வியாழன், 14 ஆகஸ்ட், 2014

கவிதைகள்

வே‌ஷங்கள்

புணர்ந்து புணர்ந்து தீர்க்கப்பட்டவர்களின்
எச்சில் வலிகளைச் சுமக்கும் பல்லாக்குத்தூக்கிகள்
பெண்களின் கால் இடுக்குகளில் கற்பைப் புதைத்துவிட்டு

அலையும் மனத்தின் அகன்ற பாதையில்
இயற்கையின் முப்பரிமாணக்கூடலில்
வார்த்தைகளைக் குலைத்து
சொல்லடுக்குகளை வெறுமனே சமைத்து

படையல் வைக்கின்றனர் பெண்தெய்வங்களுக்கு


ஆன்மாவின் பயணம்

நீள் அறியா இரவின் நுனியொன்றில்
குருதிச்சாயங்களைச் சுவாசித்து நைந்துபோனேன்
புராதணக்கோயில்களில் மார்புகாட்டும் பெண்தெய்வங்கள்
ஐயோ அசிங்கம் அசிங்கம்
ஐந்து வயதில் வெட்கப்பட்டு
அம்மாவின் சேலை நுனியில்
முகம் புதைந்தேன்
பல சேலைகள் துகிலுரியப்பட்ட
ஓர் இரவின் கடைசி கணமொன்றில்
என் சாவு நிச்சயிக்கப்பட்டுவிட்டது
குளியலறையில் நிர்வாணமாக தன் உடலை ரசிக்கும்
ஓர் ஆணின் கற்பிதங்களில்
மடித்துவைக்கப்பட்ட உணர்ச்சிகளோடு
காற்றின் தேய்ந்த சுவடுகளில் ஒட்டிக்கொண்டேன்



கடவுள் உன்னை அனுப்பாமல் இருந்திருந்தால்.......!

மீட்டெடுக்க முடியாத வாழ்க்கையை
கனவுக்குள்
ஆழமாகப் புதைத்து வைத்தேன்

ஒவ்வொரு கனவுகளாக
மூழ்கி எடுத்து
மீட்டெடுத்தாய் என்னை முழுவதுமாய்

ஆழ்மனக் கனவுகளைத் தீண்டினாய்
நம்பிக்கை முத்தெடுத்தாய்
என்னாலும் முடியும் என்றாய்
என் கனவுகளின் சிறகுகளைச் சுட்டினாய்
எனைச் சிறகடிக்க வைத்தாய்

எனக்குள் நுழைந்து
கனவுக்குள் புகுந்தாய்
அன்பின் உரிமத்துடன்
எல்லா கனவுகளையும்
உனதாக்கிக் கொண்டாய்

என் இருண்மையில் கனவுகளை
நான் கண்டிருக்கமாட்டேன்
அவை நிஜங்கள் ஆகாமல் போயிருக்கலாம்
அவை யதார்த்தங்களாக இல்லாமல் இருந்திருக்கலாம்

கடவுள் உன்னை அனுப்பாமல் இருந்திருந்தால்
..






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக