ஞாயிறு, 11 அக்டோபர், 2015

பிரேமா மகாலிங்கத்தின் ‘மஞ்சள் வெயில்’ சிறுகதை – ஒரு திறனாய்வுப் பார்வை – எம்.சேகர்


பிரேமா மகாலிங்கத்தின் மஞ்சள் வெயில் சிறுகதை ஒரு திறனாய்வுப் பார்வை – எம்.சேகர்    
     
திருமதி பிரேமா மகாலிங்கம் சிங்கப்பூர்ப் புனைகதைகள் உலகிற்குப் புதிய வரவு. சிங்கப்பூரில் பிறந்து இந்த மண்ணிலே வளர்ந்தவர். 2013 இல் சிங்கப்பூர்த் தங்கமுனைப்பேனா போட்டியில் கவிதைப் பிரிவில் மூன்றாவது பரிசை வென்றவர். தங்கமீன் வாசகர் வட்டத்தின் மாதாந்திர கதை, கவிதைப் போட்டிகளில் பல பரிசுகளைத் தட்டிச் சென்றவர். மஞ்சள் வெயில்(28 ஜூன், 2015) தமிழ் முரசில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதையாகும். இந்தக் கதையை ஒரு திறனாய்வுப் பார்வையில் முன்னெடுத்துப் பார்க்கும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கட்டுரை.

பெரும்பாலும் சிறுகதைகளை நிகழ்ச்சியைச் சார்ந்தோ, சூழலைச் சார்ந்தோ, கதைமாந்தரின் பண்பு நலனைச் சார்ந்தோ, கருப்பொருளைச் சார்ந்தோ நான்காக வகைப்படுத்துவர் இலக்கிய ஆய்வாளர்கள். பிரேமா மகாலிங்கத்தின், ‘மஞ்சள் வெயில் கதை மாந்தரின் பண்பு நலன்களால் சிறப்புறும் சிறுகதை என்ற வகையைச் சார்ந்ததாகும்.

கதைச் சுருக்கம்

நான்கு வயதில் போலியோ என்ற நோயினால் பாதிக்கப்பட்ட சுந்தரம், தனது பனிரெண்டாவது வயது பிறந்தநாளுக்கு அப்பா வாங்கிக் கொடுத்த சக்கர நாற்காலியைத்தான் இன்றுவரை பயன்படுத்தி வருகிறான். பழசானாலும் அதை மாற்ற அவனின் குடும்பச் சூழல் இடம்தரவில்லை. பணிபுரியும் வேலையிடத்தில் இன்னொரு மாற்றுத் திறனாளியான அகிலா, மின் சக்கரவண்டியில் வருவதையும் போவதையும் பார்த்து தானும் அது மாதிரி ஒரு மின் சக்கரவண்டி வாங்கவேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து குறிப்பிட்டத் தொகையைச் சேமிக்கத் தொடங்குகிறான். தேவையான பணமும் சேர்ந்தது. நாளை மின் சக்கர வண்டியை வாங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு வீட்டுக்கு வரும்போது, கல்லீரல் அழற்சியினால் பாதிக்கப்பட்டு, மாற்று ஈரல் உறுப்பு தானத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கும் அண்டைவீட்டுக்காரர் ரஹ்மானின் பேரன் நான்கு வயது ஒஸ்மானை எதேச்சையாகப் பார்க்கிறான். மறுநாள் காலை தான் சேமித்து வைத்திருந்த பணத்தை அம்மாவிடம் கொடுத்து, ஒஸ்மானின் பெற்றொரிடம் கொடுக்கச் சொல்கிறான்.

கதைத் தொடக்கம்

தான் சேமித்து வைத்திருக்கும் பணத்தை பலமுறை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்ப்பவனாக சுந்தரம் கதையில் அறிமுகமாகிறான். எதற்காகவோ அவன் பணம் சேமிக்கிறான் என்பது மட்டும் ஆரம்பத்தில் சூட்சமமாகச் சொல்லப்படுவது சிறப்பான ஒரு தொடக்கமாக அமைகிறது. மேலும் அதன் தொடர்பாகவே நிகழ்காலப் போக்கிலேயே கதை சொல்லும் பாணியில் கதை வளருகிறது.


கருப்பொருள்

பெரும்பாலும் சிறுகதைகளில் ஒரு மையக்கருத்தை நோக்கியே கதையின் நகர்தல் இருந்தாலே போதுமானதாக இருக்கும். இவ்வகையில் இந்தக் கதையின் கருப்பொருளும் பழைய சக்கரவண்டியினால் சுந்தரத்திற்கு நேர்கின்ற சிரமங்களும் இடர்பாடுகளும் உடல் உபாதைகளையும் நமக்குள் நுழைத்து, அவனின் ஒரே குறிக்கோளான மின் சக்கரவண்டியை வாங்கவேண்டும் என்ற ஒரே மையக்கருத்தோடு பயணிக்கிறது.

கதையின் போக்கு

சுந்தரம் என்ற கதாபாத்திரம் மூலமாக தெளிந்த நீரோடை போன்ற நடையால், எழுத்தாளரே கதை சொல்லும் பாணியில் கதை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவனின்  தற்காலச் சம்பவங்களோடு பின்னோக்கிப் பார்க்கும் உத்தியின் மூலமாகவும் கதை நகர்த்தப்பட்டுள்ளது.

கதையின் பின்புலம்

இக்கால சிங்கப்பூர் சூழலில் இன்றும் இனி என்றும் பொருந்தும் தன்மையுடனே விளங்குகிறது. சிங்கப்பூரின் அரசாங்கக் கொள்கைக்கேற்ப இன நல்லிணக்க அடிப்படையில் அனைத்து மனிதர்களையும் நல்ல மனித நேயமிக்க சிங்கப்பூர்க் குடிமக்களாகவும் உருவாக்குவதற்கு ஏற்ப இக்கதையின் பின்புலம் பொருந்தியே அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான ஓர் அம்சமாகும்.

பாத்திரப்படைப்பு

இக்கதையைப் பொருத்தவரை காலத்திற்கு ஏற்ற ஒரு கருப்பொருளும் அக்கருப்பொருளுக்கு ஏற்பக் கதையைச் சுமந்து செல்ல ஒரு முக்கிய கதாபாத்திரமும் படைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. மாற்றுத் திறனாளி சுந்தரம் பிரதான கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரத்துக்குத் துணையாக அம்மா கோவிந்தம்மாள், தங்கை மைதிலி, அலுவலகத் தோழர்களான அகிலா, சாமி, மேலாளர் வாங், அண்டை வீட்டுக்காரர் ரஹ்மான், அவர் மனைவி மைமுனா மற்றும் பேரன் ஓஸ்மான் போன்ற கதாபாத்திரங்களை உயிரூட்டி விட்டிருக்கிறார் கதாசிரியர்.

நாம ஒண்ணும் பெரிய பணக்காரங்க இல்ல, கொஞ்சம் சிக்கனத்தைப் பத்தி உம்மவளுக்கு சொல்லிக்கொடு, செல்லம் கொடுத்துக் கெடுத்திடாதே,’ என வரும் சுந்தரத்தின் கூற்று நடுத்தர வர்க்கத்தின் குரலாகவும் அப்பாவின் மரணத்திற்குப் பிறகு குடும்பப் பொறுப்புகளைச் சுமக்கும் ஒரு மாற்றுத் திறனாளியின் குரலாகவும் ஒலிக்கிறது.

அம்மா கோவிந்தம்மாள், ‘பஸ் ஸ்டாப் வரைக்கும் துணைக்கு வரட்டா.. எனத் தயங்கி நிற்கும் காட்சி யாரும் தன்மேல் பரிதாபம் காட்டுவதை விரும்பாத தன்னம்பிக்கை மிகுந்தவனான சுந்தரத்தின் பண்பு நலன்களைக் காட்டுவதோடு மற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் இருக்கவேண்டிய தன்னம்பிக்கை மனோபாவத்தையும் சுட்டுகிறது.

மின் தூக்கியில் அண்டை வீட்டாருடன் அவன் உரையாடும் விதம் அவர்களோடு அவன் கொண்டுள்ள நெருக்கமான உறவைக் காட்டி சிங்கப்பூரர்களின் நல்லிணக்க உறவிற்கு ஓர் உதாரணமாகச் சொல்லக்கூடிய நற்பண்பையும் அவன் கொண்டுள்ளதைக் கதை பதிவு செய்கிறது. மேலும் தான் பயன்படுத்தும் அந்தப் பழைய சக்கர நாற்காலியை அவன் பராமரிக்கும் விதமும் நம்மை மெய்சிலிர்க்கவைக்கிறது. ஓர் அஃறிணைப் பொருளின்மீது அன்பு காட்டும் பண்பாளனாகவும் அந்த நாற்காலியோடு நட்புப் பாராட்டி உரிமையோடு கடிந்து கொள்ளும் நண்பனாகவும் அவனின் பண்புநலன் சித்தரிக்கப்பட்டுள்ளது. சுந்தரத்தின் கதாபாத்திரம் படிப்படியாக மெருகேற்றப்பட்டு கதையின் உச்சத்திற்குத் தயார்படுத்தப்படும் விதத்தில் கதாசிரியரின் பாத்திரப் படைப்புத் திறன் இக்கதையில் நன்கு வெளிப்பட்டுள்ளது.

கோவிந்தம்மாள் சுந்தரத்திடம் வெகுஇயல்பாகப் பேசினாலும் அவளுக்குள் அவள் அழுவது தாய்மையின் விம்மல்களாகும். அவனின் தன்னம்பிக்கையை நினைத்து வியந்தாலும் அவன் கைகளை மடக்கி உந்தி உந்தி நகருவதைப் பார்த்து உள்ளுக்குள்ளேயே வெம்பி விம்பியது அவளது பெற்ற மனம்போன்ற வரிகள், மாற்றுத் திறனாளிகளைப் பெற்றெடுத்த பெற்றோர்களின் குரலாக நம் மனத்தையும் நெகிழ வைக்கின்றன.

தங்கை மைதிலியின் கதாபாத்திரம், இக்கால சிங்கப்பூர் மாணவர்களின் பிரதிநிதியாகவே வருகிறது. தற்போதைய கல்விச் சூழலில் அதிநவீனத் தகவல் தொழில்நுட்பம் மிகவம் அத்தியாவசியத் தேவையாக இருப்பதை, ‘‘டீச்சரே வாட்ஸ் அப்ல த்தான் தகவல் சொல்றாங்க’’ என்று வரும் வரிகள் எடுத்தியம்புகின்றன.

அலுவலக நண்பர்களின் கதாபாத்திரங்களான அகிலா, சாமி மற்றும் மேலாளர் வாங் போன்றோர், சிங்கப்பூரின் நல்லிணக்க உணர்வுக்கும் மனித நேயமிக்க மனத்துக்கும் நல்லதொரு பாத்திரப் படிமமாகிறார்கள்.

கதையின் முரண்

கதையின் தொடக்கத்திலிருந்தே சொல்லப்பட்டுவரும் அந்தப் பணச் சேமிப்புக்கான காரணங்களும் அதற்காகச் சுந்தரம் பல இன்னல்களைப் பொறுத்துக்கொண்டு நம்பிக்கையோடு கடக்கையில், அனைத்தும் கூடிவரும் வேளையில் கதையின் முடிவில் வந்து விழுகின்றது இக்கதையின் முரண். இதுவே இக்கதையின் திருப்புமுனையாகவும் அமைந்துவிடுகிறது.
மின் சக்கர வண்டியை ஆன் லைனில் ஆர்டர் செய்யவேண்டும். சுந்தரத்திடம் கடன் அட்டை இல்லாததால், திரு வாங்கின் கடன் அட்டையைப் பயன்படுத்தி வாங்கலாம் என்ற ஏற்பாட்டுடன் அன்றளவில் எல்லாம் சரியாக நடக்க, விடிந்ததும் சுந்தரம் தன் அம்மாவிடம், ‘’இந்தப் பணம் என்னைவிட ஓஸ்மானின் பெற்றோருக்குப் பேருதவியாக இருக்கும். நீங்களே அவங்ககிட்ட கொடுத்திடுங்க’’ என்பதோடு கதை முடிவடைகிறது.


கையாளப்படும் உத்தி

எதிர்பார்ப்பு நிலை (Suspense) சிறுகதைகளின் மிகச் சிறப்பான கூறுகளில் (Element) ஒன்றாகும். இக்கதையின் போக்குப் படிப்பவர் மனத்தில் ஒரு வித ஆர்வத்தை தூண்டும்படியாக இருக்கிறது. மேலும், இக்கதையின் போக்கு முரண் (Conflict) எனும் உத்தியை நோக்கி மிகவும் நுணுக்கமாகவும் நகர்த்தப்பட்டுள்ளது.
படைப்பாக்கத்தில் ஒரு படைப்பாளன் தான் சொல்ல வந்த கருத்தைக் கலைநயமிக்கதாகப் படைப்பதற்கும் மையக்கருத்தை வளர்த்துச் செல்வதற்கும் உத்திமுறைகள் துணை செய்கின்றன. இக்கதையின் தொடக்கத்தில் நிகழ்காலச் சம்பவம், பின்னோக்கிப் பார்த்தல் மீண்டும் நிகழ்காலம் என உத்திகள் செயல்பட்டுக் கதையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

சமூகப் பார்வை

மனிதச் சமுதாயத்தைப் பண்போடும் அன்போடும் பரிவோடும் பாசத்தோடும் அபிமானத்தோடும் ஆதரவோடும் நல்வழிப்படுத்தவல்ல அந்தரங்கப் புனித மனம் படைத்த ஒரு படைப்பாளன்தான் ஒரு சமூதாயத்தின் உண்மையான ஆன்மாவாகத் திகழ முடியும் என சுதந்திரம் எனும் வார ஏட்டின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் பூவை. எஸ். ஆறுமுகம். சமூகத்தில் புரையோடிக் கிடக்கின்ற பிரச்சினைகளுக்கு மனிதாபிமானத்துடன் தீர்வு காணமுயலும் தார்மிகப் பொறுப்புணர்ச்சிமிக்க ஓர் எழுத்தாளராகவே இக்கதையின் படைப்பாளியைக் காணமுடிகிறது.

ஓஸ்மான் என்ற சிறுவனின் தாக்கம் கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டச் சூழலுக்கு இட்டுச்சென்று முடிவில் சிங்கப்பூர்ச் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களுக்கும் மனித நேயத்திற்கு நல்லதொரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என வரும் பாடல் வரிகளுக்கு மனிதர்கள் ஆதாரப் புருஷர்களாக விளங்கும் இக்காலக் கட்டத்தில், மாற்றுத் திறனாளி சுந்தரத்தின் வாயிலாக, பண்பட்ட மனிதன் எப்படி வாழவேண்டும்? என்பதை இக்கதைப் படம் பிடித்துக் காட்டுகிறது. மேலும் கம்பத்து வாழ்க்கையிலிருந்து அடுக்குமாடி வீட்டுக் குடியிருப்புகளுக்கு மாறும் சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கையின் வளர்ச்சி நிலையையும் இந்தக் கதை பதிவு செய்துள்ளதையும் காணமுடிகிறது.

மொழி நடை

ஒரு படைப்பு என்பது மக்களை எளிதில் சென்றடைய வேண்டுமென்றால் அங்குப் புரிதல் என்பது நிகழ்த்தப் பட்டிருக்கவேண்டும். அதற்கு இயல்பான மொழிநடை அவசியமாகும். அந்த வகையில் இக்கதையில் எடுத்தாளப்பட்ட மொழி நடை என்பது இயல்பான மொழி நடையில் எழுத்துத் தமிழிலும் பேச்சுத் தமிழிலும் கதையை எளிதாக வாசித்துப் புரிந்துகொள்ள உதவியிருக்கிறது.

ஏண்டா, அந்த பணம் குட்டியா போடபோவுது, எண்ணி எண்ணி நோட்டு தேஞ்சிடபோகுது மற்றும் இருடி, உன்ன காராங்கோணிகிட்ட........ போன்ற பேச்சுத் தமிழ் மொழிநடை கதையில் பல இடங்களில் கையாளப்பட்டுள்ளது.
 
தலைப்புப் பொருத்தம்

சூரியனின் மஞ்சள் நிற ஒளிக்கதிர்கள், ஓஸ்மானின் மூக்கில் பொருத்தப்பட்டிக்கும் வெள்ளை நிற டியூப் பின் மேல் பட்டு, இள மஞ்சள் நிறமாகச் சுந்தரத்தின் கண்களுக்குத் தெரிந்தது எனக் கதாசிரியர் சொல்வது படைப்பாளனின் ரசிக்கும் தன்மைக்கும் தான் உணர்ந்ததை வாசகனிடம் கடத்திச்செல்ல அவர்கொண்ட கடப்பாட்டையும் காட்டுகிறது. இந்தக்காட்சியே கதையின் தலைப்பாகவும் உருமாற்றமும் பெற்றுள்ளது.

நிறைவு


சிங்கப்பூர்ப் புனைகதை உலகிற்கு இவர் புதியவர் என்றாலும் சிங்கப்பூர் இவருக்குப் புதியது அல்ல. நம் மண்சார்ந்த கதைகள் நம் வாழ்க்கையைப் பதிவு செய்யும்போதுதான் அது சிங்கப்பூரின் தனித்தன்மையைக் கட்டிக்காத்து தனக்கான ஓர் உலகலாவிய அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். இந்தப் பயணத்தையொட்டிய பிரேமாவின் எழுத்தாற்றல் மேன்மேலும் சிறப்புற்றுச் சிங்கப்பூர் இலக்கியத்தில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் இக்கட்டுரையை நிறைவுசெய்கிறேன்.