சிங்கப்பூர்க் கதம்பம் குழுமம்
சிங்கப்பூர்க் கதம்பம் – சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு
தலைப்பு: திறனாய்வு / விமர்சனம் – ஒரு பார்வை
தேதி: 24 – 09 – 2017
விமர்சனம்
இலக்கியத் திறனாய்வு அல்லது விமர்சனம் என்பது ஓர் அறிவார்ந்த அறிதல் முறை. வாழ்க்கை
அனுபவத்தை இலக்கியம் எவ்வாறெல்லாம் வெளிப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும்
முறை. படைப்பாளியின் கருத்துநிலைக்கும் இலக்கியப் படைப்புக்கும் இடையே உள்ள உறவைப்
புரிந்துகொள்ளச் செய்து,
இலக்கியத்தின் சிக்கல் தன்மைக்கும் வாழ்க்கையின் சிக்கல் தன்மைக்கும் அடிப்படைக்
காரணிகளையும் அதற்கான தொடர்புகளையும் அலசி ஆராய்வதாகவும் அமையும். மேலும், திறனாய்வு இலக்கியத்தின் சமூக அடித்தளத்தையும் அதன் சமூக வேர்களையும்
புரிந்துகொள்ளவும் இலக்கிய வரலாற்றை அற்புத நிகழ்வுகளாக அன்றி சமூக
அசைவியக்கத்தின் வெளிச்சத்தில் காண நமக்கு உதவுகிறது எனக் குறிப்பிடுகிறார்
எம்.ஏ.நுஃமான்.
வாசிப்பவனுக்கு வாசிப்பனுபவத்தையும் வாழ்வனுபவத்தையும்
இணைத்துப் பல்வேறு நிலைகளில் பயணிக்கும் இயல்பைத் தூண்டக்கூடியதாக ஒரு படைப்பு
இருக்கவேண்டும். அந்த வகையில் நாம் வாசித்த ஒரு படைப்பு நமக்கு அந்த வாழும்
அனுபவத்தைக் கொடுத்துள்ளதா எனவும் அந்த வாழும் அனுபவம் எத்தகைய விரிதல்களை
நமக்குள்ளே நிகழ்த்துகின்றன போன்றவற்றை உள்வாங்கிக்கொண்டு அந்தப் பனுவலின்மீது நம்
பார்வையை நம் சுயம் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் விருப்பு வெறுப்பில்லாமல் முன் வைக்கவேண்டும்.
விமர்சனம் என்பது ஓர் அழகியல் கலை. ஆனால் அதைக் குறை
கூறுவதற்காக மட்டுமே உள்ளது என சிலர் நினைத்துக்கொண்டு ஒரு படைப்பில் எந்த
அளவிற்குக் குறை கூற முடியுமோ அந்த அளவிற்குப் பட்டியலிட்டுப் படைப்பாளர்களைக்
காயப்படுத்தி வேடிக்கைப் பார்ப்போரும் இருக்கின்றனர்.
இரண்டு வகை விமர்சனம்:
1.
படைப்பின்
பலம் பலவீனம் ஆகியவற்றை ஆராய்ந்து படைப்பாளர்களைத் திருப்திப்படுத்தும் வகையில்
பொதுமை நிலையில் தங்களின் மதிப்பீட்டை முன்வைப்பது. இது ஆரோக்கியமான ஒரு
விமர்சனமாகும்.
2.
ஒரு
கோட்பாட்டைச் சித்தாந்தத்தை வைத்துக்கொண்டு, அந்தப் படைப்பு எந்த அளவிற்கு அதனோடு பொருந்துகிறது என நுணுகி
ஆய்வதாகும். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் அக்கதைகள் இல்லையென்றால்
அறிவுரை கூறும் வகையில் தம் விமர்சனத்தை முன்வைப்பர். ஒரு சிலர் ஒரு படி மேலே
சென்று, இப்படி எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
என தங்கள் சுய புரிதல்களையும் படைப்பின்மேல் திணிக்க முன்படுவர்.
ஒரு படைப்பு என்பது அந்தப் படைப்பாளியின் ஆக்கமாகும். அதற்கான
முழு உரிமைமையும் அவனைச் சார்ந்ததாகும். அதை இப்படித்தான் எழுதவேண்டும் என இங்கு
யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. கட்டாயப்படுத்தவேண்டிய அவசியமும் இல்லை.
சிங்கையில் விமர்சனம் என்பது படைப்பாளிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைவதே
சிறப்பாகும். அப்படிக் கொடுக்கப்படும் ஊக்கமும் ஆதரவும் அவர்களைத் தாங்களாகவே
தங்களின் படைப்புகளின்மேல் சுயமதிப்பீடு செய்துகொள்ள வாய்ப்பு வழங்குவதாகவும் அவர்களே
தங்களை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு வழங்குவதாகவும் இருக்கும்.
ஓர் எழுத்தாள நண்பர் இப்படிக் கூறுகிறார்.
‘என்னை வளர்க்கும் விமர்சனங்களை நான்
மதிக்கிறேன். செடிகளைக் காயப்படுத்திப் பூக்களைப் பறிப்பதை நான் விரும்புவதில்லை’
திறனாய்வும் தமிழினமும் – ஒரு வரலாற்றுப் பார்வை
திறனாய்வு அல்லது விமர்சன மனப்பான்மை இல்லாமல்
தொகுப்புக்கள் வர வாய்ப்பில்லை. அன்று பாடப்பட்ட சங்கப் பாடல்கள் நிறைய
இருந்திருக்கவேண்டும். அவற்றில் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டவைகள் ஒரு
முறையோடும் வரையறையோடும் தொகுக்கப்பட்டுள்ளதை அறியலாம். நல்லவை, சிறந்தவை, தேவையானவை
என்று நினைத்துச் செயல்பட்டிருக்கும் அந்தப் பணியில், அன்றைய
காலத்தின் ஒரு மனநிலையை நாம் பார்க்க முடிகிறது. மேலும்,
தொகுப்பின் முறையில் இலக்கியக் கொள்கையும் திறனாய்வு மனப்பான்மையும்
வெளிப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.
பொதுவான ரசனை, பாடுபொருள், இலக்கியக் கொள்கை – தொல்காப்பியத்தின்
தாக்கம் ஒரு வகையில் விதிமுறைத் திறனாய்வாகத் தொகுப்புகளில் இருக்கும் நிலை, பாகுபடுத்துவது, வரிசைப்படுத்துவது, ஆவணப்படுத்துவது போன்றவற்றைக் காணமுடிகிறது.
தமிழில் உரைகள் எழுதும் வழக்கம் ஏழாம் எட்டாம்
நூற்றாண்டுகளுக்குப் பிறகு தோன்றியதாகக் கூறப்படுகிறது. இறையனார், இளம்பூரணர்,
பேராசிரியர் போன்றோர் உரையாசிரியர்களாக இருந்திருக்கிறார்கள்.
தொல்காப்பியத்திற்கும் திருக்குறளுக்கும் அதிகமான உரைகள் எழுதப்பட்டிருக்கின்றன
என்ற தகவலும் உண்டு.
இன்றைய திறனாய்வு அல்லது விமர்சனம் செய்கின்ற பணியை அன்றைய
தமிழில் அன்றைய தேவையையொட்டி உரை எழுதுதல் எனும் வழக்கு இருந்திருக்கிறது என்பதை
அறிய முடிகிறது.
மேலும்,
பேராசிரியர் (15 ஆம் நூற்றாண்டு) தொல்காப்பியத்தை மையமாக வைத்து எழுதிய உரையும்
விளக்கமும் அமெரிக்க-நவீனத் திறனாய்வாளர்கள் கூறும் நெருங்கி வாசித்தல் (Close
Reading) எனும் திறனாய்வு முறையோடு நெருக்கமுள்ளது என்றும்
கூறப்படுகிறது.
விமர்சனத்தின் நோக்கம்?
கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் விமர்சனம் என்ற
சொல்லுக்கு ஒருவரின் அல்லது ஒன்றின் நல்ல அம்சங்களையும் குறைகளையும் ஆராய்ந்து
வழங்கும் ஒரு மதிப்பீடு என்று கூறப்பட்டுள்ளது.
விமர்சனம் என்பது இலக்கியத்தைத் தளமாகக் கொண்ட ஓர் அறிவுத்
தேடல் என்பதை நாம் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். ஒரு படைப்பில் அறியப்படாத
அல்லது புரிந்துகொள்ள வேண்டிய இடங்கள் இருக்கின்றன. அந்த வெற்றிடங்களை விமர்சனம்
நிறைவு செய்கிறது. வாசக இடைவெளிகளை அடையாளம் கண்டு அவற்றோடு மையத்தைத்
தொடர்புப்படுத்திப் பார்க்கக்கூடியது.
படைப்பாளனுக்கு உற்சாகம் தருவதும் சில வேளைகளில் போதனை
தருவதும் பல வேளைகளில் அது ஒரு தோழனாகவும் இயங்குகிறது.
வாசகனுக்கு அது ஒரு நல்ல துணையாகவும் விசாலமான ஓர் உலகத்தை
அவனின் புரிதலையும் தாண்டி வேறுபடுத்திக் காட்டுவதாகவும் அமைகிறது.
யாரெல்லாம் விமர்சனம் செய்யலாம்?
ஒரு தாய் தன் குழந்தைக்குத் தலைவாரி விட்டுப் பின்
அக்குழந்தையிடம் கண்ணாடியில் போய் நல்லாயிருக்கா என்று பார்த்துவிட்டு வா என்று சொல்கிறாள்.
உடனே அக்குழந்தையும் கண்ணாடியில் பார்த்துவிட்டு, நல்லாயிருக்கு அல்லது நல்லாயில்லை என்றுச் சொல்லும்போதே விமர்சனக்கலை
தொடங்கிவிடுகிறது. அதுபோல, வாசிப்பவர் தன் கருத்தை
முன்வைக்குமபோதே விமர்சனம் தொடங்கிவிடுகிறது. அதனால் இவர்தான் விமர்சனம் செய்ய
வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எல்லாம் இங்கு இல்லை.
திறனாய்வு என்ற சொல் பெரும்பாலும் கல்வியாளர் மத்தியிலும் விமர்சனம் என்ற சொல் கல்வியாளர் அல்லாத பிறரிடத்திலும்
அதிகமாக வழக்கில் இருக்கிறது.
1944 இல், ரசனை
முறைத் திறனாய்வாளரும் அழகப்பா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியருமாகிய ஆ.முத்துசிவன்
என்பவர் தமிழில் விமரிசனம் என்ற சொல்லைப் பயன்படுத்தியாகவும்
1948 இல்,
தமிழில் முதன்முதலாக ‘இலக்கிய விமரிசனம்’ என்ற நூலை தொ.மு.சி. ரகுநாதன் எழுதியதாகவும்
1951 இல், க.நா.சுப்பிரமணியம், ‘விமரிசனக் கலை’ என்ற நூலை
எழுதியுள்ளார் என்றும் கூறும் குறிப்புகள்,
1953 இல்,
பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் திறனாய்வு என்ற சொல்லைத் திறனை ஆய்தல் என்ற பொருளில்
முதன்முறையாகப் பயன்படுத்தினார் என்றும் பதிவு செய்துள்ளன.
விமர்சனப் பார்வை எப்படி இருக்க வேண்டும்?
ஆரோக்கியமானதாக படைத்தவன் மனத்தைக் காயப்படுத்தாததாக
இருக்கவேண்டும். குறைநிறைகளை நியாயமாக முன்வைக்க வேண்டும். சில
கோட்பாடுகளுக்குள்ளும் இசங்களுக்குள்ளும் தன்னைச் சிறைப்படுத்திக்கொண்டு படைப்பின்
உள் நூழைவதைத் தவிரக்க வேண்டும். திறந்த மனத்தோடு ஒவ்வொரு படைப்பையும்
அணுகவேண்டும். எந்தவித அனுமானங்களும் இல்லாமல் வாசிப்பதற்கு முன்பே படைப்பாளனின்
முந்தைய படைப்பின் தாக்கங்களோடு அடுத்த படைப்புகளை அணுகவேண்டிய அவசியம் இல்லை.
அப்படி அணுகினால் இங்கு எல்லாமே தப்பாகவே தெரியும். இன்னுமொரு விஷயத்தையும்
விமர்சகர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று. அது அ.முத்துலிங்கம்
கூறியது.
‘ஓர் எழுத்தாளனின் படைப்பை அவன் எழுதியதை
வைத்து மதிப்பிடவேண்டும். எழுதாத எழுத்தை அல்ல.’
இலக்கிய வளர்ச்சிக்கு விமர்சனம் அவசியமா?
கண்டிப்பாக விமர்சனம் வேண்டும். ஆனால் அது மிகவும் கண்டிப்பானதாக
இருக்கவேண்டிய அவசியமில்லை. நியாயமானதாக இருந்தாலே போதுமானது. நியாயமான
விமர்சனங்களே நல்ல படைப்பிலக்கியதை நோக்கி நம்மை நகர வைக்கும்.
அதன் நோக்கம் நிறைவேறியதா?
நோக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் குழுக்களுக்கும்
இனத்திற்கும் நாட்டிற்கும் வேறுபட்டே இருக்கும். அவரவர் நோக்கில் அதை எப்படி
அணுகுகிறார்கள் என்பதை வைத்தே அதனதன் நோக்கம் நிறைவேறியதா என்பதைத் தீர்மானிக்க
முடியும்.
அடிப்படையில் திறனாய்வு அல்லது விமர்சனம், இலக்கியம் எதனை மையமிட்டிருக்கிறது என்பதை
ஆராய்கிறது. வினாக்களை முன் வைக்கிறது. வினாக்களை எதிர்கொள்கிறது. அவற்றிற்கான
பதில்களையும் தருகிறது. அது இலக்கியத்தை விளக்குகிறது. மதிப்பீடு செய்கிறது.
வாசிப்புகளுக்குப் பல புதிய பரிமாணங்களைத் தருகிறது.
இது ஒரு தொடர்நிகழ்வாகும்.
எழுத்தாளர்கள் விமர்சனத்தை எப்படி அணுகவேண்டும்?
திறந்த மனத்தோடு விமர்சனத்தை அணுகவேண்டும். அப்போதுதான்
அவர்களால் தம் எண்ணத்தையும் எழுத்தையும் முன்னோக்கி நகர்த்திச் செல்ல முடியும்.
வேறுபட்ட மனநிலையில் இருந்து சிந்தித்துப் பார்க்க இயலும். முக்கியமாகக் கவனத்தில்
கொள்ளவேண்டிய ஒரு விஷயம்,
விமர்சனம்
என்பது ஒரு தனிமனிதனின் கருத்து மட்டுமே.
எதிர்மறை விமர்சனத்தை நிராகரிப்பது சரியா?
எதிர்மறை விமர்சனத்தில் இருக்கின்ற நியாயங்களை ஆராய்ந்து
அறிந்து தேவையிருப்பின் அதற்கேற்றாற்போல் நம்மை மேம்படுத்திக்கொள்வதில் தவறேதும்
இல்லை. ஆனாலும், எதிர்மறை விமர்சனத்தை
வைப்பவர் யார் என்று அடையாளம் காணுவதும் அவசியம். சிங்கையின் பல்லின கோட்பாடுகளும்
வேற்றுமையில் ஒற்றுமை காணும் அரசுக் கொள்கையையும் குறிப்பாகச் சிங்கைத்
தமிழர்களின் அடிப்படைத் தேவைகளையும் அவர்களின் வாழ்வியல் சூழலையும் அறிந்தவர்களாக
இருப்பின் விமர்சனம் நியாயமாக இருக்க வாய்ப்புண்டு. வேறொரு மனநிலையில் எங்கோ
இருந்துகொண்டு தன் தனிப்பட்ட சுய விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தும்
விமர்சனத்தால் சிங்கப்பூர்ப் படைப்பிலக்கியத்திற்கு எவ்வகையிலும் பங்களிக்க இயலாது
என்பதை நாம் அறிந்திடல் வேண்டும்.
விமர்சனப் போக்குத் தன் இலக்கை அடைந்ததா?
இது ஒரு தொடரும் போக்கு. இலக்கியமும் அதற்கான கண்ணோட்டங்களும்
காலத்திற்கேற்ப மாற்றம் காணக்கூடிய ஒன்று. இலக்கியத்தின் நோக்கம் ஒவ்வொரு காலமும்
வேறுபட்டு நிற்பதால் அதற்கான விமர்சனப் போக்கின் இலக்குகளும் காலந்தோறும் வேறுபட்டே
இருக்கும் என்பதை இங்கு மனங்கொள்ளல் அவசியம்.
நன்றி. வணக்கம்.
அன்புடன் எம்.சேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக