செவ்வாய், 25 ஜனவரி, 2011

கவிதை - கனவு மெய்ப்படவேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும் – சேகர்கவிதன்

கனவு
காலத்தை
மெல்ல மெல்லத் தின்றது

காலத்தின் ஆயுட்காலம்
பூமிபந்தின் சுவடுகளில்
தடம் பதிக்க முடியாமல்
தடுமாறி,

வானத்தை நோக்கி
தவம் செய்தது

வானம் மழை பொழிந்தது
காற்று புயலாகியது
நிலம் காணல்நளினம் புரிந்தது

கனவுகளின் குழந்தைகள்
காலத்தின் காலடியில்
மிதிபட்டன

கனவுகளின் தலைவன்
கடத்தப்பட்டான்

கனவுகள்
முற்றாக அழிக்கப்பட்டன
என
காலம் எக்காளமிட்டுச்
சிரித்தது


கனவுகளின் தாயோ
வடக்கே
மண்டியிட்டுக் கிடந்தது

ஆண்மையிழந்த வெள்ளைக்கொக்குகள்
பூட்டைத் தொலைத்துவிட்டு
சாவியைத் தேடின

திண்ணைகள்
வாசலில் இருந்து
தூக்கி எறியப்பட்டன

தாய்மண்ணின்
புதுக் கனவுகளுக்கு
இன்னமும்
பிரசவம் நடந்துகொண்டிருக்கிறது

மாற்றாக,
டெஸ்ட் டியூப் குழந்தையும்
யோசித்தாயிற்று

இது தோல்வியல்ல...
வெற்றியின் இன்னொரு படிக்கல்
இது முடிவல்ல....
இன்னொரு தொடக்கம்