ஞாயிறு, 22 மே, 2011

கும்பகர்ணனின் பண்புநலன் - இலக்கியப் பகரல்

முன்னுரை

நுண்கலைகள் பலவற்றிலும் தலை சிறந்தது கவிதை. கவிதைகளால் இயற்றப்பட்ட நூல்களில் தலைசிறந்தது கம்பராமாயணம். வால்மீகி எழுதிய வடமொழிக் காப்பியத்தின் கதையை எடுத்துத் தள்ளுவன தள்ளிக் கொள்வன கொண்டு, உருக்கொடுத்து உணர்ச்சியூட்டி ஒப்பற்ற உயர் பேரிலக்கியமாக வடித்துள்ளப் பெருமை கவிச்சக்கரவர்த்தி கம்பனையே சாரும். இப்பெருமையை உணர்த்தவே,

‘வெய்யிற் கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு’

என இயற்கையோடு கம்பனையும் சேர்த்துப் பாடினார் கவிமணி. கம்பராமாயணம் இலியாது, ஏனீது, துறக்க, நீக்கம், மகாபாரதம் முதலானவற்றை வெல்லும் சிறப்புடையது என்பதுமன்றி தனக்கு முதல் நூலான வால்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகும் என்கிறார் பன்மொழிக் காப்பியங்களைக் கற்ற வ.வே.சு.ஐயர்.

கம்பனின் காவிய மாளிகையில் தந்தையின் ஆண்மையும், தாயின் பேறும், கற்பின் வீரமும், மனைவியின் மங்கலமாட்சியும், மக்கட் பாசமும், நட்பின் பொலிவும், உடன் பிறப்பின் உயர்க்கொள்கையும் சிறப்புற்று விளங்கும். இத்தகைய சிறப்புமிக்க கம்பன் பாடல்களில் தென்படும் கும்பகர்ணனின் பண்புநலனை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். யுத்தக் காண்டத்தில் வருகின்ற கும்பகர்ணன் வதைப்படலத்தில்தான் கும்பகர்ணனின் கதாபாத்திரம் கம்பனின் புனையாற்றலால் உயரியப் பண்புள்ள கதாபாத்திரமாக வானுயர உயர்ந்து நிற்கிறது.

கும்பகர்ணன் ஓர் அறிமுகம்

காவிய உலகின் கதைச்சக்கரத்தில் மனிதப் பண்பு களிமண். அதை வைத்துக் கவிஞன் சுழற்றுதலால் பாத்திரம் என்னும் மட்பாண்டம் உருவாகிறது . கம்பனால் புனையப்பெற்றக் காப்பியத்தின் கதாபாத்திரங்களில் மிக உயர்ந்தக் கதாபாத்திரம் கும்பகர்ணன். கம்பராமாயணத்தில் கம்பனின் கைண்ணத்தில் மென்மேலும் தமிழ் மணம் வீசும் மண்வாசனையுடன் மெருகூட்டப்பட்டிருக்கிறது இக்கதாபாத்திரம். கம்பர் காப்பியம் கதையால் தழுவலாயினும், மொழியாலும் நடையாலும் பண்பாலும் உணர்ச்சியாலும் அன்பாலும் தமிழ் மண்ணில் பிறந்த நிலக்காப்பியம் எனக் குறிக்கின்றார் மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்கள். எனவே அரக்கக் குலமாகச் சித்தரிக்கப்பட்டாலும் தமிழர்களின் வாழ்வியல் தத்துவங்களின் அடிப்படையில் அறக்கோட்பாடுகளுக்குக் கட்டுண்ட ஒரு கொள்கைப் பிடிப்புள்ள உன்னதக் கதாபாத்திரமாக கும்பகர்ணனை கம்பர் படைத்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை. கம்பராமாயணத்தின் துணைப் பாத்திரமான கும்பகர்ணன் இராவணனுக்குத் தம்பியாகவும், வீடணனுக்கு மூத்தவனாகவும் வருகிறான்.

கும்பகர்ணன் வதைப்படலம்

இராமனோடு முதல் நாள் போர் புரிந்து மீண்ட இராவணன் இராமனை வெல்லும் திறம் உடையவன் கும்பகர்ணனே எனக் கருதி அவனைத் துயிலெழுப்ப வீரர்களை அனுப்புகிறான். எழுந்து வந்த கும்பகர்ணனை இராவணன் போருக்குச் செல்ல ஏவுகின்றான். அச்சமயம் கும்பகர்ணன் கூறும் ஆற்றல் வாய்ந்த அறிவுரை விழலுக்கு இறைத்த நீராகின்றது. இவன் பேச்சைப் புறக்கணித்து இராவணன் சினந்தபோது, அண்ணனிடம் பிழை பொறுக்குமாறு வேண்டிப் போருக்குப் புறப்படுகிறான்.
போருக்கு வந்த கும்பகர்ணனைத் துணைவர்களின் அலோசனைப்படி வீடணனை அனுப்பி அறஞ்சார்ந்த தன் அணிக்கு வருமாறு இராமன் அழைக்கச் செய்கிறான். ஆனால் இராவணனைப் பிரிந்து இராமனுடன் அணி சேர்வது தனக்கு அறமாகாது என மறுத்து தன் தம்பி வீடணனை வாழ்த்தி அனுப்புகிறான்.

இனி வரும் பகுதிகளில் மேலே கூறப்பட்டுள்ள கதையோட்டத்தை ஒட்டிய கும்பகர்ணனின் பண்புநலனை சில பாடல்கள் மூலம் ஆராய்வோம்.

உருவச்சிறப்பு

கம்பனின் ஈடு இணையற்ற படைப்புகளில் அனுமனைப் போல் கும்பகர்ணனும் ஒரு சிறந்த படைப்பாவான். அவனின் உடலமைப்புப் பல மலைகள் ஒன்றிணைந்தது போல் இருக்கும் எனப் போற்றப்படுவதுண்டு.

‘.....................................
கோயில் எய்தினான் குன்றன கொள்கையான்’

எனும் கம்பனின் இலக்கிய நயமும் பொருள் நயமும் கொண்ட வரிகள், கும்பகர்ணனின் குன்று போன்ற மாபெரும் தோற்றத்தை நம் முன்னே விரிக்கின்றது.

‘.............பொம்மென்று இரைத்தெழ....’

என வரும் வரிகள் அண்ணன் அழைத்தான் என்றவுடன் மலை போன்றத் தோற்றம் உடையவனான கும்பகர்ணன் ‘பொம் பொம்’ என்று மாபெரும் இரைச்சல் ஓசையுடன் அண்ணனைக் காண வரும்போது கும்பகர்ணனின் உடல் வனப்பை உணர்த்துகிறது.

அண்ணனைக் கண்டவுடன் கும்பகர்ணன் நிலத்தில் விழுந்து வணங்குவது ஒரு மலையே கீழே விழுந்து படுத்தது போல் இருக்கிறது என கம்பர் வர்ணிப்பதும், வலிமையும் பெருமையும் உடைய தன் தம்பியை இராவணன் ஒரு குன்று மற்றொரு குன்றைத் தழுவுவதைப் போன்று தழுவுகிறான் என கம்பர் உருவகப்படுத்துவதும் கும்பகர்ணனின் உருவச்சிறப்பை நம் கண்முன்னே முன்னிறுத்துகின்றது.

பகைவனும் வியக்கும் தோற்றமுடையவன் கும்பகர்ணன் என அவன் உருவச்சிறப்பை இராமனின் கூற்றின் மூலம் மறுஉறுதிப்படுத்துகிறார் கம்பர்.

‘தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின்
நாள்பல கழியுமால்..........’

கும்பகர்ணனைக் கண்ட இராமன் அவன் உருவத்தைப் பார்த்து,

‘இவனது ஒரு தோளோடு இன்னொரு தோளையும் பார்க்க வேண்டுமாயின் பல நாள் ஆகுமே, பூமியின் நடுவே நிற்கும் மேரு மலைக்கு கால் முளைத்து வந்தது போல இருக்கிறதே’ என வியக்கின்றான். இப்படியாகக் கும்பகர்ணனின் உருவச்சிறப்பைப் பல இடங்களில் நேரிடையாகவும், மற்றக் கதாபாத்திரங்களின் கூற்றாகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார் கம்பர். கும்பகர்ணன் வதைப்படலத்துக்கு முன்பாகவே, அனுமன், சூர்ப்பணகை போன்ற கதாபாத்திரங்களின் மூலம் கும்பகர்ணனை அறிமுகப்படுத்தியுள்ளார் கம்பர்.

கொள்கைச்சிறப்பு

‘குன்றன்ன கொள்கையான்’

என்பது கும்பகர்ணனின் உருவச்சிறப்புக்குப் பொருள் தருவது எனப் பார்த்தோம். ஆனல் அதே சொல்லாடல், குன்று போல் உயர்ந்தக் கொள்கை உடையவன் எனவும் பொருள் தரும். இராவணன் சீதையைச் சிறையெடுத்தது தவறு என்பதை இராவணனிடம் துணிந்து சொன்னதாலும், இனிமேல் மீண்டும் போய்க் கூறப்போவதாலும் கும்பகர்ணன் ‘குன்றன்ன கொள்கையான்’ எனச் சிறப்பிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

கும்பகர்ணன் அறநெஞ்சினன் ஆவான். அதன் வழி நிற்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். அறத்தை உணர்தல், அதன்படி நிற்க விரும்புதல் என்ற இரு துறைகளிலும் ஒரே நிலையில் நின்றவர்கள் கும்பகர்ணனும் வீடணனும். அதை நிலை நிறுத்த முடியாதச் சூழலில் அதனோடு வீழ்ந்து இறக்கத் துணிந்தான் கும்பகர்ணன். வீடணன் அதை விட்டுவிட்டு அறவழியில் நிற்கும் இராமனோடு சேர்ந்துவிட்டான். உணர்வு என்பது அனைவருக்கும் பொதுவானது. அதை வெளிப்படுத்துவதில் மட்டுமே மனிதன் வேறுபட்டு நிற்கின்றான் என்பதற்கு கும்பகர்ணன் நல்ல உதாரணம்.

‘…………….இரங்கலை என்றும் உள்ளாய் ‘

செஞ்சோற்றுக் கடனுக்காக உயிரை விடத் தயாரான கும்பகர்ணன் அதே போல் வீடணன் செய்யத் தவறியது தவறு என நினைக்கவில்லை.

‘ தர்மாத்மாவான நீ நாளை உலகத்திற்குத் தலைவனாகப் போகிறவன். நீ செய்தது உன்னைப் பொருத்த வரை சரியே. அதே போல் இங்கு நின்று போரிட்டு உயிரை விடுதலே எனக்குப் பெருமை’,
எனத் தம்பியிடம் உளம் உருகிக் கூறுவது கும்பகர்ணனின் உயர்ந்தப் பண்பினுக்கும் கொள்கைச் சிறப்பினுக்கும் நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.

கற்புடைச் சானகியை விடுவித்தாலன்றி வெஞ்சமர் விளைந்தே தீரும் எனவும், வெஞ்சமரில் வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ் அழிந்தே தீரும் எனவும் அஞ்சாது இராவணனுக்கு அறிவுரை கூறுகிறான் கும்பகர்ணன் .

‘............இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது சீதை மேனியைப்
புல்லலாம் என்பது........’

மிகவம் வெளிப்படையாக, இராமனை வெல்லலாம், சீதையைத் தழுவலாம் என்பதெல்லாம் முடியாத ஒன்று என எடுத்துரைக்கிறான். சீதையை விட்டு விடுமாறும், இராமன் சரணம் தொழுமாறும் வேண்டுகோள் விடுத்து, வீடணனை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறும் அறநெறியில் வாழ இராவணனுக்கு அறிவுரை கூறுகிறான். அவன் நெஞ்சின் ஆழத்திலிருந்து எழும் இக்கூற்றுகள் யாவும் மனித நேயப் பண்புகளைச் சித்தரிப்பதாக அமைந்துள்ளன.

‘………………………..
திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ இது விதியின் வண்ணமே’

கடுமையான விஷமான அந்தக் கற்புக்கரசியை நீ இன்னம் விட்டு விடவில்லையா? இது விதியின் செயல்தான் எனக் கூறுவது கும்பகர்ணனை விதியின் மேல் நம்பிக்கைக் கொண்டவனாகக் காட்டுகிறது. மேலும் இன்னொரு கட்டத்தில்,

‘வென்று இவன் வருவன் என்று உரைத்தி லேன் விதி
நின்றது பிடற்பிடித்து உந்த நின்றது.....’

என்பதும் விதியின்பால் அவன் கொண்ட நம்பிக்கையைக் காட்டுகிறது.

‘நான் போரிற்குச் சென்று வென்று வருவேன் என்று சொல்லமாட்டேன். விதி வென்றது. என் பிடரியைப் பிடித்துப் போருக்குத் தள்ளி நிற்கிறது. நான் போரில் இறப்பேன். அப்படி நான் இறந்த பின்னாவது சீதையை விட்டு விடு அண்ணா...’ எனக் கல்லையும் கரைக்கும் வண்ணம் உரைக்கின்றான்.

இறப்பது உறுதி என்றறிந்த பின்னும் போருக்குப் புறப்பட்டதும்,

‘நான் இறந்த பின்னாவது அவளை விட்டு விட்டு நன்றாக இரு’

எனக் கூறுவதும் அவனுடைய கொள்கையின் சிறப்பினையும், அறநெஞ்சினையும், பண்பின் உயரத்தையும் நமக்கு உணர்த்துகிறது.

வீடணன் கும்பகர்ணனை இராமனின் பக்கம் வந்து விடுமாறு உள்ளம் தழைக்க எதிர்ப்பார்ப்புடன் வேண்டுகோள் விடுக்க, பாசமுள்ள தம்பிக்கு பாசமுள்ள அண்ணன் பதிலுரைக்கிறான் இப்படி.

‘நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப்
போர்குகோலம் செய்துவிட்டாற்கு உயிர்கொடாது அங்குப் போகேன்.......’

நீரில் வரைந்த கோலம் போன்ற குறுகிய வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள, இத்தனை நாள் வளர்த்து ஆளாக்கி இந்தப் போர்க்களத்திற்கு அனுப்பி வைத்த அண்ணனுக்காக தன் உயிரைத் தராமல் இராமன் பக்கம் போகமாட்டேன் எனக் கூறும் கும்பகர்ணனின் நெஞ்சுரம் அவனை உயர்ந்த கொள்கைவாதியாகவும் இராவணனுக்குத் தொண்டு செய்வதையே தனது வாழ்நாள் குறிக்கோளாக அமைத்துக் கொண்டவன் எனவும் காட்டுகிறது.
நீர்க்கோல வாழ்வு எனக் கும்பகர்ணன் கூறுவது இந்த வாழ்வின் நிலையாமையை எடுத்துரைக்கிறது. இதனையை வள்ளுவரும்,

‘நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை’

என்கிறார். அதாவது நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானது என்பதாகும்.

‘…………………………………
புலையுறு மரணம் எய்தல் எனக்கிது புகழ தேயால்’

இராவணன் பக்கம் நின்று இழிவான மரணத்தை அடைந்தாலும், அதுவும் எனக்கு ஒரு வகையில் புகழே எனக் கும்பகர்ணன் கூறுவதும் அவனின் பண்புநலனுக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். இன்றளவும் சான்றோர்களால் சிறந்த பண்பாளனாக, அறநெஞ்சினனாக, பாசமுள்ளத் தம்பியாக, பாசமுள்ள அண்ணனாக, இராமனே வியந்த வீரனாகப் போற்றப்படுவதும் அவனின் தனிச்சிறப்புகளேயாகும்.

அண்ணனின் நலனில் அக்கறையோடு அறிவுரை சொல்லவும் கும்பகர்ணன் தயங்கவில்லை. அறிவுரைகள் பலன் தராத போது வீடணன் போல் இராமன் பக்கம் போய் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் கும்பகர்ணன் முனையவில்லை. கடைசிவரை அண்ணன் பக்கமே நின்று உயிர் பிரியும் நேரத்திலும் தன்னிலைக்கு வருந்தாமல் அண்ணனுக்கு நேரப் போகும் அழிவுக்கு வருந்திய கும்பகர்ணனின் கொள்கைச் சிறப்பிற்கு நிகராக, அன்புக்கு நிகராக நாம் எதைச் சொல்ல முடியும். கும்பகர்ணனின் கதாபாத்திரம் சமத்துவ அன்புக்கும், மனித நேய உணர்வுகளுக்கும் ஒர் உரைகல்லாகும்.

வீரச்சிறப்பு

இராமனோடு முதற் போர் புரிந்து தோல்வியுற்ற இராவணன் இராமனை வெல்லும் திறம் உடையவன் கும்பகர்ணனே எனக் கருதி அவனைப் போருக்குப் போகச் சொல்வது, இராவணனை விட கும்பகர்ணன் வீரத்தில் சிறந்தவன் என்பதை நமக்கு உணர்த்துகிறது. பகைவனின் உண்மையான வீரத்தை நன்கறிந்தவனாலேதான் அவனுக்கெதிராகச் சிறப்பாகப் போரிட முடியும். இராமனின் வீர ஆற்றலை நன்குணர்ந்தவன் கும்பகர்ணனே ஆவான். இதை அறிந்திருந்த இராவணன்,

‘…………………………….
ஏனை உற்றனர் நீயவர் இன்னுயிர்
போன கத்தொழில் முற்றுதி போயென்றாள்’

‘வானரப் படைகளும் மானிடர் இருவரும் இலங்கையை முற்றுகையிட்டுள்ளனர். முதல் நாள் போரில் வென்றும் விட்டார்கள். நீ அவர் இன்னுயிர் உண்கின்றச் செயலை இன்று போர்க்களம் போய் முடிப்பாய்’ என்கிறான். இதன் வாயிலாகக் கும்பகர்ணனின் வீரப் பண்பினை கம்பர் நேரிடையாகச் சொல்லாமல் இராவணனின் மூலமாக எடுத்தியம்புகிறார்.

‘என்னைவென்று உளர்எனில் இலங்கை காவல
உன்னைவென்று உயர்தல் உண்மை......’

என்னை அவர்கள் வென்றுவிட்டார்கள் என்றால், உன்னையும் வென்று விடுவது நடக்கத்தான் போகிறது எனக் கும்பகர்ணன் உரைப்பது அவனை இராவணனை விடச் சிறந்த வீரனாக நமக்கு அடையாளம் காட்டுகிறது.

‘பந்தியில் பந்தியில் படையை விட்டு அவை
சிந்துதல் கண்டுநீ இருந்து தேம்புதல்.......’

எனத் தொடங்கும் பாடல் வரிகள், கும்பகர்ணனைச் சிறந்த போர்த்தலைவனாகவும், ராஜதந்திரியாகவும் நமக்குக் காட்டுகிறது. வரிசை வரிசையாகப் படைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பி அவை அழிவதைக் காட்டிலும், நமது வலிமை முழுவதையும் ஒரு சேரப் பகைவர் மேல் செலுத்தி வெற்றிக்கு முயல்வதே சிறந்தது எனப் போர் ஆலோசனை வழங்கும் பண்பினையும் காணலாம்.

உள்ளச்சிறப்பு

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்தவன், நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டு வருந்துவதில் கும்பகர்ணனின் பண்பும் யதார்த்த அறிவும் அறநெஞ்சமும் வெளிப்படுகிறது.

‘ஆனதோ வெஞ்சமர் அலகில் கற்புடைச்
சானகி துயர் இனம் தவிர்ந்து இல்லையோ?
வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ்
போனதோ புகுந்ததோ பொன்றும் காலமே’

சீதையின் துக்கம் இன்னும் தீரவில்லையா? வானமும் பூமியும் வளர்ந்து நின்ற உலகளாவிய புகழ் அண்ணனின் இச்செய்கையால் போய் விட்டதே, என வருந்தும் பண்பாளனாகவும் அறநெஞ்சினனாகவும் வருகிறான் கும்பகர்ணன்.

‘பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்’

என்கிறது கலித்தொகை. பாடு என்பது தன்மை. பிறர் தன்மை உணர்ந்து அதற்கேற்ப ஒழுகுதலே பண்பாகும் . இது கலித்தொகை என்ற சங்க நூல் காட்டும் பண்புக்கான இலக்கணம். பாடறிந்து ஒழுகும் பண்பு நமக்கு வேண்டும். இல்லையேல் நமக்குத்தான் அவமானம் வந்து சேரும்.

வீடணன் கும்பகர்ணனிடம் தன்னைப் போலவே இராமனிடம் வந்து சேர்ந்து கொள்ள வேண்டுகிறான். கும்பகர்ணன் வீடணின் கூற்றை மறுக்கிறான்.

‘இராவணன் தீமை செய்கிறான். நான் தடுக்க முயல்கிறேன். முடியவில்லையென்றால் அவனுக்கு முன் சாகவே விரும்புகிறேன்’ என்கிறான்.

‘...............
திருத்தாம் ஆகில் நன்றே
திருந்துதல் தீராதாயின்
..................
ஒருத்தரின் முன்னம் சாதல்
உண்டவர்க்கு உரியதம்மா’

என்பது கும்பகர்ணனின் பேச்சாக, பண்பின் பிம்பமாக கம்பன் தருவது.

இராவணன் தீமையைத் திருத்தி அறிவுரை தந்தான் கும்பகர்ணன். இராவணன் இசையவில்லை.
என்ன செய்கிறான் கும்பகர்ணன்?
தீமைக்கு உடன்படாமல் போரில் சாவதற்காக வருகிறான். செத்தாலாவது அண்ணன் திருந்துவான் என நினைக்கிறான். தன் சொந்த இயல்பை இழக்காமல் அண்ணன் செய்யும் தீங்கையும் சுட்டி விட்டு இறப்பு நிச்சயம் எனத் தெரிந்தும் போர்க்களத்தில் தன் அண்ணனுக்காக நிற்பது அவனின் உளப்பண்பை மிக அழகாக உணர்த்துகிறது.

‘ஒருத்தரின் முன்னம் சாதல்
உண்டவர்க்கு உரியதம்மா’

எனும் வரிகள் மூலம் கும்பகர்ணனின் கதாபாத்திரம் மகாபாரதத்தில் செஞ்சோற்றுக் கடனுக்காகத் துரியோதனன் பக்கம் நின்ற கர்ணனின் கதாபாத்திரத்துக்கு ஒப்பானதாகும் என உரைக்கப்படுகிறது.

‘செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா...கர்ணா....’

என்றப் பாடல் வரிகள் கர்ணனின் கதாபாத்திரத்தை நமக்கு உணர்த்தும்.

‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு’

எனத் திருவள்ளுவர் கூறும் செய்ந்நன்றியறிதல் பண்பானது கும்பகர்ணனின் பண்புகளில் மிளிரக் காண்கிறோம்.

வீடணன் வழியே உணர்த்தப்படும் சிறப்புகள்

மேரு மலையே கால் முளைத்து நடந்து வருவதுபோல் இருந்த கும்பகர்ணனின் தோற்றத்தைக் கண்டு வியந்த இராமன், ‘போருக்கு வந்த வீரனாக என்னால் நினைக்கமுடியவில்லை. இவன் யாரோ? என வினவுகிறான். வீடணனும், கும்பகர்ணனும் தன்னைப் போல் இராவணனுக்கு நல்ல உபதேசங்கள் சொன்னதையும், இராவணன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருந்ததையும், இப்போது இராவணனுக்கு ஒரு பிரச்சனை என்றதும் உதவிக்கு ஓடி வந்திருப்பதையும் தெரிவிக்கின்றான்.

‘காரியல் காலன் அன்ன கழற்கும்ப கர்ணன் என்னும்
கூரிய சூலத் தான்.........’

கும்பகர்ணன் கருமை நிறம் வாய்ந்த எமனுக்கு ஈடானவன் என்றும் கூர்மையான சூலப்படைக்குச் சொந்தக்காரன் என்றும் கூறுகிறான்.

‘காலன் ஆருயிர்க் காலனால்
காலின் மேல்நிமிர் காலினான்
மாலி னார்கெட வாகையே
சூல மேகொடு சூடினான்’

கும்பகர்ணன் எமன் உயிரைப் பறிப்பதில் இன்னொரு எமன் போன்றவனாவான். காற்றைக் காட்டிலும் வேகமாக செல்லும் கால்கள் உடையவனாவான். இந்திரனைத் தோற்கடித்து வெற்றிமாலையைத் தன் சூலப்படையால் சூடியவனாவான்.

‘…………………………
தானு யர்ந்த தவத்தினான்
வானு யர்ந்த வரத்தினான்’

மேலும் அவன் உடல் வலிமை மிக்கவன், மனஉறுதி மிக்கவன், தவத்தினால் மேம்பட்டவன், அத்தவத்தால் பல வரங்களைப் பெற்றவன் எனவும் வீடணன் கும்பகர்ணனின் பண்பு, வீரம் போன்றத் தன்மைகளை விவரிக்கின்றான்.

‘நன்று இது அன்று நமக்கு எனா
ஒன்று நீதி உணர்த்தினான்
இன்று காலன் முன் எய்தினான்....’

பிறர் மனையைக் கவர்ந்து வைத்திருப்பது அறமுடையோர் செயலல்ல என்ற உயரிய நீதியை இராவணனுக்கு எடுத்துச் சொன்னவன் கும்பகர்ணன். ஆயினும் இவன் பேச்சை இராவணன் கேட்காததால், இன்று இறப்பு நிச்சயம் எனத் தெரிந்தும் எமன் முன் வந்து நிற்கின்றான் என வீடணன் மூலம் கும்பகர்ணனின் பண்புநலன்களையும், சிறப்புகளையும் நமக்கு நயமுடன் எடுத்தியம்புகிறார் கம்பர்.


முடிவுரை

கம்பன் படைத்த காப்பியமான கம்பராமாயணத்தில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் ஆழ்கடல் முத்துக்களாக இருப்பினும் அவற்றில் நல்முத்துக்களான ஒரு சில பாத்திரங்கள் மக்கள் முன் பொதுத் தன்மையுடன் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இராமனின் கதாபாத்திரத்தைத் தெய்வத்துக்கு ஒப்புவித்தவர்கள் கும்பகர்ணன் போன்ற துணைப் பாத்திரங்களை மனித அளவில் கூட ஒப்புவமை காட்டாமல் விட்டுவிட்டார்கள் என்பதுதான் இங்கு வருந்தத்தக்கதாக இருக்கிறது. மனிதநேயப் பண்புகளில் தலை சிறந்து விளங்கிய கும்பகர்ணன் இன்று வெறும் தூக்கத்திற்கு மட்டுமே முன்னுதாரணமாகப் பேசப்படுவதும் எழுதப்படுவதும் வருந்தக்கூடிய ஒன்றாகும்.

‘கும்பகர்ணச் சகோதரனே
நிம்மதியின் நாயகனே
தூங்குகின்ற கலையதனை
எங்களுக்கும் போதிப்பாய்....’ – பெ. கருணாகரன்

அண்மையில் படித்த ஒரு புது கவிதை இது. மனித வாழ்வின் உன்னதப் பண்புகளின் களஞ்சியமாக வாழ்ந்த கும்பகர்ணனிடமிருந்து நாம் கற்றுக்கொண்டது வெறும் தூக்கத்தை மட்டும்தானா?
குன்றன்ன கொள்கையுடையான், அறநெஞ்சினன், பகைவரின் ஆற்றல் உணர்ந்த மாவீரன், செய்ந்நன்றி மறவாதவன், உடன் பிறப்பின் உயர் கொள்கையுடையான் என இன்னும் எவ்வளவோ சிறப்புகளால் போற்றத்தக்க பண்புநலன்களைக் கொண்டவன் கும்பகர்ணன். கும்பகர்ணனைப் பற்றி மக்கள் அறிய ஆரம்பித்து விட்டால் இராமனுக்கு அவ்வளவு மதிப்பு இராது. இராமன் அப்படி இருப்பது அவனது பாத்திரத்துக்குத் தேவையானது. மனம் என்பது நிமிடத்துக்கு நிமிடம் மாறக்கூடியதுதான். கும்பகர்ணன் நினைத்திருந்தால் வீடணைப் போல இராமன் பக்கம் போயிருக்கலாம். இலங்கை வேந்தனாக ஆகியிருக்லாம். ஆனால் அவன் போகவில்லை. இராவணனுக்காக வாழ்வதையே தன் வாழ்வின் நெறியாகக் கொண்டு அவனுக்காகவே தன் உயிரையும் விருப்பப்பட்டு இழக்கிறான். கம்பராமாயணத்தில் கும்பகர்ணனின் கதாபாத்திரம் தன் பண்புநலனால் தலைநிமிர்ந்து நிற்கிறது. எதிர்காலச் சமூகம் கும்பகர்ணனின் பண்புநலன்களுக்காக அவனைப் போற்றும்.


துணை நூல்கள்
1. தமிழ் வீரம், டாக்டர் மு. அப்துல் கறீம், முதற் பதிப்பு 1994, வானதி பதிப்பகம், சென்னை.
2. கம்பர், மூதறிஞர்வ.சுப. மாணிக்கம், மறுபதிப்பு 1994, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
3. ஆய்வுக்கோவை, இலக்கியவியல், முதற்பதிப்பு 2004, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், தமிழாய்வுத்துறை, பிக்ஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
4. காப்பிய இலக்கியமும் நீதி இலக்கியமும், டாக்டர் பாலவராயன் & டாக்டர் தமிழண்ணல், சிம் பல்கலைக்கழகம், TLL005/SG/REVISED/08, சிங்கப்பூர்.
5. வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் பாக்யமேரி, முதற்பதிப்பு 2008, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
6. குளம்பொலி ஞானங்கள், பெ. கருணாகரன், முதற்பதிப்பு 2009, குன்றம் பதிப்பகம், சென்னை.
7. தன்னம்பிக்கை, இரா. சண்முகவடிவேல், இணையக்கட்டுரை, 09 - 2002

1 கருத்து: