வியாழன், 28 செப்டம்பர், 2017

எம்.கருணாகரன் அவர்களின் கவிதைத் தொகுப்புக்கு வழங்கிய அணிந்துரை






சிறகு முளைத்த சொற்கள் எம்.சேகர்

எம்.கருணாகரன் அவர்களின் கவிதைத் தொகுப்புக்கு வழங்கிய அணிந்துரை



வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொண்டு, அதைத் தான் கண்ட உக்கிரத்தில் சற்றும் குறைக்காமல், சமரசம் செய்யாமல், அனுபவத்திற்கும் பொருந்திப் போகிற வார்த்தைகளைத் தேர்வு செய்யும் கவிஞனைப் புரிந்துகொள்ள வாசகன் திறந்த மனத்துடன் இருக்கவேண்டும் என்ற பிரம்மராஜனின் வரிகளைக் கவிஞர் கருணாகரனின் கவிதை மொழிக்குள் நுழைவதற்குமுன் மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.


ஒரு கவிதையின் புரியாத்தன்மை என்பது, அந்தக் கவிதையைப் படைத்த கவிஞனிடத்திலும் இல்லை. அந்தக் கவிதையிலும் இல்லை. அதற்கு மாறாக, வாசகர்களாகிய நம்மிடையேதான் இருக்கிறது என்ற புரிதல் முதலில் இங்கு அவசியமாகிறது. மேலோட்டமான நமது பார்வையும் துல்லியமிழந்த நமது தெளிவும் தர்க்கமும்தான் நம்முடைய புரிதலுக்குச் சவாலாக இங்கு விளங்குகின்றன. சமகால கவிதைப் படைப்பாக்கங்களின் புதிய பரிமாண வளர்ச்சியில் போதுமான நுகரல்கள் இல்லாமையும் இதற்கு ஒரு காரணியாக இருக்கலாம்.


ஒரு கவிஞன், தன் உணர்வு நிலையிலிருந்து சிறிதும் விட்டுக் கொடுக்காமல் முழுமூச்சாக நுண்ணியமான ஒன்றை மொழியிலும் சிந்தனையிலும் தேடிப்போகிறான். இந்தத் துல்லியமான பார்வையின் நிர்ப்பந்தங்கள் சம்பிரதாயமான மொழி வெளிப்பாட்டு எல்லைகளைத் தாண்டி விரைந்துசென்று புத்தம்புதுச் சொற்களையும் சொல்லாடல்களையும் அதற்கான புதிய அர்த்தங்களையும் கண்டு சொல்வதில் நிறைவு கொள்கின்றன. மேலும்,  கவிஞன் தன் சுயத்திற்காகப் புதிய வடிவங்களைத் தேடிச் செல்லும்போது சமூக வெளி (Social Space) தனிமனித வெளி (Private / Inner Space) ஆகிய இரு வெளிகளுக்கும் இடையில் நிலவும் சொல் வெளியை (Verbal Space)  நாடி அவனுக்குள்  அவனே நுழைந்து உள்ளிருக்கும் மொழிக்கிடங்குகளில் தனக்கான இயல்பு மொழியோடு சரணடைகிறான். இந்தச் சொல் வெளியில்தான் கவிஞன் தன் புலனறிதல் பார்வைகளைத் தனக்கே உரித்தான வகையில் அமைவுகளாக (Pattern) ஆக்கிக்கொள்கிறான்.


கவிதையும் மனிதனின் அறிவுத் துறைகளில் ஒன்று என்பதைப் பலர் அறிவதில்லை. கவிதை என்றால் படித்த அடுத்த நிமிடமே புரிந்துகொள்ளப்படவேண்டும் என்றும் வாதிடுகின்றனர். கவிதை செய்தித் தாளில் வரும் ஒரு செய்தியல்ல. வாசித்தவுடனேயே புரிந்துகொள்வதற்கு. அது ஒரு தவ உச்சத்தின் பிறப்பு. அதன் புற அமைப்புகளான வாக்கியத் தொடர்களில் முழு ஈடுபாடில்லாமல் வாசிக்கப்பட்டால் அக்கவிதையின் ஆரம்ப அர்த்தம்கூட புரிந்துகொள்ள முடியாததாய்ப் போகும். அந்நியப்பட்ட சமூகத்தில் வாழ்ந்து வரும் மனிதர்களின் கவிதைகளைப் புரிந்துகொள்ள அவர்கள் எழுதிய மனோநிலைக்கு அருகாமையில் வாசகன் செல்வது இங்கு அவசியமாகிறது.



நவீன கவிதை என்பது ஒரு நவீன ஓவியத்தைப் போலவே பற்பல அர்த்தங்களையும் புரிதல்களையும் விளக்கங்களையும் தர வல்லது. கவிதையின் ஒரு வரியில் இடம்பெறும் இரண்டு சொற்களுக்கு முன்பு இல்லாத அர்த்தத் தொடர்புகள் வாசகனின் வாசிப்பில் அந்தச் சொற்களைப் பற்றிச் சேமித்து வைத்திருக்கும் அனுபவத் தொடர்புகளால் கிடைக்கின்றன. இதனால், கவிதையின் பொருள் அடுக்குகளில் தீவிரம் ஏற்படுகிறது.


கவிதையின் அழகியலைப் பற்றிக் குறிப்பிடுகையில் கவிதையின் தன்மையும் அதன் செயல்பாங்கும் முக்கியப் பங்காற்றுவதாகக் கூறப்படுகிறது. மேலும், கவிதை புரிந்துகொள்ளப்படும் விதமும் கவிதையின் மொழியும் வாசக மனத்திற்குள் அக்கவிதை இயங்கும் இயல்பும் பாடுபொருள் சாத்தியப்பாடுகள் என பலவும் இணைந்து மனக்குவியத்தின் சொற்கோவைகளை நவீன கவிதைகளின் அழகியலாக வெளிப்படுத்திக்கொள்கின்றன. இவ்வகைக் கவிதைத் தோரணங்களே இக்கவிதைத் தொகுப்பு முழுவதும் உங்களின் வாசிப்பிற்காகவும் புரிதல்களுக்காகவும் நம் மண்சார்ந்த அடையாளத்தோடு வரிசைப்பிடித்து நிற்கின்றன.


இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதையும் அதற்கென உரிய சுதந்திரமான வாழ்க்கையைக் கொண்டு புனையப்பட்டுள்ளது என்பதும் மேலும், இக்கவிதைகள் உணர்த்துவது நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பே என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பல வாசிப்புப் படிநிலைகளில் சொற்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு வாசகனுக்குள் நுழைந்து வாழ்வின் அனுபவ அடுக்குகளுக்குள் பிரவேசிக்க வைக்கின்றன. இக்கவிதைகள் வெறும் மொழியின் விளையாட்டுகளை மட்டும் சார்ந்து நிற்காமல் ஆழ்ந்த தெளிவாகவும் ஆழ்மன உணர்தலாகவும் எல்லா விதமான நுண் அரசியலின் புரியாமைகளாகவும் எளிமையான அழகியலாகவும் நவீன தமிழ்க் கவிதையின் வடிவங்களாக நமக்கு அறிமுகமாகின்றன.


அடுத்து இத்தொகுப்பிலுள்ள ஒரு கவிதையைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். அடுத்தடுத்த கவிதைகளை உங்கள் பார்வையில் நீங்கள் புரிந்துகொள்ள இது ஏதுவாக இருக்கும் என நம்புகிறேன்.


வாழ்வின் நிலையாமையை மிகவும் எளிய கவிதை மொழிநடையில் சொல்லிச் செல்லும் கவிதை இத்தொகுப்பிலுள்ள, தொலைந்து போன நான் எனும் கவிதை. இக்கவிதையை யதார்த்தத்திற்கும் கனவுக்கும் இடையிலான சர்ரியலிசக் கவிதையாக வகைப்படுத்தலாம். படைப்பாளன் தன் உணர்ச்சி மேலிட்டால் உருவமைக்கும் சொற்களுக்குப் பொருள் தேடுவது என்பது மிகவும் எளிதல்ல. சிலருக்கு அது எளிதில் சென்றடையும். பலருக்கு பல வாசிப்புகளின் மூலம் சென்றடையலாம். சிலருக்கு விளக்கம் கொடுத்த பிறகு சென்றடையலாம். ஓரிருவருக்குக் கடைசிவரை புரிந்துகொள்ள முடியாததாகவே போகலாம். எது எப்படி இருப்பினும் படைப்பாளனின் அந்தக் கணநேர உணர்ச்சிப் பிழம்புகள் வெவ்வேறு புரிதல்களை வாசிப்பவனுக்கக் கொடுத்துச் செல்வது நவீன படைப்பாக்கத்தின் ஓர் உச்சக் கூறாகும்.


இறப்பிற்குப் பிறகு என்ன நடக்கும்? இதுவரை விடை தெரியாத ஒரு கேள்வி இது. இக்கேள்விக்கு விடை காண பல ஞானிகளும் சித்தர்களும் தீவிரமாக முயன்றிருக்கிறார்கள். புத்தரும் வாழ்வின் அர்த்தத்தைத் தேடி ஞானம் பெற்றார். வாழ்க்கை நெறிக்கான பல விசயங்களைப் போதனையாகச் சொல்லிச் சென்றார். மறுபிறப்பு என்பது கர்மவினைகளுக்கு ஏற்ப விளையும் என்பதும் பலரின் நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது. எது எப்படி இருப்பினும், இறப்புக்குப் பிறகு என்ன? என்பது இந்த நிமிடம்வரை புரியாத புதிர்தான். ஆனால் அந்தப் புதிருக்கு ஒரு கவிமனம் விடை காணத்துடித்துத் தன் கற்பனைச் சிறகுகளைப் பறக்கவிட்டு தானும் பறக்க ஆரம்பித்துவிட்டது ஒரு விடுதலை உணர்வேந்தலுடன்.


சிறகுகள் முளைக்கப் பறந்து கொண்டிருக்கிறேன்/இதமாக வருடிப்போகும் காற்று/மேகக் கூட்டத்தில் குளிர்/நட்சத்திரக் கூட்டத்தில் நான்/வெளிச்சம் பரவி வெளிச்சமாகிறேன்/ரொம்ப கிட்டத்தில் நிலவின் ஒளி/நான் பறந்துகொண்டிருக்கிறேன்/


இவ்வரிகளே இக்கவிதையின் உச்சங்கள். காட்சிப் படிமக்கூறுகள் இறப்பிற்குப் பின்னும் முன்னகர்ந்து விரிகின்றன. இவ்வுலகில் வாழ்ந்துகொண்டு வாழாத வாழ்க்கைக்குள் நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்கின்றன இவ்வரிகள்.


பறக்கும்போது ஏற்படும் அந்த உணர்வை இதமாக வருடிப்போகும் காற்றோடு ஒப்புமைப்படுத்திச் சொல்லியிருப்பதும் மேகக் கூட்டத்தில் குளிர் என்பது மழையை மடியில் வைத்து அலைந்துகொண்டிருக்கும் மேகங்களுக்கு இடையில் நாம் பறக்கும்போது ஏற்படும் சில்லென்ற உணர்வையும் நட்சத்திரக் கூட்டத்தில் நான் வெளிச்சம் பரவி வெளிச்சமாகிறேன் என்பது ஆத்மா இப்பிரபஞ்சத்தோடு ஒன்றிணைந்து விடுவதைக் குறியீடாகக் காட்டுவதாக நான் புரிந்துகொள்கிறேன். இறப்பிற்குப் பின் இருக்கும் அந்த இருண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு விடயமாகவே இக்கவிதையைப் பார்க்கிறேன்.


பறக்கப் பறக்க/ இறகுகள் உதிர/ பறந்துகொண்டே கீழே பார்த்தேன்/


பறக்கப் பறக்க இறகுகள் உதிர்வது எதை உணத்துகிறது என என்னை நானே கேட்டுக்கொண்டேன். இறுதிவரை பறக்க இயலாத ஒன்றாகவும் தன் இலக்கை நோக்கி அடைய முடியாத ஒரு மயக்க நிலையாகவும் இவ்வரிகள் தோன்றம் அளிக்கின்றன. இறகுகள் எல்லாம் உதிர்ந்துபோனால் அதன் பிறகு எங்கணம் பறப்பது? அதையம் மீறி பறப்பதுதான் கவிஞனின் கற்பனா சக்தி. இங்கேதான் கவிதையும் வாழ்கிறது. நிஜ வாழ்க்கையில் சாத்தியப்படாத அல்லது நிறைவேற்ற இயலாமல் போனவற்றிலிருந்து விடுபடுவதின் குறியீடாகவே இவ்வரிகள் புலப்படுகின்றன.


ஒரு சராசரி மனிதனின் அன்றாட வாழ்க்கையைக் கவிதையின் ஆரம்பம் தொட்டு மிக இயல்பாகப் படம்பிடித்துக் கொண்டு போகும் கவிஞனின் கவிமனம், மெல்ல மெல்ல தனக்கான இலக்கை, தன் அனுபவம் சார்ந்த வாழ்வியலோடும் அது சார்ந்த நெருடலுடன், தான் சொல்ல வந்ததை நோக்கி மிக நேர்த்தியாக நகர்ந்திருப்பது இக்கவிதையின் சிறப்பாகும். எளிய சொல்லாடல்களும் காணோம்’, ரொம்ப கிட்டத்தில் போன்ற பேச்சு வழக்குச் சொற்களும் கவிஞன் வாசகனைத் தன் வசப்படுத்தவும் நெருக்கமாக உரையாடவும் மேற்கொண்ட ஓர் உத்தியாகவே அமைந்திருக்கிறது எனலாம். மேலும் இதுபோல பல கவிதைகளிலும் பேச்சு வழக்கு மொழியாடல் கையாளப்பட்டுள்ளது இந்நூலுக்குப் பெருமை சேர்த்துள்ளது.


ஒவ்வொரு கவிதைக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட, ஏன் ஆயிரக்கணக்கான அர்த்தங்கள் இருக்கமுடியும் என்று தனது கவிதை பற்றிய உரையில் கூறியுள்ளார் Scotus Eregena என்கிற ஐரிஷ் இயற்கை இறையியல் வாதி. நாம் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதே இங்கு நிதர்சன உண்மையாகும். நம்மிடையே ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப மறுவாசிப்புச் செய்யப்படும் ஒவ்வொரு முறையும் கவிதைகளின் அர்த்தங்கள் புதுப்பிக்கப்படுகின்றன என்கிறார்கள். எனவேதான், கவிதையின் புரிதல் என்பது ஒருவர் உணர்ந்தறிய வேண்டிய ஒன்று என்றும் கூறப்படுகிறது.


இவ்வாறாக, ஒவ்வொரு கவிதைக்குமான தங்களின் சுயமனப் புரிதலோடு தம் சுய அனுபவம், வாழ்பனுபவம் சார்ந்து நுணிகி அணுகினால் எம். கருணாகரனின் ஒவ்வொரு கவிதைகளையும் வாசகர்கள் மிக எளிதாகச் சென்றடையலாம். இனிய நண்பர், எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் எம். கருணாகரன் அவர்கள் இலக்கிய வானில் தனி அடையாளத்துடன் மேன்மேலும் சிறப்பாகத் திகழ்ந்திட அன்பு வாழ்த்துகள்.


நவீன கவிதைகளின் புதியதொரு வடிவங்களோடு மலேசிய இலக்கிய உலகில் வலம் வரும் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் நமக்காகப் பேசுகின்றன. நமக்காகக் கோபப்படுகின்றன. நமக்காக அழுகின்றன. நமக்காகக் காயப்பட்டுக்கொள்கின்றன. நமக்காக நம்மையே சில வேளைகளில் நையாண்டியும் செய்கின்றன. நமக்காக நம்மை நோக்கியே கேள்விகளையும் எழுப்புகின்றன.  நம் இயலாமையை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. நம் அறியாமையை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. நம் சுயத்தை நோக்கியும் நம் அடையாளத்தை நோக்கியும் நம் தேடலை நகர்த்துகின்றன.


நிறைவாக, கவிதைகளில் வரும் ஒவ்வொரு சொற்களும் சிறகு முளைத்துப் பறக்கின்றன. அவைகளுடன் நாமும் பயணிப்போம். ஒவ்வொரு சிறகும் ஒரு சரித்திரம் சொல்லும்.

நாளைய பொழுது நமக்காக விடியட்டும்

அன்பு வாழ்த்துகளுடன்

எம். சேகர்

புதன், 27 செப்டம்பர், 2017

திறனாய்வு / விமர்சனம் – ஒரு பார்வை










சிங்கப்பூர்க் கதம்பம் குழுமம்
சிங்கப்பூர்க் கதம்பம் – சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு
தலைப்பு: திறனாய்வு / விமர்சனம் – ஒரு பார்வை
தேதி: 24 – 09 – 2017

விமர்சனம்

இலக்கியத் திறனாய்வு அல்லது விமர்சனம் என்பது  ஓர் அறிவார்ந்த அறிதல் முறை. வாழ்க்கை அனுபவத்தை இலக்கியம் எவ்வாறெல்லாம் வெளிப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் முறை. படைப்பாளியின் கருத்துநிலைக்கும் இலக்கியப் படைப்புக்கும் இடையே உள்ள உறவைப் புரிந்துகொள்ளச் செய்து, இலக்கியத்தின் சிக்கல் தன்மைக்கும் வாழ்க்கையின் சிக்கல் தன்மைக்கும் அடிப்படைக் காரணிகளையும் அதற்கான தொடர்புகளையும் அலசி ஆராய்வதாகவும் அமையும். மேலும், திறனாய்வு இலக்கியத்தின் சமூக அடித்தளத்தையும் அதன் சமூக வேர்களையும் புரிந்துகொள்ளவும் இலக்கிய வரலாற்றை அற்புத நிகழ்வுகளாக அன்றி சமூக அசைவியக்கத்தின் வெளிச்சத்தில் காண நமக்கு உதவுகிறது எனக் குறிப்பிடுகிறார் எம்.ஏ.நுஃமான்.


வாசிப்பவனுக்கு வாசிப்பனுபவத்தையும் வாழ்வனுபவத்தையும் இணைத்துப் பல்வேறு நிலைகளில் பயணிக்கும் இயல்பைத் தூண்டக்கூடியதாக ஒரு படைப்பு இருக்கவேண்டும். அந்த வகையில் நாம் வாசித்த ஒரு படைப்பு நமக்கு அந்த வாழும் அனுபவத்தைக் கொடுத்துள்ளதா எனவும் அந்த வாழும் அனுபவம் எத்தகைய விரிதல்களை நமக்குள்ளே நிகழ்த்துகின்றன போன்றவற்றை உள்வாங்கிக்கொண்டு அந்தப் பனுவலின்மீது நம் பார்வையை நம் சுயம் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் விருப்பு வெறுப்பில்லாமல் முன் வைக்கவேண்டும்.


விமர்சனம் என்பது ஓர் அழகியல் கலை. ஆனால் அதைக் குறை கூறுவதற்காக மட்டுமே உள்ளது என சிலர் நினைத்துக்கொண்டு ஒரு படைப்பில் எந்த அளவிற்குக் குறை கூற முடியுமோ அந்த அளவிற்குப் பட்டியலிட்டுப் படைப்பாளர்களைக் காயப்படுத்தி வேடிக்கைப் பார்ப்போரும் இருக்கின்றனர்.


இரண்டு வகை விமர்சனம்:


1.   படைப்பின் பலம் பலவீனம் ஆகியவற்றை ஆராய்ந்து படைப்பாளர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் பொதுமை நிலையில் தங்களின் மதிப்பீட்டை முன்வைப்பது. இது ஆரோக்கியமான ஒரு விமர்சனமாகும்.


2.   ஒரு கோட்பாட்டைச் சித்தாந்தத்தை வைத்துக்கொண்டு, அந்தப் படைப்பு எந்த அளவிற்கு அதனோடு பொருந்துகிறது என நுணுகி ஆய்வதாகும். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் அக்கதைகள் இல்லையென்றால் அறிவுரை கூறும் வகையில் தம் விமர்சனத்தை முன்வைப்பர். ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று, இப்படி எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என தங்கள் சுய புரிதல்களையும் படைப்பின்மேல் திணிக்க முன்படுவர்.


ஒரு படைப்பு என்பது அந்தப் படைப்பாளியின் ஆக்கமாகும். அதற்கான முழு உரிமைமையும் அவனைச் சார்ந்ததாகும். அதை இப்படித்தான் எழுதவேண்டும் என இங்கு யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. கட்டாயப்படுத்தவேண்டிய அவசியமும் இல்லை. சிங்கையில் விமர்சனம் என்பது படைப்பாளிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைவதே சிறப்பாகும். அப்படிக் கொடுக்கப்படும் ஊக்கமும் ஆதரவும் அவர்களைத் தாங்களாகவே தங்களின் படைப்புகளின்மேல் சுயமதிப்பீடு செய்துகொள்ள வாய்ப்பு வழங்குவதாகவும் அவர்களே தங்களை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு வழங்குவதாகவும் இருக்கும்.


ஓர் எழுத்தாள நண்பர் இப்படிக் கூறுகிறார்.

என்னை வளர்க்கும் விமர்சனங்களை நான் மதிக்கிறேன். செடிகளைக் காயப்படுத்திப் பூக்களைப் பறிப்பதை நான் விரும்புவதில்லை


திறனாய்வும் தமிழினமும் – ஒரு வரலாற்றுப் பார்வை


திறனாய்வு அல்லது விமர்சன மனப்பான்மை இல்லாமல் தொகுப்புக்கள் வர வாய்ப்பில்லை. அன்று பாடப்பட்ட சங்கப் பாடல்கள் நிறைய இருந்திருக்கவேண்டும். அவற்றில் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டவைகள் ஒரு முறையோடும் வரையறையோடும் தொகுக்கப்பட்டுள்ளதை அறியலாம். நல்லவை, சிறந்தவை, தேவையானவை என்று நினைத்துச் செயல்பட்டிருக்கும் அந்தப் பணியில், அன்றைய காலத்தின் ஒரு மனநிலையை நாம் பார்க்க முடிகிறது. மேலும், தொகுப்பின் முறையில் இலக்கியக் கொள்கையும் திறனாய்வு மனப்பான்மையும் வெளிப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.


பொதுவான ரசனை, பாடுபொருள், இலக்கியக் கொள்கை – தொல்காப்பியத்தின் தாக்கம் ஒரு வகையில் விதிமுறைத் திறனாய்வாகத் தொகுப்புகளில் இருக்கும் நிலை, பாகுபடுத்துவது, வரிசைப்படுத்துவது, ஆவணப்படுத்துவது போன்றவற்றைக் காணமுடிகிறது.


தமிழில் உரைகள் எழுதும் வழக்கம் ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு தோன்றியதாகக் கூறப்படுகிறது. இறையனார், இளம்பூரணர், பேராசிரியர் போன்றோர் உரையாசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். தொல்காப்பியத்திற்கும் திருக்குறளுக்கும் அதிகமான உரைகள் எழுதப்பட்டிருக்கின்றன என்ற தகவலும் உண்டு.


இன்றைய திறனாய்வு அல்லது விமர்சனம் செய்கின்ற பணியை அன்றைய தமிழில் அன்றைய தேவையையொட்டி உரை எழுதுதல் எனும் வழக்கு இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.


மேலும், பேராசிரியர் (15 ஆம் நூற்றாண்டு) தொல்காப்பியத்தை மையமாக வைத்து எழுதிய உரையும் விளக்கமும் அமெரிக்க-நவீனத் திறனாய்வாளர்கள் கூறும் நெருங்கி வாசித்தல் (Close Reading) எனும் திறனாய்வு முறையோடு நெருக்கமுள்ளது என்றும் கூறப்படுகிறது.




விமர்சனத்தின் நோக்கம்?


கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் விமர்சனம் என்ற சொல்லுக்கு ஒருவரின் அல்லது ஒன்றின் நல்ல அம்சங்களையும் குறைகளையும் ஆராய்ந்து வழங்கும் ஒரு மதிப்பீடு என்று கூறப்பட்டுள்ளது.


விமர்சனம் என்பது இலக்கியத்தைத் தளமாகக் கொண்ட ஓர் அறிவுத் தேடல் என்பதை நாம் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். ஒரு படைப்பில் அறியப்படாத அல்லது புரிந்துகொள்ள வேண்டிய இடங்கள் இருக்கின்றன. அந்த வெற்றிடங்களை விமர்சனம் நிறைவு செய்கிறது. வாசக இடைவெளிகளை அடையாளம் கண்டு அவற்றோடு மையத்தைத் தொடர்புப்படுத்திப் பார்க்கக்கூடியது.


படைப்பாளனுக்கு உற்சாகம் தருவதும் சில வேளைகளில் போதனை தருவதும் பல வேளைகளில் அது ஒரு தோழனாகவும் இயங்குகிறது.
வாசகனுக்கு அது ஒரு நல்ல துணையாகவும் விசாலமான ஓர் உலகத்தை அவனின் புரிதலையும் தாண்டி வேறுபடுத்திக் காட்டுவதாகவும் அமைகிறது.


யாரெல்லாம் விமர்சனம் செய்யலாம்?


ஒரு தாய் தன் குழந்தைக்குத் தலைவாரி விட்டுப் பின் அக்குழந்தையிடம் கண்ணாடியில் போய் நல்லாயிருக்கா என்று பார்த்துவிட்டு வா என்று சொல்கிறாள். உடனே அக்குழந்தையும் கண்ணாடியில் பார்த்துவிட்டு, நல்லாயிருக்கு அல்லது நல்லாயில்லை என்றுச் சொல்லும்போதே விமர்சனக்கலை தொடங்கிவிடுகிறது. அதுபோல, வாசிப்பவர் தன் கருத்தை முன்வைக்குமபோதே விமர்சனம் தொடங்கிவிடுகிறது. அதனால் இவர்தான் விமர்சனம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எல்லாம் இங்கு இல்லை.


திறனாய்வு என்ற சொல் பெரும்பாலும் கல்வியாளர்  மத்தியிலும் விமர்சனம்  என்ற சொல் கல்வியாளர் அல்லாத பிறரிடத்திலும் அதிகமாக வழக்கில் இருக்கிறது.


1944 இல், ரசனை முறைத் திறனாய்வாளரும் அழகப்பா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியருமாகிய ஆ.முத்துசிவன் என்பவர் தமிழில் விமரிசனம் என்ற சொல்லைப் பயன்படுத்தியாகவும்

1948 இல், தமிழில் முதன்முதலாக இலக்கிய விமரிசனம் என்ற நூலை தொ.மு.சி. ரகுநாதன் எழுதியதாகவும்

1951 இல், க.நா.சுப்பிரமணியம், விமரிசனக் கலை என்ற நூலை எழுதியுள்ளார் என்றும் கூறும் குறிப்புகள்,

1953 இல், பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் திறனாய்வு என்ற சொல்லைத் திறனை ஆய்தல் என்ற பொருளில் முதன்முறையாகப் பயன்படுத்தினார் என்றும் பதிவு செய்துள்ளன.



விமர்சனப் பார்வை எப்படி இருக்க வேண்டும்?

ஆரோக்கியமானதாக படைத்தவன் மனத்தைக் காயப்படுத்தாததாக இருக்கவேண்டும். குறைநிறைகளை நியாயமாக முன்வைக்க வேண்டும். சில கோட்பாடுகளுக்குள்ளும் இசங்களுக்குள்ளும் தன்னைச் சிறைப்படுத்திக்கொண்டு படைப்பின் உள் நூழைவதைத் தவிரக்க வேண்டும். திறந்த மனத்தோடு ஒவ்வொரு படைப்பையும் அணுகவேண்டும். எந்தவித அனுமானங்களும் இல்லாமல் வாசிப்பதற்கு முன்பே படைப்பாளனின் முந்தைய படைப்பின் தாக்கங்களோடு அடுத்த படைப்புகளை அணுகவேண்டிய அவசியம் இல்லை. அப்படி அணுகினால் இங்கு எல்லாமே தப்பாகவே தெரியும். இன்னுமொரு விஷயத்தையும் விமர்சகர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று. அது அ.முத்துலிங்கம் கூறியது.

ஓர் எழுத்தாளனின் படைப்பை அவன் எழுதியதை வைத்து மதிப்பிடவேண்டும். எழுதாத எழுத்தை அல்ல.


இலக்கிய வளர்ச்சிக்கு விமர்சனம் அவசியமா?


கண்டிப்பாக விமர்சனம் வேண்டும். ஆனால் அது மிகவும் கண்டிப்பானதாக இருக்கவேண்டிய அவசியமில்லை. நியாயமானதாக இருந்தாலே போதுமானது. நியாயமான விமர்சனங்களே நல்ல படைப்பிலக்கியதை நோக்கி நம்மை நகர வைக்கும்.


அதன் நோக்கம் நிறைவேறியதா?


நோக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் குழுக்களுக்கும் இனத்திற்கும் நாட்டிற்கும் வேறுபட்டே இருக்கும். அவரவர் நோக்கில் அதை எப்படி அணுகுகிறார்கள் என்பதை வைத்தே அதனதன் நோக்கம் நிறைவேறியதா என்பதைத் தீர்மானிக்க முடியும்.


அடிப்படையில் திறனாய்வு அல்லது விமர்சனம், இலக்கியம் எதனை மையமிட்டிருக்கிறது என்பதை ஆராய்கிறது. வினாக்களை முன் வைக்கிறது. வினாக்களை எதிர்கொள்கிறது. அவற்றிற்கான பதில்களையும் தருகிறது. அது இலக்கியத்தை விளக்குகிறது. மதிப்பீடு செய்கிறது. வாசிப்புகளுக்குப் பல புதிய பரிமாணங்களைத் தருகிறது.

இது ஒரு தொடர்நிகழ்வாகும்.


எழுத்தாளர்கள் விமர்சனத்தை எப்படி அணுகவேண்டும்?

திறந்த மனத்தோடு விமர்சனத்தை அணுகவேண்டும். அப்போதுதான் அவர்களால் தம் எண்ணத்தையும் எழுத்தையும் முன்னோக்கி நகர்த்திச் செல்ல முடியும். வேறுபட்ட மனநிலையில் இருந்து சிந்தித்துப் பார்க்க இயலும். முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு வி‌ஷயம், 

விமர்சனம் என்பது ஒரு தனிமனிதனின் கருத்து மட்டுமே.



எதிர்மறை விமர்சனத்தை நிராகரிப்பது சரியா?


எதிர்மறை விமர்சனத்தில் இருக்கின்ற நியாயங்களை ஆராய்ந்து அறிந்து தேவையிருப்பின் அதற்கேற்றாற்போல் நம்மை மேம்படுத்திக்கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனாலும், எதிர்மறை விமர்சனத்தை வைப்பவர் யார் என்று அடையாளம் காணுவதும் அவசியம். சிங்கையின் பல்லின கோட்பாடுகளும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் அரசுக் கொள்கையையும் குறிப்பாகச் சிங்கைத் தமிழர்களின் அடிப்படைத் தேவைகளையும் அவர்களின் வாழ்வியல் சூழலையும் அறிந்தவர்களாக இருப்பின் விமர்சனம் நியாயமாக இருக்க வாய்ப்புண்டு. வேறொரு மனநிலையில் எங்கோ இருந்துகொண்டு தன் தனிப்பட்ட சுய விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தும் விமர்சனத்தால் சிங்கப்பூர்ப் படைப்பிலக்கியத்திற்கு எவ்வகையிலும் பங்களிக்க இயலாது என்பதை நாம் அறிந்திடல் வேண்டும்.



விமர்சனப் போக்குத் தன் இலக்கை அடைந்ததா?


இது ஒரு தொடரும் போக்கு. இலக்கியமும் அதற்கான கண்ணோட்டங்களும் காலத்திற்கேற்ப மாற்றம் காணக்கூடிய ஒன்று. இலக்கியத்தின் நோக்கம் ஒவ்வொரு காலமும் வேறுபட்டு நிற்பதால் அதற்கான விமர்சனப் போக்கின் இலக்குகளும் காலந்தோறும் வேறுபட்டே இருக்கும் என்பதை இங்கு மனங்கொள்ளல் அவசியம்.


நன்றி. வணக்கம்.

அன்புடன் எம்.சேகர்