செவ்வாய், 3 ஜூன், 2014

சிறுகதை - முகம் தெரியாமல் ஒரு மனம்

சிறுகதை

முகம் தெரியாமல் ஒரு மனம்
-         

சார், உங்களைப் பார்க்க ஒரு பெண் வந்திருக்கிறாள்
அலுவலகப் பையன் வந்து சொன்னான்.
வரச்சொல் என்றேன்.
வணக்கம் பெண் குரல்.
பார்த்தேன். இன்றுதான் அவளைப் புதிதாய்ப் பார்க்கிறேன். பதிலுக்கு நானும் வணக்கம் சொல்லி அமரச் சொன்னேன்.
என் பெயர் காயத்திரி. உங்கள் கதைகளை நிறையப் படித்திருக்கிறேன் என்று அறிமுகம் செய்துகொண்டாள். நன்றி சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன். என் பார்வையைப் புரிந்து கொண்டவளாய்,
ஒவ்வொரு கதையையும் வெவ்வேறு பாணியில் நீங்கள் எழுதிக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களிடம் சில விஷயங்களைப் பேசவேண்டும் என்பதற்காக வந்தேன்.
பேசலாம். ஆனால் ஒரு பதினைந்து நிமிடங்கள் பொறுத்திருக்கவேண்டும். முடியுமா?’
ஓ.கே. சொல்லிவிட்டு, மேசைமேல் சிறகடித்துக் கொண்டிருந்த தமிழ் முரசைக் கையில் எடுத்தாள். சரியாக பதினைந்து நிமிடங்களில் என் வேலைகளை முடித்துக்கொண்டு,

என்ன பேசப் போறீங்க?’ என புருவத்தை உயர்த்தினேன்.
மனித நேயம் பற்றி உங்கள் கதைகளில் நிறையவே எழுதியிருக்கும் நீங்கள் அண்மையில் ஒரு கதையில் மனிதனை நேசிக்காதே மனதை நேசி என்று எழுதியிருக்கிறீர்கள். அதைப்பற்றி விளக்கம் அளிக்க முடியுமா?’

மனித நேயங்கள் வளர வேண்டும் என்றெல்லாம் எழுதியவன் திடீரென, மனிதனை நேசிக்காதே மனதை நேசி என்றவுடன் குழம்பி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இது தொடர்பாக நிறைய வாசகர்கள் எனக்குக் கடிதம் கூட எழுதியுள்ளார்கள்.

சற்று நிறுத்திவிட்டு, மீண்டும் தொடர்ந்தேன்.

மனித நேயம் என்பதே மனசு சம்பந்தப்பட்டதுதான். மனசளவில் நாம் எல்லோரிடமும் உறவாட முடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மனசு. இல்லை பல மனசுகள் இருக்கு. அதை நம்மால் பார்க்க முடியாது. முகம் தெரியாத அந்த மனசை மிகவும் அரிதாகத்தான் பார்க்க முடிகிறது. பெரும்பாலான மனிதர்களை அவர்கள் இறந்த பின்னரும்கூட பலரால் புரிந்துகொள்ள முடியாமல் போவதற்கு இது ஒரு காரணமாகவும் இருக்கிறது.

காயத்திரி தன் விழிகளை மூடித்திறந்தாள்.
விளங்கல சார் என்றாள்.

பெரும்பாலோர் மனிதனையும் மனசையும் ஒன்றாகவே பார்க்கின்றனர். ஆனால் மனிதனுக்கும் அவன் மனசுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. மனத்துக்குள் இருக்கும் அனைத்தையும் ஒரு மனிதன் வெளிக்கொட்டுவதில்லை. அவன் சார்ந்த சமூகத்தின், நாட்டின் விழுமியங்களும் அதன் மேல் கொண்டுள்ள ஒரு வித பயமும் பற்றும் அவன் சார்ந்த மனத்தில் உள்ளவற்றை உள்ளவாறு சொல்வதற்கும் செயல்படுத்துவதற்கும் தடைக்கல்லாக இருக்கின்றன.

அவள் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தாள்.

மனிதன் என்பதற்கு பிஸிக்கலா ஓர் உருவம் இருக்கிறது. அதை நம்மால் பார்க்க முடியும். மனிதனின் செயல்பாடுகள் மூலம் அவனைப் பற்றி ஓரளவு கணிக்க முடியும். ஏழை – பணக்காரன், படித்தவன் – படிக்காதவன், நல்லவன் – கெட்டவன், இப்படி பல வித்தியாசங்களைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ஆனால் மனம் இருக்கிறதே.....அது ஒரு விடுகதை. யாராலும் சரியாக கணிக்க முடியாத ஓர் உணர்வு நிலை. மனம்தான் மனிதனின் உண்மை நிலை. வாழ்க்கையின் அவசரத்தில் மனிதன் மனசைத் தொலைத்து விடுகிறான். மேட்டிரியலிஸ்டிக் உலகில் அவனும் போட்டிப் போட்டு முன்னுக்கு வரவேண்டிய ஒரு கட்டாயம் இருக்கு. இல்லையென்றால் இந்த உலகமயமாக்கத்தில் அவன் பின்தள்ளப்படுவான் இல்லை தொலைந்து போவான். பொருளைத் தேடும் அவன், மனத்தைப் பற்றி அக்கறைப்படுவதில்லை; உணர்வதில்லை. அதற்கு அவகாசமும் நேரமும் அவனுக்குக் கிடைப்பதில்லை

நீங்கள் சொல்வதைப் பார்த்தால், மனிதன் எனபது போலியானதாகவும் மனம் என்பதுதான் உண்மையானதாகவும் தோன்றுகிறதே!
ம்...சரியாகச் சொன்னீர்கள். இதிலிருந்து நான் சொல்வதை எந்த அளவுக்கு ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் எனத் தெரிகிறது. உங்களின் ஆர்வம் எனக்குப் பிடித்திருக்கிறது.

அவள் சற்று நாணினாள். வெட்கப் பூக்களைப் பூத்தாள்.

மனிதன் தனக்குத்தானே சில ஸ்டேட்டஸ் களை நிர்ணயித்து வைத்திருக்கிறான். அந்த வட்டத்திற்குள்ளேயே வாழ்ந்து விட்டுப் போக விரும்புகிறான். அவன் விருப்பத்திற்கு மாறாக வாழ்க்கை அமையும்போது, அதிலிருந்து வேரோடு அறுத்துக்கொண்டு போகவே துடிக்கிறான். கண்முன்னே இருக்கும் அழகான வாழ்வை விட்டு விட்டு, தெரியாத வாழ்வை நோக்கி புறப்படுகிறான். வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும்போது, தீர்வு காண மனம் இல்லாமல், வழி தெரியாமல் பிரச்சனைகளிலிருந்து  தன்னை விடுவித்துக்கொள்ளவே விரும்புகிறான். இந்தச் சூழ்நிலையில் மனசைப்பற்றி சிந்தித்துப் பார்க்க அவனுக்கு அவசியமில்லாமல் இருக்கிறது.

காயத்திரி தன் கண்களைப் பெரிதாக்கி, என்னைக் கூர்ந்து கவனித்தாள்.

இதுவரை நான் பேசியதில் உங்களுக்குக் குழப்பம் ஏதும் இருக்கிறதா?’

குழப்பம் ஏதுமில்லை. புரியிற மாதிரியும் புரியாத மாதிரியும் இருக்கு

என் கதைகளைத் தொடர்ந்து படித்து வருவதால் உங்களால் நிச்சயமாகப் புரிந்துகொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்

என்றேன் திடமாக. அவள் தலையை மட்டும் அசைத்து விட்டு,
மனிதன் மனிதனாக வாழ முடியாமல் தடுமாறுவதற்கு நீங்கள் குறிப்பிட்ட அந்த ஸ்டேட்டஸ் மட்டும்தான் காரணமாக இருக்கிறதா?’ எனக்கேட்டாள்.
ஸ்டேட்டஸ் மட்டுமே இதற்கெல்லாம் காரணம் என்று முழுமையாக சொல்லிவிடமுடியாது. சமூகத்தில் இருக்கும் சில மதிப்புக்கூறுகளும் அவனுக்குத் துணை நிற்கின்றன.

சமூக மதிப்புக்கூறு.....புரியவில்லை என்றாள்.

உங்களுக்குப் புரியும்படியாகவே சொல்கிறேன். மனிதன் தோன்றியபோது அவனுக்கு நாகரீகம் கிடையாது. இலைகளாலும் மரப்பட்டைகளாலும் தனக்கு அவன் உடுத்திக்கொள்ள அசைப்பட்டபோது நாகரீகம் தோன்றியது. இவள் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்குவேண்டும் என்பதற்காக திருமணத்தை ஏற்படுத்தினான். அந்தத் தாம்பத்திய வாழ்வில் மற்றவர் குறுக்கிடாமல் இருக்க உறவுமுறைகளை உருவாக்கினான். இப்படிப் படிப்படியாக வளர்ந்து வந்ததுதான் இன்றைய வாழ்வியல் முறைகள்.

இதில் திருமணமான ஆண், திருமணமாகாத ஆண் என்ற இரு பிரிவுகளையும் அலசிப் பார்த்தால் சோசியல் வேல்யூ திருமணமான ஆணுக்கே சாதகமாக இருக்கிறது. திருமணம் ஆகாத ஆணைவிட, ஒரு பெண்ணை மணந்து அவளுடன் குடும்பம் நடத்தும் ஆணுக்கே சிறப்பிடம் கொடுக்கப்படுகிறது. சமூகத்தில் அவனுக்கு மதிப்பும் கௌரவமும் கிடைக்கிறது.

இது எதிர்மறையான எண்ணங்களை அவனிடம் ஏற்படுத்துகிறது. அவர்கள் செய்யும் தவறுகளை மறைப்பதற்கு  இந்தச் சமூக மதிப்புக்கூறு ஒரு போர்வையாக மாற்றப்படுகிறது. இதனால் விளையும் பாதிப்புகள் மறைக்கப்படுகின்றன. அவனை நம்பியிருக்கும் ஒரு குடும்பம் கேடயமாக அவன் முன்னே இருக்கிறது. இதைச் சில குடும்பங்களிலும் சின்னச் சின்ன சம்பவங்களிலும் நம்மால் கண்கூடாக காண முடியும்.

பக்கத்து வீட்டில் திருமணமாகாத ஆண்கள் இருந்தால், தங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை அந்தப் பக்கமே அனுப்பமாட்டார்கள். அதே வீட்டில் திருமணமான ஓர் ஆண் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தால், தங்கள் வீட்டுப் பெண்பிள்ளைகளை அவர்களோடு சேர்ந்து பழக விடுவார்கள். நம்பிக்கை. அவன் குடும்பக்காரன். அவனை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது. அவன் நல்லவனாகத்தான் இருப்பான் என்ற நம்பிக்கை. ஒட்டு மொத்த சமூகத்தின் நம்பிக்கை. காரணம் நாம் ஏற்படுத்தி வைத்துள்ள சமூக மதிப்பீடுகள்.

ஆனால் இப்படிப் பழகிய பல குடும்பப் பெண்கள் அந்த ஆண்களுக்குப் பலியான சம்பவங்களும் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்ட சூழலும் நிறையவே உருவாகியிருக்கின்றன. ஆனால் சமூக மதிப்பீடுகள் அவர்களுக்கு அரணாக இருந்து அவர்களைக் காப்பாற்றி விடுகிறது.

அவள் விழிகள் சிவக்க ஆரம்பித்தன. முகத்தில் கலவரம் தெரிந்தது.

உங்களுக்கு என்ன ஆயிற்று?’ என்றேன்.
ம்ம்ம்  ஒன்று.....மில்லை வார்த்தைகள் தத்தளித்து வெளிவந்தன.
நான் பேசிய விஷயங்கள் உங்கள் மனத்தைப் புண்படுத்திவிட்டன என்று நினைக்கிறேன். போதும் இத்துடன் நிறுத்தி விடுவோம் என்றேன்.

என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் பேச்சு என்னைப் புண்படுத்தவில்லை. நான் ஜூனியர் காலேஜில் படிக்கும்போது நடந்த ஒரு சம்பவம் உங்கள் பேச்சைக் கேட்டதும் நினைவுக்கு வந்துவிட்டது. அதுதான்.

நான் அவளுக்காக அமைதியாக இருந்தேன். அவளும் அமைதியாக இருந்தாள். அந்த அமைதி கொடுமையானதாக இருந்தது. பெல்லை அழுத்தினேன். அலுவலகப் பையன் வந்தான்.

டீயா, காப்பியா எனக் கேட்டேன்.
அவள் அமைதியாக ஏதோ யோசித்துக்கொண்டிருந்தாள்.

காயத்திரி உங்களைத்தான் டீயா, காப்பியா அல்ல சோப்ட் ட்ரிங் ஏதாவது?’
சில்லுன்னு ஒரு கோக்ககோலா கிடைக்குமா சார்?’
அவங்களுக்கு ஒரு கோக் ஐஸ் போட்டு கூலா, எனக்கு வழக்கமானதுதான்
அலுவலகப் பையன் போய்விட்டான்.

சிரமம் உங்களுக்கு என்றாள்.
இதில் என்ன சிரமம், விருந்தோம்பல் நம் தமிழரின் மரபு அல்லவா, இதற்காக வள்ளுவர் தனி அதிகாரமே எழுதியிருக்காரே

அலுவலகப் பையன் கொண்டு வந்து வைத்தான். அவனுக்கு நன்றி சொன்னவள், உறிஞ்சியின் மூலம் ஓர் இழு இழுத்துவிட்டு பேச ஆரம்பித்தாள்.

அப்போது எங்கள் எதிர்வீட்டில் என்னுடன் பயிலும் சில வெளிநாட்டு மாணவர்கள் தங்கியிருந்தனர். என் அப்பா நான் அவர்களுடன் பேசக்கூடாது என எனக்கு உத்தரவு போட்டிருந்தார். பள்ளியில் பார்க்கும் நண்பர்கள் அவர்கள். அவர்களிடம் எப்படிப் பேசாமல் பழகாமல் இருக்கமுடியும்? மேலும் அவர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு படிக்க வந்தவர்கள். அவர்களுக்கு நாம்தானே உதவிகள் ஏதும் தேவைப்பட்டால் செய்யவேண்டும். அப்படித்தான் ஒருநாள் பள்ளி முடிந்து வரும்போது, வீட்டிலிருந்து ஜூரோங் பறவைப் பூங்காவிற்கு எப்படிச் செல்வது என்று கேட்க நானும் சொல்லிக்கொண்டிருந்தேன். இதைப் பார்த்துவிட்ட அப்பா என்னிடம் ஒரு வார்த்தைக்கூடக் கேட்காமல் பக்கத்து வீட்டுக்காரர்களின் துணையோடு அந்த இளைஞர்களைத் திட்டியும் மிரட்டியும் விட்டு வந்தார்.

ஆனால் என் பக்கத்து வீட்டிற்குத் திருமணமான ஒருவர் தன் குடும்பத்தோடு வாடகைக்கு வந்தார். அந்த வீட்டுக்குப் போய்வர அப்பா எந்த தடையும் சொல்லவில்லை. குறுகியக் காலத்திலேயே ஒரே குடும்பமாகப் பழகினோம். ஒருநாள் அந்த அங்கிள் என்னிடம் தப்பாக நடக்க முயற்சித்தார். நான் பயந்துபோய் அம்மாவிடம் சொன்னேன். அம்மா அப்பாவிடம் சொன்னார். பெருசா ஏதோ நடக்கப்போகிறது என்று பயந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அப்பா அங்கு போவதை நிறுத்திக்கொள்ளச் சொன்னார். அவ்வளவுதான். இங்குதான் எனக்கு முரணாகப் பட்டது.

தப்பே செய்யாத இளைஞர்களை ஆட்களுடன் சென்று மிரட்டி வந்த அப்பா, என்னிடம் தப்பாக நடக்க முயற்சி செய்தவனை ஒன்றுமே செய்யவில்லை. அன்று எனக்குப் புரியவில்லை. இன்று புரிகிறது. அதுதான் இந்தத் தடுமாற்றம். நீங்கள் சொன்ன சமூக மதிப்புக் கூறுகள்தான் அப்பாவின் அன்றையச் செயலுக்குக் காரணம் என்று.
ஈரம் கசிந்த தன் விழிகளைத் துடைத்துக் கொண்டாள்.

அதுவும் நீங்கள் ஒரு பெண் என்பதால் உங்கள் மேல் கூடுதல் கவனம் பெற்றோர்களாலும் சமூகத்தாலும் திணிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சமூகக்காரணிகளும் ஒரு காரணமாக இருக்கவேண்டும். என்று மேலும் தொடர்ந்தேன்.

ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் இருக்கும். அதை மனம் விட்டுப் பேசும்போது மட்டும்தான் வெளிக்கொணர முடியும். இன்றுகூட நீங்கள் இதைப்பற்றி பேச இங்கு வரவில்லை. ஆனால் பாருங்கள். நான் சொன்ன சில விஷயங்கள் உங்கள் வாழ்க்கையோடு தொடர்பு கொண்டிருக்கின்றன. அதனால்தான் மனத்தில் உள்ளதை நீங்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டீர்கள்....

கலங்கிய கண்களுடன் அவள் முகம் புத்தாடை உடுத்திக்கொண்டது.

எனக்காக இவ்வளவு நேரத்தை நீங்கள் ஒதுக்கியதே பெரிய விஷயம். நீங்கள் என்னுடன் உரையாட ஆரம்பித்ததனால் எவ்வளவோ விஷயங்களை என்னால் மனம் விட்டுப் பேசமுடிந்தது. உங்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடிந்தது. இதற்கு மாறாக அமைதியாக பேசாமல் இருந்திருந்தால் எத்தனையோ விஷயங்கள் பேசப்படாமலேயே மறக்கப்பட்டிருக்கும். மறைந்துபோயிருக்கும். மனித வாழ்க்கையைப் பற்றி நீங்கள் நிறையவே எழுதியிருக்கிறீர்கள். என்னைப் போன்றவர்களுக்கு அவை முக்கியமான வழிகாட்டிகளாக இருக்கும். இன்னும் நிறைய எழுதுங்கள்.

அவள் எழுந்து சென்றாள். அவளைப்பார்த்தவுடன் குப்பையாகிப் போன என் ஆண் மன உணர்வுகளை நான் யாரிடமும் சொல்லமுடியாது. ஏன் உங்களிடம் கூடத்தான்.

_______________________________முற்றும்_______

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக