(5)
உயிர்ப்பின் கரங்கள்
உயிர் கூட்டில் சூழ் கொண்டு
மீண்டும் ஒரு பிறப்பை செய்விக்கும் என் பிஞ்சு விரல்
பறவைகள்
பறப்பதற்கு எத்துணை பிராய்த்தனம் செய்தும்
என் உயிரில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கும்
அதன் வாசம்
பிரித்தெடுத்தல் என்பது இயலாது
ஒவ்வொரு முறையும்
கூர் கத்திகள் கிழித்தென் உயிரில் கலந்திருக்கும் வலியை
மறக்கடிக்கும்
என் வாசம் பூத்த
உயிரின் பிம்ம பிஞ்சுக் கரங்கள்
இன்றெல்லாம் என் உயிர்ப்பின் அந்தக் கரங்களில் மென்மை
அகன்று
கடுமை கனத்திருக்கிறது
இருந்து விட்டு போகட்டும்
என்றும் நினைவில் ஆழ் பதிந்த
என் உயிர்களின் பஞ்சு கரங்கள்
போதும் எனக்கு
@@@@@@@
கவிதைகளை வாசிக்கும்போதும் கேட்கும்போதும் ஒவ்வொருவரும்
தத்தம் உள அமைப்புக்கேற்பக் கவிதை காட்டும் காட்சிகளை அவரவர் மனத்திலே
கட்டமைத்துக்கொள்கிறார்கள். அவரவர் மனத்திலே அவிழ்த்துவிடப்படும் காண்பிய
ஆக்கத்தின் (visualisation) வழியாகக்
காட்சிப்படுத்துதல் அரங்கேறுகிறது. இதிலிருந்து புனைவு என்பது சொல்வழியான தொடர்பு
மட்டுமன்றி சொல் வழியான காண்பிய உருவாக்கத்திற்கும் தொடர்புமாகிறது.
எம். கருணாகரனின், ‘உயிர்ப்பின் கரங்கள்’
கவிதையின் சொற்சித்திரம் மேலே கூறப்பட்ட கூற்றுக்கு மிகவும் பொருத்தமாகப்
பொருந்திப்போகிறது. ‘பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’ என்ற நமது முதுமொழியை நம்
முன்னே காட்சிப்படுத்திச் செல்கிறது என்றால் அது மிகையாகாது.
உயிர் கூட்டில் சூழ் கொண்டு/மீண்டும் ஒரு பிறப்பை செய்விக்கும் என்
பிஞ்சு விரல் பறவைகள்/பறப்பதற்கு எத்துணை பிராய்த்தனம்
செய்தும்/என் உயிரில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கும்/அதன் வாசம்/பிரித்தெடுத்தல் என்பது இயலாது/
எத்தனை ஆழமான சொற்பிரயோகம். வாசிக்கும்போதே நேரிடையாக
நம்மோடு உரையாடி காட்சிப்படுத்தும் அழகிய உள்ளார்ந்த வரிகள். கவிதை முழுக்க
இதுபோன்ற வாழ்க்கையின் அனுபவ வரிகள். இதுவே இக்கவிதையின் சிறப்பு.
ஒவ்வொரு முறையும்/கூர் கத்திகள் கிழித்தென் உயிரில் கலந்திருக்கும் வலியை/மறக்கடிக்கும்/என் வாசம் பூத்த/உயிரின் பிம்ம பிஞ்சுக் கரங்கள்
பிரசவத்தின் வலிகளையும் அவை மறக்கடிக்கப்படும் மந்திரமான
குழந்தையின் பேரொளியில் அனைத்தையும் மறந்துபோகும் தாய்மையின் மகத்துவத்தையும்
புனிதத்தையும் பேரன்பையும் மிகவும் மென்மையாக மகரந்தப்பொடிகளைப் போல கவிதையில்
தூவியுள்ள கவிஞர் ஒரு பெற்றோரின் பார்வையில் இக்கவிதையை நகர்த்திச்
சென்றிருக்கிறார். சிறு பிராயத்தில் பிஞ்சு விரல்களால் மிதிபடும் தந்தையின்
மார்பில் எல்லையில்லா மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அந்தப் பிஞ்சின் மிதிகளின்
ஆனந்த தாண்டவம் தந்தையின் உணர்வுமுழுக்கு நிரம்பிவழிந்திருக்கும். ஆனால் பிள்ளைகள்
பெரியவர்களானதும், அவர்களின்
தன்மை கொஞ்சம் கொஞ்சமாக மாறிப்போகும் வேளையில், அவர்கள்
உதிர்க்கும் சொற்கள் பெற்றோரை வேதனைப்படுத்தும் விதத்தில் அமையும்போது அடுத்த
வரிகள் வருகிறது இப்படி.
இன்றெல்லாம் என் உயிர்ப்பின்/அந்தக் கரங்களில் மென்மை அகன்று/கடுமை கனத்திருக்கிறது
பிள்ளைகள் வளர வளர அவர்கள் தங்களுக்கான உலகில் சஞ்சரிக்க
விரும்பும் காலம் அது. பெற்றோர் எவ்வளவுதான் சொன்னாலும் அது நல்லதாகவே
இருந்தாலும்கூட அதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தலைமுறை இடைவெளி விழுந்துபோவது
இன்றைய வாழ்க்கை முறையில் மிகவும் சர்வசாதாரணமானது. கொஞ்சிப் பேசிய வாயிலிருந்து
உதிரும் சுடுச்சொற்களால் வெந்துபோகும் பெற்றோர்களின் மனங்களைப் பதிவு
செய்திருக்கும் இவ்வரிகள் நேரிடையாகச் சொல்லாமல் உருவகமாகச் சொல்லப்பட்டிருப்பது
பாராட்டுக்குரியது. பழமையானதும் பழமைப்பிடிப்பிலிருந்து வெளியேறத் துடிப்பதுமான
இரு வேறு துருவங்களாகப் பெற்றோர் பிள்ளை உறவுகள் இன்றைய சூழலில்
நீண்டுகொண்டிருப்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறார் கவிஞர்.
அன்று மார்பில் மிதித்த பிள்ளை இன்று நஞ்சுநாவால்
மிதிக்கும்போதும்கூட, அன்றைய
பிஞ்சு பிள்ளையின் மென்மையையும் அரவணைப்பையும் அன்பையும் என்றும் நினைவில் கொண்டு
வாழும் பெற்றவர்களின் மனத்தைக் காட்சிப்படுத்திக்காட்டுகிறது கவிதை.
இருந்து விட்டு போகட்டும்/என்றும் நினைவில் ஆழ் பதிந்த/என் உயிர்களின் பஞ்சு கரங்கள்/போதும் எனக்கு
இதுபோன்ற அக வரிகளால் உணர்த்துமுறையில் சிறந்து
விளங்குகிறது கவிதை. சொல் ஆழமும் படைப்பின் நுட்பமும் செறிவுடன் கவிதையின் பொருளை
அழகுறப் பதிவு செய்திருக்கிறது. கவிஞனின் உள்ளத்தில் செறிந்து கிடக்கும் எண்ணங்கள்
வலியுடன் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும் வலிமையுடன் நிற்கிறது கவிதையின்
பாடுபொருள்.
(மக்கள் ஓசை 19032017)
-
தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக