(4)
இரகசியமானவன்
என்னை நீங்கள் கொல்லாமல்
இருப்பதே தருமமானதல்ல
இருந்தாலும்
எல்லாவற்றிலும்
மறைப்புக்களிட்டு
என்னை மறைத்துக்
கொண்டிருக்கிறேன்
எப்போதும்
வெளிப்படையானவனாகக்
காட்டிக் கொள்ளவே
முயன்றிருக்கிறேன்
என்னை நீங்கள் தடுத்துக்
கொண்டே இருந்தீர்கள்
என் மறைப்புகள் எனக்கு
சுகமானது
இனி எதையும் உடைப்பதற்கில்லை
என் வலைப்பின்னல்
உறுதியாகிக் கொண்டிருக்கிறது
என் மகன் கூட
என்னை விட அடர்ந்த இரகசியக்
காரனாய்
மாறிக் கொண்டிருக்கிறான்
‘என்று தணியுமிந்த சுதந்திர தாகம்
என்று தணியுமெங்கள் அடிமையின் மோகம்’
என்ற பாரதியின் வரிகளை,
‘இந்த சுதந்திர தாகம்
எப்போது தணியப் போகிறது
எங்கள் அடிமையின் மோகம்
எப்போது மடியப்போகிறது’
என வேறு வடிவத்துக்கு மாற்றினாலும், அது தன் கவித்துவப் பாதிப்பை
இழந்துவிடவில்லை. ஏனெனில் இங்கு வெளிப்படுத்தப்படுவது ஒரு கருத்தல்ல. ஓர் ஆழமான
உணர்வு; வேட்கை. இந்த உணர்வின் தாக்கமே
இதைக் கவிதை என நிர்ணயிக்கிறது. அதன் யாப்பும் இசையும் இதற்கு வெறும்
அணிகலன்களாகும். அவ்வளவுதான். (மார்க்கிசியமும் இலக்கியத் திறனாய்வும், எம்.ஏ.நுஃமான்)
அதுபோல,
கண்ணதாசனின்,
‘வறுமை நாட்டில் வந்ததேன் மக்கள்
உரிமைத் திமிரால் உழைக்காததுதான்’
வரிகளை, யாப்பு
வடிவத்தை நீக்கி எழுதினால்,
‘நாட்டில் ஏன் வறுமை வந்தது?
மக்கள் உரிமைத் திமிரினால்
உழைக்காமல் இருந்ததனால்தான்’
என்று அமையும் பட்சத்தில் இதை நாம் வெறும் கருத்தாக மட்டுமே
கொள்வோமே தவிர, கவிதை என்று
சொல்லமாட்டோம். இக்கருத்து செய்யுளில் அமைந்ததனால் மட்டும் இது
கவிதையாகிவிடுவதில்லை. அது இன்னும் ஒரு கருத்தே தவிர கவிதையல்ல; செய்யுளில் கூறப்பட்ட கருத்தாக மட்டுமே இதைப் பார்க்கமுடிகிறது.
ஆகையினால், கவிதையின் உள்ளார்ந்து கலைவிதி என்பது
செய்யுளாக்கம் அல்ல; ஒரு கருத்தை செய்யுளில் கூறுவதல்ல
என்பதும், மாறாக கவிதையின் உள்ளார்ந்த கலைவிதிகளுள்
முக்கியமானது அது வெறும் கருத்து வெளிப்பாடாக அன்றி, ஓர்
உணர்வு வெளிப்பாடாக இருக்கவேண்டும் என்பதேயாகும் என்கிறார் பேராசிரியர்
எம்.ஏ.நுஃமான்.
அவ்வகையில் எம். கருணாகரனின், ‘ரகசியமானவன்’ கவிதையும்
வெறும் கருத்தாடலால் மட்டுமல்லாமல் உணர்ச்சியின் கொந்தளிப்பாலும் உளப்பூர்வமாகப்
படைக்கப்பட்டுள்ளது என்ற வகையினைச் சார்ந்ததாகும். கவிதையினை மேலோட்டமாகப்
பார்த்தால் வேறொன்றாகவும் உளப்பார்வையினுள் தீவிர வேட்கையுடன் நுணுகி நுணுகிப்
பார்த்தால் வேறொரு பரிமாணத்திலும் கவிதையின் பாடுபொருள் புதைந்திருப்பதைக்
காணலாம்.
‘பொய்யான சில பேர்க்குப் புது நாகரிகம்
புரியாத பல
பேர்க்கு இது நாகரிகம்’
என்ற வாலியின் பாடல் வரிகள்தான் இக்கவிதையை நான்
வாசித்தபோது என் நினைவைத் தைத்தன. ஒவ்வொரு விடியலும் வெவ்வேறு மனிதர்களுக்கு
வெவ்வேறு அனுபவத்தை வழங்குகிறது. அந்த அனுபவங்கள் அவன் சக மனிதனோடு உறவாடும்போது
அவனுக்கு அரணாக நிற்கின்றபோது, தான்
சார்ந்த, தனக்கு நேர்ந்த, தனக்கான
தேடலில் அவன் அவனை யாராக உணர்கின்றானோ, அவனாகவே அவன்
மாறிவிட்டிருப்பான். அவனைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களும் அவனுக்குள் ஏற்படும்
மாற்றங்களும் அவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாகிறது. இதையே கவியரசு கண்ணதாசன்,
‘ஒருவன் மனது ஒன்பதடா – அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா’
என தன் வாழ்வியல் பாடங்களைப் பாடலாகப் பதிக்கின்றார்.
இதுதான் வாழ்க்கை. இங்கு இப்படித்தான் எல்லாம் நடக்கும்
எனத் தெளிவாகத் தெளிந்துகொண்டவன் அந்த நெளிவு சுழிவுகளுக்கு ஏற்ப தானும் வாழப்
பழகிக்கொள்கிறான். இந்த வாழ்க்கையில் நிஜங்கள் தொலைவதும் தேய்வதும் பொய்யாக பிறர்
விரும்பும் வண்ணம் தன் முகத்துக்கு முகமூடிப் போடுவதும் பேசும் பேச்சும் பொய்யான
சிரிப்பும் உண்மையில்லாத நட்பும் எளியோரை மிதிப்பதும் வலியோரை போற்றுவதும் என
இன்றைய மனிதனின் அவலம் வெறும் சுயநலத்தோடு மட்டும் சுற்றித் திரிவது பலர்
கண்களுக்குத் தெரிவதில்லை. செய்யும் செயல் அனைத்திலும் தன்னலம் மட்டும்தான்
நிறைந்திருக்கும். அவனோடு ஒத்த எண்ணமும் போக்கும் கொண்டவர்கள் அவனைச்சுற்றி
வட்டமடித்துக்கொண்டு அவரவர்களுக்கானதைச் சாதித்துக்கொள்வார்கள். இந்த வளையம்
நாளுக்கு நாள் வலுவாகிக்கொண்டு பெருகிக்கொண்டே இருக்கிறது என்பதை,
என் வலைப்பின்னல்
உறுதியாகிக் கொண்டிருக்கிறது
என்ற வரிகளின்மூலம் கவிஞர்
இந்த சமூகத்துக்கும் நாட்டுக்கும் எச்சரிக்கை மடல் விடுக்கிறார்.
தான் யார் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாகும்.
பொய்முகங்களோடு இன்றும் இப்போதும் எப்போதும் நம்மைச் சுற்றி மனிதக்கூட்டங்கள் அலைபாய்ந்துகொண்டிருக்கின்றன.
அப்படிப்பட்ட கூட்டத்தின் பிரதிநிதி ஒருவனின் வாக்குமூலமாக இக்கவிதையை நான்
பார்க்கிறேன்.
என் மகன் கூட
என்னை விட அடர்ந்த இரகசியக்
காரனாய்
மாறிக் கொண்டிருக்கிறான்
என்ற வாக்குமூலத்தின்வழி அவன் தெரியப்படுத்தும் ஒரு செய்தி
என்னவெனில், இனி அடுத்துவரும்
தலைமுறையும் இதைவிட மோசமான மனிதக்கூட்டங்கள் கொண்ட குழுக்களாக வாழும் என்கின்ற ஓர்
எச்சரிக்கையாகவே இக்கவிதையை கவிஞர் படைத்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. பொய்களின்
இறுக்கம் இன்னும் இறுகி இறுகி வேறொரு பரிமாணத்தில் மனிதனின் எதிர்கால வாழ்வுக்கு மாபெரும்
ஒரு சவாலாக இருக்கப் போவதை இக்கவிதை சுட்டுகிறது.
நாட்டிலும் நம் இனத்திலும் நடக்கும் சாக்கடை அரசியலிலும்
போலி விளம்பர உத்திகளிலும் பொய்யான சிநேகிதங்களிலும் முகமன் பார்த்துப் பழகும்
உறவுகளிலும் என இன்னமும் பல அவலங்களை நாம் காணவேண்டி வரும் என்பதை இக்கவிதையின்
மூலம் இலைமறைகாயாக எம். கருணாகரன் வெளிப்படுத்தியுள்ளார். போலிகளின் சாம்ராஜ்யத்தை
சக்கர வியூகத்தை உடைத்த அபிமன்யுபோல இங்கு உடைத்தெறியப்போவது யார்? அந்த இரகசியக்காரன் எங்கிருக்கிறான்? ஏன் அது நானாகவும் இருக்கலாம் அல்லது நீங்களாகவும் இருக்கலாம்.
மனித நலனின் அக்கறை கொண்ட ஒரு படைப்பாக இக்கவிதையின்
பாடுபொருள் விரிந்துள்ளது பாராட்டுக்குரியது.
-
தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக