வெள்ளி, 5 ஜூலை, 2013

தமிழ் இலக்கணம்

பயன்பாட்டுத் தமிழ் இலக்கணம்

உயிர் எழுத்து (Vowels) – 12  (அ,,,,,,,,,,,ஔ)
மெய்யெழுத்து (Consonants) – 18 – வல்லினம் (க்,ச்,ட்,த்,ப்,ற்) / ,,,,,
                              மெல்லினம் (ங்,ஞ்,ன்,ந்,ம்,ண்) /,,,,,
                              இடையினம் (ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) /,,,,,
ஆய்த எழுத்து – 1 (ஃ)
(உயிர்மெய் எழுத்துகள் (216). இவை உயிர் எழுத்துகளையும் மெய் எழுத்துகளையும் சார்ந்து வருவதால் சார்பு எழுத்துகளாகவே கருதப்படுவேண்டும். ஆய்த எழுத்து ஒன்றுதான். இது அவ்வளவாக பயன்பாட்டில் இல்லை. எனவே தமிழில் இருக்கும் முதன்மை எழுத்துகள் 30 தான்)
பயன்பாட்டுத் தமிழில் நம்மால் தவிர்க்கக் கூடிய சில ஒற்றுப் பிழைகளை இங்குக் காண்போம். இதைச் சரியாக அறிந்து எழுதினாலே தமிழில் முக்கால்வாசி எழுத்துப் பிழைகளைத் தவிர்த்துவிடலாம்.

1.   இரண்டாம் வேற்றுமை க்குப் பின் வரும் சொல் க,,,ப வரிசைகளில் ஆரம்பித்தால் வலிமிகும். (புள்ளி உள்ள எழுத்து வரும்), வல்லொற்று மிகும்.
.கா பாடத்தை + படி       = பாடத்தைப் படி
        நடந்ததை + சொல்   = நடந்ததைச் சொல்
       வேலையை + செய்    = வேலையைச் செய்
       திருக்குறளை + தேடு  = திருக்குறளைத் தேடு
       தண்ணீரை   + குடி   = தண்ணீரைக் குடி

2.   நான்காம் வேற்றுமை கு க்குப் பின் வரும் சொல் க,,,ப வரிசைகளில் ஆரம்பித்தால் வலிமிகும். (புள்ளி உள்ள எழுத்து வரும்), வல்லொற்று மிகும்.
எ.கா – சிங்கப்பூருக்கு + பரிசு = சிங்கப்பூருக்குப் பரிசு
       நண்பனுக்கு + கொடுத்தான் = நண்பனுக்குக் கொடுத்தான்
       பள்ளிக்கு + சென்றான் = பள்ளிக்குச் சென்றான்
       கடவுளுக்கு + தந்தான் = கடவுளுக்குத் தந்தான்

3.   அகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
எ.கா. – நடக்க + பழகினான் = நடக்கப் பழகினான்
       எழுத + தந்தாள் = எழுதத் தந்தாள்
       பாட + போகிறாள் – பாடப் போகிறாள்
       படிக்க + சொன்னார் = படிக்கச் சொன்னார்
       சாப்பிட + கொடுத்தார் = சாப்பிடக் கொடுத்தார்

4.   இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
எ.கா. – பேசி + பார்த்தான் = பேசிப் பார்த்தான்
       சுற்றி + திரிந்தான் = சுற்றித் திரிந்தான்
       வாங்கி + கொண்டார் = வாங்கிக் கொண்டார்
       நாடி + சென்றார் = நாடிச் சென்றார்

5.   வன்தொடர்க் குற்றியலுகரப் பெயர்ச் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும்.
எ.கா. – எட்டு + திசை = எட்டுத் திசை
       பத்து + காசு = பத்துக் காசு
       பட்டு + சேலை = பட்டுச் சேலை
       எழுத்து + சுருக்கம் = எழுத்துச் சுருக்கம்
       தச்சு + தொழில் = தச்சுத் தொழில்

6.   வன்தொடர்க் குற்றயலுகர வினைச் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும்.
எ.கா. – கற்று + கொடுத்தார் = கற்றுக் கொடுத்தார்
       விட்டு + சென்றார் = விட்டுச் சென்றார்
       சேர்த்து + தொகுத்தார் = சேர்த்துத் தொகுத்தார்
       படித்து + பார்த்தான் = படித்துப் பார்த்தான்

7.   அந்த, இந்த, எந்த, அங்கு, இங்கு, எங்கு, அப்படி, இப்படி, எப்படி சொற்களுக்குப் பின் வலிமிகும் (வல்லொற்று மிகும்)
எ.கா. – அந்தப் பையன், எந்தச் சட்டை, இந்தப் பக்கம்
       அங்குச் சென்றான், எங்குச் சென்றான், இங்குப் போனான்
       அப்படிச் சொன்னான், இப்படிப் பார்த்தான், எப்படிப் போனான்

8.   ஓரெழுத்துச் சொல்லுக்குப் பின் வலிமிகும்.
எ.கா. – பூ + பறித்தான் = பூப்பறித்தான்
       தை + திங்கள் = தைத்திங்கள்
       தீ + பொறி = தீப்பொறி
       மா + கோலம் = மாக்கோலம்

9.   தனிக்குறிலை அடுத்து வரும் நெடிலுக்குப் பின் வல்லினம் மிகும்.
எ.கா. – நிலா + சோறு = நிலாச்சோறு
       புறா + கூட்டம் = புறாக்கூட்டம்
       பலா + பழம் = பலாப்பழம்

10. தனிக் குறிலை அடுத்த முற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும்.
எ.கா. - திரு + புகழ் = திருப்புகழ்
       திரு + குறள் = திருக்குறள்
       புது + கோட்டை = புதுக்கோட்டை
       தெரு + திண்ணை = தெருத்திண்ணை
       புது + சேலை = புதுச்சேலை


       

11. ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்திற்குப் பின் வல்லினம் மிகும்.
எ.கா. – ஓடா + குதிரை = ஓடாக் குதிரை
       மங்கா + புகழ் = மங்காப் புகழ்
       தேடா + செல்வம் = தேடாச் செல்வம்
       ஒப்பிலா + பொருள் = ஒப்பிலாப் பொருள்

12. இரு பெயர்ச் சொற்களுக்கு இடையில் வல்லினம் மிகும்.
எ.கா. – கீரி + பிள்ளை = கீரிப்பிள்ளை
        புளி + சோறு = புளிச்சோறு
       வெள்ளி + தட்டு = வெள்ளித்தட்டு
       தமிழ் + சங்கம் = தமிழ்ச்சங்கம்
       சாரை + பாம்பு = சாரைப்பாம்பு

இனி வல்லினம் மிகாத சில இடங்களைப் பார்ப்போம்.
1.   எழுவாய்க்குப் பின் வல்லினம் மிகாது. (புள்ளி உள்ள எழுத்து வராது / ஒற்றெழுத்து வராது)
.கா. – பறவை + பறந்தது = பறவை பறந்தது
       பாம்பு + சீறுகிறது = பாம்பு சீறுகிறது
       மாங்கனி + தின்றான் = மாங்கனி தின்றான்
       தவளை + கத்தியது = தவளை கத்தியது

2.   பெயரெச்சத்திற்குப் பின் வல்லினம் மிகாது.
எ.கா. – கேட்ட + கேள்வி = கேட்ட கேள்வி
        வந்த + பையன் = வந்த பையன்
        பேசிய + பேச்சு = பேசிய பேச்சு
        பார்த்த + படம் = பார்த்த படம்
        கூறிய + கூற்று = கூறிய கூற்று

3.   ஆறாம் வேற்றுமை உருபு (அது, உடைய) ஏற்ற சொற்களுக்குப் பின் வல்லினம் வராது.
எ.கா. – என்னுடைய + கடை = என்னுடைய கடை
       அரசனுடைய + பல்லக்கு= அரசனுடைய பல்லக்கு
       யானையினது + தும்பிக்கை = யானையினது தும்பிக்கை
       முருகனது + பந்து = முருகனது பந்து

4.   மூன்றாம் வேற்றுமை (ஆல்,உடன்,ஓடு) உருபுக்குப் பின் வல்லினம் வராது.
எ.கா. - முருகனோடு + கண்டான்= முருகனோடு கண்டான்
       முருகனோடு + சென்றான் = முருகனோடு சென்றான்
       முருகனோடு + தாண்டினான் = முருகனோடு தாண்டினான்
       முருகனோடு + பார்த்தான் = முருகனோடு பார்த்தான்

5.   முற்று வினைகளுக்குப் பின் வல்லினம் வராது.
எ.கா. – எழுந்தது + சேனை = எழுந்தது சேனை
       கூவின + கோழிகள் = கூவின கோழிகள்
       பறந்தன + பறவைகள் = பறந்தன பறவைகள்

6.   மென் தொடர்க் குற்றியலுகரத்திற்குப் பின் வல்லினம் வராது.
எ.கா. – நடந்து + சென்றான் = நடந்து சென்றான்
       நின்று + கேட்டான் = நின்று கேட்டான்
       உண்டு + தீர்த்தான்= உண்டு தீர்த்தான்

7.   விளிப்பெயருக்குப் பின் வல்லினம் வராது.
எ.கா. – தம்பி + கேள் = தம்பி கேள்
       தம்பி + சொல் = தம்பி சொல்
       தம்பி + பார் = தம்பி பார்
       தம்பி + தா = தம்பி தா

8.   வியங்கோள் வினைமுற்றுக்குப் பின் வல்லினம் மிகாது.
எ.கா. – வாழ்க + கண்ணா = வாழ்க கண்ணா
       வாழ்க + தமிழா = வாழ்க தமிழா
       வாழ்க + பாண்டிய மன்னா = வாழ்க பாண்டிய மன்னா
       வாழ்க + சோழ மன்னா = வாழ்க சோழ மன்னா

9.   ,,,யா என்னும் வினாப்பெயருக்குப் பின் வல்லினம் மிகாது.
எ.கா. – வேலனா + கேட்டான் = வேலனா கேட்டான்
       ராமுவோ + தந்தான் = ராமுவோ தந்தான்
       அவனே + செய்தான் = அவனே செய்தான்
       அவனையா + பார்த்தாய் = அவனையா பார்த்தாய்

10. வினைத்தொகைக்குப் பின் வல்லினம் மிகாது. (சொற்றொடர்களில் மூன்று காலமும்  மறைந்து நின்று பொருள் தந்தால் வினைத் தொகை எனப்படும்)
எ.கா. – ஊறு + காய் = ஊறுகாய் (ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும் காய்)
       சுடு + காடு = சுடுகாடு (சுட்ட காடு, சுடுகின்ற காடு, சுடும் காடு)
       செய் + தொழில் = செய்தொழில் (செய்த தொழில், செய்கின்ற தொழில், செய்யும் தொழில்)
       தின் + பண்டம் = தின்பண்டம் (தின்ற பண்டம், தின்னுகின்ற பண்டம், தின்னும் பண்டம்.

11. வேற்றுமைத் தொகையில் வலி மிகாது. (இரண்டு சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபுகள் மறைந்து வருவது வேற்றுமை உருபுகள் எனப்படும்)
எ.கா. – பாடம் + படித்தான் = பாடம் படித்தான் (பாடத்தைப் படித்தான்)
       பேரங்காடி + சென்றாள் = பேரங்காடி சென்றாள் (பேரங்காடிக்குச் சென்றாள்)
       குழி + தோண்டினான் = குழி தோண்டினான் (குழியைத் தோண்டினாள்)
       பால் + குடித்தான் = பால் குடித்தான் (பாலைக் குடித்தான்)

12. படி என்னும் இடைச்சொல் வினைச்சொல்லை அடுத்து வந்தால் வலி மிகாது.
எ.கா. – சொன்னபடி + செய் = சொன்னபடி செய்
       வரும்படி + கூறினேன் = வரும்படி கூறினேன்

13. எட்டு, பத்து அல்லாத எண்ணுப் பெயர் முன் வலி மிகாது.
எ.கா. - ஒரு கை, இரண்டு கை, இருதலை, மூன்று காலம், நான்கு திசை, ஐந்து திணை, ஆறு தலை, அறுபடை, ஏழு கடல், ஏழ் துளை, ஒன்பது கோல், நூறு பாட்டு.

14. அன்று, இன்று, என்று, அது, இது, எது, அத்தனை, இத்தனை, எத்தனை ஆகிய சொற்களின் முன் வலி மிகாது.
எ.கா. – அன்று கண்டான், இன்று சொல், என்று தணியும்?
       அது புத்தகம், இது குழந்தை, எது பெரியது?
       அத்தனை பெரிய, இத்தனை சிறிய, எத்தனை சொன்னாலும்,

15. அளவு, சும்மா, அடிக்கடி, தடவை, முறை, ஆவது, முன்பு, பின்பு, பிறகு, போதும் என்னும் சொற்களின் முன் வலி மிகாது.
எ.கா. – அவ்வளவு புகழ்
       சும்மா சொல்
       அடிக்கடி போ
       ஒரு தடவை சொல்
       பல முறை கேள்
       பாலாவது தேநீராவது
       முன்பு சொன்னாய்
       பின்பு பார்
       பிறகு சொல்
       அப்போது கேள்

தெரிந்து கொள்வோம்:
1.   ஆக என வரும்போது வலிமிகும்.
எ.கா. – புதிதாகச் சேர்ந்துள்ள, புதிதாகப் பதிந்துள்ள

2.   ஆன என வரும்போது வலி மிகாது.
எ.கா. – வேகமான பேருந்து

3.   செய்து என்று வருகின்ற போது வலி மிகாது. (இறந்த காலம்)
எ.கா. – செய்து கொண்டிருந்தான்,
       வைத்த கண் வாங்காது  

4.   மகரம் கெட்டு, வருமொழியின் மெய்யெழுத்து வரும் சொற்கள்.
எ.கா. – முக்கியம் + செய்திகள் = முக்கியச் செய்திகள்
       முக்கியம் + கருத்து = முக்கியக் கருத்துகள்
       (வட சொற்களுக்கு இது பொருந்தாது)
       தேசியம் + தினம் = தேசிய தினம்
       சுதந்திரம் + தினம்= சுதந்திர தினம்

5.   வன்தொடர்க் குற்றியலுகரம்
எ.கா. – சிறப்புற்று + திகழ்ந்தான் = சிறப்புற்றுத் திகழ்ந்தான்
       பயிற்று + கருவிகள் = பயிற்றுக் கருவிகள்
       கற்று + கொள்ள = கற்றுக் கொள்ள

6.   மற்ற, இனி, முன்னர், பின்னர் என்ற சொற்களின் முன் வலி மிகும்.
எ.கா. – மற்றப் பொருள்
       இனிக் காண்போம்
       முன்னர்ப் பார்த்தோம்
       பின்னர்ச் சொல்வேன்

7.   கிலோ, மில்லி, இலிட்டர், மீட்டர் என்ற சொற்களின் முன் வல்லினம் மிகும்.
எ.கா. – ஒரு கிலோப் பயிறு
       நூறு மில்லிப் பால்
       ஒரு லிட்டர்த் தண்ணீர்
       ஒரு மீட்டர்த் துணி

8.   பயணிக்கிறேன், மௌனிக்கிறேன், முயற்சிக்கிறேன் என அதிகமானோர் எழுதுகின்றனர்; பேசுகின்றனர். அப்படி எழுதுவதும் பேசுவதும் இலக்கண விதிகளின் படி தவறாகும்.
.கா. பயணம் என்பது பெயர்ச்சொல். அதை பயணிக்கிறேன் என பயன்படுத்தக் கூடாது.
பயணம் செய்கிறேன் என்றே பயன்படுத்த வேண்டும்.
     மௌனம் என்பது பெயர்ச்சொல். அதை மௌனிக்கிறேன் என பயன்படுத்தக் கூடாது.
மௌனமாக இருக்கிறேன் என்றே பயன்படுத்த வேண்டும்.
      முயற்சி என்பது பெயர்ச்சொல். அதை முயற்சிக்கிறேன் என பயன்படுத்தக் கூடாது.
முயற்சி செய்கிறேன், முயற்சி செய்வேன் என்றே பயன்படுத்த வேண்டும்.

வேற்றுமை உருபுகள்:
1.   எழுவாய் வேற்றுமை (கம்பன், பாரதி)
2.   ஐ (அவனை)
3.   ஆல், உடன், ஓடு (அவனால், அவனுடன், அவனோடு)
4.   கு (அவனுக்கு)
5.   இன், இருந்து, இலிருந்து, இடமிருந்து (அவனிடமிருந்து, சிங்கையிலிருந்து, சிங்கையின்)
6.   அது, உடைய (அவனது, அவனுடைய)
7.   இல், இடம் (சிங்கையில், சிங்கப்பூரிடம்)
8.   விளி வேற்றுமை (அரசே! வாழ்க!)
ஓர் & ஒரு பயன்பாடு
உயிரெழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு முன் ஓர் என்றே எழுதவேண்டும்.
எ. காட்டு - ஓர் ஊரில், ஓர் ஏணி,  ஓர் இலை, ஓர் அம்மா
            ஒரு பையன், ஒரு கோயில், ஒரு நாடு








       


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக