திங்கள், 28 மார்ச், 2016

தாய் - எம்.சேகர்

தாய்  - எம்.சேகர்



அப்பா, இனிமேல் நா அந்த வீட்டுல இருக்கமுடியாது, என்னை இப்பவே வந்து கூட்டிக்கிட்டுப்போங்க

மகள் யாழினி கூறியதைக்கேட்டதும் அதிர்ந்துதான் போனான் சுப்பரமணியம். தான் ஓட்டிக்கொண்டிருந்த கம்பெனியின் வேனை பி.ஐ.ஈ. நெடுஞ்சாலையின் ஓரமாகச் சிக்னெலைப் போட்டு நிறுத்திவிட்டு,

இப்ப என்ன ஆச்சு?’
முடியலப்பா,
இனிமே நா அங்க போகமாட்டேன்,
பள்ளி முடிஞ்சு பஸ் ஸ்டோப்புல வேய்ட் பண்றேன்

அவனின் பதிலுக்குக்கூட காத்திராமல் போனை வைத்துவிட்டாள். என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. மணியைப் பார்த்தான். மணி 6.30. பள்ளி 2.30க்குத்தான் முடியும். இன்னும் 8 மணிநேரம் இருக்கிறது. பார்த்துக்கொள்ளலாம் என எண்ணியவாறு வேனை மீண்டும் தீவின் விரைவுச் சாலையில் செலுத்தினான். கிளமெண்டியில் இருக்கும் இரண்டு வேலையாட்களை ஏற்றிக்கொண்டுபோய் ஜூரோங் ஐலெண்டில் விட வேண்டும். வேகக்கட்டுப்பாட்டு மணி ஒலித்துக்கொண்டிருந்தாலும் வேன் என்னமோ அதையும் தாண்டி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

சுப்பிரமணியம். வயது 38. ஒரு செக்யூரிட்டிக் கம்பெனியில் சூப்பர்வைசர் வேலை. அதுமட்டுமல்ல டிரைவரும் அவன்தான். சீன முதலாளிக்கு அவனைவிட சின்ன வயசுதான். அப்பா இறந்தபிறகு மகன் முதலாளியானான். அனைத்தையுமே இவனின் பொறுப்பிலேயே விட்டுவிட்டான். வேலைக்குப் புது ஆட்களை எடுப்பது முதல் அவர்களின் சம்பளம்வரை அவனே பார்த்துக்கொள்வான். ஆட்கள் வேலைக்கு வராவிட்டால் அந்த இடத்திற்கு வேறு ஆளைக் கந்திக்குப் (மாற்று ஆள்) போடுவதும் அவனது வேலையாகவே இருந்தது. சில சமயங்களில் யாரும் இல்லையென்றால் அவனே அங்கே போய் வேலை பார்க்கவேண்டியும் வரும். இன்றும் அப்படி ஒரு நிலைமையில்தான் அவன் இருந்தான். இரண்டு பேரை ஜூரோங் ஐலேண்டில் இறக்கிவிட்டு அவன் நேராக காஸ்காடேன் கொண்டோவுக்குப் போகவேண்டிய சூழல். இந்நேரம் பார்த்து மகளின் அழைப்பு.

என்ன நடந்திருக்கும்?
இத்தனை நாட்களாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நல்லாத்தானே இருந்தாள். இப்போது என்ன வந்தது இவளுக்கு? விருப்பப்பட்டுத்தானே அம்மா பின்னால் போனாள். அவனுக்குள் கேள்விகள் துளைத்துக்கொண்டிருந்தன. குமுதாவிற்கு ஒரு போன் போட்டுக் கேட்டுவிடலாமா என்றுகூட நினைத்தான். அதற்கு அவன் மனம் ஒப்பவில்லை.

விரும்பித்தான் அவளை அவன் திருமணம் செய்துகொண்டான். அந்தத் திருமணம்கூட எளிதில் நடைபெறவில்லை. குமுதாவின் பெற்றோருக்கு ஏனோ அவனைப் பிடிக்கவில்லை. ஒரு படத்தில் தனுஷ் சொல்வதுபோல், பார்த்தவுடனேயே என்னைப் போன்றவர்களை உங்களுக்குப் பிடிக்காது; பழகப் பழகத்தான் பிடிக்கும் ரகம் இவன்.  கோலாலம்பூரிலிருந்து வந்திருந்த தூரத்து உறவுக்கார அண்ணனைக் கூட்டிக்கொண்டு குமுதாவின் வீட்டிற்கு இவன் பெற்றோர் திருமணம் பேச சென்றபோதுகூட அவர்கள் இவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. பொறுத்து பொறுத்துப் பார்த்த அண்ணன்,

பொண்ணுக்குப் பையனைப் பிடித்திருக்கு; பையனுக்கும் பொண்ணைப் பிடித்திருக்கு; இரண்டுபேருமே மேஜர். இரண்டுபேருமே அப்பா அம்மா ஆசியோட கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்படுறாங்க; முறைப்படி கேட்கிறோம். நீங்க ஒத்துக்கிட்டா எல்லார் ஆசிர்வாதத்தோடும் இந்தக் கல்யாணம் நடக்கும். இல்லன்னாகூட இந்தக் கல்யாணம் நடக்கும்; நாங்களே கல்யாணத்தை நல்லபடியா நடத்திடுவோம்.

எனப் பேசப்போய், அவர்கள் வீட்டார் எகிறிக்குதிக்க, அண்ணனும் பதிலுக்குப்பேசப் பேச, அம்மா அண்ணாவிடம் அமைதியாக இருக்கும்படி கையெடுத்துக் கும்பிடவும் அப்பா நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே விழவும் சரியாக இருந்தது. அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் அப்படியே அறுந்துபோய் அண்ணாவின் காரிலேயே அப்பாவை யூனிவர்சிட்டி மருத்துவமனையின் அவசரப்பிரிவில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். ஏற்கனவே இரண்டு முறை இதுபோலவே நெஞ்சுவலி வந்து இதே மருத்துவமனையில் அப்பா எட்மிட் ஆகியிருந்ததால் மருத்துவர்களும் துரிதமாகச் செயல்பட்டு அவரை மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சைக் கொடுக்க ஆரம்பித்தனர். இரண்டொரு நாளுக்குப் பிறகு அப்பா பெயர் வெட்டப்பட்டு வீட்டுக்கு வந்தார். குமுதாவும் அவனோடு தன் வீட்டை விட்டு வந்துவிட்டாள். அவள் வீட்டார் வந்து கூப்பிட்டும் அவள் அவர்களுடன் போக மறுத்துவிட வேறுவழியில்லாமல் அவர்கள் திருமணத்திற்குச் சம்மதித்தனர் ஒரு நிபந்தனையுடன்.

எங்களுக்கு விருப்பமில்லாத இந்தத் திருமணத்திற்கு நாங்கள் எந்தச் செலவும் செய்யமாட்டோம்

உங்க சம்மதம் ஒன்றே போதும், மற்றதை நாங்க பார்த்துக்கொள்கிறோம்

ஏதோ சொல்ல வந்த அப்பாவை ஜாடை காட்டிவிட்டு சொன்னாள் அம்மா.

ஒரு சனிக்கிழமை மாலை கல்சாவில் திருமணம் இனிதே நடந்தேறியது. காதலிக்கும்வரை எல்லாமுமாக இருந்து அவனுக்குள் மகிழ்வைக் கொடுத்தவள் கல்யாணத்திற்குப் பிறகு கொஞ்சம் மாறித்தான் போனாள். அவனின் அப்பா அம்மாவோடு தன்னால் ஒத்துப்போக முடிவதில்லை என தினமும் அவனை நச்சரிக்க ஆரம்பித்தாள். வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் கொஞ்சம்கூட ஓய்வு கிடைப்பதில்லை, சமைப்பதற்கும்; அவன் அப்பாவைப் பார்ப்பதற்கும் தான் என்ன இந்த வீட்டு வேலைக்காரியா எனக் கேட்ட ஆரம்பித்தாள்.

அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனதிலிருந்து அம்மாதான் அனைத்தையும் பார்த்துக்கொள்கிறாள். துவாஸில் இருக்கும் ஒரு கம்பெனியில் சாதாரண வேலையாளாகப் பணிபுரியும் அம்மா காலையிலையே எழுந்து சமைத்து வைத்துவிட்டு, அப்பாவுக்குத் தேவையான அனைத்தையுமே செய்துவிட்டுத்தான் வேலைக்குச் செல்வாள். காலையில் சென்றால் கூடுதல் வேலையெல்லாம் முடித்துவிட்டு அம்மா வீட்டிற்கு வருவதற்கு இரவு ஒன்பது பத்தாகிவிடும். குளிரூட்டியில் இருக்கும் உணவுகளை மைக்கரோவேவ் அவனில் வைத்து அப்பா சூடாக்கிச் சாப்பிட்டுக்கொள்வார். இவன் பெரும்பாலும்  வெளியிலேயே சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவான்.

குமுதா தனது பலதுறைத்தொழிற்நுட்பக் கல்லூரியின் பட்டயப் படிப்பை முடித்துவிட்டு ஒரு கப்பல் கட்டுமானத்துறைச் சார்ந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தவள், வீட்டுக்கு வந்து அவன் அப்பாவிற்கு உணவைச் சூடாக்கிக் கொடுப்பதைக் கூட சிரமமாக இருக்கிறது என்கிறாள். இவள் சமைப்பது என்று சொல்வதுகூட அம்மா சமைத்து வைத்துப்போன உணவுகளைச் சூடாக்குவதும் கழுவி வைப்பதும் மட்டும்தான். நாளுக்கு நாள் அவளின் நச்சரிப்புத் தாங்காமல், அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டு ஜூரோங் வெஸ்ட் பகுதியில் ஒரு வாடகை வீடு பார்த்துக் குடிபோனான். அப்பாவின் முகத்தில் கொஞ்சம் கோபமும் வருத்தமும் தெரிந்தது. அப்போதுகூட அம்மா எதுவும் சொல்லாமல்,

எங்க இருந்தாலும் நல்லா இருங்க... அது போதும் எனக்கு
என்றாள்.

தனியாக வந்ததில் குமுதாவிற்குத்தான் அதிக சந்தோஷம். இப்போதுதான் சுதந்திரமாக இருப்பதாக உணர்ந்தாள். யாழினி பிறந்த பிறகு இதுவரை அவ்வளவாகத் தொடர்பில் இல்லாத அவளின் பெற்றோர் இப்போது அதிகமாக உறவாட ஆரம்பித்துவிட்டனர். இவள் அவர்கள் வீட்டிற்குச் செல்வதும் அவர்கள் குடும்பத்தோடு இவன் வீட்டில் தங்குவதும் என புதுசு புதுசாய்க் காட்சிகள் அரங்கேறின. இவனின் அப்பா அம்மா என்றாவது வந்தால் மூஞ்சைத் தூக்கிவைத்துக்கொள்வாள். தன் அறையை விட்டு வெளியேகூட வரமாட்டாள். அவனின் பெற்றோர் தங்களின் வருத்தத்தைக் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்து போய்விடுவர்.

நான்தான் அப்பவே சொன்னேன்ல, போகவேணான்னு, நீதான் கேட்க மாட்டுற, மகனைப் பார்க்கனும், மருமகளைப் பார்க்கனும், பேத்தியைப் பார்க்கனும்னு... இப்ப பாரு, ஒரு மரியாதைக்காவது வந்து பார்க்கிறாளா... ரூம்லேயா இருக்கா...

பேசாம இருங்க, பையன் காதுல விழுந்து, அவன் மனசு கஷ்டப்படப்போவுது

அப்பா பேசுவதும் அம்மா அப்பாவை அமைதிப்படுத்துவதும் அவனின் காதில் விழாமல் இல்லை. அவனுக்குக் கோபம் கோபமாக வரும். அவளை ஓங்கி ஓர் அறை விடலாம் போலிருக்கும். அப்பா அம்மாவிற்காகப் பேசாமல் இருந்துவிடுவான். அவர்கள் போகட்டும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அமைதியாக இருப்பான்.

அவர்கள் போனவுடனேயே அவசரமா வெளியே வருவதுபோல் வந்து,

ஏன் அதுக்குள்ள போயிட்டாங்க, சாப்பிட்டுவிட்டு சாயந்திரம்போல போயிருக்கலாமே, நீங்களாவது சொல்லக்கூடாதா?’
என்பாள்.

ஏன் அவர்கள் இவ்வளவு நேரம் இங்குதானே இருந்தார்கள் அப்ப வந்து ஒரு வார்த்தைச் சொல்லியிருக்கலாமே,’

கேட்க நினைப்பான். ஆனால், கேட்கமாட்டான். ஏதாவது கேட்டாலும் சொன்னாலும் இருவருக்குமிடையே வீண் சண்டைதான் வரும் என அவன் பதில் ஏதும் பேசாமல் போய்விடுவான். இந்த தொடர் மௌனத்தின் விளைவால் அவர்களின் உறவில் ஒரு மெல்லிய கீறல் ஏற்பட்டு அதன் அகலமும் ஆழமும் நாளுக்குநாள் நீண்டுகொண்டே போனது. இருவருக்கும் இடையேயான பேச்சும் முற்றாக நின்றுபோன ஒரு பொழுதில்,

எனக்கு உங்களோடு வாழப் பிடிக்கல
ஏன்? பிடித்துதானே காதலித்தாய்? கல்யாணம் செய்துகொண்டாய்?’
அப்ப பிடித்திருந்தது, இப்ப இல்ல, அறவே பிடிக்கல
ஏன்?’
உங்க கேள்விக்கெல்லாம் என்னிடம் பதிலில்லை. ஆனால் ஒன்றில் மட்டும் தெளிவாக இருக்கிறேன். இனி உங்களோடு என்னால் வாழ முடியாது
இதுதான் உன் இறுதியான முடிவா?’
ஆமாம்
சரி, யாழினி......
அவளை என்னுடன் வைத்துக்கொள்வேன்
அவள் எனக்கும் மகள்
நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளலாம்

என யாழினையைத் தூக்கிக் கொண்டு கிளம்பிப் போனாள். சில நாட்களுக்குப் பிறகு அவளின் வழக்குரைஞரின் மூலமாக விவாகரத்து மனு ஒன்று அவனுக்கு வந்தது. அம்மா அழுதாள்.

அவள் காலில் விழுந்தாவது கூட்டிக்கொண்டு வருகிறேன். நீ இதில் கையெழுத்துப் போடாதே.’

என்றாள். அப்பா எதுவும் செல்லாமல் அனைத்தும் தெரிந்த ஞானியாய் அமைதியாக இருந்தார். அனைத்தும் அவனை விட்டுப் போனது. குமுதா, தான் வேலை செய்த கம்பெனியில் மெரின் இன்ஜினியராக இருந்த ஒரு தமிழ்நாட்டுக்காரனை மணந்துகொண்ட பிறகு மகள் யாழினையைப் பார்ப்பதும் படிப்படியாகக் குறைந்து போனது. தன் புதுக்கணவருக்கு இவன் யாழினியைப் பார்ப்பது பிடிக்கவில்லையெனக் காரணம் சொல்லி ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச உறவையும் வெட்டிவிட்டாள். அதையும் மீறி யாழினியைப் பார்ப்பதை அவன் விட்டுவிடவில்லை. 

முன்பிருந்த அடுக்குமாடி வீட்டிற்கு நேரெதிரே தங்கியிருந்த அஞ்சலையின் மூலமாக அம்மா, யாழினி படிக்கும் பாலர் பள்ளியைப் பற்றிய தகவலைச் சொன்னாள். அம்மாவுடன் அவனும் சென்றபொழுது அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் யாழினியைப் பார்க்க அனுமதிக்கவில்லை. ஆனால், அவர்களைப் பார்த்துவிட்ட யாழினி, அப்பா அப்பா என்று அழைத்த பிறகே நீண்டதொரு விவாதத்திற்குப் பிறகு, பள்ளியின் நிர்வாகம் அவன் யாழினியைப் பார்த்துப்பேச அனுமதித்தது.

அதன்பிறகு தொடக்கப்பள்ளி முதல் இன்றைய உயர்நிலைப்பள்ளிவரை தனக்கு ஓய்வு கிடைக்கும்போது பார்த்து வருவான். இதற்கிடையில் நடந்த அப்பாவின் மரணமும் அதற்கு அடுத்த ஆண்டிலேயே அம்மாவின் மரணமும் அவன் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. அப்பா அம்மா இருவரின் இறப்புக்கும் குமுதா வரவேயில்லை. அவன் பலமுறைத் தொடர்புகொண்டும் அவள் ஏனோ வரவில்லை. யாழினியையும் அனுப்பவில்லை. மருமகள் முறையில் இருந்து அவள் செய்யவேண்டியவற்றை தூரத்து உறவுக்காரப் பெண்தான் செய்தாள். பேரப்பிள்ளை கொள்ளிவைக்கக் கூட ஆளில்லாமல் அப்பா அம்மாவின் இறுதியாத்திரை அவன் மனத்தைப் பெரிதும் பாதித்தது. 

இச்சூழலில்தான் அவனின் உறவுகள் அவனை இன்னொரு திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி அவன் இன்னொரு திருமணம்  செய்துகொள்ளவேண்டிய அவசியத்தையும் அவனுக்கு அடிக்கடி சொல்ல ஆரம்பித்தனர்.

உன்னை விட்டுட்டுப் போனவ, இன்னொருத்தனை மணந்துகொண்டு மேலும் மூன்று பிள்ளைகளையும் பெத்துக்கிட்டு மகிழ்ச்சியாக இருக்கும்போது நீ ஏண்டா உன்னோடு வாழ்க்கையை இப்படி தனிமையில ஓட்டனும்?’

சொந்தக்காரங்க எப்பவும் உன்கூட இருக்கமாட்டாங்க. உனக்குனு ஒரு உறவு இருந்தாதான் நாளைக்கு உனக்கு ஒன்னுனா கூட நிப்பாங்க

இப்படி தனித்து வாழ்ந்து எதைச் சாதிக்கப்போற, இந்த வாழ்க்கை ஒரு தடவதான், வாழ்ந்துட்டுப் போறீயா

இப்படியாகப் பலதரப்பட்ட பேச்சுக்களைக் கேட்டுக்கேட்டுப் பழகிப்போனவனை ஒருநாள் அவன் மாமா பார்த்து,

நம்ம சொந்தத்துல ஒரு பொண்ணு இருக்கு, நல்ல பொண்ணு, உன்ன பத்தி சொல்லியிருக்கேன், நீ சரின்னு சொன்னா பேசி முடிச்சிடலாம்’,

என்றார்.

யோசித்துச் சொல்கிறேன் மாமா

என்றவன், மறுநாளே மறுகல்யாணத்துக்குச் சரியென்றான்.

நாளை சனிக்கிழமை. நல்ல நாள் பெண் பார்க்கப் போகலாம் என்று மாமா சொல்லியிருந்தார்.

ஆனால் யாழினியின் திடீர் தொலைபேசி அழைப்பு அவன் மனத்தை ஏதோ செய்தது. இரண்டு வேலையாட்களை ஜூரோங் ஐலண்டில் இறக்கிவிட்டு, காஸ்காடன் கோண்டாவுக்கு வந்தவன், செய்யவேண்டிய அடிப்படை வேலைகளை முடித்துவிட்டு நாற்காலியில் சாய்ந்தான். மேல் சுவற்றில் ஒரு தாய்ப்பல்லி அதன் குட்டிக்கு உணவாக ஏதோ ஒன்றைக் கொடுத்துக்கொண்டிருந்தது. அக்காட்சியைச் சிறிது நேரமாகவே உற்று நோக்கிக்கொண்டிருந்தவன் தன் தொலைபேசியை எடுத்து மாமாவை அழைத்தான்.


மாமா, நாளைக்குப் பொண்ணு பார்க்கப் போகவேண்டாம், நாளைக்கு மட்டுமல்ல இனி என்னைக்குமே


முற்றும்.

(நயனம் மார்ச் 2016)

சிறுகதை : படையல் – எம்.சேகர்

சிறுகதை :
படையல் – எம்.சேகர்





அன்பு, நீ இங்க தங்கக்கூட வேணாம், கொஞ்ச நேரம் வந்துட்டாவது போ...அது போதும்

அந்தக் குரல் அடிக்கடி என்னைத் தொந்தரவு செய்துகொண்டேயிருந்தது.  இதுநாள்வரையில் இதைப்பற்றி நான் யோசித்துப் பார்த்ததுகூட கிடையாது. அப்படி யோசிக்க நேரமும் அவசியமும் இருந்ததும் இல்லை.

காலையில் அவசர அவரமாக எழுந்து அலுவலகம் செல்லவே நேரம் சரியாக இருக்கும். தங்கியிருக்கும் அந்த வாடகை வீட்டிலிருந்து அந்த அலுவலகம் அப்படியொன்றும் அதிக தூரமில்லைதான். இருந்தாலும் இந்த நகரத்து வாழ்க்கையில் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். சிறிது தாமதித்தாலும் சற்று நின்று நிதானித்தாலும் நாம் பின் தள்ளப்பட்டுவிடுவோம்.

வீட்டிலிருந்து வெளியாகி சில அடிகள் தூரமே தள்ளியிருக்கும் பேருந்து நிலையத்தைப் பார்த்தேன். மணி இன்னும் ஏழூகூட ஆகவில்லை. இருந்தும் என் மனம் பதட்டத்துடனேயே துடிக்கப் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன். சிறிது தாமதித்தாலும் பேருந்தில் பலர் என்னை முந்திக்கொண்டு ஏறிவிடுவார்கள். இந்த வழியில் போகும் பேருந்து எப்போதுமே நிரம்பி வழியும். சில சமயங்களில் கூட்டத்தில் முட்டிமோதி பேருந்தில் ஏறவேண்டும். ஒருவர் முதுகில் ஒருவர் அப்படியே ஒட்டிக்கொண்டு பயணிக்கும், அந்தப் பொழுதுகளை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

சே, நமக்குன்னு ஒரு வாகனம் இருந்தா எப்படியிருக்கும்?’ என அடிக்கடி தோன்றும் அந்த எண்ணம் இன்றும் தோன்றியது. எடுக்கும் சம்பளம் நான்கு இலக்கத்தில் இருந்தாலும் இதுபோன்ற பெரிய பட்டணத்தில் எல்லாமே பணம்தான். அப்படி இப்படி என்று காசு புரட்டி வாகனத்தை வாங்கினாலும் பெட்ரோல், சாலை வரி, வாகனப் பராமரிப்புச் செலவு, வாகனம் நிறுத்துமிடக் கட்டணம் என இன்னும் எது எதுக்கோ அழுது தொலைக்கவேண்டும். அதையும் தாண்டி தினந்தோறும் வாகன நெரிசலில் சிக்கிச் சின்னாபின்னமாக வேண்டும்.

காலை, அலுவலகத்தில் நுழைந்துவிட்டாலே வேலை நீண்டுகொண்டே இருக்கும். மாலை ஐந்து மாணிக்குப் பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விடமுடியும். வேலை முடிந்து வீட்டுக்கு வந்து அறையின் மூலையில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் மெத்தையை விரித்து உடலைச் சாய்த்தால்தான் ஓய்வாக இருப்பதை உணரமுடியும்.

அம்மாவின் இறப்பிற்குப் பிறகு கம்பத்திற்குச் சென்றுவருவது படிப்படியாகக் குறைந்து போனது. அப்படியே போனாலும் சிறிது நேரம் அம்மாவின் நினைவில் நெகிழ்ந்து உடனே கிளம்பிவிடுவேன். அங்கு என்னுடன் பேசவும் சிரிக்கவும் எனக்கு ஆறுதல் சொல்லவும் யாருமில்லை. அம்மா இல்லாத அந்த வெற்றிடம் எனக்குத்தான் யாருமில்லையே என்ற எண்ணத்தை எனக்குள் வித்திட ஆரம்பித்திருந்தது. இந்த உணர்வுதான் அம்மாவின் இறப்பிற்குப்பின் எப்போதும் என்னை வாட்டியெடுக்கிறது.

அன்பு, உனக்காக உன் அக்காவும் உன் இரண்டு அண்ணன்களும் இருக்காங்க என்பதை மறந்துடாத, அப்பாவும் உன்னை அதிகம் நேசிக்கிறார். வந்துவிடு.

அந்தக் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

யாரு.....யாருது, ஏன் என்னை இப்படித் தொந்தரவு செய்கிறீர்கள்? போய்விடுங்கள்

எனக் கத்தினேன்.

டேய், என்னாச்சு?’

கேசுவின் குரல் என் செவிகளுக்கு மிக அருகில் அதிர்ந்தது. திடுக்கிட்டுக் கண்ணைத் திறந்தேன்.
என் வேலையிடத்து நண்பர்கள் கேசு, பழநி என்னை வித்தியாசமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒன்றுமில்லை

எல்லாம் சரிதானே என்ற கேசு,

நீ மாறாதவரை இங்கு எதுவும் மாறப்போவதில்லை
எனக் கூறிவிட்டு தத்தம் அறைக்குச் சென்றனர்.

நான் என் விழிகளுக்குள் பழையனவற்றை மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்த்தேன்.

அதைத் தொடர என்னால் முடியவில்லை. மனம் கனத்தது. அம்மாவின் நினைவைத் தாங்கி நிற்கும் வீட்டை இப்பவே பார்க்கவேண்டும் என மனம் ஏங்கியது. 

தாப்பா சிறுபட்டணத்தையொட்டிய தாப்பா ரோட்டில் அமைந்திருந்த பெக்கான் கெத்தா அதனையொட்டிய கம்பத்து வீடுகள், படித்த கீர் ஜொஹாரி தமிழ்ப்பள்ளி, தாப்பா ரோடு ரயில்வே ஸ்டேசன், பகவதி அம்மன் ஆலயம் அதைச் சுற்றியிருக்கும் ரப்பர் மரக்காடுகளின் இயற்கை மணங்கள் என என் நினைவு தத்தளித்துக்கொண்டிருந்தது. இதையும் மீறி அங்குச் சென்று ஏன் என்னையே நான் காயப்படுத்திக் கொள்ளவேண்டும்?

அங்குப் போனால் அந்த ஆளோட முகத்தைப் பார்க்கணும். அது எனக்குப்  பிடிக்கல.. தெரியும் அந்த ஆளு என் அப்பான்னு. வெறுப்பு. அதீத வெறுப்பு. முடிந்தால் அந்த ஆளை என் நினைவிலிருந்தே அழித்தெடுத்து விடவேண்டும் என்றே என் மனம் துடித்தது.

அம்மாவின் கால் தூசிக்குக்கூட சமமில்லாத அந்த ஆள். எனக்காக எதுவும் செய்யாத அந்த ஆள். எப்படிப் போனா எனக்கென்ன? எனக்கான அம்மாவின் தியாகங்கள் ரொம்ப ரொம்ப பெருசானவை. எனக்காக எதையும் செய்து என் மகிழ்ச்சிக்காகவே தன்னை உருக்கிக் கொண்டவள் அம்மா. எந்தக் குறையும் வைக்காமல் தனித்திருந்தே என்னை ஆளாக்கியவள் அம்மா. தொடக்கப் பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம்வரை எனக்காக மட்டும் ஓடியோடி உழைத்தவள் அம்மா. அப்பா என்ற அந்த ஆண் என் வாழ்க்கையில் வந்ததேயில்லை.

சித்ரா, இப்ப இங்கு எதுக்கு வந்தீங்க? அப்பா கோபித்துக் கொள்ளப்போகிறார் அம்மாதான் கேட்டாள்.

அக்கா என்னைவிட ஐந்து வயது மூத்தவள். என் இரண்டு அண்ணன்களான மோகன் மற்றும் ராமனுடன் வீட்டிற்கு வந்திருந்தாள்.

அப்பாதான் அம்மாவைப் போய் பார்த்துட்டு வாங்கன்னு, அனுப்பி வச்சார்
அவர்களின் வரவை நான் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. மேலும் என் அண்ணன்கள் இருவரும் நான் வெறுக்கும் அப்பாவின் சாயலில் அப்படியே இருந்தது அவரகள்மேல் என் வெறுப்பை அதிகப்படுத்தியிருந்தது. அவர்கள் என் அப்பாவின் செல்லப்பிள்ளைகள். நான் அப்பா இல்லாமலேயே வளர்ந்த பிள்ளை.

கண்ணாடியின் முன் என்னையே பார்த்துக்கொண்டேன். நான் அம்மாவின் சாயல். அம்மாவைப் போலவே கொஞ்சம் நிறமாகவே இருந்தேன். ஆனால் அக்கா சித்ரா மற்றும் மோகனும் ராமனும் அப்பாவைப் போலவே கறுப்பு. அவர்களின் அந்த அன்றைய வரவு எனக்கும் என் அம்மாவுக்குமான நெருக்கத்தைப் பங்குபோட வந்ததாகவே எனக்குப் பட்டது. அவர்களைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை. அன்று அக்காவும் மோகனும் ராமனும் பல முறை என்னிடம் பேச முற்பட்டபோது அவர்களை முழுவதுமாகத் தவிர்த்துவிட்டேன். வாழ்க்கையின் பயணத்தில் சில சமயங்களில் உறவுகளையும் உதிர்த்துவிட வேண்டியிருக்கிறது.

எனக்குப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தபோதுகூட அம்மாவை விட்டுப் பிரிந்து செல்லவேண்டுமே, அம்மாவுக்கு என்னைவிட்டால் வேறு ஆளில்லையே, தனிமையில் இருப்பாளே என மிகவும் கஷ்டமாக இருந்தது.

 அப்போதுகூட அம்மா,

என்னைப் பத்தி அதிகம் யோசிக்காதே, நான் ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியில் மட்டுமே படித்து ஆசிரியரானேன். நீ என்னைவிட அதிகம் படிக்கவேண்டும். வாழ்க்கையில் இன்னும் பலமடங்கு சிறப்பாக இருக்கவேண்டும்.’ என்றாள்.

அம்மா என்னை வழியனுப்ப வந்தபோது, தாப்பா ரோடு இரயில் நிலையத்திற்கு அப்பாவும் வந்திருந்தார். அவருடன் அக்கா சித்ரா, மோகன், ராமன் என எல்லாரும் வந்திருந்தார்கள். இரயில் புறப்படும் சமயத்தில் அப்பா ஒரு வெள்ளைக் கவரை என்னிடம் நீட்ட, அதைப் பாராவண்ணமாய் இரயிலில் ஏறி நின்றுகொண்டு அம்மாவுக்குக் கையசைத்தேன். இரயில் மெல்ல மெல்ல நகர அவர்கள் அனைவரும் என் பார்வையிலிருந்து தொலைந்து போனார்கள்.

பட்டக்கல்வி முடிந்த கையோடு கோலாலம்பூரில் உள்ள ஓர் அலுவலகத்தில் வேலை. மீண்டும் அம்மாவைப் பிரியவேண்டிய நிர்ப்பந்தம். இங்கே ஒரு நல்ல வீடு பார்த்து அம்மாவையும் என்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும் என நினைத்து வேலையில் சேர்ந்தேன். ஆனால் இந்த ஓரண்டிற்குள் அம்மாவும் என்னை விட்டுப் போய்விட்டாள்.

அம்மாவுக்கு என்ன நோய் என்றுகூடத் தெரிந்துகொள்வதற்குள் அம்மா அவசர அவசரமாக என்னைத் தனியனாக்கிச் சென்றுவிட்டாள்.

அம்மாவுக்கு ரொம்பவும் முடியல, உடனே வா,’ என சித்ரா அக்கா அலுவலகத் தொலைபேசிக்குத் தகவல் சொன்னதாகக் கேசு என்னிடம் சொன்னபோது ஒரு கணம் செய்வதறியாது தவித்துப் போனேன். கேசுவும் பழநியும்தான் ஒரு வாடகை வண்டியைப் பிடித்து என்னை தாப்பாவிற்கு அனுப்பிவைத்தனர்.

அம்மாவை அந்தக் கோலத்தில் என்னால் பார்க்கவே முடியல. விழிகளில் கண்ணீர்த்துகள்கள் தெப்பமிட்டன. உடல் சிறுத்து தோல்கள் சுருங்கி, விழிகளில் கண்ணீரைத் தேக்கி எனக்காகவே காத்திருந்ததுபோல் என்னைக் கண்டவுடனேயே அழத்தொடங்கிவிட்டாள். அவள் பேசும் ஒவ்வொரு சொல்லும் தட்டுத்தடுமாறி வெளிவந்துகொண்டிருந்தது.

அப்பாவை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன், இந்த உசுரு போறதுக்குள்ள அவருகிட்ட மன்னிப்புக் கேட்கணும், நீயும் அவரை ஏற்றுக்கொள், எனக்குப் பிறகு நீ அவரிடமே சேர்ந்துவிடு, அவருக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்,’

அம்மா சொல்வது எதுவும் எனக்குப் புரியவில்லை. இதுநாள்வரையில் அப்பாவைப் பற்றி எனக்குள் எதிர்மறையான எண்ணங்களை விதைத்தவள் இன்று ஏன் இப்படிப் பேசுகிறாள். கேட்பதற்கு நேரமும் ஒத்துழைக்கவில்லை. சித்ராவும் மோகனும் ராமனும் அம்மாவின் தலைமாட்டிலேயே அழும் கண்களுடன் உட்கார்ந்திருந்தனர். பலமுறை சித்ரா அக்கா கூப்பிட்டப்பிறகே அப்பா அங்கு வந்தார்.

அம்மா அவரிடம் மன்னிப்புக் கேட்டாள். தான் செய்த தவற்றையெல்லாம் மன்னித்துவிடுமாறு அழுது உருகினாள். அவர் தலையை மட்டும் ஆட்டிவிட்டு அமைதியாக இருந்த அந்தத் தருணத்தில் அம்மாவின் உயிர் பிரிந்தது. அக்கா சித்ரா கதறினாள். கூடவே என் இரண்டு அண்ணன்களும் அழுதனர். அப்பாவின் விழிகள் சிவந்து குளங்களாகியிருந்தன. அந்த வயதானவர் அம்மாவை முழுமையாக ஒரு முறை பார்த்துவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார். நான் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். எல்லாமே முடிந்தது. இனி எனக்கு யார் இருக்கிறார்கள்? மனம் கல்லாகிப் பாரமாய்க் கனத்தது.

அம்மாவின் இறுதி காரியங்களையும் செய்யவேண்டியிருந்த சில சடங்கு சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் தலைநகருக்குத் திரும்பினேன். எனக்கு யாருமில்லை என்ற உணர்வு அதிகமான தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தி என்னை வாட்டியெடுத்தது. தனிமையின் அந்தக் கணங்களை அம்மா முழுமையாகவே தனதாக்கிக்கொண்டாள். பிரிவின் மீதான துடிப்புகளால் இதயம் கனத்து, விழிகள் கசிந்து, இதழ்களின் உராய்வுகளில் வந்துகொண்டேயிருந்தது அழுகை.  அதன் பிறகு அம்மாவின் பதினாறாவது துக்கத்துக்குச் சென்றபோது எங்கே பூசை போடுவது என்ற கேள்வி எழுந்தது. ஏதோ சொல்ல வந்த அப்பா சொல்லும்முன்,

அம்மா வாழ்ந்த வீட்டுலத்தான் செய்யனும் என்றேன். அக்கா சித்ராவிடம் கண்களால் எதையோ உணர்த்திவிட்டு அமைதியானார். எல்லாம் முடிந்து கிளம்பும்போது அக்கா சித்ரா,

உன்னுடைய பொருட்களையெல்லாம் எங்க வீட்டுல வச்சிடவா
என்றாள்.

ஒன்னும் தேவையில்ல
இங்க யாரும் இல்ல....
எனக்குன்னுதான் யாருமில்ல.’
அப்பா ஆசைப்படுறார்

நான் பதில் ஏதும் சொல்லாமல் வந்துவிட்டேன். வாடகை வாகனம் சிறிது தூரம் சென்றபோது, திரும்பிப் பார்க்கையில் அக்காவும் அண்ணன்களும் எனக்காக கையசைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களுக்குப் பின்னால் அப்பாவின் உருவம் அங்கே நிறமிழந்துகொண்டிருந்தது. சிறுவயது முதல் இன்றுவரை அவர்கள் என்னை நெருங்க முயற்சி செய்து தோற்றுக்கொண்டிருந்தாலும் அவர்கள் மாறாத அன்புடன் அப்படியேதான் இருக்கிறார்கள்.

அப்பா உன்ன நெனச்சி ரொம்ப கவலைப்படுறார். இந்தத் தீபாவளிக்காவது வீட்டுக்கு வந்துட்டுப் போ. அம்மாவுக்குப் படையல் போடனும். எங்க வீட்ல தங்கக் கூட வேணாம். உன் வீட்டிலேயே தங்கிக்க. நீ வந்துட்டுப் போனாளே போதும். நான் அந்த வீட்டைச் சுத்தம் பண்ணிவைக்கிறேன்.

அக்கா சித்ரா கடந்த சில தினங்களாக என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறாள். நவம்பர் 10 தீபாவளி. அம்மாவுக்கு தீபாவளிக்கு முதல்நாள் படையல் போடவேண்டும் என்று என்னை வரச்சொல்லிக்கொண்டிருக்கிறாள். இது அம்மாவுக்கான முதல் தீபாவளிப் படையல்.

கண்டிப்பாக வந்துவிடு. இந்த அக்காவுக்காகவாவது வா. அப்பா பாவம். உன் நினைவுதான் எப்போதும். வயசானவங்கள நாமதானே சந்தோஷமாக வச்சிருக்கனும். அப்புறம் மோகனும் ராமனும்கூட நீ வருவியான்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க. மோகன்கூட உனக்காக இருபத்து நான்கு ஃபீட் சீனப் பட்டாசு ஆர்டர் பண்ணியிருக்கான்

எனக்குப் பட்டாசு வெடிக்க ரொம்பப் பிடிக்கும். அம்மாதான் விடமாட்டாள். பட்டாசு வெடிப்பது தப்பு என்பாள். அது மற்றவர்களுக்கு அசௌகரியத்தைக் கொடுக்கும் என்பாள். அப்படியும் அம்மாவுக்குத் தெரியாமல் கம்பத்துப் பையன்களுடன் சேர்ந்து ஒன்றிரண்டு வெடித்துவிடுவேன்.
என் சின்ன வயசு ஆசைகளைக்கூட இன்னும் மறக்காமல், எப்படி இவர்களால் இப்படி இருக்க முடிகிறது? எனக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறார்களே!   இவர்களை விட்டு விலகி விலகி தள்ளிப் போனாலும் அவர்கள் என்னை விடுவதாக இல்லையே!

நீதான் லீவே எடுக்குறதில்லையே, ஒரு வாரம் லீவு போட்டுட்டு போயிட்டு வா

கேசுவின் ஆலோசனையும் எனக்குச் சரியாகவே பட்டது. மேலும் கம்பத்து வீட்டைப் பார்த்தும் அதிக நாட்களாகிவிட்டது. அம்மா வாழ்ந்த வீட்டைப் பார்க்கும் போதெல்லாம் அம்மா எனக்காக அங்கே காத்திருப்பதுபோல் ஓர் உள்ளுணர்வு ஏற்படுவதுண்டு. அதற்காகவாவது செல்லவேண்டும். அடுத்து முதல்முறையாக அப்பாவையும் அக்கா சித்ராவையும் அண்ணன்கள் மோகன் ராமன் இருவரையும் பார்க்கவேண்டும் என்ற ஆசையும் இப்போது புதுசாய் வந்திருக்கிறது. அம்மாவின் இறப்பிற்குப் பிறகு அக்கா சித்ரா அடிக்கடி தொடர்புகொண்டு பேசத் தொடங்கியதும் இதற்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம்.

தாப்பா ரோடு இரயில் நிலையத்தில் எனக்காக மோகனும் ராமனும் காத்துக்கொண்டிருந்தனர். நான் இறங்கியதும் கைகுலுக்கிக் கட்டியணைத்துக் கொண்டனர். என் கைகளிலிருந்த இரண்டு பேக்குகளையும் வாங்கிக்கொண்டனர். அக்கா சித்ரா எதிரில் உள்ள பகவதி அம்மன் ஆலயத்திலிருந்து என்னைப் பார்த்துக் கையசைத்தாள். மூவரின் முகமும் என்னைப் பார்த்ததும் அகம் மலர்ந்தது என்பதை என்னால் உணரமுடிந்தது.

வீட்டிற்குள் நுழைந்ததும் நான் அப்பாவைத்தான் தேடினேன். என் கண்களுக்கு அவர் அகப்படவில்லை. அவரைக் காணாததால் ஏனோ என் மனம் தவிக்க ஆரம்பித்தது. இந்த உணர்வு எனக்குப் புதிதாகவும் இருந்தது.

அப்பா
என்றேன்.

அப்பா தாப்பா மார்க்கெட்டுக்குப் போயிருக்காரு, உனக்கு களைப்பா இருக்கா? இல்ல அப்படியே அம்மா வீட்டுக்குப் போய் பாத்துட்டு வருவோமா?’

போலாமே

என்றதும் அக்கா, அண்ணன்கள் இருவரிடமும் ஏதோ வேலை சொல்லிவிட்டு என்னுடன் கிளம்பினாள்.

இந்த வீட்டை விட்டு எதிர்த்திசையில் இருக்கும் மண்சாலையில் கிழக்கே நோக்கி நடந்தால் அடுத்து வரும் நான்காவது வரிசையில் அம்மாவுடன் நான் வாழ்ந்த வீடு இருக்கிறது. அக்கம் பக்கத்து தோட்டங்களில் வேலையெல்லாம் குறைந்துபோய்விட்ட சூழலில் பல கம்பத்து வீடுகள் ஆளில்லாமல் பாழடைந்து கிடந்தன.

வீடு சுத்தமா இருக்கு, சுத்தம் பண்ணியா?’
ஆமா நேத்துதான், நாங்க மூனுபேரும் அப்பாவும்தான்
அப்பாவுமா!
ஆமா, நீதான் அவர புரிஞ்சிக்கல
அவருக்கு உம்மேலத்தான் ரொம்ப பாசம்
வீட்டில் நுழைந்தவுடனேயே அம்மா அங்கே அவனருகே இருப்பதாக ஒரு மெல்லிய உணர்வு.

அக்கா, நா ஒன்னு கேட்பேன். பதில் சொல்றீயா?’
ம், கேளு
அம்மாவும் அப்பாவும் ஏன் பிரிஞ்சிட்டாங்க?’
இதுவரை அம்மாவிடம்கூட கேட்டதில்லை. அக்கா அமைதியாக இருந்தாள். பலமுறை நான் வற்புறுத்திக் கேட்ட பின்தான் கலங்கிய விழிகளுடன் பேசத்தொடங்கினாள்.

அப்பா, பெற்றோர்களின் வற்புறுத்தலில்தான் அம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். அப்போ அப்பா ஒரு மலாய்ப்பள்ளியில் ஆபிஸ் பையனாகவும் அம்மா தொங்வா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராகவும் வேலையில் இருந்தாங்க. ஆரம்பத்தில் மகிழ்ச்சியான அவங்களோட வாழ்க்கை, அம்மா கல்லூரிக்குச் சென்று ஆசிரியரான பின் ஆட்டம் கண்டது. நானும் மற்ற இரண்டு அண்ணன்களும் பிறந்த பிறகு அம்மா, அப்பாவை மிகவும் மோசமாகப் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அவரோட வேலைய மட்டமா பேசுவாங்க. அம்மாவுக்கு அப்பாவைவிட நல்ல சம்பளம். அப்பாவை மதிக்கிறதில்ல. அப்பா அம்மாவோட சம்பளத்தைத் தொடக்கூட மாட்டாரு. வீட்டுச் செலவு எல்லாத்தையுமே அப்பாதான் பாத்துப்பாரு. ஆனா அம்மா தன் முழுச் சம்பளத்தையும் தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் மட்டுமே செலவு பண்ணிப்பாங்க. அம்மாவுக்குக் காருகூட அப்பா லோன் போட்டுத்தான் வாங்கிக் கொடுத்தாரு. ஆனா அவரு பாவிச்சது சாதாரண ஹொண்டா செவெண்டிதான்.

அம்மா எப்போதும் அப்பா செய்ற சின்னச் சின்ன தவறுகள எல்லா பெருசாக்கி ஏசிக்கிட்டுத்தான் இருப்பாங்க. அப்பா எல்லாத்துக்கும் அமைதியாதான் இருந்தாங்க. ஆனா, ஒரு நாள் அப்பாவ அடிக்கிறதுக்குக்கூட கையை ஓங்கி, வீட்ட விட்டு வெளியே போகச் சொல்லிட்டாங்க. அப்போ நீ ஆறுமாசக் கைக்குழந்தையா இருந்ததால உன்ன அம்மாகிட்டேயே விட்டுட்டு, அப்பா என்னையும் மோகனையும் ராமனையும் அவுங்க அம்மா வீட்டுக்கு கூட்டியாந்துட்டாரு. பாட்டி இறந்தபிறகு எங்களை வளர்க்க அப்பா ரொம்ப கஷ்டப்பட்டாரு. அது போக, பொண்டாட்டி அடிச்சி வீட்ட விட்டு விரட்டிட்டா...போன்ற அவலப் பேச்செல்லாம் கேட்டுத் துடிச்சுப் போவாரு. எனக்குத் தெரியும், அப்பா அம்மாவால வாழ்க்கையில ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சிட்டாரு, அத கஷ்டம்னு சொல்றதவிட அவமானும்னு சொன்னாத்தான் சரியாயிருக்கும். நீகூட சும்மாவா இருந்த? அவர எப்படியெல்லாம் அவமானப்படுத்தனுமோ அதையெல்லாம் பண்ணுன....

அக்கா சொல்லிவிட்டு என் முகத்தைப் பார்த்தாள். அந்தப் பார்வையை ஏனோ என்னால் எதிர்கொள்ளமுடியவில்லை. எனக்குள் வலித்தது. அந்த வலி, வார்த்தைகளைத் தொண்டைக்குள்ளேயே ஒட்டடைப் படிந்த சமாதிகளாக்கியது.

ஆனா அப்பா, அம்மா மேலயும் உம்மேலயும் உசுரையே வச்சிருந்தாரு, பிரிஞ்சி வாழ்ந்தபோதும் அம்மாவை விவாகரத்துப் பண்ணவேயில்ல. அதுபோல இன்னொரு கல்யாணமும் பண்ணிக்கல, இன்னவரைக்கும் என்னோட சம்பளத்தையோ இல்ல மோகன் ராமன் ரெண்டு பேரோட சம்பளத்தையோ அவர் தொட்டதுகூட கிடையாது, சொன்னாலும் கேட்க மாட்றாரு, அவரு பாட்டுக்கு உழைச்சிக்கிட்டேயிருக்காரு

என்றவாறு தன் கண்களில் பனித்திருந்ததை தன் விரல்களால் துடைத்துக்கொண்டாள் அக்கா சித்ரா

(நவம்பர் 2015 - நயனம்)
(செம்மொழி 2015 )



           ------------------------------முற்றும்------------