செவ்வாய், 3 ஜூன், 2014

சிறுகதை - ஒரு விடியலின் கிழக்குப்பொழுதுகள்

ஒரு விடியலின் கிழக்குப்பொழுதுகள்
-    

இன்று முதல் இரவு.

புதிய இடம். புதிய சூழல். முதன்முதலாகப் படுக்கப்போகும் ஒரு கட்டில், மெத்தை, அதன்மேல் வெண்விரிப்பு, போர்வை மற்றும் தலையணை. அனைத்தும் எனக்குப் பழக்கமில்லாதவை. இந்த இடத்தின் காற்றும்கூட எனக்கு வித்தியாசமாகப்பட்டது. உடலில் வேறு விதமான, இதுவரை நான் அறிந்திராத ஓர் உணர்வை உண்டாக்கி எனக்குள் என்னென்னவோ மாற்றங்களை இந்த இரவுக்குள் அவை ஏற்படுத்தலாம். மாற்றம் ஒன்றுதான் இதுவரையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இந்த உலகை இயக்கிக்கொண்டிருக்கிறது. அடுத்துவரும் விடியலுக்குள் நானும் மாறியாக வேண்டும் என்பதில் நானும்கூட உறுதியாகத்தான் இருக்கிறேன் இந்த நிமிடம் வரையிலும்.

உண்மையைச் சொல்லப்போனால் இந்த இடம், இந்தச் சூழல் என் விருப்பத்திற்கும் ஆசைக்கும் எதிரானதுதான். இதுவரையில் நான், நானாக இருந்து எனக்குப் பிடித்தை மட்டும் செய்துகொண்டிருந்தேன். எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் நான் இதுவரையில் எண்ணியதே இல்லை. யாருக்காகவும் என்னை நான் மாற்றிக்கொண்டதும் இல்லை. மற்றவர்களுக்காக நான் ஏன் என்னை மாற்றிக்கொள்ளவேண்டும்? எனக்கென யாரும் மாறாதபோது; எனக்காக மற்றவர் தங்களை மாற்றிக்கொள்ளாதபோது!

ஆனால் இந்த நொடியில், இந்த நிமிடத்தில் எனக்குத் தோன்றுகிறது. நான் மாறியாகத்தான் வேண்டுமென்று. ஏன்? யாருக்காக? என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் எனக்குத் தோன்றுகிறது. நான் மாறியாக வேண்டும். இந்த விடியலுக்குள் அது சாத்தியப்படுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் அந்தப் புதிய விடியலின் கிழக்குப் பொழுதுகள் வெண்கதிர்களால் வெண்சாமரம்கொண்டு இந்த இயற்கையைத் தாலாட்டுவதற்குள்  நானும் எனக்குள் உள்ளவைகளையெல்லாம் அறுத்தெறிந்து வீசியடிக்கவேண்டும். 

எத்தனை நாளைக்குத்தான் நானும்  குப்பைகளைச் சுமந்துகொண்டு இந்தச் சமூகத்தின் குப்பையாகக் கிடப்பது? எச்சில் இலையாக  என்னைச் சுமந்து வந்து இங்கே கொட்டியது யார்?
எனக்கும் தெரியும். நான்தான் காரணமென்று. என் எதிர்மறையான செயல்பாடுகளே  இதற்கெல்லாம் மூலகாரணமென்று. அனைத்தும் நானாகவே இருந்தாலும் என்னை இப்படி மாற்றியது எது? பிறக்கும்போது நானும் மற்றவர்களைப்போலத்தானே பிறந்திருப்பேன்; அழுதிருப்பேன்; சிரித்திருப்பேன். எது எப்படியிருப்பினும் இந்த விடியலுக்குள் எனக்குள் அது நடந்தாகவேண்டும்.

இருளை நோக்கி 1
ஆறுமாத கைப்பிள்ளையாக இருக்கும்போதே என்னைப் பெற்றவள், பாட்டி வீட்டு வாசலின் முன் போட்டுவிட்டு யாருடனோ ஓடிப்போனாள். பாட்டி அப்பாவுக்குப் போன் செய்தவுடன் கேப்பல் சீப் யார்ட்டில் வேலை செய்து கொண்டிருந்த அப்பா லீவு போட்டுவிட்டு உடனே வந்தார். நேற்று இரவு ஏற்பட்ட சண்டை மட்டும் இதற்குக் காரணமில்லை. வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்த ஊர்க்காரனோடு அம்மாவுக்கு இருந்த உறவும் இதற்கு முக்கியக்காரணமாக இருந்ததும் பாட்டிக்குத் தெரியவந்தது. அந்த ஊர்க்காரனும் அப்பாவுடன்தான் வேலை செய்கிறான். குடும்பச் சூழலும் பொருளாதாரச் சுமையும் அதிகரித்தபோது, வாடகை அதிகமாக இருக்கிறது என அப்பாவிடம் புலம்பியிருக்கிறான். அப்பாவும் ஒன்றாக வேலை செய்பவன் என்பதாலும் ஒரு தமிழன் என்பதாலும் மேலும் தம் கைச்செலவுக்கும் கூடுதல் பணம் கிடைக்குமே என்ற நப்பாசையாலும் அந்த ஆளை வீட்டில் தங்கவைத்தார். சிப்ட் வேலை காரணமாக அப்பா இரவுவேலைக்குச் செல்லும் சூழலும் உண்டு. சிங்கப்பூர் வாழ்க்கைச் சூழலில் வீட்டில் வாடகைக்குத் தங்கியிருக்கும் வெளியூர் ஆண்களோடு சிங்கப்பூர்ப் பெண்கள் ஓடிவிடுவது ஒன்றும் புதிய செய்தியல்ல. இதெல்லாம் சர்வசாதரண விஷயம்தான். இருப்பினும் இதன் பின்விளைவுகள் சமூகத்தில் பல சிக்கல்களை முன்நிறுத்தியிருக்கின்றன.

இருளை நோக்கி 2
சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள், அம்மா வீட்டு வாசலில் கண்களைக் கசக்கிக் கொண்டு, என்னை மன்னித்துவிடுங்கள் என்று வந்து நின்றாள். வேலை பெர்மிட் நீட்டிக்கப்படாததால் அந்த ஆள் ஊருக்குப் போயிட்டானாம். எவ்வளவோ கெஞ்சிக்கேட்டும் அந்த ஆள், தனக்குப் பெண்டாட்டி பிள்ளைகள் எல்லாம் இருப்பதால் அவனுடன் கூட்டிச் செல்லமுடியாது என கைவிரித்துவிட்டானாம். வெட்கக்கேடான செயலால் பெற்றோர் வீட்டுக்கும் போகமுடியாமலும் வேறு கதி இல்லாததாலும் அப்பாவிடம் தஞ்சம்கேட்டு வந்துவிட்டாள். பாட்டியும் என்னைக் காரணம் காட்டி அப்பாவிடம் அம்மாவை ஏற்றுக்கொள்ளச் சொல்ல, அப்பாவும் எனக்காக இருந்து தொலையட்டும் என்று வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். ஒரே வீட்டில் வசித்தாலும் அப்பா, அம்மாவுடன் அதிகமாகப் பேசுவதில்லை. அம்மா ஓடிப்போனதும் திரும்பவும் வந்தவுடன் ஏற்றுக்கொண்டதும் பல உறவுக்காரர்களால் ஏளனமாக அவர் காது படவே பேசப்பட்டதால் அப்பா உடைந்து போயிருந்தார். சொந்தக்காரர்களில் பலர் தங்கள் வீட்டு விசேசங்களுக்கு எங்களை அழைப்பதை நிறுத்திக்கொண்டனர். அப்படியே ஒரு சிலர் அழைத்தாலும் அப்பா கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்தார். ஒரு நாள் வேலைக்குச் செல்லும் போது, தீவு விரைவுச்சாலையில் அப்பா ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள், கட்டப்பாட்டை இழந்த வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு அந்த இடத்திலேயே அப்பா இறந்துபோனார்.

இருளை நோக்கி 3
அப்பாவின் சி.பி.எப். பணம், இன்சுரன்ஸ் பணம் எல்லாம் அம்மாவுக்குக் கிடைத்தது. வீடும் அம்மாவுக்கே சொந்தமானது. நான் முதலாம் வகுப்பில் சேர்ந்தபோது அம்மா ஏதோ ஒரு கம்பெனியில் வேலைக்குப் போனாள். நான் பள்ளி முடிந்து தாமான் ஜூரோங் வீடமைப்புப் பகுதியில் இருக்கும் பாட்டியின் வீட்டிற்குச் சென்றுவிட்டு மாலையில்தான் வீட்டிற்கு வருவேன். மதிய உணவும் இரவு உணவும் பாட்டியின் வீட்டிலேயே முடிந்துவிடும். வேலைமுடிந்து வீட்டுக்கு வரும் அம்மா, சாப்பிட்டாயா என்று கேட்டுவிட்டு, தான் வாங்கிவந்த சாப்பாட்டுப் பொருட்களை மேசையின்மேல் வைத்துவிட்டு தன் அறைக்குப் போய்விடுவாள். இப்படிப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் அம்மாவுக்கு திடீரென சில தோலைப்பேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. ஆரம்பத்தில் சிறிதுநேரம் மட்டும் பேசியவள் நாளடைவில் மணிக்கணக்கில் பேச ஆரம்பித்தாள். சிரித்து சிரித்து குழைந்து குழைந்து பேசினாள். நான் ஹாலில் இருந்தால் அவள் அறைக்குச் சென்றுவிடுவாள். நான் என் அறைக்குச் சென்றுவிட்டால் மீண்டும் ஹாலுக்கு வந்து பேசிக்கொண்டிருப்பாள். சில நாட்களுக்கு ஓவர் டைம் வேலை என்று என்னைப் பாட்டியின் வீட்டிலேயே தங்கச்சொல்லுவள். பாட்டியும் உனக்காகத்தானே உன் அம்மா கஷ்டப்பட்டு வேலை செய்கிறாள் என்று என்னைத் தன்னுடனேயே தங்க வைத்துக்கொள்வாள். என்னைப் பார்ப்பதற்கு சிறுவயது அப்பா போலவே இருக்குது என்பாள் கண்களில் நீர் முட்ட.  நேரம் கிடைக்கும்போதெல்லாம் அப்பாவுடனான பழைய நினைவுகளை எனக்குச் சொல்லிக்கொண்டிருப்பாள். அப்படி ஒருநாள் வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்ட பயிற்சிப்புத்தகத்தை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டுப் போனதால், வீட்டிற்குத் திரும்பவும் வந்தேன். அம்மா தன் அறையில் இன்னொரு ஆளுடன் சட்டையே இல்லாமல் இருந்ததைப் பார்த்ததும் திகைத்துப்போனேன். பேசாமல் என் அறைக்குச் சென்று புத்தகத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியானேன். என்னை யாரோ கூப்பிடுவதுபோல் ஓர் உணர்வு  தொடர்ந்தாலும் திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென்று நடந்தேன்.

இருளை நோக்கி 4
அம்மாவின் செயல்பாடுகளால் வெறுத்துப்போயிருந்த பாட்டியும் என்னைத் தன்னுடனேயே தங்கவைத்துக்கொண்டாள். பாட்டியின் வீடே எனக்கு நிரந்தரமாகிப்போனது. அம்மா என்னை வந்து பார்க்கவே இல்லை. பாட்டியின் உறவுகளும் பெற்றப்பிள்ளைகளும் பாட்டியைக் கண்டுகொள்ளாமல் அவரவர் வாழ்க்கையை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தாலும் பாட்டியின் பேரில் உள்ள இந்த வீட்டுக்காக எப்போதாவது வந்து போவார்கள். என்னை ஓர் ஈனப்பிறவியைப் பார்ப்பதுபோல பார்ப்பார்கள். பாட்டி, வீட்டை எனக்கு எழுதி வைத்து விடுவாரோ என்ற பயம் வேறு அவர்களுக்கு. ஓடுகாலி பிள்ள என என் காதுபடவே பேசுவார்கள். புளோக்  கீழேயுள்ள செவன்இலவன் கடைக்கு முன் கும்பலாயக் கூடி தண்ணி அடித்துக் கொண்டிருப்பவர்கள்கூட என்னைப் பார்க்கும்போதெல்லாம் புது அப்பா வேணுமா? இதோ இவன் இருக்கான், அதோ அவன் இருக்கான், உன்னோட அம்மாவுக்கு ரெக்மெண்ட் பண்ணுடா, காசெல்லாம் கொடுப்போம் என்பார்கள். ஒரே அவமானமாக இருக்கும். எதுவும் சொல்லமுடியாது; எதுவும் செய்யமுடியாது. எனக்குள் நான் கொதித்து  கொதித்து வெந்துப்போவேன்.  கொஞ்சநாளைக்குப் பிறகு அம்மா யாரோ ஒருவனைத் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிந்தவர் ஒருவர் பாட்டியிடம்  சொல்லியிருக்கிறார்கள். அன்று முழுக்க பாட்டி புலம்பிக்கொண்டே இருந்தாள். என்னைப்பற்றி எதுவும் யோசிக்காமல் தன் ஆசைகளை மட்டுமே நோக்கி ஓடும் அம்மாவைத் திட்டித் தீர்த்தாள். அப்பாவை அவள்தான் கொன்றுவிட்டாள் என்றாள். அவள் திரும்பி வராமல் இருந்திருந்தால் மகன் உயிரோடு இருந்திருப்பானே என அழுதுத்தீர்த்தாள். அன்னைக்கு கண்ணைக் கசக்கிக்கிட்டு வந்தப்பவே போடி நாயேன்னு விரட்டி அடிச்சிருக்குனும் என்றாள் பாட்டி.
அந்த நாயைப்பத்தி இனிமேல் பேசாத பாட்டி
என்றேன். எனக்குள் இப்படி ஒரு வக்கிரம், ஒரு வன்மம் எப்படி எங்கே முளைத்தது? யார் பதித்து வைத்தது? என்று எனக்குப் புலப்படவில்லை. பெற்றவளை முதன்முறையாக நாய் என்றது என் மனம் என்னையும் மீறி.

இருளில் மூழ்கி 1
அன்றுமுதல் நான் கொஞ்சம் கொஞ்சமாக மாறிப்போனேன். பாட்டியைத் தவிர மற்றவர்களை வெறுக்க ஆரம்பித்தேன். உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றவுடன், பெரியவன் ஆகிவிட்ட உணர்வு எனக்குள் மேலோங்கிது. வகுப்பறையில் ஆசிரியரின் கவனத்தை ஈர்க்க மாணவர்களிடம் அதிகம் பேச ஆரம்பித்தேன். வகுப்பறையில் என் நடமாட்டத்தை அதிகப்படுத்தி, ஆசிரியர் பேச்சுக்குக் கட்டுப்படாமல் ஒரு நாளைக்குப் பல முறை என் பெயரைச் சொல்லவைத்தேன். ஆசிரியரின் கட்டுக்குள் நான் அடங்காததால் நான் வகுப்பில் ஹீரோவானேன். மலாய் சீன மாணவர்களும் என் கட்டுப்பாட்டுக்குள் இருந்தனர். வகுப்பின் தலைவலியாக இருந்து பள்ளி அளவில் தலைவலி கொடுத்தேன். பாடநேரங்களில் வகுப்புக்குத் தாமதமாகச் செல்வது, சில வேளைகளில் வகுப்புக்கே செல்லாமல் கழிவறையில் புகுந்துகொண்டு சுவர்களில் கிறுக்கி வைப்பது, சில நாட்களில் பள்ளிக்கு வராமல் மட்டம் போட்டுவிட்டு நண்பர்களோடு சுற்றுவது என்று இருந்தேன்.  என பள்ளியின் முதல்வரும் கட்டொழுங்கு ஆசிரியரும் பலமுறை என்னிடம் பேசி, அறிவுரைகள் கூறியும் கௌன்சிலிங் கொடுத்தும் நான் மாற விரும்பவில்லை. மாற அக்கறையும் எடுத்துக்கொள்ளவில்லை. பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினேன். என்னைச் சுற்றி எப்போவும் ஓர் கூட்டம் இருந்துகொண்டேயிருக்கும். என்னைச்சுற்றி ஓர் கூட்டம் வளைய வரும்போது நான் வலிமையானவனாக என்னை உணர ஆரம்பித்தேன். எனக்குள் வன்மகுணங்கள் இன்னும் கொளுந்துவிட்டு எரிந்து தீவிரமாயின. வயதான பாட்டி பலமுறை பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு, என்னைப்பற்றிய குற்றச்சாட்டுகளால் அறையப்பட்டார்.

இருளில் மூழ்கி 2
பள்ளிக்கு வெளியிலும் என்னை அடையாளப்படுத்திக்கொள்ள நான் தங்கியிருந்த புளோக் கீழே பலநாச வேலைகளில் ஈடுபட்டேன். தீப்பற்றிக்கொண்டது என பொய்த்தகவல் கொடுப்பதும் புளோக் கீழே தீ வைப்பதும் பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்துவதும் சிகரெட் தண்ணி எனவும் வன்மத்தால் தலைகால் தெரியாமல் இருந்தேன்.  கூட இருந்த நண்பர்களும் என்னைத் தலை யாக்கிவிட்டனர். முன்பு என்னைக் கேலி செய்த கூட்டங்கள் என்னைப் பார்த்ததும் ஓட ஆரம்பித்தன. விரட்டி விரட்டி அடித்தேன். ரத்தம் சொட்டச்சொட்ட அடித்தேன். ஆமாம். இப்பொழுது வருகிற திரைப்படங்களில் ரவுடிகளும் குண்டர்களும்தானே கதாநாயகர்கள். இப்ப இருக்கிற பெண்களுக்கும் அவர்களைப் போன்றவர்களைத்தானே பிடிக்கிறது. புளோக் கீழே நடக்கும் பெண்களையும் விட்டுவைப்பதில்லை. அருவருப்பான சொற்களால் கிண்டலும் நக்கலுமாய்க் காலம் நகர்ந்தது. இந்த வாழ்க்கை குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு போரடிக்க ஆரம்பித்தது. புதிதாக புளோக்குகளின் கீழேயிருக்கும் கடைகளில் சின்னச் சின்னதாகத் திருட ஆரம்பித்தேன். இது ரொம்ப திரிலிங்காக இருந்தது. ஆனால் விரைவிலேயே மாட்டிக்கொண்டேன். கடையில் வைக்கப்பட்டிருந்த புகைப்படக்கருவி என்னையும் என் நண்பர்களையும் காட்டிக்கொடுத்தது. போலீஸ் கேஸ் ஆனதும் பள்ளியே அல்லோலப்பட்டது. பள்ளியின் முதல்வருக்கு அவமானமாக இருக்குதாம். கட்டொழுங்கு ஆசிரியருக்கம் அவமானமாய் இருக்குதாம். என் வகுப்பு ஆசிரியர்களுக்கும் அவமானமாம். ஆக மொத்தம் பள்ளிக்கே என்னால் அவமானமாம். ஆனால் எனக்கு அவமானமாய்த் தெரியவில்லை. என்னைப் பெற்றவள் இன்னொருத்தனுடன் அம்மணமாய் இருந்ததைப் பார்த்ததைவிட இது என்ன பெரிய அவமானம்?
வலி..விலி....வலி....
வலிகள், மனத்துக்குள் வன்மத்தைப் பதித்துப் பதித்து வளர்த்துவிட்டன. 

விடியல்
ஒருநாள் புதிதாக வந்த தமிழாசிரியர், உன்னால் இப்பள்ளியின் தமிழாசிரியர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் அவமானம்‘, என்றார். எனக்கு ஆணவமகிழ்ச்சியாக இருந்தது. என்னை அவமானமாய் ஒதுக்கிவைத்த இந்தச் சமூகத்தை நான் என் காலடியில் போட்டு மிதித்துவிட்ட ஆணவத்தில் இருந்தேன். ஆனால் அவரை எனக்குப் பிடிக்கும். மற்ற வகுப்பில் தொந்தரவுகளைக் கொடுத்து வந்த நான் தமிழ் வகுப்பில் மட்டும் ஆசிரியர் சொல்வதைக்கேட்டு நடந்து வந்தேன். தமிழ்த் தேர்வுகளில் சிறப்பான புள்ளிகளை வாங்குவேன். தமிழ் வகுப்பில் என்னுடைய கட்டடொழுங்கைக் கண்டு, வகுப்பு ஆசிரியரும் மற்றவர்களும் ஆச்சரியப்பட்டனர்.
ஒருநாள் தமிழாசிரியர், என் அம்மாவைப்பற்றி விசாரித்தபோது,
அவ அஞ்சடி நாயி.........
எனக்குள்ளிருந்து வார்த்தைகள் என்னையும் மீறி கொட்டின. அம்மாவை அப்படிச் சொல்லாதே என்றார்.
ஆறு மாச கைக்குழந்தையா இருக்கும்போது, பாட்டி வீட்டு வாசல்ல போட்டுட்டுப் போயிட்டா அந்த அஞ்சடி’,
சொல்லும்போதே அழுகை வந்தது. இத்தனை அன்பாக இதுவரை என்னிடம் யாரும் பேசியது இல்லை என் பாட்டியைத் தவிர. எழுந்து வந்து,  தோளில் கை வைத்தார். அவர் கை என் மேல் பட்டதும் உடல் சிலிர்த்தது. அதிகாரப் பார்வையும் அலட்சிய எண்ணமும் கொண்டவர்களை மட்டுமே பார்த்து வந்த எனக்கு ஆசிரியர் வித்தியாசமாகப்பட்டார்.
சார், நீங்க இந்தப் பள்ளிக்கு முன்னாடியே வந்திருக்கக்கூடாதா
என்றேன்.
ஏன் என்றார்.
நாளைக்கு எனக்குக் கோர்ட் கேஸ் இருக்கு
என்னடா பண்ணுன?’
வீடு பூந்து திருடினேன்
ஏண்டா?’
சும்மாதான் கூட்டாளிகளோட
என்ன தண்டனை கொடுப்பாங்க
சின்ன வயசுல, ஏதாவது போய்ஸ் ஹோமுக்கு அனுப்புவாங்க. பள்ளியே ரெக்மெண்ட் பண்ணிட்டாங்க பாட்டியோட சம்மதத்தோடு
பழசெல்லாம் போகட்டும். பாட்டியை கொஞ்சம் நினைத்து பார் என்றார். உன்னால் ஒவ்வொரு முறையும் பள்ளிக்கு வந்து அவமானப்படுறாங்க. அவங்களுக்கு உன்னால் என்ன சந்தோஷத்தைக் கொடுத்துவிட முடியும். நீ நல்லா வாழ்ந்தாதானே அவங்களுக்கு ஏதாவது உன்னால் செய்யமுடியும். உனக்கு அறிவுரை சொல்லல. வாழ்க்கையச் சொல்றேன். சின்ன வயசு. நீ போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்கு. இன்னும் லேட்டாகிவிடல என்றார். அன்றுதான் முதன்முதலாக என்னைப்பற்றி நான் சிந்திக்க ஆரம்பித்தேன். பாட்டிக்காவது நான் எனனை மாற்றிக்கொள்ளலாமே என்று ஓர் எண்ணம் தோன்றி மறைந்தது.

போய்ஸ் ஹோம் – முதல் இரவு
மெத்தையின் புதிய வாசமும் தலையணையின் தடித்தப்பரப்பும் என்னைத் தூங்கவிடாமல் விரட்டிக்கொண்டிருந்தது. எப்படியோ விடியும்போது நான் புதிதாகப் பிறக்க வேண்டும் என்று மட்டும் உறுதியாய் இருக்கிறேன். தூங்கினேனா இல்ல முழித்திருந்தேனா என்று தெரியாத ஒரு நிலையில், யாரே என்னைத் தட்டினார்கள். விழித்துப் பார்த்தேன். என் கண்காணிப்பு அதிகாரி என்தோளில் கைவைத்து சொன்னார்.

சீக்கிரம் கிளம்பு, உன் பாட்டி மாரடைப்புல இறந்துட்டாங்களாம்


___________________முற்றும்____________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக