அம்மாவுக்கு ஒரு நிழல்
---------------------------------
“கல்யாணத்துக்குப் போகலையா?”,
சமையல் அறையிலிருந்து அம்மா கேட்பது காதில் விழுந்தது. பதில் கூற மனம் விரும்பவில்லை. மௌனமாகப் படித்துக்கொண்டிருந்தேன். அடுத்த வாரம் நடைபெறவுள்ள தேர்வுக்குப் படித்தாக வேண்டும். சிம் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பின் இறுதியாண்டுத்தேர்வு. காப்பியமும், மொழியியல் பாடமும்தான் பாக்கி.
“தவா, கல்யாணத்துப் போயிட்டு வாடா.”
அறைக்கதவில் அம்மாவின் உருவம் நிழலாடியது.
அம்மாவைப் பார்த்தேன்.
அம்மாவின் நெற்றியில் வியர்வைத் துளிகள். அம்மாவின் விழிகளில் ஏக்கப் பெருமூச்சு.
“நான் போகலம்மா”,
“கொஞ்சநேரம் போய் மொய் கொடுத்திட்டு வந்துரு, போகலனா நல்லா இருக்காதுடா”,
“தம்பிய போகச் சொல்லுமா”,
“அவன் சின்னப்பையன். அவனுக்கு என்ன தெரியும்?”,
“நீ போயிட்டு வாம்மா”,
“நா போறதா இருந்தா
உன்னை ஏன் போகச் சொல்றேன்”,
என்று அறையை விட்டு அகன்றாள்.
அம்மா போனபிறகுதான் நினைவுக்கு வந்தது. அம்மா இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விரும்புவதில்லை. அப்பா இறந்ததிலிருந்து அம்மா தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டாள். பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கோணல் பார்வைகளுக்கு இரையாவதை விட தனிமையில் அமைதி பெறுவதையே அம்மா அதிகமாக விரும்புகிறாள். ஒரு சில நேரங்களில் பழைய நினைவலைகளில் சிக்கி, அவளுக்குள்ளேயே அழுவாள்.
“அம்மா”
மனம் ஒரு முறை அந்த வார்த்தையை அனுபவித்து உணர்வோடு உச்சரித்தது.
“வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொர்க்கமே”
பாடல் வரிகள் தானாகவே நினைவைத் தட்டியது.
இதயம் ஈரமாகிப்போனது.
நினைவுகள் ஈரத்துளிகளாய் சிதறின.
அன்று பள்ளி முடிந்து வீட்டை அடைந்தேன். தாத்தாவின் குரல் காரசாரமாக கரகரத்துக் கொண்டிருந்தது. கதவோரமாக நின்று எட்டிப் பார்த்தேன்.
அம்மா கண்ணீர்க் கோடுகளோடு நின்று கொண்டிருந்தாள். என் அப்பாவின் அப்பா ஆவேசமாகக் கத்திக்கொண்டிருந்தார்.
“உன்னைப்பத்திதான் ஊரே பேசுதே, சே.....இதெல்லாம் ஒரு பொழப்பா….மானங்கெட்டவளே!”
“மாமா, நா சொல்றத கொஞ்சம் கேளுங்க”
அம்மா கெஞ்சினாள். அழுதாள்.
“சே, வாயை மூடு. இனியும் நீ சொல்றத கேட்க நா தயாரா இல்ல. என்னோட மவன் போனபிறகு, குடும்ப மானமே போன பிறகு, இனி உனக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்ல. பேசாம எம்மவன் பேருல இருக்குற இந்த வீட்ட வித்துட்டு, எம்மவனுக்குச் சேரவேண்டியத எங்ககிட்ட கொடுத்திடு”.
தாண்டவம் ஆடிவிட்டு தாத்தா கிளம்மபும் போது என்னைப் பார்த்துச் சொன்னார்.
“இவகூட இருந்தா நீயும் உன் தம்பியும் தெருவுலத்தான் நிக்கனும். உருப்படமாட்டீங்க. துணியெல்லா எடுத்துக்கிட்டு எங்கூட கெளம்புங்க”
நான் மௌனமா நின்றுகொண்டு அம்மாவைப் பார்த்தேன்.
“எப்படியோ போங்க”,
சொல்லிவிட்டுப்போய்விட்டார்.
அம்மா என்னை அணைத்துக்கொண்டு அழுதாள். நானும் அழுதேன். தம்பியும் அழுதான்.
கொஞ்ச நாள் கழித்து, புக்கிட் பாத்தோக்கில் நாங்கள் குடியிருந்த ஐந்து அறை வீட்டை விற்றுவிட்டு, தாத்தா கேட்ட பணத்தை அவருக்குக் கொடுத்து விட்டு, அம்மா ஜூரோங் ஈஸ்ட் முருகன் கோயில் பக்கம் மூவறை வீடொன்றை வாங்கினாள்.
அப்பாவின் இறப்பிற்குப் பிறகு எங்களுக்கிருந்த சொந்தங்கள் எல்லாம் மறைந்து போயின. அம்மாவின் சொந்தங்கள் கூட வருவதில்லை. ஆனால் பார்த்திபன் மாமா மட்டும் வருவார். அப்பாவின் மறைவிற்குப் பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி போயிருந்த அம்மாவிற்கு அவர்தான் தான் பணிபுரியும் கப்பல் துறையின் அலுவலகம் ஒன்றில் வேலை வாங்கிக்கொடுத்தார். அம்மா வீடு வாங்குவதற்கும் அவர்தான் ஏற்பாடுகளையெல்லாம் செய்தார்.
அம்மா, பார்த்திபன் மாமாவிடம்தான் தன் மனக்கஷ்டங்களை எல்லாம் பகிர்ந்துகொள்வாள். எல்லாவற்றையும் அமைதியாக் கேட்டுவிட்டு சொல்வார்.
“சமூகத்தில் நிலவும் சில கருத்துகள் நம் தூய எண்ணங்களை முடக்கி, நம் முன்னேற்றத்தைத் தடை செய்யக்கூடிய தன்மை வாய்ந்தவை. சமூகக்கோட்பாடுகள் மனிதர்களுக்காகத்தான் இருக்கின்றனவே அன்றி, அவற்றிற்காக, நம் வாழ்க்கையைத் திசை திருப்பிக்கொள்ளக்கூடாது”.
“வாழ்க்கையில் சோதனைகள் நிறைந்திருக்கின்றன. அந்த சோதனைகளை வெற்றிக்கொள்ளவே மனிதர்களாகப் பிறந்திருக்கிறோம். இந்த சமூகம் நம்மை களங்கப்படுத்துவதால், நம் தூய நட்பு களங்கப்படபோவதில்லை”.
பிறிதொரு நாள் பார்த்திபன் மாமா என்னை அழைத்துச் சொன்னார்.
“தவா இன்னைக்கு உன் அம்மா விடுகின்ற கண்ணீருக்கு இந்த சமூகம் ஒரு நாளைக்கு நிச்சயம் பதில் சொல்லியே ஆகவேண்டும். இன்று உன் அம்மாவை ஒதுக்கி வைக்கும் சமூகம், நாளை அவளைத்தேடி வரும்படி நீயும் உன் தம்பியும் வாழ்க்கையில் உயரவேண்டும். வசதியில்லாத நாம், நம்மை உயர்த்திக்கொள்ள இருக்கின்ற ஒரே வழி கல்விதான். கல்வியைத் தவிர வேறொன்றுமில்லை. நன்றாகப் படித்து நீ பட்டம் பெறும்நாளில் உன் தாயை தலைநிமிர்ந்து நடக்க வை”.
“தவா”,
அம்மாவின் குரல் நினைவுகளைக் கலைத்தது.
“இந்தக் கவரில் பெயர் எழுதி வை, ரகுவை போகச் சொல்கிறேன். அடுத்த வாரம் உனக்குப் பரீட்சைன்னு சொன்னேல, நா மறந்துட்டேன்”,
அம்மா ஒரு நீலக்கவரை கொடுத்துவிட்டுப் போனாள்.
இன்று ஞாயிற்றுக்கிழமை.
இன்றுதான் அம்மாவிற்கு அலுவலக வேலையிலிருந்து ஓய்வு. ஒவ்வொரு நாளும் ஐந்தரை மணிக்கு வேலை முடிந்தாலும் கூடுதலாக மூன்று மணிநேரம் வேலை செய்யவேண்டும். சனிக்கிழமையும் பனிரெண்டரை மணிக்கு வேலை முடிந்தாலும் ஐந்தரை மணிவரை வேலை செய்யவேண்டும். சிங்கப்பூரின் வாழ்வியல் சூழலில் தனித்திருக்கும் தாய்மார்கள் இப்படியெல்லாம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. வீட்டுத்தவணை, பியூபி பில்கள், ஸ்தாஹாப் பில்கள், நகராண்மைக்கழக கட்டணம், போக்குவரத்து கட்டண அட்டைகள் என பலவும் மாதம் முடியுமுன்னே வந்து மிரட்டிக்கொண்டிருக்கும் வாழ்வியல் சூழலில்தான் அம்மாவும் எங்களை வளர்த்து ஆளாக்கவேண்டியிருந்தது.
என் படிப்பிற்கும் தம்பியின் படிப்பிற்கும் கூட பார்த்திபன் மாமாதான் பல வழிகளிலும் உதவி வந்தார். சிண்டா மூலமும், உமறுப் புலவர் கல்வி உதவி அறங்காவல் நிதி, சிம் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான வட்டியில்லா கல்விக்கடனும், உபகாரச் சம்பளமும் கிடைக்க வழி காட்டினார். பார்த்திபன் மாமாவிற்கு அம்மாவின் ஒத்த வயதுதான் இருக்கவேண்டும். தனியாகத்தான் தாமான் ஜூரோங்கில் வசித்து வருகிறார். இன்றுவரை அவர் கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழ்கிறார். பார்த்திபன் மாமா அவருடைய இளவயதில் ஒரு பெண்ணை விரும்பியதும், அந்தப் பெண்ணோ இவர் மனம் அறியாமல் பெற்றோர் பார்த்த பையனையே கல்யாணம் செய்துகொண்டு போனதும் பழைய கதை.
அம்மாவின் மேல் பார்த்திபன் மாமாவிற்கு தனி அக்கறை இருந்தது. அம்மாவும் அவர் மேல் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறாள். சிறுவயதில் புக்கிட் தீமா பகுதியில் ஒரே கம்பத்தில் இருந்ததாக அம்மா கூறியிருந்தாள்.
இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் பார்த்திபன் மாமா தனித்து வாழ்ந்துகொண்டிருப்பார். அம்மாவும் பாவம்தானே. எங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாள். உழைத்துக்கொண்டிருக்கிறாள். எதிர்காலம் எப்படி இருக்கும் என நம்மால் கணிக்க முடியாதே. அம்மாவுக்கு இரண்டுமே ஆண்பிள்ளைகள்தானே. நாளைக்கு எங்களுக்கும் கல்யாணம் ஆன பிறகு, வருபவள் எப்படி இருப்பாள்? எத்தனைப் படங்கள் பார்க்கிறோம். அக்கம் பக்கத்தில் எத்தனை விஷயங்களைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இன்று எப்படியெல்லாமும் நினைக்கலாம். உறுதியும் கொடுக்கலாம். உறுதியாகவும் இருக்கலாம். நாளை நடக்கப் போவதை யாராலும் சொல்ல முடியாது.
மிஞ்சிய காலங்களிலாவது அம்மா மகிழ்ச்சியாக நிம்மதியாக வாழ வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்.
அம்மாவுக்கும் ஒரு துணை தேவைதானே?
அம்மாவுக்கும் ஒரு நிழல் தேவைதானே?
ஆனால் அம்மா என்ன சொல்வாள்?
பார்த்திபன் மாமா என்ன சொல்வார்?
தனித்திருக்கும் அந்த நெஞ்சங்களும் உரையாடி உறவாடி மகிழட்டுமே. இல்லற வாழ்வு வெறும் உடல் இயைபு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அதற்கு மேலும் உயர்வானது உறுதியானது மன இயைபு. அந்த மன இயைபு அம்மாவுக்கும் பார்த்திபன் மாமாவிற்கும் நிறையவே இருக்கிறது. இப்போதுதான் பார்த்திபன் மாமாவின் தூண்டுதலில் இங்கு நடைபெறும் தங்கமீன் வாசகர் வட்டம், கவிமாலை என சில இலக்கிய நிகழ்வுகளுக்கும் அம்மா சென்று வர ஆரம்பித்திருக்கிறார்.
தனித்திருக்கும் அம்மாவிற்குத் துணை புத்தகங்கள்தான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நூலகத்திற்குச் செல்வாள். நிறைய படிப்பாள். பார்த்திபன் மாமாவின் உந்துதலில் கொஞ்சம் கொஞ்சமாக எழுத ஆரம்பித்தாள். அம்மா எழுதிய சில கதைகளும் கவிதைகளும் தினமுரசுவிலும் மலேசிய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. மு.வ. வின் கள்ளோ காவியமோ, அகிலனின் சிநேகிதி போன்ற நாவல்களின் கதாபாத்திரங்களைப் பற்றியும் ஜெயமோகனின் கன்னியாகுமாரி, காடு போன்ற நாவல்கள் பற்றியும் நிறையவே விவாதம் செய்திருக்கின்றனர் அம்மாவும் பார்த்திபன் மாமாவும். மிக அண்மையில் கூட வண்ணதாசன் எழுதிய சிநேகிதிகள், எஸ். ராமகிருஷ்ணனின் இரண்டு குமிழ்கள் போன்ற சிறுகதைகளைப் பற்றி இருவரும் மிக ஆழமாக விவாதித்துக் கொண்டிருந்ததும் என் காதில் விழுந்தது. இலக்கிய ஈடுபாடு இருவருக்குமே கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. வரும் காலங்களில் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாகவும் வாழலாமே.
ஆனால் சமூகம் இதை ஏற்றுக் கொள்ளுமா? சமூகம் இங்கு ஏன் வர வேண்டும்? அம்மாவைத் தீண்டத்தகாதவளாக ஒதுக்கி வைத்த இந்த சமூகம் இதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. கீழே விழுந்தால் தூற்றும் இந்த சமூகம் நாம் மேலே உயர்ந்தால் மாலை போட்டு வரவேற்கும்.
மாறுபட்ட மனோபாவம் கொண்டவர்களால்தான் உலகம் முன்னேறியிருக்கிறது. உலக முன்னேற்றம் சமூகத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்த்துப் போராடியவர்களாலேயே உருவாகியிருக்கிறது.
என் அம்மாவிற்கு ஒரு துணை, ஒரு நிழல் தேவை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
அன்று இந்திய அரசாங்கத்தின் சார்பாக நீலகண்ட சாஸ்திரி அவர்கள் இங்கு பரிந்துரைத்த சமஸ்கிருத மொழியை எதிர்த்துப் போராடி தமிழுக்கு உரிய இடம் கிடைக்கப் பாடுபட்டார் தமிழவேள் கோ. சாரங்கபாணி.
அன்று உடன்கட்டை ஏறுவதை ராஜாராம் மோகன்ராய் எதிர்த்தார்.
வெள்ளைக்காரன் ஆட்சியை இறுதிவரை எதிர்த்தான் கட்டபொம்மன்.
ஹரிஜனங்களுக்காகப் போராடினார் மகாத்மா காந்தி. சுயமரியாதைக்காகப் போராடினார் பெரியார் ராமசாமி.
இன்று என் அம்மாவிற்காக நானும் தயாராகிவிட்டேன்.
(8 - 7 - 2012 தமிழ் முரசில் வெளிவந்தது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக