புதன், 22 பிப்ரவரி, 2012

பெய்யும் மழையில் நனையும் மனம்

நீரின் அடியாழத்தின்
குளிர்ச்சியாய்
இங்கே
ஆழ்மனதில் மூடிக்கிடக்கிறது
நம் காதல்

நீண்டு வளரும்
அடுக்குமாடி வீடுகளின்
நிழல்கள்
நம் காதலைச்சொல்லும்

நீரில் மிதக்கும்
ஆம்பல் இலைகளின் மேலே
நினைவின் கண்ணாடிகளின்
நீர்க் குமிழ்களும்
நம் காதலைப்பேசும்

தெருவோரத்து நிழல்மர
பூக்களின் வாசங்களிலும்
வண்ணத்துப் பூச்சிகளாய்
வட்டமடிக்கும்
நம் காதல்

சூரியன் உறைந்துபோன
காலங்களில்
நிலவின் ஒளிர்க்காற்று
வீசும் வேளைகளில்

ஆசைகள்
மனம் முழுக்க
தளும்பிக்கொண்டிருக்க

வெட்கத்தை உடுத்திய
உன் பார்வைகள்
எனக்குப் பிடித்திருக்கிறது

இதோ
உனது இந்த அருகாமை
எனக்குப் பிடித்திருக்கிறது

துள்ளிக் குதிக்கும்
நீர்த் திவலைகளாய்
மனம்
பெய்யும் மழையில்
நனைந்துக்கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக