ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

தப்பாய் அச்செடுக்கப்பட்டவர்கள்


நாங்கள்
உணர்ச்சிக்கொல்லிகள்
ஒவ்வொரு நாளும்
தூக்கிலிட்டுக் கொள்கிறோம்
நாங்களாகவே

குயவன் கையால்
தப்பாய் அச்செடுக்கப்பட்டவர்கள்

நாங்களும்
உங்களைப்போன்றவர்கள்தான்
எங்களையும் கொஞ்சம்
வாசியுங்கள்

வெளிவாசிப்புகள்
புறத்தை மட்டுமே
உங்களுக்கு
அடையாளம் காட்டும்

மனவாசிப்புகள்
அகத்தைத் திறந்து
எங்களின் துயரங்களை
உங்களிடம்
கைகுலுக்கி
அறிமுகம் செய்து
அடையாளம் காட்டும்

நரகம் என்பார்களே
அது வானில் இல்லை
இங்கே
நாங்கள் படும்
துயர்தான் அது

மனத்தளும்பல்கள்
ஒவ்வொரு விடியலிலும்
விழிகளை
பனிநீரால் தாலாட்டி
சூடாக்கி விடுகின்றன

வெப்பம்
குளியல் செய்கிறது
உடல் முழுக்க

ஆணாகவும் இல்லை
பெண்ணாகவும் இல்லை

ஆண் என்றால்
ஆண்
பெண் என்றால்
பெண்

இது
எங்களுக்கு மட்டுமே
சாத்தியப்படும்
ஏனெனில்
நாங்கள்
கடவுளின்
நேரடிக்குழந்தைகள்

காமத்தோடு பார்க்காதீர்கள்
மனத்தோடு பாருங்கள்
அருவருப்பாய் பார்க்காதீர்கள்
அரக்கப் பார்வைகள்
எங்களை
எரிக்கின்றன
அன்பாய் பார்க்காவிட்டாலும்
பரவாயில்லை
பார்க்காதவாறு
இருந்து விடுங்கள்

நாங்கள்
கொஞ்சம் நிம்மதியாக
இருந்து விட்டுப்போகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக