சனி, 6 மே, 2017




மா.இளங்கண்ணனின் பரிதியைக் கண்ட பனி சிறுகதை - ஒரு சமூகப் பார்வை



சிங்கப்பூர் புனைவிலக்கியத்தில் தனக்காக ஒரு தனிமுத்திரையைப் பதித்தவர் மா.இளங்கண்ணன் அவர்கள். அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதை, நாவல் என தன் எழுத்தாண்மையால் சிங்கப்பூர் இலக்கியப் பயணத்தைச் செம்மைப்படச்செய்தவர். தென்கிழக்காசியாவின் உயரிய இலக்கிய விருதான ஆசியான் விருதையும் பெற்று, தமிழ்ப் படைப்பாளிகளுக்குப் பெருமையைச் சேர்த்தார். இவரின் படைப்புகள் பெரும்பாலும் சிங்கப்பூரின் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையைப் புனைகதை வடிவத்தில் அதிகமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளன என்றால் அது மிகையாகாது.


இலக்கியம் என்பது நம் வாழ்க்கை. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கூர்ந்து நோக்கின், அந்த ஒவ்வொரு நொடியும் நமக்குப் பல கதைகளைப் பதிவு செய்யும். கதைக்காக நாம் எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு வாழ்க்கை. ஓர் அனுபவம். யாரோ ஒருவரின் வாழ்க்கை ஒவ்வொரு கதைக்குள்ளும் புதைந்திருக்கிறது என்பதுதான் உண்மை. படைப்பிலக்கியம் ஒரு பொழுதுபோக்காக இருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில், அந்தப் படைப்பிலக்கியத்தை ஒரு தவமாக நினைத்து செயல்படும் பல படைப்பாளிகள் நம்மிடையே வாழ்கிறார்கள். அவர்களின் ஒருவராகச் சிங்கப்பூரின் படைப்பிலக்கியத்தில் தனக்கான ஓர் இடத்தை உருவாக்கித் தனித்தன்மையோடு தன் படைப்பாக்கத்தின்வழி சிங்கப்பூருக்கே உரித்தான வாழ்க்கையை மிகவும் எளிய நடையில் பதிவு செய்வதில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார் மா.இளங்கண்ணன் அவர்கள்.



அவரின் சமூகப் பார்வையையும் இந்தச் சமூகத்தின் மீது அவருக்கு இருக்கும் அக்கறையையும் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் பதிவு செய்துள்ளது இந்த பரிதியைக் கண்ட பனி என்ற சிறுகதை. சிங்கப்பூர் வாழ்வியலின் ஒரு கூறாக இயங்கிக்கொண்டிருக்கும் தமிழ்ச் சமூக மேம்பாட்டுக்குக் கல்வி ஒன்றே விடிவெள்ளி என்ற மூலக்கருத்தோடு கதை வலுவாக நிறுவப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு சிங்கப்பூர் நடப்பியல் சூழலிலான சம்பவக்கோர்ப்புகளும் இந்த மையக்கருவோடு கைக்கோர்த்து நின்று கதைக்கு வலுச்சேர்த்துள்ளன.


இனி கதைக்கு வருவோம்.


அண்ணாமலை ஒரு துப்புரவுத் தொழிலாளி. அவரின் மகன் திருமேனியை மேல் படிப்புக்கு படிக்கவைக்க வசதியில்லாத சூழலில், அவர் பகுதி நேரமாக வேலை செய்யும் வீட்டின் உரிமையாளர் அம்பலவாணர் பண உதவி செய்து அவர் மகனைப் படிக்கவைக்கிறார். மகன் ஒரு பட்டதாரியாகி, தன் குடும்பத்திற்கு ஏன் தன் பரம்பரைக்கே ஒரு நல்ல விடிவுகாலம் வரும் என்று இருக்கையில், அடுக்குமாடி வீட்டின் மேல் தளத்திலுருந்து விழுந்த பூச்சாடி திருமேனியின் தலையில் விழுந்து, ஒரு மாதமாக கண்முழிக்காமல் மருத்துவமனையில் இருக்கிறான்.
இதுதான் கதை.


இனி இக்கதையில் வருகின்ளற சமூகப் பண்புகளைப் பார்ப்போம்.


சமூகப் பொறுப்புணர்வு


குப்பைத்தொட்டியில் போடுகின்ற குப்பைகளை முறையாகப் பிளாஸ்டிப் பைகளில் கட்டி போடப்படவேண்டும் என்ற ஒரு செய்தி கதையின் ஆரம்பத்திலேயே பதிவு செய்யப்படுகிறது. குப்பைகளை அள்ளி லாரியின் அகன்ற வாய்க்குள் கொட்டும்போது குப்பைத் தொட்டிகளிலிருந்து ஒழுகிய முடைநாற்ற நீன் அண்ணாமலையைக் குளிப்பாட்டி விடுவதாகக் கதாசிரியர் கூறுகிறார். குப்பைகளை முறையாகக் குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும் என்ற ஒரு சமூகப்பொறுப்புணர்வை எடுத்துரைக்கிறார். குப்பை அள்ளும் தொழிலாளியும் ஒரு சகமனிதன்தான் என்ற மனித நேயக் கருத்தையும் கூறுகின்றார்.


அடுக்குமாடி வீடுகளில் பூந்தொட்டிகள் வைக்கப்படுவது சிங்கப்பூர் மக்களிடையே ஒரு பழக்கமாக இருக்கிறது. அப்படி வைக்கப்படும் பூந்தொட்டிகள் பாதுகாப்பு மிக்கதாகவும் மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்காத வகையிலும் வைக்கப்பட்டிருக்கவேண்டும் என சிங்கப்பூர் அரசாங்கமும் வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் சில வீடுகளில் இருக்கும் பூச்சாடிகள் அபாயகரமான முறையில் இருப்பதை இக்கதையில் வரும் ஒரு சம்பவம் நமக்குக் காட்டுகிறது. அண்ணாமலையின் மகன் திருமேனி, அடுக்குமாடி வீட்டுக் கீழ்த்தளத்தில் நடக்கும்போது தலையில் ஒரு பூச்சாடி விழுந்து அவனை கோமா நிலைக்குக் கொண்டுசெல்கிறது. அவனை நம்பி இருக்கும் குடும்பத்திற்குத் தீராத வேதனையைத் தருகிறது.


தந்தை மகன் உறவு


அண்ணாமலையின் உடம்புக்கு நோய் ஏதேனும் வந்தால் அக்கறையோடு அவரைப் பார்த்துக்கொள்ளும் பாசமிகு மகனாகவும் அக்குடும்பத்திற்கான தனது கடமையை உணர்ந்த ஒரு மகனாகவும் திருமேனியின் கதாபாத்திரம் இக்கதையில் படைக்கப்பட்டு, சிங்கப்பூர் இளையர்களுக்கு ஒரு முன்மாதிரி கதாபாத்திரமாக விளங்குகிறது.


இன்று பல குடும்பங்களில் உறவுகள் கேள்விக்குறிகளாகி நிற்பதை நாம் கண்கூடாகக் காண முடிகிறது. தாய் தந்தை உறவு, தாய் மகன் உறவு, தாய் மகள் உறவு, தந்தை மகன் உறவு, தந்தை மகள் உறவு, உடன் பிறப்புகளுக்குள் இருக்கும் உறவு என உறவுகளின் முறைமைகளுக்குள் அன்பால் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு வலுவான உறவும் நேசிப்பும் இருப்பதோடு கல்வியின்பாலும் நம்பிக்கையிருக்கவேண்டும் என இக்கதை வலியிறுத்தி. அதனை இக்கதையின்வழியாக தந்தை மகன் உறவுமூலம் நிறுவுகிறது.


கல்வி


இக்கதை திருமேனியின் கதாபாத்திரம் மூலம் நம் இளையர்களுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையாகாது. நம் பெற்றோர்களிடமும் இளையர்களிடமும் மேலும் படித்து பட்டம் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கை இக்கதை வலியுறுத்துவதோடு கல்வியின் மூலம் ஒரு சமூகமே புதியதோர் உலகை நோக்கி நகரமுடியும் என்பதையும் மேலும் சிங்கையில் தமிழர்கள் தங்கள் பொருளாதார வாழ்வியல் செயல்பாடுகளுக்குக் கல்வியே உயிர்நாடியாகவும் திகழ்கிறது என்ற மறுக்கமுடியாத உண்மையையும் பதிவு செய்கிறது.



இக்கதையில் வரும் அம்பலவாணர் கதாபாத்திரம் கல்விக்கான அவசியத்தை வலியுறுத்திப் பேசுகிறது.


தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்


என்ற குறள்வழி, அண்ணாமலைக்கு ஒரு தந்தையின் கடமையை உணர்த்துகிறார். இந்தச் செய்தி அண்ணாமலைக்கு மட்டுமானதல்ல. நம் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்துக்கே சொல்லும் ஒரு சமூகச் செய்தியாகும். 


ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடனேயே பிள்ளைகளுக்கு ஒரு கால்கட்டுப் போடவேண்டும் எனப் பெரும்பாலான பெற்றோர் நினைப்பது சரியல்ல எனவும் பிள்ளைகளின் விருப்பு வெறுப்புகளை அறிந்து நடப்பதே விவேகமானது எனவும் கூறப்படுகிறது.


உன் மகன் திருமேனியைப் படிக்க வைத்திட்டீனா, நீ உன்னுடைய தலைமுறையையே தலையெடுக்க வைத்தவனாவே


என அம்பலவாணர் கூறும் கூற்றின்மூலம் கதாசிரியர் இச்சமூகத்தின்மேல் கொண்டுள்ள அக்கறையைக் காண முடிகிறது. 

மேலும்,


இப்போ நீ உன் மகன் கண்ணை மட்டும் திறந்து வைப்பதாக நினைக்காதே அண்ணாமலை. உன் பரம்பரைக்கே நீ கண் திறந்து வைத்து, வழி காட்டுறே. கல்விச் செல்வந்தான் அண்ணாமலை நம் வழித்தோன்றல்களுக்கு நாம் தேடி வைக்கும் பெரிய சொத்து. நாம் நம் பரம்பரைக்கே செய்யும் பெரிய முதலீடு.


இதைவிட கல்வியின் முக்கியத்துவத்தை வேறு எப்படி நாம் சொல்லிவிடமுடியும் எனச் சிந்திக்கவைக்கிறது கல்வி விழிப்புணர்வுத் தொடர்பாக இக்கதையில் வரும் பல உரையாடல்கள்.


சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கல்விக்குத் தடை ஏற்படாதவாறு அனைத்து உதவிகளும் அரசாங்கத்தாலும் சிண்டா போன்ற இயக்கங்களாலும் மிகவும் கவனமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பணமில்லை என்று இங்கு யாரும் படிப்பைத் தொடர முடியாத சூழல் இல்லை என்பதை இக்கதை அம்பலவாணர் மூலம் உணர்த்துகிறது.


அண்ணாமலையின் மகன் திருமேனியின் பட்டப்படிப்புக்கான செலவு அனைத்தையும் அம்பலவாணர் ஏற்றுக்கொள்வது சிங்கையில் கல்விப் பயில்வதற்கான வாய்ப்புகளுக்குத் தடையேதுமில்லை என்பதை உணர்த்துவதோடு பாரதியின் வரிகளையும் நினைவுபடுத்துகிறது.


அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
 ஆலயம் பதினாயிரம் நாட்டல்
 பின்னருள்ள தருமங்கள் யாவும்
 பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
 அன்னயாவினும் புண்ணியம் கோடி
 ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்



மனித நேயம்


அண்ணாமலை அம்பலவாணர் வீட்டில் பகுதி நேரமாகத் தோட்ட வேலை செய்பவராக இருந்தபோதிலும் அவர்கள் இருவருக்குமான உறவு மனித நேயத்தின் இன்னொரு காட்சிப் படிமமாக இக்கதையில் காட்டப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகச் சூழலை நோக்கி சிங்கப்பூர் ஒன்றுபட்ட சமூகமாக முன்னேறுவதற்கு இதுபோன்ற உறவுகளும் நட்புகளும் அச்சாணிகளாகும் என்பதை இக்கதையின் மூலம் உரக்கச் சொல்கிறார் கதாசிரியர். மண்ணுயிரெல்லாம் தன்னுயிர் போல போற்றும் வள்ளலாரின் மனம் நம் அனைவருக்கும் வாய்க்க வேண்டும் என்ற சிந்தனைச் சிதறல்களையும் இக்கதையின் வாயிலாக உணர்த்தியுள்ளார் மா. இளங்கண்ணன். மேலும்,  மனித நேயத்தைப் போற்றிப் பின்பற்றி வாழவும் இக்கதையின் மூலம் அறிவுறுத்துகிறார்.



முடிவு


பல்லின மக்கள், பலவிதமான மொழிகள், பற்பல சமய நம்பிக்கைகள், வழிபாடுகள், விருப்பு வெறுப்புகள் என நிரம்பிவழியும் வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் சிங்கப்பூர் சமூகத்தில் நம் சமூகத்தினருக்கான பங்கை முன்னெடுக்கும் ஓர் ஆக்கச் சக்தியாக இருக்கப்போவது கல்வி ஒன்றுதான் என்பதை இக்கதை ஆழமாகப் பதிவு செய்கிறது.



சுமூகமான முடிவின் மூலம் இக்கதையின்வழி கதாசிரியர் தமிழ்ச் சமூகத்தினருக்கு நம்பிக்கையொளி ஊட்டுகிறார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக