இரவின் கனவு
உங்களைப் போலத்தான் நானும்
ஒவ்வொரு இரவும்
கனவு கண்டுகொண்டிருக்கிறேன்
காற்றில் தவழ்ந்த
வண்ணத்துப் பூச்சியின்
சிறகு ஒன்று
எனக்கான கவிதையாய்
என் தாளின்மீது வந்தமர்ந்து
என்னைப் பார்த்து புன்னகைத்துச்சென்றது
சிதறிக் கிடந்த எழுத்துகள்
ஒவ்வொன்றும்
தன்னைத்தானே
ஒழுங்கிப்படுத்திக்கொண்டு
தனக்கான சொற்களுக்குள்
அமர்ந்துகொண்டு
கவிதை எழுதத் தொடங்கின
உள்ளுக்குள் முடங்கிக்கிடந்த
மனம்
சிறகு விரித்துப் பறக்க
கொமாக்களும் முற்றுப்புள்ளிகளும்
சிறைக் கம்பிகளாய் நீளத் துடித்து
எனக்கான எழுத்துகளைக்
கைவிலங்கிட்டுச் சென்றன
உங்களைப்போலத்தான் நானும்
ஒவ்வொரு இரவும்
கனவு கண்டுகொண்டிருக்கிறேன்
- எம்.சேகர்