வியாழன், 14 ஆகஸ்ட், 2014

கவிதைகள்

குடை கிழிந்துகொண்டிருக்கிறது

தேவதாசிகள் கூடும்      
அந்தத் தெருவில்
உன் நினைவுகளைச்
சுமந்துகொண்டு
நடந்து கொண்டிருக்கிறேன்

உன் வார்த்தைகளை
என் மனதுக்குக் குடையாக்கி
நடந்து கொண்டிருக்கிறேன்
தேவதாசி ஒருத்தியின்
கொஞ்சலிலும் கெஞ்சலிலும்
பெரும்காற்று வீசுகிறது

நான்
உனக்கு உண்மையாக இருக்கவே
விருப்பப்படுகிறேன்
ராமனும் கிருஷ்ணனும்
என்னைப்பார்த்து சிரிக்கின்றனர்

என் இதயத்தில்
உன் முகம்
அமிழ்ந்த தடம்
வெற்றிடமாய்
காற்றில் மிதக்கிறது

குடை கிழிந்துகொண்டிருக்கிறது.



தொலைந்து போனவர்கள்

சமூகப் பூச்சுகளின்
சாயம் வெளுக்கும் பொழுது
சுயசிந்தனைகளை விழுங்கிய
சமூக விழுமியங்களின் கடப்பாடுகள்
சத்தம் போட்டு ஒப்பாரி வைக்கின்றன

மனத்துக்குள் தினிக்கப்பட்ட
மதம் என்ற வேர்
மனிதத்தை ஒடுக்கிவிட்டு
மனிதவிருட்சத்தின் கிளைகளுக்கும் இலைகளுக்கும்
கோட்பாடுகளையும் தத்துங்களையும் மட்டும்
ஓதிக்கொண்டிருக்கிறது சாத்தான்களின் வேதங்களாக

ஜகத்தின் முகம் கிழித்தெறியப்பட்டு
வந்த இந்த வன்முறையின் சுவாசம்
வன்மங்களின் கூடாரமாய்க் கூப்பாடுப் போட்டு
நிலவைத் தன் பக்கமாய்ச் சாட்சிக்கு
நிறுத்தி அஹிம்சையைப் பேசுகிறது


முகுந்தன் முகமட்டாக வாழ்வதும்
முனியாண்டி ஏண்டியாக வாழ்வதும்
சோமு சேம் ஆக வாழ்வதும்
எல்லாம் அவரவர் விருப்பம்
எல்லாம் சரிதான் என் தோழனே
மனிதனாய் இப்புவியில்
நாம் ஜனிப்பது எப்போது...........





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக