திங்கள், 6 பிப்ரவரி, 2017

எம்.கருணாகரனின் காத்திருப்பு கவிதையோடு ஓர் உரையாடல்

காத்திருப்புஎம்.கருணாகரன்


இப்போதெல்லாம் இருட்டு
பயம் மூட்டுவதாக
இல்லை


முன்னால் நிற்பவனின் கண்களில்
கலந்திருக்கும் கயமை
பின்னால்  நிற்பவன் கூர்ந்து பார்ப்பதில்
கவிழ்ந்திருக்கும் ஏளனம்


நான் அங்கு இல்லாத போதும்
உடுத்தியிருக்கும் ஆடைகளைக் களைந்து
நிர்வாணமாக்கிச் சிரித்து நிற்கும்
நான் அறிந்த முகங்கள்


ஒத்தையாகிப்  போன எனக்கு
சுவாசமாய் கலந்திருக்கும்
இந்த இருட்டு ஒவ்வொன்றாய்க் கற்றுக் கொடுக்கிறது


கழன்று போனப்பின் நான் காத்திருக்கும்  இருட்டுக்குள்
என்னைத் தவிர
யாரும் நுழைந்திட இயலாது

காத்திருக்கிறேன்……..கவிதைத் தொடர்பான எனது பார்வை

இப்போதெல்லாம் இருட்டு /பயமூட்டுவதாக இல்லை

என்ற வரிகளில் இருட்டு என்பதை அன்றைய வாழ்க்கைச் சூழலில் இருள் கலந்த பயம் நிறைந்த ஒன்றாகவும் சிறுபிள்ளைகளாய் இருக்கும்போது அச்சமூட்டக்கூடிய ஒன்றாகவும் நாம் அணுகலாம். ஆனால் இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் வழி அந்த இருளையும் இருட்டையும் நாம் வென்றிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம். வென்றுவிட்ட ஒன்றின்மேல் நமக்கு எப்போதும் பயமோ அல்லது சலனமோ ஏற்படப்போவதில்லை. நம் வாழ்நாள் சார்ந்த அனுபவங்களும் நம்மை வளப்படுத்தி, எண்ணங்களை மேம்படுத்தி விடுவதாலும் இந்தப் பயம் ஒரு குறிப்பிட்ட வயதிற்குமேல் நம்மை விட்டுத் தூரச் சென்றுவிடுகிறது. ஒரு கட்டதில் இரவும் பகலும் இயற்கையின் சுழற்சி என்ற புரிதல் மனத்திற்குள் ஊடுறுவும்போதே இருள் பற்றிய நமது அனைத்து அவதானிப்புகளும் தவிடுபொடியாகிவிடுகின்றன. இதுநாள் வரையில் மாய யதார்த்தங்களின் கூடாரமாக இருந்த இருள் அதன் தன்மையை இழந்து வெறுமையாகிவிடுகிறது.


சமகால வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இடர்களும் வேதனைகளும் எள்ளல்களும் கேலிகளும் நம்மை ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு விரட்டியடித்தாலும் நாம் சந்தித்தவைகள் நம்மை மேலும் இறுக்கமாக்கி இந்த வாழ்க்கைக்குள் நம்மைப் பதப்படுத்திவிடுகின்றன. போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரி துற்றுவார் தூற்றட்டும் என்ற ஒரு மனநிலைக்கு இதுபோன்றவைகள் நம்மைத் தயார்படுத்திவிடுகின்றன என்பதையே,


முன்னால் நிற்பவனின் கண்களில் / கலந்திருக்கும் கயமை / பின்னால் நிற்பவனை கூர்ந்து
பார்ப்பதில் / கவிழ்ந்திருக்கும் / ஏளனம்


என்ற வரிகளும் அதைத் தொடர்ந்து வரும் வரிகளும் சுட்டுகின்றன.


இருட்டு என்பதை வாழ்க்கையின் அனுபவமாகப் பார்க்கும் நோக்கில், அது கற்றுக்கொடுக்கும் பாடம் நமக்கு மிகவும் இன்றியமையாததாகிவிடுகிறது. வாழ்க்கையை நாம் அதன் நோக்கில் வாழ்வதை விடுத்து நமக்கான வாழ்வை எப்படி வாழ்வதென்பதை நாம் கற்றுக்கொள்ள இந்த வாழ்க்கையின் அனுபவங்கள் மிகவும் உறுதுணையாக இருக்கின்றன. இருட்டை விலக்க ஒளி நமக்குத் துணையாக இருப்பதுபோல் வாழ்வின் அனுபவங்கள் நம் இன்னல்களைப்போக்க நமக்குத் துணையாக நிற்கின்றன.


தனக்கான வாழ்க்கை தனக்கானதுதான் என்ற நம்பிக்கை நிறைந்த மனத்தையும் தனக்கான இந்த வாழ்க்கையைத் தன்னைத் தவிர வேறு எவராலும் இனியும் நிர்ணயிக்கமுடியாது என்பதையும் இக்கவிதை இறுதியில் பதிவு செய்கிறது.


கவிதையில் தற்புலம்பல் சாயல் இருப்பினும், கவிதை இன்னொரு விதத்தில் தன்முனைப்பு ஊட்டுவதாகவும் நம்பிக்கை ஊட்டுவதாகவும் இருக்கிறது. ஒவ்வொரு படைப்பும் அந்தப் படைப்பாளியின் சுயவாழ்க்கையை மீண்டும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்திச் செல்லும் என இன்றைய நவீன இலக்கிய உலகில் பரவலாகப் பேசப்பட்டும் சுட்டப்பட்டும் வருகிறது. புனைவுகள் நம்மை மீட்டெடுக்கின்றன என்பதற்கு இக்கவிதை நல்லதோர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

வாழ்த்துகள் கரு.


அன்புடன் எம்.சேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக