ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

கவிதைகளுடன் உரையாடல் - மக்கள் ஓசை கட்டுரைத் தொடர் 7







(7)

நிழல் முகங்கள்


என்னை
துரத்திக் கொண்டிருக்கும்
நிழல் முகங்கள்
எனக்கான
அடையாளங்களற்றவை


மனப்படுகையில்
சேர்ந்தடர்ந்த
நினைவுக் கோர்வையில்
பிறந்து வளர்ந்த முரட்டு உருவங்கள்


அழிக்க முயலும் போதெல்லாம்
திமிறிக் கொண்டு
அச்சம் மூட்டும்
முகங்களோடு திரியும் அவை


பதுமை முகம் காட்டி
திடுப்பென இரத்தம் கசியும்
கோரப் பற்களோடு அவள் முகம்


அழுக்கைச் சுமந்து என் மீது படரும்
அந்தக்  கறுத்த உருவம்
குழந்தை முகம் காட்டி
குரல் நெரிக்கும் பெருத்தக் கரம்


என்னைச் சுற்றி தினம் தினம்
கூத்தாடும் அகோர முகங்கள்
எனக்குள் முகிழ்ந்த
விநோதங்கள்


தனித்து நடக்கையில்
தானாகப் பேசிப் போவது
தெரியவில்லை


அந்த நிழல் முகங்களோடு கத்தி
கூச்சலிடுவது உணர்வதில்லை


என்னை தொடரும் நிழல் முகங்களை
அழிக்க முயன்று
நான்
அழிந்து கொண்டிருக்கிறேன்


@@@@@@@@@@



சர்ரியலிசம் என்னும் நனவிலி நடப்பியற் கோட்பாடு கற்பனை எழுச்சியை நனவு மனத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டுமெனக் குறிப்பிடுகிறது. மரபு வழியான சமூகக் கடப்பாடுகளிலிருந்தும் பிற அழுத்தங்களிலிருந்தும் கற்பனையும் அதன் வெளிப்பாடுகளும் விடுவிக்கப்படவேண்டுமென கூறப்படுகின்றன. அந்த வகையில், உளப்பகுப்பு உளவியலை அடியொற்றி எழுதப்பட்ட ஒரு படைப்பாகவே நிழல் முகங்கள் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறது. கனவுகளை அடியொற்றி எழும் கற்பனைகளுக்கும் சமூக அழுத்தங்களிலிருந்து விடுபட்ட கற்பனைகளுக்கும்  முக்கியத்துவம் கொடுக்கும் இவ்வகையான படைப்புகளில் பூர்விகச் சிந்தனைகள், தருக்க மறுப்பு, எதிர் நுண்மதிப்பாங்கு முதலியவற்றை அடியொற்றி கற்பனைகளின் ஆட்சி வலியுறுத்தப்படுகின்றது என முனைவர் சபா.ஜெயராசாவின் புனைகதையியல் எனும் நூலில் குறிப்பிடப்படுகிறது. 



ஒரு தனிமனிதனின் சமூகப்பார்வைக்குள் முன்னெடுக்க முடியாத சில விஷயங்களை அவனின் கூர்மையான அகப்பார்வைக்குள் கொண்டுவந்து கற்பனையின் சிறகுகளில் அதற்கான விமர்சனங்களை நோக்கி நகரும் அவனின் தேடல்களில் அவனையறியாமல் எதிர்படும் உளவியல் பாதிப்புகள் எழுத்துக் கோர்வைகளாக இக்கவிதையில் வெளிப்பட்டுள்ளன.


மனிதன் நிதானத்துடனும் பக்குவப்பட்ட மனத்துடனும் இருத்தல் மிகவும் அவசியமானதாகும். ஒவ்வொரு மனிதனும் எந்த ஒரு விஷயத்திற்கும் அளவுக்கதிகமாக உணர்ச்சி வயப்படும்போது இப்படி நிகழ்வது சாத்தியமாகும். ஆனால் மனிதர்கள் உணர்ச்சி வயப்பட்ட பின்பே பக்குவநிலை அடைவார்கள் என்பது இங்கு அனுபவமாக உள்ளது. மனவெழுச்சியின் முதிர்வு ஒருவனது வாழ்வில் நிலைத்தன்மையான முடிவினை எடுக்க உறுதுணையாக இருக்கும் என்பதிலும் எவ்வித சந்தேகமுமில்லை. அந்தக் கண விடுப்பில், அவனின் முரண் எண்ணங்கள் அனைத்திலும் இருந்து முற்றாக விலக்கப்பட்டு, வேறொரு தெளிந்த மனவெளிக்குள் பிரவேசிக்கிறான். மனச்சலனம் ஓய்ந்த அலைகளாக அவனுக்குள் ஒரு நிலையான அமைதிக்கு வழிவகுக்கும். மனத்திலிருந்து கொட்டிய வார்த்தைகளால் மனம் சுத்தமாகிப் போயிருக்கும். இவ்வகைக் கவிதைகள் முழுக்க முழுக்க அகவயமானதாகத் தெரிந்தாலும் அவை அனைத்தும் புறவயத் தன்மைகளின் பாதிப்புக்களின் பிம்பங்களாகவே இருக்கின்றன.


சூரியன் சந்திரன் ஆகியவை கூட சில விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் இயங்குகின்றன. அந்தக் கட்டுப்பாட்டை மீறினால், அவை சிதறுண்டு போகும். அதுபோலவே, மனிதர்கள் தமக்குரிய கட்டுப்பாட்டைக் காப்பாற்றி வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் அவர்கள் சிதறுண்டு போவார்கள் என்கிறார் மகாத்மா காந்தி. அப்படிச் சிதறுண்டு போன ஒரு மனிதனின் மனஓலங்கள்தான் இத்தகைய கவிதைவரிகளாய் பிரவசம் எடுக்கும். அவர்களைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் வாழ்க்கைத் தொடர்பான பிரச்சினைகளும் பயமும் இயலாமையும் இப்படி அசூர கற்பனை வளையத்திற்கும் அவர்களைப் கட்டிப்போட்டுவிடும். அந்தக் கணத்தில் அதிலிருந்து விடுபட அவனின் ஆழ்மனம் அவனுக்குத் தெரிந்த எழுத்தின் மூலம் அவற்றை வெளிக்கொணர்ந்து, அவனுக்குள் இருக்கும் எதிர்மறை பேய்களை விரட்டியடித்துவிடும் முயற்சியில் இறங்கிவிடுகிறது. அவனுக்குள் ஒளிந்துகொண்டு பேயாட்டம் போட்டதெல்லாம் அவனிடமிருந்து வெளியேறி, அவனை ஒரு தூய ஆத்மாவாக மாற்றியிருக்கும்.


என்னை தொடரும் / நிழல் முகங்களை / அழிக்க முயன்று / நான் / அழிந்து கொண்டிருக்கிறேன் /


என வரும் கவிதையின் இறுதிவரிகள் முரணானத் தன்மையில் முடிக்கப்பட்டிருந்தாலும் கவிஞன் தன் அகஉணர்வுகளைக் கொட்டித் தீர்த்துத் தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்ட ஒரு தன்மையையே இக்கவிதை உணர்த்துகிறது. 


ஒரு கண நேர உணர்வுகளின் வெளிப்பாடான இக்கவிதையை நாம் எப்படியும் அணுகலாம். அது அவரவர் உணர்வு நிலைகளைப் பொறுத்ததாகும். இதுதான் விஷயம் என அடித்துச் சொல்லுவது புதுக்கவிதை. இதுவும் இருக்கலாம், இதைத் தாண்டி இன்னும் பலவும் இருக்கலாம் என்றுச் சொல்லி விரிவது நவீன கவிதை. இந்தப் புரிதல் இருந்தால் கவிதை சுவைக்கும்.



-    தொடரும்   (மக்கள் ஓசை (02-04-2017)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக