சனி, 18 டிசம்பர், 2010

கவிதை

ஊசலாடும் நேயங்கள்

பெருவிரைவு இரயில்
தூரத்தில் அசையும் போதே
எறும்புகளாய் ஊருகிறோம்

உள்ளிருப்பவன் வெளி சுவாசம்
எதிரலையாய் உள் சுவாசம்

ஒருவர் முதுகில் ஒருவர்
மனம் மட்டும் அந்நியமாய்
தொலைகிறது

இடம்தேடி
அலையும் விழிகள்
கயல்களாய்....
இல்லையெனில்
கொக்கின் தவம்

கைத்தொலைப்பேசியில்
கலையும் முகங்கள்

பி.எஸ்.பி.யில்
வெற்றுலகப் பிரவேசம்..

மடிக்கணினியில்
உலகச்சுற்றுலா...
அவசர அலுவல்கள்...

அருகில் துணை
சின்னதாய்
ஒரு தேடல்...
சில தொடுதல்கள் (நெருடல்கள்)
காதல் மாயையில்
பூப்பெய்யும் 

பல மொழிகள்
ஈரச்சந்தையாய்
காதில் விழுகின்றன..
நமது மொழி
நமக்கே மறந்துபோகிறது

சில தரவுகள்
பல பதிவுகள்
இங்கு
ஒவ்வொரு விநாடியும்
புதிதாய்ப் பூக்கின்றன

புறங்கள்
அழகாகிச் சிறக்கின்றன
அகங்களின் சருகுகளாய்
மனித நேயங்கள்.

                                   - சேகர்கவிதன்

வியாழன், 16 டிசம்பர், 2010

மீட்பு
காலப் பிளவுகளில்
வீழ்த்தப்பட்ட ஞாபகங்களை
மீள்பார்க்க கிளம்புகிறது மனம்

தினத் தற்கொலை
காலங்களின் முதுகில்
சவாரி செய்கிறது

பாதங்கள் பதிந்த
தடங்களின் மேல்
சுவடுகளைத் தேடுகிறது

வாழ்க்கைப் புதரின்
சிக்கல்களைத் துரத்தி
பதிவுகளைப் பகர்கிறது

இரவு தூக்கத்தின்
கனவுபடங்களின் உள் பாய்ந்து
மகிழ்வுகளைத் தூவுகிறது

விழித் தூறல்கள்
கை கட்டி காத்திருக்கின்றன
திறந்த கிணற்றுக்குள்

நடந்து வந்த பாதையில்
திரும்பிப் பார்த்தால்....

மீண்டும் மீண்டும்
புதிய தேடல்களே
மீளுகின்றன

வாழ்க்கை மட்டும்
இங்கு மீண்டபாடில்லை

மீண்டும் மீண்டும்
தொலைந்தாலும்
பயணம் மட்டும்
தொடர்கிறது

மரணம் கூட
இங்கு ஒரு முடிவல்ல
மற்றுமொரு
பயணத்தின் துவக்கம்

மன அசைவுகளின் அதிர்வுகள்
ஞாபகங்களை மட்டும்
இங்கு மீட்டெடுக்கின்றன


- சேகர்கவிதன்

கவிதை

எச்சங்கள்

காதற் காலங்களின்
சில காத்திருப்புகள்
இன்று என்னவோ
நினைவுகளின் எச்சங்களாக
நெருடுகின்றன.....

பக்கத்து வீட்டுக் காதல்
பள்ளிக்கூடக் காதல்
கல்லூரிக் காதல்
பணியிடத்துக் காதல்
பெற்றோர் பார்த்தக் காதல்
கல்யாணக் காதல்
இப்படியாகப்
புதுப்புது பரிமாணங்கள்

மனம் மட்டும் நிலா
நினைவு மட்டும் வானம்
உணர்வுகள் மட்டும் அலை


தள்ளாடும் உடல்
ஊசலாடும் உயிர்

நிலையற்றக் காதல்
விழியோரம்
தேங்கிக் கிடக்கிறது

விழும்
ஒவ்வொரு துளியிலும்
காதலின் முகம்

தாலி கட்டியவள்
அழுகிறாள்
என் விழிக்கண்ணீருக்குக்
காரணம்
அவள்தானென்று.......



-  சேகர் கவிதன்