(3)
ஆழ்மனம்
அடர்ந்த இருட்டொன்றில் வந்தமர்ந்த
காகம் கரைந்து கொண்டிருந்தது
அது தேடி வந்தது
கிடைக்காதென்று தெரிந்தும்
இன்னும் சத்தமாயக் கரைந்தது
விட்டகர்ந்து நின்று பார்த்தேன்
கண்கள் விழிக்க
என்னைப் பார்த்திருந்தன கல்லறைகள்
யாரோ ஒரு சாமியாடி
மந்திரம் சொல்லி வீசியப் பூக்களில்
இனம் புரியா நறுமணம்
இப்போதும்
நான்
வாசமாகிறேன்
ஒரு மனிதனின் ஆழ்மனத்தில் அவனுக்கே தெரியாமல்
புதைந்திருக்கும் சில ஆசைகளும் விருப்பங்களும் ஏக்கங்களும் சில வேளைகளில்
அவனையறியாமலேயே அவனின் தியான நிலையில் அவனுக்குள் இருந்து ஏதோ ஒரு வகையில்
வெளிப்படுதல் உண்டு. அப்படி வெளிப்படும் அந்த உணர்வுகள் எழுத்துகளாக உருமாறி ஒரு
சொல்லாக, ஒரு தொடராக நம்மை நோக்கி வீசப்படுதலும்
உண்டு. அந்த வகையில் இந்தச் சொல்லாடல்கள் பல தொடர்களாகி ஒரு நவீன கவிதைக்குரிய
கூறுகளுடன் தோற்றம் பெற்றுள்ளன.
பொதுவாக ஏமாற்றம் தரும் செயல்களில் நாம் தெரிந்து
ஈடுபடுவதில்லை. அப்படித் தெரிந்தும் நாம் ஒரு செயலைச் செய்கிறோமென்றால், அந்த செயல் எத்தகைய உன்னதமான இலக்கைக் கொண்டிருக்கவேண்டும்
என்ற சிந்தனைக் கீற்றை நமக்குள் வீசிச் செல்கின்றன இக்கவிதையின் முதல் ஐந்து
வரிகள். ‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்’ என்கிறது ஏசுவின் தர்மம். முயற்சி ஒன்றே
வாழ்க்கையின் அச்சாணி என்பதை மிகவும் அழகாக வலியுறுத்துகின்றன அந்த முதல் ஐந்து
வரிகள்.
அதை அடுத்து,
காகம் என்ற பறவையோடு இறந்துபோன நமது மூதாதையர்களைத் தொடர்புப் படுத்தும் ஐதீகமும்
நமது மரபில் இருக்கிறது. நாம் செய்யத் தவறிய சில கடமைகளை நமக்கு உணர்த்துவதாகக்
கூட அந்தக் காக்கையின் கரைதலுக்குப் பொருள் கொள்ள வாய்ப்பும் இங்கு இருப்பதை
இக்கவிதையில் அடுத்துவரும் வரிகள் காட்டுகின்றன. அடுத்து வந்துள்ள தங்களின்
வாரிசுகள் தங்களை மறந்துபோய், தங்களுக்குச் செய்ய வேண்டியதை
அவர்கள் செய்யாமல் இருப்பதை அறிந்தும் இனியும் இவர்கள் நமக்காக எதையும் செய்யப்
போவதில்லை என்பதைத் தெரிந்தும், அந்தக் காகத்தின் வடிவில்
இருக்கும் அந்த மறந்துபோன உறவுகள் எதையோ உணர்த்துவதற்காகக் கரைவதை நிறுத்தாமல்
நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன என்பதாகவும் பொருள் கொள்ளவும் வாய்ப்புகளை இக்கவிதை
வரிகள் வழங்குகின்றன.
/கண்கள் விழிக்க என்னைப்
பார்த்திருக்கின்றன கல்லறைகள்/
என்ற வரிகள் உணர்த்துகின்றன.
குடும்பம்
நமது சொத்து. நமது முன்னோர்களும் மூதாதையர்களும் நமது வழிகாட்டிகள். நம்மேல்
உண்மையான அக்கறையும் பேரன்பும் கொண்டவர்கள். இவ்வுலகில்
இல்லாவிட்டாலும் என்றும் நம்மை ஆசிர்வதிப்பவர்கள். இதை நன்கு உணர்ந்திருக்கும் சீன
சமூகம் இன்றளவும் தங்களின் மூதாதையர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவாகச்
செய்து வரத் தவறுவதில்லை. அந்த சமூகம் எல்லா நிலையிலும் சீரும் சிறப்புடனும்
பொருளாதார வசதியுடனும் இருக்கிறது.
இறந்தவர்களுக்கு ‘நடுகல்’ நிறுத்தி வணங்கி வந்த நமது மரபும் சங்க இலக்கியங்களில்
சுட்டப்பட்டுள்ளது. ஆனால் நம்மில் எத்தனை பேர் அதுபோன்ற கடமைகளை நிறைவாகச் செய்து
வருகிறோம் என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். சிந்தனை மாற்றத்தால் இதுபோன்ற
மரபுகளைப் புறந்தள்ளி வாழும் மனிதர்களின் விழிகளுக்கு அந்தக் கல்லறை விழிகளின்
ஏக்கங்கள் புரியுமா என்ற கேள்வியோடு இக்கவிதை வரிகள் நம்மைக் கடந்து செல்கின்றன.
இறுதி ஆறு அடிகள்,
ஒரு வகையான ஞான ஒளியை அந்த மனிதனுக்குள் தெளித்து, அவனை
ஒளிப்பெறச் செய்கிறது. தான் ஆற்ற வேண்டிய கடமையை உணர்ந்த ஓர் ஆத்மாவின் புனித
வெளிப்பாட்டை,
/இப்போதும் நான் வாசமாகிறேன்/
என்ற வரிகள் குறிப்பதை உணரலாம்.
இது ஒரு தத்துவார்த்தமான படைப்பு. ஆழ்மன உணர்வின்
நெருக்குதலில் கொட்டப்பட்ட உணர்வின் மொழி. அந்த மொழிக்கான மொழிபெயர்ப்பு என்பது
மிகவும் சிக்கலானது. அவரவர்க்கு ஒரு புரிதல் உண்டு. அந்த வகையில் இந்தக் கவிதை
எனக்குச் சொன்ன மொழியில் எனது பார்வை இது.
-
தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக