சனி, 6 மே, 2017

ஜே.எம். சாலியின் அலைகள் பேசுகின்றன நாவல் – ஒரு சமூகவியல் பார்வை – எம். சேகர்



ஜே.எம். சாலியின் அலைகள் பேசுகின்றன நாவல் – ஒரு சமூகவியல் பார்வை – எம். சேகர்


உரைநடையில் மானுட வாழ்க்கையை விரிவாகவும் சுவைபடவும் எழுதுவதற்குப் பயன்படும் இலக்கிய வகைகளில் நாவல் தனித்த இடத்தைப் பிடிக்கிறது. முந்திய காலங்களில் காப்பியங்கள் நிறைவு செய்திருந்த இலக்கிய வடிவப் பயன்களைத் தற்காலத்தில் நாவல் இலக்கியங்களே நிறைவு செய்கின்றன. கால மாறுதல்களாலும் அது எற்படுத்துகின்ற நாகரிக வளர்ச்சிகளினாலும் மக்ளிடையே ஏற்படுகின்ற மாற்றங்களைத் தெளிவாகக் கண்டறிய நாவல் இலக்கியங்கள் பெரிதும் உதவுகின்றன.


நாவல் இலக்கியத்தின் தோற்றம் பற்றிக் குறிப்பிடும் ஆய்வாளர்கள், 


‘மேலை நாடுகளில் பதினேழாம் நூற்றாண்டில் தோற்றம் கண்டது என்கின்றனர். இந்நாவல் இலக்கியம் திடீரெனத் தோற்றம் பெற்றது என்கிறார் வால்டர் ஆலன்.

‘இது மனித ஈடுபாட்டில் குறிப்பிடத்தக் மாற்றமாகும்’

என்று நாவல் இலக்கியத்தில் வாளர்ச்சி பற்றி திருலாபர்ட் லிட்டிக் குறிப்பிடுகிறார்.


நாவல் விளக்கம்


‘உரைநடையில் அமைந்த புனைகதை அல்லது ஆண் பெண் கதாமாந்தர்களின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற உணர்ச்சி நிறைந்த நிகழ்ச்சிகளைச் சித்தரித்துக் காட்டுவது’

என்று சேம்பர் அகராதி நாவலுக்கு விளக்கும் அளிக்கிறது.

‘எழுதப்பட்ட காலத்தில் மக்களின் உண்மையான வாழ்க்கையினையும் பழக்க வழக்கங்களையும் வெளியிடும் ஓவியமே நாவல்’,

என்கிறார் திரு.கிளாரா ரீவி அவர்கள்.


நாவலுக்கான வடிவம்


இலக்கிய வடிவங்களில் பெரிதும் சுதந்திரம் உடையது நாவல். படைப்பாளனின் எண்ணத்திற்கு ஏற்ப பரந்துபட்ட களத்தையும் சுதந்திரத்தையும் நாவல் இலக்கியம் உருவாக்கித் தருகிறது. எனவேதான் நாவல் இலக்கியம் தனக்கென்று தனித்த ஒரு வடிவத்தை உருவாக்கிக் கொள்ளவில்லை. நாவல் படைப்புக்கென்று படைப்பு விதிகளும் கிடையாது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆங்கில நாவல் இலக்கியத்தில் தந்தையெனக் கருதப்படும் திரு பீல்டிங் அவர்கள்,


‘தோற்றத்திற்குக் காரணமாக இருந்த தமக்கு விதிகளை விருப்பம்போல அமைத்துக்கொள்ளும் உரிமை உண்டு’
எனக் குறிப்பிடுகிறார்.


நாவல்களின் முக்கியக் கூறுகளாக கதை, கதைக்கேற்ற இடம், கதையின் போக்கு, கதாபாத்திரங்களின் தேர்வு, மிகச்சிறந்த உரையாடல்கள், கருத்துக்கு ஏற்ற காலப் பின்னணி, நடை, அக்காலத்தினுடைய வாழ்க்கை முறைகள் மற்றும் உண்மைத் தன்மைகள் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.


தமிழில் புதினம்


NOVELLUS என்ற இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து உருவானது NOVEL என்ற ஆங்கிலச் சொல் என்று அறியப்படுகிறது. இதன் பொருள் ‘புதியது’ என்பதாகும். எனவே ஆங்கில நாவலை அடியொற்றிப் பிறந்த இலக்கிய வகை என்பதால் இவ்வகை இலக்கியத்தைத் தமிழில் ‘புதினம்’ என்று அழைக்கிறோம்.


தமிழில் வேதநாயகம் பிள்ளை அவர்களால் 1867இல் எழுதப்பட்ட பிரதாப முதலியயார் சிரித்திரம் முதல் புதினமாகக் குறிப்பிடப்படுகிறது.  பின்னர் இவரே சுகுன சுந்தரி என்ற நாவலையும் எழுதியுள்ளார். ஆனாலும் இராஜம் ஐயரின் கமலாம்பால் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் ஆகிய நாவல்களும் முதல் புதினங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து 1893ல் குருசாமி சர்மா அவர்களால் எழுதப்பட்ட ‘பிரேமகலாவதியம், 1896 ல் பரிதிமாற் கலைஞரால் எழுதப்பட்ட மதிவாணன் என்னும் நாவலும் தமிழ் நாவல் இலக்கியத்தில் தொடக்ககால நாவல்களாகக் குறிப்பிடப்படுகின்றன.


இருபதாம் நூற்றாண்டில் தமிழில் நாவல் இலக்கியம் மிகச்சிறந்த வளர்ச்சியைக் கண்டது. நோக்கங்களின் அடிப்படையில் புதிய புதிய போக்குகள் நாவல் இலக்கியத்தை வளர்த்தன. 20ஆம் நாற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாவல் இலக்கியத்தை வளர்த்தவர்களில், கே.ஜி. வெங்கட ரமணி, ஆர். சண்முக சுந்தரம், சி. என். அண்ணாதுரை, கு. இராசவேலு, மு. கருணாநிதி, மு. வரதராசன், கல்கி, அகிலன், சாண்டில்யன், இராஜம் கிருஷ்ணன், நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன் , சுஜாதா, புஸ்பா தங்கதுரை, இந்திரா பார்த்தசாரதி,  தொ.மு.சி.ரகுநாதன். போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் எழுதிய நாவல்கள் துப்பறியும் நாவல்கள், வரலாற்று நாவல்கள், அரசியல் நாவல்கள், சமுதாயச் சிந்தனை நாவல்கள், பெண்ணிய நாவல்கள் எனப் பல வகைகளில் எழுதப்பட்டன.


சிங்கப்பூர் மலேசியாவில் நாவல் இலக்கியம்


19 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் தமிழகத்தை அடுத்துத் தமிழர்கள் இடம்பெயர்ந்து சென்ற நாடுகளில் எல்லாம் தமிழ் இலக்கியங்கள் வளம் பெறத் தொடங்கின. இதில் நாவல் இலக்கியம் நன்கு வளர்ச்சி கண்டது.  குறிப்பாகச் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் நாவல் இலக்கியம் சீரும் சிறப்புமாக வளர்ச்சி கண்டது. குறிப்பாகஇங்குள்ள தமிழர்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டபோதெல்லாம் எழுத்துக்களின் மீதான சமூகப் பார்வைகளும் மாற்றம் பெற்றன. அதற்கேற்ப இங்கு உருவாக்கம் பெற்ற நாவல்களும் புதுப்பொழிவு பெற்றன.


குறிப்பாகச் சிங்கப்பூர் எழுத்தாளர் ஜே.எம். சாலியின் ‘அலைகள் பேசுகின்றன’ என்னும் நாவல் தமிழ் வாசகர்களிடடையே மிகச் சிறந்த நன்மதிப்பைப் பெற்ற நாவலாக அறியப்படுகிறது. மனித வாழ்க்கையில் பிரச்சினைகள் என்னும் அலைகள் மோதிப் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்போது அதை அமைதியாக ஏற்றுத் துன்பத்தையும் இன்பமாக மாற்றக்கூடிய வல்லவர்களாலேயே இந்த உலகம் அமைதியையும் மகிழ்ச்சியையும் பெறுகிறது என்ற வாழ்க்கைத் தத்துவத்தை மையமாகக்கொண்டே இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.


நாவலாசிரியர், ஜே. சாலி. 1964ல் மலேசியாவுக்கு வந்தவர். சிங்கப்பூரில் பத்திரிகையாளராகவும் பனியாற்றியவர். மாணவர்ப் பருவத்திலிருந்தே எழுதத் தொடங்கியவர். சிங்கப்பூரில் ‘தமிழ வேள்’ விருதுபெற்ற மிகச் சிறந்த படைப்பாளர். தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, சிங்களம் ஆகிய மொழிகளில் 48 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளவர். இவருடைய படைப்புகள் சிங்கப்பூர் மட்டுமல்லாது வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களிலும் பாடங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பித்தக்கது.


அலைகளின் சுருக்கம்


எந்தவொரு படைப்புக்கும் பின்னணியும் அதுசார்ந்த நிகழ்வுகளும்தான் அடித்தளமாகவும் தூண்டுதல்களாகவும் அமைகின்றன. இப்புதினத்தின் கதாநாயகன் குமாரசாமி சிங்கப்பூர் வெறும் காடாகவும் சிறுசிறு குன்றுகளாகவும் இருந்த காலத்தில் பிழைப்புத்தேடி  இங்கு வந்தவர். தனது உணர்வுகளையும் உறவுகளையும் மறந்து உழைப்பை மட்டுமே கொண்டு உருவாக்கிய இச்சிங்கப்பூரை விட்டுச் சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தன் தாயகத்திற்குக் திரும்புகிறார். கப்பலில் முன்னோக்கிச் செல்லும்பொழுது அவரின் எண்ண அலைகள் பின்னோக்குச் சுழலில் சிங்கப்பூரைச் சுற்றிச் சுற்றி வருகின்றன.


தமிழகத்தில் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுத்தான் குமாரசாமிக்கு மதுரத்துடன் திருமணம் நடக்கிறது. ஆனாலும் முதல் இரவிலேயே அவருக்கு மதுரத்தைப் பிடிக்காமல் போய்விடுகிறது. அந்நிலையில் பக்கத்துத் தெரு நண்பர் மஜீத் ராவுத்தர் மூலம் சிங்கப்பூருக்கு வந்துவிடுகிறார். இங்கு வந்தவுடன் சந்தர்ப்பச்சூழலால் சான் என்னும் சீனப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். ராஜா, கமலா என்று இரண்டு பிள்ளைகள். பின்பு அவர்களுக்கும் திருமணமாகி மருமகள் பேரக்குழந்தைகள் எனக் குடும்பம் விரிவடைகிறது.


இந்நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே திருமணமாகி அங்கு ஒரு மனைவி இருக்கும் செய்தி சான் என்னும் சாந்தம்மாவுக்குத் தெரியவருகிறது. குமாரசாமி அன்றைய தன் மனவேதனையை சாந்தம்மாவிடம் கொட்டித் தீர்க்கிறார்.  தன் கணவனைப் புரிந்துகொண்ட சாந்தம்மா அவரைக் கட்டாயப்படுத்தி முதல் மனைவி மதுரத்துடன் சேர்ந்து வாழ தமிழகத்திற்கு அனுப்பி வைக்கிறார். முன்பு மதுரத்திடம் இரண்டே ஆண்டுகளில் திரும்பி வந்துவிடுகிறேன் என்று சொல்லித் திரும்பியவர், வாழ்க்கையின் பெரும்பகுதியை இங்குக் கழித்துவிட்டு முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்புகிறார்.


இக்கதையின் மையம் தமிழகமோ அல்லது மீண்டும் தமிழகத்திற்குத் திரும்புவதோ இல்லை. சிங்கப்பூரில் வாழ்ந்த வாழ்க்கைதான் நாவலின் மையம். இக்கதையின் முக்கிய கதாமாந்தர்கள் குமாரசாமி, முதல் மனைவி மதுரம்,  இரண்டாவது மனைவி சான் என்னும் சாந்தம்மா, பக்கத்துத் தெரு மஜீத் ராவுத்தர், லிம் என்னும் சீன இளைஞன் போன்றோர் ஆவர். இடையிடையை சில சிறு சிறு கதாபாத்திரங்கள் சீன மலாய் நண்பர்களாக வந்து போகின்றன.


‘நான் வெளியில் திரிகிறேன் வெளியில் வாழ்கிறேன் உலக வாழ்வை, அங்கு வாழும் மனிதர்களைக் கூர்ந்து நோக்குவதில் மகிழ்கிறேன். எதையும் நான் கற்பனை செய்து பார்ப்பதில்லை. ஒரு தலை இருக்கக் கண்டுதான் மனிதன் பத்துத் தலையைக் கற்பனை செய்தான். தலையையே மனிதன் கற்பனை செய்து பார்க்கவில்லை.’ 


என எழுத்தாளர் ஜெயகாந்தன் ‘இனிப்பும் கரிப்பும் என்னும் நூலுக்கான முன்னுரையில் கூறுவது போன்று கடந்த கால கட்டத்தில் ஏற்பட்ட சம்பவங்களின் அடிப்டையில்தான் இந்த அலைகளும் பேசுகின்றன.


பல்லின மக்களின் இன ஒற்றுமை


இந்தப் புதினத்தின் முதல் வார்த்தையே,

‘திரிமா கசி திரிமா கசி’

என்று மலாய் மொழியில்தான் தொடங்குகிறது. குமாரசாமி தமிழகத்திற்குத்  திரும்புகிறார். அவரை வழியனுப்புவதற்கு அவருடைய குடும்பத்தார் மட்டுமல்லாது சீனர் மற்றும் மலாய்க் குடும்பத்தினரும் வந்திருக்கின்றனர். வெறும் கையசைவோடு அவர்களுடைய நட்புணர்வு நின்றுவிடவில்லை என்பதை அங்கு நன்றியுணர்வோடு வெளிப்பட்ட ‘திரிமா கசி திரிமா கசி’ என்ற மலாய்ச் சொல்லும்  ‘கம்சியா’,  ‘கம்சியா’ என்ற சீன வார்த்தையும் வெளிப்படுத்தி நிற்பதை உணர முடிகிறது. இது இங்குள்ளவர்களின் வாழ்க்கைப் பண்பு; சமூகவியல் பண்பு. வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மனித நேயப் பண்பை இந்நாவல் முழுவதும் பதிவு செய்வதில் நாவலாசிரியர் வெற்றிபெற்றுள்ளார் என்றே கூறவேண்டும்.


குமாரசாமியிடம் சான் என்னும் சீனப்பெண் உதவிகேட்டு வருகிறார். குமாரசாமியின் உதவியைப் பெற்ற அப்பெண்ணுக்கும் குமாரசாமிக்கும் பின்னாளில் திருமணம் நடைபெறுகிறது. சவுத்பிரிட்ஜ் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற இத்திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் குமாரசாமியின் மலாய் நண்பரான இஸ்மாயிலும் சீன நண்பரான லீயுமே ஆவர். குமாரசாமியின் வாழ்க்கையே இந்த இன ஒற்றுமைச் சூழிலில்தான் தொடங்குகிறது. இது சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் மிகச் சாதாரணம். அதுதான் அவர்களுடைய வாழ்க்கைக் கோட்பாடு. இனம், மதம், மொழி, நாடு என்ற வேறுபாடுகள் அனைத்தையும் மறந்து உள்ளார்ந்த மனிதவுணர்வோடு வாழும் வாழ்க்கையின் சமூக நெறி இந்நாவல் மூலம் வெளிப்படுவதை நன்கு உணரமுடிகிறது.


கலப்புத் திருமணம்


ஓர் இனத்தின் அல்லது ஒரு சமூகத்தின் ஒற்றுமைக்கும் மற்றும் நீடித்த ஒருமைப்பாட்டுக்கும் ஏற்கத்தக்க சமூக ஒன்றுகூடல் நிகழ்வுகளில் கலப்புத் திருமணம் மிகச்சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நாவலின் ஆசிரியர் இதனை மனப்பூர்வமாக வரவேற்கிறார். தனது கதாநாயகனின் திருமணத்தைக் கலப்புத் திருமணமாகவே அவர் நடத்திக்காட்டுகிறார்.


இந்நாவலின் கதை சிங்கப்பூரின் நேவல் பேஸ், தஞ்சோங் பகார், பாசீர் பாஞ்சாங், செம்பவாங் போன்ற இடங்களில் நிகழ்கிறது. இவ்விடங்களில் வேலை காரணமாக தமிழர்கள் அதிகமாகத் தங்கியிருந்ததும் அந்தக் குடியிருப்புக்களைச் சுற்றி சீன மற்றும் மலாய்க் கம்பங்களும் இருந்ததாலும் இவ்வின மக்களிடையே அணுக்கமான உறவு இயல்பாகவே ஏற்பட்டது. பின்னர் இவ்வுறவு கலப்புத் திருமணங்களுக்கும் வித்திட்டதை அறியமுடிகிறது.


தன்னிடம் அடைக்கலமாக வந்த சீனப்பெண் சானை லிம் என்னும் ஆடவரிடம் இருந்து காப்பாற்றுவதற்காகவே குமாரசாமி திருமணம் செய்து கொள்கிறார். ஆனாலும் முப்பது ஆண்டுகள் அவர்கள் மகிழ்ச்சியோடும் பிறர் போற்றும் வண்ணமும் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர் என்பது இங்குள்ள சமூகங்களுக்கிடையே நிலவும் சமூக நோக்குகளும் நட்பார்ந்த உணர்வுகளையும் பதிவு செய்யும் வண்ணமாகவே அமைந்திருக்கிறது.


      ‘சாந்தா இப்ப நீ எப்படி இருக்க தெரியுமா?’

‘உங்களுக்குத்தான் உவமை ஒன்னு இருக்கே, மஞ்சள் ரோஜா மாதிரின்னு சொல்லுவீங்க’

‘இல்ல சாந்தா...மழையில் குளிச்ச ரப்பர் மரம் அழகா இருக்கும். இல்லையா?’

‘ஓ... அதையும் கவனிச்சிருக்கிறீர்களா...?’

‘நீ இப்ப அந்த மாதிரிதான் பசுமையா தழைச்சிருக்கே, சாந்தா பால் சுரக்கும் ரப்பர் மரமா நீ எனக்கு கிடைச்சிருக்கிறே...’

என்று ஓரிடத்தில் குமாரசாமிக்கும் சான் என்னும் சாந்தாவுக்குமான உரையாடல் நீட்டிக்கிறது. ரப்பர் மரங்கள் குமாரசாமியைப் பொறுத்தவரை வாழ்வு கொடுக்கும் வளப்பயிர். அதைத் தன் மனைவிக்கு உவமை கூறி நிகராக்குவது இடம் சார்ந்து நிற்கும் பண்பாட்டுப் பதிவு.  சங்க இலக்கியங்களில் தலைவன் தலைவியருக்கிடையிலான உரையாடங்களில் காதலும் காதலோடு சேர்ந்து மரம், செடி, கொடி மற்றும் பூக்கள் போன்றவைச்  சான்றுகளாக உவமைப்படுத்தப்பட்டிருக்கும். சானுக்கும் குமாரசாமிக்கும் இடையேயான உரையாடல்களும் இந்நாவலில் பல இடங்களில் அவ்வாறுதான் அமைந்திருக்கிறது.  


ஒரு படைப்பாளன் தனது படைப்பில் மனிதர்களை வெறுமனே நடமாடவிடமுடியாது. கதாபாத்திரங்களுக்கான புறச்சூழலை உள்ளது உள்ளவாறே கூறக் கடமைக் பட்டிருக்கவேண்டும். இங்கு, அகச்சூழலோடு புறச்சூழலை நல்லதொரு கவிதையாக அதுவும் உவமை நயத்தோடு தவழவிட்டிருக்கிறார் கதாசிரியர் என்றால் அது மிகையாகாது.


கலாச்சார மாற்றம்


இங்கு வாழ்க்கை நடத்துபவர்கள்  பெரும்பாலும் வாழ்வதற்காக வந்தவர்கள். பல்வேறு இனம், மொழி, உடை, உணவு மற்றும் பண்பாட்டுக் கலாச்சாரங்களைக் கொண்டவர்கள். ஆனால் வாழ்கின்ற இடத்தில் அதனை எல்லாம் மறந்து சிறந்தது எதுவோ தமக்குப்  பிடித்தது எதுவோ அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். தம் இனம் சார்ந்த மரபோடும் அடையாளங்களோடும் அவர்கள் வாழும் இடத்தின் பல்லின கலாச்சாரத்தையும் உள்வாங்கத் தவறவில்லை என்பதை நாவலின் பல வர்ணனைகள் சுட்டிக்காட்டுகின்றன.


‘சாரோங் கெபாயா அவள் மேனியில் வண்ண ஜாலத்தைக் கொட்டியிருந்தது’


என்று சான் உடுத்தியிருந்த ஆடையின் அழகு கூறப்படுகிறது. சான் ஒரு இந்தியருக்கு வாழ்க்கைப்பட்ட சீனப்பெண். பின்னாளில் அவர் மிகவும் அழகாக சேலை உடுத்தக் கற்றுக்கொண்டார் என்பது வேறு. ஆனால் அவர் தற்போது உடுத்தியிருக்கும் ஆடை மலாய்க் கலாச்சாரத்திற்கு உடையது. எது எவருக்குடையது என்பதைப் பற்றியெல்லாம் இங்கு எவருக்கும் கவலையில்லை. அந்த ஆடை தமக்குச் சிறந்த அழகான ஆடை என்று சானுக்குப் பட்டுவிட்டது. சானுக்குப் பிடித்தபின் குமாரசாமி என்ன மறுக்கவா போகிறார் வாங்கிக் கொடுத்துதானே ஆகவேண்டும். இதைத்தான்  கலாச்சார ஏற்பு அல்லது கலாச்சார மாற்றம் என்கிறோம். அந்நாளில் மக்கள் தாங்கள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதையும், விரும்பிய கலாச்சாரக் கூறுகளை ஏற்றக்கொள்வதையும் இப்புதினம் நன்கு உணர்த்துகிறது.


மொழி


இனப் புழக்கத்திற்கு மொழிதான் முக்கிய கருவி. ஏனென்றால் மொழிதான் அனைத்தையும் வடிவமைக்கிறது. சிங்கப்பூரில் தமிழ், மலாய். சீன மொழிகள் பேசுகின்ற மக்கள் இருந்தாலும் இவர்களுக்கிடையே மலாய்மொழிப் புழக்கம்தான் அதிகமாக அதுவும் பொதுவானதொரு தொடர்பு மொழியாகவும் இருந்துள்ளது. குமாரசாமியும் சானுவும் அதிகமான இடங்களில் மலாய்மொழியில் உறவாடுவதைக் காணமுடிகிறது. இது நடப்பியல் சூழலை உணர்த்தும் வண்ணமாக இருக்கிறது.

‘தோலோங் தோலோங்’

‘டூடோ டூடோ’

‘திரிமா காசி’
‘கம்சியா’

போன்ற சொற்கள் அதிகமாக எளிமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பின்னாளில் சான் தமிழில் நன்கு பேசத் தெரிந்து கொள்கிறார். வெவ்வேறு மொழிசார்ந்து நிற்கும் மக்களை எல்லா மொழிகளையும் பேசவைத்து மொழிமூலம் ஒற்றுமைப்படுத்தி அன்றைய சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கையை  நம் கண்முன் கதாசிரியர் நிழலாடவிட்டிருக்கிறார்.


பண்பாடும் குடும்ப உறவும்


ஆசிரியரின் மனத்தில் குடும்ப வாழ்க்கை தொடர்பாக என்ன வருத்தம் இருந்ததோ தெரியவில்லை திருமணம் ஆனவர்களைக் கண்டவுடன்,


‘பெண்ணும் மாப்பிள்ளையுமா நீங்க கோயில்ல இருந்து சைனா டவுன் வழியாக வந்ததைப் பார்த்தேன். ஒரு புனிதத்தைப் பார்த்து மனம் நிறைஞ்சு போனேன்’


என்று மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தருகிறார். அதுமட்டுமல்ல, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் மக்கள் மிகுந்த புரிந்துணர்வோடும் அதே நேரத்தில் அணுக்கமாகவும் இருந்ததாக அறியமுடிகிறது. தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, கணவன், மனைவி, மருமகன், மருகள், பேரப்பிள்ளைகள்  எனக் குடும்ப உறவுகள் மிகச் சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். அப்பவையும் அம்மாவையும் வெளியூருக்கு அனுப்பிவைக்கும் ஒரு குடும்பத்தில் நிகழும் உரையாடல் மிகச் சிறந்த சான்று.


‘’போனப்புறம் இரண்டுபேருமா நின்னு போட்டோ எடுத்து அனுப்பனும்’’,


என்று மகளும்,

‘’மாமா ஹனிமூனுக்கு எங்கே போறீங்க? அந்த ஜோர்ல எங்களை எல்லாம் மறந்திடமாட்டீங்களே?’’

என்று மருமகள் புனிதாவும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் கேளியும் கிண்டலுமாய் உள்ளம் ஒன்றியிருப்பது ஆச்சரியப்படக்கூடிய விசயமாகவும் மனம் நிறைந்த நிகழ்வாகவும் இருக்கிறது.


திருமண வாழ்க்கையின் இடர்கள்


அயல்நாட்டுக்கு வேலைதேடிச் செல்பவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்வதென்பது சில நேரங்களில் தவிர்க்க முடியததாக இருந்திருக்கிறது. அதே நேரத்தில், அன்றைய சமூகத்தில் சில நேரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இரண்டு திருமணங்கள் என்பதும் தவிர்க்க முடியாததாகவும் இருந்திருக்கிறது. பல ஆண்டுகளுக்குச் சிலருடைய வாழ்க்கைப் பயணம் அவ்வாறே கழிந்திருக்கிறது. குமாரசாமியின் வாழ்க்கையிலும் இதுபோன்ற நிகழ்வு காட்டப்படுகிறது.


ஆனாலும் தெரிந்தும் தெரியாமலும் அல்லது தெரியாதது போலவும் இருந்துகொண்டு இக்கட்டான சூழலில் மன வருத்தங்களையும் வாழ்க்கையின் இழப்புகளையும் பெண்கள்தான் அதிகமாகச் சுமக்கிறார்கள். குமாரசாமியின் இரண்டாவது மனைவி சாந்தம்மாவுக்குத் தன் கணவனுக்குத் திருமணம் ஆகி இன்னொரு மனைவி இருப்பது தெரியவருகிறது. நீண்ட மன வருத்தத்துக்குப்பின்,


‘’நான் பூரணமா வாழ்ந்துட்டேன். எனக்கு வெளிச்சத்தக் கொடுத்தீங்க, ஆனா, இன்னொரு பக்கத்திலே இருள் மண்டச் செய்திட்டீங்களே’’


எனக்குக் கிடைத்த அத்தனை சுகமும் இன்னொரு பெண்ணுடைய துயரத்திலே விளைஞ்சதுங்கறது இவ்வளவு காலமாத் தெரியாமப்போயிட்டேனே’’,


என்று தன் கணவனிடம் புலம்புகிறார். ஆத்மார்த்தமான வார்த்தைகள். பெண்கள் தமக்கான துயரங்களை இப்படித்தான் அழுதும் புலம்பியும் கழிக்கவேண்டியுள்ளது. தன்னையொத்த இன்னொரு பெண்ணுக்காக வருந்துபவளும் அவளாகத்தான் இருக்கிறாள். சாந்தம்மா அத்தோடு விட்டுவிடவில்லை மீதமுள்ள காலத்தை முதல் மணைவியின் சந்தோசத்திற்காக வாழுமாறு கணவனை முடிவெடுக்கத் தூண்டுகிறார். மாற்று இனத்துப் பெண் இன்னோர் இனத்துப் பெண்ணுக்காக உணர்வுப்பூர்வமாகச் சிந்தித்துப் பேசுவதென்பது சமூகவியலின் வாழ்வியல் கூறுகளை நமக்குச் சுட்டுவதாக இருக்கிறது. எந்த இனமாக இருந்தால் என்ன? பெண் என்பவள் என்றும் பெண்தானே.


அங்குச் சென்ற குமாரசாமிக்கு இதைவிடவும் ஓர் ஆச்சரியாமான விசயம் காத்திருந்தது. குமாரசாமியின் முதல் மனைவி மதுரம்,


‘’உங்க நினைப்பைக் கொண்டு இவ்வளவு காலமா நெஞ்சார வாழ்ந்துகிட்டிருந்தேன், மீதிகாலத்தையும் அதுமாதிரியே நிம்மதியா கழிச்சுட முடியும், எனக்கு எல்லாமே நீங்கதான்.’’


எனச் சொல்லி குமாரசாமியை மீண்டும் சிங்கப்பூருக்கே அனுப்பி வைக்கிறார். முடியவே முடியாது என்ற இடத்தில் பெண்களால் மட்டும் எப்படித்தான் முடிகிறதோ எனத் தெரியவில்லை.


இல்லற வாழ்வு என்பது வெறும் உடல் இயைபு சம்பந்தப்பட்டது அல்ல. அதற்கு மேலும் உயர்வானது. உறுதியானது மன இயைபு. மதுரம் என்ற பெண் குமாரசாமியோடு மன இயைபோடு வாழ்ந்தாள். வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இனி என்றும் வாழ்வாள். சமூகத்தில் பெண் என்பவளின் பிம்பத்தை உயர்த்திப் பிடிக்கும் கதாபாத்திரங்களாக சான் என்ற சாந்தமாவும் மதுரமும் படைக்கப்பட்டிருப்பது பெண்கள் மீது நாவலாசியருக்கு இருக்கும் நன்மதிப்பைக் காட்டுவதாக அமைகிறது.  


முடிவுரை

இலக்கியம் வாழ்க்கையின் பிரதிபலிப்பு. குறிப்பாக நாவல் இலக்கியங்கள் இதனை மிகச்சிறப்பாகப் பதிவு செய்கின்றன. ஜே.எம்.சாலியின், ‘அலைகள் பேசுகின்றன’ புதினம், சிங்கப்பூரின் பல்லின மக்களின் வாழ்க்கையைச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டியிருப்பதுடன், நல்ல இலக்கிய நயத்துடன் மிகவும் நேர்த்தியாகச் சமூகப் பண்புகளால் பின்னப்பட்டுப் புனையப்பட்டுள்ளது என்பதற்கு இந்நாவலில் பதிவுசெய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.



துணை நூல்கள்


1.   அலைகள் பேசுகின்றன, ஜே. எம். சாலி, மூன்றாம் பதிப்பு 2005. சேது அலமி பிரசுரம், சென்னை.


2.   இலக்கியத் திறனாய்வியல், டாக்டர் தா. ஏ. ஞானமூர்த்தி. முதற்பதிப்பு 2006. ஐந்திணைப் பதிப்பகம். சென்னை.



3.   திறனாய்வுக் கலை, தி. சு. நடராசன், ஒன்பதாம் பதிப்பு 2011. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

சிறுகதையின் இலக்கணமும் அகிலனின் பூச்சாண்டி சிறுகதையும் – எம்.சேகர்


சிறுகதையின் இலக்கணமும் அகிலனின் பூச்சாண்டி சிறுகதையும் – எம்.சேகர்


முன்னுரை


சிறுகதை நம் காலத்தில் வளர்ந்துவரும் ஓர் இலக்கியப் பகுதியாகும். தமிழ் மொழி ஏனைய துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதா என்பது ஐயத்திற்கு இடமான ஒன்றாயினும், ஒரு துறையில் அது முன்னேற்றம் பெற்றுள்ளது என்றால் அது சிறுகதை இலக்கியமேயாகும்.


கதை உதவியின்றி இக்காலத்தில் ஒரு மாத இதழோ, வார இதழோ பிரசுரம் ஆவதில்லை. மனித மனம் என்றுமே கதையில் ஈடுபடும் இயல்பு கொண்டது. எனவே எழுத்து ஊடகங்கள் இப்பகுதியை வளர்த்தாலொழிய மக்கள் மனத்தைக் கவர இயலாது என்ற நிலையிலும் பக்கங்களை நிரப்ப வேண்டும் என்ற மற்றொரு நிலையிலும் நிறைய சிறுகதைகளைத் தத்தம் இதழ்களில் சேர்த்துக்கொள்கின்றன. ஆனால் அப்படி பிரசுரிக்கப்படும் அத்தனை படைப்புகளும் சிறந்தவை என்று கூறுவதற்கில்லையாயினும், சிறுகதைத் துறை வளர்ச்சிக்கு இது மேலும் ஒரு படிக்கல்லாக அமைந்திருக்கிறது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகும்.


மேலைநாட்டவரின் வரவால் நமக்கு பரிச்சயமான இச்சிறுகதைத் துறையின் சிறந்த படைப்பை நாம் எவ்வாறு மதிப்பிடுவது? அந்தப் படைப்பின் வெற்றி என்பது என்ன? அதை நிர்ணயிக்கும் அளவுகோல் எது? என நாம் ஆராய வேண்டுமாயின், சிறுகதைகளின் இலக்கணங்களாகச் சொல்லப்படுகின்ற சில கூறுகளை அறிய வேண்டியது அவசியமாகிறது.


‘எட்கார் ஆலன் போ’ என்ற சிறுகதையாசிரியர்,
‘சிறுகதையாவது அரை மணியிலிருந்து ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்திற்குள் படித்துணர்தற்குரிய உரைநடையில் கூறப்படும் கதையாகும்’

என்கிறார். ‘வில்லியம் என்றி ஆட்சன்’ என்பவரோ,

‘ஒரே மூச்சில் படித்து முடித்தற்குரிய கதையே சிறுகதை’
என்கிறார்.

சிறுகதையின் இலக்கணக் கூறுகளாக மேலை நாட்டவரால் கூறப்பட்ட சிலவற்றைக் காண்போம்.


கரு

சிறுகதையின் பொருள் குறிப்பிட்ட வரையரைக்குள் திறம்பட விளக்கதற்குரியதாக இருத்தல் வேண்டும் என்று கூறப்படுகிறது. கதையினை எழுதி முடித்த பிறகு, இதைவிட இன்னும் சிறப்பாக விளக்க இயலாது என்ற உணர்வு ஒரு படைப்பாளனுக்கு ஏற்பட வேண்டும். கதையின் செய்திகள் மிகத் தெளிவாகவும் வாசிப்போரின் மனத்தைக் கவர்வனவாகவும் இருக்க வேண்டும். சில சமயம் கதாசிரியர் கருவினைத் தெளிவாகக் கூறிவிடுவார். சில சமயங்களில் அது மறைமுகமாகவும் உணர்த்தப்படும். கருவே கதையின் மையத்தை அல்லது செயல் நோக்கத்தைத் தருகிறது. சிறுகதைகளில் ஒரே நோக்கமும் ஒரே விளைவும்தான் எதிர்பார்க்கப்படுவதாகவும் நோக்கம் நிறைவேறும் வகையில் கதை அமைந்திருத்தல் போதுமானதாகும் எனவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் மக்களின் வாழ்வியலோடு ஒத்திருக்கும் கரு, வாசிப்பவரின் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன எனக் கூறப்படுகிறது.


நிகழ்ச்சி


கதை ஒரே நிகழ்ச்சியை அல்லது ஒரே தருணத்தைப் பற்றியதாக இருத்தல் வேண்டும் எனப்படுகிறது. இருப்பினும், ஒரே நிகழ்ச்சியினைப் பற்றி கதை அமையவேண்டுமென்பதில்லை எனவும் ஒரு நிகழ்ச்சிக்கு மேலும் இடம்பெறலாம் எனவும் கூறப்படுகிறது. அதன் அடைவு நிலையும் வெற்றியும் கதையை விளக்கும் திறத்தையொட்டி அமைவனவாகும். ஆனால், கதைக்குத் தேவையற்றவைகள், கதைக்கருவோடு ஒட்டாத சம்பவங்கள், சொற்கள் சிறிதும் இடம்பெறக்கூடாது. சிறுகதையின் எல்லைக்குள் அடங்கும் நிகழ்ச்சியோ அல்லது சம்பவமோ வேண்டும். அவையும் பூர்ணமாக அமையவேண்டும்.


பாத்திரப் படைப்பு


பாத்திரங்களைப் படைக்கும்போது, வாசிப்போர் உள்ளத்தில் அவை உண்மை கதாபாத்திரங்கள்போல் தோன்ற வேண்டும். நம் வீட்டிலோ, தெருவிலோ, ஊரிலோ, அருகிலோ இருக்கும் மனிதர்களை தம் கண்முன்னே வந்து நிறுத்தவேண்டும். பாத்திரப் படைப்பு நம்மிடம் அன்பு உணர்ச்சியினையோ அல்லது அதீத வெறுப்பு உணர்ச்சியினையோ எழுப்பிவிடுதல் வேண்டும். சிறுகதைக்கு அதிக கதாபாத்திரங்கள் தேவைப்படாது.


பாத்திரப்படைப்பில் இரண்டு வகை உண்டு. முதல் வகையில் கதாசிரியரே பேசுவது. இரண்டாவது வகையில் பாத்திரங்கள் தம்முள் பேசிக்கொள்கின்ற வகையினால், அவர்கள் இயல்பு புலப்படுவதோடன்றி கதையும் தொடர்ந்து நிகழ்ந்துவிடும். இந்த இரண்டாவது முறைப்படி எழுதுவதுதான் சிறந்தது என மேலை நாட்டார் கூறுகின்றனர்.


சிறுகதையில் மிகவும் முக்கியமானது பாத்திரப் படைப்பாகும். கதைமாந்தர்களே வாசிப்பவர் மனத்தைப் பெரிதும் ஈர்ப்பவராவர். ஒரு கதையில் பாத்திரப் படைப்பைச் சுவையுடையதாகச் செய்ய ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனி இயல்புடன் அமைப்பது என்பது நுட்பமான கலையாகும்.


முரண்


சிறுகதைக்குரிய இன்னொரு கூறு முரண் ஆகும். பொதுவாக இது நன்மைக்கும் தீமைக்கும் ஏற்படும் மோதலில் தோன்றுவதாகும். ஒரு மனிதனின் மனத்திலே ஏற்படும் நன்மை உணர்விற்கும் தீமை உணர்விற்கும் ஏற்படும் போராட்டத்தையே இது குறிக்கிறது. மரபாகக் கதைகளில் அமைக்கப்படும் வாழ்க்கை முறையினை அக்காலப் படைப்பாளர்கள் பலர் ஏற்றுக்கொள்வதில்லை. பெரும்பாலும் நிவீன சிந்தனையாளர்கள் இத்தகைய கருத்துகளைக் கையாள்வதுண்டு. அவர்கள் நன்மை தீமை முரணுக்கு மாற்றாக மனிதன் – இயற்கை முரண், மனிதன் – சமூக முரண், மனிதன் அவனோடே முரண்படுதல் போன்ற தளங்களில் சிறுகதைகளில் படைப்பதுண்டு.


சூழல்


கதையின் சூழ்நிலை மற்றுமொரு முக்கியக் கூறாகும். அது கதைப் பின்னணியினின்றும் வேறுபட்டது. பின்னணி என்பது கதைச் சூழலின் ஒரு பகுதியாகும். கதைக்கோப்பு, கதை மாந்தர், கதைக்கரு முதலியவற்றோடு ஒருங்கிணைந்த பகுதியே சூழ்நிலையாகும். கதையின் நடை, பயன்படுத்தப்படும் சொற்கள், வாக்கியங்களின் அளவு ஆகியவை சூழ்நிலை உருப்பெறுவதற்கு உதவுகின்றன. மேலும், கதை மாந்தர்கள் பேசும் முறை, அவர்களால் பேசப்படும் பொருள் ஆகியவை சூழ்நிலையின் ஒரு பகுதியாகக் கூறப்படுகிறது.


அமைப்பு முறை


ஒருமைப்பாடு கதை அமைப்பிற்குரிய அடிப்படை விதியாகும். சிறுகதையின் ஒருமைப்பாடாக அமைவது தூண்டுணர்ச்சி, செயல் நோக்கம், செயல் ஆகியவையாகும். அதனுடன், உணர்ச்சிப் பதிவின் ஒருமைப்பாடும் இன்றியமையாததாகும் எனவும் உரைக்கப்படுகிறது. சிறுகதை உணர்த்தும் கருத்து ஒரே கருத்தாக இருத்தல் வேண்டும். அக்கருத்து ஒரே நோக்கத்தோடும் ஒரே அமைப்பு முறையோடும் தக்க முடிவோடும் சிறுகதையாக உருவாக்கம் பெறவேண்டும். இவ்வொருமைப்பாடு கொண்டதே சிறந்த ஒரு சிறுகதைப் படைப்பாகத் திகழும். எனவே, ஒருமை நோக்கம், ஒருமை விளைவு ஆகிய இவ்விரண்டு சீரிய விதிகளைக் கொண்டே ஒரு சிறுகதையை ஒரு கலையாக மதிப்பீடு செய்தல் என்பது அவசியமாகிறது.


உணர்ச்சி


நிகழ்ச்சிக்கு முதலிடம் தராமல் மனித மனத்தைப் படம் பிடித்துக் காட்டச் சிறுகதையைப் பயன்படுத்தும் ஒரு முறையும் சிறுகதைப் படைப்பாக்கத்தில் பின்பற்றப்படுகிறது. புதுமைப்பித்தனின் கதைகளில் சில இவ்வகையில் அமைந்திருக்கும். ஏதோ ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அதனால் விளைந்த எண்ணங்களைக் கூறுவதாக இத்தகைய கதைகள் அமைந்திருக்கும். இது பல்வேறுபட்ட மனிதப் பண்புகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு ஆராய்வதாகும். இவ்வகைக் கதைகள் ஒருவருடைய புறச்செயல் ஒன்றிரண்டைக் கொண்டு அவரின் அகமனத்தைத் தொட்டுக் காட்டும் தன்மையுடையாதாகும்.


ஸ்டீவன்சன் என்பவர், மூன்று சிறந்த வகைக் கதைகளை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.


‘முதலாவது ஒரு கதைக்கோப்பைக் கொண்டு கதாபாத்திரங்களைப் பொருத்தலாம். 

இரண்டாவது ஒரு கதாபாத்திரத்தைக் கொண்டு அதை வளர்ச்சி செய்ய நிகழ்ச்சிகளைப் படைக்கலாம்.

மூன்றாவது குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையின் தாக்கத்தை விளக்கும் வகையில் செயல்களையும் கதாமாந்தர்களையும் படைத்துக் கதையை உருவாக்கலாம்.’


அவரின் கூற்றிலிருந்து கதைக்கோப்புக் கதை, பாத்திரப்படைப்புக்  கதை, உணர்ச்சிப் பதிவு கதை எனச் சிறுகதைகளை மூன்று வகைப்படுத்தலாம் என்பது தெளிவாகிறது.


இனி, அடுத்துவரும் பகுதியில் அகிலன் எழுதிய ‘பூச்சாண்டி’ என்ற சிறுகதை மேலே கூறியுள்ள சிறுகதை இலக்கணத்தோடு எந்த அளவு பொருந்துகிறது என்பதைக் காண்போம்.


அகிலன்


சிறுகதை, நாவல் என இரண்டுத் துறைகளிலும் மிக ஆழமாகத் தடம் பதித்தவர் அகிலன். பிரபலமான எழுத்தாளர்கள் பலரும் குலத்தமிழ், வட்டாரத் தமிழ் என எழுதி வந்த காலகட்டத்தில் மிக எளிமையாகப் பொதுத் தமிழில் எழுதிய மிகச் சிறந்த எழுத்தாளர், நாவலாசிரியர். சமகால நிகழ்வுகளும் அந்நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் மனவோட்டங்களையும் உணர்ச்சிப் பொங்க எழுதக்கூடியவர். பாரதிய ஞானபீட விருதும் சாகித்திய அக்காதெமி விருதும் பெற்றவர். மலேசியத் தமிழர்களின் தோட்டப்புற வாழ்க்கையையும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் ‘பால்மரக் காட்டினிலே’ நாவலின் மூலம் மிகவும் யதார்த்தமாகப் பதிவு செய்து மலேசியப் படைப்பாளிகளுக்கு ஒரு விழிப்புணர்வும் எழுச்சியுணர்வும் ஏற்படுத்தியவர்.


பூச்சாண்டி


கதைச் சுருக்கம்


ஒரு நாள் நள்ளிரவில், சவுக்குத் தோப்பு அருகே ஒருவன் இரயிலின் முன் விழுந்து தற்கொலைச் செய்து கொள்கிறான். அந்தப் பிணத்திற்குக் காவலாக இரயில் போலீசை நிறுத்திவிட்டு, இரயில் போய்விட்டது. இறந்தவனின் முகம் தன்னால் பாதிக்கப்பட்ட ஒருவனின் முகமாக அந்தப் போலீசுக்குத் தெரிகிறது. இறந்தவனின் ஆவி, தன்னைப் பயமுறுத்துவது போலவும் முன்பொருநாள் இரயிலில் ஒரு பிச்சைக்காரியின் மரணத்திற்கும் தான் காரணமாயிருந்ததும் அவனையறியாமல் அவன் நினைவில் வந்து கோரத்தாண்டவம் ஆடியது. அவன் செய்த இழிச் செயல்களெல்லாம் அவன் மனத்தைக் குடைகின்றன. அவனின் மன உணர்வுகளும் நினைவோட்டங்களும் பேயாய், பிசாசாய், பூச்சாண்டியாய் வந்து அவனைத் தாக்குகின்றன. விடிந்ததும் மற்றவர்கள் வந்து பார்க்கும்போது, அங்கே இரண்டு பிணங்கள் கிடந்தன எனக் கதை முடியும்.


வில்லியம் என்றி ஆட்சன் கூறுவதுபோல், ஒரே மூச்சில் படித்து முடிப்பதற்குரிய தன்மையை இக்கதை கொண்டுள்ளது. மிகவும் இயல்பாக எழுதுவது அகிலனின் எழுத்துக் கலை. அவரது கலைத்திறனுக்கும் கற்பனா சக்திக்கும் இக்கதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். எழுத்தாளன் வாழ்வியல் உண்மையில் உணர்ந்தவற்றைத் தன் படைப்பின்மூலம் வாசக நெஞ்சங்களின் மன ஆழத்திற்குக் கடத்திவிடுவதுதான் ஒரு சிறந்த படைப்பாக்கத்திற்குரிய இலக்கணமாகும்.


கரு


காவல் துறையினர் சமூகத்தைக் காக்க வேண்டிய அரண் போன்றவர்கள். தோழமையுணர்வோடு மக்களோடு மக்களாக நின்று பாதுகாப்புத் தர வேண்டியவர்கள். ஆனால், வேலியே பயிரை மேய்வது போல இவர்கள்தான் வழிப்பறித் திருடர்கள், திருடர்களுக்குத் துணை, கற்பழிப்பு, பெண்களைத் தீய வழிகளுக்குக் கட்டாயப்படுத்துதல், கையூட்டு வாங்குதல் எல்லாம் இன்று காவல் நிலையங்களில் நடக்கும் அலங்கோலங்கள். இத்தகையப் போக்கு கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம்வரை தொடர்வதால், தட்டிக்கேட்க ஆளில்லாமல் போகிறது. அப்படி யாராவது நீதிக்காகப் போராடினாலும் தண்டனை போரடுபவனுக்கோ அல்லது அவனின் குடும்பத்தினருக்கோ தான் கிடைக்கும். ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்பதற்கேற்க, சட்டத்தால் தண்டிக்கப்படாதவர்கள் காலத்தால் தண்டிக்கப்படுவார்கள். இதை அப்படியே தோலுறித்துக் காட்டுவதுதான் இக்கதையின் கருவாகும்.


கதை


ஒரு தற்கொலைச் சம்பவம். பிணத்துக்குக் காவலாய் நிற்கும் ஒரு போலீசின் நினைவில் மேலும் சில சம்பவங்கள் காட்சிகளாய் வருகின்றன. அனைத்துச் சம்பவங்களும் கதையின் கருவைச் சார்ந்தே இயல்பாய் வந்து போகின்றன. அப்படி வரும் அச்சம்பவங்களே கதையின் முடிவிற்கும் காரணமாக இருக்கின்றன.


முதல் சம்பவம் ஒரு தற்கொலை. அப்பிணத்திற்குக் காவலாய்த் தனியாக நிற்கும் இரயில் போலீசுக்கு இறந்தவனின் முகத்தைப் பார்த்தபோது, இறந்தவன் தன்னால் பாதிக்கப்பட்டவனாக இருப்பானோ என்ற சந்தேகம் எழுகிறது. பல உணர்வுகள் அவன் உள்மனத்திலிருந்து எழுந்து அவனை ஆட்டிப் படைக்கின்றன. மேலும், அவனால் மற்றவர்களுக்கு இழைக்கப்பட்ட இழிசெயல்கள் எல்லாம் பற்பல சம்பவங்களாக நினைவில் வந்து போகின்றன.


சுதந்திரப் போராட்டக் காலத்தில் அரசியல் தொண்டர்களையும் பொதுமக்களையும் வெறிப்பிடித்து அடித்து நொறுக்கியதும் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடியதும் நினைவுக்குள் ஓடியது.


இரயில் பிச்சைக்காரனிடம் காசு பிடுங்கியதும் அப்பிச்சைக்காரன்,
‘பசிக்குது ரெண்டனா கொடு’
எனக் கெஞ்சியதும்கூட அப்போது அவன் நினைவில் நிழலாடியது.


இன்னொரு சம்பவத்தில் பிச்சைக்காரியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த, அவளைக் கற்பழிக்க முயலும்போது, தற்செயலாய் இரயிலிலிருந்து ஆற்றில் விழுந்து இறந்து போனதால், அவளும் ஆவியாய்த் தன்னைக் கொல்ல வருவதுபோல் அவனுக்குள் ஒரு மனப்பிரமையும் சுழன்றுகொண்டிருந்தது.


வேறொரு சம்பவமும் அவனுக்குள் வந்தது. அது ரேஷன் காலம். ஓர் இளம் கைம்பெண் கால்முடை அரிசி கடத்தி வந்தாள். அவளின் இந்தக் குற்றத்தோடு வேறு ஒரு குற்றத்திற்கும் அவளை ஆளாக்க முயன்றான் இந்த இரயில் போலீஸ். அவள் பதறியடித்து ஓடி, அடுத்த பெட்டியிலிருந்த ஒருவன் காலில் விழுந்தாள். அவனுக்குச் சட்டம் தெரியவில்லை. நியாயம்தான் தெரிந்தது. போலீஸைத் துவட்டி எடுத்துவிட்டான். வேலையிலிருந்த போலீசை அடித்ததால், இரண்டு ஆண்டுகள் சிறையிலிருந்த அவன் விடுதலையாகிவிட்டான். சில நாட்களுக்கு முன்புதான் இந்தப் போலீஸ் அவனைப் பார்த்தான். இப்போது பிணமாய்க் கிடப்பவனும் அவனே எனப் போலீசுக்குத் தோன்றியது.


பல விகார உணர்ச்சிப் பிம்பங்கள் அவனை ஆட்கொள்ள, தற்கொலைச் செய்து கொண்டவனும் இறந்து போன பிச்சைக்காரியும் அந்தக் காரிருள் நேரத்தில் ஆங்காரமாய் ஆவேசமாய் அவனை நெருங்குகின்றனர். அவனின் சப்த நாடியும் ஒடுங்கிப் போய் நிற்கதியாய் நிற்கிறான்.
அருகில் பிணம். அவனுக்கோ கடந்த கால சம்பவங்கள் பேயாய், பிசாசாய், பூச்சாண்டியாய் நெருங்கி வருகின்றன. பொழுது விடிந்தது. ஒரு பிணம் கிடந்த இடத்தில் தோழமைக்கு இன்னொரு பிணம்.


பாத்திரப் படைப்பு


இக்கதையில் வரும் பாத்திரப் படைப்புகள் கதைக்கருவை ஒட்டியே அமைக்கப்பட்டிருக்கின்றன. கதைக்கருவை வலுப்படுத்தும் சம்பவங்களுக்குக் கதாபாத்திரங்கள் மேலும் மெருகூட்டுகின்றன. கதைக்காகப் பாத்திரங்களா? இல்லை பாத்திரங்களுக்காகக் கதையா? எனப் பிரித்துப் பார்க்க முடியாவண்ணம் இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கின்றன.


கதாபாத்திரங்களுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் ஒரு தன்மையும் இக்கதையில் இருக்கிறது. கதையின் முக்கியமான போலீஸ் பாத்திரம் 9333 என்ற எண்ணால் மட்டுமே அடையாளம் காட்டப்படுகிறது. அதுபோல கதையில் வருகின்ற வழிப்போக்கன், பிச்சைக்காரன், பிச்சைக்காரி, விதவை, டிரைவர், கரி தள்ளுகிறவன், அவன் எனக் கதாபாத்திரங்களுக்குப் பொதுப்பெயர்களே கதை முழுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது இக்கதையின் தனிச்சிறப்பு.


ஆசிரியர் கதைச்சொல்லியாக இருந்தாலும் சில இடங்களில் கதாபாத்திரங்களை அவர்களுடைய இயல்புத் தன்மையிலேயே உரையாடவிட்டிருப்பது இக்கதையை நமக்கு  அருகே கொண்டுவந்து நிறுத்துகிறது.


‘சரி புள்ளே வெளியே வா, வந்து பெஞ்சு மேல உட்கார்’

‘டிக்கெட் வாங்கலிங்க, அடுத்த ஊரிலே இறங்கிடுறேனுங்க’

‘இல்லிங்க’

‘என்ன இல்லிங்க’

போலீஸ் பிச்சைக்காரியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த பேச்சைத் துவங்கும் இதுபோன்ற உரையாடல்கள் இப்படி யதார்த்தமாகக் கதையின் இடை இடையே வருகின்றன.


எதிர்பார்ப்பு


‘அது நள்ளிரவு. பேய்ப் பிசாசுகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?’
எனத் துவங்கும் கதை, ஆரம்பத்திலேயே ஓர் எதிர்பார்ப்புத் தன்மையை வாசிப்போர் உள்ளங்களில் ஏற்படுத்திவிடுகிறது. மேலும், கதையில் வரும் தொடர் சம்பவங்களும் கதையை வாசிப்பவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்குகின்றன. அடுத்த என்ன நடக்கும்? என்ற தூண்டல், முதல் சம்பவம் தொடங்கி அடுத்தடுத்து வரும் சம்பவங்கள்வரை நீள்கிறது. வாசித்து முடித்த பிறகும்கூட நம்மைச் சிந்திக்க வைக்கும் வகையிலான ஒரு கதை இது.


சூழ்நிலை


இக்கதையின் முதல் சூழல் சவுக்குத் தோப்பு. ஒரு நள்ளிரவின் அமாவாசை இருட்டை கலைநயத்துடனும் கற்பனா சக்தியுடனும் மிகவும் நேர்த்தியாகப் படைத்திருக்கிறார் கதாசிரியர். மேலும், ஈரம் காய்ந்த ஆறு, தண்டவாளம், இரயில் எனச் சம்பவங்கள் உயிர்ப்பெறுகின்றன.


ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தைக் குறிக்கும் பின்னணியைக் கதை கொண்டுள்ளது என்பதை,
‘அப்போது அரசியல்வாதிகள் அளந்து கொட்டுகிற காலம் அல்ல, அடி வாங்கும் காலம்’
என்ற வரி உணர்த்திச் செல்கிறது.


‘வெள்ளைத் தோலுக்குத்தான் சிவப்பு நிறமென்றால் கிலி ஆயிற்றே’
என்ற வரியும் ஆங்கிலேயர்களுக்குக் கம்யூனிசம் என்றாலே அலர்ஜி என்பதை உவமை நயத்திடன் சுட்டிக்காட்டுகிறது.


தமது ஆங்கில இலக்கிய வரலாற்று நூலின் முன்னுரையில் தெயின் என்பவர்,


‘இலக்கியப் படைப்பு ஒரு தனி மனிதனின் கற்பனையால் மட்டும் முகிழ்ப்பதன்று. உணர்வால் ஊக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட மூளையின் உழைப்பால் மட்டும் விளைவதன்று. சமகாலப் பழக்கவழக்கங்களின் கல்வெட்டாக விளங்குவது இலக்கியமாகும்’
என்கிறார்.


முரண்


கதையின் ஆரம்ப வரிகளில்,

‘கடவுளை நான் கண்டதில்லை’

என வருவதையும் கதையின் முடிவில்,

‘கடவுளுக்குக் கண் இருக்குங்க’

என்று வருவதையும் காணலாம்.


இது கதையின் ஆரம்ப நிலையில் இருந்த ஒரு கருத்தோடு இறுதி கருத்து முரண்பட்டு நிற்பதைக் காண முடிகிறது. 

மேலும்,

‘கடவுளைப் பார்த்தால் காறித்துப்புவேன்’

என்ற கூறும் கதாபாத்திரம் இறுதியில்,

‘கடவுளுக்குக் கண் இருக்குங்க’

என்று கூறுவதையும் காணலாம்.


மேலும், உவமை நயம் கதை முழுக்க வியாபித்திருக்கிறது. வெறும் மணலாய் இருக்கும் ஆற்றைக் கஞ்சப்பயல் நெஞ்சோடு ஒப்பிடுதலும் தண்டவாளத்தைப் பாம்பாகவும் இரயிலைக் கொள்ளி வாய்ப் பிசாசாகவும் இரயிலின் பின்புறச் சிவப்பு விளக்கு இறந்தவனின் இரத்தக் கறையாகவும் இருட்டை மங்கைக்கும் தூரத்தில் இருந்து வரும் இரயிலின் முன்விளக்கு பெண்களின் நெற்றிப்பொட்டுபோல் என இப்படி கதை முழுக்க ஒப்புவமையோடு சொல்லிக்கொண்டே போகிறார் கதாசிரியர்.


முடிவுரை


ஒவ்வோர் இலக்கியப் படைப்பிலும் படைப்பாளி தனது சமகாலச் சமூகத்தைத் திறனாய்வுச் செய்து, அத்திறனாய்வை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிப்படுத்துகிறார்.


‘இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி’
என்கின்றனர் ‘வேரன் எண்ட் வெலேக்’ எனும் இரட்டைத் திறனாய்வாளர்கள்.


அகிலனின் பூச்சாண்டியும் இத்தகையத் தன்மையிலேயே படைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் போலீசின் மனப்பிம்பங்களுக்கும் பய உணர்வுகளுக்கும் ஏற்ப இயற்கையோடு ஆவேச கற்பனையைக் கலந்து ஆவி, பேய், பிசாசு எனக் கதையை நகர்த்தி நமக்கும் பூச்சாண்டி காட்டியிருக்கும் கதாசிரியர், சமூக அக்கறையுடன் சிறுகதைக்கென்று கூறப்படுகின்றன பல இலக்கணக் கூறுகளுடன் இக்கதையைப் படைத்திருக்கிறார்.



துணை நூல்கள்


1.   சிறுகதைக் களஞ்சியம். தொகுதி 1. ஏ. சி. செட்டியார். இரண்டாம் பதிப்பு 2000. சாகித்திய அகாதெமி, புது டில்லி.


2.   இலக்கியத் திறனாய்வியல். டாக்டர் தா. ஏ. ஞானமூர்த்தி. முதற்பதிப்பு 2006. ஐந்திணைப் பதிப்பகம். சென்னை.


3.   இலக்கியக் கலை. அ . ச. ஞானசம்பந்தன். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். சென்னை.


4.   இலக்கியமும் சமூகவியலும். சி. இ. மறைமலை. முதற்பதிப்பு 1991. மணிவாசகர் பதிப்பகம். சென்னை.



5.   திறனாய்வுக் கலை. தி. சு. நடராசன். ஒன்பதாம் பதிப்பு 2011. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். சென்னை.