ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அன்புடன் ஆசைத்தம்பி - கீழை அ. கதிர்வேல் (தமிழ் முரசு 29-04-2018) – ஒரு விமர்சனப் பார்வை – எம்.சேகர்





அன்புடன் ஆசைத்தம்பி - கீழை அ. கதிர்வேல் (தமிழ் முரசு 29-04-2018)

– ஒரு விமர்சனப் பார்வை – எம்.சேகர்


முன்னுரை:


மனிதன் தனிமனிதனாக வாழ்வதில்லை. ஒரு குடும்பமாக ஒரு சமூகமாக ஒரு நாடாக வாழ்கிறான். இந்தப் பரந்த உலகில் அவன் விழிகளில் படும் அனைத்தும் இங்குப் புனைகதைகளாகப் பதியப்படுவதில்லை. இந்தச் சமூகம், நாடு என்ற கட்டமைப்புக்களில் அவ்வப்போது விதி மீறல்கள் நடைபெறும்போது அவன் எழுதுகோல் சமூக விழுமியங்களை நினைவுபடுத்தப் போராடுகிறது. அவ்வகையில் சிறுகதைகள் சமூகத்தை அடிப்படையாய்க் கொண்டு எழுதப்படுபவைகளாகும். சமூகத்தில் காணும் குறைபாடுகளையும் சிக்கல்களையும் சிறுகதைகள் வெளிப்படுத்த முனைந்து அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கின்றன. அவை மக்களுக்குச் சமூகமும் நாடும் சார்ந்த அறிவினைக் கொடுத்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திச் சமூகச் சிந்தனைகளுக்கு வித்திடுகின்றன.

சிக்கல்கள்:


சமூகம் என்பது ஒரு சீரான தன்மையைக் கொண்டதல்ல. அடிப்படையிலேயே சமூகம் அதன் அமைப்பிலே பல முரண்களைக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே இங்குச் சிக்கல்கள் தோன்றுகின்றன. ஒரு சமூகத்தில் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளத் தகாதவைகள் ஒரு நீண்ட காலமாகத் தன் இருப்பை வெளிப்படுத்தி மக்களுக்கு இன்னல்களை விளைவிப்பது சிக்கல் எனக் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, வறுமையைக் குறிப்பிடலாம். வறுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகத்தில் இருக்கும்போது  அதனால் வரக்கூடிய குற்றங்களின் வாயிலாக வறுமையானது ஒரு சிக்கலாக இங்குக் காணப்படுகிறது. இந்த வறுமை என்பது தனி மனிதச் சிக்கலாகவும் சமூகத்தில் வறுமைத் தொடர்பான குற்றங்கள் அதிகரிக்கும்போது அது சமூகச் சிக்கலாகவும் மாறிவிடுகிறது.


மேலும், சமூகச் சிக்கல்கள் குறித்து,


ஒரு சமுதாயத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களால் விரும்பத்தகாதவையாகவும் வெறுத்தொதுக்கப்பட வேண்டியனவாகவும் கருதப்படும் நடத்தை முறைமைகள் அல்லது சூழல்கள் சமூகச் சிக்கல்களாகக் கருதப்படும். இச்சிக்கல்களைப் போக்குவதற்குப் புனரமைப்புத் திட்டங்கள், சீர்திருத்தக் கோட்பாடுகள், செயல்முறை தேவை என அனைவரும் எதிர்பார்ப்பர்


என்று வாழ்வியல் களஞ்சியத்தில் குறிப்பிடப்படுகிறது.


சிக்கல்கள் நாட்டுக்கு நாடு, சமூகத்துக்குச் சமூகம் மாறுபட்டுக் கிடந்தாலும் பல சிக்கல்கள் உலகத்துக்கே பொதுவானதாகவும் இருக்கின்றன. சிக்கல்களைச் சமூகவியலாளர்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்திக் கூறுவர்.


1.     குடும்பச் சிக்கல்கள்
2.     திருமணச் சிக்கல்கள்
3.     சமயச் சிக்கல்கள்
4.     பொருளாதாரச் சிக்கல்கள்
5.     அரசியல் சிக்கல்கள்
6.     கல்விச் சிக்கல்கள்
7.     சாதிச் சிக்கல்கள்
8.     இனச் சிக்கல்கள்


சமூகச் சிக்கல்கள் பிறவற்றுடன் கொண்ட தொடர்பைப்பற்றி,


சமூகக் கட்டுப்பாடு, சமூகச் சிக்கல்கள், சமூக நிலையமைப்புச் சிதைவு, சமூக மாற்றம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவையாகவும் ஒன்றையொன்று சார்ந்தும் இருக்கின்றன
என்று சமூகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


இதன் அடிப்படையில் குடும்பம் சார்ந்த சிக்கல் ஒன்றை இக்கதையின்மூலம் முன்னெடுத்துள்ளார் கதாசிரியர் கீழை. அ. கதிர்வேல் அவர்கள். வெளிநாடுகளில் தங்களின் குடும்பங்களுக்காக அயராது உழைக்கும் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் பிறருக்காகவே உழைத்து உழைத்துத் தம் இளமைக்காலத்தை தொலைத்துவிட்டு நிற்கும் ஒரு சமூகச் சிக்கலை இக்கதையின்மூலம் பதிவுசெய்ய முனைந்துள்ளார். இதுபோன்ற சிக்கல்களை அதிகப் பொறுப்புணர்வுடன் களைவதற்குச் சமூகம் தாயாராகாவிட்டால் இதனால் விளையப்போகும் தாக்கங்கள் சமூகத்தில் விபரீதமான ஒரு சூழலை உருவாக்கிவிடும் வாய்ப்புகளும் இருக்கின்றன. இனி, கதைக்கு வருவோம். 


பதினெட்டு ஆண்டுகள் தன் குடும்பத்தைப் பிரிந்து சிங்கையில் பிழைப்பு நடத்தும் ஆசைத்தம்பி தன் அப்பாவுக்கு எழுதும் மடல்கள் மூலம் கதை நம்மோடு உறவாடுகிறது. குடும்ப உறவுகளில் மிகுந்த பற்றுள்ளவர்களைக் குடும்பத்தைச் சார்ந்த உறவுகள் அவ்வளவாகக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதையும் அவரவர் சார்ந்த வாழக்கைக்கே முக்கியம் கொடுப்பதையும் கதை எடுத்துரைக்கிறது.


கதைத் தொடக்கம்:


1994 இன் கடிதம் மூலம் கதைத் தொடங்குகிறது.  ஆசைத்தம்பி தன் அப்பாவுக்குச் சிங்கப்பூருக்குத் தொழில் நிமித்தமாக வந்த பிறகு எழுதும் கடிதம் அது.

கருப்பொருள்:


தமிழகத்திலிருந்து இங்கு வேலைக்கு வருபவர்களின் குடும்பத்தினர்களில் ஒரு சிலர் இவர்களைக் கறவை மாடுகளாகவும் பொதி சுமக்கும் கழுதைகளாகவும் பயன்படுத்திக் கொள்வதைக் கதைக் கரு சுட்டிக் காட்டுகிறது.

கதையின் போக்கு:


கதைச்சொல்லியின் கூற்றாக, தெளிந்த நீரோடையாகக் கதையின் போக்கு அமைந்திருக்கிறது.

கதைப்பின்னல்:


வறுமையின் காரணமாக தமிழகத்திலிருந்து இங்கு வேலைக்கு வந்தவர்களின் நிலையும் அவர்களின் குடும்பத்தார் இவர்களை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதாகக் கதைப் பின்னல் தொடர்கிறது.

பாத்திரப்படைப்பு:


ஆசைத்தம்பி எழுதும் கடிதங்கள் மட்டும் நம்மோடு பேசுவதால் ஆசைத்தம்பியின் பாத்திரப் படைப்பு மிகக் கச்சிதமாகப் படைக்கப்பட்டுள்ளதை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. மற்ற கதாபாத்திரங்கள் ஆசைத்தம்பியின் மூலமாக ஓரிரு வரிகளில் சொல்லப்படுவதால் அக்கதாபாத்திரங்களின் நியாயத் தன்மைகளை அறியமுடிவதில்லை.

கதையின் முரண்:


குடும்பத்திற்காக அனைத்தையும் செய்யும் பண்புடைய ஆசைத்தம்பி இறுதியில் அப்பாவின் விருப்பத்திற்கு எதிராக   முடிவு எடுத்திருக்கும் விதம் முடிவில் முரணாக வருகிறது.

கதை உத்தி:


கடித உத்திமூலம் கதை முழுவதுமாக ஆசைத்தம்பியின் கடிதங்கள். கதைச்சொல்லி இவ்வுத்தியை மிக இயல்பாக தன் கருவை முன்வைக்க பயன்படுத்தியிருக்கிறார்.

சமூகப் பார்வை:


தமிழ்நாட்டு ஊழியர்களுக்கு இருக்கும் சிக்கல்களையும் அவர்கள் எதிர்நோக்கும் குடும்பம் சார்ந்த பிரச்சினைகளால் அவர்களின் சுயவாழ்வு பலவேளைகளில் பாழாகிப் போவதையும் கதை அவர்கள் சார்ந்த சமூகப் பார்வையாக முன்வைக்கிறது.


குடும்பங்களில் சுயநலவாதம் கொண்டவர்கள் சந்தர்ப்பங்களை அவர்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு பொதுநலவாதியைப் போல இயங்கிக் கொண்டிருப்பதைக் கதை மறைமுகமாகச் சுட்டுகிறது. உறவுகள் சில வேளைகளில் நிஜமான அன்புணர்வோடு குடும்பத்துக்காக உழைப்பவர்களை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை என்பதும் அவர்களின் ஆசாபாசங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதையும் கதை பதிவு செய்கிறது.


மொழி நடை:
எடுத்துக்கொண்ட மையத்திற்கு ஏற்ற கதையின் மொழிநடை மகன் அப்பாவிற்கு எழுதும் கடிதம் என இயல்பாக அமைந்திருக்கிறது.


கதைத் தலைப்பு:


கதைக்கு ஏற்ற தலைப்பு. அன்புடன் ஆசைத்தம்பி. சிறப்பு.


நிறைவாக, நல்தொரு கதையை கொடுத்திருக்கிறார் கீழை. அ. கதிரவேல். சிங்கையில் வாழும் தமிழ்நாட்டு ஊழியர்களின் வலியை இக்கதையின்மூலம் உணர்த்த முயற்சித்திருக்கிறார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். மகன் தந்தை கடித உத்தி கதைக்குள் இன்னும் ஆழமாக உள்செல்ல இயலாமல் தடுப்புச் சுவராக இருப்பதுபோல ஓர் உணர்வு எம்பிப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை.


மேலும், பல படைப்புகளைப் படைக்க அன்பு வாழ்த்துகள் நண்பரே.


அன்புடன்
எம்.சேகர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக