புதன், 10 ஜூன், 2020

இதுவும் கடந்து போகும் (நாவல்) - பொன். சசிதரன்






நாவல்     : இதுவும் கடந்து போகும்
எழுத்து    : பொன். சசிதரன்
வெளியீடு  : சகோதரா எண்டெர்பிரைஸ்
பதிப்பு     : முதற்பதிப்பு 2019

இதையும் கடந்து போகத்தான் வேண்டும் – எம்.சேகர்

மீட்டுக்கொண்டு வர இயலாத
பழைய நாட்களின் பழைய மன நிலைகளின்
நாற்பது ஆண்டுகால நீங்காத நினைவுகளுடன்
இதனை எழுத ஆரம்பிக்கிறேன்.

ஒரு மனிதனின் எண்ணங்களே எழுத்துகளாக உருப்பெறுகிறது. சங்க காலத்தில் இருந்து இன்றைய நவீன காலம்வரை படைக்கப்படும் படைப்புகள் அனைத்தும் படைப்பாளனின் மனத்தில் இருந்தும் அவனின் அனுபவத்தில் இருந்தும் வெளிவரும் எண்ணங்களாகவே உள்ளன. இலக்கியம் என்பது காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பர். கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் தான் உணர்ந்தவைகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்துச் சமூகத்தோடு ஒன்றி மற்றவர்களும் அதை உணர வேணடும் என்று இலக்கியத்தைக் கருவியாக்கி எளிமையான எழுத்து நடையில் படைக்கப்படுவது படைப்பிலக்கியமாகும்.

படைப்பு

ஒரு படைப்பு என்பது அனுபவத்தின் வெளிப்பாடாக, அனுபவத்தில் இருந்து பெற்ற சிந்தனை வளர்ச்சியால் படைப்பாளன் உணர்ந்த இந்த வாழ்க்கையின் ஒரு பகுதியை வெளிப்படுத்தவும் அதை விரிவாக விரித்துச் சொல்லவும் வாழ்க்கைக்கான ஒரு தரிசனத்தைக் காட்டவும் படைக்கப்படுகிறது. படைப்பிலக்கியம் செய்திகளைக் கற்பனையில் இணைத்து அழகான ஒரு வடிவத்தில் கொடுக்கிறது. அந்த வடிவம் ஒரு கவிதையாக, ஒரு சிறுகதையாக, ஒரு நாவலாக, ஒரு நாடகமாக உருப்பெறுகிறது.

நாவல்

நவீன கால இலக்கியம் என்பது பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து வரும் இலக்கியங்களாகும். இருபதாம் நூற்றாண்டிற்குப் பிறகே வளர்ச்சி நிலை அடைந்தது. நவீனம் என்ற சொல்லாடல் ஐரோப்பாவில் இருந்து வந்ததாகும். நவீன இலக்கியத்தின் ஒரு வகைதான் நாவல் இலக்கியம்.
கவிதையின் கற்பனை அழகுகளையும் உணர்ச்சி வெளிப்பாடுகளையும் உரைநடையில் கொண்டுவர முடியும் என்று உணர்த்தப்பட்ட பின் உரைநடை படைப்பிலக்கியத்தில் முதலில் தோன்றியது நாவல்தான், என்று கூறுகிறார் இலக்கியத் திறனாய்வாளர் டாக்டர் இரா. தண்டாயுதம்.

இன்றைய சமூக வளர்ச்சியில் மக்களிடையே எழும்புகின்ற எந்த பிரச்சினையையும் நாவல் என்ற கலை வடிவத்தின் வாயிலாக நாம் விவாதிக்க முடிகிறது. நாவல் சமுதாயத்தில் இணைப்பை உருவாக்கும் தன்மையையும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வைக்கும் கருவியாகவும் அனுபவங்களைக் கற்றுக்கொடுக்கும் சிந்தனைக் களமாகவும் சமுதாய கோட்பாடுகளை அலசி ஆராயும் அரங்கமாகவும் விளங்குகிறது.

நவீன வாழ்க்கைச் சூழலினால் மனித மனங்களுக்குள் நிகழும் நெருக்கடிகள், சிக்கல்கள், பாதிப்புகள், வன்மங்கள், குரூரங்கள் என பலவற்றைத் தன் எழுத்தினூடே வெளிப்படுத்தி, வாசகர்களுக்கு மனிதன் அல்லது சமூகம் குறித்தும் இந்த வாழ்வியலின் இளங்கியல் குறித்தும் சிந்திக்க வைக்கும் ஒரு சிறந்த இலக்கிய ஆளுமைக் கொண்டவர் பொன். சசிதரன். மூடுபனி பாலு மகேந்திராவின் கேமராவைப்போல வாசகனின் விழிகளுக்குள் தன் எழுத்தின்மூலம் காட்சிப்படுத்தும் திறன் மிக்கவர். மலேசிய நாட்டின் சிறந்த ஒரு கதைசொல்லி பொன்.சசிதரன்.

நாம் அறியாத மன ஆழங்களின் பெரும்வலையில் சிக்கியுள்ள ஒரு சின்னஞ்சிறு துகள்தான் இந்நாவலின் கதைக்கரு. நாம் காணும் இப்புறவுலகம் அதன் சாரமான இன்னொன்றால் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது  என்பதையே அன்றிலிருந்து இன்றுவரை இலக்கியப் படைப்புகள் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அந்தச் சாரத்தையே அவை மீண்டும் மீண்டும் புதிது புதிதாக வரையறை செய்துகொண்டிருக்கின்றன (புதிய காலம். ப.31. ஜெயமோகன்) என்பதற்கேற்ப இந்நாவலில் உடைந்துபோன ஓர் இளைஞனின் மனத்தை மீண்டும் மீண்டும் சில சம்பவங்களின் மூலமாக உடைத்துப் பார்த்துச் சிதைந்துபோன வாழ்விலிருந்து மீண்டெழ வைக்கிறதா இல்லையா என்பதை நோக்கியே இதன் கதையாடலும் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

நாவல் வகை
மு.வ. (மு.வரதராசன்) அவர்கள், தனது இலக்கிய மரபு என்ற நூலில் நாவல்களை அதன் தன்மைக்கேற்ப வகைப்படுத்துகிறார் (சிங்கப்பூர்த் தமிழ் – இலக்கியம் பன்முகப் பார்வை, முனைவர் இரா.வேல்முருகன். ப.119)

1.   நிகழ்ச்சிகள் மிக்க நாவல்
2.   பண்புநலன் மிக்க நாவல்
3.   விளக்கமும் வருணனையும் மிக்க நாவல்
4.   நாடகப் போக்கிலான நாவல்

அவ்வகையில், கதைமாந்தர்களையும் உரையாடல்களையும் நிகழ்ச்சிகளையும் அதன் போக்கினையும் கொண்டு பொன்.சசிதரனின் இந்த நாவலைப் பண்பு நலன் மிக்க நாவல் என்ற வகைக்குள் வைக்கலாம்.

கதைக்குரிய பொருள்
பால்வெளி மண்டலத்திலுள்ள நிலவு தேய்வதும் பின வளர்வதுமான அதன் இயக்க மாற்றம் ஒரே சீராக அமைகிறது. அதே போல், நாகரிகம் பெற்ற மனிதனால் உருவான சமூகத்தில் காலந்தோறும் படைப்பாளர்களால் படைக்கப்பட்ட இலக்கியப் பாடுபொருளிலும் மாற்றம் நிகழ்ந்தவாறே உள்ளது.

நாவலுக்குரிய கதைப் பொருள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. நாவலாசிரியர் தாம் விரும்பிய, விரும்பாத, கண்ட, கேட்ட, அனுபவித்த எதையும் கதைப் பொருளாக அமைத்துக் கொள்ளலாம். மலேசிய மண், மக்களின் வாழ்க்கை முறைகள், மறுவாழ்வு மையத்தின் செயல்பாடுகள், குடும்ப உறவுகள், நட்பு, காதல், வெறுப்பு, வன்மம், இயற்கையின் ஆராதனைகள், அழகியல் பார்வைகள், கதாமாந்தர்களின் பண்புகள் போன்றவை ஒரு சடைப்பின்னலாக இணைந்து கதைக்குரிய பொருளாக இந்த நாவலில் அமைந்திருக்கின்றன.

கதை மாந்தர்கள்
நாவலில் இடம்பெறும் கதை மாந்தர்களை இருவகைப்படுத்துவார் அறிஞர் ஈ,எம்.ஃபாஸ்ட்டர்.
1.   முழுநிலை மாந்தர்
2.   ஒருநிலை மாந்தர்

நாவலின் தொடக்கம் முதல் இறுதிவரை நம்முடன் உறவாடி வாசக மனங்களில் முழுமையான இடத்தைப்  பிடிப்பவர்களே முழுநிலை மாந்தர்கள் எனக் கூறப்படுகிறார்கள். கதையின் கட்டுக்கோப்பிற்காகவும் கதையாடலை மேலும் சுவைபடச் சொல்ல இடையிலேயே தோன்றி இடையிலேயே மறைந்துவிடுபவர்கள் ஒருநிலை மாந்தர்கள் எனக் கூறப்படுகின்றனர். இந்நாவலில், அன்புமதியும் சீனிவாசனும் செல்வ விநாயகமும் மனோகரனும் நாவலின் போக்கிற்கேற்ப மெல்ல மெல்ல வளர்ந்து, அவர்களின் பண்பு நலன்களாலும் தியாக உணர்வுகளாலும் வாசகர்களின் உள்ளத்தில் முழுமையாக இடம்பிடித்துக் கொள்கிறார்கள்.

மறுவாழ்வு மையத்தின் தலைமை அதிகாரி பரமசிவம், அன்புமதியின் சித்தி தங்கம், தங்கை சரளா, அவள் கணவன் பிரபு, மகன் ஆனந்த், தம்பி சிவா, அவன் மனைவி சீதா, புதிய நண்பன் அறிவழகன், காதலி ஆர்த்தி, ஸ்ரீமதி, ஸ்ரீமதியின் சித்தி வித்யாஸ்ரீ, அலுவலகத்தில் பணிபுரியும் காஞ்சனா, மலையப்பன், சாமிக்கண்ணு, டிரைவர் செல்வம், ஸ்டீபன் வோங், இந்திரன் போன்ற கதாமாந்தர்கள் நாவலின் கட்டுக்கோப்பிற்காகவும் கதையாடலின் வளர்ச்சி படிநிலைகளுக்கேற்பவும் இடை இடையே வந்து போகின்ற ஒருநிலை மாந்தர்களாக விளங்குகின்றனர்.

இதில், மறுவாழ்வு மையத்தின் தலைமை அதிகாரி பரமசிவத்தின் கதாபாத்திரம் இந்நாவலுக்கு வெளியே நின்றுகொண்டு நாவலின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறது. நாவலின் கதையாடலுக்குள் இந்தக் கதாபாத்திரத்தைக் கட்டமைக்காமல் நினைவிலிருந்து மீட்டல் என்ற எளிய உத்தி யதார்த்தத்தின் கலை அழகோடு இயல்பாகப் பொருந்திப் போகிறது. வெளியில் இருந்து நாவலை நகர்த்திச் செல்லும் இந்தக் கதாபாத்திரப் படைப்பு சிறப்பானதும் புதுமையானதும்கூட. இத்தகைய உத்திமுறை பொன்.சசிதரனின் படைப்பிலக்கிய ஆளுமை மேன்மைப் பெற்றுள்ளதைக் காட்டுவதோடு அவரை இந்த மலேசிய மண்ணின் சிறந்த ஒரு படைப்பாளியாகவும் போற்றத்தக்க ஒரு படைப்பாளியாகவும் அடையாளம் காட்டுகிறது.

எழுத்து நடை
நாவலில் வரும் உரையாடல்களும் சின்ன சின்ன வாக்கியங்களால் உருவாக்கப்பட்டு வாசகர்களைக் கவரும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளதும் இங்குக் கவனிக்கத்தக்கது. எளிய மொழி நடையில் அனைத்துத் தரப்பு வாசகர்களாலும் எவ்விதச் சிரமும் இன்றி புரிந்துகொள்ளக்கூடிய எழுத்து நடையில் இலகுவான தளர்வடிவம் கொண்ட நாவல் பெரும் உத்திகளையும் பாவனைகளையும் உதறியுள்ளது. வாசகப் பொதுப்புத்தியைக் கலங்கடிக்காமல் நேர்கொண்ட பார்வையாய் நல்லதோர் இளைய சமுதாயத்தை உருவாக்கச் சமூக விழுமியங்களை வாசக மனங்களில் விதைத்துவிட முயலும் கதைப்போக்கும் கருத்தாக்கங்களும் கொண்ட படைப்பாக்கம்.

நாவலில் அறம்

மனிதன் வாழ்வில் உயர்ந்து நிற்க வேண்டுமென்றால் மூத்தோர் சொல் கேட்டலும் பிறரிடத்துப் பணிவும் பரிவும் காட்டுதல் வேண்டும். ஒவ்வொருவரும் தம் பெற்றோருக்குரிய கடமைகளில் துணைநின்று, இந்த மண்ணுலக வாழ்வில் நல்ல மனித வாழ்வுக்காகத் தன்னை ஆயத்தம் செய்து கொள்ளவேண்டும் என தனது இயேசு காவியத்தில் கண்ணதாசன் கூறியிருப்பதைப்போல, இந்த நாவலில் உறவுகளின் மேன்மையையும் அதன் அவசியத்தையும் மிகச் சிறப்பாகப் படைப்பாக்கம் செய்துள்ளார் பொன்.சசிதரன்.

சீனிவாசன் மூலமாக ஓர் அப்பாவின் பாசம், கடமை எந்நிலையிலும் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் செல்வ நாயகம் மூலமாக ஒரு நிறுவனத்தின் முதலாளி தன்னுடன் வேலை செய்பவர்களின் உணர்வுகளுக்கும் அவர்களின் சுகத் துக்கங்களில் எவ்வாறு பொறுப்புடன் பங்குகொள்ளவேண்டும் என்பதையும் மனோகரன், ஸ்ரீமதி, அறிவழகன் மூகமாக நட்பின் இலக்கணத்தையும் தங்கம், வித்யாஸ்ரீ மூலமாக இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு வருபவர்கள் எப்படி விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் மிக இயல்பாகத் தன் கதாபாத்திரங்களின் வாயிலாக இந்தச் சமூகத்திற்குக் கொண்டு சேர்க்க முனைந்திருக்கும் நாவலாசிரியர், முரண் கதாபாத்திரங்களான சீதா, எல்லப்பன், இந்திரன் மூலமாக இந்த உலகில் எத்தகைய வாழ்க்கையை நாம் வாழக்கூடாது என்பதையும் காட்சிப்படுத்தியுள்ளார். கண்டதே காட்சி கொண்டதே கோலம் எனும் வாழ்க்கை நிலையற்றது என்பதை அன்புமதி – ஆர்த்தி காதல் உறவின் மூலம் உறுதிப்படுத்துகிறார்.

சொல்லருஞ் சூது பொய் மோசம் செய்தால்
சுற்றத்தை முற்றமாய்த் துடைத்திடும் நாசம்
நல்ல பத்தி விசுவாசம்  எந்த
நாளும் மனிதர்க்கு நன்மையாய் நேசம்
என்ற பாடல் வரிகளால் கடுவெளிச்சித்தர், சொந்தங்கள் நம்முடைய பாதுகாப்பு அரண் போன்றவர்கள். அவர்களைப் பொய், சூது, மோசத்தால் வஞ்சித்தால் நம் வாழ்வில் நாசமானது வீட்டின் தரையில் உள்ள அழுக்கைத் தேய்த்து எடுப்பதைப்போல நமது மகிழ்ச்சிகளை முற்றாய்த் துடைத்து எடுத்துவிடும்  என்கிறார்.

கண்ணதாசனும் தனது இயேசு காவியத்தில் கொலை செய்தால் மட்டும் நரகம் கிடைப்பதில்லை. கொடிய செயல்கள் அனைத்திற்கும் நரகம்தான் பதில் என்கிறார். புண்படுத்தும் சொற்களைப் பேசிப் பிறர் நெஞ்சத்தைச் சுடுபவர்களுக்கும் நரகம் கிட்டும் என்கிறார். சீதா, எல்லப்பன் கதாபாத்திரங்களின் வாயிலாகப் பொன்.சசிதரனும் இதையே இந்தச் சமூகத்துக்கும் கூறுகிறார்.
 
அன்பு, இரக்கம், தொண்டு என்னும் வாழ்க்கையே மண்ணில் சிறந்தது என்கின்ற வாழ்க்கை அறங்களை மக்கள் உணரவேண்டும் என்ற உயரிய எண்ணத்தை இந்தத் தமிழ்ச் சமூகத்திடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் என்பதை நாவலில் வருகின்ற சம்பவங்களைக் காட்சிப்படுத்தி சமூகக் கருத்துகளையும் தன்முனைப்புக் கருத்துகளையும் நிறையவே பேசியிருக்கிறார் பொன். சசிதரன்.

அறத்தைப் போன்று ஆக்கம் தருவது வேறெதுவுமில்லை. அறம் சிறப்பைத் தரும். நல்ல செல்வத்தையும் தரும். எனவேதான், பண்டைய அகப்பொருள் இலக்கியங்களில் அறத்தோடு நிற்றல்  என்ற தனிப்பெரும் பிரிவு தலைசிறந்து விளங்கியதை நம்மால் உணரமுடிகிறது. வள்ளுவரும்கூட வாழ்வில் அறம் என்பது எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணர்த்த அறத்துப்பால் எனும் அதிகாரத்தையே இயற்றியுள்ளார். அறம் வலியுறுத்தல் என்ற பகுதியில்,

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு

என ஒருவரின் வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மை தரக்கூடியது வேறெதுவுமில்லை. அதுபோல, அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கொடுமையானதும் வேறெதுவுமில்லை என்கிறார். 

மேற்கூறியவற்றின் கூற்றுகளைப் போற்றுவதே இந்த நாவலின் உயரிய விழுமியப்பண்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. அறத்தைப் போற்றும் இதுவும் கடந்து போகும் நாவல் இன்றைய சூழலில் நமது சமூகத்துக்குப் பல உயரியத் தத்துவக் கருத்துகளின் பரிமாற்றத்தோடு படைப்பாளனின் எழுத்துகளின்மூலம் களம் இறங்கியிருக்கிறது.

சமூகம் சிறப்பாக அமைந்தால் நன்மை மிகும் என்று இந்தத் தமிழ்ச் சமூகத்தின்பால் அக்கறை கொண்டு இச்சமூகம் சீர்பெற விரும்பிய ஓர் ஆன்மாவின் படைப்பு இது.  கல்வித் துறையில் இருப்பவர்கள் இந்த நாவலை மாணவர் சமூகத்திடமும் இளையோரிடத்திலும் பரவிடச் செய்திடல் வேண்டும். வாய்ப்புக்  கிடைத்தால் இந்த நாவலை நமது பாடத்திட்டத்திற்கான பாடநூலாகவும் தேர்வு செய்யலாம். அதற்கான அனைத்துத் தகுதிகளும் இந்த நாவலுக்கு இருக்கிறது.

இந்தக் கணத்தில் இந்தப் புத்தக்ததை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது கதை எழுதியவனுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி என்பதால், இப்போது, உங்களைச் சுற்றி எழுத்தாளனின் எழுத்தும் ஆன்மாவாக வட்டமடித்துக்கொண்டிருக்கலாம்.
நீ எழுதும்போது
நானிருந்தேன்
நான் எழுதும்போது
நீ இல்லையே என் நண்பா....
நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். நீதான் ஆய்வு செய்யவேண்டும் என்றாய். இடையில் சந்தித்தபோது எழுதி முடித்திருந்தவற்றைக் காட்டினாய். தலைப்பு மறுவாழ்வு என்றிருந்தது. தலைப்பை மாற்றலாமே என்றேன். நாவலின் இறுதி பத்தியில் வரும் இதுவும் கடந்து போகும் என்றிருந்தது. இதையே தலைப்பாக வைக்கலாமே என்றேன். சரி என்றாய். பிறிதொரு நாளில் தொலைபேசியில் அழைத்து, நாவலை எழுதி முடித்துவிட்டேன். எப்போது வருகிறீர்கள் என்று கேட்டாய். செப்டம்பர் பள்ளி விடுமுறையில் வருகிறேன் என்றேன். வந்ததும் தொடர்பு கொள்ளுங்கள். நாவல் பிரதியைக் கொடுக்கிறேன் என்றாய். செப்டம்பர் வந்தது. நானும் வந்தேன். நீ மட்டும் இல்லையே என் நண்பா........

இதுநாள்வரை
உன் நட்பைச் சுவாசித்தேன்
இனி
உன் எழுத்தைச் சுவாசிப்பேன்

அன்புடன்
எம். சேகர்

காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையின் கவிதையில் கலந்தே வாழுவோம் (பாவை விளக்கு - அகிலன்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக