ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

திருமதி விமலா ரெட்டியின், ‘அரிதாரம் பூசாமலே’ நாவல் வெளியீட்டு விழாவில் நான் வழங்கிய வாழ்த்துரை.

                            வாழ்த்துரை – எம். சேகர்





திருமதி விமலா ரெட்டியின், அரிதாரம் பூசாமலே நாவல் வெளியீட்டு விழாவில் நான் வழங்கிய வாழ்த்துரை.

22 ஆகஸ்டு, 2015 – மதியம் 2.00 மணி
டான்ஸ்ரீ சோமா அரங்கம், விஸ்மா துன் சம்பந்தன், கோலாலம்பூர்

தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

அனைவருக்கும் வணக்கம்
.
திருமதி விமலா ரெட்டி. மலேசிய இலக்கியத்தில் மட்டுமல்லாமல் சிங்கப்பூர் இலக்கியத்திற்கும் பங்காற்றிக்கொண்டிருக்கிறார் என்பதை இங்குப் பதிவு செய்வதில் பெருமிதம் கொள்கிறேன். சிங்கையின் தமிழ் எழுத்தாளர் கழகம், தங்கமீன் வாசகர் வட்டம் போன்ற பல அமைப்புகள் மாதம் தோறும் நடத்தும் சிறுகதை, கவிதை, விமர்சனம் எனப் பல போட்டிகளில் தவறாமல் கலந்துகொண்டு பல பரிசுகளையும் பெற்றுக்கொண்டிருப்பவர். எழுத்துலகில் தனக்காக ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருப்பவர். இந்த நாவல் வெளியீட்டுக்குத் தயாராகும் முன்பே தனது அடுத்த நாவலைத் தயார் நிலையில் வைத்துள்ளார். இவரின் வேகம் இப்படியே தொடர்ந்தால் இன்னும் பத்தாண்டுகளில் மலேசியாவில் அதிகமான நாவல்களை எழுதிய எழுத்தாளராகவும் இவர் புதிய அவதாரம் எடுக்க அதிகமான வாய்ப்புகளும் உள்ளன.

திரு. மு.வ. அவர்கள் நாவலை அதன் தன்மைக்கேற்ப தனது இலக்கிய மரபு என்னும் நூலில் நான்காக வகைப்படுத்துகிறார்.

1.   நிகழ்ச்சி மிக்க நாவல் (novel of action)
2.   பண்புநலன் மிக்க நாவல் (novel of character)
3.   விளக்கமும் வருணனையும் மிக்க நாவல் (picturesque novel)
4.   நாடகப் போக்கிலான நாவல் (dramatic novel)

நூற்று பதினெட்டுப் பக்கங்களை உள்ளடக்கிய இந்த நாவலின் கதாபாத்திரங்களையும் உரையாடல்களையும் நிகழ்ச்சிகளையும் அதன் போக்கில் கொண்டு இந்நாவலைப் பண்பு நலன் விளக்கும் நாவலாக வகைப்படுத்தலாம். சுபத்திரை என்ற பெண்ணின் வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்படும் இன்னல்களையும் அவள் எதிர்கொள்ளும் இடர்களையும் சமுதாயச் சீர்கேடுககளினால் மனத்தளவிலும் அவள் பாதிக்கப்படுவதையும் இந்நாவல் ஆழமாகச் சித்தரிக்கிறது. அவளது இரண்டாவது கணவன் பொன்வண்ணனிடம் ஏற்படும் பண்புநலமாற்றம் இந்நாவலுக்குத் திருப்பமுனையாக அமைந்துவிடுகிறது.

கதைக்குரிய பொருள்

நாவலுக்கு உரிய கதைப்பொருளை இப்படித்தான் அமைக்கவேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. அவனுடைய எண்ணம், வார்த்தை, செயல், பழக்கம், நடத்தை எனவும் வாழ்க்கை அனுபவம், கனவு, ஆசை, நிராசை, மகிழ்ச்சி, கொண்டாட்டம் எனவும் ஒவ்வொன்றிலும் ஒரு கதை எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. படைப்பாளனின் ஒரு நுண்ணியப் பார்வையில் மனத்துக்குள் விசாலமாக விரியும் ஒன்று  மனத்தில் ஆழப் பதியும்போது அதன் தாக்கமும் வீச்சும் எழுத்துகளாக மிளிரும்போது அது ஒரு சிறந்த படைப்பாகிறது.
  மலேசிய மண்ணின் விளிம்புநிலை தமிழர்கள் மற்றும் வசதிமிக்கத் தமிழர்கள் என அவரவர்  வாழ்வியல், சமூகவியல், உளவியல் சூழல்களையும் இந்த நாவல் படிமமாகக் காட்டிச் செல்கிறது.

கதாமாந்தர்

அறிஞர் ஈ. எம். ஃபாஸ்டர், நாவல்களில் இடம்பெறும் கதை மாந்தர்களை இருவகைப்படுத்துகிறார்.

1.   முழூநிலை மாந்தர் (Round Character)
2.   ஒருநிலை மாந்தர் (Flat Character)

நாவலின் தொடக்கம் முதல் இறுதிவரை வலம் வந்து, வாசகர்களின் மனத்தில் முழுமையாக இடம் பிடிப்பவர்களே முழூநிலை மாந்தர்கள்’. கதையின் வளர்ச்சியில் இடையிடையே தோன்றி மறைபவர்கள் ஒருநிலை மாந்தர்கள்’. இந்நாவலில் சுபத்திரை மட்டுமே கதையின் போக்கில், பண்புநலன்களாலும் செயல்களாலும் தியாக உணர்வுகளாலும் வாசகர்களின் உள்ளத்தில் முழுமையாக இடம் பெற்றுவிடுகிறார். எனவே சுபத்திரையின் பாத்திரமே இந்த நாவலின் முழுநிலை மாந்தராகிறது. அடுத்து வருகிற காஞ்சனாதேவி, பொன்வண்ணன், மலர், முருகேசன், தட்சணாமூர்த்தி போன்ற பாத்திரங்கள் கதையின் வளர்ச்சியில் தம் பங்கிற்கு வந்துசென்று, ஒருநிலை மாந்தர்களாகின்றன.

நாவலின் உவமைகள்

நாவலில் அதிகமாக உவமைகள் கையாளப்பட்டுள்ளன. இவை கதாசிரியரின் மொழிவளத்திற்கும் மொழிப்பயன்பாட்டிற்கும் சான்றாக விளங்குகின்றன.

- தண்ணீரில் போட்ட உப்பைப் போல
- உடம்பில் பூச்சி ஊறுவதுபோல
- அலையிலே சிக்கிய துரும்பாய்
- ஊசிப்போன சட்டினி போல

என ஆங்காங்கே நம் கண்ணில் பட்டு நமக்குள் நுழைகின்றன.

மொழி நடை வருணனை

கதாசிரியர் ஒரு கவிதைமனம் படைத்தவராக இருப்பதால் எழுத்தின் ஊடே கவித்துவமான வரிகளும் சொற்றொடர்களும் தாராளமாக வந்து விழுகின்றன. கதையின் போக்கை உணர்த்துவதற்காக பொருத்தமான எடுத்துக்காட்டுகளும் இயற்கையைக் கதையோடு ஒன்றிணைக்கும் வருணனைகளும் நாவல் முழுக்க பரவியுள்ளன.

வீடு சுத்தமாக இருந்தால் போதுமா? மனம் சுத்தமாக இருக்கவேண்டாமா? போன்ற சமூகத்திற்குச் சாட்டையடிக்கும் சொற்றொடர்களும் இந்த நாவலில் உண்டு.

முடிவுரை


சமூக அக்கறைமிக்க ஒரு படைப்பாளராகவே இந்த நாவல் கதாசிரியரை அடையாளம் காட்டுகிறது. நாளைய மலேசிய தமிழ் இலக்கியவானில் ஒரு நட்சத்திரமாக திருமதி விமலா ரெட்டி மிளிர்வார் என்பதற்கு இந்த நாவல் ஆரம்ப வித்திட்டிருக்கிறது. அவருக்கு எனது அன்பான வாழ்த்துகள். இந்த நூல் வெளியீட்டில் எனக்கும் பேசுவதற்கு வாய்ப்பளித்த நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களுக்கும் எனது அன்பான நன்றி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக