சனி, 6 மே, 2017




மா.இளங்கண்ணனின் பரிதியைக் கண்ட பனி சிறுகதை - ஒரு சமூகப் பார்வை



சிங்கப்பூர் புனைவிலக்கியத்தில் தனக்காக ஒரு தனிமுத்திரையைப் பதித்தவர் மா.இளங்கண்ணன் அவர்கள். அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதை, நாவல் என தன் எழுத்தாண்மையால் சிங்கப்பூர் இலக்கியப் பயணத்தைச் செம்மைப்படச்செய்தவர். தென்கிழக்காசியாவின் உயரிய இலக்கிய விருதான ஆசியான் விருதையும் பெற்று, தமிழ்ப் படைப்பாளிகளுக்குப் பெருமையைச் சேர்த்தார். இவரின் படைப்புகள் பெரும்பாலும் சிங்கப்பூரின் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையைப் புனைகதை வடிவத்தில் அதிகமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளன என்றால் அது மிகையாகாது.


இலக்கியம் என்பது நம் வாழ்க்கை. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கூர்ந்து நோக்கின், அந்த ஒவ்வொரு நொடியும் நமக்குப் பல கதைகளைப் பதிவு செய்யும். கதைக்காக நாம் எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு வாழ்க்கை. ஓர் அனுபவம். யாரோ ஒருவரின் வாழ்க்கை ஒவ்வொரு கதைக்குள்ளும் புதைந்திருக்கிறது என்பதுதான் உண்மை. படைப்பிலக்கியம் ஒரு பொழுதுபோக்காக இருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில், அந்தப் படைப்பிலக்கியத்தை ஒரு தவமாக நினைத்து செயல்படும் பல படைப்பாளிகள் நம்மிடையே வாழ்கிறார்கள். அவர்களின் ஒருவராகச் சிங்கப்பூரின் படைப்பிலக்கியத்தில் தனக்கான ஓர் இடத்தை உருவாக்கித் தனித்தன்மையோடு தன் படைப்பாக்கத்தின்வழி சிங்கப்பூருக்கே உரித்தான வாழ்க்கையை மிகவும் எளிய நடையில் பதிவு செய்வதில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார் மா.இளங்கண்ணன் அவர்கள்.



அவரின் சமூகப் பார்வையையும் இந்தச் சமூகத்தின் மீது அவருக்கு இருக்கும் அக்கறையையும் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் பதிவு செய்துள்ளது இந்த பரிதியைக் கண்ட பனி என்ற சிறுகதை. சிங்கப்பூர் வாழ்வியலின் ஒரு கூறாக இயங்கிக்கொண்டிருக்கும் தமிழ்ச் சமூக மேம்பாட்டுக்குக் கல்வி ஒன்றே விடிவெள்ளி என்ற மூலக்கருத்தோடு கதை வலுவாக நிறுவப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு சிங்கப்பூர் நடப்பியல் சூழலிலான சம்பவக்கோர்ப்புகளும் இந்த மையக்கருவோடு கைக்கோர்த்து நின்று கதைக்கு வலுச்சேர்த்துள்ளன.


இனி கதைக்கு வருவோம்.


அண்ணாமலை ஒரு துப்புரவுத் தொழிலாளி. அவரின் மகன் திருமேனியை மேல் படிப்புக்கு படிக்கவைக்க வசதியில்லாத சூழலில், அவர் பகுதி நேரமாக வேலை செய்யும் வீட்டின் உரிமையாளர் அம்பலவாணர் பண உதவி செய்து அவர் மகனைப் படிக்கவைக்கிறார். மகன் ஒரு பட்டதாரியாகி, தன் குடும்பத்திற்கு ஏன் தன் பரம்பரைக்கே ஒரு நல்ல விடிவுகாலம் வரும் என்று இருக்கையில், அடுக்குமாடி வீட்டின் மேல் தளத்திலுருந்து விழுந்த பூச்சாடி திருமேனியின் தலையில் விழுந்து, ஒரு மாதமாக கண்முழிக்காமல் மருத்துவமனையில் இருக்கிறான்.
இதுதான் கதை.


இனி இக்கதையில் வருகின்ளற சமூகப் பண்புகளைப் பார்ப்போம்.


சமூகப் பொறுப்புணர்வு


குப்பைத்தொட்டியில் போடுகின்ற குப்பைகளை முறையாகப் பிளாஸ்டிப் பைகளில் கட்டி போடப்படவேண்டும் என்ற ஒரு செய்தி கதையின் ஆரம்பத்திலேயே பதிவு செய்யப்படுகிறது. குப்பைகளை அள்ளி லாரியின் அகன்ற வாய்க்குள் கொட்டும்போது குப்பைத் தொட்டிகளிலிருந்து ஒழுகிய முடைநாற்ற நீன் அண்ணாமலையைக் குளிப்பாட்டி விடுவதாகக் கதாசிரியர் கூறுகிறார். குப்பைகளை முறையாகக் குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும் என்ற ஒரு சமூகப்பொறுப்புணர்வை எடுத்துரைக்கிறார். குப்பை அள்ளும் தொழிலாளியும் ஒரு சகமனிதன்தான் என்ற மனித நேயக் கருத்தையும் கூறுகின்றார்.


அடுக்குமாடி வீடுகளில் பூந்தொட்டிகள் வைக்கப்படுவது சிங்கப்பூர் மக்களிடையே ஒரு பழக்கமாக இருக்கிறது. அப்படி வைக்கப்படும் பூந்தொட்டிகள் பாதுகாப்பு மிக்கதாகவும் மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்காத வகையிலும் வைக்கப்பட்டிருக்கவேண்டும் என சிங்கப்பூர் அரசாங்கமும் வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் சில வீடுகளில் இருக்கும் பூச்சாடிகள் அபாயகரமான முறையில் இருப்பதை இக்கதையில் வரும் ஒரு சம்பவம் நமக்குக் காட்டுகிறது. அண்ணாமலையின் மகன் திருமேனி, அடுக்குமாடி வீட்டுக் கீழ்த்தளத்தில் நடக்கும்போது தலையில் ஒரு பூச்சாடி விழுந்து அவனை கோமா நிலைக்குக் கொண்டுசெல்கிறது. அவனை நம்பி இருக்கும் குடும்பத்திற்குத் தீராத வேதனையைத் தருகிறது.


தந்தை மகன் உறவு


அண்ணாமலையின் உடம்புக்கு நோய் ஏதேனும் வந்தால் அக்கறையோடு அவரைப் பார்த்துக்கொள்ளும் பாசமிகு மகனாகவும் அக்குடும்பத்திற்கான தனது கடமையை உணர்ந்த ஒரு மகனாகவும் திருமேனியின் கதாபாத்திரம் இக்கதையில் படைக்கப்பட்டு, சிங்கப்பூர் இளையர்களுக்கு ஒரு முன்மாதிரி கதாபாத்திரமாக விளங்குகிறது.


இன்று பல குடும்பங்களில் உறவுகள் கேள்விக்குறிகளாகி நிற்பதை நாம் கண்கூடாகக் காண முடிகிறது. தாய் தந்தை உறவு, தாய் மகன் உறவு, தாய் மகள் உறவு, தந்தை மகன் உறவு, தந்தை மகள் உறவு, உடன் பிறப்புகளுக்குள் இருக்கும் உறவு என உறவுகளின் முறைமைகளுக்குள் அன்பால் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு வலுவான உறவும் நேசிப்பும் இருப்பதோடு கல்வியின்பாலும் நம்பிக்கையிருக்கவேண்டும் என இக்கதை வலியிறுத்தி. அதனை இக்கதையின்வழியாக தந்தை மகன் உறவுமூலம் நிறுவுகிறது.


கல்வி


இக்கதை திருமேனியின் கதாபாத்திரம் மூலம் நம் இளையர்களுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையாகாது. நம் பெற்றோர்களிடமும் இளையர்களிடமும் மேலும் படித்து பட்டம் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கை இக்கதை வலியுறுத்துவதோடு கல்வியின் மூலம் ஒரு சமூகமே புதியதோர் உலகை நோக்கி நகரமுடியும் என்பதையும் மேலும் சிங்கையில் தமிழர்கள் தங்கள் பொருளாதார வாழ்வியல் செயல்பாடுகளுக்குக் கல்வியே உயிர்நாடியாகவும் திகழ்கிறது என்ற மறுக்கமுடியாத உண்மையையும் பதிவு செய்கிறது.



இக்கதையில் வரும் அம்பலவாணர் கதாபாத்திரம் கல்விக்கான அவசியத்தை வலியுறுத்திப் பேசுகிறது.


தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்


என்ற குறள்வழி, அண்ணாமலைக்கு ஒரு தந்தையின் கடமையை உணர்த்துகிறார். இந்தச் செய்தி அண்ணாமலைக்கு மட்டுமானதல்ல. நம் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்துக்கே சொல்லும் ஒரு சமூகச் செய்தியாகும். 


ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடனேயே பிள்ளைகளுக்கு ஒரு கால்கட்டுப் போடவேண்டும் எனப் பெரும்பாலான பெற்றோர் நினைப்பது சரியல்ல எனவும் பிள்ளைகளின் விருப்பு வெறுப்புகளை அறிந்து நடப்பதே விவேகமானது எனவும் கூறப்படுகிறது.


உன் மகன் திருமேனியைப் படிக்க வைத்திட்டீனா, நீ உன்னுடைய தலைமுறையையே தலையெடுக்க வைத்தவனாவே


என அம்பலவாணர் கூறும் கூற்றின்மூலம் கதாசிரியர் இச்சமூகத்தின்மேல் கொண்டுள்ள அக்கறையைக் காண முடிகிறது. 

மேலும்,


இப்போ நீ உன் மகன் கண்ணை மட்டும் திறந்து வைப்பதாக நினைக்காதே அண்ணாமலை. உன் பரம்பரைக்கே நீ கண் திறந்து வைத்து, வழி காட்டுறே. கல்விச் செல்வந்தான் அண்ணாமலை நம் வழித்தோன்றல்களுக்கு நாம் தேடி வைக்கும் பெரிய சொத்து. நாம் நம் பரம்பரைக்கே செய்யும் பெரிய முதலீடு.


இதைவிட கல்வியின் முக்கியத்துவத்தை வேறு எப்படி நாம் சொல்லிவிடமுடியும் எனச் சிந்திக்கவைக்கிறது கல்வி விழிப்புணர்வுத் தொடர்பாக இக்கதையில் வரும் பல உரையாடல்கள்.


சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கல்விக்குத் தடை ஏற்படாதவாறு அனைத்து உதவிகளும் அரசாங்கத்தாலும் சிண்டா போன்ற இயக்கங்களாலும் மிகவும் கவனமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பணமில்லை என்று இங்கு யாரும் படிப்பைத் தொடர முடியாத சூழல் இல்லை என்பதை இக்கதை அம்பலவாணர் மூலம் உணர்த்துகிறது.


அண்ணாமலையின் மகன் திருமேனியின் பட்டப்படிப்புக்கான செலவு அனைத்தையும் அம்பலவாணர் ஏற்றுக்கொள்வது சிங்கையில் கல்விப் பயில்வதற்கான வாய்ப்புகளுக்குத் தடையேதுமில்லை என்பதை உணர்த்துவதோடு பாரதியின் வரிகளையும் நினைவுபடுத்துகிறது.


அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
 ஆலயம் பதினாயிரம் நாட்டல்
 பின்னருள்ள தருமங்கள் யாவும்
 பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
 அன்னயாவினும் புண்ணியம் கோடி
 ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்



மனித நேயம்


அண்ணாமலை அம்பலவாணர் வீட்டில் பகுதி நேரமாகத் தோட்ட வேலை செய்பவராக இருந்தபோதிலும் அவர்கள் இருவருக்குமான உறவு மனித நேயத்தின் இன்னொரு காட்சிப் படிமமாக இக்கதையில் காட்டப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகச் சூழலை நோக்கி சிங்கப்பூர் ஒன்றுபட்ட சமூகமாக முன்னேறுவதற்கு இதுபோன்ற உறவுகளும் நட்புகளும் அச்சாணிகளாகும் என்பதை இக்கதையின் மூலம் உரக்கச் சொல்கிறார் கதாசிரியர். மண்ணுயிரெல்லாம் தன்னுயிர் போல போற்றும் வள்ளலாரின் மனம் நம் அனைவருக்கும் வாய்க்க வேண்டும் என்ற சிந்தனைச் சிதறல்களையும் இக்கதையின் வாயிலாக உணர்த்தியுள்ளார் மா. இளங்கண்ணன். மேலும்,  மனித நேயத்தைப் போற்றிப் பின்பற்றி வாழவும் இக்கதையின் மூலம் அறிவுறுத்துகிறார்.



முடிவு


பல்லின மக்கள், பலவிதமான மொழிகள், பற்பல சமய நம்பிக்கைகள், வழிபாடுகள், விருப்பு வெறுப்புகள் என நிரம்பிவழியும் வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் சிங்கப்பூர் சமூகத்தில் நம் சமூகத்தினருக்கான பங்கை முன்னெடுக்கும் ஓர் ஆக்கச் சக்தியாக இருக்கப்போவது கல்வி ஒன்றுதான் என்பதை இக்கதை ஆழமாகப் பதிவு செய்கிறது.



சுமூகமான முடிவின் மூலம் இக்கதையின்வழி கதாசிரியர் தமிழ்ச் சமூகத்தினருக்கு நம்பிக்கையொளி ஊட்டுகிறார். 


ஜே.எம். சாலியின் அலைகள் பேசுகின்றன நாவல் – ஒரு சமூகவியல் பார்வை – எம். சேகர்



ஜே.எம். சாலியின் அலைகள் பேசுகின்றன நாவல் – ஒரு சமூகவியல் பார்வை – எம். சேகர்


உரைநடையில் மானுட வாழ்க்கையை விரிவாகவும் சுவைபடவும் எழுதுவதற்குப் பயன்படும் இலக்கிய வகைகளில் நாவல் தனித்த இடத்தைப் பிடிக்கிறது. முந்திய காலங்களில் காப்பியங்கள் நிறைவு செய்திருந்த இலக்கிய வடிவப் பயன்களைத் தற்காலத்தில் நாவல் இலக்கியங்களே நிறைவு செய்கின்றன. கால மாறுதல்களாலும் அது எற்படுத்துகின்ற நாகரிக வளர்ச்சிகளினாலும் மக்ளிடையே ஏற்படுகின்ற மாற்றங்களைத் தெளிவாகக் கண்டறிய நாவல் இலக்கியங்கள் பெரிதும் உதவுகின்றன.


நாவல் இலக்கியத்தின் தோற்றம் பற்றிக் குறிப்பிடும் ஆய்வாளர்கள், 


மேலை நாடுகளில் பதினேழாம் நூற்றாண்டில் தோற்றம் கண்டது என்கின்றனர். இந்நாவல் இலக்கியம் திடீரெனத் தோற்றம் பெற்றது என்கிறார் வால்டர் ஆலன்.

இது மனித ஈடுபாட்டில் குறிப்பிடத்தக் மாற்றமாகும்

என்று நாவல் இலக்கியத்தில் வாளர்ச்சி பற்றி திருலாபர்ட் லிட்டிக் குறிப்பிடுகிறார்.


நாவல் விளக்கம்


உரைநடையில் அமைந்த புனைகதை அல்லது ஆண் பெண் கதாமாந்தர்களின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற உணர்ச்சி நிறைந்த நிகழ்ச்சிகளைச் சித்தரித்துக் காட்டுவது

என்று சேம்பர் அகராதி நாவலுக்கு விளக்கும் அளிக்கிறது.

எழுதப்பட்ட காலத்தில் மக்களின் உண்மையான வாழ்க்கையினையும் பழக்க வழக்கங்களையும் வெளியிடும் ஓவியமே நாவல்’,

என்கிறார் திரு.கிளாரா ரீவி அவர்கள்.


நாவலுக்கான வடிவம்


இலக்கிய வடிவங்களில் பெரிதும் சுதந்திரம் உடையது நாவல். படைப்பாளனின் எண்ணத்திற்கு ஏற்ப பரந்துபட்ட களத்தையும் சுதந்திரத்தையும் நாவல் இலக்கியம் உருவாக்கித் தருகிறது. எனவேதான் நாவல் இலக்கியம் தனக்கென்று தனித்த ஒரு வடிவத்தை உருவாக்கிக் கொள்ளவில்லை. நாவல் படைப்புக்கென்று படைப்பு விதிகளும் கிடையாது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆங்கில நாவல் இலக்கியத்தில் தந்தையெனக் கருதப்படும் திரு பீல்டிங் அவர்கள்,


தோற்றத்திற்குக் காரணமாக இருந்த தமக்கு விதிகளை விருப்பம்போல அமைத்துக்கொள்ளும் உரிமை உண்டு
எனக் குறிப்பிடுகிறார்.


நாவல்களின் முக்கியக் கூறுகளாக கதை, கதைக்கேற்ற இடம், கதையின் போக்கு, கதாபாத்திரங்களின் தேர்வு, மிகச்சிறந்த உரையாடல்கள், கருத்துக்கு ஏற்ற காலப் பின்னணி, நடை, அக்காலத்தினுடைய வாழ்க்கை முறைகள் மற்றும் உண்மைத் தன்மைகள் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.


தமிழில் புதினம்


NOVELLUS என்ற இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து உருவானது NOVEL என்ற ஆங்கிலச் சொல் என்று அறியப்படுகிறது. இதன் பொருள் புதியது என்பதாகும். எனவே ஆங்கில நாவலை அடியொற்றிப் பிறந்த இலக்கிய வகை என்பதால் இவ்வகை இலக்கியத்தைத் தமிழில் புதினம் என்று அழைக்கிறோம்.


தமிழில் வேதநாயகம் பிள்ளை அவர்களால் 1867இல் எழுதப்பட்ட பிரதாப முதலியயார் சிரித்திரம் முதல் புதினமாகக் குறிப்பிடப்படுகிறது.  பின்னர் இவரே சுகுன சுந்தரி என்ற நாவலையும் எழுதியுள்ளார். ஆனாலும் இராஜம் ஐயரின் கமலாம்பால் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் ஆகிய நாவல்களும் முதல் புதினங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து 1893ல் குருசாமி சர்மா அவர்களால் எழுதப்பட்ட பிரேமகலாவதியம், 1896 ல் பரிதிமாற் கலைஞரால் எழுதப்பட்ட மதிவாணன் என்னும் நாவலும் தமிழ் நாவல் இலக்கியத்தில் தொடக்ககால நாவல்களாகக் குறிப்பிடப்படுகின்றன.


இருபதாம் நூற்றாண்டில் தமிழில் நாவல் இலக்கியம் மிகச்சிறந்த வளர்ச்சியைக் கண்டது. நோக்கங்களின் அடிப்படையில் புதிய புதிய போக்குகள் நாவல் இலக்கியத்தை வளர்த்தன. 20ஆம் நாற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாவல் இலக்கியத்தை வளர்த்தவர்களில், கே.ஜி. வெங்கட ரமணி, ஆர். சண்முக சுந்தரம், சி. என். அண்ணாதுரை, கு. இராசவேலு, மு. கருணாநிதி, மு. வரதராசன், கல்கி, அகிலன், சாண்டில்யன், இராஜம் கிருஷ்ணன், நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன் , சுஜாதா, புஸ்பா தங்கதுரை, இந்திரா பார்த்தசாரதி,  தொ.மு.சி.ரகுநாதன். போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் எழுதிய நாவல்கள் துப்பறியும் நாவல்கள், வரலாற்று நாவல்கள், அரசியல் நாவல்கள், சமுதாயச் சிந்தனை நாவல்கள், பெண்ணிய நாவல்கள் எனப் பல வகைகளில் எழுதப்பட்டன.


சிங்கப்பூர் மலேசியாவில் நாவல் இலக்கியம்


19 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் தமிழகத்தை அடுத்துத் தமிழர்கள் இடம்பெயர்ந்து சென்ற நாடுகளில் எல்லாம் தமிழ் இலக்கியங்கள் வளம் பெறத் தொடங்கின. இதில் நாவல் இலக்கியம் நன்கு வளர்ச்சி கண்டது.  குறிப்பாகச் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் நாவல் இலக்கியம் சீரும் சிறப்புமாக வளர்ச்சி கண்டது. குறிப்பாகஇங்குள்ள தமிழர்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டபோதெல்லாம் எழுத்துக்களின் மீதான சமூகப் பார்வைகளும் மாற்றம் பெற்றன. அதற்கேற்ப இங்கு உருவாக்கம் பெற்ற நாவல்களும் புதுப்பொழிவு பெற்றன.


குறிப்பாகச் சிங்கப்பூர் எழுத்தாளர் ஜே.எம். சாலியின் அலைகள் பேசுகின்றன என்னும் நாவல் தமிழ் வாசகர்களிடடையே மிகச் சிறந்த நன்மதிப்பைப் பெற்ற நாவலாக அறியப்படுகிறது. மனித வாழ்க்கையில் பிரச்சினைகள் என்னும் அலைகள் மோதிப் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்போது அதை அமைதியாக ஏற்றுத் துன்பத்தையும் இன்பமாக மாற்றக்கூடிய வல்லவர்களாலேயே இந்த உலகம் அமைதியையும் மகிழ்ச்சியையும் பெறுகிறது என்ற வாழ்க்கைத் தத்துவத்தை மையமாகக்கொண்டே இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.


நாவலாசிரியர், ஜே. சாலி. 1964ல் மலேசியாவுக்கு வந்தவர். சிங்கப்பூரில் பத்திரிகையாளராகவும் பனியாற்றியவர். மாணவர்ப் பருவத்திலிருந்தே எழுதத் தொடங்கியவர். சிங்கப்பூரில் தமிழ வேள் விருதுபெற்ற மிகச் சிறந்த படைப்பாளர். தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, சிங்களம் ஆகிய மொழிகளில் 48 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளவர். இவருடைய படைப்புகள் சிங்கப்பூர் மட்டுமல்லாது வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களிலும் பாடங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பித்தக்கது.


அலைகளின் சுருக்கம்


எந்தவொரு படைப்புக்கும் பின்னணியும் அதுசார்ந்த நிகழ்வுகளும்தான் அடித்தளமாகவும் தூண்டுதல்களாகவும் அமைகின்றன. இப்புதினத்தின் கதாநாயகன் குமாரசாமி சிங்கப்பூர் வெறும் காடாகவும் சிறுசிறு குன்றுகளாகவும் இருந்த காலத்தில் பிழைப்புத்தேடி  இங்கு வந்தவர். தனது உணர்வுகளையும் உறவுகளையும் மறந்து உழைப்பை மட்டுமே கொண்டு உருவாக்கிய இச்சிங்கப்பூரை விட்டுச் சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தன் தாயகத்திற்குக் திரும்புகிறார். கப்பலில் முன்னோக்கிச் செல்லும்பொழுது அவரின் எண்ண அலைகள் பின்னோக்குச் சுழலில் சிங்கப்பூரைச் சுற்றிச் சுற்றி வருகின்றன.


தமிழகத்தில் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுத்தான் குமாரசாமிக்கு மதுரத்துடன் திருமணம் நடக்கிறது. ஆனாலும் முதல் இரவிலேயே அவருக்கு மதுரத்தைப் பிடிக்காமல் போய்விடுகிறது. அந்நிலையில் பக்கத்துத் தெரு நண்பர் மஜீத் ராவுத்தர் மூலம் சிங்கப்பூருக்கு வந்துவிடுகிறார். இங்கு வந்தவுடன் சந்தர்ப்பச்சூழலால் சான் என்னும் சீனப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். ராஜா, கமலா என்று இரண்டு பிள்ளைகள். பின்பு அவர்களுக்கும் திருமணமாகி மருமகள் பேரக்குழந்தைகள் எனக் குடும்பம் விரிவடைகிறது.


இந்நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே திருமணமாகி அங்கு ஒரு மனைவி இருக்கும் செய்தி சான் என்னும் சாந்தம்மாவுக்குத் தெரியவருகிறது. குமாரசாமி அன்றைய தன் மனவேதனையை சாந்தம்மாவிடம் கொட்டித் தீர்க்கிறார்.  தன் கணவனைப் புரிந்துகொண்ட சாந்தம்மா அவரைக் கட்டாயப்படுத்தி முதல் மனைவி மதுரத்துடன் சேர்ந்து வாழ தமிழகத்திற்கு அனுப்பி வைக்கிறார். முன்பு மதுரத்திடம் இரண்டே ஆண்டுகளில் திரும்பி வந்துவிடுகிறேன் என்று சொல்லித் திரும்பியவர், வாழ்க்கையின் பெரும்பகுதியை இங்குக் கழித்துவிட்டு முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்புகிறார்.


இக்கதையின் மையம் தமிழகமோ அல்லது மீண்டும் தமிழகத்திற்குத் திரும்புவதோ இல்லை. சிங்கப்பூரில் வாழ்ந்த வாழ்க்கைதான் நாவலின் மையம். இக்கதையின் முக்கிய கதாமாந்தர்கள் குமாரசாமி, முதல் மனைவி மதுரம்,  இரண்டாவது மனைவி சான் என்னும் சாந்தம்மா, பக்கத்துத் தெரு மஜீத் ராவுத்தர், லிம் என்னும் சீன இளைஞன் போன்றோர் ஆவர். இடையிடையை சில சிறு சிறு கதாபாத்திரங்கள் சீன மலாய் நண்பர்களாக வந்து போகின்றன.


நான் வெளியில் திரிகிறேன் வெளியில் வாழ்கிறேன் உலக வாழ்வை, அங்கு வாழும் மனிதர்களைக் கூர்ந்து நோக்குவதில் மகிழ்கிறேன். எதையும் நான் கற்பனை செய்து பார்ப்பதில்லை. ஒரு தலை இருக்கக் கண்டுதான் மனிதன் பத்துத் தலையைக் கற்பனை செய்தான். தலையையே மனிதன் கற்பனை செய்து பார்க்கவில்லை. 


என எழுத்தாளர் ஜெயகாந்தன் இனிப்பும் கரிப்பும் என்னும் நூலுக்கான முன்னுரையில் கூறுவது போன்று கடந்த கால கட்டத்தில் ஏற்பட்ட சம்பவங்களின் அடிப்டையில்தான் இந்த அலைகளும் பேசுகின்றன.


பல்லின மக்களின் இன ஒற்றுமை


இந்தப் புதினத்தின் முதல் வார்த்தையே,

திரிமா கசி திரிமா கசி

என்று மலாய் மொழியில்தான் தொடங்குகிறது. குமாரசாமி தமிழகத்திற்குத்  திரும்புகிறார். அவரை வழியனுப்புவதற்கு அவருடைய குடும்பத்தார் மட்டுமல்லாது சீனர் மற்றும் மலாய்க் குடும்பத்தினரும் வந்திருக்கின்றனர். வெறும் கையசைவோடு அவர்களுடைய நட்புணர்வு நின்றுவிடவில்லை என்பதை அங்கு நன்றியுணர்வோடு வெளிப்பட்ட திரிமா கசி திரிமா கசி என்ற மலாய்ச் சொல்லும்  கம்சியா’,  கம்சியா என்ற சீன வார்த்தையும் வெளிப்படுத்தி நிற்பதை உணர முடிகிறது. இது இங்குள்ளவர்களின் வாழ்க்கைப் பண்பு; சமூகவியல் பண்பு. வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மனித நேயப் பண்பை இந்நாவல் முழுவதும் பதிவு செய்வதில் நாவலாசிரியர் வெற்றிபெற்றுள்ளார் என்றே கூறவேண்டும்.


குமாரசாமியிடம் சான் என்னும் சீனப்பெண் உதவிகேட்டு வருகிறார். குமாரசாமியின் உதவியைப் பெற்ற அப்பெண்ணுக்கும் குமாரசாமிக்கும் பின்னாளில் திருமணம் நடைபெறுகிறது. சவுத்பிரிட்ஜ் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற இத்திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் குமாரசாமியின் மலாய் நண்பரான இஸ்மாயிலும் சீன நண்பரான லீயுமே ஆவர். குமாரசாமியின் வாழ்க்கையே இந்த இன ஒற்றுமைச் சூழிலில்தான் தொடங்குகிறது. இது சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் மிகச் சாதாரணம். அதுதான் அவர்களுடைய வாழ்க்கைக் கோட்பாடு. இனம், மதம், மொழி, நாடு என்ற வேறுபாடுகள் அனைத்தையும் மறந்து உள்ளார்ந்த மனிதவுணர்வோடு வாழும் வாழ்க்கையின் சமூக நெறி இந்நாவல் மூலம் வெளிப்படுவதை நன்கு உணரமுடிகிறது.


கலப்புத் திருமணம்


ஓர் இனத்தின் அல்லது ஒரு சமூகத்தின் ஒற்றுமைக்கும் மற்றும் நீடித்த ஒருமைப்பாட்டுக்கும் ஏற்கத்தக்க சமூக ஒன்றுகூடல் நிகழ்வுகளில் கலப்புத் திருமணம் மிகச்சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நாவலின் ஆசிரியர் இதனை மனப்பூர்வமாக வரவேற்கிறார். தனது கதாநாயகனின் திருமணத்தைக் கலப்புத் திருமணமாகவே அவர் நடத்திக்காட்டுகிறார்.


இந்நாவலின் கதை சிங்கப்பூரின் நேவல் பேஸ், தஞ்சோங் பகார், பாசீர் பாஞ்சாங், செம்பவாங் போன்ற இடங்களில் நிகழ்கிறது. இவ்விடங்களில் வேலை காரணமாக தமிழர்கள் அதிகமாகத் தங்கியிருந்ததும் அந்தக் குடியிருப்புக்களைச் சுற்றி சீன மற்றும் மலாய்க் கம்பங்களும் இருந்ததாலும் இவ்வின மக்களிடையே அணுக்கமான உறவு இயல்பாகவே ஏற்பட்டது. பின்னர் இவ்வுறவு கலப்புத் திருமணங்களுக்கும் வித்திட்டதை அறியமுடிகிறது.


தன்னிடம் அடைக்கலமாக வந்த சீனப்பெண் சானை லிம் என்னும் ஆடவரிடம் இருந்து காப்பாற்றுவதற்காகவே குமாரசாமி திருமணம் செய்து கொள்கிறார். ஆனாலும் முப்பது ஆண்டுகள் அவர்கள் மகிழ்ச்சியோடும் பிறர் போற்றும் வண்ணமும் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர் என்பது இங்குள்ள சமூகங்களுக்கிடையே நிலவும் சமூக நோக்குகளும் நட்பார்ந்த உணர்வுகளையும் பதிவு செய்யும் வண்ணமாகவே அமைந்திருக்கிறது.


      சாந்தா இப்ப நீ எப்படி இருக்க தெரியுமா?’

உங்களுக்குத்தான் உவமை ஒன்னு இருக்கே, மஞ்சள் ரோஜா மாதிரின்னு சொல்லுவீங்க

இல்ல சாந்தா...மழையில் குளிச்ச ரப்பர் மரம் அழகா இருக்கும். இல்லையா?’

ஓ... அதையும் கவனிச்சிருக்கிறீர்களா...?’

நீ இப்ப அந்த மாதிரிதான் பசுமையா தழைச்சிருக்கே, சாந்தா பால் சுரக்கும் ரப்பர் மரமா நீ எனக்கு கிடைச்சிருக்கிறே...

என்று ஓரிடத்தில் குமாரசாமிக்கும் சான் என்னும் சாந்தாவுக்குமான உரையாடல் நீட்டிக்கிறது. ரப்பர் மரங்கள் குமாரசாமியைப் பொறுத்தவரை வாழ்வு கொடுக்கும் வளப்பயிர். அதைத் தன் மனைவிக்கு உவமை கூறி நிகராக்குவது இடம் சார்ந்து நிற்கும் பண்பாட்டுப் பதிவு.  சங்க இலக்கியங்களில் தலைவன் தலைவியருக்கிடையிலான உரையாடங்களில் காதலும் காதலோடு சேர்ந்து மரம், செடி, கொடி மற்றும் பூக்கள் போன்றவைச்  சான்றுகளாக உவமைப்படுத்தப்பட்டிருக்கும். சானுக்கும் குமாரசாமிக்கும் இடையேயான உரையாடல்களும் இந்நாவலில் பல இடங்களில் அவ்வாறுதான் அமைந்திருக்கிறது.  


ஒரு படைப்பாளன் தனது படைப்பில் மனிதர்களை வெறுமனே நடமாடவிடமுடியாது. கதாபாத்திரங்களுக்கான புறச்சூழலை உள்ளது உள்ளவாறே கூறக் கடமைக் பட்டிருக்கவேண்டும். இங்கு, அகச்சூழலோடு புறச்சூழலை நல்லதொரு கவிதையாக அதுவும் உவமை நயத்தோடு தவழவிட்டிருக்கிறார் கதாசிரியர் என்றால் அது மிகையாகாது.


கலாச்சார மாற்றம்


இங்கு வாழ்க்கை நடத்துபவர்கள்  பெரும்பாலும் வாழ்வதற்காக வந்தவர்கள். பல்வேறு இனம், மொழி, உடை, உணவு மற்றும் பண்பாட்டுக் கலாச்சாரங்களைக் கொண்டவர்கள். ஆனால் வாழ்கின்ற இடத்தில் அதனை எல்லாம் மறந்து சிறந்தது எதுவோ தமக்குப்  பிடித்தது எதுவோ அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். தம் இனம் சார்ந்த மரபோடும் அடையாளங்களோடும் அவர்கள் வாழும் இடத்தின் பல்லின கலாச்சாரத்தையும் உள்வாங்கத் தவறவில்லை என்பதை நாவலின் பல வர்ணனைகள் சுட்டிக்காட்டுகின்றன.


சாரோங் கெபாயா அவள் மேனியில் வண்ண ஜாலத்தைக் கொட்டியிருந்தது


என்று சான் உடுத்தியிருந்த ஆடையின் அழகு கூறப்படுகிறது. சான் ஒரு இந்தியருக்கு வாழ்க்கைப்பட்ட சீனப்பெண். பின்னாளில் அவர் மிகவும் அழகாக சேலை உடுத்தக் கற்றுக்கொண்டார் என்பது வேறு. ஆனால் அவர் தற்போது உடுத்தியிருக்கும் ஆடை மலாய்க் கலாச்சாரத்திற்கு உடையது. எது எவருக்குடையது என்பதைப் பற்றியெல்லாம் இங்கு எவருக்கும் கவலையில்லை. அந்த ஆடை தமக்குச் சிறந்த அழகான ஆடை என்று சானுக்குப் பட்டுவிட்டது. சானுக்குப் பிடித்தபின் குமாரசாமி என்ன மறுக்கவா போகிறார் வாங்கிக் கொடுத்துதானே ஆகவேண்டும். இதைத்தான்  கலாச்சார ஏற்பு அல்லது கலாச்சார மாற்றம் என்கிறோம். அந்நாளில் மக்கள் தாங்கள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதையும், விரும்பிய கலாச்சாரக் கூறுகளை ஏற்றக்கொள்வதையும் இப்புதினம் நன்கு உணர்த்துகிறது.


மொழி


இனப் புழக்கத்திற்கு மொழிதான் முக்கிய கருவி. ஏனென்றால் மொழிதான் அனைத்தையும் வடிவமைக்கிறது. சிங்கப்பூரில் தமிழ், மலாய். சீன மொழிகள் பேசுகின்ற மக்கள் இருந்தாலும் இவர்களுக்கிடையே மலாய்மொழிப் புழக்கம்தான் அதிகமாக அதுவும் பொதுவானதொரு தொடர்பு மொழியாகவும் இருந்துள்ளது. குமாரசாமியும் சானுவும் அதிகமான இடங்களில் மலாய்மொழியில் உறவாடுவதைக் காணமுடிகிறது. இது நடப்பியல் சூழலை உணர்த்தும் வண்ணமாக இருக்கிறது.

தோலோங் தோலோங்

டூடோ டூடோ

திரிமா காசி
கம்சியா

போன்ற சொற்கள் அதிகமாக எளிமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பின்னாளில் சான் தமிழில் நன்கு பேசத் தெரிந்து கொள்கிறார். வெவ்வேறு மொழிசார்ந்து நிற்கும் மக்களை எல்லா மொழிகளையும் பேசவைத்து மொழிமூலம் ஒற்றுமைப்படுத்தி அன்றைய சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கையை  நம் கண்முன் கதாசிரியர் நிழலாடவிட்டிருக்கிறார்.


பண்பாடும் குடும்ப உறவும்


ஆசிரியரின் மனத்தில் குடும்ப வாழ்க்கை தொடர்பாக என்ன வருத்தம் இருந்ததோ தெரியவில்லை திருமணம் ஆனவர்களைக் கண்டவுடன்,


பெண்ணும் மாப்பிள்ளையுமா நீங்க கோயில்ல இருந்து சைனா டவுன் வழியாக வந்ததைப் பார்த்தேன். ஒரு புனிதத்தைப் பார்த்து மனம் நிறைஞ்சு போனேன்


என்று மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தருகிறார். அதுமட்டுமல்ல, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் மக்கள் மிகுந்த புரிந்துணர்வோடும் அதே நேரத்தில் அணுக்கமாகவும் இருந்ததாக அறியமுடிகிறது. தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, கணவன், மனைவி, மருமகன், மருகள், பேரப்பிள்ளைகள்  எனக் குடும்ப உறவுகள் மிகச் சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். அப்பவையும் அம்மாவையும் வெளியூருக்கு அனுப்பிவைக்கும் ஒரு குடும்பத்தில் நிகழும் உரையாடல் மிகச் சிறந்த சான்று.


‘’போனப்புறம் இரண்டுபேருமா நின்னு போட்டோ எடுத்து அனுப்பனும்’’,


என்று மகளும்,

‘’மாமா ஹனிமூனுக்கு எங்கே போறீங்க? அந்த ஜோர்ல எங்களை எல்லாம் மறந்திடமாட்டீங்களே?’’

என்று மருமகள் புனிதாவும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் கேளியும் கிண்டலுமாய் உள்ளம் ஒன்றியிருப்பது ஆச்சரியப்படக்கூடிய விசயமாகவும் மனம் நிறைந்த நிகழ்வாகவும் இருக்கிறது.


திருமண வாழ்க்கையின் இடர்கள்


அயல்நாட்டுக்கு வேலைதேடிச் செல்பவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்வதென்பது சில நேரங்களில் தவிர்க்க முடியததாக இருந்திருக்கிறது. அதே நேரத்தில், அன்றைய சமூகத்தில் சில நேரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இரண்டு திருமணங்கள் என்பதும் தவிர்க்க முடியாததாகவும் இருந்திருக்கிறது. பல ஆண்டுகளுக்குச் சிலருடைய வாழ்க்கைப் பயணம் அவ்வாறே கழிந்திருக்கிறது. குமாரசாமியின் வாழ்க்கையிலும் இதுபோன்ற நிகழ்வு காட்டப்படுகிறது.


ஆனாலும் தெரிந்தும் தெரியாமலும் அல்லது தெரியாதது போலவும் இருந்துகொண்டு இக்கட்டான சூழலில் மன வருத்தங்களையும் வாழ்க்கையின் இழப்புகளையும் பெண்கள்தான் அதிகமாகச் சுமக்கிறார்கள். குமாரசாமியின் இரண்டாவது மனைவி சாந்தம்மாவுக்குத் தன் கணவனுக்குத் திருமணம் ஆகி இன்னொரு மனைவி இருப்பது தெரியவருகிறது. நீண்ட மன வருத்தத்துக்குப்பின்,


‘’நான் பூரணமா வாழ்ந்துட்டேன். எனக்கு வெளிச்சத்தக் கொடுத்தீங்க, ஆனா, இன்னொரு பக்கத்திலே இருள் மண்டச் செய்திட்டீங்களே’’


எனக்குக் கிடைத்த அத்தனை சுகமும் இன்னொரு பெண்ணுடைய துயரத்திலே விளைஞ்சதுங்கறது இவ்வளவு காலமாத் தெரியாமப்போயிட்டேனே’’,


என்று தன் கணவனிடம் புலம்புகிறார். ஆத்மார்த்தமான வார்த்தைகள். பெண்கள் தமக்கான துயரங்களை இப்படித்தான் அழுதும் புலம்பியும் கழிக்கவேண்டியுள்ளது. தன்னையொத்த இன்னொரு பெண்ணுக்காக வருந்துபவளும் அவளாகத்தான் இருக்கிறாள். சாந்தம்மா அத்தோடு விட்டுவிடவில்லை மீதமுள்ள காலத்தை முதல் மணைவியின் சந்தோசத்திற்காக வாழுமாறு கணவனை முடிவெடுக்கத் தூண்டுகிறார். மாற்று இனத்துப் பெண் இன்னோர் இனத்துப் பெண்ணுக்காக உணர்வுப்பூர்வமாகச் சிந்தித்துப் பேசுவதென்பது சமூகவியலின் வாழ்வியல் கூறுகளை நமக்குச் சுட்டுவதாக இருக்கிறது. எந்த இனமாக இருந்தால் என்ன? பெண் என்பவள் என்றும் பெண்தானே.


அங்குச் சென்ற குமாரசாமிக்கு இதைவிடவும் ஓர் ஆச்சரியாமான விசயம் காத்திருந்தது. குமாரசாமியின் முதல் மனைவி மதுரம்,


‘’உங்க நினைப்பைக் கொண்டு இவ்வளவு காலமா நெஞ்சார வாழ்ந்துகிட்டிருந்தேன், மீதிகாலத்தையும் அதுமாதிரியே நிம்மதியா கழிச்சுட முடியும், எனக்கு எல்லாமே நீங்கதான்.’’


எனச் சொல்லி குமாரசாமியை மீண்டும் சிங்கப்பூருக்கே அனுப்பி வைக்கிறார். முடியவே முடியாது என்ற இடத்தில் பெண்களால் மட்டும் எப்படித்தான் முடிகிறதோ எனத் தெரியவில்லை.


இல்லற வாழ்வு என்பது வெறும் உடல் இயைபு சம்பந்தப்பட்டது அல்ல. அதற்கு மேலும் உயர்வானது. உறுதியானது மன இயைபு. மதுரம் என்ற பெண் குமாரசாமியோடு மன இயைபோடு வாழ்ந்தாள். வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இனி என்றும் வாழ்வாள். சமூகத்தில் பெண் என்பவளின் பிம்பத்தை உயர்த்திப் பிடிக்கும் கதாபாத்திரங்களாக சான் என்ற சாந்தமாவும் மதுரமும் படைக்கப்பட்டிருப்பது பெண்கள் மீது நாவலாசியருக்கு இருக்கும் நன்மதிப்பைக் காட்டுவதாக அமைகிறது.  


முடிவுரை

இலக்கியம் வாழ்க்கையின் பிரதிபலிப்பு. குறிப்பாக நாவல் இலக்கியங்கள் இதனை மிகச்சிறப்பாகப் பதிவு செய்கின்றன. ஜே.எம்.சாலியின், அலைகள் பேசுகின்றன புதினம், சிங்கப்பூரின் பல்லின மக்களின் வாழ்க்கையைச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டியிருப்பதுடன், நல்ல இலக்கிய நயத்துடன் மிகவும் நேர்த்தியாகச் சமூகப் பண்புகளால் பின்னப்பட்டுப் புனையப்பட்டுள்ளது என்பதற்கு இந்நாவலில் பதிவுசெய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.



துணை நூல்கள்


1.   அலைகள் பேசுகின்றன, ஜே. எம். சாலி, மூன்றாம் பதிப்பு 2005. சேது அலமி பிரசுரம், சென்னை.


2.   இலக்கியத் திறனாய்வியல், டாக்டர் தா. ஏ. ஞானமூர்த்தி. முதற்பதிப்பு 2006. ஐந்திணைப் பதிப்பகம். சென்னை.



3.   திறனாய்வுக் கலை, தி. சு. நடராசன், ஒன்பதாம் பதிப்பு 2011. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.