ஞாயிறு, 27 மே, 2018

விமோசனம் – முஹைதீன்




விமோசனம் – முஹைதீன்
தமிழ் முரசு 27 – 05 – 2018


கேள்விக்கணைகளுடன் நம்மை நோக்கிப் பாயும் கதையின் தொடக்கம். கதாபாத்திரமே நோக்குநிலை பின்னணிமூலம் நம்முடன் தன் தரப்பு நியாயத்தை முன்வைத்து பேசும் உரையாடல் உத்தி. கதையின் பின்புலமாகச் சிங்கப்பூர்ச் சூழலும் அதன் சிக்கலும் இச்சிறுகதைக்கு முக்கியப் பலமாக அமைந்திருக்கின்றன.


கதைப்பொருள்:


சொல்லப்படும் கதை எதைப்பற்றியது என்பது கருப்பொருள். இதன் அடிப்படையில்தான் ஒரு சிறுகதை எத்தகைய வகையைச் சார்ந்தது என்பதை அறிய முடியும். அவ்வகையில் இச்சிறுகதையை ஒரு சமூகச் சிறுகதையாக அணுகலாம். சிறுகதைகள் பெரும்பாலும் சின்னஞ்சிறிய வட்டத்துக்குள் நிகழ்வதால் மனித உணர்வுகள் அதன் உறவுகள் சார்ந்தே அவை அதிகம் பேசுகின்றன.


சிங்கப்பூர்ச் சூழலில் இங்குள்ள சமூகத்திற்குப் பொதுவாக அனைத்து சமூகத்திற்கும் இந்த ஆலோங் (கடன் முதலைகள்) பிரச்சினை ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. அரசாங்கம் இவர்களை நோக்கி சட்டங்களை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் அவர்கள் போக்கில் அவர்கள் தங்களின் வியாபாரத் தந்திரங்களை ஒவ்வொரு சூழலுக்கும் ஒவ்வொரு விதமாக மாற்றியமைத்துக்கொண்டு செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களின் நடவடிக்கைகளில் நிறைய உயர்நிலைப்பள்ளி மாணவர்களையும் பகுதி நேரமாக வேலை பார்க்கவும் வைக்கின்றனர். மேலும், பெற்றோர் பெற்ற கடன்களை அவர்களால் கட்ட முடியாவிட்டால் பிள்ளைகளை வற்புறுத்தி கட்டாயப்படுத்தி தங்களுக்காக வேலை செய்ய நிர்ப்பந்திப்பார்கள். இவர்களின் தொல்லைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் உண்மை வலி தெரியும். நிம்மதி இல்லாத வாழ்க்கை, பயத்துடன் வாழும் வாழ்க்கை என அந்த வாழ்க்கை ஒரு நரக வாழ்க்கை. ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களின் நலத்தையும் நிம்மதியையும் சீர்குலைக்கும் ஒரு விஷயம் இது.


இக்கதை, கடன்முதலைகளிடம் சிக்கிக்கொண்டு அதிலிருந்து மீள முடியாத ஒரு நடுத்தர குடும்பத்தின் வாரிசை எந்த அளவுக்கு இப்பிரச்சினைப் பாதித்து, வாழ்க்கையைப் புரட்டிப்போட்டிருக்கிறது என்பதைக் கதைப்பொருளாகக் கொண்டிருக்கிறது.


கதைப்பின்னல்:


எவ்விதச் சிக்கலும் இல்லாமல் நேர்க்கோட்டில் பயணித்திருக்கிறது. கேள்விகளோடு தொடங்கும் கதை அதற்கான விடையைச் சொல்லி தன் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறது. இருப்பினும், தந்தை செய்த தவற்றிலிருந்து விடுபடமுடியாமல் அத்தவற்றைக்கொண்டே இச்சமூகத்தை வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் மகனின் செயல்களில் எதிர்மறை எண்ணங்களே அளவுக்கதிகமாகக் குடிகொண்டிருப்பதும் கதைப்பின்னலில் அதற்கான சூழல்களில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.


அப்பா – மகன் உறவை இன்னும் இடைவெளியோடு காட்டி, அம்மா – மகன் உறவவை இன்னும் அணுக்கமான ஓர் உறவாகக் காட்டிக் கதைக்கான பின்புலத்தை இன்னும் இறுக்கமாகக் கட்டமைத்திருக்கலாம். அப்படிச்செய்திருந்தால், கொலையையும் தற்கொலையையும் அவரவர் நியாயப்படி எப்படிவேண்டுமானாலும் அனுமானித்துக்கொள்ள போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும்.


பாத்திரப்படைப்பும் நோக்குநிலை பின்னணியும்:



மகன் குணசீலனின் கதாபாத்திரமே  இச்சிறுகதையை நகர்த்திச் செல்கிறது. அவனின் மனவோட்டத்திலேயே அவனது பார்வையிலேயே கதைசொல்லியும் தன் தடத்தைப் பதித்திருக்கிறார். கதாபாத்திரமே இக்கதையைச் சொல்லும் பாங்கு, வாசகர்களை இக்கதையினூடே இன்னும் அணுக்கமாக இணைந்துகொள்ள வைக்கிறது. கதாபாத்திரமே கதையை நகர்த்திச் செல்வதால் கதாசிரியரின் குறிக்கீடு இல்லாமல் கதை அதன் போக்கில்  கனக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.



நோக்குநிலை பின்னணி உத்தி கதைச்சொல்லிக்கு தன் கதையைச் சொல்வதில் போதுமான சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது. ஆனால், கதாசிரியர் முழுமையாக அச்சுதந்திரத்தைப் பயன்படுத்திக்கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது. மேலோட்டமாகச் சொல்லப்படும் சின்னச் சின்னச் சம்பவங்கள் கதைக்களத்தை கனமாக்கத் தவறிவிட்டதுபோல் தோன்றுகிறது. குணசீலனின் கதாபாத்திரத்தின்மீது வாசகர்களிடையே ஓர் அணுக்கமான உறவை ஏற்படுத்த தவறிவிட்டதாகப்படுகிறது. குணசீலன் தன் பக்க நியாயங்களை எவ்வளவுதான் நியாயமாக முன்வைத்தாலும் முரண்பட்ட அவன் கதாபாத்திரம் அந்த நியாயங்களை எல்லாம் பின்தள்ளிவிடுகிறது.


குறியீடு:


பெரும்பாலும் கதாசிரியர்கள் சில விஷயங்களை நேரிடையாகச் சொல்லாமல் குறியீடாகச் சொல்வார்கள். ஒன்றைப் புலப்புடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் கூறு குறியீடாகும். அவ்வகையில், இக்கதையின் தலைப்பே ஒரு குறியீடாக அமைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
இறுதியில் வரும்,
ஒரு வழியாகக் கரிசனப் பூமியில் விமோசனம் கிடைத்துவிட்டது’, என்ற வரிகளும்
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’, என்று இருமுறை வரும் வரிகளும்
இனி எது நடக்கப்போகின்றதோ அது நன்றாகவே நடக்கும் என்ற வரிகளும்
ஒவ்வொரு நாளும் கடைசிக் காட்சியாக இரண்டு மீட்டர் மணிலா கயிறும் எனக்குச் சலாம் போட்டுவிட்டுச் செல்கிறது போன்ற வரிகளும் இக்கதையில் ஒரு வகை குறியீடுகளாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன.


நிறைவாக, சிங்கப்பூர்ச் சூழலில் சிங்கப்பூர் எதிர்கொள்ளும் ஒரு சவாலான கதைக்கருவை வைத்துக் கதை பின்னி, அதை நமக்குள் கடத்திச் செல்ல பெரிதும் முயன்றுள்ளார் கதாசிரியிர் முஹைதீன். அதில் ஓரளவும் வெற்றியும் பெற்றுள்ளார். நம் நிழல்கூட ஒளி இருந்தால்தான் நம் அருகே துணை நிற்கும் போன்ற வரிகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. வெள்ளைச் சுவரில் என் கடந்தகால வாழ்க்கையின் பிம்பங்களைக் கண்டுகொண்டே இருக்கிறேன் என்கின்ற காட்சிப் படிமமும் நம் கண்முன்னே மீண்டும் கதையைத் தொடக்கத்திலிருந்து கொண்டு வந்து நிறுத்துகிறது. நல்ல கதை. படிப்பினைத் தரும் கதை. இளையோர்களுக்கு அறிவூட்டி வழிகாட்டும் கதை. பெற்றோர்களுக்கு எச்சரிக்கைக் கொடுக்கும் கதை. நம் வாழ்க்கையின் ஒரு பகுதியை வெளிச்சம் போட்டுக் காட்டும் கதை.


வாழ்த்துகள் முஹைதீன் சார்.


அன்புடன் எம். சேகர்

செவ்வாய், 8 மே, 2018

பிரியமுடன் – முஹைதீன் (தமிழ் முரசு – 06-05-2018) ஒரு பார்வை – எம்.சேகர்





பிரியமுடன் – முஹைதீன் (தமிழ் முரசு – 06-05-2018)
ஒரு பார்வை – எம்.சேகர்


ஒரு சிறுகதைக்கு ஒரு சம்பவம் அல்லது ஒரு மனநிலை முக்கியமானது. மேலும், சிறுகதைக்கு இருக்கவேண்டிய முக்கியப் பண்பு ஒருமைப்பாடு ஆகும். ஏதேனும் ஒன்று, மனச்சலனமாகவோ, மாற்றமாகவோ, பார்வையாகவோ, கணிப்பாகவோ ஏதாவது ஒன்றை மட்டும் நோக்கமாகக் கொண்டு சிறுகதையின் சம்பவங்கள் அமைந்திருக்கவேண்டும். மன நிலைகள், மன உணர்வுகள் என்று கூறப்படும் நிலையும் சுவைபடக் கதைசொல்லும் முறையும் சிறுகதையின் வடிவச் சிறப்பை மெய்ப்படவைக்கின்றன. அத்தகையச் சிறுகதைகளே விரைவில் மக்களின் மனத்தைச் சென்றடைகின்றன.


அவ்வகையில், உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்படும் சிறுகதைகளை உணர்வுக் கதைகள் என்கிறோம். குறிப்பிட்ட ஓர் உணர்வைச் சொல்லும் சூழல், அந்த உணர்வு தரும் விளைவு, அந்த உணர்வு தரும் அனுபவம் என கதைச்சொல்லல் திட்டமிட்டு மிகத் துல்லியமாகப் படைக்கப்படும் படைப்புகளில் ஒன்றாக இவ்வாரம் தமிழ் முரசில் வெளிவந்த சிங்கை எழுத்தாளர் திரு. முஹைதீன் அவர்கள் எழுதிய பிரியமுடன் சிறுகதையை வகைப்படுத்தலாம்.  இக்கதையில் சிறுமி காவேரி @ பிரியதர்ஷினியின் உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் மிக இயல்பாக அமைந்து கதைக்குச் சிறப்பைச் சேர்த்து வாசக நெஞ்சங்களை ஈரக்கசிவுகளால் நனைத்துவிட்டுச் செல்கிறது.


கதைக்கரு:


மாப்பஸான் இலக்கியம், ‘வாழ்வின் ஒரு சிறு துண்டினைக் காட்டினாலே போதும் என்கிறார். அவரின் கூற்றுக்கு ஏற்பவே இச்சிறுகதையும் அமைந்துள்ளது. அன்பு மடம் என்ற சிறுவர்களுக்கான ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்துவரும் காவேரி என்ற எட்டு வயது சிறுமியின் கதை மிகவும் நேர்த்தியான ஒரு நேர்க்கோட்டில் அதற்கே உரிய சம்பவங்களின் துணையோடு நகர்த்தப்பட்டுள்ளது. தன்னைத் தத்து எடுத்தப் பெற்றோர்களுடன் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு, பின் வேறொரு சூழலால் உந்தப்பட்டு மீண்டும் தன் பழைய அன்பு மடத்திற்கே திரும்பிச் செல்லும் ஓர் இறுக்கமான சூழலில் கதை நிறைவுபெறுகிறது. மேலும், சமூக யதார்த்தத்தின் தர்க்கரீதியான முடிபுகளை நேரிடையாக எதிர்நோக்கி, எடுத்துக் காட்டப்படும் சமூக யதார்த்த உண்மையை  அடித்தளமாகக் கொண்டு இந்த வாழ்வின் நோக்கையும் வாழ்க்கை முறைமையையும் மாற்றியமைக்க முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறது இக்கதை.


வாழ்க்கையை அதன் அடித்தளத்தை உள்ளது உள்ளவாறு ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் சிறுகதைகள் அமைக்கப்படலாம். அல்லது வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சமூகப் பொதுவான பிரச்சினைகளைக் காட்டாது வெறும் தனிமனிதப் பிரச்சினையாகக் காட்டலாம். அல்லது சமூக யதார்த்தத்தைக் காட்டுவதுபோல காட்டிவிட்டு பிரச்சினைகளைத் தனிமனிதப் பிரச்சினைகளாக மாத்திரம் சித்தரிக்கலாம். பாத்திர வார்ப்பு, பாத்திரங்களின் சமூக உறவு நிர்ணயம் ஆகியன மூலம் இவை சாதிக்கப்பெறலாம். இக்கதையில் இவையனைத்தும் சாத்தியமாக்கப்பட்டுள்ளது அதன் பலம்.


கதைப்பின்னலும் பாத்திரப் படைப்பும்:


சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சி  என்பது யாரோ ஒருவர் ஏதோ ஒன்றைச் செய்வதாகும். அதாவது, சம்பவம், செயல் என்பதன் அடிப்படையிலிருந்து தோன்றுவதாகும். இங்கே செயல் என்பது கதாபாத்திரத்தின் இயக்கமாகும். அச்செயல் ஏதோ ஒரு சிக்கலைத் தீர்க்கவோ அல்லது தீர்க்கும் நோக்கத்துடன் செயல்படுவதாகும். ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு பிரச்சினையைத் தீர்க்க ஒரு செயல் உண்டாகிறது. அந்நிகழ்ச்சியினால் இன்னொரு நிலை தோன்றுவது இயல்பானது. இச்செயல்கள் யாவும் கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்றதாகவும் படைப்பாளன் ஆய்ந்து பார்க்கும் வாழ்க்கைச் சூழலை அல்லது சிக்கலை விளக்குவதாக இருக்கும். எனவே பாத்திர வளர்ச்சிக்கு கதைப்பின்னல் மிகவும் அவசியமாகும்.


தர்ஷன் – பிரியா இருவருக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், காவேரியைத் தத்து எடுக்கிறார்கள். காவேரியின் பெயரைக்கூட தங்களுக்குப் பிறக்குப்போகும் குழந்தைக்காக வைத்திருந்த பெயரான பிரியதர்ஷினி என மாற்றி அழைக்கின்றனர். இரண்டு ஆண்டுகளில் பிரியா கர்ப்பமுற, கதையின் சிக்கல் இங்கு தனிமனித ஆசைகளின் பிரவகமாக உருவெடுத்து, பிரியதர்ஷினியை மீண்டும் காவேரியாக்கிச் சென்னைக்கே திருப்பி அனுப்பிவைக்கிறது.


காவேரியின் மனவோட்டமே கதையின் பெரும்பான்மையான இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால் அவள் சார்ந்த உணர்வுகளின் சாரல்கள் கதையை ஈரமாக்கிவிட்டுச் செல்வதை மறுப்பதற்கில்லை. எட்டு வயது சிறுமி, கதைச்சொல்லி சொல்வதுபோல் வயதுக்கு மீறிய தெளிவு கொண்டவள் என்பதால் அவளின் இறுதி முடிவும் தெளிவாகக் கதையில் தெளிக்கப்பட்டுள்ளது. காவேரி கதாபாத்திரத்தின் மாண்பை உயர்த்திப் பிடிக்கும் வகையில் சம்பவங்கள் கதைக்கேற்றார்போல் நன்கு திட்டமிடப்பட்டுள்ளது படைப்பாளனின் படைப்பாற்றல் திறனை மிகவும் சிறப்பாக நிறுவியுள்ளது. பெற்றோரின் அன்பை அனுபவிக்காமல் இருந்தாலும் மற்ற பிள்ளைகளிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்ளும் சுபாவம் உள்ளவள் என்ற அவளின் அறிமுகமும் காவேரி அக்காவின் சார்பில் என் தங்கச்சி பிரியதர்ஷினி பாப்பாவுக்கு இரண்டு முத்தங்களைக் கொடுத்துவிடுங்கள் என ஒரு தாளில் எழுதிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுவதிலும் அவளின் பாத்திரப்படைப்பு எங்கும் மாசுபடாமல் மிகவும் இயல்பான போக்கில் படைக்கப்பட்டுள்ளது.


அன்பு மடத்தின் மேற்பார்வையாளராக வரும் அண்ணாமலை அங்கிருக்கும் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்வு அமைத்துத் தருவதில் மிகுந்த அக்கறையுள்ளவராகச் சமூக நேயமிக்க ஒரு மனிதராகப் படைக்கப்பட்டிருப்பது ஒரு முன்னுதாரண கதாபாத்திரமாக இருக்கிறது. இதுபோன்ற சிறுவர் இல்லங்களின் பொறுப்பில் உள்ளவர்களுக்காகப் பொறுப்புணர்வைக் கொடுக்கும் ஒரு கதாபாத்திரம்.


கதையின் முரண்:


கதையின் பல இடங்களில் இந்த முரண் உத்திகளைக் காண முடிகிறது. சமூக உணர்வுகளின் பிரதிபலிப்பாக இவை இக்கதையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றாலும் ஒவ்வொன்றிலும் தனிமனித ஆளுமையே மிஞ்சியிருக்கிறது என்பது கதைக்குள் ஆழமாக உள்நுழையும்போது நமக்கும் புரிகிறது. தனி மனித உணர்வுகளின் விருப்பு வெறுப்புகளே சமூகத்தின் விருப்பு வெறுப்புகளாக நம் முன்னே அலை அலையாய் துள்ளி எழுகின்றன என்பதை உணர முடிகிறது.


மேடம் என்று காவேரி அழைக்கும்போது, இனி என்னை அம்மா என்றே அழைக்கவேண்டும் எனப் பிரியா கவேரியிடம் அன்பாகக் கூறுவதும், தங்கள் பிள்ளைக்கு வைக்க நினைத்த பெயரை காவேரிக்கு வைப்பதும் என காவேரியிடம் அன்பைப் பொழிந்த பிரியா – தர்ஷன் இருவரும் தங்களுக்குக் குழந்தைப் பிறக்கப்போகிறது என்றதும் காவேரியிடம் கொடுத்திருந்த அனைத்து அன்பின் வளையங்களையும் ஒவ்வொன்றாகக் கழட்டி எடுத்துக்கொள்வதுமான சம்பவங்கள் கதையின் முரணை இன்னும் வலிமையாக்கிக்காட்டுகின்றன.


தான் விருப்பப்பட்ட வாழ்க்கை, தான் கனவு கண்ட வாழ்க்கை, இனி அனைத்தும் வசப்படும் என்ற நிலையில் இருந்த பிரியதர்ஷினி பழையபடி காவேரியாகச் சென்னைக்குத் திரும்புவது என கதை முரண் அந்தச் சிறுமியின் வாழ்வை மீண்டும் பழைய இடத்தை நோக்கியே நகர்த்தியிருக்கிறது. இது தனிமனித குற்றமா? அல்லது சமூகத்தின் குற்றமா? என வாசகனை நோக்கித் தோட்டாக்களாகப் பாய்கின்றன சில கேள்விகள். கல்வி கற்பதால் மானுடம் நற்பண்புகளில் சிறக்கும் என்பது மூத்தோர் வாக்கு. ஆனால், இன்றைய சூழலில் நம் அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் காட்சிகள் அத்தகைய கூற்றை பொய்ப்பித்துவிடும் வகையிலேயே பலவும் இங்கு தினமும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன என்பது நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய கசப்பான உண்மைகளாகும். படித்தவர்களிடம் காவேரி வைத்த மதிப்பு எதிர்பார்ப்பு என்பது இச்சமூகம் அவர்கள்மேல் வைத்திருக்கும் மதிப்பம் எதிர்பார்ப்பும் ஆகும். படித்தவர்களான தர்ஷனும் பிரியாவுமே அந்தச் சின்னப் பிள்ளையின் நம்பிக்கையை உடைத்தெறிந்து சமூகத்தையும் உடைத்தெறிகிறார்கள்.


நிறைவாக,


சிறுகதையில் குதிரைப்பந்தயம்போல் தொடக்கமும் முடிவும் இருக்கவேண்டும் என்பார் திறனாய்வாளர் செட்ஜ்விக். இக்கதை இதற்கு ஏற்றார்போலவே தொடங்கிய இடத்திலேயே நிறைவை நோக்கி ஓடுகிறது. சிறுகதைகளில் செயல், பாத்திரம், கருத்து ஆகியவற்றிற்கிடையே தக்க இயைபு இருத்தல் அவசியம். இவையும் இக்கதையில் இயைந்தே செயல்பட்டிருக்கின்றன. இவை மூன்றும் நன்கு இணையப்பெற்றிருப்பதையே கலையம்சம் என்கிறார் கார்த்திகேசு சிவத்தம்பி. கதை சொல்லும் முறை, கதாபாத்திர வார்ப்பு, மொழிநடை வருணனை, அமைப்பாக்கம் போன்றவற்றில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு தான் சொல்ல வந்த கருத்துநிலைத் தெளிவு முஹைதீனிடம் உச்சமாக இச்சிறுகதையில் வெளிப்பட்டுள்ளது.


கதை முடிவிற்குப் பிறகும் இக்கதையாடலின் மொழியின் பின்னால் உள்ள ஒருவகை மௌனம் ஒரு மாபெரும் தாக்கத்தை வாசகரிடத்தில் ஏற்படுத்திவிடுகிறது. வாசிப்பின் சாத்தியங்களின் எல்லை இன்னும் அகலப்பட்டிருக்கலாமோ எனத்தோன்றும் சாத்தியக்கூறுகளையும் இங்கு நிராகரிப்பதற்கில்லை.


அடுத்து இக்கதையை வாசித்து முடித்தவுடன் மனத்தில் பட்ட இரண்டு விஷயங்கள்.


முதலாவது, இக்கதைக்கான கதைக்களம், கதையின் பின்புலம் தமிழ்நாட்டுப் பின்னணியில் இருக்கிறது. ஆனால், இக்கதைக்கருவைச் சிங்கப்பூர்ச் சூழலிலேயே மிகச் சிறப்பாக எழுதியிருக்கலாம்.


இரண்டாவது, கதைச்சொல்லி மூன்றாம் நபராக நின்றுகொண்டு கதையை நகர்த்தியிருக்கிறார். காவேரியின் கதாபாத்திரமே கதைச்சொல்லியாக வந்திருந்தால் இச்சிறுகதை இன்னும் நெருக்கமாக வாசகர்களைத் தன் பக்கம் ஈர்த்து கதைக்கான தாக்கத்தை வாசகரிடையே அதிகப்படுத்தியிருக்கும் என நினைக்கிறேன்.


வாழ்த்துகள் முஹைதீன். தொடர்ந்து எழுதுங்கள்.


அன்புடன்
எம்.சேகர்