செவ்வாய், 7 மே, 2024



அம்மாவின் வாடகை வீடு

வகை: நாவல்

எழுத்து: இந்திரஜித்

நூல் மதிப்புரை: எம்.சேகர்

 

சிங்கப்பூரின் பிரமாண்டம் பல அடுக்குகளை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பாகும். வெளியில் இருந்து பார்ப்போரின் கண்களுக்குப் புலப்படாத பல கதைகள் இந்த அடுக்குகளின் கட்டங்களுக்குள் யார் பார்வைக்கும் படாமல் கிடக்கின்றன. அப்படிப்பட்டாலும் அதைப்பற்றி இங்கு யாரும் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. இந்திரஜித்தின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் பெருசாக ஏதும் நடக்காதவரை அதைப்பற்றி  யாரும் வாயைத் திறக்கப்போவதில்லை. வாழ்க்கையை அவர்கள் அதன் போக்கிலேயே விட்டு அதை வாழப் :பழகிக்கொள்கிறார்கள். அதுதான் அவர்களுக்கான வாழ்க்கை என்றாகிவிட்டது.

இத்தகைய வாழ்க்கைச் சூழலில் வாழும் பலரை நாம் தினமும் கடந்து போய்க்கொண்டுதான் இருக்கிறோம். மாறாக அவர்களும் நம்மைக் கடந்து போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த  அடிதட்டு மக்களின் ஒரு குறியீடுதான் இந்த அம்மாவின் வாடகை வீடு நாவலில் வரும் வாசுகி.

அம்மாவின் பிடிவாதத்தால் அவள் விருப்பத்திற்கு மாறான கல்யாணம்.

வாசுகிக்கு வந்த ஆத்திரத்துக்கு ஏழு பிள்ளைகள் பெற்றாள் இப்படித்தான் இந்திரஜித் நாவல் முழுக்கச் சொல்விளையாட்டுகள் புரிகிறார்.

அவளுக்குப் பிறந்தது ஏழும் ஆண் பிள்ளைகள். ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்ற சொலவடை ஒன்று உள்ளது. இதற்கு முரணான கதையமைப்பு இந்த அம்மாவின் வாடகை வீடு. சிங்கப்பூரில் வீடு வாங்க வசதியில்லாதவர்களுக்கும் ஆதரவற்றோருக்கும்தான் இத்தகைய  வீடமைப்புக் கழக வீடுகள் வாடகைக்குக் கிடைக்கும். 

இக்கதையில் வருபவர்கள் தங்கள் வாழ்க்கைக்குத்  தேவையானவை எவை எனக் கண்டறிந்து அதையே பற்றிக்கொள்ளப் போராடுகிறார்கள். சமூகத்தில் வாழ்க்கை எனும் நெருக்கடியைச் சந்திக்கும்போது  ஆற அமர சிந்தித்து முடிவெடுக் அவகாசமில்லை. சுனாமியில் சிக்கியவன் கிடைத்ததைப் பற்றிக்கொண்டு போராடுகிறான். இதுதான் இந்த வாழ்க்கையின் இருப்பு. தங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுக்க காலகாலமாய்ப் பின்பற்றி வந்த மரபையும் பண்பாடுகளையும் வாழ்வியல் விழுமியங்களையும் சிந்திக்கவியலாமல் நடைமுறைகளை மீறி தன்னிச்சையாக முடிவெடுத்துக்கொள்கிறார்கள். மனிதர்கள் தங்களின் இருப்பை நிலைநிறுத்த தேர்ந்து எடுத்த இருப்பு நிலைதான் இருப்பியல் வாதம் அல்லது இருத்தலியல் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் இந்த நாவலை ஓர் இருத்தலியல் நாவலாக வகைப்படுத்தலாம். இந்நாவலில் வரும் கதாபாத்திரங்களும் தத்தம் இருப்பைத் தேர்ந்தெடுத்து அதன்தன் வழியில் பயணிக்கின்றன. பல தங்கள் இலக்கை அடைகின்றன. சில தடம் புரள்கின்றன.

வாழ்க்கையில் மேடுபள்ளங்கள் இருந்தாலும் செல்வங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உழைப்பே பிராதானமாக இருந்தாலும் இல்லாமல் இருந்தாலும் அனைவரும் ஒரு புள்ளியில்  ஒன்றாகவே இணைகிறார்கள். அதுதான் ஏழு ஆண் பிள்ளைகளும் அம்மாவைப்பற்றிய எண்ணமே இல்லாமல் வயோதிக நிலைக்கு வந்துவிடுகிறார்கள். அம்மா பலபல வருடங்களுக்குப் பிறகு அவர்களைப் பார்க்கும்போது அம்மாவின் கூற்றை இப்படி அமைத்திருப்பார் இந்திரஜித்.

பூதம் பூதமாக ஆறு மகன்களும் நிற்பதைப் பார்த்துப் பயந்துவிட்டாள். குழந்தைகளைதான் பெற்றாள். இந்தப் பூதங்களை யார் பெற்றது? அதிலும் எல்லாமே கிழவர்கள்.

முதல் அத்தியாயத்தில் கடைசி மகன் ராஜாவின் வரவோடு தொடங்கும் கதை, இறுதி அத்தியாயத்தில் ஆறு மகன்களின் வரவோடு நிறைவுபெறுகிறது.

இங்கு நிறைவு பெறுவது நாவல் மட்டும்தான். வாசுகி, நளினாகுமாரி மற்றும் நளினாகுமாரியின் மூன்று பெண்பிள்ளைகள் வாழ்க்கை இன்னும் அந்த அடிதட்டு கட்டுக்குள்ளேயே சிக்கியிருக்கிறது.

ஒரு பொருளை உருவாக்குவதற்கு பலவேறு மூலப்பொருள்கள் தேவைபடும். அதுபோலத்தான் வாழ்வில் கண்டவை, கேட்டவை, அனுபவித்தவை என இவைகளோடு கற்பனைத்திறனையும் ஒன்றாகக் கோர்ப்பது இலக்கியப் படைப்பாகும். அத்தகைய இலக்கியப் படைப்பின் ஒரு வகை நாவலாகும். இந்திரஜித்தின் இந்த நாவல் கதையின் தொடக்கத்தில் வாசுகி என்ற ஒரு தாயின் ஆளுமையையும் பிடிவாதக் குணத்தையும் பிறகு அவளின் இயலாமையையும் அதனுடன் சேர்ந்த வைராக்கியத்தையும் முன்வைத்து புனையப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றம் என்பது பெரிதும் கல்வியைச் சார்ந்துள்ளது என்பதை இந்த வாசுகியின் மனப்பான்மையின்மூலம் உணர்த்தியுள்ளார் நாவலாசிரியர். தன் பிள்ளைகளைப் படி படி என்று அவர் முரட்டுத்தனமாக முன்னெடுக்கும் பலவும் இந்நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது கல்வியின் அவசியத்தை உணர்த்த எடுக்கப்படும் முயற்சிகளாகவே பார்க்க முடிகிறது. எவ்வளவுதான் முயன்றாலும் கல்வியில் ஆர்வம் உள்ளவர்கள் ஆர்வமாகப் பயின்று வாழ்க்கையில் முன்னேறுவதும் ஆர்வமில்லாதவர்கள் தங்களுக்குப் பிடித்த வேறொன்றைப் பிடித்துக்கொண்டு நகர்வதும் இன்றைய கல்விச் சூழலில் இயல்பான ஒன்று. எது எப்படி இருப்பினும், வாழ்வின் விழுமியங்களின் நிலை என்ன? என்ற ஒற்றைக்கேள்வியை இந்த நாவலின் முழுக்கக் கேட்காமல் கேட்க வைத்துள்ளார் இந்திரஜித்.

பொதுவாகத் திறளாய்வாளர்கள் நாவலின் கதைப்பின்னலை நெகிழ்ச்சிப் பின்னல், செறிவுப் பின்னல் என இருவகையாகப் பிரித்துச் சொல்வார்கள். நாவலாசிரியர் இந்திரஜித் இந்த நாவலை நெகிழ்சிப் பின்னல் முறையில் அமைத்துள்ளார். கதைப்பின்னலைக் காரணகாரிய முறைப்படி அமைக்காமல் இடையறவுபட்டு நிகழ்ச்சிகளைக் கட்டமைத்து, கதை சொல்லலை முன்னும் பின்னும் நகர்த்திக்கொண்டேயிருக்கிறார். வசக மனங்களைத் தன் எழுத்தின் பக்கம் கவர்ந்திழுத்துக்கொள்கிறார்.

நாவலில் வருகின்ற வாசுகி, முன்வீட்டு காயத்ரி, இளைய மகன் ராஜா - நளினாகுமாரி, கணவர் முருகேசு கிராணி, வாசிகியின் மாமன் மகன் பகலே, மூத்த மகன் நாடய்யா -  முத்துலெட்சுமி, ஹென்றி, அவன் அப்பா சீன ராமர், குமார் மோகன் - பொன்னி, அப்பு - தாரகா, சீலன், துறவி சந்திரன், ஆறுமுகம் – சகுந்தலா என இவர்களோடு ரேட் ஹில் பகுதியில் வசித்து வந்த ஒரு சிட்டுக்குருவியையும் எலியையும்கூட இந்நாவலில் கதாபாத்திரங்களாக அறிமுகப்படுத்தியுள்ளார் இந்திரஜித்.

கதாபாத்திரங்களை மிகவும் நேர்த்தியாக ஒவ்வொரு அத்தியாயத்தில் அறிமுகப்படுத்தியிருப்பது சிறப்பு. சிக்கலில்லாத கதை சொல்லல். யாருடைய நியாயத்துக்காகவும் நாவலாசிரியர் வழக்காடாமல் அவரவர் போக்கில் கதையை நகர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது.

இந்திரஜித் எழுத்தில் வழக்கமாக இருக்கும் அங்கத மொழியும் எள்ளலும் துள்ளலுமான எழுத்து நடையும் இந்த நாவலிலும் இருக்கிறது. எளிமையான செல்லாடல்கள், சின்னச் சின்ன  வாக்கிய அமைப்புகள், இரண்டாம் மொழியாக தமிழைப் பயின்ற, பயிலும் சிங்கப்பூர் வாசகர்களுக்கு நல்லதொரு வாசிப்பனுபவத்தையும் வாழ்வனுபவத்தையும் கொடுக்கும்.

எடுத்துக்காட்டாக:

அம்மாவால் படிப்பு கிடைத்தது. படிப்பால் வேலை கிடைத்தது. வேலையால் மத்திய சேமநிதியும் மனைவியும் கிடைத்தன

பாரு தம்பி, எனக்கு நாற்பது வருஷமா நெஞ்சு வலிக்குது. வலிச்சா உனக்கு நெஞ்சு இருக்குன்னு அர்த்தம்

ஹென்றியின் அப்பா பட்டப்பகலில் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து வீட்டுக்குக் கூட்டி வந்துவிட்டான்

அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் சிங்கப்பூருக்கு அயோத்தி என்று பெயர் வைக்க வேண்டி இருந்திருக்கும்

சிங்கப்பூர் வாழ்க்கையை சிங்கப்பூருக்கான மொழிநடையில் கொடுத்திருப்பதற்கும் சிங்கப்பூரின் அடிதட்டு மக்களின் வாழ்க்கையின் ஒரு சிறுபகுதியை வெளிப்படுத்தியதற்கும் எழுத்தாளர் இந்திரஜித்திற்கு அன்பான நன்றியும் வாழ்த்தும்.

இங்கு நான் சொன்னது கொஞ்சம்தான். நாவல் உங்களுக்காகக் காத்திருக்கிறது. நாவலை வாசியுங்கள். என்னைவிட நாவல் உங்களிடம் நிறையவே பேசும்.


எம்.சேகர்

முனைவர் பட்ட ஆய்வாளர்

இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியத் துறை

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்.