திங்கள், 13 பிப்ரவரி, 2012





வாய்விட்டு அழவும்
இங்கு
வசதிகள் தேவையாய் இருக்கின்றன

நெஞ்சத்தைக் கிள்ளும்
எனது கவிதை வரிகளில்
கொஞ்சம்
அழுதுவிட்டுப்போங்கள்
இல்லை
வாடகைக்காவது
சோகங்களைக் கொடுத்துவிட்டுப்போங்கள்

இங்கு மனங்கள் அழவேண்டும்

ஒரு கவிதை
மரணத்துடன் போராடித் தோற்றுக்கொண்டிருக்கிறது









உன்னை உடைத்துவிடும்
எண்ணம் எனக்கில்லை

ஒடிந்து விழும்
தனிக்கிளையின்
பூமிபந்து சுவாசமாய்
நான்


ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

காதல் இன்னும் முழுப்பெறவில்லை......



உன் வார்த்தை
மின்னலாய்
உயிரைத் தொட்டது
சில்லென்று

முச்சந்திகள் இல்லை
இருட்டான இடம் இல்லை
கடற்கரை இல்லை
சினிமா இல்லை

காதல் முழுப்பெறவில்லை

உன் அன்பு
மழையின் நனையல்களில்
முத்து முத்தாய் கவித்துளிகள்
சிதறி விழுகின்றன
சின்னச் சின்னதாய்
ஈரமனத்தில்

இயற்கை
கடலலைகளைச் சபித்தாலும்
உன் அன்பு
கடலலைகளைக் காக்கும்

நீ மகாராணி
உன் மகுடத்தின் வெண்முத்தாய் நான்

நீ நிலா
அந்த நிலவின் ஒளிக்கீற்றாய் நான்

நீ நீலவானம்
உன் இதயத்தில் தவழும் வெண்மேகமாய் நான்

மிகப்பெரிய மாமலை நீ
கீழே விரியும்
பச்சைநிற பள்ளத்தாக்காய்
படற்கிறேன் உனது காலடியில் நான்

நான் தூய்மையான நதியாகி
மகாசமுத்திரமான உன்னிடம்
இளைப்பாற ஓடோடி வருகிறேன்

நான் கீழே விழும்பொழுதெல்லாம்
என் இதயத்தை
உன் கைகளால் தாங்கிக்கொள்கிறாய்

இரவு முழுவதும் உன் கனவு
பொழுது புலர்ந்தும் உன் நினைவு

காதல் இன்னும் முழுப்பெறவில்லை.


என் காதலை
உன் பாதத்தில் வைத்து
இதயத்தில் கோயில் கட்டினேன்
உனக்காக

அங்கேயும் காவலுக்கு
உன் அப்பா

புதன், 1 பிப்ரவரி, 2012

காதல் வலிகள்




என் அறையில் நான் மட்டும் தனியே
பாடல் கேட்டேன்
நீயும் நானும் ரசித்து ரசித்து கேட்ட
அந்தப் பாடல்
நினைவுகளை அறைகிறது
நம் முதல் சந்திப்பு
அதிர்ந்து கீழே விழுகிறது

நானும் நீயும் சேர்ந்து எடுத்துக்கொண்ட
அந்த முதல் படம்
கலர் மங்கிப்போய்
என் முன்னால்......
விழிச் சாரல்களில் நனைகிறது

எத்தனை சந்தோஷம் அன்று

உன்னோடு பேசியது பாடியது நடனமாடியது
உன்னோடு சண்டை போட்டது
என் விரல்களைப் பிடித்து
உன் இதயத்தோடு வைத்துக்கொண்டது
குடையிருந்தும்
என்னோடு மழையில் நனைந்தே நடந்தது

எல்லாம் தொலைந்துபோனது

பழகிய ஐந்து ஆண்டுகள் நேற்றைப்போல்
பழசாகிப் போனது
ஆம் போனது போனதுதான்
நம் காதலைப்போல்

போனது காதல்தான்
இதயம் அல்ல

உன் சொல்
உன் வார்த்தை
மறக்கக்கூடியவையா அவை

விழிகளில் ஒரு கவிதை
காத்திருக்கிறது
உன் வாசிப்பிற்காக...

இதழ்களில் ஒரு ஈரம்
தவிக்குது
உன் தொடுதல்களுக்காக....

காதலில் ஒரு பார்வை
ஏங்குது
உன் புன்னகைக்காக...

முழுமையாக நம்பினேன்
காதல் வலித்ததுதான் மிச்சம்.











உன் புன்னகை
உனக்காக
நிறையவே பேசுகிறது
என்னிடம்


வியாழன், 12 ஜனவரி, 2012

காதல் கைகட்டி நிற்கிறது












உன் பார்வை
எனக்குப் பிடித்திருக்கிறது
உன் விழிகள் 
அழகானவை ஆழமானவை

உன் முத்தம்
எனக்குப் பிடித்திருக்கிறது
உன் உதடுகள்
இதமானவை மென்மையானவை

உன் தொடுதல்
எனக்குப் பிடித்திருக்கிறது
உன் விரல்கள்
அன்பானவை சுகமானவை

என் கழுத்தோர வளைவில்
உன் இதயத்துடிப்பு
என் கன்னமேடுகளில்
உன் உதடுகளின் உஷ்ணம்
என் பாலைவன உடலில்
உன் விரலின் தொடுதல்கள்

ஈரமாகிக் கசியும்
அன்பு மழையின் 
குளிர்கால நடுக்கங்களில்
காதல் கைகட்டி நிற்கிறது
சந்தோஷக் குடையுடன்
உனக்காகவும் எனக்காகவும்.