருமை நோக்கம், ஒருமை விளைவு ஆகிய இவ்விரண்டு சீரிய விதிகளைக் கொண்டே ஒரு சிறுகதையை ஒரு கலையாக மதிப்பீடு செய்தல் என்பது அவசியமாகிறது.


உணர்ச்சி


நிகழ்ச்சிக்கு முதலிடம் தராமல் மனித மனத்தைப் படம் பிடித்துக் காட்டச் சிறுகதையைப் பயன்படுத்தும் ஒரு முறையும் சிறுகதைப் படைப்பாக்கத்தில் பின்பற்றப்படுகிறது. புதுமைப்பித்தனின் கதைகளில் சில இவ்வகையில் அமைந்திருக்கும். ஏதோ ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அதனால் விளைந்த எண்ணங்களைக் கூறுவதாக இத்தகைய கதைகள் அமைந்திருக்கும். இது பல்வேறுபட்ட மனிதப் பண்புகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு ஆராய்வதாகும். இவ்வகைக் கதைகள் ஒருவருடைய புறச்செயல் ஒன்றிரண்டைக் கொண்டு அவரின் அகமனத்தைத் தொட்டுக் காட்டும் தன்மையுடையாதாகும்.


ஸ்டீவன்சன் என்பவர், மூன்று சிறந்த வகைக் கதைகளை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.


முதலாவது ஒரு கதைக்கோப்பைக் கொண்டு கதாபாத்திரங்களைப் பொருத்தலாம். 

இரண்டாவது ஒரு கதாபாத்திரத்தைக் கொண்டு அதை வளர்ச்சி செய்ய நிகழ்ச்சிகளைப் படைக்கலாம்.

மூன்றாவது குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையின் தாக்கத்தை விளக்கும் வகையில் செயல்களையும் கதாமாந்தர்களையும் படைத்துக் கதையை உருவாக்கலாம்.


அவரின் கூற்றிலிருந்து கதைக்கோப்புக் கதை, பாத்திரப்படைப்புக்  கதை, உணர்ச்சிப் பதிவு கதை எனச் சிறுகதைகளை மூன்று வகைப்படுத்தலாம் என்பது தெளிவாகிறது.


இனி, அடுத்துவரும் பகுதியில் அகிலன் எழுதிய பூச்சாண்டி என்ற சிறுகதை மேலே கூறியுள்ள சிறுகதை இலக்கணத்தோடு எந்த அளவு பொருந்துகிறது என்பதைக் காண்போம்.


அகிலன்


சிறுகதை, நாவல் என இரண்டுத் துறைகளிலும் மிக ஆழமாகத் தடம் பதித்தவர் அகிலன். பிரபலமான எழுத்தாளர்கள் பலரும் குலத்தமிழ், வட்டாரத் தமிழ் என எழுதி வந்த காலகட்டத்தில் மிக எளிமையாகப் பொதுத் தமிழில் எழுதிய மிகச் சிறந்த எழுத்தாளர், நாவலாசிரியர். சமகால நிகழ்வுகளும் அந்நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் மனவோட்டங்களையும் உணர்ச்சிப் பொங்க எழுதக்கூடியவர். பாரதிய ஞானபீட விருதும் சாகித்திய அக்காதெமி விருதும் பெற்றவர். மலேசியத் தமிழர்களின் தோட்டப்புற வாழ்க்கையையும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் பால்மரக் காட்டினிலே நாவலின் மூலம் மிகவும் யதார்த்தமாகப் பதிவு செய்து மலேசியப் படைப்பாளிகளுக்கு ஒரு விழிப்புணர்வும் எழுச்சியுணர்வும் ஏற்படுத்தியவர்.


பூச்சாண்டி


கதைச் சுருக்கம்


ஒரு நாள் நள்ளிரவில், சவுக்குத் தோப்பு அருகே ஒருவன் இரயிலின் முன் விழுந்து தற்கொலைச் செய்து கொள்கிறான். அந்தப் பிணத்திற்குக் காவலாக இரயில் போலீசை நிறுத்திவிட்டு, இரயில் போய்விட்டது. இறந்தவனின் முகம் தன்னால் பாதிக்கப்பட்ட ஒருவனின் முகமாக அந்தப் போலீசுக்குத் தெரிகிறது. இறந்தவனின் ஆவி, தன்னைப் பயமுறுத்துவது போலவும் முன்பொருநாள் இரயிலில் ஒரு பிச்சைக்காரியின் மரணத்திற்கும் தான் காரணமாயிருந்ததும் அவனையறியாமல் அவன் நினைவில் வந்து கோரத்தாண்டவம் ஆடியது. அவன் செய்த இழிச் செயல்களெல்லாம் அவன் மனத்தைக் குடைகின்றன. அவனின் மன உணர்வுகளும் நினைவோட்டங்களும் பேயாய், பிசாசாய், பூச்சாண்டியாய் வந்து அவனைத் தாக்குகின்றன. விடிந்ததும் மற்றவர்கள் வந்து பார்க்கும்போது, அங்கே இரண்டு பிணங்கள் கிடந்தன எனக் கதை முடியும்.


வில்லியம் என்றி ஆட்சன் கூறுவதுபோல், ஒரே மூச்சில் படித்து முடிப்பதற்குரிய தன்மையை இக்கதை கொண்டுள்ளது. மிகவும் இயல்பாக எழுதுவது அகிலனின் எழுத்துக் கலை. அவரது கலைத்திறனுக்கும் கற்பனா சக்திக்கும் இக்கதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். எழுத்தாளன் வாழ்வியல் உண்மையில் உணர்ந்தவற்றைத் தன் படைப்பின்மூலம் வாசக நெஞ்சங்களின் மன ஆழத்திற்குக் கடத்திவிடுவதுதான் ஒரு சிறந்த படைப்பாக்கத்திற்குரிய இலக்கணமாகும்.


கரு


காவல் துறையினர் சமூகத்தைக் காக்க வேண்டிய அரண் போன்றவர்கள். தோழமையுணர்வோடு மக்களோடு மக்களாக நின்று பாதுகாப்புத் தர வேண்டியவர்கள். ஆனால், வேலியே பயிரை மேய்வது போல இவர்கள்தான் வழிப்பறித் திருடர்கள், திருடர்களுக்குத் துணை, கற்பழிப்பு, பெண்களைத் தீய வழிகளுக்குக் கட்டாயப்படுத்துதல், கையூட்டு வாங்குதல் எல்லாம் இன்று காவல் நிலையங்களில் நடக்கும் அலங்கோலங்கள். இத்தகையப் போக்கு கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம்வரை தொடர்வதால், தட்டிக்கேட்க ஆளில்லாமல் போகிறது. அப்படி யாராவது நீதிக்காகப் போராடினாலும் தண்டனை போரடுபவனுக்கோ அல்லது அவனின் குடும்பத்தினருக்கோ தான் கிடைக்கும். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பதற்கேற்க, சட்டத்தால் தண்டிக்கப்படாதவர்கள் காலத்தால் தண்டிக்கப்படுவார்கள். இதை அப்படியே தோலுறித்துக் காட்டுவதுதான் இக்கதையின் கருவாகும்.


கதை


ஒரு தற்கொலைச் சம்பவம். பிணத்துக்குக் காவலாய் நிற்கும் ஒரு போலீசின் நினைவில் மேலும் சில சம்பவங்கள் காட்சிகளாய் வருகின்றன. அனைத்துச் சம்பவங்களும் கதையின் கருவைச் சார்ந்தே இயல்பாய் வந்து போகின்றன. அப்படி வரும் அச்சம்பவங்களே கதையின் முடிவிற்கும் காரணமாக இருக்கின்றன.


முதல் சம்பவம் ஒரு தற்கொலை. அப்பிணத்திற்குக் காவலாய்த் தனியாக நிற்கும் இரயில் போலீசுக்கு இறந்தவனின் முகத்தைப் பார்த்தபோது, இறந்தவன் தன்னால் பாதிக்கப்பட்டவனாக இருப்பானோ என்ற சந்தேகம் எழுகிறது. பல உணர்வுகள் அவன் உள்மனத்திலிருந்து எழுந்து அவனை ஆட்டிப் படைக்கின்றன. மேலும், அவனால் மற்றவர்களுக்கு இழைக்கப்பட்ட இழிசெயல்கள் எல்லாம் பற்பல சம்பவங்களாக நினைவில் வந்து போகின்றன.


சுதந்திரப் போராட்டக் காலத்தில் அரசியல் தொண்டர்களையும் பொதுமக்களையும் வெறிப்பிடித்து அடித்து நொறுக்கியதும் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடியதும் நினைவுக்குள் ஓடியது.


இரயில் பிச்சைக்காரனிடம் காசு பிடுங்கியதும் அப்பிச்சைக்காரன்,
பசிக்குது ரெண்டனா கொடு
எனக் கெஞ்சியதும்கூட அப்போது அவன் நினைவில் நிழலாடியது.


இன்னொரு சம்பவத்தில் பிச்சைக்காரியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த, அவளைக் கற்பழிக்க முயலும்போது, தற்செயலாய் இரயிலிலிருந்து ஆற்றில் விழுந்து இறந்து போனதால், அவளும் ஆவியாய்த் தன்னைக் கொல்ல வருவதுபோல் அவனுக்குள் ஒரு மனப்பிரமையும் சுழன்றுகொண்டிருந்தது.


வேறொரு சம்பவமும் அவனுக்குள் வந்தது. அது ரேஷன் காலம். ஓர் இளம் கைம்பெண் கால்முடை அரிசி கடத்தி வந்தாள். அவளின் இந்தக் குற்றத்தோடு வேறு ஒரு குற்றத்திற்கும் அவளை ஆளாக்க முயன்றான் இந்த இரயில் போலீஸ். அவள் பதறியடித்து ஓடி, அடுத்த பெட்டியிலிருந்த ஒருவன் காலில் விழுந்தாள். அவனுக்குச் சட்டம் தெரியவில்லை. நியாயம்தான் தெரிந்தது. போலீஸைத் துவட்டி எடுத்துவிட்டான். வேலையிலிருந்த போலீசை அடித்ததால், இரண்டு ஆண்டுகள் சிறையிலிருந்த அவன் விடுதலையாகிவிட்டான். சில நாட்களுக்கு முன்புதான் இந்தப் போலீஸ் அவனைப் பார்த்தான். இப்போது பிணமாய்க் கிடப்பவனும் அவனே எனப் போலீசுக்குத் தோன்றியது.


பல விகார உணர்ச்சிப் பிம்பங்கள் அவனை ஆட்கொள்ள, தற்கொலைச் செய்து கொண்டவனும் இறந்து போன பிச்சைக்காரியும் அந்தக் காரிருள் நேரத்தில் ஆங்காரமாய் ஆவேசமாய் அவனை நெருங்குகின்றனர். அவனின் சப்த நாடியும் ஒடுங்கிப் போய் நிற்கதியாய் நிற்கிறான்.
அருகில் பிணம். அவனுக்கோ கடந்த கால சம்பவங்கள் பேயாய், பிசாசாய், பூச்சாண்டியாய் நெருங்கி வருகின்றன. பொழுது விடிந்தது. ஒரு பிணம் கிடந்த இடத்தில் தோழமைக்கு இன்னொரு பிணம்.


பாத்திரப் படைப்பு


இக்கதையில் வரும் பாத்திரப் படைப்புகள் கதைக்கருவை ஒட்டியே அமைக்கப்பட்டிருக்கின்றன. கதைக்கருவை வலுப்படுத்தும் சம்பவங்களுக்குக் கதாபாத்திரங்கள் மேலும் மெருகூட்டுகின்றன. கதைக்காகப் பாத்திரங்களா? இல்லை பாத்திரங்களுக்காகக் கதையா? எனப் பிரித்துப் பார்க்க முடியாவண்ணம் இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கின்றன.


கதாபாத்திரங்களுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் ஒரு தன்மையும் இக்கதையில் இருக்கிறது. கதையின் முக்கியமான போலீஸ் பாத்திரம் 9333 என்ற எண்ணால் மட்டுமே அடையாளம் காட்டப்படுகிறது. அதுபோல கதையில் வருகின்ற வழிப்போக்கன், பிச்சைக்காரன், பிச்சைக்காரி, விதவை, டிரைவர், கரி தள்ளுகிறவன், அவன் எனக் கதாபாத்திரங்களுக்குப் பொதுப்பெயர்களே கதை முழுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது இக்கதையின் தனிச்சிறப்பு.


ஆசிரியர் கதைச்சொல்லியாக இருந்தாலும் சில இடங்களில் கதாபாத்திரங்களை அவர்களுடைய இயல்புத் தன்மையிலேயே உரையாடவிட்டிருப்பது இக்கதையை நமக்கு  அருகே கொண்டுவந்து நிறுத்துகிறது.


சரி புள்ளே வெளியே வா, வந்து பெஞ்சு மேல உட்கார்

டிக்கெட் வாங்கலிங்க, அடுத்த ஊரிலே இறங்கிடுறேனுங்க

இல்லிங்க

என்ன இல்லிங்க

போலீஸ் பிச்சைக்காரியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த பேச்சைத் துவங்கும் இதுபோன்ற உரையாடல்கள் இப்படி யதார்த்தமாகக் கதையின் இடை இடையே வருகின்றன.


எதிர்பார்ப்பு


அது நள்ளிரவு. பேய்ப் பிசாசுகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?’
எனத் துவங்கும் கதை, ஆரம்பத்திலேயே ஓர் எதிர்பார்ப்புத் தன்மையை வாசிப்போர் உள்ளங்களில் ஏற்படுத்திவிடுகிறது. மேலும், கதையில் வரும் தொடர் சம்பவங்களும் கதையை வாசிப்பவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்குகின்றன. அடுத்த என்ன நடக்கும்? என்ற தூண்டல், முதல் சம்பவம் தொடங்கி அடுத்தடுத்து வரும் சம்பவங்கள்வரை நீள்கிறது. வாசித்து முடித்த பிறகும்கூட நம்மைச் சிந்திக்க வைக்கும் வகையிலான ஒரு கதை இது.


சூழ்நிலை


இக்கதையின் முதல் சூழல் சவுக்குத் தோப்பு. ஒரு நள்ளிரவின் அமாவாசை இருட்டை கலைநயத்துடனும் கற்பனா சக்தியுடனும் மிகவும் நேர்த்தியாகப் படைத்திருக்கிறார் கதாசிரியர். மேலும், ஈரம் காய்ந்த ஆறு, தண்டவாளம், இரயில் எனச் சம்பவங்கள் உயிர்ப்பெறுகின்றன.


ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தைக் குறிக்கும் பின்னணியைக் கதை கொண்டுள்ளது என்பதை,
அப்போது அரசியல்வாதிகள் அளந்து கொட்டுகிற காலம் அல்ல, அடி வாங்கும் காலம்
என்ற வரி உணர்த்திச் செல்கிறது.


வெள்ளைத் தோலுக்குத்தான் சிவப்பு நிறமென்றால் கிலி ஆயிற்றே
என்ற வரியும் ஆங்கிலேயர்களுக்குக் கம்யூனிசம் என்றாலே அலர்ஜி என்பதை உவமை நயத்திடன் சுட்டிக்காட்டுகிறது.


தமது ஆங்கில இலக்கிய வரலாற்று நூலின் முன்னுரையில் தெயின் என்பவர்,


இலக்கியப் படைப்பு ஒரு தனி மனிதனின் கற்பனையால் மட்டும் முகிழ்ப்பதன்று. உணர்வால் ஊக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட மூளையின் உழைப்பால் மட்டும் விளைவதன்று. சமகாலப் பழக்கவழக்கங்களின் கல்வெட்டாக விளங்குவது இலக்கியமாகும்
என்கிறார்.


முரண்


கதையின் ஆரம்ப வரிகளில்,

கடவுளை நான் கண்டதில்லை

என வருவதையும் கதையின் முடிவில்,

கடவுளுக்குக் கண் இருக்குங்க

என்று வருவதையும் காணலாம்.


இது கதையின் ஆரம்ப நிலையில் இருந்த ஒரு கருத்தோடு இறுதி கருத்து முரண்பட்டு நிற்பதைக் காண முடிகிறது. 

மேலும்,

கடவுளைப் பார்த்தால் காறித்துப்புவேன்

என்ற கூறும் கதாபாத்திரம் இறுதியில்,

கடவுளுக்குக் கண் இருக்குங்க

என்று கூறுவதையும் காணலாம்.


மேலும், உவமை நயம் கதை முழுக்க வியாபித்திருக்கிறது. வெறும் மணலாய் இருக்கும் ஆற்றைக் கஞ்சப்பயல் நெஞ்சோடு ஒப்பிடுதலும் தண்டவாளத்தைப் பாம்பாகவும் இரயிலைக் கொள்ளி வாய்ப் பிசாசாகவும் இரயிலின் பின்புறச் சிவப்பு விளக்கு இறந்தவனின் இரத்தக் கறையாகவும் இருட்டை மங்கைக்கும் தூரத்தில் இருந்து வரும் இரயிலின் முன்விளக்கு பெண்களின் நெற்றிப்பொட்டுபோல் என இப்படி கதை முழுக்க ஒப்புவமையோடு சொல்லிக்கொண்டே போகிறார் கதாசிரியர்.


முடிவுரை


ஒவ்வோர் இலக்கியப் படைப்பிலும் படைப்பாளி தனது சமகாலச் சமூகத்தைத் திறனாய்வுச் செய்து, அத்திறனாய்வை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிப்படுத்துகிறார்.


இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி
என்கின்றனர் வேரன் எண்ட் வெலேக் எனும் இரட்டைத் திறனாய்வாளர்கள்.


அகிலனின் பூச்சாண்டியும் இத்தகையத் தன்மையிலேயே படைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் போலீசின் மனப்பிம்பங்களுக்கும் பய உணர்வுகளுக்கும் ஏற்ப இயற்கையோடு ஆவேச கற்பனையைக் கலந்து ஆவி, பேய், பிசாசு எனக் கதையை நகர்த்தி நமக்கும் பூச்சாண்டி காட்டியிருக்கும் கதாசிரியர், சமூக அக்கறையுடன் சிறுகதைக்கென்று கூறப்படுகின்றன பல இலக்கணக் கூறுகளுடன் இக்கதையைப் படைத்திருக்கிறார்.



துணை நூல்கள்


1.   சிறுகதைக் களஞ்சியம். தொகுதி 1. ஏ. சி. செட்டியார். இரண்டாம் பதிப்பு 2000. சாகித்திய அகாதெமி, புது டில்லி.


2.   இலக்கியத் திறனாய்வியல். டாக்டர் தா. ஏ. ஞானமூர்த்தி. முதற்பதிப்பு 2006. ஐந்திணைப் பதிப்பகம். சென்னை.


3.   இலக்கியக் கலை. அ . ச. ஞானசம்பந்தன். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். சென்னை.


4.   இலக்கியமும் சமூகவியலும். சி. இ. மறைமலை. முதற்பதிப்பு 1991. மணிவாசகர் பதிப்பகம். சென்னை.



5.   திறனாய்வுக் கலை. தி. சு. நடராசன். ஒன்பதாம் பதிப்பு 2011. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். சென்னை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக