ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

9 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் நான் படைத்த கட்டுரை

சிங்கப்பூர் வாழ்வியலைச் சித்தரிக்கும் தற்காலச் சிங்கப்பூர்ச் சிறுகதைகள் எம்.சேகர்


உரைநடை இலக்கிய வகையில் புனைவிலக்கியமே இன்று பலராலும் புனையப்பட்டு பெரும்பாலோரால் வாசிக்கப்பட்டும் வருகிறது. அந்தப் புனைவிலக்கியங்கியங்களில் சிறுகதையும் கவிதையும் மட்டுமே தனது ஆளுமைகளை விரிவுப்படுத்திக்கொண்டு ஆழமாகவும் அகலமாகவும் வேரூன்றி நிறுவி இன்னும் புதுப்புது கிளைமுகங்களை நமக்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கின்றன என்றால் அது மிகையாகாது.


ஆங்கிலேயர்களின் காலனித்துவ ஆட்சியின்போது அவர்களால் தொழிலாளர்களாகத் தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான அன்றைய மலாயாவிற்குத் தென்னிந்தியத் தமிழர்கள் சஞ்சிக்கூலிகளாகக் கொண்டு வரப்பட்டு தோட்டப்புறங்களிலும் சாலை மற்றும் இரயில் பாதை நிர்மாணிப்புகளிலும் வேலைக்கமர்த்தப்பட்டனர். அந்தத் தலைமுறையின் வாரிசுகளான இரண்டாம் மூன்றாம் நான்காம் தலைமுறையினரின் தமிழாக்கங்களைத்தான் இன்று மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ்வியலைச் சித்தரிக்கும் புனைவிலக்கியங்களாக அடையாளம் காட்டப்படுகின்றன. அவ்வகையில் சிங்கப்பூரின் புனைவிலக்கியங்களில் ஒன்றான சிறுகதை இலக்கியம் எவ்வாறு சிங்கப்பூர் வாழ்வியலைச் சித்தரிக்கின்றது என்பதை ஆய்வுக்களமாகக் கொண்டு எனது கட்டுரைப் படைப்பாக உங்கள் பார்வைக்கு முன்வைக்கப்படவுள்ளது.


தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றிய ஒரு முன்னோட்டப் பார்வை


தமிழில் சிறுகதை வடிவத்திற்குப் பாரதியாரின் ரயில்வே ஸ்தானம் சிறுகதையே முதன்மையானது எனவும் ஆனால் சிறுகதை வடிவம் சரியாக அமைந்தது வ.வே.சு. ஐயர் எழுதிய, ‘மங்கையற்கரசியின் காதல் என்ற தொகுப்பிலுள்ள குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதை எனவும் பல இலக்கிய ஆய்வாளர்கள் முன்னுரைத்துள்ளனர். புதுமைப்பித்தனின் கதையாக்கம் நவீன படைப்பாக்கத்திற்கு வித்திட்டு இன்று உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களால் தமிழியல் படைப்புகள் பெருகிவருகின்றன. தமிழ் நாட்டை அடுத்து மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் அந்தந்த நாட்டுப் பண்பாட்டுக் கூறுகளுடனும் தமிழர் மரபின் கூறுகளுடனும் விழுமியங்களுடனும் சமூகத் தேவைகளுக்கேற்பவும் சிறுகதைகள் புனையப்பட்டு வருகின்றன.


மலேசிய சிங்கப்பூர் இலக்கியச் சூழல் – வரலாற்றுப் பின்னனியுடன்


சிங்கப்பூரின் தொடக்கக்கால இலக்கியச் சூழலை ஆய்வாளர்கள் மலாயாவுடனான வரலாற்றுப் பதிவோடு இணைத்தே பதிவு செய்துள்ளனர். டாக்டர் அ. வீரமணி அவர்கள், மலாயா – சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள் வரலாற்றினை மூன்று காலக்கட்டமாக ஆய்வு செய்துள்ளார்.

அ)  1947 க்கு முன்னுள்ள காலம்
ஆ) இரண்டாவது உலகப்போர் முடிவுற்றதிலிருந்து மலாயா சுதந்திரம் எய்திய ஆண்டு வரையுள்ள காலம் (1947 – 1957)
இ) 1957 லிருந்து 1968 வரையுள்ள காலம்

எனப் பிரித்து, இந்த மூன்று காலக்கட்டங்களும் வரலாற்று அடிப்படையில் எழுந்த காலப்பிரிவேயின்றி, சிறுகதையினுள் நிகழ்ந்த மாற்றங்களைக்கொண்டு வரையறுக்கப்பட்ட தீர்வான முடிவல்ல என்கிறார். இதற்கு அவர் தரும் விளக்கம் மலாயா சிங்கப்பூர்த் தமிழிலக்கிய வளர்ச்சி பெரிதும் அரசியல் மாற்றங்களாலேயே நிகழ்கின்றன என்கிறார்.


சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள் – காலப் பகுப்பு

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு ஒரு கண்ணோட்டம் என்ற நூல், சிங்கப்பூரின் இலக்கியத்தின் காலப்பகுப்பை

அ) சிங்கப்பூர்க் குடியரசு நிலைக்கு முந்திய பகுதி (1887 முதல் 1965 வரை)
ஆ) சிங்கப்பூர்க் குடியரசு நிலைக்குப் பிந்திய பகுதி (1965 முதல் 2000 வரை)

எனப் பகுத்துக் காட்டுகிறது.  மேலும் குடியரசு நிலைக்கு முந்திய காலப்பகுதி இலக்கிய வரலாற்றின் பொதுநிலையிலும் குடியரசு நிலைக்குப் பிந்திய காலப்பகுதியில் இலக்கிய வளர்ச்சி மிகுதியாக இருப்பதால் அக்காலப் பகுதி இலக்கிய வரலாற்றை இலக்கிய வகையின் அடிப்படையிலும் இந்நூலின் கண்ணோட்டத்தில் பதிவு செய்துள்ளனர் டாக்டர் சுப. திண்ணப்பன் அவர்களும் மற்றும் டாக்டர் ஏ. ஆர். ஏ. சிவகுமாரன் அவர்களும்.

சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகளின் இயல்பு

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் என்பது சிங்கப்பூர் மண்ணின் மணம் கமழும் வகையிலும் சிங்கப்பூர்ப் பின்னணியைச் சித்தரிக்கும் வகையிலும் சிங்கப்பூரர்களால் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகளால் எழுதப்படும் இலக்கியம் என வரையறைக்கப்பட்டுள்ளது என சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு கூறுகிறது.

பைரோஜி நாராயணன் மற்றும் சுப. நாராயணன் இருவரும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள், நவீன இலக்கியப் பயிற்சி பெறுவதற்காகக் கதை வகுப்பு தொடங்கியதுபோல், சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழ் மூலம் ரசனை வகுப்பு ஒன்றையும் சுப. நாராயணன் நடத்தி, சிங்கப்பூர்ச் சிறுகதை ஆக்கத்திற்குத் தன் உழைப்பை நல்கியுள்ளார். இதனையடுத்து எழுத்தாளர் பேரவை தமிழ் முரசில் உருவானது. வை. திருநாவுக்கரசுவும் அ. முருகையனும் தமிழ் முரசின் ஆசிரியர் கோ. சாரங்கபாணியுடன் சிறுகதை வளர்ச்சிக்குப் பல முயற்சிகள் செய்தனர்.

1952 இல் கோ. சாரங்கபாணி தோற்றுவித்த தமிழர் திருநாளும் மாணவர் மணிமன்றமும் சிங்கையின் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு இன்றுவரையிலும் பணியாற்றி வந்துள்ளன. இன்றைய இலக்கியச் சூழலில் மலேசிய சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகளின் இயல்பையும் அளவையும் பத்திரிக்கைகளே நிர்ணயம் செய்துள்ளன என்றால் அது மிகையாகாது. சிங்கையில் தமிழ் முரசு நாளிதளோடு தங்கமீன் இணைய இதழும் அவ்வப்போது வெளிவரும் சிறுகதைத் தொகுப்புகளும் சிறுகதையின் வளம் உயர்வு பெறுவதற்கு ஆதாரமாக விளங்குகின்றன. இன்றைய சூழலில் தங்கமீன் வாசகர் வட்டத்தின் மாதந்தோறும் நடத்தப்படும் சிறுகதைப் போட்டிகளும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகம் நடத்தும் கதைக்களத்தின் ஒரு பக்கக் கதைகளின் போட்டிகளும் சிறுகதை இலக்கியத்திற்கு நல்ல உரங்களாக இருக்கின்றன. மேலும், சிறுகதைகளில் சிங்கை நாட்டு மண்ணின் மணமும் இந்நாட்டு இயற்கை எழிலும் இடங்களின் பெயரும் பல்லின மக்கள் வாழும் வாழ்வியல் சூழலும் பல்லின கலாச்சாரமும் நிறைவாகவே பதிவு செய்யப்படுகின்றன.


இன்றைய சிங்கப்பூர்ச் சிறுகதைகளில் சிங்கப்பூரர்களின் வாழ்வியல்

இலக்கியம் மனிதனிடமிருந்தும் அவனின் வாழ்க்கையிலிருந்தும் தோன்றியதாகும். மனித வாழ்வில் அவன் சார்ந்த சமூகத்தின் தொடர்பின் ஒட்டுமொத்த அனுபவத்தின் பாய்ச்சலாகவே படைப்பிலக்கியங்கள் உருவாகின்றன. இத்தகைய படைப்பிலக்கியங்கள் மனிதனின் அகநிலை நிகழ்வுகள் மற்றும் புறநிலை நிகழ்வுகளின் ஒரு பதிவாகவே அங்கம் வகிக்கின்றன. இக்கூற்றின்படி சிங்கப்பூர்ச் சிறுகதைகள் வாழ்வியலை அதாவது இத்தகைய அகநிலை மற்றும் புறநிலை நடப்புகளைப் பதிவு செய்திருக்கின்றன. முன்னோடித் தலைமுறை எழுத்தாளர்களான மு.சு.குருசாமி, சே.வே.சண்முகம், மு.தங்கராசு, நா. கோவிந்தசாமி,  ஜே.எம்.சாலி, மா. இளங்கண்ணன், பி. கிருஷ்ணன்,. பழநிவேலு, சிங்கை தமிழ்ச்செல்வம், சங்கரி இராமனுஜம், கண்ணம்மா, ஏ.பி.சண்முகம், இராம. கண்ணபிரான், பொன்.சுந்தரராசு என பலர் அவர்கள் வாழும் காலத்தின் வாழ்வியலை மிகவும் நேர்த்தியாகத் தங்களின் சிறுகதைகளில் பதிவு செய்துள்ளனர்.


இனி நான் எடுத்துக்கொண்ட கட்டுரைத் தலைப்பிற்கேற்ப தற்காலச் சிங்கப்பூர்ப்   படைப்பாளர்களின் ஆக்கங்களான சிறுகதைகளில் சிங்கப்பூரின் தனித்தனமையும் அதன் வாழ்வியல் சூழலும் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைக் காண்போம்.


சிங்கப்பூர்ப் படைப்பாக்கத்தில் தனி முத்திரைப் பதித்துத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழியில் எழுதிவரும் திருமதி. கமலாதேவி அரவிந்தனின்  2012 இல் வெளியான சூரிய கிரஹணத்தெரு என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள, ‘ஒரு நாள் ஒரு பொழுது என்னும் சிறுகதை, சிங்கப்பூர் நாட்டின் திடமான சட்டத்திட்டத்தையும் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும்  அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறது. தங்கள் மகன் சிங்கப்பூர்த் தேசிய சேவைக்குச் செல்வதை விரும்பாத பெற்றோரின் போக்கையும் அதனால் மீண்டும் அவன், தான் பிறந்த மண்ணான சிங்கப்பூருக்கு வரும்போது ஏற்படும் சிக்கல்களையும் கதை அலசுகிறது.

இதே தொகுப்பில் இடம்பெற்றுள்ள சூரிய கிரஹணத் தெரு என்ற கதை, சிங்கப்பூரின் ஓர் இருண்ட வெளியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.   தமிழ் நாட்டிலிருந்து அப்பாவி கிராமத்துப் பெண்களைச் சிங்கப்பூருக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலுக்குத் தள்ளிவிடும் தரகர்களைப் பற்றியும் அவ்வாறு ஏமாற்றப்பட்ட பெண்களின் அறியாமையையும் அவல நிலையையும் அதனிலிருந்து அவர்கள் மீண்டு வந்ததையும் பதிவுகளாக்கி கதை வெற்றி பெற்று நிற்கிறது. களப்பணி மேற்கொண்டு எழுதப்பட்ட இக்கதை அப்பெண்களின் இயலாமையையும் ஏமாற்றங்களையும் போராட்டங்களையும் மிகவும் இயல்பாகப் பதிவு செய்திருக்கிறது.


சிங்கப்பூரின் மற்றுமொரு முன்னோடித் தலைமுறை எழுத்தாளரான திருமதி. நூர்ஜஹான் சுலைமான் இன்றும் சுறுசுறுப்பாக இலக்கிய வெளியில் வலம் வருபவர். அவரின் மிக அண்மைய வெளியீடான, ‘தையல் மிஷின் (2014) சிறுகதைத் தொகுப்பில் சிங்கப்பூரின் முன்னோடித் தலைமுறையின் வாழ்க்கையையும் அவர்களின் வெவ்வேறு மனநிலைகளையும் சிறுகதைகளாகப் பிரதியெடுத்துப் படைத்துள்ளார் என்றால் அது மிகையாகாது. சிங்கப்பூர் வாழ்க்கையின் பல்வேறு சித்திரங்களை இக்கதைகளில் காணலாம். கம்பத்து வாழ்க்கையிலிருந்து மீள முடியாமல் மெல்ல மெல்ல நகர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கைக்குத் தன்னை மாற்றிக் கொள்ளும் மனித மனங்களின் இறுக்கங்களைப் பற்றியும் இக்கதைகள் சொல்லிச் செல்கின்றன. தம் வாழ்க்கைக்குத் துணையாக வந்தவன் கைவிட்ட நிலையிலும் அப்பா வாங்கிக் கொடுத்த தையல் மிஷினிடம்கூட பாசப்பிணைப்புக் கொண்டுள்ள ஒரு பெண்ணின் சுயசரிதமாக தையல் மிஷின் என்ற சிறுகதை வருகிறது. தன் இறப்புக்குப் பிறகு மகன் அந்தப் பழைய தையல்மிஷினை எங்காவது காராங்கூனிங்கிற்குப் போட்டுவிடுவான் என்ற அச்சத்தில் அந்தத் தையல் மிஷினை பழம்பொருள் காப்பகத்தில் ஒப்படைத்துவிடும் ஒரு சாதாரண தாயின் வாழ்வாதாரப் போராட்டமாகவும் மன ஓலங்களாகவும் கதை பயணித்துச் செல்கிறது.


மனித வாழ்க்கையைப் படைக்கும் எழுத்தாளர்களின் படைப்புகள், அவர்களின் அனுபவங்களால் மனிதர்களின் வாழ்க்கையாலேயே படைக்கப்படுகின்றன. மனிதன் தன்னை மேன்மேலும் வளர்த்துக்கொள்வதற்கு உரியவையாகப் படைப்புகள் விளங்குகின்றன.  படைப்பு என்பது வாழ்க்கையோடு நெருங்கிய பிரிக்க முடியாத உறவுடையதாகும். வாழ்க்கை, வாழ்க்கையாக இருப்பதே புதுப் படைப்போடு கொண்ட உறவினால்தான் என ஞானி தனது இலக்கியக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். இக்கூற்றுக்கு ஏற்றார்போல் சிங்கப்பூர் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான செ.ப.பன்னீர்செல்வம், தனது மாயா (2013) சிறுகதைத் தொகுப்பு நூலில், நவீனச் சிங்கப்பூர்த் தோற்றம் கண்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க இருபதுகளில் மையம் கொண்ட அதே முதலை படைப்பையும் இரண்டாம் உலகப் போருக்குப் பிற்பட்ட ஐம்பதுகளில் ஆங்கிலேய காலனியச் சிங்கப்பூரின் களம் காட்டியிருக்கும் லாட்டரிச் சீட்டுஎன்ற படைப்பையும் சிறுகதைகள் வடிவில் நமக்கு சிங்கையின் வாழ்வியல் நடப்புகளை வரலாற்றுச் சுவடுகளாகச் சுட்டியுள்ளார். புதிய தலைமுறையினரும் புதிய குடியேறிகளும் சிங்கப்பூர் மக்களின் பல்லினச் சூழலையும் வரலாற்றையும் புனைகதைகளூடே தெரிந்துகொள்ளவும் தமிழர்களின் ஆளுமைகளைப் புரிந்துகொள்ளவும் இத்தொகுப்பு நல்லதொரு ஆவணமாகவும் விளங்குகிறது.


சிங்கப்பூரின் மூன்றாவது தலைமுறையைச் சார்ந்த சூர்ய ரத்னாவின் நான் (2013) சிறுகதைத் தொகுப்பு முழுக்க முழுக்க சிங்கப்பூரின் சககால வாழ்வியல் சூழலைச் சமூகப் பின்னணியோடும் பல்லின மக்களின் உறவுகளோடும் கதையாக்கம் செய்துள்ளது என்றால் அது மிகையாகாது. இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் பள்ளி மாணவர்கள், இளையர்கள், குற்றவாளிகள், தம்பதியர்கள், காதலர்கள், முன்னோடித் தலைமுறையினர் எதிர்நோக்கும் சிக்கல்களை மிகவும் ஆழமாகவும் நேர்த்தியாகவும் சிங்கையின் தனித்துவமான எழுத்து நடையால் பதிவு செய்துள்ளன. நாடகமே உலகம் என்ற சிறுகதை, 1986 இல் சிங்கப்பூரில் நடந்த துயரச் சம்பவத்தின் பின்னணியுடன் ஒரு சீனக் குடும்பத்தின் கணவன் மனைவி உறவின் விரிசல்களுடனும் பாச அலைகளுடனும் ஒரு கதையைச் சம்பவங்களாகக் காட்சிப்படுத்தி உள்மனத்திற்குள் பாய்ந்து செல்கிறது. அதில் ஹோட்டல் நியூ வேல்ட்டு கட்டிடம் சரிந்து விழுந்த சம்பவத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, நம் முன்னேயே கட்டிடம் விழுந்து நொறுங்குவதாகக் காட்டியிருப்பது அருமை.


சிங்கப்பூரில் தொடர்ந்து எழுதி வரும் ‌ஷாநவாஸ், தன்னுடைய மூன்றாவது கை(2013) என்னும் சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளில் காணும் வாழ்வியல் செயற்கையற்ற பாசாங்கில்லாத கதை சொல்லும் மொழியில் ஒரு சக தோழனோடு தோள் தொட்டுப் பேசுவதுபோல் இருக்கும். மேலும் கதைமொழியின் மையச்சரடுகள் மிக இயல்பான சிங்கப்பூரில் தினந்தோறும் நடக்கும் சம்பவங்களாகப் பயணிக்கின்றன. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள, ‘சாட்சி என்ற கதை, மற்றவர் மீதான அக்கறை என்பது நம்மில் எத்தனை பேருக்கு இன்னும் மிச்சமிருக்கிறது என்ற மனிதநேயக் கேள்வியைக் கதையின் முடிவில் முன்வைக்கிறது.  காலை நேரத்தில் சிங்கப்பூர்த் தெருவொன்றில் ஒரு சீன மூதாட்டிக்கு ஏற்படும் விபத்தும் அதன் தொடர்பான சம்பவங்களையும் மனித மனங்களின் விகற்பங்களையும் விபரீத கோலங்களையும் பதிவு செய்கிறது இக்கதை.


ஜெயந்தி சங்கரின், ‘முகப்புத்தகமும் சில அகப்பக்கங்களும் (2013) என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள இத்தலைப்புக் கதை, சிங்கையில் உள்ள தொடக்கநிலைக் கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் விருப்புகளையும் கசப்புகளையும் பற்றிப் பேசி, நேரடியான பதிவுகளாக உள்ளத்தில் தாங்கி, உருமாறு தோற்றப் பிழை இல்லாமல் நிழலாடவிடுகிறது. முகநூல்களில் நடந்தேறும் வன்மங்களையும் அதனால் ஏற்படும் மன உளைச்சல்களையும் கதை மிகவும் நுட்பமாகவும் தெள்ளத் தெளிவாகவும் பதிவு செய்திருக்கிறது. இக்கால மாணவர்கள் தாங்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ இதுபோன்ற சிக்கல்களில் வீழ்ந்து எழுவதென்பது சிங்கப்பூரின் விபரீதமான கலாச்சாரமாகியிருப்பதை நமக்கு ஒரு எச்சரிக்கையாகவே இக்கதை சொல்லிச் செல்கிறது.


எம்.சேகரின், ‘அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத்தாடித் தாத்தாவும் (2013) என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள், மாற்றத்திற்கான வேட்கைகளை வெளிப்படுத்தும் கருத்துச் செறிவுள்ளவனவாகவும் சிங்கப்பூரின் இன்றைய வாழ்க்கையை அதனதன் போக்கில் அப்படியே படம்பிடித்துக் காட்டுவனவாகவும் அமைந்திருக்கின்றன. தலைப்புக் கதையான அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத்தாடித் தாத்தாவும் என்ற சிறுகதை ஒரு வயோதிக மனிதனது வாழ்க்கை வழியாக, கடந்துவிட்ட பல ஆண்டுகளின் சிங்கப்பூர் மலேசிய வரலாற்றையும் அதன் வாழ்க்கையைப் புனையும் புகைப்படமாகவும் விரித்துச் செல்கிறது. தான் வாழும் இந்த வாழ்க்கையை வெறுக்க, வாழ்வின் மீது அவநம்பிக்கை கொள்ள நியாயமான காரணங்கள் தாத்தாவுக்கு இருந்தாலும் வாழ்க்கையை வாழவும், மனிதர்களை நேசிக்கவும் பல காரணங்கள் இருந்தன என்பதும் அந்தக் காரணங்கள்தான் அவரை இயங்க வைத்திருக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கதை இருக்கும் என்பது அவர்களை நெருங்கும்வரை  நாம் உணரப் போவதில்லை என்பதையும் கதை பதிவு செய்கிறது.


தங்கமீன் வாசகர் வட்டச் சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள நதிக்கரை நாகரீகம் (2013) என்ற நூலில் இடம்பெற்றுள்ள  எம்.சேகரின், ஒரு விடியலின் கிழக்குப் பொழுதுகள் என்ற சிறுகதை உடைந்த குடும்பத்தில் வளரும் குழந்தை எப்படி வக்கரித்துப்போய் வளரும் என்பதுடன், நிகழ்கலை யதார்த்தத்தில் வாசகனைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் கதையாகவும் விளங்குகிறது. சிங்கப்பூர் வாழ்வியலில் தனித்து வாழும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் அந்தக் குடும்பத்தின் பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட பிள்ளைகளின் வலிகளையும் அதற்கான தீர்வையும் சொல்லிச் செல்கிறது இக்கதை.


அண்மையில் சிங்கப்பூரில் வெளிவந்த சிறுகதை நூல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பழம்பெரும் எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் படைப்புகளைப் பற்றியும் பல அரங்குகளில் பலர் ஆய்வுக்கட்டுரைகள் படைத்திருப்பதால், இப்போது எழுதிக்கொண்டிருப்பவர்ளைப் பற்றிய ஒரு பதிவாகவும் இது அமையும் என்பதே இக்கட்டுரையின் நோக்கங்களில் ஒன்றாகும். மேலும், சிங்கப்பூரர்களின் வாழ்வியலைப் பற்றிய ஒரு பதிவாக இச்சிறுகதைகள் எவ்வாறு தங்களை நிலைநிறுத்திக் கொணடுள்ளன என்பதனையும் ஆவணப்படுத்துவதும் ஒரு சிறு முயற்சியே இது.


படைப்பிலக்கியம் வாழ்க்கையின் விரிந்த எல்லையைப் பார்க்க வைத்து, இன்பங்களைத் துன்பங்களாகவும் துன்பங்களை இன்பங்களாகவும் மாற்றியமைத்து வீண் ஆரவாரத்தையும் வீம்புகளையும் மாய்த்து வாழ்க்கையை மேம்படுத்துகிறது. இவ்வகையில் சிங்கப்பூரில் அண்மையக் காலமாகப் படைக்கப்படும் சிறுகதை இலக்கியம் வாழ்வை அதனதன் போக்கில் மையப்படுத்தி, சிங்கப்பூரின் தனித்தன்மையோடும் உலகளாவிய பரந்த பார்வையுடன் முன்வைக்கிறது. வாழும் நாட்டின் அரசியலமைப்புக்கும் சட்டத்திட்டத்திற்கும் உட்பட்டு, அந்தந்த நாட்டு சூழலுக்கேற்ப புனைகதைகளைப் படைப்பதே சிறப்பாகும். கோட்பாடுகளை மட்டும் உள்வாங்கிக்கொண்டு எழுதுவதைவிட, மக்களின் உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டு எழுதும் எழுத்துகளே மக்களால் பெரிதும் போற்றப்படும்; மக்கள் மனத்திலும் நிலைத்து நிற்கும். இது சிங்கப்பூரின் இலக்கியம். இது சிங்கப்பூரின் அடையாளம்.


இன்றைய சூழலில் சிங்கப்பூரின் இலக்கிய வளர்ச்சி என்பது ஓர் ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கி நகர்ந்து செல்வதை வெளிவரும் நூல்களின் எண்ணிக்கையிலிருந்தே நாம் அறிந்துகொள்ள முடியும். சிங்கப்பூர் அரசு சார்ந்த தேசிய கலைகள் மன்றம், சிங்கப்பூர் கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவு, தேசிய நூலகம் மற்றும் தங்கமீன் வாசகர் வட்டம், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், கவிமாலை, தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம், மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர் வாசகர் வட்டம் போன்ற பல இயக்கங்களின் ஆக்கமும் ஊக்கமும் தமிழ் முரசு நாளிதழின் பங்களிப்பும் சிங்கப்பூரின் இலக்கிய வளர்ச்சிக்கு மேன்மேலும் உறுதுணையாக விளங்குகின்றன. மேலும் தங்கமீன் பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. பாலுமணிமாறன் சிங்கை இலக்கியப் படைப்பாளர்களைத் தேடிப் பிடித்து, ஆர்வமூட்டி அவர்களின் படைப்புகளை நூலாக்கம் செய்துவரும் அரிய முயற்சியானது சமீப காலமாக அதிகமான நூல்கள் சிங்கப்பூரில் வெளிவரக் காரணமாகவும் அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

துணை நூல்கள்:

1.   டாக்டர் அ. வீரமணி, சிங்கப்பூர் வளர்ச்சியில் தமிழ்மொழி, Tamil Language, AMIDST, Singapore’s Development, சிங்கப்பூர், 1996.

2.   டாக்டர் சுப. திண்ணப்பன்,  டாக்டர் ஏ. ஆர்ஏ, சிவகுமாரன், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு ஒரு கண்ணோட்டம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர், 2002.

3.   ஞானி கட்டுரைகள், காவ்யா பதிப்பகம், சென்னை, 2007.

4.   கமலாதேவி அரவிந்தன், சூரிய கிரஹணத் தெரு, பழநியப்பா பிரதர்ஸ், சென்னை, 2012.

5.   நுர்ஜஹான் சுலைமான், தையல் மிஷின், தங்கமீன் பதிப்பகம், சிங்கப்பூர், 2014.

6.   செ.பா.பன்னீர்செல்வம், மாயா, தங்கமீன் பதிப்பகம், சிங்கப்பூர், 2013.

7.   சூர்ய ரத்னா, நான், தங்கமீன் பதிப்பகம், சிங்கப்பூர், 2013.

8.   ஷாநவாஸ், மூன்றாவது கை, தமிழ்வனம் பதிப்பகம், சென்னை, 2013.

9.   ஜெயந்தி சங்கர், முகப்புத்தகமும் சில அகப்பக்கங்களும், அம்ருதா பதிப்பகம், சென்னை, 2013.

1. எம்.சேகர், அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத்தாடித் தாத்தாவும், தங்கமீன் பதிப்பகம், சிங்கப்பூர், 2013.

1. பாலுமணிமாறன், நதிக்கரை நாகரீகம், தங்கமீன் பதிப்பகம், சிங்கப்பூர், 2013.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக