ஞாயிறு, 26 அக்டோபர், 2014

அப்பாவின் படகு

சிறுகதை : அப்பாவின் படகுஎம்.சேகர்

அப்பா மீண்டும் பழையபடி ஆரம்பித்துவிட்டார். இந்த வார இறுதியில் தஞ்சோங் ஈராவ் கம்பத்துக்குச் சென்றபோது பலகைக் கடைக்காரன் ஆமெங்கின் பேச்சின் ஊடே என்னால் இதை அறிந்துகொள்ளமுடிந்தது.

அம்மாவுக்குக் கூட இந்தப்போக்குப் பிடிக்வில்லை. முன்பிருந்தே அண்ணனுக்கும் இது பிடித்ததில்லை. ஏன் எனக்கும்கூட இது பிடிக்கவில்லைதான். ஆனால் அப்பாவுக்கு முன் இந்தப் பிடித்தமில்லை என்பது எதுவும் செய்ய முடியாத ஒரு சூழல்தான். அம்மாவுக்கு அப்பாவை எதிர்த்துப் பேசவோ தட்டிக்கேட்கவோ திராணியில்லை. அவள் வளர்ந்து வாழ்ந்துவரும் சூழல் அப்படி. அம்மாவைப் பொருத்தவரை மனைவி என்பவள் கணவனைத் தட்டிக்கேட்கவோ குற்றம் சொல்லவோ கூடாது. அப்படி இருப்பதுதான் நல்ல மனைவியின் பண்பாகும் என நினைப்பவள். ஆனால், நானும் எதுவும் சொல்லாமலும் செய்யாமலும் இருந்ததற்குக் காரணம் அவர் என் அப்பா. அப்பா என்பதால் அவரின் மேல் எனக்கிருந்த மரியாதை. ஆனால், இந்தப் பிடித்தமில்லாதது எனக்குள் ஒரு வன்மமாக வளர்ந்துகொண்டுதான் இருந்தது என்பதும் உண்மைதான்.

பல சமயங்களில் நான் வேலைக்குச் செல்ல காலணிகளின் கயிறுகளைக் கட்டிக்கொண்டிருக்கும்போது அம்மா தன் வெறுப்புகளைக்காட்ட கதவோரம் நின்றுகொண்டு என்னிடம் முணுமுணுப்பாள். வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் அப்பாவைப் பற்றி ஏதாவது குறை சொல்வாள். அம்மாவின்இந்த வெறுப்பு கோபம் எல்லாம் அப்பாவின் முதுகுக்குப் பின்தான்.
அப்பாவிடம் சொல்லவேண்டியதுதானே!
பலதடவை அம்மாவை வற்புறுத்தியும் உள்ளேன். அம்மா அமைதியாக இருந்துவிடுவாள். சில வேளைகளில் அவளையும் மீறி,
ம்ம்ம்..உங்க அப்பாவுக்கு என்ன மூளையா இல்லை,’ என்பாள்.

அப்பா வீட்டின் முன் படகு செய்வதற்கான ஆயத்த வேலைகளை ஆரம்பித்துவிட்டிருந்தார். ஒரு பதினாறு அடி நீளத்தில் இருக்கும் ஒரு படகு. படகின் அடிப்பகுதிக்கான வேலைகளை முடித்துவிட்டிருந்தார். அதன் துடுப்பை ஆமேங் கடையில் கடனுக்கு வாங்கிவந்திருந்த உறுதியான கம்புகளின் மூலம் உருவாக்கியிருந்தார். முன்பெல்லாம் காட்டிற்குச் சென்று வேர்க்கம்புகளைத் தேடிக்கண்டுபிடித்து அதன் மூலம் துடுப்புகளை உருவாக்குவார். சுதந்திரத்துக்கு முன்பெல்லாம் பொங்கோல் ஆற்றின் வழியாக ஜோகூர் நீரிணைக்கு வந்து  அதைக்கடந்து அடுத்த கரையிலுள்ள பாசீர் கூடாங் காட்டுப்பகுதிகளுக்குச் சென்றும் வருவார். சுதந்திரத்திற்குப் பின் பூலாவ் ஊபினின் காட்டுப் பகுதிகளுக்கும் செல்வது உண்டு. இப்போது வயதுமூப்பின் அசதி அல்லது இயலாமை முன்புபோல் அவரால் காட்டிற்குச் சென்று வேர்களையும் கம்புகளையும் தேடமுடிவதில்லை.

படகுக்கான பதினாறு அடி நீளமுள்ள அந்தப் பலகைகள் ஒரு வெள்ளி இரண்டு வெள்ளி அல்ல. அதிக விலையுள்ளவை. ஆனால் அப்பா பணத்தை ஒரு பொருட்டாக நினைக்கமாட்டார். ஆமெங்கிடம் பேசி, மொத்தமாக முடிந்தபிறகு கொடுப்பதாகக் கூறி அல்லது பாதிப் பணத்தையாவது கொடுத்துப் பொருட்களைக் கொண்டுவந்து விடுவார்.

அம்மாவுக்கு அப்பாவிடம் பிடிக்காத இன்னொரு குணமும் உண்டு. வேலைகளைச் செய்து விட்டு அப்படியே போட்டுவிடுவார். வீட்டின் முன் ஒரே பலகைத் துண்டுகளாகவும் சின்னச்சின்ன சட்டங்களாகவும் இளைத்துப் போடப்பட்ட பலகைகளின் குப்பைகளாவும் ஆணிகளாவும் சிதறிக்கிடக்கும். அந்தி சாயும் பொழுதில் அம்மாதான் அனைத்தையும் கூட்டிச் சுத்தம் செய்தாக வேண்டும். வயதான இன்றும்கூட அம்மா அப்படித்தான் செய்துகொண்டிருக்கிறாள். அப்பா இதைப் பற்றியெல்லாம் ஒரு நாளும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

என்னுடைய பள்ளிப் பருவத்திலிருந்து இப்போது நான் வேலைக்குப் போகும்வரை அப்பா எத்தனை படகுகளைச் செய்திருக்கிறார் என்பதை என்னால் உறுதியாகக் கணக்கிடமுடியவில்லை. ஆனால் அவர் செய்யும் ஒவ்வொரு படகையும் முறையாகப் பராமரிக்க மாட்டார். இதைத் தவிர நல்ல மனம் அப்பாவுக்கு. யார் வந்து கேட்டாலும் மீன் பிடிப்பதற்காகப் படகைக் கொடுத்து விடுவார். அப்படிக் கொடுத்து கொடுத்தே எல்லா படகுகளும் சேதமாகிப்போகும். கடைசியில் எதற்குமே பயனில்லாமலும் போகும். இது ஒன்று இரண்டல்ல. எல்லாமே அப்படித்தான்.

அப்பா வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார். வேலையிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார். ஆனால் வேலை செய்யவேண்டும் என்ற எண்ணம் இல்லையென்றால் அனைத்தையுமே அப்படியே பலநாட்களாகப் போட்டுவிடுவார். அவரின் இந்தப் பழக்கம் அவரின்மேல் எங்களுக்கிருந்த வெறுப்பை மேலும் அதிகப்படுத்தியிருந்தது. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை அவர் மாறவில்லை. அப்படியேதான் இருக்கிறார். அப்படியேதான் வாழ்கிறார். என்ன செய்வது? அப்பா என்றும் அப்பாதானே!
அப்பாவின் செயல்பாடுகளில் எனக்கு விருப்பமில்லாமல் இருந்தாலும் அவரின்மேல் எனக்கிருந்த அன்பு என்பது அப்படியேதான் இருந்தது. வயதான இந்த முதுமையிலும் எதைப்பற்றியும் கவலைப்படாமலும் நட்டம் ஆதாயம் என எதையும் சிந்தியாமலும் அவர் பாட்டுக்குத் தனக்குப் பிடித்தமானதைச் செய்வதில் ஆர்வமாய் இருக்கிறார்.

அப்பா கடலில் மீன் பிடிக்க மட்டும் செல்வதில்லை.  அருகில் இருக்கும் ஆறுகளில் தூண்டில் போட்டும் மீன்களைப் பிடிப்பார். பள்ளி விடுமுறை நாட்களில் என்னையும் தன்னுடன் அழைத்துச் சென்று தூண்டில் போடும் உத்திகளைச் சொல்லித் தருவார். வெயில் காலங்களில் நீர் வற்றிய ஆற்றின் சேற்றில் எப்படித் தவழ்ந்து செல்வது என்றும் கற்றுக்கொடுத்துள்ளார். அருகில் இருக்கும் பூலாவ் ஊபின் காட்டுப்பகுதிக்குள் சென்று பல மூலிகைச் செடிகளையும் கொண்டுவந்து, அவரை நாடி வரும் நோயாளி நண்பர்களுக்கு மருந்தாகக் கொடுப்பார். அப்பா இப்படிப் பலவற்றையும் செய்து எதிலும் நிரந்தரமாகக் காலூன்றாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் செய்யும் அனைத்தும் ஏதோ ஒரு பொழுதுபோக்குக்காகச் செய்வது போலவே தோற்றத்தைத் தரும். அவர் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து அதில் முழுக்கவனத்தையும் செலுத்தியிருந்தால் இன்று அவர் வாழ்க்கை ஒரு நல்ல நிலையில் இருந்திருக்கும். இதனாலேயே அம்மா, அப்பாவை எப்போதும் பிழைக்கத் தெரியாத மனுஷன்னு சொல்லிக்கொண்டு இருப்பாள்.

முன்பு நான் படித்துக்கொண்டிருந்த காலம் அது. அப்பா ஒரு பெரிய படகை மிகவும் சிரமப்பட்டுச் செய்துகொண்டிருந்தார். விலையுயர்ந்த தரமான சட்டங்களாலும் தடிப்பான பலகைகளாலும் காட்டிலிருந்து கொண்டு வந்த வேர்க்கம்புகளாலும் பல நாள், கடுமையான உழைப்பிற்குப் பின் செய்து முடித்தார். அந்த வயதில் அந்தப் படகைப் பார்த்து நான் பிரமித்துப் போவேன். அப்பா படகுகள் செய்வதைப் பார்த்துப் பார்த்து மழைக்காலங்களில் வீட்டின் மூன் ஒடும் நீரில் காகிதப் படகுகள் எல்லாம் விட்டிருக்கிறேன்.
படகு தயாரானவுடன் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு கடலுக்குச் சென்று விடுவார். அப்பாவை விட அந்தப் படகை அவரின் நண்பர்கள்தான் அதிகமாகப் பயன்படுத்துவார்கள். அப்பா வாங்கி வைத்திருந்த விலையுயர்ந்த அந்த ஜப்பானிய வலையைக்கூட அவர்கள்தான் நிறைய பயன்படுத்தியிருப்பார்கள். படகுக்கும் வலைக்கும் வாடகைக்கூட அப்பாவின் நண்பர்கள் கொடுக்கமாட்டார்கள். அப்படியே இருந்தாலும் சில சமயங்களில் இரண்டொரு மீன்களை மட்டும் கொடுத்துவிட்டுப்போவார்கள். மூன்றே மாதத்தில் அந்தப் படகும் கரையோரம் சாய்ந்துபோய் எதற்கும் பயனில்லாமல் போனது.
நானும் என் அண்ணனும் எதுவும் சொல்ல முடியாத நிலை. நாங்கள் ஏதாவது சொன்னால் அப்பாவுக்குக் கோபம் வந்துவிடும். எங்களைப் பார்த்து, சுயநலமாகச் சிந்திக்காதீர்கள் என்று சத்தம் போடுவார். எல்லாப் படகுகளுமே இப்படித்தான். சில வேளைகளில் என்ன நினைப்பாரோ தெரியாது. செய்துகொண்டிருக்கும் படகுகளை நட்டத்திற்கே விற்றும்விடுவார். அவர் போட்ட காசுகூட வராது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இப்போது வீட்டின் முன் இன்னொரு படகு தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்தப் படகுக்கும் முந்தைய படகுகளுக்கு நேர்ந்த அதே கதி ஏற்படும் வாய்ப்பே அதிகமாகவும் உள்ளது.

அப்பாவிடம் பேசு, எதற்கு இந்த வீணான வேலை, நம் யாருக்கும்இதில் விருப்பமில்லை என்று சொல்
என்று அண்ணனிடம் சொன்னேன்.
ஆனால் அண்ணன் எதுவும் சொல்லவில்லை. அவர் விருப்பப்படி அவர் வாழட்டும் என அமைதியாக இருந்துவிட்டான். நான் இன்னும் பழையபடியே. சொல்வதற்கு எனக்கும் மனம் வரவில்லை.
உங்க அப்பாகிட்ட நீயே பேசவேண்டியதுதானே
என்றாள் அம்மா.
எனக்குத் தைரியம் போதவில்லை. இன்னும் நான் அவரை மதிக்கிறேன். ஆனால் என் மனத்துக்குள் வேர்விடும் அப்பா மீதான அந்த வன்மங்கள் என்னையும் அறியாமல் திமிறிக்கொண்டிருந்தன என்பதை பின்பொருநாள் நடந்த நிகழ்வு உறுதிப்படுத்தியது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை நான் பாத்தாம் தீவிற்குக் கிளம்பும்போது அண்ணனிடம் இருநூறு வெள்ளியைக் கொடுத்து வீட்டைப் பழுதுபார்ப்பதற்காகப் பலகைகளையும் சட்டங்களையும் வாங்கி வைக்கச் சொல்லியிருந்தேன். அடுத்த வாரம் வரும்போது சில வேலைகளை முடித்துவிடலாம் என்றிருந்தேன். மறுவாரம் நான் திரும்பியபோது, அண்ணன் வாங்கி வைத்திருந்த சில பலகைகளை அப்பா தன் படகுக்காகப் பயன்படுத்திக்கொண்டாரென்று அம்மா சொன்னாள். அப்பாமேல் எனக்கு அப்படித்தான் கோபம் கோபமாய் வந்தது. அப்பா பயன்படுத்திய அந்தச் சில பலகைகளினால் நான் மேற்கொள்ளவிருந்த வீட்டைப் பழுதுப்பார்க்கும் வேலை அப்படி ஒன்னும் முடங்கி போய்விடப்போவதில்லை. ஆனால் அப்பாவின் அந்தக் குணம். தான் கஷ்டப்பட்டுச் செய்வதை மிகச் சாதாரணமாக மற்றவர்களின் பயன்பாட்டிற்காகக் கொடுத்துவிடுவார். பின் அதன் கதி என்னாகும் என்பதும் எனக்குத் தெரிந்ததுதான். இதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை. என் அப்பாவின் உழைப்பு இப்படியே வீணாகிப் போவதை எத்தனை காலத்துக்குத்தான் நானும் பொறுத்துக்கொண்டிருப்பது. இன்று அப்பாவிடம் இதைப்பற்றிக் கண்டிப்பாகப் பேசப்போகிறேன் என்று அம்மாவிடமும் அண்ணனிடமும் பொருமிக்கொண்டிருந்தேன்.

பக்கத்திலுள்ள டவுனுக்கு தான் செய்யும் படகுக்காக ஆணிகளை வாங்க சென்றிருந்து அப்பா வீட்டிற்குள் நுழைந்ததும்,
வீட்டுக்கு வாங்கி வைத்திருந்த பலகைகளை எடுத்தீர்களா?’
ஆமா, இரண்டு மூன்று பலகைகள்தான். அப்புறம் காசு இருக்கும்போது நான் வாங்கி கொடுத்துவிடுகிறேன்
அந்தப் பலகைகளை என்ன செய்ய போகிறீர்கள்?’
படகுக்குப் பலகைகள் போதவில்லை
என்றவாறே தான் வாங்கி வந்திருந்த தினசரியின் பக்கங்களைப் புரட்டினார்.
எதுக்கு இப்ப இந்தப் படகு செய்யும் வேலை? எல்லாமே வீணான வேலைதான், உருப்படாத வேலை, வீட்ல இருக்குற யாருக்குமே உதவாத வேலை
என் மனத்திற்குள் இத்தனை நாட்களாக அழுத்திக்கொண்டிருந்த அனைத்தும் வார்த்தைகளாய் வெளியே உமிழ்ந்தன. நான் ஏன் அவரிடம் இப்படிப் பேசினேன். அப்பாவிடம் இப்படிப் பேசவேண்டும் என நான் நினைக்கக்கூட இல்லை. ஆனாலும் பேசினேன்.
எனக்குப் பிடிக்கல. இப்படிக் கஷ்டப்பட்டுச் செய்து, அப்புறமா யார் யாருக்கோ தானமா கொடுப்பீங்க. அப்புறம் பழைய குருடி கதவைத் திறடி கதைதான் இதுவும்
அப்பா எதுவும் பேசாமல் என்னை ஏறிட்டுப்பார்த்தார். அந்தப் பார்வை இதுவரை நான் பார்த்திராதது. ஆனாலும் எனக்குள் இருந்த ஏதோ ஒன்று என்னைப் பேசத்தூண்டிக்கொண்டே இருந்தது.
கொஞ்சமாவது குடும்பத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கிறீர்களா, இல்ல இந்தக் குடும்பத்தின்மேல் உங்களுக்கு அக்கறையாவது இருக்கா, எத்தனைப் படகு, இப்படிச் செய்து செய்து, ஆனா எல்லாத்தையுமே மத்தவங்க கேக்குறாங்கனு கொடுத்து கொடுத்து கடைசியில உங்களுக்குனு என்ன இருக்கு?’
அப்பா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். சமையலறையின் ஓரமாக நின்றுகொண்டு அம்மா அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தாள். அம்மாவிடமும் இப்படித்தான். பதில் சொல்வதைவிட அமைதியாகவே இருந்துவிடுவார். 
கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். எத்தனை மீன் பிடிக்கும் வலைகள். எல்லாமே எவ்வளவு விலை கொடுத்து வாங்குறீங்க. ஆனா ஏதாவது ஒழுங்கா இருக்கா. மத்தவங்களுக்குக் கொடுத்துக் கொடுத்து எல்லாமே பிஞ்சிப்போயி, கிழிஞ்சிக் கிடக்குது. அதுக்கெல்லாம் அவங்க பணமா கொடுக்குறாங்க? ஏம்பா நீங்க மட்டும் இப்படி இருக்கீங்க?’
சரி, அந்தப் பலகைகளுக்கான காசை நான் கொடுத்துவிடுகிறேன் அப்பா சொன்னார். அந்த வார்த்தையில் கொஞ்சம்கூட கோபம் இல்லை.
அப்பா அந்த இரண்டு பலகையோ இல்ல காசோ எனக்குப் பெருசில்ல. ஆனா, உங்க உழைப்புப்பா, அது மத்தவங்களால இப்படி வீணாகுதேன்னு ஆதங்கம்
அப்பா தினசரியை மேசையில் வைத்து என்னைப் பார்த்துவிட்டு வெளியே போய்விட்டார். அந்தப் பார்வையின் ஊடே இழைந்தோடியது வயது முதிர்ந்த ஓர் அப்பாவின் வலி.

சமையலறைக்கு வந்தேன். அம்மாவின் விழிகள் கண்ணீரால் நிரம்பியிருந்தன. என்ன என்று கேட்டதற்கு ஒன்றுமில்லை எனத் தலையை மட்டும் ஆட்டிவைத்தாள். மீண்டும் மீண்டும் பல முறை கேட்டபோது, அம்மாவின் பதில் நான் எதிர்பாராததாய் என்னை வீழ்த்தியது.
அப்பாகிட்ட இப்படிப் பேச எப்படிடா உனக்கு மனசு வந்துச்சு
அம்மாவை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அப்பாவின் செயல்களை வெறுத்தாலும் அவர்மேல் அன்பே அம்மாவுக்கு அதிகமாக இருந்தது. அதனால்தான் அப்பாவை அவள் எதுவும் கேட்பதில்லை. அப்பா அப்படி எந்த அன்பை அம்மாவின் மனத்தில் விதைத்தார்?

அந்தி மயங்கும் நேரம். கோழிக்கூண்டுகளில் கோழிகளையும் சேவல்களையும் அம்மா அடைத்துக்கொண்டிருந்தாள். அண்ணன்  எங்குச் சென்றான் என்று தெரிவவில்லை. முன்னால் இருக்கும் காக்கா கடையில் அவன் நண்பர்களோடு இருக்கலாம். அந்த வேளையில் அப்பா இரண்டு மூன்று பலகைகளைக் கஷ்டப்பட்டுச் சுமந்துகொண்டு வந்தார். அவர் பயன்படுத்திய அந்தப் பலகைகளுக்குப் பதிலாக. இதை நான் எதிர்பார்க்கவில்லை. மனத்துக்குக் கஷ்டமாக இருந்தது. வயதான அப்பாவை இப்படியெல்லாம் பேச எனக்கு எப்படி மனசு வந்தது. அவ்வளவு தூரம் நடந்துசென்று அந்தப் பலகைகளைச் சுமந்துகொண்டு வருகிறார் என்றால் எந்த அளவுக்கு என் பேச்சு அவரைக் காயப்படுத்தியிருக்கவேண்டும். அவர் என்னிடம் எதையுமே காட்டிக்கொள்ளாமல் எதுவும் பேசாமல் பலகைகளைக் கீழே வைத்தவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார். அம்மா என்னைப் பார்த்துவிட்டு அப்பாவின் பின்னாலேயே வீட்டுக்குள் நுழைந்தாள். அந்தப் பார்வையில் அவள் எனக்கு அம்மாவாகத் தெரியவில்லை. அப்பாவின் மனைவியாக மட்டுமே தெரிந்தாள்.

இதெல்லாம் நடந்தபின் இரண்டு வாரங்களாக நான் வீட்டிற்குப் போகவில்லை. அப்பாவின்மேல் இருந்த வெறுப்பால் அல்ல. வேலைப் பார்க்கும் கப்பல் பட்டறையில் புதிதாகக் கட்டிக்கொண்டிருக்கும் கப்பலின் சில பாகங்கள் சிங்கப்பூரில் இருந்து சனியும் ஞாயிறும் வரவிருந்ததாலும் கப்பலைக்கட்டும் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருந்ததாலும் என்னால் வீட்டிற்குப் போகமுடியவில்லை.
இரண்டு வாரத்திற்குப் பிறகு நான் வீட்டிற்குத் திரும்பியபோது, அப்பாவின் படகு அங்கு இல்லை. பழையபடியே ஆரம்பித்துவிட்டார் என எண்ணியவாறே வீட்டிற்கு வெளியே காலணிகளைக் கழற்றும்போது ஓசை கேட்ட அம்மா வாசலுக்கு வந்தாள்.
எப்படிடா இருக்க? இரண்டு வாரமா வீட்டுக்கு வரல, ஏன் அப்பாமேல் கோபமா?’
அதுவெல்லாம் ஒன்னுமில்ல. முடிக்கவேண்டிய வேலைகள் அதிகமாக இருந்தது. அதுதானே தவிர வேறெதுவுமில்ல. ஆமா எங்க அப்பாவோட படகு. செஞ்சி முடிச்சிட்டாரா?’
அது போன வாரமே தயாராகிவிட்டது. கம்பத்து மக்கள் யாரும் நம் படகைத் தொடுவதுகூட இல்லை. இப்பவெல்லாம் மீன்களை நான் வாங்கவேண்டியதே இல்லை. உன் அப்பா தினமும் ஆற்றுக்கும் கடலுக்கும் சென்று  மீன்களைப் பிடித்துக்கொண்டு வருகிறார்.
அம்மா சந்தோஷமாச் சொன்னாள்.
அப்பா எங்கம்மா?’
நேற்று மாலையில் கடலுக்குப் போனார். இன்னும் வரவில்லை
எனக்குச் சட்டென்று நான் பட்ட அனுபவங்கள் ஞாபகத்துக்கு வந்தன. கடலிலோ ஆற்றிலோ இருட்ட ஆரம்பித்துவிட்டாலே கொசுக்களின் ராஜ்யம்தான். படை படையாக வரும். அந்த இரவின் குளிரில் உடலிலுள்ள எழும்புகளெல்லாம் வெடவெடவென ஆடிப்போகும். அதுவும் அந்தச் சமயத்தில் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டால்......ஆனால் மீனவர்களுக்கு அதுவும் அப்பாவுக்கு அதுதான் வாழ்க்கை. அதுதான் அவர்களின் உலகமும். அப்பா வந்தவுடனேயே அன்று நான் நடந்துகொண்ட விதத்திற்கு அவரிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.
இரவு உணவைச் சாப்பிட்டப் பிறகு, அப்பாவிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி அம்மா கூறினாள். இப்போதெல்லாம் அடிக்கடி ஆற்றுக்கும் கடலுக்கும் தனியாகவே மீன் பிடிக்கப்போய் வருவதாகக் கூறினாள். அண்ணனைக்கூட அழைத்துச் செல்வதில்லையாம். படகை முன்புபோல் யாருக்கும் கொடுப்பதில்லையாம். துடுப்புகளையும் வலைகளையும் வீட்டிற்குக் கொண்டு வந்து விடுவாராம். படகைப் படகுத்துறையிலேயே சங்கிலியால் கட்டி வைத்துவிடுவாராம். அப்பாவின் மாற்றங்களை அம்மா பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தாள். எனக்கும் கேட்பதற்குச் சந்தோஷமாக இருந்தாலும் அன்று நான் பேசியதற்காகத் தன்னை அவர் வருத்திக் கொள்கிறாரோ என நினைக்கத் தூண்டியது. என்னிடம் எதையோ நிரூபிப்பதற்காக இந்த வயதான காலத்தில் தன்னை விட்டுக்கொடுத்து அவர் போராடுகிறாரோ என எண்ணத்தூண்டியது.

அன்று இரவு அப்பா வந்துவிடுவார் எனக் காத்திருந்தோம். ஆனால் அப்பா வரவில்லை. அம்மா கவலைப்பட ஆரம்பித்துவிட்டார். வழக்கமாகக் கடலுக்குச் செல்லும் அப்பா ஒரு பகல் ஓர் இரவுக்குப் பின் வந்துவிடுவார். ஆனால் இன்றோ இரண்டாவது இரவும் வந்துவிட்டது. அப்பா வரவில்லை. நான் அண்ணனை ஆற்றுக்குச் சென்று பார்த்துவிட்டு வருவோம் என அழைத்தேன். அம்மாவும் அதுதான் சரியாக இருக்கும் என்றாள். அவளின் முகத்தில் அப்பாவைப் பற்றிய கவலையின் ரேகைகள் படரத் தொடங்கியிருந்தன. அண்ணனின் நண்பன் சலீமின் படகை எடுத்துக்கொண்டு ஆற்றில் இறங்கினோம்.

நிலவில்லாத இரவு. அகலமான பொங்கோல் ஆறு. அதன் இருகரைகளிலும் நீர்மரங்களும் செடிகளும் கொடிகளுமாக பெரும் காடுகள் விரிந்திருந்தன. இரவின் தடித்த கறுப்பு எங்கும் சூழ்ந்திருந்தது. குளிர்ந்த காற்றின் நடுக்கம். அப்பா எங்கெல்லாம் மீன் பிடிக்கச் செல்வார் என்று அண்ணனுக்குத்தான் தெரியும். அவன் சொன்ன இடங்களுக்கெல்லாம் படகைச் செலுத்தினோம். அப்பாவைக் காணவில்லை. பின் அண்ணன்தான் சொன்னான். அப்பா அடிக்கடி விருப்பப்பட்டுச் செல்லும் இன்னொரு இடம் இருப்பதாக. எங்கள் முன் மூன்றாகப் பிரியும் அந்தப் பொங்கோல் ஆற்றின் கிளை ஆறு ஒன்றில் நீரின் ஓட்டம் அவ்வளவாக இருக்காது. அதை சுங்ஙாய் மத்தி என்று அழைப்பார்கள். நீர் தேங்கி நிற்பதுபோலவே தெரிந்தாலும் நீரோட்டம் நாம் உணரமுடியாதபடி மெல்லியதாக இருக்கும். இதுபோன்ற இடங்களில் அதிக மீன்கள் இருக்கும் என்பது அப்பாவின் கணக்கு. அந்தக் கிளை ஆற்றில் நுழைந்தோம். மரக்கிளைகளும் கம்புகளும் செடி கொடிகளும் எங்கோ பலர் கொட்டிய குப்பைகளுமாக மிதந்துகொண்டிருந்தன. உள்ளே போகப்போக ஆற்றின் அகலம் குறுகிக்கொண்டே வந்தது. திடீரென அண்ணன் ஆற்றோடு வந்த ஒரு வலைக்கயிற்றைப் பார்த்து,
இது அப்பாவுடையது’, என்றான்.
என் இதயம் படபடக்க ஆரம்பித்துவிட்டது. என் மனசுக்கு ஏதோ சரியில்லாததுபோல் இருந்தது. உள்மனம் ஏனோ தவிக்க ஆரம்பித்துவிட்டது. இதன் அர்த்தம் என்ன? ஐயோ அப்பா மனம் வீறுகொண்டு அலறியது. அந்த வலைக்கயிற்றைப் பிடித்துக்கொண்டு நாங்கள் முன்நகர எங்கள் படகோடு இன்னொரு படகு மோதி நின்றது. அது அப்பாவின் படகு. அப்பா படகின் நடுப்பகுதியில் படுத்திருந்தார்.
அப்பா
எனக் கத்தியவாறு அந்தப் படகிற்குத் தாவினேன். அண்ணனும் என்னோடு குதித்து அப்பாவின் படகுக்கு வந்துவிட்டான். அப்பாவிடம் எந்த அசைவும் இல்லை. எழுந்திருக்கவும் இல்லை. உடல் இறுகி இருந்தது. மூச்சும் இல்லை. கண்கள் மூடியிருந்தன. ஆனால் முகத்தில் ஒரு வலியின் வேதனை மட்டும் அப்படியே இருந்தது. அவசர அவசரமாக அந்தப் படகிலேயே படகுத்துறைக்கு வரும்போது என் விழிகள் அழுது அழுது காய்ந்திருந்தன. எத்தனையோ நீர்த்துளிகள் அப்பாவின்மேல் சிதறி விழுந்து காற்றில் காற்றாகக் கலந்தன.

அன்று இரவு அப்பாவின் மரணச் செய்தி அந்தத் தஞ்சோங் ஈராவ் கம்பத்தையே கலங்கவைத்தது. அம்மா அழவில்லை. மூலையில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அம்மாவின் மனநிலையை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியாத ஒரு சூழல். தன் அன்பான கணவனை இழந்த ஒரு வயோதிகப் பெண்மணியின் மனஉணர்வுகள் எப்படியிருக்கும்? அந்தச் சூழலில் அம்மா இருந்தாள்.

அப்பாவின் உடலைப் பரிசோதித்த மருத்துவர், அப்பா ஒரு கொடிய விஷமுள்ள ஆற்றுப் பாம்பினால் கொத்தப்பட்டிருக்கலாம் என்றார். அதற்கு ஏற்ப அப்பாவின் காலில் பாம்பின் நகக்கடியும் பதிந்து வீக்கம் கண்டிருந்தது.
அப்பாவின் அருகில் அமர்ந்து அவரையே பார்த்தேன்.
என்னால்தானே எல்லாமே அப்பா. அன்று நான் எதுவும் கேட்காமல் இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்காதே அப்பா. என்னிடம் எதையோ சாதித்துக் காட்டத்தானே நீங்கள் முனைந்தீர்கள். எல்லாமே என்னால்தான். என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா


அம்மா என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

(26 செப்டம்பர் 2014 - தமிழ் முரசு, சிங்கப்பூர்)